Headlines News :
முகப்பு » , » அரசுடன் இணைந்து போட்டியிட்டதாலேயே மலையக மக்கள் முன்னணிக்கு தோல்வி - இராதாகிருஷ்ணன்

அரசுடன் இணைந்து போட்டியிட்டதாலேயே மலையக மக்கள் முன்னணிக்கு தோல்வி - இராதாகிருஷ்ணன்


ஜெயாவிற்கு ஏற்பட்ட நிலைமை இலங்கையிலும் வரலாம் என்கிறார் இராதாகிருஷ்ணன்

மலையக மக்கள் முன்னணி இம்முறை ஊவா தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்டதன் காரணமாகவே தோல்வியைத் தழுவ நேர்ந்தது. எனினும் முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகள் கடந்த பல தேர்தல்களைக் காட்டிலும் கணிசமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வி. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

மலையக மக்கள் முன்னணி மலையகத்தின் பிரதான தொழிற்சங்கமாக விளங்குகின்றது. இம்முன்னணியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதே தவிர குறைவடைந்ததாக இல்லை. ஊவாவில் முன்னணிக்கு ஆசனம் எதுவும் கிடைக்கவில்லை என்பதற்காக முன்னணி மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்த நிலையில் காணப்படுவதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளதில் உண்மை எதுவும் இல்லை. முன்னணி தனியாக போட்டியிட்டிருக்குமாயின் வெற்றி வாய்ப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும் அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்கவே நாம் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடும் நிலைமை உருவானது.

எனினும் அரசாங்கம் ஊவாவில் எமக்கு ஒரு போனஸ் ஆசனத்தை வழங்கும் முனைப்புடன் இருந்தது. நாமும் இது தொடர்பில் அதிகளவில் கரிசனை செலுத்தி இருந்தோம். எனினும் அரசாங்கத்திற்கு சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டதன் காரணமாக இம்முயற்சியும் கைகூடவில்லை. எனினும் மலையக மக்கள் முன்னணியை மேலும் ஊவாவில் கட்டியெழுப்பி மக்களுக்கு சேவையாற்றக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்குவோம். காற்றில் நாணல் சாய்ந்தால் மீண்டும் நிமிர்ந்து விடும் என்பது தெரிந்ததே. முன்னணி தற்போது பெரும்பான்மை கட்சிகளின் அலையினால் சாய்ந்திருக்கின்றது. மீண்டும் இக் கட்சி எழுச்சி பெற்று வீறுநடை போடும் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை.

எதிர்காலத்தில் நாட்டின் அரசியல் சூழ்நிலையில் மாற்றங்கள் ஏற்படலாம். அவ்வாறு மாற்றம் ஏற்படுகின்ற போது ம.ம.முன்னணிக்கு ஒளிமயமான எதிர்காலம் ஒன்று உருவாவதற்கான வாய்ப்புள்ளது என்பதும் உண்மையாகும். இந்தியாவின் பிரதமராகும் நிலை இருந்த ஜெயலலிதாவிற்குக்கூட இன்று பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது. பதவியில் இருந்தும் விலகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே இலங்கை அரசியலிலும் மாற்றங்கள் ஏற்பட இடமுண்டு. இந்நிலையில் முன்னணியின் பின்னடைவு தற்காலிகமானதே. விரைவில் மீண்டும் மறுமலர்ச்சி பெற்று முன் செல்வோம் என்றார்.


நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates