ஒரு வாரமாக இலங்கை ஊடகங்களில் பேசப்பட்டுவரும் ஒரு செய்தி இரத்தினபுரியில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரால் பெண்ணொருவர் நடுத்தெருவில் தாக்கப்பட்ட சம்பவம். இரத்தினபுரி பிரதான பஸ் நிலையத்தை அண்டிய தெருவில் அப்பெண்ணின் தலைமயிரை ஒருகையால் பிடித்தபடி மறு கையால் வயர் ஒன்றினால் ஈவிரக்கமின்றி வெறித்தனமாக தாக்குவதும், வீதியில் விழுந்தபடி அந்த பெண் தாக்க வேண்டாம் என்று மன்றாடி தன்னை பாதுகாக்க எடுக்கும் காட்சியும் களவாக கையடக்க தொலைபேசியொன்றின் மூலம் பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவுடன் இது பலரை பதற வைக்கும் செய்தியாக ஆனது.
குறிப்பாக சிங்கள இணைய ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இந்தச் செய்திக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கூடவே சமூக வலைத்தளங்களில் பல்லாயிரக்கணக்கான பின்னூட்டங்களுடன் விவாதம் நடந்து வருகிறது. அதிலும் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக பெரும்பாலான வாதங்கள் ஆரோக்கியமான திசையில் வாதிக்கப்பட்டுவருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
பட்டி என்றழைக்கப்படும் 34 வயதுடைய காந்தி பல வருடங்களுக்கு முன்னர் கணவர் விட்டுவிட்டு சென்றதன் பின்னர் தனது இரண்டு குழந்தைகளை வளர்க்க படாதுபாடுபட்டு இறுதியில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டார். பின்னர் தற்போது இன்னொருவரோடு வாழ்ந்து வருகிறார்.
இரத்தினபுரி பஸ் நிலையத்தருகே ஒரு கடையில் பேசிக்கொண்டிருந்த வேளை காந்தியைக் கண்ட பொலிஸ் சார்ஜன்ட் அவரை விரட்டி விரட்டி அடித்து இறுதியில் தெருவில் வைத்து வயர் ஒன்றினால் தாக்கினார்.
“நான் விழுந்த நிலையில் ஏன் சேர் என்னை அடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு. ஏன் வேசி இங்கே திரிகிறாய் என்று தொடர்ந்தும் தாக்கினார். பின்னர் அங்கிருந்து மீண்டு பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றேன். அங்கு, பின்னர் வா என்று என்னை அனுப்பிவிட்டனர். நெஞ்சு வலியில் படுத்தபடுக்கையில் இருந்ததினால் மீண்டும் போக முடியவில்லை. என் குழந்தைகளைக் காப்பாற்ற வேறு வழியின்றி நான் இந்தத் தொழிலை செய்து வந்தேன்.
“அந்தப் பொலிஸ் சேர் என்னை சில தடவைகள் அவருடன் வரும்படி கேட்டார், என்னால் முடியாத சந்தர்ப்பங்களில் என்னோடு ஆத்திரம் கொள்கிறார். சம்பவத்துக்கு ஒரு வாரம் முன்னர் என்னிடம் 500 ரூபா கேட்டு தொந்தரவு செய்தார். என்னிடம் இல்லை என்றேன். அரை போத்தில் சாராயமாவது வாங்கித்தரும்படி வற்புறுத்தினார். என்னால் முடியாது. என்னிடம் பணம் இல்லை… நான் இந்தத் தொழிலை ஆசைக்கு செய்யவில்லை சேர் என்றேன். என்னை தூசணத்தால் திட்டிவிட்டு சென்றார். அந்தக் கோபத்தில்தான் என்னை இப்படி பழிவாங்கினார்” என்றார் காந்தி.
பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டதால் அத்தொழிலோடு நாளாந்தம் சங்கிலியாக தொடர்புபெறும் பலர் பல சந்தர்ப்பங்களில் அவரிடமிருந்து பாலியலை லஞ்சமாக பறித்துக்கொள்ள முயன்றுள்ளனர்.
செப்டெம்பர் 29 அன்று பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன, “அந்த இடத்தில் பெண்கள் இருவருக்கு இடையில் இடம்பெற்ற சண்டைப் பற்றி அறிந்துகொள்ள சென்றபோதே இப்படி நிகழ்ந்ததாகவும், குறிப்பிட்ட வீடியோவை நூறு வீதமும் நாங்கள் நம்பவில்லை என்றும் ஊடகங்களுக்கு திரித்தார். சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி விசாரணை முடியும் வரை இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
காந்திக்கு நீதி கோரி முதலில் இதனை சட்ட ரீதியில் கையிலெடுத்தவர் வழக்கறிஞரும் சிவில் செயற்பாட்டாளருமான உந்துல் பிரேமரத்ன. அவர் முன்னிலை சோஷலிச கட்சியின் முக்கியஸ்தர். “மனிதத்துவத்துக்கான கூட்டமைப்பு” எனும் அமைப்பையும் தலைமை ஏற்று நடத்துபவரும் அவரே. இந்த அமைப்பின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும், நீதிமன்றத்திலும் நீதி கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 1 ஆம் திகதியன்று காந்திக்கு நீதி கோரி “மனிதத்துவத்துக்கான கூட்டமைப்பு” ஒரு ஊடக மாநாட்டை நடத்தி காந்தி குறித்த அவதூறுகளுக்கு பதிலளிக்க காந்திக்கு சந்தர்ப்பத்தை எற்படுத்திக்கொடுத்தது. அதேவேளை, அவர்களின் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் திணைக்களத்தின் மீது ஐந்து கோடி நட்டஈடு கோரி வழக்கு தொடர்வதாக காந்தியின் மூலம் அறிவித்தனர்.
“உனக்கு HIV இருக்கிறதா என்று பரிசோதிக்க கொழும்பில் இருந்து வந்திருக்கிறார்கள் எங்களோடு வா என்று அழைத்து சென்று ஒரு ஹோட்டலில் அடைத்தார்கள். அறையை விட்டு வெளியில் வரக்கூடாது என்று உத்தரவிட்டார்கள். அங்கிருந்து நான் தப்பித்து வந்ததும் நிசாந்த பண்டார என்கிற பொலிஸ் அதிகாரி என்னை வரவழைத்தார். அங்கிருந்த மற்ற அதிகாரி, “நீ இன்னமும் முறைப்பாடு செய்யவில்லையே என்றார்”. அன்று முறையிட வந்தபோது நீங்கள் அல்லவா மறுத்தீர்கள் என்றேன். அதற்கு அவர் “அது வேறு எவராவது இருக்கலாம் தானில்லை” என்றார்.
பொலிஸார் இந்தப் பிரச்சினையை இத்தோடு கைவிடும்படி 3,000 ரூபாவை காந்தியிடம் திணிக்க முயற்சித்திருந்ததாக ஒரு செய்தி வெளியிடபட்டிருந்தது.
காந்தியை பழிவாங்கும் நோக்கில் 1ஆம் திகதி அவரது தாயாரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். நேற்று 2ஆம் திகதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து விபச்சார வழக்கில் சிக்கவைத்துள்ளனர் பொலிஸார். நீதிமன்றம் அந்த தாயை 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. காந்தியின் தாயாருக்கு தற்போது வயது 65.
பொலிஸார் தரப்பில் இந்த முறைப்பாட்டை முறியடிக்கவென சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது. பொலிஸாரின் தயவு தேவைப்படும் சக்திகளை ஒன்றிணைத்து இந்த முயற்சிகளில் இறங்கியிருக்கின்றனர். பொலிஸாருக்கு எதிரான இந்தப் பிரசாரம் புகலிட தமிழர்களின் சதி என்று கூட கூச்சமில்லாமல் கூற தயங்கவில்லை. இரத்தினபுரி பஸ் நிலையத்தை அண்டிய முச்சக்கர வண்டி சாரதிகள் காந்தியை ‘வேசி’ என்றும், ஏமாற்றி பணம் களவாடும் களவாணி என்றும் கூற வைத்துள்ளனர். அது ஊடகங்களிலும் வெளியாகின.
அதுபோல இரத்தினபுரி நகரத்தில் 2ஆம் திகதி ஒரு ஆர்ப்பாட்டம் ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தனர், அதற்காக ஒரு துண்டுப்பிரசுரமும் வெளியிடப்பட்டுள்ளது. அந்தத் துண்டுபிரசுரத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு விபச்சாரியை பொலிஸ் அதிகாரி தாக்கியதை பிரசாரப்படுத்தி நமது நகரத்தவர்கள் அனைவருக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். இவர்களால் பாடசாலை செல்லும் பிள்ளைகளும் பாதிப்படைகின்றனர். அப்படியான விபச்சாரிகளை நகரத்தை விட்டு அப்புறப்படுத்துவதற்காக பொலிஸ் அதிகாரி செய்த முயற்சி திரிபுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, இரத்தினபுரி பொலிஸாருக்கு நாம் நமது ஆதரவை வழங்கவேண்டும்.
இந்த சம்பவத்தால் உள்ளூர் வெளியூர் ஊடகங்கள் மற்றும் “தமிழ் டயஸ்போரா” காரர்களினால் இந்தச் சம்பவத்தை காரணம் காட்டி நாட்டுக்கு அபகீர்த்திக்கு உள்ளாக்கியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் ஆர்ப்பாட்டம் 02.10.2014 அன்று மணிக்கூட்டு கோபுரமருகில் ஒன்ருகூடும்படி சகோதரத்துவத்துடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. இரத்தினபுரி நகரத்து சகல முச்சக்கர வண்டி சங்கங்கள்
சுற்றுச் சூழல் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட நகரவாசிகள்.
2ஆம் திகதி திட்டமிடப்பட்டபடி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்த பொலிஸ் அதிகாரியை மீண்டும் பணியில் அமர்த்தும்படி கோஷமிட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தை நோக்கி காந்தி கல்லால் அடித்ததாகவும் அதற்காகவே காந்தியை தாக்கியதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் ஊடகங்களிடம் திரித்தனர்.
ஒருவர் கொலையே கூட செய்திருந்தாலும் சட்டப்படி பொலிஸாருக்குத் தாக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. ஊடகங்கள் சிலவற்றின் தலைப்பில் விபச்சாரி காந்தி என்று தலைப்பிட்டிருந்தனர். “ஒரு விபச்சாரி எவ்வாறு ஐந்து கோடி நட்டஈடு கேட்கலாம், அதற்கான தகுதி அவளுக்கு இல்லை” எனும் தொனியில் கூட விவாதங்கள் தொடர்கின்றன. உண்மையில் இந்தச் சம்பவம் ஒரு நல்ல பாடமாக இருக்க வேண்டும் எனும் நோக்கிலேயே காந்திக்கு சட்ட ஆலோசனை வழங்கும் செயற்பாட்டாளர்களால் 5 கோடி நட்டஈடு பரிந்துரைக்கப்பட்டதே அன்றி, அது காந்தியின் தெரிவல்ல.
சமீபத்தில் கொழும்பில் பாலியல் தொழில் நடாத்தும் பல பெரிய உல்லாச ஹோட்டல்கள் சோதனையிடப்பட்டு அங்கிருந்த பல வெளிநாட்டு பெண்கள் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்படுவது ஊடகங்களில் காண்பிக்கப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் தமக்கு கையூட்டாக பணத்தையோ பாலியலையோ தர மறுக்கும் பலருக்கான பொலிஸாரின் எச்சரிக்கையே ஒழிய உண்மையாகவே பாலியல் தொழிலை தடுத்து நிறுத்தும் நடவடிக்கை அல்ல அது. கொழும்பில் சுகபோக ஹோட்டல்களில் பாலியல் தொழில் அரசியல்வாதிகளதும், அதிகாரிகளதும் தயவில்தான் நடக்கின்றன என்பது இரகசியமல்ல. ஆனால், சாதாரண விளிம்புநிலை பெண்களின் கதி அதோகதிதான்.
தனது இயலாமை காரணமாக பாலியல் தொழிலை தெரிவு செய்த ஒரே காரணத்தினால் ஒரு மனிதப் பிறவியாக அவருக்கு இருக்கும் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட முடியாது.
நன்றி - மாற்றம் February 9, 2015
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...