மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகள் உட்பட, மலையகத்தில் 175,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள வீடமைப்பு பணிகள் எதிர்வரும் நான்கு மாதங்களில் நிறைவடைய உள்ள நிலையில், அவ்வீடுகளுக்கான காணி உறுதிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொஸ்லாந்தை, மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு பணிகள் பதுளை, பூனாகலை தோட்டத்துக்குட்பட்ட மக்கள்தெனிய பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ப.திகாம்பரம், இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், பெருந்தோட்டத்தறை கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வேலாயுதம், ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ, மேல் மாகாண சபை உறுப்பினர் மனோ கணேசன், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போதே அமைச்சர் திகாம்பரம் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ''மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 78 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. ஒவ்வொரு வீடும் தலா 12 இலட்சம் ரூபாய் செலவில் 7 பேர்ஸ் காணியில் நிர்மாணிக்கப்படவுள்ளன. வீடுகளுக்கான கட்டுமாணப் பணிகள் நிறைவுற்றவுடன் வீட்டு உறுதிகள் வழங்கப்படும்.
பெருந்தோட்டத்துறை மக்களுக்கு 7 பேர்ஸ் காணியில் தனி வீடு அமைக்கப்பட வேண்டுமென நாங்கள் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வந்த நிலையிலேயே புதிய அரசாங்கத்தினால் தற்போது அது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்குமே நன்றி கூறவேண்டும். எத்தனை தடைகள் வந்தாலும் அதனை தகர்த்து பெருந்தோட்ட மக்களுக்கான தனிவீட்டுத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்' என அமைச்சர் மேலும் கூறினார்.
அங்கு உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கூறுகையில், 'பெருந்தோட்ட மக்களுக்கு 7 பேர்ஸ் காணியில் தனி வீடமைப்புத் திட்டத்தை செயற்படுத்துவதற்காக நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தோம். ஆனால், அதற்கு கடிவாளமாக பெந்தோட்ட மனிதவள நிதியம் விளங்கியது' என்றார்.
'வட மாகாண சபை சுதந்திரமாக இயங்க முடியாத நிலையில் கடந்த கால அரசின் கடிவாளம் காணப்பட்டது. இந்நிலையில் இவ்விரு கடிவாளங்களும் இன்று தகர்த்தப்பட்டுள்ளன. இனி வட மாகாணசபை சுதந்திரமாக தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும். அதேபோன்று பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டமும் சுதந்திரமாக முன்னெடுக்கப்படும்.
இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளோம். இதேவேளை, 'பதுளை மாவட்டத்துக்குட்பட்ட 5 தமிழ் பாடசாலைகள், விஞ்ஞான பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளன' என்று அவர் மேலும் கூறினார்.
-க.ஆ.கோகிலவாணி, கவிதா சுப்ரமணியம், டீ.சங்கீதன்
நன்றி - தமிழ்மிரர்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...