அங்கோர் கூட்டம் தன்னில்
அன்றொருநாள் பேசுகையில்
‘ஹல்துமுல்லை’ என்றாலும்
‘அழுத மலை’ இது என்றேன்..
‘’கூனியடிச்ச மலை
கோப்பிக் கன்னு போட்ட மலை
அண்ணனை தோத்த மலை
அந்தா தெரியுது பார்…’’
என்று அழுதமலை இதுவென்றேன்.
இன்று அழுதழுதே எழுதுகின்றேன்….
இன்னல் செய்ய பலருண்டு
இன்செய்ய யாருமில்லை
வன் செயல்கள் பல கண்டு
நாம் வாடிய நாள் பலவுண்டு
செயற் கைதானே எங்களை
சீண்டி வந்தது
இயற்கையே நீயுமா இன்று
ஏம்மீது விழுந்தது..
வன்முறைகளலால் தானே
பன்முறைகள் காவுகொண்டோம்
இம்முறை இயற்கையும் கூட
எங்களை விட்டுவைக்கவில்லையே..
ஏனிந்த விந்தை
எதனால் இந்த சோதனை
மலையே…!
உன்னை உரமாக்கி, உரமாக்கி
உயர்த்திய அண்ணனை..
உன்மீது வலம் வந்தே
நிறம் மாறிய எங்கள் அன்னையை..
அள்ளிக் கொண்டு போக
அத்தனை சீற்றமென்ன..?
அள்ளிக் கொன்;று போக
அத்தனை சீற்றமென்ன..?
என்தம்பிகள்
தும்பிகளாய் பறந்த வெளிகளை..
என் தங்கைகள்
மணல்வீடு கட்டி மேடுகளை..
உன் மண்மேடு கொண்டு
கண் மூட செய்த கயவனா நீ…?
மூடிய மலைகளுக்குள்
முணங்கள் கேட்டாயோ…
விம்மும் நெஞ்சங்களின்
விசும்பல் கேட்டாயோ…
இறந்தபின் எரிப்பதுதான்
எங்கள் மரபென்றபோதும்
சுடுகாட்டை
இடுகாட்டாக்கி
எங்கள் எலும்புகளை
புதைத்து வைத்தோம்
உழைத்துக் களைத்த
பலநூறு உடம்புகளை
இருநூறு வருடங்களை
எச்சங்களாய் சேர்த்து வைத்தோம்..
அத்தனையும் போதாதென்றா
அள்ளிக் கொண்டுபோனாய்.
தாரை..தாரையாய் - எங்களை
தள்ளிக் கொன்று போனாய்..
ஏழு மணியானதும்….
பிரட்டுத்தப்பு சத்தம் என்று
புறப்பட்டுப் போகும்
என் அண்ணனை
புரட்டிப்போட்ட கோபம் என்ன…?
ஏழு மணியானதும்….
சங்குசத்தம் என்று..- உனை
நோக்கி ஓடிவரும்
எங்கள் அன்னையர்க்கு
நீயே சங்காகி
நீர் ஊற்றி போனதென்ன…
ஏழு மணியானதும்
‘இஸ்கூல்’ மணிச்சத்தம் என்று
என் தம்பி, தங்கை
எழுந்திருப்பான்….
இன்று ‘ஹெலி கோப்டர்’
சத்தம் என்று
எழும்பி வந்தவர்க்கு –நீ
எமனாகிப் போனதென்ன..?
ஏழு மணிதானே
எங்களை எட்டுத்திக்கும்
அனுப்பிவைக்கும் ..!
-இன்று
ஏழரைச் சனியாகி எம்மை
அள்ளிக்கொண்டுப் போனதென்ன..?
உன்னை மிதித்தேறி
உழைத்தது தவிர …
உரம் கொண்ட மேனி கொண்டு
உன்னை உழுதது தவிர..
அவர் செய்த காயமென்ன - நீ
அவர்களை அள்ளிய மாயமென்ன?
மண்வெட்டி தோள் கொண்டு
மலை மண்ணை வெட்டியது –
உன்னைப்
பண்;படுத்தத்தானே – நீ
அவர்களை
புண்படுத்தி போனதேன்ன?
மலையே !
யாரும் அடித்தால்
ஓடிவந்தோம் உன்னிடம் - இன்று
நீPயே எட்டி உதைத்தால்
நாங்கள் ஓடுவது யாரிடம்…?
மீறிய பெத்தையில் - எல்லை
மீறிய இயற்கையே
எழுதி வை..!
இதுவும் என் வரிதான்:
‘மேலே குந்தும் மலை வீழ்வேன் என
எச்சரித்து நின்றபோதும்
மேல் கொத்(து)மலை எங்களை
குடைந்துகொண்டு சென்றபோதும்
இந்த மண்ணிலேயே மாள்வோம்
இந்த மண்ணிலேயே மீள்வோம்;’
இது
மடகொம்பரைக்கு மட்டுமல்ல
மண்மூடிய
மீறியபெத்தைக்கும் எட்டும்…! கிட்டும்.!
மண் அள்ளிப் போட்டுத்தானே
அஞ்சலி செய்வோம்
மண்ணே அள்ளிப்போட்டால்
மானுடர் நாம் என்ன செய்வோம்..?
மண்மூடி
கண்மூடிய – என்
மலைத் தேச மாந்தருக்கு
சீனத் தேசத்தில் இருந்து
செய்தேன் செவ்வணக்கம்!!
(கண்ணீர் சிந்திய காலை – குவாங்சோ (சீனா)
30-10-2014)
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...