தோட்டத் தொழிலாளர் சங்கங்களும் முதலாளிமார் சங்கமும் செய்துகொண்ட கூட்டு ஒப்பந்தம் ஏப்ரல் முதலாம் திகதியுடன் முடிவிற்கு வருகின்றமையினால் தோட்டத் தொழிற்சங்கங்கள் சம்பள உயர்வு தொடர்பாக தமது கோரிக்கையை பத்திரிகை வாயிலாக வெளியிட்டு வருகின்றன. அதே வேளை சில சங்கங்கள் கோரிக்கை விடாது தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றன. வழமையாக அரசாங்கத்துடன் சாராதுள்ள தொழிற்சங்கங்களே தமது கோரிக்கையை முதலில் முன்வைப்பது வழக்கம்.
1998 முதல் அண்மைய ஜனாதிபதி தேர்தல்வரை அரசாங்கத்தில் அங்கமாகவிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமது சம்பள உயர்வு கோரிக்கையை முதலில் பகிரங்கப்படுத்தாது எதிரணி சங்கங்கள் முன்வைக்கும் சம்பளக்கோரிக்கையை கவனத்தில் கொண்டு சம்பளப் பேரம் பேச்சில் ஈடுபட்டு சம்பள உயர்வை பெற்றுக் கொடுப்பது வழக்கம். இவ்வாறு பெற்றுக் கொடுக்கப்படும் சம்பள உயர்வு ஒரு போதும் எதிரணி தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் சம்பள கோரிக்கைக்கு சமனாக இருந்ததில்லை. இதனால் எதிரணி தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு போராட்டத்தை சில தினங்களுக்கு முன்னெடுத்து பின்னர் கைவிடுவது வரலாறாகும்.
ஆனால், 1998 முதல் நடைபெற்று வரும் இவ்வழக்கத்தை முறியடித்து தற்போது எதிரணியிலிருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முதன் முதலாக ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரிக்கையை பகிரங்கமாக முன்வைத்துள்ளது. இக்கோரிக்கையை வரவேற்று கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான தொழிலாளர் தேசிய சங்கம் என்பன ஆயிரம் ரூபா சம்பளக் கோரிக்கையை அடிப்படை சம்பளக் கோரிக்கையாக முன்வைத்தால் தங்களது சங்கங்களும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளன.
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் அடிப்படை சம்பளமாக 800 ரூபா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது. இக்கோரிக்கைகளைத் தொடர்ந்து ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம் நாளொன்றுக்கு 1000 ரூபாவும் அண்மையில் அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் வழங்கிய 2500 ரூபாவையும் மாதக் கொடுப்பனவாக வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இவ்வனைத்து கோரிக்கைகளும் ஆய்வின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டதா என்பது ஒரு புறமிருக்க, இதுநாள் வரை நடைமுறையிலிருந்து வரும் சம்பளப் பேச்சு வார்த்தை செல்நெறிகையை நோக்கினால், முன்வைக்கப்பட்டுள்ள 1000 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொள்ள முடியுமா? அல்லது வெறுமனே இக்கோரிக்கைகள் சங்க அங்கத்தினர்களை அதிகரித்துகொள்ளும் அல்லது தக்க வைத்துக்கொள்ளும் உபாயமா? என சந்தேகிக்கத் தோன்றுகின்றது.
1992 ஆம் ஆண்டு அரசிற்கு சொந்தமான தோட்டங்கள் தனியாரிடம் கையளிக்கப்பட்டப்பின் முதலாவது கூட்டு ஒப்பந்தம் 1998 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. 1998 ஆம் ஆண்டு பெப்ரவரி 13 ஆம் திகதி நடைபெற்ற இருதரப்புக் கலந்துரையாடலில் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மற்றும் வேலைத்தள நிலை மீளாய்வு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் நடைபெற்ற கலந்துரையாடலில் சம்பள அதிகரிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், அச் சம்பள உயர்வு 2000 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என இணக்கம் காணப்பட்டது. இதன்படி தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நாளொன்றிற்கான அடிப்படை சம்பளம் 101 ரூபாவாகவும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு 98 ரூபாவாகவும் வழங்க இணக்கம் காணப்பட்டதுடன் அதற்கு ஊழியர் சேமலாப நிதி (E.P.F.) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (E.T.F) வழங்கவும் இணக்கம் காணப்பட்டது.
இதேவேளை, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றிற்கு விற்பனை விலை கொடுப்பனவாக 6 ரூபா வழங்க இணக்கம் காணப்பட்டது. இப் பேரம் பேசலின் போது தொழிற்சங்கங்கள் 130 ரூபாவை அடிப்படை சம்பளமாக கோரின. ஆனால் அக்கோரிக்கையை முதலாளிமார் சங்கம் நிராகரித்து 101 ரூபா வழங்க இணங்கியது. இதனைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் திகதி கூட்டு ஒப்பந்தம் ஒன்று கைசாத்திடப்பட்டது. அதனையடுத்து ஏனைய தொழில் உரிமைகள் தொடர்பாக இன்னுமொரு ஒப்பந்தம் 2003 ஜூலை 24 ஆம் திகதி கைசாத்திடப்பட்டது. 2003 ஆம் ஆண்டு செய்துக்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் மூன்று வருடத்திற்கான ஒப்பந்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் இதனை எதிரணி தொழிற்சங்கங்களும் சிவில் அமைப்புகளும் கடுமையாக எதிர்த்தன.
இதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் திகதி கூட்டு ஒப்பந்தம் ஒன்று இரண்டு வருடத்திற்கு கைச்சாத்திடப்பட்டது. இக்காலக்கட்டத்தில் 500 ரூபா அடிப்படை சம்பளம் அதிகரிப்பு கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது. ஆனால் பேரம் பேசலின் போது முதலாளிமார் சம்மேளனம் ஊழியர் சேமலாப நிதி (E.P.F.) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (E.T.F.) என்பவற்றுடன் கூடிய அடிப்படை சம்பளமாக 285 ரூபாவை வழங்க முன்வந்ததுடன் 75 சதவீத வேலை வருகைக்கு ஊக்குவிப்பு தொகையாக நாளொன்றிற்கு 90 ரூபாவும் வழங்க இணங்கியது. மேலும் இச்சம்பள உயர்வு 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி வரை அமுலிலிருக்க கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் சங்கங்கள் இணக்கம் தெரிவித்தன.
இதனைத்தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16 ஆம் திகதி புதிய கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. இதன் படி 2011 ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து அமுலிலிருக்கும் வகையில் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்துடன் கூடிய அடிப்படை சம்பளமாக 380 ரூபாவும், வேலை வருகை ஊக்குவிப்புத் தொகையாக 105 ரூபாவும் நிலையான விலை கொடுப்பனவு தொகையாக 30ரூபா வழங்கவும் மேலதிக கொழுந்து ஒரு கிலோவிற்கு 17ரூபா வழங்கவும் முதலாளிமார் சம்மேளனம் இணங்கியது. ஆனால் இக்காலக்கட்டத்தில் 750 ரூபா சம்பளக் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது. இதன் பின்னர் இறுதியாக 2011 ஜூன் 6 ஆம் திகதி கைசாத்திட்ட ஒப்பந்தத்தில் E.P.F. மற்றும் E.T.F.டன் கூடிய அடிப்படை சம்பளமாக 450 ரூபாவும், வேலை வருகை ஊக்குவிப்பு தொகையாக 140 ரூபாவும், நிலையான விலை கொடுப்பனவாக 20 ரூபாவும் மேலதிக கொழுந்து கிலோ ஒன்றிற்கு ரூபா 20வும் வழங்க முதலாளிமார் சம்மேளனம் இணங்கியது. இக்காலக்கட்டத்தில் 750 ரூபா அடிப்படை சம்பளக் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது. இறுதியாக நடந்த கூட்டு ஒப்பந்தத்தைத் தவிர அனைத்து கூட்டு ஒப்பந்தங்களின் போ து தொழிலாளர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதனாலேயே இக் குறைந்த பட்ச சம்பள உயர்வினைப் பெற் முடிந்தது.
இதன்படி கடந்த கால சம்பளத்திற்கான கூட்டு ஒப்பந்த செல்நெறிகையை நோக்குகையில் தொழிற்சங்கங்கள் கோரும் சம்பளத்தை அவ்வாறே வழங்க முதலாளிமார் சம்மேளனம் முன்வர வில்லை. மாறாக ஏலவே வழங்கிய ஊக்குவிப்பு கொடுப்பனவினை அடுத்துவரும் சம்பள பேச்சுவார்த்தையின் போது அடிப்படை சம்பளத்துடன் இணைப்பதை முதலாளிமார் சம்மேளனம் பெரும்பாலும் கடைப்பிடித்து வந்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிரணியில் இருக்கின்றமையினால் பாரிய போராட்டமொன்றிற்கு தொழீலாளர்களை அழைத்து கம்பனிகளுக்கு அழுத்தம் ஒன்றை கொடுக்கலாம்.
ஆயினும் அவ்வாறான போராட்டம் மூலம் முதலாளிமார் சம்மேளனத்தை முழுமையாக அடிபணிய வைக்க முடியுமா என்பது கேள்விக்குரியே வழமைபோல் முதலாளிமார் சம்மேளனம் தற்போது ஊக்குவிப்பாக கொடுக்கும் கொடுப்பனவுகளை இணைத்து அடிப்படை சம்பளமாக 650 ரூபாவை கொடுக்க முன்வைரலாம். மேலும் தொடர் வேலைநிறுத்தம் ஒன்றை தொழிற்சங்கங்கள் மேற்கொண்டால் சிலவேளை ஆகக் குறைந்தது இன்னுமொரு 200 ரூபாவை ஊக்குவிப்பு தொகையாக வழங்க முன் வரலாம். உண்மையாகவே 1000 ரூபா சம்பள உயர்வை பெற வேண்டுமாயின் பாரிய வேலை நிறுத்த போராட்டமொன்றிற்கு தயாராக வேண்டும். இதே வேளை அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருமித்து போராட்டத்தில் ஈடுபடவேண்டும்.
மறுபுறம் தற்போதைய தேயிலை விற்பனைத் தகவலை நோக்கின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு கடந்த வருடம் தேயிலை விற்பனை மூலம் இலங்கை அதிக வருமானத்தை பெற்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு 327.8 மில்லியன் கிலோகிராம் தேயிலையை இலங்கை ஏற்றுமதி செய்துள்ளதுடன் இதன் பணப்பெறுமதி 212.9 பில்லியன் ரூபாவாகும். இதே வேளை 2013 ஆம் ஆண்டு 319.6 மில்லியன் கிலோகிராம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன் அதன் பணப் பெறுமதி 199.4 பில்லியன் ரூபாவாகும். இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வரலாற்றைப் பொருத்தவரை இதுவே ஆகக் கூடியதாகப் பெற்ற வருமானமாகும்.
ஆனால் சம்பளத்திற்கான பேச்சு வார்த்தை முன்னெடுக்கவுள்ள இவ்வேளையில் சர்வதேச ரீதியில் ரஷ்ய நாட்டு ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் தேயிலையின் பெறுமதி விலை வீழ்ச்சி கண்டுள்ளது. இந்நிலையில் முதலாளிமார் சங்கம் 1000 ரூபா சம்பள அதிகரிப்பை எவ்வாறு ஏற்றுக்கொள்ளும்? ஏற்றுக்கொள்ளாவிடின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்து வெற்றியடையுமா? இன்றைய நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1000 ரூபா கிடைக்குமாயின் அது அவர்களது வாழ்க்கை நிலையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
எனவே தொழிற்சங்கங்கள் வெறுமனே தமது குறுகிய நலனை முன்வைத்து தோட்டத் தொழிலாளர்களை ஆகர்சிக்கும் வகையில் சம்பளக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர் மத்தியில் பாரிய எதிர்ப்பினை உருவாக்கலாகாது. மாறாக உண்மை நிலையை கருத்திற்கொண்டு யதார்த்தமான சம்பள கோரிக்கையை முன்வைக்க வேண்டும். ஆகக் குறைந்தது 800 ரூபாவை அடிப்படை சம்பளமாக பெற்றுக்கொடுத்தால் அதுவே பாரிய வெற்றியாக அமையும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...