அறுபதுகளில் எழுச்சியடைந்த மலையக சமூகத்தின் முக்கிய பங்காளியாக இர.சிவலிங்கம் மதிக்கப்பட்டார். அதிபராகவும் கல்வி அதிகாரியாகவும் கல்விமானாகவும் திகழ்ந்தார். தவிரவும் இடதுசார் அரசியலை முன்னெடுத்தவர் என்ற ரீதியில் அவரது பங்களிப்பானது காத்திரமான முனைப்பான செயற்பாடாக அக்காலக்கட்டத்தில் இருந்தது. அவர் உருவாக்கிய மாணவர் பரம்பரை மலையக பகுதியில் இன்னும் தொழில்பட்டுக்கொண்டிருக்கின்றனர். வன்செயல் காரணமாக தமிழகத்துக்கு புலம்பெயர்ந்த தொழிலார்கள் மறுவாழ்வு மன்றத்தின் ஊடாக காத்திரமான பணிகளை மேற்கொண்டவர். இறுதியில் இ.தொ.காவில் இணைந்து இலங்கைக்கு வந்து தொடர்ந்து பணியாற்ற முயன்றவேளை கருத்து முரண்பாடுகளினால் விலகிய சந்தர்ப்பத்தில் அவரது இறப்பு நிகழ்ந்த வரலாறை சுருக்கமாக அறிந்துக்கொள்ள முடியும்.
ஒரு வர்க்கப்பார்வையுடன் புறப்பட்டு புத்திஜீவியாக செயற்பட்டவர். சமூக மாற்றங்களுடன் ஒரு அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பினாரா? என்ற கேள்வியினை ஒருபுறம் வைத்துவிட்டு அவரது காத்திரமான செயற்பாடுகளினால் உந்தப்பட்ட மலையக புத்திஜீவிகளின் நிலை என்ன என்பதை பற்றி நோக்குவது பயனுள்ளதாக அமையும். மேலும் அவரின் மலையக சமூகம் பற்றிய நோக்கமும் செயற்பாடும் பரந்த அரசியல், சமூக, பண்பாட்டு தளத்தில் எத்தகைய அம்சங்களை பிரதிபலித்தது என்பதை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு மலையக புத்திஜீவிகளின் இரண்டக நிலையை அவதானிப்பது முக்கிய கடமையாகும்.
புத்திஜீவி என்பவர் சமூகத்தில் யார்? உடலுழைப்பை தவிர்த்து தனது மூளையினால் வேலைசெய்து அதனூடாக தனது வாழ்வியலை அமைத்துக்கொள்ளும் வர்க்கத்தினரை புத்திஜீவிகள் என பொதுவாக அழைப்பதுண்டு. ஆளும் வர்க்கத்திற்கு சார்பான கருத்தியலை உருவாக்கி கொடுப்பதும் புத்திஜீவிகளே. மறுபுறம் உழைப்பாளி மக்கள் நன்மைக்காகவும், சமூக மாற்றத்திற்காகவும் போராடுகின்ற குணங்களை கொண்டிருப்பவர்களாகவும் காணப்படுவர். சில வேளைகளில் சமூக மாற்றத்திற்கான சிந்தனைகளை, கருத்தியல்களை படைப்பாக்கம் செய்து அதனை உழைப்பாளர்கள் நடைமுறைப்படுத்துவதற்கு தூண்டுகோளாகவும் இருப்பர். இத்தாலியின் அந்தோனியா கிராம்ஸி புத்திஜீவிகளின் சமூகப்பார்வை கருத்துக்களை விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்துள்ளார். லத்தீன் அமெரிக்க நாடுகளின் உழைப்பாளர்களை கல்வியின் ஊடாக ஒரு மறுமலர்ச்சிக்கான சிந்தனைகளை வித்திட்ட பாவ்லோ ப்ரெய்ரேயின் சிந்தனைகள் மிகவும் ஆழமானவை, அகலத்தன்மை வாய்ந்தவை. இவர்களை போல பல்சமூக நோக்கம் கொண்ட புத்திஜீவிகள் தாம் வாழ்ந்த காலத்தில் தமது சமூகம், இருப்பு, அரசியல், பொருளாதாரம், கல்வி தொடர்பான சிந்தனைகளை உருவாக்கியுள்ளனர்.
இவ்வாறான உலக சமூகங்களின் புத்திஜீவிகளின் நிலை பற்றியும் அதன் செயன்முறை தர்க்கங்கள் ஊடாக மலையக புத்திஜீவிகளின் நிலையின் இரண்டக நிலைப்பற்றி விவாதிப்பது அவசியமாகும். அமரர் இர.சிவலிங்கத்தின் நினைவு நாட்களில் இவ்வாறான நிலைப்பற்றி சிந்திப்பதும் பேசுவதும் விவாதிப்பதும் மலையக சமூகம் பற்றியும் அதன் அக்கறைப் பற்றியும் பேசுபவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
மலையக தேசியம் பற்றி அறுபதுகளில் எழுந்த நிலைப்பாடு யதார்த்தமானவை. தோட்டக்காட்டான், கல்லத்தோணி என்ற நிலையிலிருந்து மலையக சமூகம் என்ற நிலையில் நோக்கும் ஒரு அரசியல் பரிணாமம் அறுபதுகளில் மேற்கிளம்பியவர்களால் முன்வைக்கப்பட்டு நகர்த்தப்பட்டது. மலையகம் என்பது ஓர் புவியியல் பிரதேசமாக மட்டுமன்றி ஒரு மக்கள் இனக்குழுமத்தின் வர்க்கப் பிரச்சினையாகவும் அதன் சாராம்சத்தின் ஒரு தேசிய இனவளர்ச்சிக்கான அடையாளமாகவும் முன்வைக்கப்பட்டது. மலையக மக்களின் போராட்டங்களின் ஊடாக மலையகம் என்ற தேசிய இனத்துக்கான வளர்ச்சிநிலை அமைந்தது. இத்தகைய சமூக கருத்தாளர்களின் நிலைப்பாட்டில் நின்றவர் இர.சிவலிங்கம்.
இத்தகைய நிலைப்பாட்டில் இத்தகைய மலையக புத்திஜீவிகள் உள்ளனரா? என்பது நோக்கத்தக்கது. மலையக மக்கள் என அழைப்பது பொருத்தமானதா? அல்லது இந்திய வம்சாவழியினர் என அழைப்பது பொருத்தமானதா? என வரையறுப்பதிலே குழப்பகரமான நிலையில் மலையக புத்திஜீவிகள் உள்ளனர்.
மலையக தேசியம் என அழைப்பதில் முற்போக்கான தன்மையினை பிரதிபலிப்பதாக இருந்தாலும் அதனை வர்க்க கண்ணோட்டத்தில் அணுகாமல் வெறும் இனவுணர்வால் உந்தப்பட்ட நிலையினை பிரதிபலிப்பது புத்திஜீவிகளின் அபத்தமாக உள்ளது. மறுபுறம் இந்திய ஆளும் வர்க்கத்துடன் சமரசம் செய்துக்கொண்டும் அவர்களின் அனுசரணையுடன் தங்களின் வர்க்க நிலையினை நிலைநிறுத்திக்கொள்வதற்காக இந்திய வம்சாவழியினர் என பாவிக்கும் புத்திஜீவிகளின் நிலை மோசமானது.
இந்தியா தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையினை இந்துத்துவ அடிப்படையில் நோக்கி சிந்திப்பதும் செயற்படுவதும் மேலாதிக்கத்தின் வினைப்பொருளே. இதன் அடிவேர்களை புரிந்துக்கொள்ளாத மலையக புத்திஜீவிகள் இந்திய வம்சாவழியினர் என அழைப்பது சரியென கூறும் முறையானது மலையக மக்களை மேலாண்மைவாதிகளுக்கு அடகு வைக்கும் ஒரு செயலாக அமையுமேயன்றி வேறு ஒன்றும் இருக்க முடியாது. மறுபுறம் பிற்போக்கான அரசில் பண்பாட்டு சீரழிவுக்குள் தள்ளி அதனை தனக்கு சார்பாக பாவிக்கும் இந்தியாவின் ஆளும் வர்க்கத்திற்கும் சேவகம் செய்யும் முறையாக இது அமையக்கூடும். இதனை மலையக புத்திஜீவிகள் ஒரு கருத்தியலாக வளர்த்தெடுப்பது எந்தளவுக்கு ஆரோக்கியமானது என்பது புரியவில்லை.
மற்றும் மலையக தேசிய இனம் என்ற நிலையில் அதன் வர்க்கக் கண்ணோட்டத்துடன் நிதானமாக அணுகாது வெறும் உணர்ச்சியாக பயன்படுத்தும் புத்திஜீவிகள் தனது அதிகாரத்தின் இருப்பு நிலைக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பது விளங்கிக் கொள்ள வேண்டும். மலையக மக்களின் சுயநிர்ணய உரிமை அதன் உள்ளடக்கம் பற்றி தங்களிடையே ஒருமித்த கருத்தாடல்களை நடத்துவதில் சுயநலபோக்கு மேம்பட்டு இருக்கும் போது உண்மையான மலையக இருப்புக்கான தேசியம் அர்த்தமற்றதாகிவிடுகின்றது. இதனை எந்தளவுக்கு இவர்கள் உள்வாங்கிக் கொண்டு செயற்படுகின்றனர் என்பது கேள்விக்குறியே. இதேவேளை மலையக மக்களை பின்தங்கிய பிரிவினராக அறிந்து அவர்களi விசேட இனமாக அறிவித்தது அதற்கென சலுகைகள் வழங்கப்படவேண்டும் என்ற கருத்து நிலையும் மலையக புத்திஜீவிகளிடமுள்ளது.
மலையக புத்திஜீவிகள் பதவிசார்ந்தும் அதிகாரம் சார்ந்தும் தொழிற்படுகின்றமை இன்னொரு பிரதான அம்சமாகவும் தங்களின் இருப்பை காப்பாற்றிக்கொள்வதற்காக நிறுவனத்திற்கு சேவகம் செய்வது போல நடிப்பதும் மறுபுறம் தனது அதிகார படிமுறையினை வைத்திருப்பது ஒரு வபை;பாடாக உள்ளது. தனது நிறுவனம் சார்ந்த தகைமையை தக்கவைத்துக்கொள்வதற்காக எந்த அருவருக்கத்தக்க அரசியல் தலைமைகளிடம் அடகு வைக்க தயங்காத அவர்களின் நிலை பரிதாபகரமானது. இன்னொன்று தனது அதிகாரத்தின் நிலைப்பாட்டால் நின்றுக்கொண்டும் தனது ஆதிக்க மனோபாவத்தை நிலைநிறுத்தும் தொழிற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுத்து தரிசிக்கப்படும். அல்லது மரியாதைக்குரியவர்களாக கௌரவத்துக்குரியவர்களாக மாறும் நிலையில் நின்றுக்கொண்டிருப்பவர்களாக இருக்கின்றமை இன்னொரு இரண்டக நிலையாகும்.
மக்களிடமிருந்து அந்நியப்படுத்தி தனக்குள் ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டு, தேவைப்படும் போது மலையக மக்கள் முன் பேசி தன் நிலையினை உயர்த்திக்கொள்ளும் மனோபாவம் இருப்பது கவனத்திற்குரியது. மலையக மக்களின் உண்மையான சம்பள உயர்வுப்போராட்டத்தில் பங்கெடுக்க அல்லது அது பற்றி பேசி அதன் கொள்கை உருவாக்கத்தில் நேர்மையான அணுகுமுறையினை பின்பற்ற முடியாதவர்கள் மலையக புத்திஜீவிகள். மலையகத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மேல்கொத்மலை திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டப்போது அதை மௌனமாக ஆதரித்தவர்கள் புத்திஜீவிகள். போராட்டத்தில் பங்கு கொண்ட புத்திஜீவிகள் முக்கியமானவர்கள் ஆனால் அத்திட்டம் சரியான திட்ட வரைபு கொடுத்து அதனை ஆதரித்த புத்திஜீகளை எவ்வாறு மலையக மக்களுக்கு நேர்மையான முகத்தை காட்டப்போகிறார்கள் என்பது முக்கிய கேள்வியாகும்.
கால காலமாக அடக்கியொடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்திலிருந்து மேற்விளம்பிய புத்திஜீவிகள் தனக்கு தேவையான சந்தர்ப்பங்களில் மலையகம், தேசியம் பற்றி பேசுவார்கள்,அக்கறை பற்றி பேசுவார்கள், சமூகம் பற்றி பேசுவார்கள் ஆரம் வம்சத்துடன் சமரசம் செய்து காட்டிக்கொடுப்பது வரலாறாக மலையக புத்திஜீவிகளின் நிலை காணப்படுகின்றது. தனது பதவிநிலைக்காக சிலரது காலைப்பிடிக்கவும் தயங்காத இவர்களை பதவி வந்தவுடன் அதிகார தனமும் ஆணவமும் உடனே தலைகணமும் வருவது மக்கள் விரோத நடவடிக்கையாகும். பண்பாட்டு தளத்தில் போலியான பிற்போக்குதனத்தை கடைப்பிடிக்கும் இவர்கள் செப்போடு படித்து உயர்கல்வியினை நோக்கி முன்னேர வேண்டும். ஆய்வு பணிகளில் ஈடுபட வேண்டும். ஆய்வு நடுநிலையாக இருக்க வேண்டும் என ஆலோசனை வழங்குபவர்களாக இருப்பது கவனத்திற்குரியது. கல்வியும் ஆய்வும் மக்களுக்குரியது. மக்கள் வாழ்வில் மாற்றங்கள் கல்வியினூடாக ஆய்வினூடாக முன்னேற முடியாமல் இருப்பின் அக்கல்வி, ஆய்வினால் என்ன பயன்?
ஒரு படித்த பரம்பரை மலையகத்தில் தோன்றியுள்ளமை ஆரோக்கியமான விடயமே. இவர்கள் சமூக அக்கறையில் சாதகமான விடயங்களை சாதிக்க முடியும். சிலர் சாதித்துள்ளனர். அறுபதுகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய மலையக புத்திஜீவிகள் சமூக மாற்றத்தை முன்னெடுப்பதற்கான பரந்ததனத்தை கொண்டிருந்தனர்.
அந்த வரிசையில் இர.சிவலிங்கம் முக்கியமானவர். அவரை தொடர்ந்து சமகால மலையக புத்திஜீவிகள் தனது புலமையின் ஆளும் வர்க்கங்களுக்காக பயன்படுத்துகின்றனரேயொழிய மலையக மக்களின் வாழ்வியல் இருப்பு நிலைக்காக தனது புலமையினை பயன்படுத்துவது மிகக்குறைவாகவும் விரல்விட்டு எண்ணக்கூடிய புத்திஜீவிகள் மலையக மக்களின் அக்கறையுடன் தொழிற்படுகின்றனர் என்ற வாதத்தையும் ஏற்றுக்கொள்கின்ற அதேவேளை அறுபதுகளில் எழுச்சியடைந்த மலையக சமூகத்திற்கு உரம்பாய்ச்சி புத்திஜீவிகள் போல சமகால புத்திஜீவிகள் தொழிற்படுகின்றனரா என்பது சிந்திக்க வேண்டியதாகும்.
மலையகத்தின் படித்தவர்கள் என்பவர்கள் செய்யும் மற்றொரு விடயம் என்னவெனில் தனக்கென ஒரு வட்டம் ஒரு கூட்டத்தை உருவாக்கிக் கொண்டு செயற்படுவதாகும். இது ஆரோக்கியமான விடயம் எனினும் மலையக மக்களின் வாழ்வியல், சமூக கூறுகளிலிருந்து அந்நியப்படுத்தப்பட்ட நிலையில் தொழிற்படுவது எந்தளவிற்கு சமூகத்திற்கு உதவும்?
போதியளவாகவும் உறுதியாகவும் ஒருமனப்பாடாகவும் கட்டமைத்து வாழநினைப்பது உண்மையான சமூக அக்கறையாக இருக்காது. வால்நிலையில் இருந்து பிறக்கும் கருத்துக்கள் ஆளுக்காள் வேறுபடுவது அவரவர்களின் வர்க்க நிலையைப் பொறுத்தது.
சமூக மாற்றத்திற்கான கருத்துக்களை முன்வைப்பது, விவாதிப்பது அதனை நடைமுறைப்படுத்துவதற்காக செயற்பட்டதை படித்தவர்கள் என்ற இந்த கூட்டம் அமைக்குமானால் அதன் சாராம்சத்தின் உயர்வான விடயம் இத்தகைய நிலைப்பாடுகள் மலையக புத்திஜீவிகளிடையே காணப்பட்டாலும் அது உதிரியான செயற்பாடாக அமைந்துள்ளதை இனங்காண வேண்டும். மலையக புத்திஜீவிகளின் வளர்ச்சி நிலையானது மலையக இருப்புநிலைப்பற்றி பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் வாய்ப்பாக இருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
ஒரு தேசிய இன குழுமத்திற்கான அடையாளங்களை செழுமைப்படுத்தப்பட்ட அதிதியாக இவர்கள் செயற்படுவது என்பதும் சிறந்த விடயமே. சமூக மாற்ற போராட்டங்களில் பங்குபற்றாது அதனை சார்ந்த கருத்தியலை உருவாக்குவதும் நடைப்படுத்தலை தூண்டுவதற்கான செயற்பாடுகளை ஒழுங்கமைப்பதற்கான தூண்டுகோளாக இருப்பவர்களும் பிற்போக்கான பாத்திரத்தை ஏற்கின்றனர்.
இத்தகைய மலையக சமூகத்தில் ஆங்காங்கே நிகழ்ந்து வந்தாலும் அதனை ஒழுங்குப்படுத்தல் தடைகளை உருவாக இலகு திறமை பாதகமான நிலையாகும். அவ்விடத்தில் மலோ சேதுஸ் சொன்ன விடயத்தை கவனத்தில் எடுக்கவேண்டியுள்ளது. “நமது படிப்பாளிகள் ஓரளவு முன்னேறியுள்ளனர். ஆனால் அவர்கள் அதில் திருப்தி அடையக்கூடாது. தொடர்ந்து தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.” இத்தகைய மாற்றமிக்க சார்பான உலக கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்டாலொழிய அவர்களின் படிப்பும் சிந்தனையும் யாருக்கும் உதவமாட்டாது. ஒரு அதிகார வர்க்கத்தின் குடைக்குள் தங்களை கட்டமைத்தும் அதன் வாயிலாக சிந்திப்பதும் மேலாண்மை திறனின் கருத்தியலை கொண்டுவந்து சேர்ப்பதும் மலையக புத்திஜீவிகளின் நிலை என்றால் மக்கட் சார்பான கருத்தியலுக்கு வலுசேர்க்கும் விடயங்கள் குறைந்துப்போகும் சாத்தியங்களே உள்ளன. பிற்போக்கு தனத்தை பிரதிபலிக்கும் மலையக சுயநல அரசியல் தன்மைகட்கு முட்டுக்கொடுத்து அது சரிந்துவிடாமல் பாதுகாத்து தங்கள் இருப்பு நிலையினை காப்பாற்றிக்கொள்ளும் சில மலையக புத்திஜீவிகளின் நிலை பரிதாபகரமாக முடியுமென்பது வரலாற்று உண்மையாகும். சிலர் வாய்பேசாமல் தனது அதிகார மைய நிலைமையினை உறுதிசெய்வதற்காக பம்பார்ந்து வேலை பார்ப்பதுமான நிலையில் தேவையேற்படும் போது சமூகம் பற்றி அதன் அக்கறை பற்றி கதைப்பதும் வர்க்க மேலாண்மையே. இத்தகைய கருத்து நிலைகளிலிருந்து மலையக புத்திஜீவிகள் கற்றுக்கொள்கின்றனரா? கற்றுக் கொண்டவற்றை நடைமுறைப்படுத்துகின்றனரா? தனது பண்பாட்டு வாழ்வியல் கோலங்களை சமூக மாற்றத்திற்காக வடிவமைத்துக்கொள்கின்றனரா? என்ற கேள்விகளுடன் இர.சிவலிங்கத்தின் நினைவுகளின் தாக்கம் உண்மையில் செழுமைப்பெற்றதாக இருக்க முடியும். மாற்றுக்கலாசாரத்திற்காக மலையக புத்திஜீவிகளின் பங்கு மலையகத்தில் மிகவும் முக்கியமானது. மக்கள் திரளின் பொது அறிவின் எதிர்ப்பும் கூறுகளை ஆளும் வர்க்க சார்பான புத்திஜீவிகளின் கருத்திலிருந்து பிரித்தெடுத்து பல்வேறு வகைகளில் போர்க்குணம் மிக்க படையொன்றை உருவாக்குவதற்கும் சிந்திப்பதற்கும் தூண்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது காலத்தின் தேவையாகும். இதனை மலையக புத்திஜீவிகள் புரிந்துக்கொள்ளும் போதே இர.சிவலிங்கத்தின் நினைவுகளை மீட்டெடுப்பதில் அர்த்தமுள்ளதாக அமையமுடியும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...