மு.சிவலிங்கம் அவர்கள் நாடறிந்த எழுத்தாளர் அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி, மொழிப்பெயர்ப்பாளர், சினிமா கதாசிரியர் என பன்முக ஆளுமையைக் கொண்டவர். மலையக சமூக நகர்வில் அறுபதுகள் முக்கியமான காலப்பகுதியாகக் கொள்ளப்படுகின்றது. மலையக தேசிய இனத்துவத்திற்குரிய வர்க்க அடையாளங்களை முன்னிலைப்படுத்திய அரசியல் இயக்கங்கள் ஊடாக பயணித்தவர் மு.சிவலிங்கம். தவிரவும் மலையக இருப்புக்குரிய சிறுகதைகளான தோட்டக்காட்டினிலே, நாமிருக்கும் நாடே, கோடிச்சேலை, ஒரு கூடை கொழுந்து போன்றவற்றின் ஊடாக தனது ஆக்க இலக்கியத்தை பதிவுசெய்து கொண்டவர். இத்தகைய பரிணாமத்துடன் இன்றுவரை ஊடறுப்பு செய்து வரும் மு.சிவலிங்கத்தின் படைப்புக்களை இனங்கான வேண்டியது காலத்தின் தேவையாகும்.
அண்மைக்காலங்களில் வெளிவந்த மலைகளின் மக்கள், ஒப்பாரி கோச்சி, வெந்து தணிந்தது காலம் சிறுகதை தொகுதிகள் கவனத்திற்குரியன. இக்கதைகளின் ஊடாக மலையக சமூக அசைவகளை எவ்வாறு பதிவு செய்துள்ளார் என்பதை விளங்கிக்கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தேவைக்காக பின்வருமாறு இவரது கதையை பிரித்து நோக்குவோம்.
- 1967 தொடக்கம் 1980 வரையிலான சிறுகதை படைப்பகள்.
- 1980 தொடக்கம் 2000 வரையிலான சிறுகதை படைப்புகள்.
- 2000 தொடக்கம் 2010 வரையிலான சிறுகதை படைப்புகள்.
- 1967 தொடக்கம் 1980 வரையிலான சிறுகதைகள்
1960களில் தோட்டக்காட்டான், கள்ளத்தோணி என்ற நிலைபாட்டுக்கு மாறாக இலங்கை மண்ணுக்குரிய மலையக தேசிய அடையாளக்கூறுகளை தன்னகப்படுத்தி கொண்டதன் விளைவாக எழுந்த சிறுகதைகளின் தொகுப்பாக “மலைகளின் மக்கள்” என்ற கதை தொகுதி விளங்குகின்றது. இத்தொகுதிகளில் வரும் பதின்மூன்று கதைகள் 1963ஆம் ஆண்டு தொடங்கி 1992வரையிலான காலப்பகுதிகளில் மலையகத்தின் வாழ்நிலையினை பதிவு செய்துள்ளன.
சிறுகதை தொகுப்பில் வரும் “பேப்பர் பிரஜைகள்” என்ற கதையில் வரும் பாத்திரமான செல்வம் என்பவர் வளர்ந்துவரும் மத்தியதர வர்க்கத்தின் பிரதிநிதி அப்பாத்திரப்படைப்பின் ஊடாக வரும் பிரஜாவுரிமை பிரச்சினையானது மலையக மக்களின் அக்காலத்திய நிலைகளை படம்பிடித்து காட்டுகின்றது. மற்றொரு கதையான “மதுரகீதம்” தொழிலாள வர்க்கத்தின் காதல் இரண்டு வேறு அரசிகளால் கூறப்பட்ட விதத்தினை துல்லியமாக பதிவு செய்து வெளிக்காட்டுகின்றது.
“இந்திய சமூக அமைப்பில் பேய் சக்திகளான ஜமிந்தார்களுக்கு மட்டுமல்ல மிராசுதாரர்களுக்கும் பண்ணையாளர்களுக்கும் பயந்து அடிமைகளாக கூலி விவசாயிகளாக வாழமுடியாமை தென்னாபிரிக்கா, மலேசியா, பிஜித்தீவு, இலங்கை தீவு என்று வாழ்வைத் தேடி சிதறி ஓடிய மக்கள் இன்றுவரை வாழ்வை தேடிக்கொண்டிருக்கிறார்கள். (மலைகளின் மக்கள்: பக்கம் 23)
மதுரகீதம் கதையில் வரும் சம்பவங்கள் மலையகத்தின் அவல நிலையினை எடுத்துக் காட்டுகின்றன. ஏக்கம், பரிதவிப்பு , நிராசை “நிரந்தரம்” என்ற கதையும் மலையக சமூகத்திற்குள் வாழ்ந்து வணிக வர்க்கத்தின் பச்சோந்தி தனத்தை காகமும் நரியும். தோட்ட சேவையாளர்கள் தனது சொந்த மக்களையே சுரண்டும் நிலை. “அலவான்ஸ் லேபர்” என்ற கதையும் தெளிவாக பேசுகின்றது. உழைப்பும், அறியாமையும் பாசவுணர்வுகளையும், பழனி, பாக்கியம், சின்னக்குட்டி ஆகிய பாத்திரங்கள் ஊடாக “இருள்” என்ற கதை பேசுகின்றது. அடிமைத்தனம் மலையகத்திற்கு மட்டுமல்ல. மலையகத்திற்கு வெளியே கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற நகரங்களில் தொடர்வதை “ஞான பிரவேசம்” என்ற கதை தெளிவாக எடுத்துரைக்கின்றது. நகர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தனது வாழ்வை தொலைத்த இளைஞர்களின் நிலையினை “வல்லமை தாராயோ” என்ற கதை பேசுகின்றது.
நகர வாழ்க்கைக்கு பழக்கப்பட்டுப் போன பெண்ணின் அவல நிலையினை “எனக்குள் ஓர் மயக்கம்” என்ற கதையும் மலையக மண்ணை, உழைத்து உரமாக்கி, வியர்வை சிந்தி தேயிலை தோட்டங்களை உருவாக்கிய தொழிலாளர்களுக்கு சிறப்பான தேயிலையினை பருக முடியாத துர்பாக்கிய நிலையினை “ஒரு பிடி தேயிலை” என்ற கதையும் தத்துருவமாக படம்பிடித்து காட்டுகின்றன. மது போதை பழக்கவழக்கங்கள் காரணமாக ஏற்பட்ட சீரழிந்த நிலையினை “என்ன பெத்த ஆத்தா” என்ற கதையும் பதிவு செய்துக்கொள்ள “மலைகளின் மக்கள்” என்ற சிறுகதை மலையக மக்களின் வாழ்வையும் இருப்பையும் உறுதி செய்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றது.
ஆக 1967 தொடக்கம் 1980வரையிலான சிறுகதைகளில் மலையக மக்கள் வாழ்நிலை, மண் சார்ந்த பிரச்சினைகள், விருப்பம், நிராசைகள், நம்பிக்கைகள் வெளிப்பட்டு நிற்பதை அவதானிக்கலாம். தொழிலாளர்கள் வாழ்நிலையினை பதிவு செய்து கொண்டாலும் வர்க்க ரீதியான பரிணாமத்தை வெளிப்படுத் தவறிபோதிலும் மலையக மண்ணுக்குரிய அடையாளங்களை சிதறலாக வெளிப்படுத்தியுள்ளார்.
1980 தொடக்கம் 2000 வரையிலான சிறுகதை படைப்புக்கள்
கருப்பு ஜூலை, தனியார் மய பொருளாதார கொள்கை நுகர்வு கலாசாரத்தின் அடிச்சுவடுகள் பதிந்த காலம் போன்றன முழு நாட்டையும் மட்டுமல்ல மலையகத்தையும் ஆக்கிரமிக்க தொடங்கின. மலையக சமூகத்தில் படித்த மத்தியதர வர்க்க எழுச்சியும் அதனை சார்ந்த பரம்பரையும் வளர்ச்சியடைந்த ஆரம்ப நிலைகளை மலையகம் பதிவு செய்துக் கொள்கின்றது. ஆசிரியர்கள், தோட்ட சேவையாளர்கள், கிராமசேவகர்கள், கடை முதலாளிகள், சிப்பந்திகள், வாகன ஓட்டுனர்கள், பிரதேச சபை, நகர சபை, மாகாண சபை உறுப்பினர்கள் என சமூக வர்க்க நிலைகளில் மாற்றங்களை நோக்கிய நகர்வினை மலையகம் மேற்கொண்ட வேளையில் அதனூடாக மலையக சமூக அசைவுகளை “ஒப்பாரி கோச்சி” என்ற சிறுகதை தொகுதி தடத்தை பதித்துக்கொள்கின்றது. மலையக வரலாற்று சம்பவங்களையும் மலையகத்தின் சமகால போக்குகளையும் மிக துல்லியமாக “ஒப்பாரி கோச்சி” கதையில் சித்தரித்துக் காட்டியுள்ளார்.
மலையக மக்களின் வாழ்வியல் உணர்வுகள், மண் சார்ந்த உணர்வுகளை மதிக்காத இந்தியா, இலங்கை அரசுகள் இம்மக்களை பிரித்து சின்னாப்பின்னமாக்கிய வரலாற்றை “ஒப்பாரி கோச்சி” என்ற சிறுகதை அருமையாக பேசுகின்றது. “சிவப்பு பாஸ்போட்” நடைமுறை இன்றைய இளைய தலைமுறையினருக்கு தெரியாத சம்பவங்களை யதார்த்தமான உணர்வுகளுடன் பேசுகின்றார் மு.சிவலிங்கம். இலங்கை மண்ணைவிட்டு உறவுகளை, நண்பர்களை, சமூகங்களை விட்டுப் பிரிந்து செல்லும் நானுஓயா முதல் தலைமன்னார் வரை அழும் கண்ணீர் இலங்கை மண்ணை ஈரமாக்கிய வரலாற்றை “ஒப்பாரி கோச்சி” எடுத்துக்காட்டுகின்றது. மலையக மக்கள் மத்தியில் வளர்ந்துவரும் மத்திய தரவர்க்கம் தட்டிக்கேட்கும் பழக்கத்தினை முன்சென்ற வேளையில் மலையக சமூகத்தவரால் காட்டிக்கொடுக்கப்படும் நிலையும் பேசப்படுகின்றது. மேலும் ஆசாமியை சாமியாக கொண்டாடும் மக்களின் அவலநிலை, கொழும்பு நகரங்களுக்கு வேலைக்கமர்த்தப்படும் இளைஞர், யுவதிகளின் நிலைகளையம் இக்கதையில் எடுத்துக்காட்டுகின்றார்.
மலையக மக்கள் மண்சார்ந்த பிரச்சினை, மலையக மக்களுக்கு 1980களில் ஏற்பட்ட சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளுடனான பயணம், எழுச்சி, சமூச மாற்றங்களுக்கான போராட்டங்களை இக்கதை தொகுதியில் விளக்கி சொல்கின்றார் மு.சிவலிங்கம்.
2000 தொடக்கம் 2010 வரையிலான சிறுகதைகள்
2000ஆம் ஆண்டில் முனைப்படைந்த தமிழ் தேசிய போராட்டம் உக்கிரமடைந்த காலப்பகுதியில் நலதாராளவாத பொருளாதார கொள்கை உலகமயமாக்கல் இலங்கையில் வேகமாக வளர்ந்த நிலை, பேரினவாத நடைமுறைகள், நிறுவனப்படுத்தப்பட்ட போக்கு, ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கு கீழ் பயங்கரவாதம் என்ற பெயரில் இன அழிப்பு நிகழந்த காலப்பகுதிகளுக்குள் ஊடறுத்து செல்கின்றது “வெந்து தணிந்தது காலம்” என்ற சிறுகதை தொகுதியாகும்.
“கரு சபாநாயக துமன” நமது நாட்டில் எலிகளின் தொல்லைகள் என்றுமில்லாதவாறு பாதிப்புக்களை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றது. மாகாணங்களிலுள்ள அரிசி களஞ்சியங்கள், மா களஞ்சியங்கள் இன்னும் உழுந்து, பயறு, பருப்பு, கடலை, சோளம் எல்லா தானியங்களும் நாசமாய் போய்க் கொண்டிருக்கின்றன…. எலிகளும் பூனைகளும் என்ற கதையில் வரும் இச்சம்பவமானது இலங்கையின் சமகால அரசியல் போக்குகளை மிகத் துல்லியமாக பேசுகின்றது.
1956, 1972, 1975, 1983 இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குடியேரினர். குறிப்பாக வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கூடுதலாக குடியேறினர். உலகும் ஆண்ட தமிழ் பரம்பரையால் அடிமைகளாக நடத்தப்பட்டாலும் தமிழ் தேசிய போராட்டத்தில் அதிகளவு உயிரை விலைக்கொடுத்தவர்களும் மலையக மக்களே. சாதித்துவ, அதிகாரத்துவ மனோநிலை அகதிமுகாம்களிலும் தொடர்வதை “வெந்து தணிந்தது காலம்” விரிவாக எடுத்துரைக்கின்றது. போரின் விளைவுகள் எவ்வளவு கொடுமையானது என மிக நுணுக்கமாக பதிவு செய்கின்றார் மு.சிவலிங்கம். இதேவிதமான உணர்வுகளை “கேட்டிருப்பாய் காற்றே…” என்ற கதையில் பின்வருமாறு சித்தரிக்கின்றார் “வேலாயுதம் என்ற மாஸ்டர்” ஒரு மகனை போராட்டத்திற்கு காணிக்கையாகவும் இன்னொரு மகனை இராணுவத்திற்காகவும் பறிகொடுத்துவிட்டு இன்று பஸ்சுக்குள் மனைவிக்கும் மறுபக்கம் மகளுக்குமாக மூவருமாய் இருப்பதை உறுதிசெய்துக்கொண்டு ஜடமாக அமர்ந்திருந்தார்.” (வெந்து தணிந்தது காலம்: பக்கம் 35)
தமிழ் தேசியம், தமிழ் தாயகம் என்ற அதிகார அரசியலுக்குள்ளும் இனவாத நடைமுறைகளுக்கும் பலியாகிப்போன மலையக மக்களின் அவல நிலையினை எடுத்துக்காட்டுகின்றார்.
நுகர் கலாசாரம் மக்களின் பண்பாட்டுத் தளத்தில் பதிவுகளை ஏற்படுத்த எழுத்தாயின் நிலையில் எவ்வாறு பாதிப்புக்குள்ளாகிறது என்பதை பற்றி விளக்குகின்றது. மீண்டும் பானை முளைக்கும் கதையும்… என்ற கதையும் பேச தலைப்படுகின்றது. தமிழர் அடையாளத்தின் பண்பாட்டு வேரான 1980களில் யாழ் நூலகம் எரிக்கப்பட்டதை “மந்திரியிட்ட தீ” என்ற கதையில் குறிப்பிட்டு பாணியில் விபத்தை சொல்கின்றார். சுய உற்பத்தி, சுய சிந்தனை என்ற சிந்தனைகளை வாசு, மீனா ஆகிய பாத்திரங்களின் ஊடாக “மேற்கில் தோன்றிய உதயம்” கதையும் விபரிக்கின்றது. உழைப்பை விட அதிக பணத்தேவையினை நுகர்வு கலாசாரத்திற்கு பழகிப்போன வாழ்வினை புது மாப்பிள்ளை கதையும் பேசுகின்றது. மலையகத்தின் சமகால அரசியலை படம்பிடித்துக்காட்டும் “மந்திரி கட்டிய பாலம்”, ஒரு ரட்சகனின் பாலம் தெட்ட தெளிவாக சித்தரித்துள்ளார்.
மலையகத்தின் சமகால கல்வியும் வியாபார பழிக்கு ஆளாகிப்போனதை பேய்களும் சேது மாணவனும் என்ற கதையும் கும்பர் என்ற மலையக தொழிலாளர்களின் பண்பாட்டு அடையாள சின்னமாக சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றார்.
மலையக சமூக அசைவுகள்
- மலையக மக்களின் வாழ்வியல் நிலைமைகளை பதிவு செய்துள்ளமை லயம் வாழ்க்கை, தோட்ட சேவையாளர்கள், கருப்பு கங்காணிகள், உழைப்பு பெண்ணடிமை, காதலுணர்வு என்பவற்றை கதைகளில் வெளிக்கொணர்ந்துள்ளார்.
- மலையக அரசியல் நிலைமைகளை மலைகளின் மக்கள், ஒப்பாரி கோச்சு ஆகிய கதைகளில் பதிவு செய்வதனூடாக மாற்று அரசியல் மலையகத்தில் வரவேண்டிய சிந்தனைகளை சிறு கதைகள் ஊடாக முன்மொழிகின்றார்.
- மலையக தேசத்திற்குரிய அடையாள கூறுகளை பேப்பர் பிரசை, ஒரு பிடி தேயிலை கதைகள், ஒப்பாரி கேச்சியில் வரும் கதைகள், வெந்து தணிந்தது காலம் என்ற கதைகளில் வரும் சமபவங்கள் ஊடாக முன்னகர்த்துகின்றார்.
- மலையகத்தில் எழுச்சிப்பெற்று வரும் மத்தியதர வர்க்கத்தின் எழுச்சியும் அவர்களின் நுகர்வு பண்பாட்டுக்குள் எவ்வாறு சீரழிந்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை மலைகளின் மக்கள், ஒப்பாரி கோச்சி, வெந்து தணிந்தது காலம் கதைகளின் ஊடாக பயணம் செய்கின்றார்.
இவ்வாறு மலையக சமூக அசைவுகளை பற்றி சிறுகதைகளால் பேசுகின்ற இவர் மலையகத்தில் எழுச்சியடைந்த, அடைந்துக்கொண்டிருக்கும் இடதுசாரி அரசியலை கதையாக்கவில்லை என்பது விமர்சனத்திற்குரியது. தவிரவும் ஒரு பார்வையாளனாக இருந்துக்கொண்டு கதைகளை எழுதியிருப்பது இன்னொரு பலவீனமாகும். சமூக மாற்ற சிந்தனைகளை அதற்கேயுரிய அழகிய பரிமாணங்களுடன் வெளிக்கொண்டு வராமைக்கு காரணத்தை இவரே விளக்க வேண்டும்.
ஒரு கவிஞன் பின்வருமாறு கூறுகின்றான்
இன்னொரு முறை
சிறைவாசம் வேண்டும் ஆனால்
அது கொடுமையானது
ஆனால்
எம்முன்னாள் நிகழும்
வாழ்க்கை சூரையாடப்படும்போது
மௌனமும்
மன்னிக்க முடியாத
குற்றமாகும்
இதன் வரிகள் இவருக்கு மாத்திரமல்ல மலையக படைப்பிலக்கியவாதிகளுக்கும் சமூக ஆர்வளர்களுக்கும் பொருந்தும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...