எழில் கொஞ்சும் இடம், இயற்கை அன்னையின் உறைவிடம் என்றெல்லாம் அழைக்கப்படும் மலையகத்தில் இயற்கை வளம் கொட்டிக்கிடக்கிறது. ஆனபோதிலும் இயற்கையின் எவ்விதமான வரப்பிரசாதங்களும் இன்றி இங்கு மக்கள். அந்த வகையில் அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட நோர்வூட் பிரதேசத்தில் சுத்தமான குடிநீர் இல்லாமல் பெரும் அசௌகரியங்களை மக்கள் எதிர் நோக்கி வருகின்றனர்.
இதனடிப்படையில் கடந்த 26ஆம் திகதி நோர்வூட் பிரதேசத்தில் முன்னாள் பாடசாலை அதிபரும், முன்னாள் பாராளுமன்ற மொழிப்பெயர்ப்பாளரும், கல்வி உதவிப் பணிப்பாளருமான கனகமூர்த்தி தலைமையிலான கவனயீர்ப்பு சத்தியாக்கிரகம் ஒன்று நோர்வூட் நகரத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இச்சத்தியாக்கிரகத்தில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்கள், நலன்விரும்பிகள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நோர்வூட் பிரதேசத்தில் போதிய நீர் வளம் இருந்த போதிலும் சுத்தமான குடிநீர் இல்லா மல் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாவதாக இவர்கள் தெரிவித்தனர். அத்துடன், நோர் வூட் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் சிங் கள மகா வித்தியாலயம் உள்ளிட்ட பாடசா லைகளும் இதில் அடங்கும். நோர்வூட் நகரத்தில் வாழும் 500இற்கும் மேற்பட்ட குடு ம்பங்களும் இக்கட்டமைப்பிற்குள்ளே தான் உள்ளன.
இவர்கள் அனைவரும் நீரின்றி பல அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகக் கூறுகின்றனர். மேலும், இது தொடர்பில் உரிய அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோருகின்றனர்.
இச்சத்தியாக்கிரகம் தொடர்பில் முன்னாள் அதிபரும், பாராளுமன்ற மொழிப்பெயர்ப்பாளருமான கனகமூர்த்தி கருத்துத் தெரிவிக்கையில், நோர்வூட் ஒரு சிறிய நகரம் அடங்கிய பிரதேசமாகும். இப்பிரதேசத்தில் நீர்ப் பிரச்சினை என்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது. பாடசாலைகளுக்கும், நகரத்திற் கும் மற்றும் நகரத்திற்கு அண்டிய பகுதிகளுக்கும் ஒரே பிரதான குழாய் மூலம் தான் நீர் விநியோகம் நடைபெறுகிறது. எனினும் இந்த குடிநீர் தூய்மையற்றதாகவே காணப்படுகிறது. எனினும் அனைவரும் அனைத்துத் தேவைகளுக்கும் இந்த நீரையே பயன்படுத்தி வருகின்றனர்.
ஆரம்பகாலத்தில் தினமும் விநியோகிக்க ப்பட்ட குடிநீர் பின்னர் இரண்டு நாட்களு க்கு ஒரு முறை விநியோகிக்கப்பட்டது. காலம் செல்லச் செல்ல மூன்று நாட்களுக்கு ஒரு முறையும், நான்கு நாட்களுக்கு ஒருமுறையுமென அதிகரித்துச் சென்று கடைசியில் வாரத்திற்கு ஒரு முறை கூட நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தங்களது வாழ்க்கையைக் கொண்டு செல்கின்றனர்.
இது தொடர்பில் நோர்வூட் பகுதியில் வாழும் மக்கள் உரிய அதிகாரிகளிடம் முறை ப்பாடு செய்த போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தான் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் அதிகமாக நகர மக்களும் மாணவர்களுமே பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த 2005ஆம் ஆண்டு உலக வங்கி யின் ஒத்துழைப்புடன் 90 வகையான நீர் வழங்கல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த 90 வேலைத்திட்டங்களில் 18 வேலைத்திட்டங்கள் அம்பகமுவ பிரதேச சபையிடம் ஒப்படைக்கப்பட்டன. அதில் ஒரு வேலைத்திட்டமாக நோர்வூட் பிரதேச மக்களின் குடிநீர்ப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தரும் வகையில் 2008ஆம் ஆண்டு முதல் மழை நீர் சேகரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இதனடிப்படையில் நீர் சேகரிப்புத் திட்டங்களும் உருவாக்கப்பட்டன. சுத்திகரிப்பு முறை கொண்ட 24 நீர்த்தாங்கிகள் இதற்காக பயன்படுத்தப்பட்டன. இந்த தாங்கிகள் சுமார் 50,000 லீற்றர் தண்ணீரை கொள்ளளவாக கொள்ளக் கூடியவை. மேலும் மக்களுக்கும் பாடசாலைகளுக்கும் நீரை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் 3கிலோ மீற்றர் தூரத்திற்கு குழாய்கள் பொருத்தப்பட்டு நீர் விநியோகம் இடம்பெற்றது.
2009ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதி யுடன் திடீரென நீர் விநியோகம் குறைய ஆர ம்பித்தது.நீர் விநியோகத்துக்குப் பொறுப்பான குழுவிலிருந்து சிலர் விலகினர். புதிதாக வந்தவர்கள் அதைச் சரியான முறையில் பராமரிக்க தவறியமையால் இத்திட்டம் கேள்விக்குறியானது.
காலப்போக்கில் இது தொடர்பாக மத்திய மாகாண சபை உறுப்பினரான கணபதி கனக ராஜாவிடம் முறைப்பாடு செய்ததன் பேரில், அவர் இத்திட்டத்தை மேம்படுத்தவென 20, 000 ரூபாவினை நன்கொடையாக வழங்கி னார். ஆனாலும் எவ்வித வேலையும் முன்னெடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக நோர்வூட் ஜனசமூக சேவா கேந்திரத்திற்கு அறிவித்தோம் அவ ர்கள் ஏற்கனவே இப்பகுதிக்கு போதியளவு நீர்வசதிகள் இருப்பதாக தெரிவித்து இத்திட்டத்தை புறக்கணித்து விட்டனர். அதனால் தான் நாங்கள் இந்த சத்தியாக்கிரகத்தை மேற்கொண்டோம். அதன் பலனாக மக்களுக்கு நீர் விநியோக வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடி க்கை எடுப்பார்கள் என்று எண்ணுகிறேன் எனக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் நோர்வூட் மகா வித்தியாலய ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கையில், எமது பாடசாலையில் சுமார் 1600இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்ற னர். நோர்வூட் பிரதேசத்தில் மிக முக்கியமான பாடசாலையாக எமது பாடசாலை உள்ளது. எமது அன்றாட பாவனைக்கு நீர் மிகவும் அவசியம். எமது பாடசாலையில் தண்ணீர் பற்றாக்குறை இருந்ததில்லை. ஆனால் கடந்த சில மாதங்களாக தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவுகின்றது. இதனால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பல சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
பல தண்ணீர்த் தாங்கிகள் வைக்கப்பட்டி ருந்தாலும் அவற்றில் நீர் இருப்பதில்லை. குழாய்களிலும் தண்ணீர் வருவதில்லை. மாணவர்கள் சிறிய அளவிலான போத்தலிலேயே தண்ணீர் எடுத்து வருகின்றனர். அவ ர்கள் புத்தகம், காலை உணவு, பகல் உணவு உட்பட தண்ணீரையும் சுமந்து வருவது மிகவும் பரிதாபத்திற்குரிய விடயமாகும். எமது பாடசாலை மட்டுமன்றி நோர்வூட் பிரதேசத்தை அண்மித்த பகுதிகளிலும் இதே நிலைமைதான் காணப்படுகின்றது.
மேலும் எமது பாடசாலையில் தற்போது இரண்டு கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. கட்டட நிர்மாணத்திற்குக் கூட போதியளவு தண்ணீர் இல்லாமல் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் நிர்மாண வேலை கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலைமையில் அருகில் உள்ள சிறிய ஆற் றிலிருந்து தான் தண்ணீரை பெற்றுக்கொள்கின்றோம். இதுபற்றி உரிய அதிகாரிகளி டம் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு நீர் பற்றாக்குறையால் அவதிப்ப டும் மக்களுக்கு கட்டாயம் ஒரு தீர்வினை பெற்றுக்கொடுப்பது பிரதேச சபையின் தலையாய கடமையாகும். அம்பகமுவ பிரதேச சபைத் தலைவரான வெள்ளையன் தினேஷிடம் இது தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தெரிவித்ததாவது, அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட நோர்வூட் பகுதியில் தற்போது நிலவி வரும் குடிநீர்ப் பிரச்சினை நிச்சயமாக நிவர்த்தி செய்யப்படும். நாங்கள் இதற்கான துரித வேலைகளை மேற்கொண்டு வருகின் றோம். இத்திட்டத்திற்கென புதிதாக நிய மிக்கப்பட்டுள்ள குழுவினரிடம் இது தொடர்பான அனைத்து விடயங்களும் கையளிக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய குழாய்களும், நீர்த் தாங்கிகளும் அமைத்து கொடுப்பதுடன் பாடசாலைகளுக்கும் உரிய தீர்வினை பெற்றுக் கொடுப்போம் என அவர் தெரிவித்தார்.
குடியிருப்பாளர்களுக்கும், நகரமக்களுக் கும், பாடசாலைகளுக்கும் தேவையான குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதற்கான நட வடிக்கையை மேற்கொள்வது பிரதேச சபை யின் பொறுப்பாகும். எனவே, பிரதேச சபை இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது பிரதேச மக்களின் எதிர் பார்ப்பாகும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...