Headlines News :
முகப்பு » » சி.வி வேலுப்பிள்ளை: இலங்கை தபால் முத்திரையில் முகம் பதித்த முதலாவது மலையக இலக்கியவாதி - எம். முத்துக்குமார்

சி.வி வேலுப்பிள்ளை: இலங்கை தபால் முத்திரையில் முகம் பதித்த முதலாவது மலையக இலக்கியவாதி - எம். முத்துக்குமார்


மக்கள் கவிமணி சி.வி வேலுப்பிள்ளையின் நூற்றாண்டு நிகழ்வை முன்னிட்டு அவர் சார்ந்திருந்த தொழிலாளர் தேசிய சங்கம் கடந்த 21-9-2014 அன்று ஹட்டன் நகரில் மாபெரும் விழாவை கொண்டாடியது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சருமான பழனி திகாம்பரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிவி வேலுப்பிள்ளை அவர்களின் நிழற்படம் பதித்த இலங்கை தபால் முத்திரையும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன்மூலம் இலங்கை தபால்; முத்திரையில் முகம் பதித்த முதலாவது மலையக இலக்கியவாதி என்ற பெருமையை சிவி வேலுப்பிள்ளை பெற்றுக்கொண்டார்.

இலங்கை தபால் திணைக்களத்தின் முத்திரைப் பணியகப் பணிப்பாளர் ஸ்ரீகரன் அவர்கள் சிவி.வேலுப்பிள்ளையின் புதல்வி திருமதி. ஜீன் விமலசூரிய, தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பிரதியமைச்சர் பழனி திகாம்பரம் ஆகியயோருக்கு சிவி முத்திரையிட்ட முதல் நாள் கடித உறையை வழங்கிவைத்தார்.

சி.வியின் உருவப்படத்திற்கு அவரது புதல்வி திருமதி. ஜீன் விமலசூரிய முதற்சுடரை  ஏற்றிவைக்க அதனைத் தொடர்ந்து வருகைத் தந்திருந்த அரசியல், தொழிற்சங்க, கல்வி, கலை இலக்கிய பிரமுகர்கள் இணைந்து நூறு சுடர்கள் ஏற்றி வைத்து சி.வி.க்கு கௌரவம் செய்தனர். 

வரவேற்புரையை தொழிலாளர் தேசிய சங்கத்தின் மூத்த உறுப்பினரும் நிதிச்செயலாளருமான ஜே.எம்.செபஸ்தியன் ஆற்றினார். தலைமையுரையாற்றிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் ‘மடகொம்பரை மண்ணின் மைந்தனாக சி.வி வேலுப்பிள்ளை எங்களிடம் ஏற்படுத்திச் சென்ற இலட்சியக் கனவுகளின் காணிக்கையாகவே அவருக்கு இன்று தபால் முத்திரை வெளியிட்டு கௌரவம் செய்கின்றோம்’ என தெரிவித்தார்.

சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உழைக்கும் மக்களின் குரலாக அரசியல் தொழிற்சங்க இலக்கிய பரப்பில் ஒலித்த சிவி வேலுப்பிள்ளைக்கு முத்திரை வெளியிட்டு கௌரவம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் எனத் தெரிவித்தார்.

சிவி நூற்றாண்டு நினைவாக அவர் நிர்வாக ஆசிரியராக வெளியிட்டு வந்த ‘மாவலி’ இதழின் சி.வி சிறப்பிதழ் வெளியிட்டு வைக்கப்பட்டது. முன்னாள் மாவலி ஆசிரியர் த.அய்யாத்துரை வெளியிட்டு வைக்க எழுத்தாளர் அந்தனிஜீவா, தொழிலாளர் தேசிய சங்கத்தின் முதல் மாதர் சங்க தலைவி திருமதி தவமணி ஜெயராமன், சிவியின் பல்வெறு தகவல்களை சேகரித்துத் தரும் ஆவணக்காப்பாளர் வட்டகொடை சுப்பையா ராஜசேகரன் ஆகியோருக்கு முதல் மூன்று பிரதிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வெறு பிரமுகர்களுக்கும் மாவலி சிறப்பிதழ் வழங்கிவைக்கப்பட்டது.

சி.வி நூற்றாண்டு நினைவப் பேருரையை ‘நிலைமாற்றம் பெற்றுவரும் மலைநாட்டுத் தமிழர்’ என்ற தலைப்பில் முன்னாள் இந்து கலாசார அமைச்சர் பி.பி.தேவராஜ் அவர்கள் ஆற்றினார். மலையக வரலாற்றில் சிவியின் வகிபாகம் தொடர்பில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவர் பெ.முத்துலிங்கம் சிறப்புரையாற்றினார். சிவியின் நினைவு நாளில் இலங்கை தேசத்தில் மலையக மக்களின் அரசியல் நிலைமை மற்றும் அந்தஸ்து குறித்து ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் உரை நிகழ்த்தினார்.

விழாவில் சிறப்பு அம்சங்களாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும்  சி.வி வேலுப்பிள்ளையை அரசியல் தளத்திற்கு அழைத்துச் சென்றவருமான மறைந்த தலைவர் கே.ராஜலிங்கம் நினைவு கூரப்பட்டு அவரது சகோதரரின் புதல்வாரன திரு.ராஜலிங்கம் அவர்களுக்கு மாவலி சிறப்பு பிரதியும் சி.வி நினைவு முத்திரையும் வழங்கிவைக்கப்பட்டது. சி.வி. வேலுப்பிள்ளை இணைந்து செயற்பட்ட ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் மேற்கொண்ட டயகம தொழிற்சங்கப் போராட்டம் நினைவு கூரப்பட்டு மலையகத்தின் மிக முக்கிய தொழிற்சங்க வாதியான அமரர் அஸீஸ் அவர்கள் நினைவாக அவரது மகன் அஷ்ரப் அஸீஸ் மேடைக்கு அழைக்கப்பட்டு மாவலி சிறப்பிதழும் சிவி நினைவு முத்திரையும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

சிவி ஆங்கிலத்திலேயே அதிகம் எழுதினார். அவரை தமிழுக்கு அறிமுகப்படுத்திய பெருமை மொழியெபர்ப்பு இலக்கியவாதிகளையே சாரும். அந்தவகையில் அமரர் சகதீ பால அய்யா, பொன்.கிருஸ்ணசாமி, எஸ்.செபஸ்தியன் ஆகியோரின் வரிசையில் சிவியின் உழைக்கப் பிறந்தவர்கள் எனும் ஆங்கில படைப்பை தமிழாக்கம் செய்த எழுத்தாளர் மு.சிவலிங்கம் அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்களின் சார்பாக கௌரவம் வழங்கப்பட்டது. மு.சிவலிங்கம் சார்பாக மலைநாட்டு எழுத்தாளர் மன்றக் காப்பாளர் திரு.எம். வாமதேவன் சிறப்பிதழையும் சிவி சிறப்பு முத்தியையும் பெற்றுக்கொண்டார்.

அதேபோன்று சிவி வேலுப்பிள்ளை பற்றிய ஆய்வு நூல்களை எழுதியவர்களுள் சாரல்நாடன், அந்தனிஜீவா போன்றோர் முக்கியமானவர்கள். சிவி வேலுப்பிள்ளை தொடர்பான மறைந்த சாரல்நாடனின் பணிகள் நினைவுகூரப்பட்டு அவர் இறுதியாக எழுதிய ‘சி.வி.வேலுப்பிள்ளை’ எனும் நூலின் முன்னூறு பிரதிகளை அந்தனிஜீவா அவர்களிடம் இருந்து தொழிலாளர் தேசிய சங்கம் பெற்றுக்கொண்டது. 

தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப் நன்றியுரை வழங்கினார். தமிழ், சிங்கள இருமொழிகளிலும் அறிவிப்புகள் இடம்பெற நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி கவிஞர் மல்லியப்பு சந்தி திலகர் தொகுத்தளித்தார்.

நூற்றாண்டு காலமாய் நுழைந்த இவ்விருட்டை 
வேரோடழிக்க என் தமிழ் மக்கள் 
கூறுவர் சிகர உச்சியில் ஏறி கூறுவர் திடல்கள் யாங்கனுமடுக்கவே
விடுதலைக் குரலது வெற்றிக் குரலது விரைந்தெழும் கேட்பீர்

என ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பதாகவே பாடிவைத்த சிவி வேலுப்பிள்ளையின் கனவுகள் மெய்ப்பட்ட நாளாக அவரது நூற்றாண்டு விழாவானது மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டத்துடன் சிறப்பானதொரு கல்வி, கலை, இலக்கிய அரசியல் தொழிற்சங்க சங்கமமாக ஹட்டன் நகரில் அரங்கேறியது.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates