திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை எனும் தலைப்பில் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா எழுதி தொகுத்துள்ள நூல் கொடகே சகோதரர்கள் வெளியீடாக வெளிவந்துள்ளது. இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தினருடன் ஏற்பட்டிருந்த தொடர்பின் ஊடாக அறிமுகமானவர்களில் ஒருவர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா. இவ்வமைப்பினர் ஏற்படுத்தியிருந்த கூட்டங்களில் நான் செய்த நூல் மதிப்புரைகள், ஆய்வுகள் என்பவற்றை அவதானித்து அது குறித்த கருத்தாடலை என்னோடு நிகழ்த்தி வருகின்ற ஒருவரும்கூட. ரிஸ்னாவை நான் சிறுகதையாசிரியராக, கவிஞாரக பார்த்திருக்கின்றேன். அவர் அவ்வப்போது படைப்பாளிகள் குறித்தும் படைப்புகள் குறித்தும் எழுதிய கட்டுரைகள் இடையிடையே சஞ்சிகைகளிலும், இணையத்தளங்களிலும் காணமுடிந்தது. இருப்பினும் அக்கட்டுரைகள் யாவையும் தொகுத்து ஒரு நூலாக வெளிவருகின்றபோதே அவை குறித்த ஒரு பூரணமான தெளிவை ஏற்படுத்திக்கொள்ள முடிகின்றது.
அந்தவகையில் அண்மையில் வெளிவந்த அவரது திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை என்ற தொகுப்பு நூல் பற்றி சில கருத்துக்களைக் கூற வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கின்றது. இந்நூலினுள் அடங்கியுள்ள கட்டுரைகளை ஐந்து பிரிவுக்குள் (நூலாசிரியரே அவ்வகைப்பாட்டினை செய்துள்ளார்) அடக்கலாம். கவிதை நூல்கள், சிறுகதை நூல்கள், நாவல்கள், சிறுவர் இலக்கியம், ஏனையவை என்ற பிரிவுக்குள் அடக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் முக்கியமானதொரு விடயத்தை சற்று அழுத்திக்கூற வேண்டியுள்ளது.
அதாவது ஆய்வுகள், மதிப்பீடுகள், கட்டுரைகள் என்பனவற்றை இரு பெரும் பிரிவுக்குள் அடக்கலாம்.
1. ஆராய்ச்சி சார்ந்தது
2. தகவல் சார்ந்தது
குறித்த ஒரு படைப்பையோ, ஒரு ஆசிரியரையோ முன்னிறுத்தி எழுதுவதாக அல்லாமல் ஒவ்வொரு சமூக பொருளாதார கட்மைப்புக்குள்ளும் மனிதர்களது சமூகப் பொருளாதார உறவுகள் எவ்வாறு அமைந்திருக்கின்றன? அந்த உறவுகளில் வளர்ச்சியும் முரண்பாடுகளும் எவ்வாறு அச்சமூகப் பொருளாதார கட்டமைப்பின் தோற்றம், வளர்ச்சி, சிதைவு என்பனவற்றில் தாக்கம் செலுத்துகின்றது என்பதை சமூகவியல் அடிப்படையிலும் வரலாற்று அடிப்படையிலும் அணுக முனைவது ஆராய்ச்சியின் அடிப்படையாகும்.
இத்தகைய ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்ற போது அத்தகைய சமூக பொருளாதார உறவுகளை விளங்கிக் கொள்வதற்கு சான்றாதாரங்கள் இல்லை என்பது ஒரு முக்கியமான பிரச்சனையாகும்.
இந்நிலையில் ரிஸ்னாவின் கட்டுரைகளை நோக்குகின்ற போது ஆழமான இலக்கியத் தேடல் இல்லாத ஒரு வாசகனும் கூட குறித்த ஆசிரியரையோ படைப்பையோ புரிந்துக் கொள்ளும் வகையில் அழகுற அறிமுகம் செய்கின்றார். ஆசிரியர் -படைப்பு- வாசகர் இடையியே ஒரு உறவுப் பாலமாக திகழ்கின்றார். அசாதாரணமான விடயங்களைக் கூட சாதாரண மக்கள் மொழியில் பாடுவதே தமது குறிக்கோள் என்ற நாகரிகத்தில் கால் பதித்து தமிழ் இலக்கியத்தில் புதியதோர் பரிணாமத்தை தோற்றுவித்தவன் பாரதி. இந்த போக்கு தமிழ் இலக்கியத்திற்கு மாத்திரம் உரித்தானதல்ல. உலக இலக்கிய வரிசையிலே வைத்து நோக்கும் போது மார்க்ஸ்ம் கார்க்கி இப்போக்கிற்கு காத்திரமான பங்களிப்பை நல்கியுள்ளார். மற்றும் புனைவியற் புரட்சி(Romantic Revolt) என்ற பேரேழுச்சிக்கு விளைப்பொருளாக வெளிவந்த Lyrical Ballads என்ற கவிதைத் தொகுப்பில் அதன் ஆசிரியர்களான வோர்ட்ஸ்வர்த், கோல்ரிட்ஜ் ஆங்கில் இலக்கித்தில் புதுயுகம் ஒன்றினை தேற்றுவித்தனர். மக்களுக்காக பாடுவதே தமது இலட்சியம் என்பது காலத்திற்கு காலம் பலர் வலியுறுத்தியே வந்துள்ளனர். இந்த நாகரிகத்தை தரிசிக்க முனைகின்ற எத்தனிப்பும் முயற்சியும் ரிஸனாவிடம் தென்படுகின்றது. நூலின் முன்னுரையில் திறனாய்வாளர் கே. எஸ் சிவகுமாரனின் பின் வரும் கூற்று அவதானத்தில் கொள்ளத்தக்கது:
"புறக்கணிக்கப்பட்ட அல்லது கண்டுக்கொள்ளப் படாத எழுத்தாளர்களின் நூல்களை ரிம்ஸா போன்று கருணைக் கண்களுடன் பார்த்து ரிஸ்னாவும் எழுதியிருக்கிறார். இதுவும் ஒரு ஆவணத் தொகுப்பு எனலாம்". வெறிச் சோறிடும் மனங்கள் (வெ.துஷ்யந்தன்), மழை நதி கடல் (இனியவன் இஸாறுதீன்), தளிர்களின் சுமைகள் (சுமதி குகதாசன்), தாலாட்டுப்பாடல்கள் (பி.ரி. அஸீஸ்), குற்றமும் தண்டனையும் (எம்.பி.எம். நிஸ்வான்), கண்ணுக்குள் சுவர்க்கம் (காத்தான்குடி நஸீலா), விடியலின் விழுதுகள் (ஸக்கியா ஸித்தீக் பரீத்), விடுமுறைக்கு விடுமுறை (பவானி தேவதாஸ்), விடியலில் ஓர் அஸ்தமனம் (எம்.ஏ. சுமைரா), இது ஒரு ராட்சஷியின் கதை (ஏ.சீ. ஜரீனா முஸ்தபா), புதிய பாதை (செ. ஞானராசா), மிதுஹாவின் நந்தவனம் (ஜெனீரா ஹைருள் அமான்), கருத்துக்கலசம் (சூசை எட்வேர்ட்) போன்ற கட்டுரைகள் இதுவரை இலங்கையில் அதிகம் அறியப்படாத ஆசிரியர்கள் படைப்புகள் பற்றிக் கூறுகின்றது என்பதற்கு தக்க எடுத்துக்காட்டுகளாகும். அவ்வாறு தான் அறிமுகம் செய்ய முனைகின்ற ஆசிரியரையோ படைப்பையோ பக்கச்சார்பின்றி நடுநிலையுடன் கூறும் பண்பு சிறப்பானது. ஆசிரியரின் படம், நூலின் அட்டைப்படம், நூலாசியரின் விலாசம் தொலைபேசி எண், போன்ற தகவல்களும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூலில் உள்ளக் கட்டுரைகளை வாசிக்கின்ற போது ஆசிரியர் படைப்புக் குறித்த அறிமுகத்திற்கு மேலாக அவ்வாசியரை படைப்பபை வாசித்தது போன்றதொரு உணர்வு கிடைக்கின்றது. இத்தகைய எழுத்துப்பணிகளை மேற்கொள்வதற்கு கடினமான வாசிப்பு- உழைப்பு அவசியமாகின்றது. ரிஸ்னா தொடர்ந்து தேடலில் ஈடுப்பட்டு வருகின்றவர் என்பதற்கு இந்நூல் சாட்சியாக அமைகின்றது. அவ்வாறு அவர் தேடடுதலுக்குட்பட்டுத்தி அறிமுகம் செய்கின்ற ஆசிரியர்கள் படைப்புகள் யாவும் மானுட ஸ்பரிசம் கொள்ளுகின்ற விருதுகளாகவே இருக்கின்றன என்ற வகையில் அவை வெகு இயல்பாகவே ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அமைகின்றது. இது ரிஸ்னாவின் ஆளுமையின் முக்கிய இயல்பாகின்றது. வரலாறு, சமூகவியல், அழகியல், உளவியல் என இவற்றையெல்லாம் தனிதனியே குழப்பிக் கொள்ளாமல் யாவற்றையும் ஒருகிணைத்து சமூக தளத்திலிருந்து பார்க்க முனைகின்ற முயற்சி ஆரோக்கியமானது.
இன்று வெளிவருகின்ற பெரும் பாலான நூல்களை ஒப்பு நோக்குகின்ற போது பெரும்பாலானவை பட்டமுயற்சிகளுக்காக (விதி விலக்குகளும் உண்டு) அல்லது வேறு நிறுவனமயப்பட்ட நலன்களுக்காக செய்யப்பட்ட ஆய்வுகளாகவோ தகவல்களாக காணப்படுகின்றன. ஒரு நலனை பிறிதொரு நலனின் தூக்கி வீசும் எத்தனங்கள் முயற்சிகள் தற்செயலானவை அல்ல. இத்தகைய விஷ சுழியில் மாட்டிக் கொள்ளாமல் ரிஸ்னா சமூக நலனின் அக்கறைக் கொண்டு இக்கட்டுரைகளை ஆக்க முனைந்திருப்பதாகவே படுகின்றது. அதேசமயம் தனது சமுதாய பார்வையை விருத்தி செய்துக் கொள்கின்றபோது சமுதாய பிரச்சனைகளை ஆழமாக வெளிக்கொணர முடியும் என்பதை தோழமையுடன் எடுத்துக் காட்டினால் அதனை ஏற்கும் முதிர்ந்த பக்குவம் ரிஸ்னாவுக்கு இருக்கும் என நம்புகின்றேன்.
எமது யாசிப்பு ரிஸ்னா தொடர்ந்து இது போன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பதே.
நன்றி- சூரியகாந்தி (01-10-2014)
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...