Headlines News :
முகப்பு » , » சட்டத்தரணி இரா. சடகோபனின் “கண்டிச் சீமையிலே நூல் வெளியீடு” - மா. பா. சி.

சட்டத்தரணி இரா. சடகோபனின் “கண்டிச் சீமையிலே நூல் வெளியீடு” - மா. பா. சி.


கோப்பிப் பயிர்ச் செய்கைக்காக பிரித்தானியர்களால் அயலகமான தென்னிந்தியாவிலிருந்து 1820ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டவர்களே இன்றைய மலையகத் தமிழரின் மூதாதைகள். இம்மூதாதைகளின் சந்ததிகள் இலங்கை அரசில் அமைச்சர் அந்தஸ்தைப் பெறும் அளவுக்கு இன்று பெரும் கணிப்பையும் பெற்று விட்டனர். இன்றைய மலையகத் தமிழர்கள் இந்நிலையை அடைவதற்கு அவர்களது மூதாதைகள் செய்த தியாகங்களை முக்கியமாகக் கோப்பிப் பயிர்செய்கைக் காலத்தில் அவர்கள் பட்ட மனச்சோகங்களை, அவமதிப்புகளை வரலாற்று ரீதியில் ஆவணப்படுத்தியிருக்கும் நூலே ‘கண்டிச் சீமையிலே’ நாடறிந்த இலக்கிய வாதி சட்டத்தரணி இரா. சடகோபன் இந்நூலை எழுதியுள்ளார்.

வீரகேசரி நிறுவனமும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றமும் இணைந்து இந்நூலுக்கான வெளியீட்டு விழாவை கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் 14.09.2014ஆம் திகதி மிகச்சிறப்பாக நடத்தின.

நூலாசிரியரின் தாயார் திருமதி இராமையாவும் மற்றும் தகைசார் பிரமுகர்கள் சிலரும் மங்கலச் சுடரேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர்.

சக்தி தொலைக்காட்சியின் செல்லமாய் ஒரு குரல் தேடல் ஜூனியர் சுப்பர் ஸ்டார் 2014 மெல்லிசைப் போட்டி நிகழ்ச்சியில் முதல் பரிசைப் பெற்ற பாடகி செல்வி வைஷாலி யோகநாதன் இனிய குரலில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடினார்.

பேராசிரியர் சோ. சந்திரசேகரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்த இவ்விழாவிற்கு சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் தலைமை தாங்கினார். செல்வி ஷாமினி சடகோபன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தலைமையுரை :
சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் “கண்டிச் சீமையிலே” ஒரு பிரமாண்டமான நூலாகக் கண்முன் காணப்படுகிறது. மனதில் இடத்தைப் பிடிக்கின்றது. இந்நூலாசிரியர் இரா. சடகோபன் இதை எழுதி முடிக்க தனது கடும் உழைப்பை ஈந்துள்ளார். அவருக்கு மிகவும் நெருக்கமான சட்டத்தரணி பதுளை சேனாதிராஜா இதற்காகச் சடகோபன் பட்ட சிரமங்களைச் சொன்னார்.

நூலொன்று அதன் உள்ளடக்கக் கனதியாலேயே பெருமை பெறும். மேன்மை கொள்ளும். ஒரு சமூகத்தின் மிகவும் சோகமான வாழ்க்கையைச் சடகோபன் சுவை குன்றாது இந்நூலில் எழுதியுள்ளார். புனை கதையை ஒத்ததாக உள்ளது.

வெள்ளைக்காரன் இலங்கைக்கு வந்த பின் அதன் பொருளாதாரம் மாற்றம் பெற்றது. ஏற்றுமதியை நம்பும் பொருளாதார முறைமைக்கு இட்டுச் செல்லப்பட்டது. சடகோபன் இந்நூலை எழுத உந்து சக்தியாக இருந்தது டொனோவன் மோல்ட் றிச் எழுதிய BITTER BERRY BONDAGE என்ற ஆங்கில நூலாகும். இந்நூல் மிகக் கடுமையான ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. சடகோபன் அதைச் சலிக்காது படித்துத் தனது நூலை எழுதியுள்ளார்.

இன்று மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளையின் நூறாவது பிறந்த தினமாகும். இந்நாளில் “கண்டிச் சீமையிலே” நூல் வெளி வருவது பொருத்தமாகும். சி. வி. வேலுப்பிள்ளையின் நாட்டார் பாடல் தொகுப்பில் கண்டிச்சீமை பற்றிச் சொல்லப்படுகிறது. மக்கள் வாழ்க்கை பற்றியும் உண்டு. புதுமைப்பித்தனும் துன்பக் கேணியில் பதிவு செய்துள்ளார். மலையக மக்களின் வாழ்க்கையை கண்டியே மையப்படுத்தியிருந்தது. அது பற்றி சடகோபனின் இந்நூலில் அற்புதமாகச் சொல்லப்பட்டுள்ளது. இங்கு தென்னிந்தியாவிலிருந்து கொண்டு வந்தவர்களை இரக்கமற்ற வகையில் கொடுமைப்படுத்தியதை டொனோவன் மோல்ட்றிச் ஆங்கில நூலில் மிக உணர்வுபூர்வமாக விபரித்துள்ளார்.

அதன் தாக்கமே சடகோபனையும் கண்டிச்சீமையிலே நூலை மிகவும் மனதை நெகிழ வைக்கும்படி எழுத வைத்துள்ளது. கோ. நடசய்யரிடமும் கடின உழைப்பும் சகிப்புத்தன்மையும் இருந்தது. அதேமாதிரி சடகோபனிடமும் உண்டு. உத்வேகமும் இருந்தது.

உறைந்து போய்க்கிடந்த மலையக மக்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை உண்டென்பதை உணர்த்தியவர் கோ. நடேசய்யர். அதே பாதையில்தான் சி. வி. வேலுப்பிள்ளையும் கே. கணேசும் சென்றிருக்கின்றனர். அந்தக்காலத்தில் வெளிவந்த கும்மிப்பாடல் தொகுப்பு நூலொன்றில் தோட்டத்தொழிலாளிகளை கங்காணிகளும் கண்டக்டர்மாரும் இடுப்பில் உதைத்து வருத்திய பாடல் உண்டு. வெள்ளைத்துரைமாரைக் கேள்வி கேட்கும் பாடல்களை மலையகத் தொழிலாளர்கள் பாடுவதற்கும் தடை போட்டனர். வேர்களைத் தேடும் ஆர்வத்தில் இரா. சடகோபன் இந்நூலை எழுதியுள்ளார். இதை வெளியிட்டதற்காக வீரகேசரி நிறுவனத்தைப் பாராட்ட வேண்டும்.

நூல் வெளியீட்டுரை
எஸ்.ரி.தயாளன்

எமது வீரகேசரி பத்திரிகை எண்பத்தைந்து ஆண்டுகளாக தமிழ் வாழ்வோடு இரண்டறக் கலந்து நெறி தவறாது செய்திகளை வாசகருக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பல்வேறுபட்ட நூல்களை வாசகருக்கு தந்துள்ளோம். அது வாசகருக்கு இன்றும் ஞாபகமிருக்கும். பல புதிய எழுத்தாளர்களை நூலாசிரியராக அறிமுகப்படுத்தியுள்ளோம். இடை நிறுத்தப்பட்ட அப்பணி மீண்டும் தொடரப்படுகிறது. எமது முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசனின் சமூக அக்கறை காரணமாக அப்பணி மீண்டும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த இரண்டாவது வெளியீட்டுச் செயற்பாட்டில் 10ஆவது நூலாக இரா. சடகோபனின் ‘கண்டிச் சீமையிலே’ நூல் இன்று வெளியிடப்படுகிறது. வாசிப்பு குறைச்சலாலேயே குற்றச் செயல்கள் ஏற்படுகின்றன. அழிவுகளைத் தடுத்து நிறுத்த வாசிப்பின் முக்கியத்துவத்தை வளர்த்தெடுக்க எத்தனிக்கிறோம். எழுத்தாளர்களை ஊக்குவிக்கின்றோம்.

‘கண்டிச்சீமையிலே’ நூலில் வெளிவந்தவை எமது ஏடான சூரியகாந்தியில் வெளிவந்தவை. கதை சொல்வது போல் சடகோபன் எழுதியுள்ளார்.

அறிமுக உரை
சு. முரளிதரன்
(கல்விப் பணிப்பாளர் கல்வி அமைச்சு)

இரா. சடகோபன் ‘கண்டிச் சீமையிலே’ நூல் மூலமாகச் சரியான நூலொன்றை நமக்குத் தந்துள்ளார். பாரிய பணியொன்றை முன்னெடுத்திருக்கின்றார். கோப்பிக் காலத்தை பற்றிச் சொல்கிறார். நாட்டார் பாடல் தொகுப்புப் பாடலொன்றில் கண்டி பற்றியும் உண்டு. மலையகத்தின் ஒவ்வொரு நாட்டார் பாடலின் ஒவ்வொரு வரியிலும் வருத்தம் தெறிக்கும்.

ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு எப்படி எழுதுவது? என்பதற்கு ‘கண்டிச் சீமையிலே’ நூல் உதவத்தக்கது. கோப்பிக் காலத்துத் தோட்டத்துரைமார் சிலரும் எழுத்தாளராக இருந்துள்ளனர். பிரித்தானியர்கள் ஏன் இந்தியர்களைத் தோட்டங்களில் வேலை செய்வதற்குக் கொண்டுவந்தனரென்பதற்குச் சடகோபனின் இந்நூலில் விளக்கமுண்டு. அவர்களது உழைப்புத்திறனை இனங்கண்டே வெள்ளைக்காரர் அவர்களை இங்கு கொண்டு வந்தனர்.

சிறப்பான வடிவமைப்பை இந்நூல் கொண்டுள்ளது. சாதாரண தொழிலாளியும் இலகுவாக விளங்கிக்கொள்ளக் கூடிய நூலாக உள்ளது. இந்நாட்டின் வரலாறு, பொருளாதாரம் என்பவற்றைத் தருகின்றது. தோட்டத் தொழிலாளியின் வாழ்வை வேதனையோடு நினைத்துப் பார்க்க வைக்கின்றது. தொழிலாளர் சிந்திக்கும் பாங்கையும் விளக்குகின்றது.

ஜூனியர் சுப்பர் ஸ்டார் செல்வி வைஷாலி யோகநாதன் ‘பரதேசி’ சினிமாப் படப் பாடலொன்றைப் பக்கவாத்தியங்களோடு பாடிச் சபையோரை மகிழ்வித்தார்.

நூலாய்வுரை ஆய்வறிஞர் எம். வாமதேவன்
1823 – 1893 காலப்பகுதி இலங்கையின் கோப்பிக் காலமாகும். இரா. சடகோபனின் ‘கண்டிச் சீமையிலே’ நூலில் 14 அதிகாரங்கள் உண்டு. உப தலைப்புகளும் உண்டு. சடகோபன் 96 உப தலைப்புகளாகப் பகுத்து எழுதியுள்ளார். நெஞ்சில் ஆழப்பதியக்கூடிய தலைப்புக்களாக உள்ளன. எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் ஏடான சூரியகாந்தியில் குறுங்கட்டுரைகளாக வெளிவந்தவையே மெரு கூட்டப்பட்டு இப்பாரிய நூலாக வடிவெடுத்துள்ளன.

இலங்கையில் கோப்பிப் பயிர்ச்செய்கையோடு ஆரம்பமான நவீன பொருளாதாரம் அதன் பின் உண்டான இரட்டைப் பொருளாதாரம் என்பனவும் நூலிலுள்ளன. கடைசி நான்கு அத்தியாயங்களும் மிகவும் முக்கியமானவை. சமூக வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுபவையாக உள்ளன. இத்தகைய நூலொன்றில் மக்களின் பண்டைக் கால வாழ்வை தருவது சிரமமாகும்.

இலங்கை கோப்பித் தோட்டங்களுக்கு வந்த பின்னரே இந்தியத் தொழிலாளர்கள் அரிசிச் சோற்றை உண்டுள்ளனர். அதன்பின் கோதுமை உணவும் அவர்களுக்கு உண்ணக் கிடைத்துள்ளது. இத் தொழிலாளர்கள் ஒரே இடத்தில்தான் வாழ விரும்பியுள்ளனர். அதற்கமையவே வீடுகளும் அமைக்கப்பட்டன. இவர்களுக்கு கல்வி பிரதானமாக இருக்கவில்லை. கற்பதற்கு மாணவர்களும் இருக்கவில்லை. இரவில்தான் படித்தனர். தமது மதத்தைப் பரப்பும் நோக்கோடு கிறிஸ்தவ மதத்தவர் இத் தொழிலாளிகளுக்கான கல்வியை முன்னெடுத்தனரெனவே சொல்லப்படுகிறது. மலையகத்தில் இன்னமும் கிறிஸ்தவ மத செல்வாக்கில்லை. தமது கலாசார அடையாளங்களை மலையகத்தவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை காப்பாற்றுகின்றனர். SHEDULED CASTE ஐ சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களே இங்கு கொண்டு வரப்பட்டனர். அது பற்றியும் இந்நூலில் தகவலுண்டு.

இந்தியாவில் அதிக சாதி அமைப்புகள் இருப்பதால் இங்கு வந்த தொழிலாளிகள் அங்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை. பொருளாதார அடக்கு முறையும் அங்கு இருந்தது. நூலின் கடைசி மூன்று அத்தியாயங்களும் சோக உணர்வைத் தருகின்றன. நோயுற்ற தொழிலாளிகள் வைத்தியசாலைக்குச் செல்வதில்லை. போக்குவரத்து வசதியீனத்தால் நோயாளியைத் தொட்டுத் தூக்கிச் செல்ல வேண்டுமென்பதால் தோட்ட துரைமாரே நோயாளிகளுக்குச் சிகிச்சைகளையும் செய்தனர். சுகாதார சேவையைப் பொறுத்தமட்டில் இன்னமும் நிலை மாறவில்லை. The King is Dead. Long Live Kingஇது முடியாட்சி பாரம்பரியம். அரசர் இறந்து விட்டார். அரசர் வாழ்க. இறந்தவர் போக அடுத்த மன்னன் வருவான் என்பதே அதன் தாற்பரியம். கோப்பி இறந்து விட்டது. கோப்பிக் காலம் முடிந்து விட்டது. ஆனால் அந்தக் காலத்து நிலைதான், இன்றும் மலையகத்தில் சோக வரலாறு தொடர்ந்திருக்கும் என்பதை நூல் அறியத் தருகிறது.

கருத்துரை: மூத்த எழுத்தாளர் மு. சிவலிங்கம்
பேசப்படாத எழுதப்படாத தொழிலாளரின் வாழ்வை நினைவுபடுத்தும் நூல் ‘கண்டிச் சீமையிலே’ பெருந்தோட்ட மக்கள் எப்படித் துன்புறுத்தப்பட்டனரென்பதை ஆங்கிலேயரும் எழுதியுள்ளனர். ஒவ்வொருவருக்கும் வரலாறு உண்டு. என்னை நான் உணர்ந்திருக்க வேண்டும். இத்தகைய ஒன்றான BITTER BERRY BONDAGE என்ற ஆங்கில நூலை வாசிக்க வேண்டும். ஆங்கில எழுத்தாளர் டொனோவன் மொல்ட்ரிட்ச் தனது நூலை இலக்கியச் சுவையோடு எழுதியுள்ளார்.

இரா. சடகோபன் நூலுக்கு பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அணிந்துரை தந்துள்ளார். நூலுக்கு மங்களகரமானதாக உள்ளது. அணிந்துரைகள் நூலுக்குக் கவர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். ‘பேராசிரியரின் அணிந்துரை தேஜஸைக் கொடுக்கின்றது. உலகமென்பது உயர்ந்தோர் மேற்றே என்பதற்கமைய மேற்குடி மக்களைப் பற்றிய எழுத்துக்களே பதிவாகியிருப்பதை வரலாறு உணர்த்துகின்றது. அடிநிலை மக்கள் பற்றிய எழுத்துக்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.

பிரதம அதிதி உரை பேராசிரியர் சோ.சந்திரசேகரன்
‘சாகித்திய ரத்னா’ என்ற இலங்கை அரசின் உயர் விருதை முதன்முதல் மலையகத்துக்கு வாங்கித் தந்தவர் தெளிவத்தை ஜோசப் தான். வீரகேசரி நிறுவனத்தால்தான் ‘கண்டிச் சீமையிலே’ போன்ற நூல்களை வெளியிட முடியும். இது மகத்தான பணி. சமூகத்திடமிருந்து இலாபத்தைப் பெற்று விட்டால் போதாது. அச்சமூகத்திற்கு உதவவும் வேண்டும். முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசனை இப்பணிக்காகப் பாராட்ட வேண்டும்.

இரா. சடகோபனின் இப்பணி மிகவும் முக்கியமானது. இது எல்லோராலும் முடியாது. ஓவியத்திலும் அவருக்கு ஆற்றல் உண்டு. 1800களின் வரலாறு நூலில் பேசப்படுகிறது. இதன் நோக்கமென்ன? ஒவ்வொருவரும் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். 2030ஆம் ஆண்டில் இலங்கை எப்படி இருக்கும் என்பதை பார்க்க வேண்டும். இதற்கு வரலாறு தேவை. அதை அறிந்திருக்க வேண்டும். இத்தகைய நீட்சிகளைப் பற்றிச் சிந்திக்க இந்த அறிவு கை கொடுக்கும். இத்தகைய முயற்சிகளுக்கு இரா. சடகோபனின் இந்நூல் உதவும்.

கறுப்பினத்தவர்கள் இன்று அமெரிக்கராக வளர்ச்சி கண்டுள்ளனர். தாம் யார் என வேர்களைத் தேடுகின்றனர். இது சம்பந்தமாக ROOTS என்ற நூலும் வந்துள்ளது. பல் வகைமையான எழுத்துருக்களை எழுதுவதற்கும் சில முறைமைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவைகள் தமிழிலும் உண்டு.

வரலாற்று வரவியல் வரலாற்றை எப்படி எழுத வேண்டுமென்பதை கற்பிக்கும். அதன்படியே வரலாறு எழுதப்பட வேண்டும். ஆங்கில வரலாறுகள் பிரபுக்களைப் பற்றிச் சொல்கின்றன. சாதாரண மக்களை எழுதவில்லை. அவ்வண்ணமே தமிழிலும் காணப்படுகின்றது. எழுத்தாளர்கள் கல்கியும் பொன்னியின் செல்வனிலும் சிவகாமியின் சபதத்திலும் மன்னர்களையே மையப்படுத்தி உள்ளார். அப்போது ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு வரலாறு இல்லையா? தலித்துகள் மனிதர்களில்லையா?

ஏற்புரை: இரா. சடகோபன்
(நூலாசிரியர்)
இலங்கையைப் பிரித்தானியர் கைப்பற்றி கோப்பிப் பயிர்ச் செய்கைக்கு எத்தனித்த போது அது ஏற்றதல்லவெனச் சிலர் ஆலோசனைகள் கூறினர். இருந்தும் அந்த ஆலோசனைகள் ஆங்கிலேயர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர்கள் கோப்பிப் பயிர்ச்செய்கையிலேயே ஈடுபட்டனர். பரந்தளவில் செய்ய முடிவெடுத்தனர். தொழிலாளிகள் தேவைப்பட்டனர். சிங்களத் தொழிலாளிகள் தம்மை ஆளவந்த அந்நியனின் கீழ் நாம் வேலை செய்வதா? எனத் தன்மானம் பேசினர். இறுதியில் தமிழ் நாட்டிலிருந்து தொழிலாளிகளைப் பிடித்து வந்தனர்.

கடல் கடந்தும் நடந்தும் தொழிலாளிகள் கண்டிக்கு வந்தனர். வாந்திபேதியால் துன்பப்பட்டனர். மலையகத் தேசிய இனம் எவ்வாறு உருவாகியதென்பதை எனது இந்த நூல் வெளிப்படுத்துகின்றது. அன்றுபோல் இன்றும் மலையக மக்கள் 10’x8′ காம்பராக்களில் தான் வாழும் நிலை நீடிக்கின்றது. இதையெல்லாம் அரசாங்கம் கண்டுகொள்வதில்லை.

நன்றியுரையை உதவிக் கல்விப் பணிப்பாளர் கிறேஸ் சடகோபன் நிகழ்த்தினார்.

எழுத்தாளர் மல்லியப்பூ சந்தி திலகர் நிகழ்ச்சிகளை தகவல்களோடு தொகுத்து வழங்கினார்.

(நன்றி: தினக்குரல்)
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates