பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு நலன்களுக்கும் வித்திடும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பான அதிர்வலைகள் இப்போது மேலோங்கி வருகின்றன. அரசாங்கம் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு அரசின் இடைக்கால வரவு – செலவு திட்டத்தின் ஊடாக சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டதைப் போன்று பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் நியாயமான சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றமையையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. பொருளாதார நெருக்கடியானது சகல துறைகளிலும் இம்மக்கள் பின்னடைவு காண்பதற்கு உந்து சக்தியாக அமையும் என்பதால் சம்பள உயர்வுக்கு வித்திடும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் கரிசனையுடன் செயற்பட வேண்டும் என்று புத்தி ஜீவிகள் தொடர்ச்சியாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாக உள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வரலாறு என்பது மிகவும் நீண்டதாகும். நீண்ட வரலாற்றைக் கொண்ட இம்மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடக்கூடிய அளவிற்கு எந்தத்துறையிலும் இன்னும் விருத்தி பெற்றிருக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும். வீட்டுவசதி, காணியுரிமை, சுகாதார மருத்துவ வசதிகள், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், சமூக வாழ்வு என்று சகல மட்டங்களிலும் இம்மக்கள் உரிய இலக்கை எட்டாத தன்மையையே காணக்கூடியதாக உள்ளது. மலையகத்தில் மலையேறி பாடுபடும் இம்மக்களின் வாழ்வு இன்னும் ஏற்றம் காணவில்லை. நிலமட்டத்தில் மலையகம் உயர்ந்திருக்கின்றதே தவிர வாழ்க்கை நிலைமைகள் ஏனோ இன்னும் தாழ்வாகவே காணப்படுகின்றன என்பதனை யாவரும் அறிவர்.
உழைப்பை நம்பி வாழும் இத்தொழிலாளர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கின்றதா என்று எண்ணிப்பார்த்தால் விடை இல்லை என்றே வெளிப்படும். 1908 ஆம் ஆண்டில் ஒரு தோட்ட துரை நான் இலங்கையில் வாழ்ந்து 14 வருட காலத்தில் நாளொன்றுக்கு ஆண்களுக்கு 33 சதத்திற்கும் பெண்களுக்கு 25 சதத்திற்கும் மேல் கூலி வழங்கியதில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றார். இதிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் தொழிலாளர்கள் பெற்றுக் கொண்ட வேதன நிலைமைகளை எம்மால் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
தொழில் திணைக்களத்தின் அறிக்கையின் அடிப்படையில் 1944 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆண்களுக்கு 41 சதமும், பெண்களுக்கு 37 சதமும், சிறுவர்களுக்கு 25, சதமும் என்று கூலி வழங்கப்பட்டுள்ளது. இது நாளாந்த கூலியாகும். 1947 இல் ஆண்களுக்கு ஒரு ரூபாய் 72 சதமும் பெண்களுக்கு ஒரு ரூபாய் 38 சதமும், சிறுவர்களுக்கு 1 ரூபாய் 12 சதமும் என்ற அடிப்படையில் நாளாந்த வேதனம் அல்லது கூலி வழங்கப்பட்டது. 1954 ஆண்டுகளின் நாளாந்த வேதனம் இரண்டு ரூபாய் 43 சதமாகவும் 1967 இல் மூன்று ரூபாய் ஒரு சதமாகவும் 1977 இல் நான்கு ரூபாய் 56 சதமாகவும் 1984 இல் 24 ரூபாய் 23 சதமாகவும் 1987 இல் 33 ரூபாய் 92 சதமாகவும் 1989 இல் 37 ரூபாயாகவும் இருந்துள்ளது.
இதேவேளை, 1954 இல் பெண்களின் நாளாந்த வேதனம் ஒரு ரூபாய் 93 சதமாகவும் 1967 இல் இரண்டு ரூபாய் 45 சதமாகவும் 1977 இல் மூன்று ரூபாய் 70 சதமாகவும் 1984 இல் 24 ரூபாய் 23 சதமாகவும் 1987 இல் 33 ரூபாய் 92 சதமாகவும் 1989 இல் 97 ரூபாயாகவும் இருந்துள்ளதாக தொழில் திணைக்களத்தின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1984 ஆம் ஆண்டு 44 வீத சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள பெருந்தோட்டங்களில் ஏற்பட்ட வேலை நிறுத்தத்தை சமாளிக்க அரசாங்கமே நேரடியாக இதில் தலையிட்டு வேதன அதிகரிப்பை வழங்கியதோடு நீண்ட காலமாக கோரப்பட்டு வந்த ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் வேதனங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டதாக பேராசிரியர் மா.செ. மூக்கையா தனது நூல் ஒன்றில் குறிப்பிட்டுக்காட்டியுள்ளார்.
19 ஆம் நூற்றாண்டில் ஆண் / பெண் தொழிலாளர்களது கூலி மட்டங்களுக்கு இடையிலான வேறுபாடு 25 சதவீதமாக இருந்துள்ளது. இன்னுமொரு தகவலின் அடிப்படையில் 1929 – 1933 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஆண் / பெண் நாட் சம்பளங்களில் சிற்சில மாறுதல்கள் இடம்பெற்றுள்ளமையையும் அறிந்து கொள்ள முடிகின்றது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான கூலிச்சமமின்மை பெண்ணிலைவாதிகள் மற்றும் நிறுவனங்களின் கண்டனத்துக்கு உள்ளாகி இருந்தது. இதனடிப்படையிலேயே 1984 இன் கூலிச்சபை சட்டத்தினால் சமவேலைக்கு சம சம்பளம் கொடுக்கும் நிலைமை ஏற்பட்டதாக தெரியவருகின்றது.
1992,1993, 1996,1998 போன்ற ஆண்டுகளில் மேற்கொள்ள சம்பள உயர்வில் ஆண்/ பெண் இரு சாராரும் சம சம்பளத்தை பெற்றுக் கொள்ளும் நிலைமை உருவானது. 1998 ஆம் ஆண்டு 101 ரூபாய் சமசம்பளம் இரு சாராருக்கும் கிடைத்தமையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். 1998 ஆம் ஆண்டு முதல் தொழிலாளர்கள் சார்பான கொடுப்பனவு உயர்வு பெற்றுள்ளமையையும் கூறியாக வேண்டும். இதனடிப்படையில் சேமலாபநிதி சேவைகாலப் பணம், மேலதிகக் கொடுப்பனவு, விடுமுறை கால போனஸ், பிரசவ சகாய நிதி போன்ற பல கொடுப்பனவுகளும் உயர்வு பெற்றதாக புத்திஜீவிகள் குறிப்பிட்டுக் கூறியுள்ளனர்.
இதேவேளை, தொழில் திணைக்கள அறிக்கையின்படி தொழிலாளர் ஒருவருக்கு மாதம் ஒன்றிற்கு வழங்கப்பட்டிருந்த வேலை நாட்களின் தொகையையும் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. 1964 இல் ஆண் ஒருவருக்கு மாதாந்தம் சராசரியாக 19.3 வேலை நாட்கள் வழங்கப்பட்டிருந்தன. 1974 இல் 16 வேலை நாட்களும் 1977 இல் 20 வேலை நாட்களும் 1982 இல் 16 வேலை நாட்களும் 1984 இல் 17.5 வேலை நாட்களும் 1985இல் 22.2 வேலை நாட்களும் வழங்கப்பட்டிருந்தன. இதே வேளை பெண் ஒருவருக்கு 1964 இல் 18.6 வேலைநாட்களும் 1974 இல் 17.2 வேலை நாட்களும் 1977 இல் சராசரியாக 19 வேலைநாட்களும் 1982 இல் 15.5 வேலை நாட்களும் 1984 இல் 18.5 வேலை நாட்களும் 1988 இல் 23.3 வேலை நாட்களும் வழங்கப்பட்டிருந்தமையை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
காலத்துக்குக் காலம் வேதன அதிகரிப்புகள் வழங்கப்பட்டபோதும் தொழிலாளர் வேதன உயர்வு குறித்து இன்னும் இழுபறியான ஒரு தன்மையைக் காணக்கூடியதாயுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம் தொடர்பாக பேசுகின்ற போது தேயிலை தொடர்பாக பேசாமல் இருக்க முடியாது. உலகின் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகளின் வரிசையில் இலங்கையும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒரு நாடாக இருக்கின்றது. உலக சந்தையில் எமது நாட்டின் தேயிலைக்கென்று ஒரு தனித்துவமான இடம் இருப்பதையும் நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள் தேயிலைத் தொழிலில் பல இலட்சம் பேர் ஈடுபட்டுள்ள நிலையில் பலர் தங்கி வாழ்வதனையும் கூறியாக வேண்டியுள்ளது. 1985 இல் இரண்டு இலட்சத்து 31 ஆயிரத்து 650 ஹெக்டேயர் பரப்பின் தேயிலை பயிர்ச்செய்கை இடம்பெற்றுள்ளது. இது கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இரண்டு இலட்சத்து 21 ஆயிரத்து 75 ஹெக்டேயராக குறைவடைந்தது. நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அதிகமான பரப்பில் தேயிலை உற்பத்தி இடம்பெறுகின்றது. 1945 இல் இலங்கையில் தேயிலை உற்பத்தி 125.6 மில்லியன் கிலோவாகும். 1970, 1980, 1986, ஆம் ஆண்டுகளில் முறையே 221.2, 191.3, 211.3 மில்லியன் கிலோவாக தேயிலை உற்பத்தி இருந்தது. 1990இல் தேயிலை உற்பத்தி 233 மில்லியன் கிலோவாகும்.
தேசிய வருவாயில் தேயிலையின் வகிபாகம் கணிசமாக இருந்து வருகின்றது. 2012 இல் மொத்த ஏற்றுமதி வருவாயில் சுமார் பதினைந்து சதவீதத்திற்கு தேயிலை வகை கூறி இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். 2013 ஆம் ஆண்டில் இலங்கையில் அதிகளவான தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது. 2014 ஆண்டின் ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் தேயிலை ஏற்றுமதியானது 7.5 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போன்று அந்நியச் செலாவணி வருமானமானது 18 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டிருந்தது தேயிலைக்கான விலை 9.8 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டிருந்தது.
தேயிலை தொழிற்துறை குறித்து நாம் கவனம் செலுத்துகின்ற போது சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் நலன்கருதி அரசு வழங்கும் பல்வேறு சலுகைகள் பெருந்தோட்டங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. இதில் உண்மை இல்லாமலும் இல்லை. அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை நாம் இவ்விடத்தில் தெளிவாக விளங்கிக் கொள்ளக் கூடியதாக உள்ளது. பெருந்தோட்டக் காணிகள் பல்வேறு அபிவிருத்தி தொடர்பான காரணங்களைக் காட்டி சூறையாடப்படும் நிலையானது பெருந்தோட்ட தொழிலாளர்களின் இருப்பையும் பெருந்தோட்டங்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி இருக்கின்றது.
இந்நிலையில் தேயிலை தொழிற்றுறையானது வீரியமற்ற போக்கைக் கொண்டுள்ளதாக காரணம் காட்டி முதலாளிமார் சம்மேளனம் தொழிலாளர் சம்பள உயர்வு விடயத்தில் இழுபறித்தன்மை மேலோங்க வழிவகுத்துள்ளது. உற்பத்தி செலவினங்களின் அதிகரிப்புத் தன்மை ஊழியர்களுக்கான அதிகரித்த செலவுகள் உள்ளிட்ட மேலும் பல காரணங்களுக்கு தமக்கு சாதகம் இல்லாதிருப்பதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்து வருகின்றது. அத்தோடு தோட்டத் தொழிலாளர்கள் குறைந்தளவிலான நாட்களே வேலைக்கு செல்வதாகவும் இதனால் தாம் உற்பத்தி மற்றும் முகாமைத்துவ ரீதியாக பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் முதலாளிமார் சம்மேளனம் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையின் போது பல முறைகள் கூறுவதற்கும் தவறவில்லை.
எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் தற்போதைய கூட்டு ஒப்பந்தம் நிறைவடைகின்ற நிலையில் புதிய கூட்டு ஒப்பந்தம் குறித்த அதிர்வலைகள் மேலெழும்பத் தொடங்கி இருக்கின்றன. பொருட்களின் விலை அதிகரிப்பு, தேவைகளின் அதிகரிப்பு, பொருளாதார முடக்கம் என்பவற்றுக்கு உரிய பரிகாரத்தை புதிய கூட்டு ஒப்பந்தம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தல்கள் இடம்பெற்று வருகின்றமையும் தெரிந்ததே. மேலும், தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு மட்டுமல்லாது தொழிலாளர்களின் ஏனைய பல நலன்களையும் பாதுகாப்பதற்கு கூட்டு ஒப்பந்தம் வழிவகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்கள் இடம்பெற்று வருவதனையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
புதிய அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கியுள்ளது. தனியார் துறையினருக்கும் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தோட்டத்தொழிலாளர்களும் தனியார் துறையினர் என்ற ரீதியில் உரிய கணிசமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் பலருடைய கருத்தொருமித்த நிலையைக் கொண்டுள்ளமையை அறிந்து கொள்ள முடிகின்றது. தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்பது பலரினதும் எதிர்பார்ப்பாகும்.
கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் மார்ச் மாதமளவில் இடம்பெற உள்ளதாக கூட்டு ஒப்பந்தத்தின் பிரதான பங்காளி கட்சியான இ.தொ.கா. தெரிவித்துள்ளது. எனினும் நாட்டின் நிலைமைகளால் தேர்தல் முன்னெடுப்புகளால் பேச்சுவார்த்தை பிற்போடக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறெனினும் உரிய காலப்பகுதியில் இருந்து தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க இ.தொ.கா. உறுதி பூண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கிடையில் தனியார்துறை ஊழியர்களின் சம்பளத்தை இரண்டாயிரத்து 500 ரூபாவினால் அதிகரிக்குமாறு அரசாங்கத்தினால் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் மேற்படி ஆலோசனையின் பிரகாரம் தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொடுப்பதற்கு கூட்டு ஒப்பந்தக்காரர்களுடன் கலந்தாலோசிப்பதற்கு தீர்மானித்திருப்பதாக இ.தொ.கா. தரப்பின் செய்திகள் வலியுறுத்துகின்றன. மேலும் இச்செய்தியின் படி பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு உள்ளிட்ட பல்வேறு நலன்களுக்கும் வலுச்சேர்க்கும் கூட்டு ஒப்பந்தமான மார்ச் 31 உடன் முடிவடைகின்றது. உரிய காலத்தில் மக்களின் எதிர்கால மற்றும் அதிகரித்த செலவினத்தை ஈடு செய்யும் வகையில் தொழிலாளர்களுக்கு அதிகரித்த சம்பளமாக இடைக்கால வரவு – செலவு திட்டத்தில் சிபாரிசு செய்யப்பட்டுள்ள தொகையும் உள்ளடங்கலாக மொத்த சம்பளமாக நாளாந்தம் ரூபா ஆயிரத்தை தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு ஏனைய கூட்டு ஒப்பந்தம் தொழில்சங்க பங்குதாரர்களுடன் பேசி கலந்தாலோசிக்க இ.தொ.கா. தீர்மானித்துள்ளது.
பெருந்தோட்டத்துறை மக்களின் அனைத்து பொருளாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டே காலங்காலமாக வேதன உயர்வை இ.தொ.கா. பெற்றுக் கொடுத்து வந்துள்ளது. அந்த வகையில் தற்போதைய இ.தொ.கா. தீர்க்கமான முடிவு குறித்து கலந்துரையாட ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என்று அச்செய்தி வலியுறுத்துகின்றது.
இதேவேளையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்கும் முயற்சிக்கு மலையக தொழிலாளர் முன்னணி முழுமையான ஆதரவை வழங்கும் என்று முன்னணியின் பொதுச் செயலாளர் கே. சுப்பிரமணியம் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் அண்மையில் இடைக்கால வரவு – செலவு திட்டத்தில் வழங்கப்பட்ட 2500 ரூபாய் சம்பள உயர்வு தோட்டத்தொழிலாளர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்று நாம் கோரினோம். ஆனாலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் அல்லது சம்பளம் அதிகரிக்கப்படும் நியதிகள் கூட்டு ஒப்பந்தத்திலேயே நிர்ணயிக்கப்படுவதால் அவ்வாறான சலுகைகளை எம்மால் பெற்றுக் கொள்ள முடியாமல் போகின்றது. ஆனால் இந்த தொகையும் உள்ளடக்கப்படுவது போல இக்கூட்டு ஒப்பந்தத்தில் சம்பள உயர்வு வழங்கப்படல் வேண்டும்.
மலையகத்தின் ஏனைய அமைப்புகளும் இ.தொ.கா. வின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்கு ஆதரவளிக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு கட்சி ஏதாவது காரணத்திற்காக இதனை எதிர்த்தால் அதனை சாட்டாக வைத்து இந்த கோரிக்கை வீணாக்கப்பட்டு விடக்கூடாது. அதேவேளை, சம்பள உயர்வுக்கு அப்பாற் பட்ட தொழிலாளர்களின் நலன்களுக்கும் இக்கூட்டு ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட வேண்டும் என்று கே. சுப்பிரமணியம் தனது செய்தியில் தெரிவித்திருக்கின்றார்.
கூட்டு ஒப்பந்த காலத்தில் பல தொழிற்சங்கள் புற்றீசல் போல புறப்பட்டு வருகின்றன. தொழிலாளர்கள் மீது எப்போதும் இல்லாத பாசமும் கருணையும் இத்தொழிலாளர்களுக்கு வந்து விடுகின்றன. கூட்டு ஒப்பந்த காலத்தில் சாத்தியப்படாத சம்பள உயர்வையும் இன்னும் பல விடயங்களையும் முன்னிறுத்தி இவர்கள் தொழிலாளர்களிடையேயும் தொழிற்சங்கங்களிடையேயும் முரண்பாடுகளை தோற்றுவித்து வருவதனையும் சமகாலத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது இந்நிலை வேறருக்கப்படுதல் வேண்டும்.
தொழிற்சங்கங்களின் பிளவுகளும் விரிசல்களும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு வாய்ப்பாக போய்விடும். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதனைப் போல முதலாளிமார் சம்மேளனம் பிளவுகளை வாய்ப்பாகக் கொண்டு காரியத்தை சாதித்துக் கொள்வதில் ஆர்வம் செலுத்தும் கடந்த கால வரலாற்றுப் பாடங்களும் இதனை நமக்கு உணர்த்துவதாகவே இருக்கின்றன.
தொழிற்சங்கங்கள் எதுவாக இருப்பினும் அது தொழிலாளர்களின் நலன்களைப் பேணும் பொருட்டே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. தொழி லாளர்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுத்தல், பல்வேறு துறைகளிலும் தொழிலாளர்களின் மேம்பாட்டுக்கு வித்திடுதல், தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்தல், எழுச்சிக்கு கை கொடுத்தல் என்று தொழிலாளர் சார்பாக தொழிற்சங்கத்தின் பணிகள் ஏராளமானதாகும். ஒவ்வொரு தொழிற்சங்கமும் இதிலிருந்தும் பின்னிற்கக் கூடாது.
கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக தொழிலாளர்களுக்கு உரிய சம்பள உயர்வையும் ஏனைய சலுகைகளையும் பெற்றுக் கொடுப்பதென்பது முக்கிய த்துவம் மிக்க ஒரு விடயமாகும். இச்சந்தர்ப் பத்தில் தொழிற்சங்கங்கள் தானே பெரியவன் என்று முட்டி மோதிக் கொண்டு தொழிலாளர்களின் வயிற்றிலடிக்கக் கூடாது. தொழிற்சங்கங்கள் எல்லாமே தொழிலாளர் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட தென்றால் தொழிற் சங்கங்களுக்கிடையில் ஏன் ஒரு கருத்தொருமிப்பும் புரிந்துணர்வும் இருத்தல் கூடாது. இந்த கூட்டு ஒப்பந்த விடயத்திலாவது இந்த கருத்தொருமிப்பும் புரிந்துணர்வும் ஏற்படுத்தப்படல் வேண்டும். மலையகத்திற்கு யார் தலைவன் என்பது முக்கியமல்ல மக்களுக்காக சிறந்த சேவையை முன்னெடுத்து செல்லக்கூடிய ஆளுமைமிக்க தலைவன் யார் என்பதே முக்கியமாகும். அவரை இனங்காண்போம்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...