இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் இரண்டாவது செயற்குழு கூட்டம் ஹட்டனில் திரு. லெனின் மதிவானம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் எதிர்கால கல்வி அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி உரையாற்றிய அதன் பொதுச் செயலாளர் ஆர். சங்கர மணிவண்ணன் தமதுரையில்
‘உலகின் பல பாகங்களிலும் இடம்பெற்று வருகின்ற சமூக பொருளாதார அரசியல் மாற்றங்கள், கல்வியிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கின்றன. இந்நிலையில் கட்சி பேதங்களுக்கு அப்பால் பின்தங்கிய சமூகத்தின் கல்வி வளர்ச்சியை, அவர்களின் சமூக பெயர்ச்சியை கருத்திற்கொண்டு, சமூகவுணர்வுக் கொண்டவர்கள் யாவரும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவையாகும். தனிநபர் முடிவுகளுக்கும் முன்கூட்டிய முடிவுகளுக்கும் அப்பால் அனைவரும் ஒன்றிணைந்து, கூடி விவாதித்துச் செயற்பட வேண்டிய காலத்தில் நாம் இருக்கின்றோம். இதனை கருத்திற்கொண்டு மலையகத்திலே ஆசிரிய தொழிற்சங்கத்தில் நீண்டகாலம் நேர்மையுடன் பணியாற்றியவர்களும், வெவ்வேறு பண்பாட்டுத் தளத்தில் இயங்கியவர்களும் மற்றும் சமூகவுணர்வு கொண்ட ஆசிரியர்கள், அதிபர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியதே இந்த அமைப்பாகும். இதனை எங்களுடைய பலமாக கருதுகின்றோம். இதுவரை எமது அமைப்பில் பல நூற்றுக் கணக்கான உறுப்பினர்கள் வந்து சேர்ந்து கொண்டிருப்பது எமக்கான நம்பிக்கையைத் தருகின்றது. பல நண்பர்களின் பங்கேற்பின் ஊடாகவும் வேண்டுதல்களுக்கு இணங்கவும் ஊவா, மத்திய, சப்ரகமுவ, வடக்கிழக்கு மகாணங்களில் எமது அமைப்பை விஸ்தரிப்பதற்கான இணைப்பாளர்களை இன்று தெரிவு செய்துள்ளோம். ஒரு பிரதேசம் என்ற எல்லைப் பரப்பிலிருந்து விடுபட்டு தேசிய ரீதியாக செயற்பட வேண்டியதே இன்றைய அவசியமாகும்.
இம் முயற்சியினூடாக காலத்துக்கேற்ற வகையில் கல்வியின் அபிவிருத்திகளை முன்னெடுப்பதுடன் அதற்கான செயற்றிட்டங்களை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்தவர்களிடம் முன்னெடுக்கவும் முனைந்துள்ளோம். கல்வி வளர்ச்சிக்கு இதய சுத்தியுடனும் நேர்மையுடனும் துணிவுடனும் செயற்பட முனைவதே எமது கடமையுமாகும்‘. எனக் குறிப்பிட்டார்.
இக்கருத்தாடலில் சிரேஸ்ட அதிபர்களான திருவாளர்கள். தனபாலன், எம். கணேசராஜ், டி. நாகராஜ், மற்றும் ஆசிரியர்களான எம்.எஸ். இங்கர்சால், எஸ். குமார் ஆகியோரும் கருத்தாடலில் பங்கு பற்றினர்.
தகவல்- எம். எஸ். இங்கர்சால்
பிரச்சாரக் குழு தலைவர்
இலங்கை கல்விச் சமூக சம்மேளனம்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...