தமிழகக் கிராமங்களிலும் பின்னர் மண்டப முகாம்களிலும் மன்னார் பிரதேசங்களிலும் மலையகத்தில் பெரியாங்கங்காணிகள் காலனித்துவ ஆட்சியாளர்கள்> உள்ளுர் அரசியல்வாதிகள் தொழிற்சங்கவாதிகள் எனப்பலரிடம் சிறகொடிபட்ட மலையக மக்களில் இருந்து இன்று சிறுகசிறுக சிறகு முளைத்தவர்களாக உருவாகும் இளைய சமூகத்தினர் நாளை கிரங்களை நோக்கிப் பறக்கும் வல்லமையைப் பெறுவர் எனும் நம்பிக்கையை தானா.மருதமுத்து போன்ற இளைஞர்கள் எமக்கு உணர்த்துகின்றனர் என மலையகத்தின் மூத்த எழுத்தாளர் மு.சிவலிங்கம் தெரிவித்தார்.
ஹாலிஎல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரான தங்கையா மருதமுத்து எழுதிய ‘சிறகிழந்த கிளிகள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை ஹாலிஎல வீரசக்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. பதுளை மாவட்ட கலை இலக்கிய வட்டத்தினரின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வை.தேவராஜா தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மு.சிவலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாணவியரின் இறைவணக்கப்பாடல்> தமிழ்த்தாய் வாழ்த்துடன் பிரமுகர்களின் மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பமான விழாவில் வரவேற்புரையையும் தலைமையுரையையும் வை.தேவராஜா ஆற்றினார். நூல் அறிமுகத்தை நூலின் பதிப்பாசிரியரான பாக்யா பதிப்பக நிறுவுனர் மல்லியப்புசந்தி திலகர் வழங்கினார். இன்று இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு வருகைதந்தோர் இன்று காலைதான் இதற்காகப் புறப்பட்டிருப்பீர்கள். ஆனால் எங்கள் பதிப்பகத்தினர் கடந்த ஒருவருடத்திற்கு முன்பாகவே புறப்பட்டுவிட்டோம். இந்த வெளியீட்டு முயற்சிக்குள் பலரின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் கலந்துள்ளது. பாடசாலைக் கல்வியைவிட்டு இடைவிலக நேர்ந்தாலும் தனது விடாமுயற்சியில் ஹோட்டலில் சிப்பந்தி வேலைசெய்துகொண்டு இத்தகைய ஒரு முயற்சியில் இறங்கிய இளைஞனான மருதமுத்து போன்ற இளைஞர்களுக்கு கைகொடுக்கும் முயற்சியே எமது இந்த வெளியீடு என மல்லியப்புசந்தி திலகர் தெரிவித்தார். கலாசாரம்> பண்பாடு என்கின்ற பெயரில் நாம் காரணம் புரியாத பல பணிகளை செய்துகொண்டிருகக்pறோம். அதில் காட்டும் ஆர்வத்தை அர்ப்பணிப்பான பணிகளில் காட்டத் தவறிவிடுகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.
அததெரண செய்தி இணையத்தளத்தின் தமிழ்ப்பகுதி பொறுப்பாசிரியர் பழனி விஜயகுமார் நூலினை வெளியிட்டு வைக்க தானா.மருதமுத்துவின் தாயார் திருமதி தங்கையா முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். அதனைத்தொரந்து ஊர்மக்கள் அனைவருமாக தமக்கான பிரதியைப் பெற்றுக்கொண்டமை சிறப்பாக அமைந்தது. பழனி விஜயகுமார் தனது வாழத்துரையில்> கல்லொன்று சிலையாவதற்கு அது நல்ல சிற்பியிடம் சென்றுசெர வேண்டும். அந்தவகையில் மல்லியப்புசந்தி திலகர் எனும் நல்ல சிற்பியிடம் சிக்கிய கல்லான தங்கையா மருதமுத்து எனும் இளைஞன் தானா.மருதமுத்து எனும் கவிஞனாக உருப்பெற்றுள்ளார். மருதமுத்துவை மல்லியப்புசந்தி திலகருக்கு அறிமுகப்படுத்தியவன் என்ற விதத்தில் நான் பெருமிதம் அடைகின்றேன் எனத் தெரிவித்தார்.
நூலாய்வுரையாற்றிய பண்டாரவளை மத்திய கல்லூரி ஆசிரியர் எஸ்.சேதுரட்ணம் தானா.மருதமுத்துவின் கவிதைகளை இலக்கிய நயத்துடன் நுணுக்கமாக ஆய்வுசெய்து வழங்கினார். வந்திருந்த அனைவருக்கும் இந்த நூலை வாசிக்கவேண்டும் எனும் ஆர்வத்தை ஏற்படுத்தியது அவரது உரை. அதேநேரம் தானா.மருதமுத்து இன்னும் வாசிப்பினை நிகழ்த்துவதன் மூலம் காத்திரமான கவிதைகளை எழுத முடியும் எனவும் தெரிவித்தார்.
கருத்துரை வழங்கிய கோனமுட்டாவ தமிழ் வித்தியாலய அதிபர் யோகேஸ்வரன் தனது மாணவனின் இந்த திறமைகளை நாங்கள் அடையாளம் காணாதுவிட்டோம் என தவறினை ஒத்துக்கொண்டார். தமிழ் மொழித்தின போட்டிகளில் எங்கள் பாடசாலைக்கு அதிக வெற்றிகளைப் பெற்றுக்கொடுக்கும் இந்த மாணவன் வறுமை காரணமாக சாதாரண தரப்பரீட்சை கூட தோற்றாது கொழும்புக்கு வேலைக்குச் சென்றுவிட்டார். இன்று அவரின் திறமைகளை அடையாளம் கண்டு அவரது கவிதைகளை நூலாக்கியிருக்கும் நண்பர் மல்லியப்புசந்தி திலகர் பாராட்டுக்குரியவர். எனது மாணவன் மருதமுத்து வெளியிடும் அடுத்த நூலை நானே எனது சொந்தப் பணத்தில் வெளியிடுவேன் என உறுதிமொழியளித்தார் அதிபர் யோகேஸ்வரன்.
கருத்துரை வழங்கிய சமூக ஆய்வாளராரும் மட்டக்களப்பு காகம் பதிப்பக நிறுவுனருமான ஏ.பி.எம். இத்ரீஸ்> நாங்கள் மாணவர்களை பாடத்திட்டத்துக்கு உள்ளேயே வளர்க்க விரும்புகிறோம். பாடத்திட்டத்திற்கு வெளியே குழந்தைகள் கற்றுக்கொள்ள ஏராளமான விடயங்கள் உண்டு. இங்கே மருதமுத்து தனது அனுபவங்களின் வெளிப்பாடாகவே ஒரு கவிஞராக நம்மிடையே இன்று வலம் வருகிறார். வெளிகளை பார்த்து வளரும் குழந்தைகளை நாம் ‘வாய்பார்க்கிறார்கள்’ என்று திட்டுகிறோம். ஆனால் ‘வாய்பார்த்தல்’ என்பது கற்றலின் முக்கிய முறைமை என்பதை அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க> ஊக்குவிக்க வேண்டும். புத்தகத்தை முதலில் இருந்துதான் வாசிக்கவேண்டும் என்ற மரபு எல்லாம் இப்போது உடைபட்டுவிட்டது. ஒரு பிரதியை எங்கிருந்தும் வாசிக்கலாம் எனும் பின் நவீனத்துவ சிந்தனைகள் இப்போது வளர்ந்துள்ளன எனவும் தெரிவித்தார்.
இளைஞர்களுக் குநம்பிக்கையளித்த எழுத்தாளர் மு.சிவலிங்கத்தின் சிறப்புரை> பசறை காவத்தை கனகராஜாவின் கவிவாழ்த்து> கவிஞர் அருணின் வாழ்த்துரை> பாடசாலை மாணவர்களின் நடனம் என்பனவும் இங்கு இடம்பெற்றன. ஏற்புரை வழங்கிய கவிஞர். தானா மருதமுத்து தன்னை பட்டைதீட்டிய அத்தனை ஆசிரிய உள்ளங்களுக்கும் பதிப்பாளருக்கும் நன்றி தெரிவத்ததோடு தனக்காக அவர்கள் செலவிட்ட காலத்தை மலையகத்தின் எதிர்காலத்திற்காக தான் செலவிடவுள்ளதாக கவியநயத்தோடு நம்பிக்கை தெரிவித்தார்.
பதுளை மாவட்ட கலை இலக்கிய வட்டத்தின் செயலாளர் ஆ.புவியரசன் நன்றியுரை வழங்கினார். நித்தியானந்தன் மற்றும் பிரகாஷ் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க தனது மண்ணின் மைந்தனின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் ஊர் மக்கள் அனைவரும் கலந்துகொண்ட நிறைவான விழாவாக அமைந்தது ‘சிறகிழந்த கிளிகள்’ கவிதை நூல் வெளியீடடு விழா.
படங்களும் தகவல்களும் - ஹாலிஎலயூர் ரஜீவ்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...