Headlines News :
முகப்பு » » சாரல் நாடனுக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அஞ்சலி - ஷண்.பிரபா

சாரல் நாடனுக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அஞ்சலி - ஷண்.பிரபா



தனது ஐம்பதாண்டு கால இலக்கிய பணிமூலம் மலையக கலை, இலக்கிய, சமூக, தொழிற்சங்க ஆய்வுப்பணியினை தனித்துவமான துறையாக தெரிவு செய்து எழுதி, இயங்கி ஈழத்து தமிழ் இலக்கிய உலகில் நீங்கா இடம்பிடித்து, அண்மையில் அமரரான சாரல்நாடன் அவர்களுக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கம் அங்சலிக்கூட்டம் ஒன்றை கடந்த சனிக்கிழமை 2014-08-23 அன்று நடாத்தியிருந்தது. பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் தொடக்கவுரையை கொழும்புத் தமிழ்ச்சங்க செயலாளர் தம்பு.சிவா வழங்க, தமிழ்ச்சங்க தலைவர் ரகுபதி பாலஸ்ரீதரன் சாரல்நாடன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலையிட்டும் ஈகைச்சுடர் ஏற்ற, சபையோர் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்.

தலைமையுரையாற்றிய பேராசிரியர் சோ.சந்திரசேகரன் மலையக இலக்கியத்துறையில் ஆய்வு இலக்கியப்பணியை ஒரு துறையாகத் தெரிவு செய்து ஐம்பதாண்டுகாலம் தனது பணியை நிறைவேற்றி அமரராகியுள்ள சாரல்நாடன் அவர்களுக்கு தலைநகரில் கொழும்புத் தமிழ்ச் சங்கம் அஞ்சலிகூட்டத்தை நடாத்துவது போற்றுதற்குரியது. பொதுவாக தோட்ட உத்தியோகத்தவராக இருப்பவர்கள் அதிகம் இலக்கிய நாட்டம் கொண்டவர்களாக இருப்பதில்லை. ஆனால் சாரல் நாடன் அவர்களோ ஒரு தேயிலைத் தொழிற்சாலை அதிகாரியாக இருந்து கொண்டு ஒரு பல்கலைக விரிவுரையாளர் மேற்கொள்ளவேண்டிய ஆய்வுப்பணிகளைச் செய்துள்ளமை ஆச்சரியமளிக்கின்றது. இது அவரது கல்விபின்புலத்தினாலும் இலக்கியம் மீது கொண்டிருந்த பற்றுதலாலும் ஏற்பட்டிருக்கக்கூடிய ஒன்று. அவர் 15 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அதில் ‘இளைஞர் தளபதி இர.சிவலிங்கம்’ எனும் அவரது ஆசிரியரும் மலையக வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த செயற்பாட்டாளருமான இர.சிவலிங்கம் அவர்கள் பற்றிய ஆய்வு நூலை நான் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக செயற்பட்ட காலத்தில் ‘கொழும்புத் தமிழ்ச்சங்க’ வெளியீடாக கொண்டுவந்தள்ளோம் என்பதில் நாம் பெருமையடைகின்றோம். அந்த முயற்சியில் ஈடுபட்டமைக்காக கொழும்புத் தமிழ்ச்சங்க நிர்வாகத்தினருக்கு நான் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்தார்.

அஞ்சலியுரை ஆற்றிய சாரல் நாடனின் பள்ளித் தோழரான, முன்னாள் அமைச்சுச் செயலாளரும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் போஷகருமான எம்.வாமதேவன், சாரல்நாடன் அவர்களது மாணவர் கால ஆளுமைகள் பற்றி எடுத்துக்கூறினார். திறமைமிக்க மாணவரான நல்லையா எனும் இயற் பெயர்கொண்ட சாரல் நாடன் அக்காலத்தில் ஹைலன்ஸ் கல்லூரியல் பணியாற்றிய நாவாலியூர் நா.செல்லத்துரை, ந.அ.தியாகராஜா, நயினாதீவு குலசேகரம், இர.சிவலிங்கம் மற்றும் திருச்செந்தூரன் போன்ற ஆசிரியர்களின் கவனத்தைப் பெற்றவர். அந்த ஆசிரியர்கள் இவரது ஆளுமையில் அதிகம் செல்வாக்கு செலுத்தியிருந்தனர். மாணவனாக ஹைலன்ஸ் கல்லூரி தமிழ்ச்சங்கத்தின் முக்கிய பொறுப்புக்களை வகி;த்தவர். கல்லூரி நூலகத்திற்கும் பொறுப்பானவராக இருந்தார். விடுதியிலும் தங்கியிருந்தார். இவை அவருக்கு அதிகளவான களத்தினை ஏற்படுத்திக்கொடுத்தன. ஆசிரியர்களுடன் ஒரு நெருக்கத்தையும் ஏற்படுத்திக்கொடுத்தது.

பல்கலைக்கழகம் சென்றிருக்க வேண்டிய அவர் குடும்ப பொருளாதார சிக்கல்களினால் ஆரம்பத்தில் ஆசிரியராகவும் பின்னர் தேயிலைத் தொழிற்சாலை நிரவாகியாகவும் தொழில்; செய்தாலும் தனது ஆய்வு சார்ந்த எழுத்துப்பணியை தொடர்ச்சியாக முன்னெடுத்தார். பல்கலைக்கழக மட்டத்தில் மேற்கொள்ளப்படும் தொழில்முறைசார் ஆய்வு வடிவத்தை விட புனைவு இலக்கியத்தில் ஈடுபாடு காட்டும் ஆய்வாளர்களது ஆய்வுக்கட்டுரைகள் கலைநயம் கொண்டதாக இருக்கும். அதனை நாங்கள் சாரல்நாடனின் ஆய்வுக்கட்டுரைகளில் தரிசிக்கலாம். ஆய்வு கோட்பாடுகளுக்குள் நின்று செயற்படவேண்டும் என்ற நிலையில்லாமல் சுதந்திரமாக தங்களது ஆய்வுக் கருத்துக்களை வெளிப்டுபத்துவர். சாரல்நாடனின் ஆய்வுக்கு உட்பட்ட மூன்று ஆளுமைகளான கோ.நடேசய்யர், சி.வி.வேலுப்பிள்ளை மற்றும் இர.சிவலிங்கம் பற்றிய கட்டுரைகளில் அவர்களை புகழ்ந்துரைத்தல் அதிகம் இடம்பெற்றிருப்பது கவனத்திற்குரியது. அவரது ஆய்வுக்கட்டுரைகளில்; இர.சிவலிங்கம் அவர்களின் மாணவன் என்றவகையில் என்னைப்பற்றிய தகவல்களும் இடம்பெறுகின்றன. அவற்றுள் புனைவும் கலந்திருக்கின்றன.  மற்றபடி சாரல்நாடனின் ஆய்வுகளில்  அரிய பல தகவல்களை தந்ததில் சாரல்நாடன் முன்னிலை வகிக்கிறார். சாரலின் இந்த ஆய்வு முயற்சிகளுக்கு பின்னின்று செயற்பட்டவர்களில் அந்தனிஜீவா முக்கியமானவர். அதனை சாரல் அவர்களே பல்வேறு சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறார். கார்ல் மாக்ஸை வெளிக்கொணர்ந்தது ஏங்கல்ஸ் என்பதைப்போல சாரலுக்கு பின்னால் அந்தனிஜீவா செயற்பட்டுள்ளார் என்பது பதிவுசெய்யப்படவேண்டியது எனவும் தெரிவித்தார்.

அடுத்ததாக அஞ்சலியுரையாற்றிய இலக்கிய செயற்பாட்டாளர் அந்தனிஜீவா, தனக்கும் சாரலுக்கும் இடையே நிலவிய நெருக்கமான தோழமைபற்றி பேசினார். ‘சிவி மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்த நான் அவரது கொள்ளுப்பிட்டி காரியாலத்தில் அவரை அடிக்கடிச் சந்திப்பதுண்டு. மலையகத்தில் இருந்து முத்தழகு எனும் பெயரில் எழுதுபவர் யார் என விசாரித்த போது அவர்தான் நல்லையா எனும் தொழிற்சாலை அதிகாரி என சாரல்நாடனின் முகவரியையும் கொடுத்து அனுப்பிவைத்தார். அப்படியே சாரல் உடனான தொடர்பு எனக்கு ஏற்பட்டது.  சி.வி அவர்கள் வாழும்போதே கௌரவிக்கப்படவேண்டும் என நாங்கள் மலையக கலை இலக்கிய பேரவை சார்பில் கொழும்புத்தமிழச்சங்கத்தில் விழா எடுத்த போது சி.வி பற்றிய ஆய்வுரையினை பேராசிரியர் கைலாசபதி ஆற்றியிருந்தார். பின்னர் சி.வி பற்றிய ஆய்வினைச் செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் எமக்கு ஏற்பட்டது. சாரல் அதனை சிறப்பாகச் செய்தார். அதனை நூலாகக் கொண்டு வந்தோம். அதேபோல கண்டியில் நாங்கள் செய்த ஆய்வுக்கருத்தரங்கு ஒன்றுக்கு வருகை தந்திருந்த கலாநிதி.குமாரி ஜயவர்தன கோ.நடேசய்யர் பற்றி கூறிய கருத்துக்கள் எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தின. அவரைப்பற்றியும் ஆய்வு செய்யவேண்டிய உந்துதலைத் தந்தது. இலங்கை சுவடிகள் கூடத்தில் இது பற்றிய தகவல்கள் தமிழில் உண்டு என கலாநிதி குமாரி ஜயவர்தன அவர்கள் வழிகாட்டியபடி நானும் சாரலும் அந்த தெடுதல் முயற்சியில் ஈடுபட்டோம். தனது தொழிலையும் பாராது சாரல் கொழும்பு வந்து விடுவார். அதனால் அவர் தொழிலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டது. காலையில் உள்ளே நுழைந்தால் மாலைவரை சுவடிகள் கூடத்தில் தேடுதல் செய்து பல தகவல்களை சேகரித்து அதனை நூலாக்குவதில் சாரல் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டார். இப்படி பல ஆய்வுகளைச் செய்து இவர் இறக்கும் நாள் வரை அந்த முயற்சியில் சளைக்காது பணியாற்றி இதுவரை 13 ஆய்வு நூல்களையும் 2 புனைகதை நூல்களையும் எழுதியுள்ளார். என தெரிவித்தார்.

அடுத்தாக கொழும்புத் தமிழ்ச் சங்க துணைத்தலைவரும் ஞானம் கலை இலக்கிய இதழின் ஆசிரியருமான தி.ஞானசேகரன் அஞ்சலியுரை ஆற்றினார். தலைமையுரையில் பேராசிரியர்.சோ.சந்திரசேகரன் தோட்ட உத்தியோகத்தர்கள் அதிகம் இலக்கிய நாட்டம் குறைந்தவர்கள் என குறிப்பிட்டார். ஆனால் நான் தோட்ட வைத்தியராகவும், சாரல் தோட்ட தொழிற்சாலை அதிகாரியாகவும் பணியாற்றியவர்கள் என்பதை நினைவுபடுத்துகின்றேன். நாங்கள் இருவரும் பத்தமாத மளவில் புசல்லாவ, நியுபீக்கொக் தோட்டத்தில் ஒன்றாகப் பணியாற்றினோம். அது பற்றி குறிப்பிடும் சாரல்நாடன் ‘இந்த பத்து மாதங்கள் என் இலக்கிய வாழ்வில் மறக்க முடியாத காலப்பகுதி. நானும் டாக்டர் ஞானசேகரனும் பல இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்ட காலம் அது என குறிப்பிட்டுள்ளார்’. எனது லயத்துச்சிறைகள் நாவல் வெளிவரக் காரணமானவரே சாரல்தான். ஞானம் இதழ் அட்டைப்பட அதிதிகள் திட்டத்தை அரம்பித்ததும் நாங்கள் முதலாவதாக 2005 ஆம் ஆண்டு சாரல்நாடனின் அட்டைப்படத்துடன் அவர் பற்றிய கட்டுரையையும் பிரசுரித்தோம் எனவும் குறிப்பிட்டார்.

இறுதியாக பாக்யா பதிப்பக நிறுவுனர் மல்லியப்புசந்தி திலகர் தனது அஞ்சலியுரையை வழங்கினார். எனக்கு முன் அஞ்சலியுரையாற்றியவர்கள் வௌ;வேறு விதத்தில் சாரல்நாடன் அவர்களின் நண்பர்கள். நானோ சாரல்நாடனின் பிள்ளைகளின் நண்பன். நானும் சாரல்நாடன் மகள் ஜீவகுமாரியும் ஒன்றாக கல்வி கற்றவர்கள். எனினும் ஹைலன்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் என்ற வகையில் எனக்கும் அவருக்கும் உறவு ஏற்பட்டு விடுகிறது. சாரல் 1963 ல் ஹைலன்ஸ் கல்லூரியில் கற்றார் என்றால் நான் 1993 ஆம் ஆண்டு கற்றேன். இது ஒரு தலைமுiறியன் இடைவெளி. எனவே ஒரு தலைமுறை இடைவெளி கொண்டவனாக நான் சாரலில் எழுத்து முயற்சிகளை நோக்கலாம் என நினைக்கிறேன். அவரது ஆய்வு முயற்சிகள் மூன்று நிலைப்பட்டன. மலையக ஆளுமைகள் பற்றிய ஆய்வு, மலையக கலை இலக்கிய இயக்கங்கள் பற்றிய ஆய்வுகள், மலையக கலை இலக்கிய முயற்சிகள் பற்றிய ஆய்வுகள் என அவற்றை வகைப்படுத்தலாம். ஆளுமைகள் பற்றிய ஆய்வென்று வரும்போது நடேசய்யர், சி.வி.வேலுப்பிள்ளை, இர.சிவலிங்கம் ஆகியோர் பற்றி விரிவாகவும் தனது ‘பெரேட்டில் சில பக்கங்கள்’ எனும் நூல் மூலம் இலங்கை தேயிலையின் தந்தை ஜெம்ஸ் டெயிலர் முதல் சினிமா ஆளுமையான வி.பி.கணேசன் வரையான 57 ஆளுமைகள் பற்றிய சிறு குறிப்புகளைத் தந்துள்ளார். அதேபோல மலைநாட்டு எழுத்தாளர் மன்றம், மலையக கலை இலக்கிய பேரவை, காங்கிரஸ் தொழில் நிறுவனம், துரைவி பதிப்பகம், சாரல் வெளியீட்டகம் போன்ற மலையக கலை இலக்கியத் துறைக்குப் பங்களிப்புச் செய்த அமைப்புகள் பற்றி எழுதியுள்ளார். குறிப்பாக தான் சார்ந்த மலையக கலை இலக்கிய பேரவை பற்றி விரிவாகப் பதிவு செய்துள்ளார். 

மலையக கலை இலக்கிய ஆய்வு முயற்சிகள் ஊடாக ‘மலையகம்’ எனும் எண்ணக்கருவை நிலைப்படுத்துவதில் சாரல் காட்டியிருக்கும் அக்கறையே அவரது பலமான அம்சமாகும். 1973 ஆண்டு தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏடான ‘மாவலி’யில் ‘நியாம் ஏது ?’ எனும் தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் இந்திய வம்சாவளியினர் என்பதற்காக எங்களை இந்திய தமிழர் என அழைக்க முடியாது. மலையகத் தமிழர்கள் என இலங்கையர்களாக நாங்கள் உணரும் நிலை உருவாக வேண்;டும். அதுவே எமக்கான கௌரவமாகும் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தன்னுடைய மலையகம் வளர்த்த தமிழ் எனும் கட்டுரையில் மலையகம் என்பது பூகோள எல்லைகளைக் கடந்த  இந்திய வம்சாவளி தமிழரை குறிக்கும் ஒரு உணர்வு சார்ந்த முறைமை என குறிப்பிட்டுள்ளார். அவரது ஆய்வு நூல்களுக்கும் மலையகத் தமிழர், மலையகத் தமிழர் வரலாறு, மலையக வாய்மொழி இலக்கியம், மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும், மலையக இலக்கிய முயற்சிகள் என மலையகத்தை வலியுறுத்தும் தலைப்புக்களையே தந்துள்ளார். இதற்கான உந்துதலை தான் ஆய்வுக்குட்படுத்திய மூலவர்களான மூவரிடம் இருந்து இவர் பெற்றிருக்க வேண்டும். நடேசய்யர் நேரடி இந்தியரான போதும் மலையக மக்கள் இலங்கை மண்ணுக்குரியவர் எனபதில் உறுதியாக இருந்தவர். சி.வி வேலுப்பிள்ளை மலைநாடு என தனது எழுத்துக்களில் பதிவு செய்தவர், இர.சிவலிங்கம் மலையகம் எனும் சொல்லை வெகுஜனப்படுத்தியவர். எனவே இவர்கள் மூவரின் செல்வாக்குக்கு உட்பட்டு மலையகம் எனும் கருத்தியலை தனது எழுத்துக்களின் ஊடாக வலுப்படுத்தியவர் சாரல். மேலும் அவர் சாரல் வெளியீட்டகம் மூலம் பதிப்பு முயற்சியிலும் ஈடுபட்டார். குறிஞ்சித் தென்னவன் கவிதைச்சரங்கள் வெளியீட்டில் ஏற்பட்ட கரும்புள்ளியும் அதன் தொடர்ச்சியான கசப்பான அனுபவங்களும் அவரை பதிப்புத்துரையில் இருந்து விலகச் செய்தன. நான் பூண்டுலோயா பாடசாலையில் கல்வி கற்ற காலத்தில் இருந்து அறிமுகமான சாரல்நாடன் அவர்களுடன் நெருக்கமான இலக்கிய உறவு கொண்டிருக்கவில்லையாயினும் இறப்பதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு எனக்கு எழுதியிருந்த கடிதத்தில் ‘இருபதாம் நூற்றாண்டு மலையகச் சிறுகதைகள்’ எனும் நூலை பாக்யா பதிப்பகத்தின் ஊடாக வெளியிடும் தனது எண்ணத்தையும் எனது இலக்கிய முயற்சிகளுக்கு தனது பாராட்டுதல்களையும் தெரிவித்திருந்த அன்னாருக்கு எனது அஞ்சலியை செலுத்துகின்றேன் என தெரிவத்தார்.

கொழும்புத் தமிழ்ச் சங்க இலக்கிய பணி செயலாளர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி அவர்களது நன்றியுரையுடன் சாரல்நாடனின் ஆளுமை பற்றிய பல்வேறு நினைவுப்பரவலையும் செய்து நிகழ்வு நிறைவு பெற்றது. நிகழ்வினை ஒழுங்கமைத்த கொழும்புத் தமிழ்ச் சங்க நிர்வாகத்தினர் பாராட்டுக்குரியவர்கள்.






Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates