ஒரு சமூகத்தின் தரத்தை உயர்த்துவதுடன் சமூக அந்தஸ்த்தைப் பெற்றுத்தருவதும் கல்வியென்பது மறுக்கமுடியாத உண்மை. ஒருசமூகத்தில் கல்வியறிவு பெற்று சமூகத்தில் பல்துறைகளில் உயர் நிலையில் எத்தனை பேர் உள்ளனரோ, அவர்களை கொண்டே குறித்த சமூகத்தின் தரம் அளவிடப்படுகின்றது; கணிக்கப்படுகின்றது. பாடசாலைகளின் எண்ணிக்கையோ பௌதீக வளங்களோ ஆசிரிய ஆளணிகளின் அளவோ கல்வியை உயர்த்தி விடாது மேன்மைப்படுத்தி விடாது. இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத சமூகம் முன்னேற்றம் காண முடியாது.
இலங்கையின் கல்விகொள்கை இலவசக்கல்வி, சமத்துவக்கல்வி, பதின்நான்கு வயது வரை கட்டாயக்கல்வி என்ற பெறுமதிமிக்க கொள்கை நாட்டில் உரியபடி செயற்படுத்தப்படுகின்றதா என்பதையும் அது தமிழ் மொழி மூலக் கல்வித்துறையில் பாகுபாடின்றி பேணப்படுகின்றதா என்பதையும் ஆய்வுசெய்யும் போது இல்லையென்ற பதிலே எஞ்சுகின்றது.
இதற்கு எடுத்துக்காட்டாக பதுளை மாவட்டத்தின் தமிழர் கல்வியின் நிலை விளங்குகின்றது. ஒரு பிள்ளை தனது தகைமைக்கும் திறமைக்கும் ஏற்ற கல்வியைத்தொடர பதுளை மாவட்டத் தமிழ் பாடசாலைகளில் ஏற்ற வழி முறைகள் அற்ற நிலையை அவதானிக்க முடிகின்றது.
பதுளை மாவட்டத்தின் நான்கு கல்வி வலயங்களும் இதற்கு ஆதாரங்களாகியுள்ளன. பதுளை, வெலிமடை, பசறை, பண்டாரவளை ஆகிய நான்கு கல்வி வலயங்களில் நூற்றி ஐம்பத்தாறு தமிழ்ப் பாடசாலைகள் உள்ளன. அவற்றில் மத்திய கல்வி அமைச்சின் நிர்வாகத்தின் கீழும் மாகாண கல்வி அமைச்சின் கீழும் இயக்கப்படும் ஆறு 1ஏ.பி தரம் அதாவது கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தர வகுப்புக்களில் கலை, கணிதம், வர்த்தகம், விஞ்ஞானம் ஆகிய நான்கு துறைகளையும் கொண்ட பாடசாலைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், குறித்த ஆறு பாடசாலைகளிலும் உயர்தர வகுப்புக்களில் குறித்த நான்கு பாடப்பிரிவுகளும் செயற்படவில்லை என்ற உண்மை நிலை கவலையளிப்பதாயுள்ளது.
பதுளை கல்வி வலயத்திலுள்ள சரஸ்வதி மத்திய மகா வித்தியாலயமும் தமிழ் மகளிர் மகா வித்தியாலயமும் 1ஏ.பி தரப்பாடசாலைகள். அதேபோன்று வெலிமடை கல்வி வலயத்திலுள்ள வெலிமடை தமிழ் மகா வித்தியாலயமும் பசறை கல்வி வலயத்தின் பசறை தமிழ் மகா வித்தியாலயமும் பண்டாரவளை கல்வி வலயத்தின் அப்புத்தளை தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரி என்பவையே குறித்த முழுமையான துறைகளைக் கொண்ட ஆறு பாடசாலைகளாகும். இவற்றில் பதுளை மகளிர் மகா வித்தியாலயம் மட்டும் பெண்கள் பாடசாலையாகும்.
குறித்த ஆறு பாடசாலைகளில் ஒரு பாடசாலையிலாவது கணிதம் மற்றும் விஞ்ஞானத்துறைகளில் மாணவ, மாணவியர் தமது உயர் கல்வியைப் பெற ஏற்ற வசதிகள் செய்யப்படவில்லை.
உயர்வகுப்பில் கணிதத்துறை சார் பாடங்களாக இணைந்த கணிதம், பௌதீகவியல், இரசாயனவியல் ஆகிய பாடங்களும் விஞ்ஞானப்பிரிவுப் பாடங்களாக உயிரியில், பௌதீகவியல், இரசாயனவியல் பாடங்களும் உள்ள நிலையில் வர்த்தகத்துறையின் பாடங்களாக பொருளியல், வணிகக்கல்வி, கணக்கியல், புள்ளிவிபரவியல் ஆகிய பாடங்களும் கலைத்துறையில் தமிழ், இந்து சமயம், இந்து நாகரிகம், புவியியல், வரலாறு, அரசியல் மூலதத்துவங்கள், அளவையியலும் விஞ்ஞான முறையும் விவசாய விஞ்ஞானம் சித்திரம், நாடகமும் அரங்கியலும், நடனம், கர்நாடக சங்கீதம் ஆகிய பாடங்களுட்பட பல பாடங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
புதிதாக தொழில்நுட்பப் பாடங்களையும் உள்ளடக்கிய பாடநெறியொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சையில் தோற்றி சித்தியடைய வேண்டிய பாடங்கள் மூன்று. உயர்தரப்பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தியடைந்தால் மட்டுமே உயர்தரப் பரீட்சையில் சித்தி என்ற சான்றிதழைப் பெறமுடியும். உயர்தர தராதரத்துடன் தொழில் ஒன்றுக்கு விண்ணப்பிக்கும் தகைமை பெறமுடியும். பல்கலைக்கழக அனுமதிக்கோ கல்வியியல் கல்லூரிக்கோ அனுமதி பெறும் தகுதி பெற முடியாது.
பதுளை மாவட்டத்தின் தற்போதைய கல்வி நிலையை மதிப்பிடும் போது அம் மாவட்டப் பாடசாலைகளில் கற்று எந்தவொரு மாணவனோ, மாணவியோ கணிதத்துறை சார் பாடங்களிலோ விஞ்ஞானத்துறைசார் பாடங்களிலோ முழுமையான சித்தி பெற வாய்ப்பேதும் இல்லையென்ற யதார்த்த நிலை தெளிவாக வெளிப்படுகின்றமை வேதனையைத் தருகின்றது.
பாடத்தில் தகைமை கொண்ட பட்டதாரி ஆசிரியர்களால் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு குறித்த பாடம் கற்பிக்க வேண்டுமென்ற விதி இருப்பினும் ஒரேயொரு இரசாயனவியல் பட்டதாரியை மட்டுமே கொண்டு உயர்தர வகுப்பில் விஞ்ஞானப்பிரிவு நடத்தப்படும் இரு பாடசாலைகள் இனங்காணப்பட்டுள்ளன. அதேபோல் உயிரியல் பாடப் பட்டதாரியை மட்டுமே கொண்டு விஞ்ஞானப்பிரிவு நடைபெறும் பாடசாலையொன்றும் வெளிப்பட்டுள்ளது. கணித, விஞ்ஞான பிரிவுகளற்ற இரு 1ஏ.பி தரப்பாடசாலைகளும் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு பதுளை மாவட்ட தமிழர் கல்வி நிலை கேட்பாரற்று காணப்படுகின்றது.
ஆரம்பப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் பல காணப்படுவதுடன் கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண) தரப் பரீட்சையின் கட்டாயப் பாடங்களான கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், வரலாறு, தமிழ் போன்ற பாடங்களைக் கற்பிக்க தகைமையான, தகுதியான ஆசிரியர்களின்றியே பதுளை மாவட்ட தமிழ்ப் பாடசாலைகள் இயங்குகின்றன. மத்திய கல்வியமைச்சின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பசறை தமிழ் மகா வித்தியாலயமென்ற தேசிய பாடசாலை பதுளை மாவட்ட தமிழ்க் கல்வியின் பின்தங்கிய நிலையை பசறையிலிருந்து பறைசாற்றுகின்றது. உயர்தர வகுப்புக்களில் கற்பிக்க விஞ்ஞானப் பட்டதாரிகளின் தேவையுள்ள போது குறித்த உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவுகள் அற்ற பாடசாலைகளில் விஞ்ஞானப் பட்டதாரிகள் இணைக்கப்பட்டுள்ளமையும் வெளிப்பட்டுள்ளது.
பாடசாலையென்பது அங்கு கற்கும் பிள்ளைகளின் கல்வித்தேவையைப் பெற்றுக்கொடுக்கும் ஒரு அமைப்பு என்பது கவனத்தில் கொள்ளப்படாது ஆசிரிய நியமனங்களும் இடமாற்றங்களும் செய்யப்படுகின்றன. கடந்த 25 வருடங்களுக்கு முன்பிருந்து மலையகத் தமிழ் பிள்ளைகளுக்கு கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களைப் போதிப்பதற்காக இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் வரவழைப்பதாகக் கூறப்படுகின்றது. என்ன நடந்தது?
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள கணித, விஞ்ஞான பாட பட்டதாரிகளை தமிழ்ப் பாடசாலைகளுக்கு நியமித்தால் தமிழ் மாணவ, மாணவியர் பயனடைவார்கள் என்னும்போது பதுளை மாவட்ட படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு இழக்கப்படுமென்றும் அவ்வாறு நியமனம் செய்யப்பட்டால் அவர்கள் ஐந்து ஆண்டுகளின் பின் சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுவிடுவார்களென்றும் கூறப்படுகின்றது. இவை ஏற்கக்கூடியவையல்ல.
உரிய தகைமை பெற்றவர்கள் அற்ற நிலையில் குறித்த பாடங்களுக்கு பிற மாவட்டத்தவர் நியமனம் செய்யப்படும் போது தொழில்வாய்ப்பு இழக்கப்படுமென்பது தக்க தர்க்கமாக இல்லாதது போன்றே நியமனம் பெற்றவர்கள் சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்று விடுவர் என்பதும் ஏற்புடையதல்ல. அரசின் கொள்கைக்கமைய ஐந்து வருடங்களே ஒரு பாடசாலையில் பணியாற்றலாம் என்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எது எவ்வாறாயிருப்பினும், சமூக ரீதியில் சிந்திக்கவேண்டிய பொறுப்பிலிருந்து எவரும் நழுவக்கூடாது. கல்வியென்பது உரிய காலத்தில் உரிய வயதில் பெற்றுக் கொடுக்கவேண்டிய ஒன்று. ஒத்தி வைத்து வழங்கலாம் என்று கூறமுடியாது. ‘காலத்தில் பயிர்செய்’ என்பது போல நாம் நமது பிள்ளைகளுக்கு உரிய வயதில் உரிமையான உரித்துடைய தரமான கல்வியை பெற்றுக் கொடுக்க வேண்டும். தவறினால் சமூகத்தவறிழைத்த கொடுமையான குற்றவாளிகளாவோம்.
இந்நிலையிலே, பதுளை மாவட்டத்தின் ஒட்டுமொத்தமான தமிழ்க் கல்வியை தமிழர் கல்வியைச் சீர்செய்ய தேவையான நடைமுறைத்திட்டங்களை ஆய்வுசெய்து வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு கல்வி வலயத்திலும் பெயரளவில் முழுமை கொண்டதாகக் காட்டப்படும் 1ஏ.பி தரப்பாடசாலைகளில் கணிதம், கலை, விஞ்ஞான, வர்த்தகம் ஆகிய துறைகள் சார் வகுப்புக்களை செவ்வனே நடத்தத்தக்கதாக உரிய தகைமையான பாடப்புலத்தில் தகுதி பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்யவும் நூலகம் மற்றும் விஞ்ஞான ஆய்வுகூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும். தவறாது, தாமதியாது செயற்பட வேண்டும்.
பதுளை மாவட்டத்தில் ஒவ்வொரு பெற்றோரும் சமூக நலன் விரும்பிகளும் கல்வித் துறைசார் ஆசிரிய சமூகமும் நமது பிள்ளைகள் தரமான கல்வியைப் பெற்று வளமான எதிர்காலத்தில் அடி யெடுத்து வைக்க வழிசெய்வோம் என்று உறுதி கொள்ள வேண்டும்.
சமூக விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்; ஏற்படுத்தப்படவும் வேண்டும். புரிந்து கொள்ளப்படுமா?
(த. மனோகரன் கல்விக்குழு செயலாளர் அகில இலங்கை இந்து மாமன்றம்.)
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...