Headlines News :
முகப்பு » » கூட்டு ஒப்பந்தமும் சம்பள உயர்வும் - பி.செல்வநாதன்

கூட்டு ஒப்பந்தமும் சம்பள உயர்வும் - பி.செல்வநாதன்


கூட்டு ஒப்பந்தம் இறுதியாக 2013ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கமைய நாளொன்றுக்கு தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளமாக 450 ரூபாவும், வேலை நாட்களில் 75% வருகை கொடுப்பனவாக 140 ரூபாவும் தேயிலை விலைக்கு ஏற்ப 30 ரூபாவாகவும் மொத்தமாக 620 ரூபா வழங்கப்படுகிறது. தோட்டங்களில் வேலை வழங்கப்படும் நாட்களில் 75% வருகை தராதவர்களுக்கு முழுமையான சம்பளம் கிடைக்காது.

2013ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்டிருந்த தோட்டத் தொழிலாளர்களின் சம்பள ஒப்பந்தம் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. மீண்டும் புதிய ஒப்பந்தம் ஏப்ரல் அல்லது மே மாத முற்பகுதியில் மேற்கொள்ளப்படவிருக்கிறது. மூன்று பிரதான தொழிற்சங்கங்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போகின்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி ஆகியனவே பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போகின்றன.

இன்றைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை கருத்தில் கொண்டு தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். ஒரு தொழிலாளியை எடுத்துக் கொண்டால் சுபகாரியம் அல்லது மரணம் ஏற்பட்டாலோ சுகவீனமாக இருந்தாலோ கட்டாயம் வீட்டிலிருந்துதான் ஆக வேண்டும். அக்காலப் பகுதியில் 75% வேலைக்குச் செல்லாவிட்டாலும் அவர்களுக்கு 4000 முதல் 5000 வரை இழப்பு ஏற்படுகின்றது. எனவே தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

பெருந்தோட்டத் துறையின் தொடர்ச்சியான செயற்பாடுகளுக்கு உகந்த வகையில் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். பேச்சு வார்த்தைக்கு செல்வதற்கு முன்பு அது பற்றி நன்றாக ஆராய்ந்து தீர்மானம் எடுத்துச் செல்ல வேண்டும். சம்பள உயர்வோடு நின்று விடாமல் அவர்களுடைய நலன் தொடர்பாக சில விடயங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

1. தோட்டத் தொழிலாளி ஒரு நாளைக்கு வேலைக்குச் சென்றாலும் ஏனைய கொடுப்பனவுகளையும் சேர்த்து முழுச் சம்பளம் வழங்கப்படல் வேண்டும்.
2. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைக்குச் சென்றால் அவர்களுக்கு 1 1/2 நாள் சம்பளம் வழங்கப்படல் வேண்டும். இதையே 1978 ஆம் ஆண்டின் 17ஆவது பிரிவுச் சட்டப்பிரிவு (08.01) கூறுகிறது. இன்றைய நாட் சம்பளப்படி 620+310=930 ரூபா வழங்கப்படல் வேண்டும்.

ஒரு பொது விடுமுறை தினத்தன்று தோட்ட நிர்வாகம் வேலை வழங்குமாயின் (போயா விடுமுறை, அரச விடுமுறை) அன்றைய தினம் வேலைக்குச் செல்லும் தொழிலாளிக்கு அனைத்துக் கொடுப்பனவுகளையும் சேர்த்து இரண்டு நாள் சம்பளம் வழங்கப்பட வேண்டும். இன்றைய சம்பளப்படி 1240 ரூபா வழங்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக 450 ரூபா மாத்திரமே வழங்கப்படுகின்றது. சட்டரீதியாக நோக்குவோமாயின், இந்த இரண்டு வருடங்களுக்கான சம்பளத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

3. தோட்டத் தொழிலாளருக்கு தோட்ட நிர்வாகம் 60 வயதைப் பூர்த்தி செய்தவுடன் ஓய்வு வழங்குகின்றது. ஆனால், அவர்களுடைய ஓய்வூதியப் பணம் உடனடியாக வழங்கப்படாமல் வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றது. தோட்ட நிர்வாகம் உரிய நேரத்தில் அவர்களுக்குரிய பணத்தைப் பெற்றுக் கொடுப்பதில்லை. இதனால் தோட்டத் தொழிலாளர்கள் தோட்டக் காரியாலயங்களுக்கு அலைந்து திரிய வேண்டிய அவல நிலை ஏற்படுகின்றது. எனவே அவர்களுக்கு பணம் வழங்கும் போது தாமதமாகும். மாதத்துக்கு 10% மேலதிகமாக வழங்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. தோட்ட பெண் தொழிலாளருக்கு பிரசவ சகாய நிதியை முழுமையாக வழங்க ஆவன செய்தல் வேண்டும். இதனையே பிரசவ சகாய நிதி சட்டவாக்கம் (1930 அத்தியாயம் 140) 1978 ஆம் ஆண்டு 13ஆம் இலக்க திருத்தச் சட்டம் கூறுகிறது.

5. தோட்டங்களில் தேயிலை பயிர்ச்செய்கைக்கு உகந்தவாறு புல் வெட்டுதல், முறையான கவ்வாத்து வெட்டுதல், மருந்து தெளித்தல், உரம் போடுதல் போன்ற பிரதான வேலைகளை முழுமையாகச் செய்தல் வேண்டும்.

6. தோட்டத் தொழிலாளிகளுக்கு பங்கு அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இது வரைக்கும் ஒருசில தோட்டக் கம்பனிகளால் பங்குப் பணம் வழங்கப்படவில்லை. ஒரு சில கம்பனிகளில் மாத்திரமே இப்பணம் வழங்கப்படவில்லை. இது சட்டவிரோதமானது. இதனையும் பெற்றுக்கொடுக்க ஆவன செய்தல் வேண்டும்.

சுகாதார வசதிகள், தோட்டங்களில் மிகவும் மோசமான நிலையிலேயே காணப்படுகின்றன. இது தொடர்பிலும் கூடிய கவனம் எடுக்க ஆவன செய்ய வேண்டும்.

7. தோட்டத் தொழிலாளரின் குடியிருப்புகளுக்கு கூரைத்தகடுகள் மாற்றப்பட வேண்டும். தோட்ட மருத்துவமனைகளில் போதியளவு மருந்துகள் இல்லை. தோட்டத் தொழிலாளி ஒருவர் இறந்து விட்டால் அவருக்கு கொடுக்க வேண்டிய பெட்டி காசு கூட இரண்டு மாதங்களின் பின்னரே வழங்கப்படுகிறது.

இது போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் வகை யில் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும் என்பதே தொழிலாளரின் எதிர்பார்ப்பாகும்.


 நன்றி - வீரகேசரி 22.03.2015
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates