Headlines News :
முகப்பு » » காணியும் அதில் சொந்த வீடும் : அடித்தளமிட்ட மீரியபெத்தை - மலைநேசன்

காணியும் அதில் சொந்த வீடும் : அடித்தளமிட்ட மீரியபெத்தை - மலைநேசன்


ஒரு சமூகம் அபிவிருத்தியடைவதற்கு சொந்தமான காணியும் அதில் வீடும் அமைந்திருக்க வேண்டும். இதனையே வளர்ச்சியடைந்த சமூகங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால், மலையக சமூகம் இன்னும் பின்தங்கியிருப்பதற்கு சொந்தக் காணி, சொந்த வீடு இல்லாமை பிரதான காரணங்களில் ஒன்றாகும். இதற்காக மலையக சமூகம் நீண்டதொரு போராட்டத்தினை நடத்தியுள்ளது. தொடர்ந்தும் நடத்தி வருகின்றது. இந்த நீண்ட போராட்டத்தின் உச்சக்கட்டம் கடந்த வருடம் இடம்பெற்றது.

மீரியபெத்தையில் இடம்பெற்ற பாரிய மண்சரிவுடன் அது உச்சக்கட்டத்தை அடைந்தது என்றால் அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. மீரியபெத்தை சம்பவம் உள்நாட்டிலும் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் மலையக மக்களின் அவல வாழ்க்கையை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. எனவே மலையக மக்களின் காணி மற்றும் வீடு தொடர்பில் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயம் அரசியல் தலைவர்களுக்கு மட்டுமன்றி அரசாங்கத்துக்கும் ஏற்பட்டது.

அதனடிப்படையிலேயே தற்போதைய அரசாங்கம் காணியும் தனி வீடும் அமைத்துக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் முதற்கட்டம் மீரியபெத்தையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் இருண்டுபோன இருநூறு வருட வரலாற்றில் ஏழு பேர்ச்சஸ் காணியில் அதற்கான உறுதிப்பத்திரத்துடன் நவீன வீடொன்றில் குடியிருப்பதற்கான நல்லதொரு வாய்ப்பு மீரிய பெத்தையிலிருந்து ஆரம்பமாகியுள்ளமை வரவேற்கத்தக்கதாகும். இந்த ஆரம்பம் ஏனைய பிரதேசங்களில் வாழுகின்ற தோட்ட மக்களின் குடியிருப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைப்பெற்று தர வேண்டுமென்பது அனைவரதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.

மக்களும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைமைகளும் இணைந்தும் துணிந்தும் நிபந்தனைகளை வைத்தாலேயே இந்த வாய்ப்பு மலையக மக்களுக்குக் கிடைத்துள்ளது. இதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே மலையக மக்களின் வேண்டுகோளாகவும் இருக்கின்றது.

மலையக மக்களுக்கு காணி வழங்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக வேண்டுகோள்களும் கோரிக்கைகளும் விடுக்கப்பட்டு வந்ததுடன் பல போராட்டங்களும் நடத்தப்பட்டு வந்துள்ளன. அந்த கோரிக்கைகள் சில மலையகத் தலைமைகளினால் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளதுடன் உதாசீனமும் செய்யப்பட்டு வந்துள்ளன. மலையக மக்களுக்கு காணியோ அல்லது தனியான சொந்த வீடோ வழங்க கூடாது என்ற வைராக்கியத்தை கடைப்பிடித்தனர். அதனால் மக்களின் கோரிக்கைகளை அவர்கள் பிரதிபலிக்கவில்லை. அரசாங்கத்திடமோ அல்லது பாராளுமன்றத்திலோ இதுபற்றி பேசவில்லை. எனவே அப்போதைய மஹிந்த அரசுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருந்தது. அவர்களும் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தட்டிக்கழித்து வந்தனர்.

மலையக மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக தேர்தல் மேடைகளிலும் பொதுக்கூட்டங்களிலும் மற்றும் வரவுசெலவுத்திட்டங்களின் போதும் தரிசு காணிகளை பகிர்ந்தளிக்கபோவதாகவும் மாடி வீடுகளை அமைத்துக்கொடுக்க போவதாகவும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை வாங்கிக் குவித்தனர். ஆனால், பொய்யும் புரட்டும் எத்தனை நாட்களுக்குத்தான் நிலைத்திருக்கும். ஒருநாள் வெளிவரத்தானே செய்யும். அதுதான் இப்போது நடந்துள்ளது. பொய்க்காரர்களையும் ஏமாற்றுக்காரர்களையும் மக்கள் நன்கு புரிந்துகொண்டு விட்டார்கள். அதுதான் ஆட்சி மாற்றத்துக்கே வித்திட்டது.

மலையக மக்கள் சொந்தக் காணியையும் தனிவீட்டையும் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ள நிலையில் இன்னும் கூட சில மலையக அரசியல்வாதிகள் அதற்கு எதிராக செயற்படுவதால்தான் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கின்றது. அதாவது அவர்களுக்கு காணியோ அல்லது தனி வீடோ அமைத்துக்கொடுக்கக்கூடாது என்ற எண்ணத்துடனேயே இருக்கின்றனர். தமது கொள்கையிலிருந்து சற்றேனும் மாறாத இந்த தலைவர்களை மக்கள் தலைவர்கள் என்று சொல்வதற்கே வேதனையாக இருக்கின்றது. இந்த தலைவர்கள் எதிர்காலத்தில் தற்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள காணி மற்றும் தனி வீட்டுத்திட்டத்துக்கு எதிராக செயற்பட்டு அதனை தடுத்து நிறுத்த முயற்சிக்கக்கூடும்.

எனவே எக்காரணம் கொண்டும் தற்போதைய திட்டத்தில் மாற்றங்கள் எதுவும் செய்யமுடியாத வகையில் காணி மற்றும் தனிவீட்டு திட்டம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் தனி வீடமைப்புத் திட்டத்தின் நோக்கம் அதன் இலக்கை எட்டும். 200 வருட மலையக வரலாற்றில் ஏழு பேர்ச்சஸ் காணியும் வீடும் கிடைப்பது இந்த நாட்டை பொறுத்தவரையில் ஒரு பெரும் சாதனையாகும். ஏனெனில் வடக்கு கிழக்கை பூர்வீக தாயகமாக கொண்ட தமிழ் மக்களில் அநேகர் கடந்த ஆட்சிக்காலத்தில் தமது சொந்த நிலங்களிலிருந்து விரட்டப்பட்டு அகதிகளாக முகாம்களில் தங்கியுள்ளனர். அவ்வாறான நிலையில் தற்போது மலையக மக்களுக்கு காணியும் தனிவீடும் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருப்பது ஒரு வரலாற்று சாதனைதான்.

இந்த வீடமைப்பு திட்டத்தில் தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களை மட்டும் உள்ளடக்காமல் மலையகத்தை தாயகமாகக்கொண்ட சகல இந்திய வம்சாவளி தமிழ் மக்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அது முழுமையடையும்.

மலையகத்தை தாயகமாக கொண்ட அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், தோட்ட உத்தியோகத்தர்கள், வர்த்தக நிலையங்கள், தனியார் நிறுவனங்கள், வாடகை வீடுகளில் தங்கியிருப்போர் ஆகியோருக்கு வீடுகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் இவர்களுக்கு ஏனைய மக்களைப்போன்று சொந்தக்காணிகளோ அல்லது வீடுகளோ இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

மலையக மக்களும் சிங்கள முஸ்லிம் மற்றும் வடக்கு கிழக்கு மக்களைப்போன்று தன்மானத்துடன் தமது சொந்த நிலத்தில் வாழும் நிலை ஏற்பட வேண்டும். அதன்மூலமே எதிர்கால மலையக சமூகம் ஏனைய மக்களுக்கு நிகராக இந்த நாட்டில் வாழ முடியும் என்பதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அதற்காக தற்போது இடப்பட்டிருக்கும் அத்திவாரம் உறுதியானதாக இருக்க வேண்டும்.

மலையக மக்கள் தொடர்ந்தும் பின்தங்கிய சமூகமாக இருப்பதற்கு இந்த மக்களுக்கு தலைமை தாங்கிய தலைவர்களின் தீர்க்க தரிசனமற்ற செயற்பாடுகளே காரணமாகும். அவர்கள் தீர்க்கதரிசனத்துடன் செயற்பட்டிருந்தால் மலையக மக்களின் அநேக பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டிருக்க முடியும். அந்த தலைவர் வாக்குகளை பெற்றுக்கொள்வதிலும் அதன்மூலம் அமைச்சு பதவிகள் மூலம் அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொள்வதிலேயே கவனம் செலுத்தினர். தாமும் தமது குடும்பமும் சுகமாக இருந்தால் மட்டும் போதும் என்ற மனப்பான்மையுடன் செயற்பட்டனர். மக்களைப் பற்றியோ அவர்களது தேவைகள் பற்றியோ சிறிதும் கவனம் செலுத்தவில்லை.

தொடர்ந்து மக்களை தோட்ட லயன்களுக்கு அடிமைகளாக வைத்திருப்பதையே விரும்பினர். மக்கள் கல்வியறிவு பெற்று சொந்த வீடுகளில் வாழும் நிலை ஏற்பட்டால் தம்மால் அரசியல் செய்ய முடியும் என்று நினைத்ததாலேயே அவர்கள் மக்களை முடக்கி வைத்தனர். ஆனால், மக்கள் முட்டாள்களல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

மக்களுக்கு ஏற்றவாறுதான் அரசியல் செய்ய வேண்டுமே தவிர, மக்களுக்கு எதிராக ஒருபோதும் அரசியல் செய்யமுடியாது. மக்கள் நாளுக்கு நாள் அனைத்து விடயங்களிலும் தெளிவுபெற்று வருகின்றனர். எனவே அவர்களது விருப்பத்தை தெரிந்து அதற்கேற்றவாறு அரசியல் செய்தாலே வெற்றி பெற முடியும். அதனை விடுத்து தலைவர்கள் தமது கருத்தை மக் கள் மீது திணிப்பதற்கு முற்பட்டால் அது தோல்வியிலேயே முடிவடையும். இதுவே யதார்த்தம்.

தற்போதைய மலையக தலைவர்கள் சிலர் இந்த யதார்த்தத்தை புரிந்துகொண்டு செயற்பட ஆரம்பித்துள்ளனர். அதுவே அவர்களுக்கு மக்கள் ஆதரவை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. மக்கள் உணர்வைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு செயற்பட்டால் மக்கள் நிச்சயமாக அதற்கு தமது பூரணமான ஆதரவை வழங்குவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
அந்த வகையிலேயே காணி உரிமை மற்றும் தனிவீட்டுத்திட்டம் என்பன மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. அதனை நிறைவேற்றுவதற்கு உறுதியளித்து செயற்படும் தலைவர்களுக்கு மக்கள் ஆதர வளிக்கின்றனர். இது காணி மற்றும் வீடமைப்பு மட்டுமன்றி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல துறைகளுக்கும் பொருந்தும் என்பதை மலையக தலைவர்கள் மறந்துவிடக்கூடாது.

 நன்றி - வீரகேசரி 
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates