பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு வி. இராதாகிருஷ்ணன் எம்.பி. ஆற்றிய உரை
எமது மறைந்த தலைவர் அமரர். பெரியசாமி சந்திரசேகரன் வீடமைப்பு அமைச்சராக இருந்த காலப்பகுதியில் அவரின் முயற்சியின் பயனாக பெருந்தோட்ட மக்களுக்கான 7 பேர்ச் காணி வழங்கப்பட்டு அமைக்கப்பட்ட 35,000 வீடுகளுக்கு இது வரை காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படாமல் இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
எனவே, இவர்களுக்கான காணி உறுதிப்பத்திரத்தை வழங்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். எதிர்வரும் காலப்பகுதியிலும் பெருந்தோட்ட பகுதிகளில் அமைக்கப்படும் வீடுகளுக்கான காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வைக்க வேண்டுமென இந்த சபைக்கு வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றேன்.
இந்தச் சட்டமானது நிர்மாணத்துறை பற்றிய தேசியக் கொள்கை மற்றும் அதனை நடைமுறைப்படுத்தல்,
நிர்மாணத்துறை பற்றிய தேசிய ஆலோசனை சபை,
நிர்மாணத்துறை கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை, நிர்மாணத்துறை கைத்தொழில் அபிவிருத்தி நிதியம் மற்றும் அதிகார சபையின் நிதியம்,
மேன்முறையீட்டு சபை ஆகிய ஒழுங்கு விதிகளின் மூலமாக வீடமைப்பு திட்டத்தில் பல நன்மைகளை எதிர்பார்க்கின்றேன். அதேவேளையில் பெருந்தோட்ட வீடமைப்பு பற்றியும் நான் இங்கு பேச விரும்புகின்றேன்.
எனது முயற்சியின் பயனாகவும் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை நிலையை நன்கு அறிந்தவன் என்ற வகையிலும் கடந்த 29.11.2012 அன்று பெருந்தோட்ட வீடமைப்பு சம்பந்தமாக நிர்மாணத்துறை பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது பெருந்தோட்ட வீடமைப்பு சம்பந்தமாக நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஜி.எஸ்.எஸ். சேனாதீர (வீடு அபிவிருத்தி), இலங்கை வங்கியின் பிரதி பொது முகாமையாளர் சமிந்த வெலகெதர, இலங்கை வங்கியின் பிரதான முகாமையாளர் திருமதி எஸ்.ஏ.எஸ். சமரவிக்கிரம, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் சிரேஷ்ட பிரதி முகாமையாளர் காமினி பன்னிலவிதான, புசல்லாவ பெருந்தோட்ட கம்பனியின் பொது முகாமையாளர் எஸ்.றி. அபேசுந்தர, மத்துரட்ட பெருந்தோட்ட கம்பனியின் பொது முகாமையாளர் சமன் அபேகுணவர்தன, கஹவத்த பெருந்தோட்ட கம்பனியின் பொது முகாமையாளர் திருமதி என். சந்திரபால, கேகாலை பெருந்தோட்ட கம்பனியின் பொது முகாமையாளர் (பெருந்தோட்டம்) சுனில் சாந்த, ஊவா மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ. அரவிந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வீடமைப்பு திட்டத்தினை செயற்படுத்துவதற்காக விமல் வீரவங்ச முழுமையாக செயற்பட்டமையையும் இங்கு நினைவு கூற விரும்புகின்றேன்.
இப்பேச்சுவார்த்தையின் போது தீர்மானிக்கப்பட்ட விடயங்கள் வருமாறு:
- 2013 ஆண்டில் 2,000 வீடுகளும், 2014 ஆம் ஆண்டு 5,000 வீடுகளும் நிர்மாணிக்கப்படுதல்
- வீடமைப்பு செலவீனங்களுக்கான கடன் தொகையாக ரூபாய் 300,000பெற்றுக் கொடுத்தல்.
- கடனை மீள செலுத்தும் காலவெல்லை 10 வருடங்கள் ஆகும்.
- கடனுக்கான வட்டி வீதம் 12% ஆகும்.
கடனுக்கான மாதாந்த அறவீட்டுத் தொகை ரூபாய் 4,440 ஆகும்.
வீடமைப்பிற்கான 7 பேர்ச்சஸ் காணியினை பெருந்தோட்ட அமைச்சின் கீழ் இயங்கும் Golden share Holders அமைப்பிடம் இருந்து பெற்றுக் கொடுத்தல் தோட்ட முகாமைத்துவத்தினதும் தோட்டக் கம்பனியினதும் பொறுப்பாகும்.
NBRO அறிக்கை மற்றும் அளவீட்டுத் திட்டம் (Surveyor Plan) ஆகியன தோட்ட நிர்வாக அனுமதியுடன் பயன் பெறுனரால் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
கட்சி மற்றும் அரசியல் வேறுபாடின்றி வீடற்றவர்களை தெரிவு செய்தல் தோட்ட நிர்வாகத்தின் பொறுப்பாகும்.
பயன்பெறுனரின் ஊழியர் சேமலாப நிதியினை உத்தரவாதமாக கொண்டே இக்கடன் வழங்கப்படுகின்றது. இது சம்பந்தமான சுற்றறிக்கையினை இலங்கை வங்கி அனைத்து கிளைக் காரியாலயங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது. இலங்கை வங்கியானது இக்கடன் தொகையினை குறித்த தோட்டத்தின் கூட்டுறவு சங்கத்திற்கே வழங்கும்.
வீடு நிர்மாணத்திற்கான உத்தேச செலவு தொகை ரூபாய் 467,745 வீடு நிர்மாணத்திற்கான கடன்தொகை ரூபாய் 300,000 என்பதனால் மிகுதித் தொகையினை ஈடு செய்வதற்காக பயன்பெறுனர் தோட்ட முகாமைத்துவம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் உதவிகளை பெற்றுக் கொள்வதுடன் நிர்மாண வேலைகளின் போது சிரமதானத்தில் ஈடுபடுதல் வேண்டும்.
நிர்மாணிக்கப்படும் வீட்டின் பரப்பளவு 493 சதுர அடிகளாகும்.
NHDA இலங்கை வங்கி மற்றும் பெருந்தோட்ட கம்பனிகள் ஆகியன இவ் வீடமைப்பு திட்டத்தினை அமுல்படுத்துகின்றன.
NHDA திட்டத்திற்கு அமைவாக கூட்டுறவு சங்கத்தின் வழியாக தோட்ட நிர்வாகம் வீடமைப்பினை மேற்கொள்ள வேண்டும்.
இதன் பிறகு பெருந்தோட்ட வீடமைப்பு திட்டம் சம்பந்தமாக 13 பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு அவற்றில் சில பேச்சுவார்த்தைகள் நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சிலும் காணியை அதிகாரபூர்வமாக பெற்றுக் கொள்வதற்காக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் அதிகாரிகளுடனும் இலங்கை வங்கி பிரதான காரியாலயத்தில் பொது முகாமையாளர் மற்றும் அதிகாரிகளுடனும் இடம்பெற்றுள்ளது.
இலங்கை வங்கியின் இணக்கப்பாட்டுடன் புசல்லாவ பெருந்தோட்ட கம்பனியின் சோகம தோட்டத்தில் 25 வீடுகளையும் கேகாலை பெருந்தோட்ட கம்பனியின் லக்கிலேண்ட் தோட்டத்தில் 30 வீடுகளையும் நிர்மாணிப்பதற்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டதுடன் ஆரம்ப விழாவிற்கான திகதியும் குறிக்கப்பட்டுவிட்டது. (05.07.2014 சோகம தோட்டம் காலை 11.00 மணி லக்கிலேண்ட் டலோஸ் தோட்டம் மாலை 3 மணி)அதற்கான மின்சாரம், நீர், பாதை போன்ற உட்கட்டமைப்புத் தேவைகளை சோகம தோட்டத்திற்கு பிரதமர் பெற்றுக் கொடுப்பதாகவும் லக்கிலேண்ட் டலோஸ் தோட்டத்திற்கு நானும் ஏற்றுக் கொண்டோம்.
பேச்சுவார்த்தைகளின்போது மனித வள அபிவிருத்தி சபை அதிகாரிகளும் கலந்து கொண்டதுடன் முதலில் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. பிறகு முதற்கட்ட வீடமைப்பு தொடங்க எத்தனித்த வேளையில் கால்நடை கிராமிய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக நிர்மாணிக்கப்படும் வீடுகளுக்கு மட்டுமே தம்மால் அனுமதி அளிக்க முடியும் என கடிதம் மூலம் தெரிவித்திருந்தனர்.
அத்துடன் அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் இணைந்து செயற்பட்ட புசல்லாவ பெருந்தோட்ட கம்பனி மற்றும் கேகாலை பெருந்தோட்ட கம்பனி ஆகியனவும் Golden Share Holders அனுமதியின்றி வீடுகளை தோட்டங்களில் நிர்மாணிக்க மறுத்து விட்டது.பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க பின்னர் இதற்கு அனுமதி வழங்கினார். இருந்த போதும் கால்நடை கிராமிய அபிவிருத்தி அமைச்சு மீண்டும் ஒரு முட்டுக்கட்டை இட்டுள்ளது. இதனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் அமைத்து கொடுப்பது என்பது ஒரு கனவாக மாறியுள்ளது.
ஆகையால், நிர்மாணத்துறை பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சு நகரத்தில் மற்றும் கிராமத்தில் வாழும் மக்களுக்கு வீடமைப்பு திட்டத்தினை உருவாக்குவதனைப்போல் தோட்டத் தொழிலாளர்களுக்கும் வீடமைப்பு திட்டத்தினை உருவாக்க வேண்டும் என்பதனையும் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக 200 வருடங்களாக லயத்திலேயே வசிக்க முடியாது என்பதனையும் நாங்களும் அரசாங்கத்தின் பங்காளிகள் என்ற வகையில் எங்களுடைய நல்ல திட்டங்களுக்கு அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை நல்கி தோட்டத் தொழிலாளர்களின் வீடில்லாப் பிரச்சினைக்கு இந்த ஜனாதிபதி மூலமாக திட்டத்தை அமுல்படுத்த முழு ஒத்துழைப்பை வழங்க அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...