சிறுகதை, கவிதை, ஆய்வுக் கட்டுரைகள் எனப் பயணித்துக் கொண்டிருந்த சாரல் நாடனுக்கு மகுடம் சூட்டியது அவரது ஆய்வுத் துறையே என்று திருகோணமலையின் மூத்த எழுத்தாளர் டாக்டர் இராஜ தர்மராஜா தெரிவித்தார்.
நீங்களும் எழுதலாம் கவிதை சஞ்சிகையின் வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருந்த பௌர்ணமி தின நிகழ்வில் மறைந்த எழுத்தாளர்
சாரல் நாடன் , தொழிற் சங்க வாதி பாலா தம்பு, எழுத்தாளர் யு. ஆர். அனந்த மூர்த்தி, சமூகப் போராளி கே. தங்கவடிவேல் ஆகியோர் நினைவு கூரப்பட்டனர்.அமரர்
சாரல் நாடன் தனது படைப்புகளின் ஊடாக மலையகத்தை வெளிக் கொணர்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர். அன்னார் எழுதிய தேசபக்தன் கோ. நடேசய்யர் எனும் நூல் அன்னாரை வெளியுலகத்திற்கு எடுத்துக் காட்டியது. சாரல் நாடன் பற்றி மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் போத்திரெட்டி குறிப்பிடுகையில் ; 1930 இற்கு முற்பட்ட காலத்தை நடேசய்யர் யுகம் என்றும் அதன் 1980 இற்குப் பின்னரான காலத்தை சி.வி. வேலுப் பிள்ளை யுகம் என்றும் அதற்குப் பின்னரான காலத்தை சாரல் நாடன் யுகம் என்றும் பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது என்றார். சாரல் நாடனின் இலக்கியப் பணியை புரிந்து கொள்ள இந்தக் கூற்று ஒன்றே போதுமானது என்றும் டாக்டர் இராஜ தர்மராஜா தெரிவித்தார்.
மறைந்த கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்த மூர்த்தி பற்றிய அஞ்சலியுரையில் ஒரு படைப்பாளியை நினைவு கூர்வது என்பது அவர் குறித்து முழுமையான பார்வைவை பகிர்வதாக அமைய வேண்டும். அந்த வகையில் கன்னட எழுத்தாளர் அனந்த மூர்த்தி இந்திய துணைக் கண்டத்தில் படைப்பாளிகளில் ஒருவர். அன்னாரது முதலாவது நாவல் சமஸ்கிருத, பிராமண சமுதாயத்தின் உள் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு 1965 இல் வெளியானது. அரசியல் ரீதியாக அனந்த மூர்த்தி ஒரு மத சார்பற்ற சிந்தனையாளர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
ஒரு படைப்பாளி என்பவர் வெறுமனே படைப்புகளை வெளியிட்டு விட்டு அமைதிய õக இருந்து விடக் கூடாது. தன்னைச் சுற்றி இடம்பெறும் சமூக மற்றும் அரசியல் விடயங்களை உருவாக்குபவராக இருக்க வேண்டும் என்று விமர்சகர் யதீந்திரா தெரிவித்தார். மக்கள் வங்கியின் அதிகாரி வே.பார்த்திபன், அமரர் பாலா தம்பு பற்றிய அஞ்சலி உரையில் விரிவுரையாளர், சட்டத்தரணி என்பதற்கு மேலாக பாலா தம்பு ஒரு தொழிற் சங்க வாதியாக விளங்கினார். பாலா தம்புவின் ஆளுமை, துணிச்சல், நேர்மை என்பன ஏனைய தொழிற்சங்க வாதிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைகிறது என்றார்.
சமூக விடுதலைப்போராளி கே. தங்கவடிவேல் பற்றிய அஞ்சலி உரையில் ,ஆக்க இலக்கியம், ஓவியம், விளையாட்டு, விமர்சனம் என்று பல்துறை ஆளுமை கொண்டவர் தங்க வடிவேல் சமூகத்தின் அடிநிலை மக்களுக்காக உழைத்தார். திண்டாமை ஒழிப்பு, வெகுஜன இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து சமூகக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களில் பங்குபற்றினார். அன்னாரின்
ச மூகப் புரட்சியை காலச் சூழலுக்கு ஏற்பட எடுத்துச் செல்வதே எமது கடமையாகும் என்று நீங்களும் எழுதலாம் சஞ்சிகையின் ஆசிரியர் எஸ். ஆர். தனபாலசிங்கம் கூறினார்.
ஈழத்தில் தமிழில் செய்யப்பட்ட பலஸ்தீன மொழி பெயர்ப்புகள் என்ற தலைப்பில் புலோலியூர் வேல்நந்தகுமார் உரையாற்றினார். "கொஞ்சமோ பிரிவினைகள்' என்ற தலைப்பில் கவியரங்கு இடம்பெற்றது. நீங்களும் எழுதலாம் சஞ்சிகையின் ஆசிரியர் தனபாலசிங்கம் தனது தலைமையுரையில் கடந்த காலத்தில் ஏறிநின்றே நிகழ்கால விடயங்களை செயற்படுத்துகின்றோம். நிகழ்காலத்தில் செய ற்படுவதன் மூலமாகவே எதிர்காலத்தை எதிர் நோக்கத் தயாராகின்றோம். அவ் வகையில் இன்று சுதந்திரமாக வசதி வாய்ப்புகளுடன் இருப்பதற்கு காரண கர்த்தாக்களாக இருந்த பெரியோர்களை முன்னோடிகளை நினைவு கூர்வது அவசியம் என்று கூறினார்.
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...