புகையிலை மற்றும் மதுசார சட்ட மூலம் மீதான விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை ஆற்றிய உரை
கடந்த மாதங்களில் ஹட்டன் செனன் தோட்ட பெண் தொழிலாளர்களால் அங்குள்ள மதுபான கடையொன்றை மூடுவதற்காக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் சமூக ஆர்வலர்களால், பாதிக்கப்பட்ட பெண்களால், இளைஞர்களால், பாடசாலை மாணவர்களால் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் அம் மதுபான கடைகளின் எண்ணிக்கையை குறைக்க முடியாதிருப்பது துரதிஷ்டமே.
தொற்றாத நோய்கள் எனப்படுகின்ற உடல்நிறை அதிகரித்தல், இரத்த அழுத்தம், புற்று நோய், நுரையீரற் புண் போன்ற பல நோய்கள் புகையிலை மற்றும் மதுசார பழக்க வழக்கங்களால் வருகின்றன என்று சுகாதார அறிக்கைகள் கூறுகின்றன. நுவரெலியா மாவட்டத்தை பொறுத்த வரையில் கிராம புறங்களையும் நகர் புறங்களையும் விடவும் தோட்டப் புறங்களிலேயே புகையிலை மற்றும் மதுபான பாவனைகள் அதிகமாக இடம்பெறுகின்றது. பொலிஸ் பிரிவுகளில் பெரும்பாலான வழக்குகள் மதுபான பாவனை மற்றும் விற்பனை தொடர்பானவைகளே அதிகமாக வந்த வண்ணமேயுள்ளன.
பெருந்தோட்ட மக்களின் நாளாந்த வாழ்க்கையில் பல பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணமாகவும் இம் மதுபான மற்றும் புகையிலை பாவனை காணப்படுகின்றது. பாடசாலை மாணவர்களையும் சில சமுதாய விசமிகள் இவ்வாறான கெட்ட செயல்களுக்கு பயிற்றுவிப்பது கண்டிக்கப்படக்கூடியதொன்றாகும்.
குறிப்பாக இலங்கையிலே பல இலட்சணக்கணக்கான தொழிலாளர் படையொன்று மாதாந்த சம்பளமின்றி நாள் சம்பளத்திற்கு தொழில் புரிகின்ற இத் தோட்ட மக்களின் செலவீனத்தை குறைப்பதற்கு இதுவும் ஒரு சிறந்த யுக்தியாக நோக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை எனலாம்.
நகர்ப்புறங்களிலே இளைஞர்கள் மற்றும் பெண்கள் புகையிலை மற்றும் பான்பராக் பாபுல் நிஜாம் பாக்கு போன்ற பல போதை தரக்கூடிய பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். சிறுகைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் தொடர்பான அமைச்சுக்களின் மூலம் நல்ல முறையில் சமூகத்திற்கு பயன்தரக் கூடிய கௌரவமான தொழில்களை இளைஞர்கள் செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும்.
இலவச சுகாதாரத்தினை எமது நாடு சிறப்பாக அமுல்படுத்துவதற்கு இம் மதுபாவனை புகையிலை பாவனை போன்றவை முட்டுக்கட்டைகளாக உள்ளன. காரணம் மதுபாவனையினால் பாதிக்கப்படுகின்றவர்களுக்கு சிகிச்சைக்காக ஆண்டு தோறும் பல மில்லியன் ரூபாய்களை இலங்கை அரசாங்கம் செலவு செய்கின்றது. அத்துடன் குறிப்பிட்ட நுகர்வோர்களால் அதற்காக செலவழிக்கப்படும் தொகை நாளொன்றுக்கு 208 மில்லியன்கள் என்று சிடிசி அறிக்கை கூறுகின்றது. எனவே, இத்தகைய பாரிய தொகையை அன்றாடம் அபிவிருத்தியடைந்து வருகின்ற எமது நாட்டிற்கு செலவிட்டால் சிறந்த அபிவிருத்தியை பெற முடியும்.
புத்த பிரானின் பௌத்த தர்மத்தின் படி பஞ்சமா பாதகங்கள் என்பவற்றுள் கள்ளுண்ணல், சூது போன்றவை கூடாத பழக்கங்கள். அவை மக்களால் விலக்களிக்கப்பட வேண்டியவை என்று கூறப்பட்டுள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்களும் தமது செயற்றிட்டங்களில் சுகாதாரம் என்பதற்கும் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான விடயங்களை மக்களிடமிருந்து அகற்றி அவர்களது வாழ்வாதாரத்தை அதிகரிக்க பல மில்லியன்களை ஒதுக்குகின்றன.
இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப்படும் நாடு இலங்கை. ஆனால் இன்று போதைப்பொருள் கைமாற்றப்படும் இடமாக மாறியுள்ளமை வெட்கத்துக்குரியது. இதுவா ஆசியாவின் ஆச்சரியம் என்பது? மக்களின் உயிர்களை பறிக்கும் இந்த போதவஸ்த்துகளை பிரபல அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் பயமின்றி தொடர்ந்தும் செய்து வருகின்றனர். இதனை அரசாங்கம் எவ்வித பாகுபாடுமின்றி நிறுத்த வேண்டும்.
நன்றி - வீரகேசரி 03.01.15
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...