கவிஞன் காலத்தால் அழியமாட்டான் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார் மக்கள் கவிமணி ஸி.வி.வேலுப்பிள்ளை. இது அவரது நூற்றாண்டு. கடந்த ஜுன் மாதம் முதலே அவர் பற்றிய நினைவுரைகள், அவர் பெயரில் நினைவுப் பேருரைகள், மலர் வெளியீடுகள், விழாக்கள் என தலைநகரும் மலையகமும் களை கட்டிநிற்கிறது.
கடந்த நான்காம் திகதி ஹட்டன் மாநகரில் கல்வியாளர்கள், தொழிற்சங்கவாதிகள், அரசியல் பிரதிநிதிகள், அரசசாரா நிறுவனப்பிரதிகள், நலன்விரும்பிகள் என பலரும் ஒன்றிணைந்து மலையக சிவில் சமூக அமைப்பாக ஸி.வி.நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடினார்கள்.
விழாக்குழு தலைவர் மு.நேசமணி தலைமையில் நடைபெற்ற விழா பிரமுகர்களின் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. ஸி.விக்கு மௌன அஞ்சலியும் மலர் அஞ்சலியும் இடம்பெற்றது. ஸி.வியின் மைத்துனர் கவிஞர் ஸி.எஸ்.காந்தி ஸி.வியின் உருவப்படத்திற்கு மலர்மாலையிட்டார்.
ஸ்ரீ பாத கல்வியில் கல்லூரி மாணவிகளின் நடன நிகழ்வு ஆரம்பத்திலேயே அழகு சேர்த்தது. மாணவிகளின் பயிற்சியும் முயற்சியும் பாராட்டுக்குரியது. ஆனாலும் ‘சிவசம்போ…’ பாடல்களைவிட்டு மலையகப் பாரம்பரிய பாடல்களை நடனத்துக்கு சேர்த்திருக்கலாமோ என எண்ணத் தோன்றியது. இதே நிலைமை கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்களின் ஆடல் பாடலிலும் அவதானிக்க முடிந்தது. ரொபர்ட் ஜோன் நெறியாள்கையில் தப்பிசையுடன் விழா ஆரம்பமாகும் என அறிவிப்பு செய்ய, ஆவலுடன் காத்திருந்த அவையோருக்கு ஏமாற்றமே எஞ்சியது. மக்கள் கலையான தப்புக்கலையை ‘மறைந்திருந்திருந்து’ வாசித்ததன் மர்மம் புரியவில்லை. இது தப்பு. இனிமையான இசையுடன், இயல்பான குரலில் ஸிவியின் கவிதை ஒலித்தது. ஆனாலும், அசரீரியாக ஒலித்த இசையும் கவிதையும் ஏமாற்றத்தையே விதைத்தது. சமூகத்துக்காக உழைப்போர் தம் முகம்காட்டவும் முனைதல் வேண்டும். மறைந்திருந்தே சாதிக்க நினைப்பது சாத்தியமில்லை.
வரவேற்புரையை விழாக்குழு பொருளாளர் திரு.மெய்யநாதன் வழங்கினார். தலைவரின் சார்பில் விழாக்குழு செயலாளர் எழுத்தாளர் மொழிவரதன் தலைமையுரையாற்றினார். தமது நிகழ்ச்சி நிரலில் இருந்த எண்ணங்களை எடுத்துச்சொல்லி அவை எவ்வாறு சாத்தியமாயின என எடுத்துரைத்தார். மலர் வெளியிடுதல் வெற்றிகண்டமை பற்றியும், ஆவணத்திரைப்படத்தை சாத்தியமாக்கிய கலைஞர்.கிங்ஸ்லி பற்றியும், ஸி.வி ஆவணக்காட்சியை ஒழுங்கமைத்த வட்டகொடை சுப்பையா இராஜசேகரன் பற்றியும் எடுத்துரைத்தார். ஸி.வி.முத்திரை வெளியிடுதல் பற்றிய தங்களின் நிகழ்ச்சி நிரலில் இருந்ததை எடுத்துரைத்தபோதும் வெளிவந்த முத்திரை பற்றி தலைமையுரை ஏனோ தகவல் தரவில்லை.
ஸி.வி நூற்றாண்டு நினைவாக விழாக்குழுவினரால் நினைவு மலர் ஒன்று வெளியிடப்பட்டது. குழுத்தலைவர் மு.நேசமணி வெளியிட்டு வைக்க மண்டப அனுசரணை வழங்கிய பிரிடோ சந்திரசேகரன் முதல் பிரதியைப்பெற்றுக்கொண்டார். நினைவு மலர் பற்றிய அறிமுகத்தை அதற்கு பொறப்பாகவிருந்த கவிஞர் சு.முரளிதரன் நிகழ்த்தினார். பிரமுகர்களுக்கு சிறப்பு பிரதிகள் கையளிக்கப்பட்டன. கையடக்கமான அளவில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டதாக அமைந்திருந்தது சிறப்பு மலர்.
‘தமிழ்மணி’ தங்கம் தலைமையில் ஸி.வி நினைவுக்கவியரங்கம் நடைபெற்றது. பபியான், கணேசமூர்த்தி எனும் இளைய கவிகளும், மல்லிகை சி.குமார், முத்துவேல் என மூத்த கவிஞர்களும் கம்பீர கவிதைகளால் அழகு சேர்த்தனர். ஆரோக்கியமான அமர்வாக இதனை வழிநடாத்தினார் கவிஞர் தமிழ்மணி பானா.தங்கம்.
பண்டாரவளை விமலநாதன் நாட்டார் பாடல்களைப்பாடுவார் என அழைக்கப்பட்டபோதும் அவர் அதுபற்றி பேச்சினை நிகழ்த்தியதைக்காண முடிந்தது. அற்புதமான கலைஞர் அவர், அன்றைய நிகழ்வு பற்றிய பூரண விளக்கமளிக்கப்படாத நிலையில் அவரது ஆளுமை வெளிப்படாத நிகழ்வாக அமைந்தது அவரது அளிக்கை.
ஸி.வியின் நினைவாக அவரது ஆளுமை சார்ந்து மூவருக்கு கௌரவ விருதுகள் வழங்கப்பட்டன. தொழிற்சங்க துறைக்கான விருதினை மூத்த தொழிற்சங்கவாதி த.அய்யாத்துரை அவர்களும், இலக்கியத்துக்கான விருதினை அமரர் சாரல்நாடன் சார்பில் அவரது மகள் ஜீவகுமாரியும் கல்வித்துறைக்கான விருதினை ஸ்ரீபாத கல்வியில் கல்லூரி உப பீடாதிபதி வ.செல்வராஜா அவர்களும் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் என லெனின் மதிவானம், இரா. சந்திரமோகன் (விழாக்குழு இணைச் செயலாளர்) என பொறுப்பு வாய்ந்தவர்களின் பெயர்கள் நிகழ்ச்சிநிரலில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இடையில் அறிவிப்பாளராக செருகப்பட்டிருந்தவரின் அதீத தலையீடே வெளிப்பட்டது. குறிப்பாக விருது வழங்கலின்போது இடம்பெற்ற குளறுபடிகள் எதிர்காலத்தில் இடம் பெறாதவாறு ஏற்பாட்டளர்கள் கவனம் கொள்ளவேண்டியுள்ளது. நிகழ்ச்சித்தொகுப்பும் அறிவிப்புச்செய்தலும் ஒன்றல்ல.
விருது வழங்குவதற்காக மேடைக்கு அழைக்கப்பட்ட மலையகத்தின் மூத்த கல்விமான்களில் ஒருவரான டி.வி.மாரிமுத்து அவர்கள் செய்வறியாது நின்றார். ஈற்றில் மீண்டும், மீண்டும் தன்பெயரே அழைக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ராதாகிருஸ்ணன் ராஜாராம் தானாகவே முன்வந்து கல்விமான் டி.வி.மாரிமுத்து அவர்களையும் விருது வழங்கலில் இணைத்துக்கொண்டார். மலையக மக்கள் முன்னணி செயலாளர் அ.லோரன்ஸ், விழாக்குழு தலைவர் மு.நேசமணி, கவிஞர் மல்லிகை சி.குமார் ஆகியோர் விருது பெற்றவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். ஸி.வி நூற்றாண்டு நினைவாக மாணவர்களுக்காகவும் திறந்தமட்டத்திலுமாகவும் நடாத்தப்பட்ட கவிதை, கட்டுரை போட்டிககளில் வெற்றிபெற்றோருக்கான பரிசளிப்பும் இடம்பெற்றது. இதனை ஆசிரிய ஆலோசகர் இராஜ்சேகர் நெறிப்படுத்தியிருந்தார்.
ஸி.வி.வேலுப்பிள்ளை நினைவுப் பகிர்வை அவரது மைத்துனரும் பத்திரிகையாளருமான கவிஞர்.ஸி.எஸ்.காந்தி ஆற்றினார். அவர் பற்றிய அறிமுகத்தை சூரியகாந்தி பொறுப்பாசிரியர் சிவலிங்கம் சிவகுமார் வழங்கினார். ஸி.வி. அவர்களின் இளமைக்கால வாழ்வை எடுத்தியம்புவதாக அமைந்தது நினைவுப்பகிர்வு.
ஸி.வி.பற்றிய ஆவணப்படத்தினை தயாரிப்பாளர் கிங்ஸ்லி ஆவணக்காப்பாளர் ச.ராஜசேகரனக்கு கையளித்தபின் திரையிடப்பட்டது. நேர முகாமைத்துவம் கருதி இடையில் நிறுத்தப்பட்ட காட்சி விழா இறுதியில் காண்பிக்கப்பட்டது. ஆனாலும், தயாரித்தவர் மட்டுமே பார்த்து மகிழும் காட்சியானது அது. கடின உழைப்புடன் படத்தைத் தயாரித்திருந்த கலைஞர் கிங்ஸ்லி கோமஸ் பாராட்டுக்குரியவர்.
ஸி.வியின் புதிய ஆயுதம் எனும் நடைச்சித்திரத்தை எழுத்தளர் மு.சிவலிங்கம் பிரதியாக்கம் செய்ய, ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் அ.மெத்யூ நெற்யாள்கையில் பயிற்சி ஆசிரியர்களின் நாடகமாக அரங்கேற்றப்பட்டது. பயிற்சி நாடகமாவும் அமைந்தது. மலையகம், நாடகத்துறையில் இன்னும் பல மைல்கள் கடக்க வேண்டியிருப்பதை காட்டியது காட்சி. ஸி.வி காட்டிய ‘புதிய ஆயுதம்’ அற்புதமானது.
விழாவின் மிக முக்கிய நிகழ்வாக அறிவிக்கப்பட்ட நினைவுப் பேருரையை நினைவுக் குறிப்புரையாகவே வழங்கமுடியும் என பேருரையாளராக வருகை தந்த எழுத்தாளர் மு.சிவலிங்கம் அறிவித்து தனதுரையை ஆற்றினார். ‘காந்தியைப் போலொரு…சாந்த சொரூபியை…’ என்ற பாடலுடனான விளக்கம் தொழிற்சங்க தலைமைகள் பற்றிய அவரது இயல்பான உரை எஞ்சியிருந்த சபையோரைக் கவர்ந்தது. இந்த மாபெரும் விழாவின் இயக்குனராக உழைத்த இளைஞர் இரா.சந்திரமோகன் நன்றியுரை வழங்கினார்.
அரசியல், தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் மலையகத்தின் அனைத்து அரசியல், தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும்; கல்வியாளர்களையும் சமூக ஆர்வலர்களையும் கலைஞர்களையும் இலக்கியவாதிகளையும் தனது நூற்றாண்டில் ஒன்றிணைத்த ஸி.வி வேலுப்பிள்ளையின் ஆளுமைக்கு சான்றாக அமைந்தது: சிவில் சமூகத்தவர் கொண்டாடிய ஸி.வி நூற்றாண்டு விழா. நேரமுகாமைத்துவத்திலும் ஒழுங்கமைப்பிலும் சிற்சில சிக்கல்கள் நிகழ்ந்தபோதும் பலர்கூடி வடம்பிடித்து இழுத்த தேராக நிறைவாக அமைந்தது விழா.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...