Headlines News :
முகப்பு » » ‘மலையக மக்களின் வாழ்வியல் : மனித உரிமைகள் நோக்கு’ நினைவுப் பேருரை நிகழ்வு - மல்லியப்புசந்தி திலகர்

‘மலையக மக்களின் வாழ்வியல் : மனித உரிமைகள் நோக்கு’ நினைவுப் பேருரை நிகழ்வு - மல்லியப்புசந்தி திலகர்இர.சிவலிங்கம் ஞாபகார்த்த குழுவின் 15வது நினைவுப் பேருரை ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி மண்டபத்திலே கடந்த 7-09-2014 அன்று நடைபெற்றது. ஆசிரியர் செந்தில்குமாரின் தமிழ்மொழி வாழ்த்துப்பாவுடன் நிகழ்வுகள் ஆரம்பமாயின. அமரர்களான இர.சிவலி;ங்கம் திருச்செந்தூரன் மற்றும் அண்மையில் மறைந்த சாரல்நாடன் ஆகியோரின் உருவப்படத்துக்கு முறையே தீபம்ஸ் சிவலிங்கம், விஜயசிங்,  திரு.குமாரவேல் ஆகியோர் ஈகைச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தினர். மறைந்த மூன்று ஆளுமைகளுக்குமாக சபையோர் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்
வரவேற்புரை வழங்கிய ஹைலன்ஸ் கல்லூரி அதிபர் எஸ்.விஜயசிங்கம் அவர்கள் இர.சிவலிங்கம் மற்றும் திருச்செந்தூரன் ஆகியோரது ஆளுமை, கல்லூரிக்கும் சமூகத்துக்குமான பங்களிப்புகள் குறித்து நிதானமாக உரையாற்றினார். சதக்கணக்கில் பணம் சேர்த்து பாடசாலைக் கட்டிடத்தை அவர்கள் நிர்மாணித்ததையும் இர.சிவலிங்கம் அவர்கள் கல்வியதிகாரியாக பணியாற்றிய காலத்தில் அரசாங்கத்துடன் பேசி பெற்றுக்கொண்ட நிதியின் ஊடாக இன்றைய பிரதான கட்டடத்தினை பூர்த்தி செய்தமையையும் நினைவு கூர்ந்தார். கடந்த 15 வருடங்களாக ஆண்டுதோறும் அவரின் நினைவாக ஞாபகார்;;த்த உரை நிகழ்வை நடாத்திவரும் அவர்களது மாணவர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள் என குறிப்பிட்டார்.

தலைமையுரையாற்றிய திரு.எம்.வாமதேவன், கடந்த பதினைந்து ஆண்டுகளாக நினைவுப்பேருரை நிகழ்வுகளை நடாத்திவரும் எமது குழுவின் சார்பாக ஆறாவது தடவையாக ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியிலே இன்று நடைபெறுகிறது. இதில் மூன்றாவது தடவையாக மலையக பெண் ஆளுமை ஒருவர் இன்று நினைவுப் பேருரையாற்றுகின்றார். இம்முறை இர.சிவலிங்கம், திருச்செந்தூரன் ஆகியோருக்கு மேலதிகமாக அண்மையில் மறைந்த சாரல்நாடன் அவர்களுக்கான ஒரு அஞ்சலியும் நினைவுப்பரவலும் செய்வதற்கு எமது குழு தீர்மானித்தது. காரணம், சாரல் நாடன் அவர்கள் இர.சிவலிங்;கம் அவர்களின் மிக முக்கியமான மாணாக்கர்களில் ஒருவர். அவர் பல்கலைக்கல்வி வாய்ப்பை பெறாதபோதும் 60களில் ஹைலன்ஸ் கல்லூரியில் இருந்து பல்கலைக்கழக புதுமுக வகுப்பிற்கு தெரிவான முதல் மாணவனாவார். இர.சிவலிங்கம் அவர்களின் செல்வாக்கிற்கு அதிகம் உட்பட்டவராக சாரல்நாடன் திகழ்ந்தார். பல்கலைக்கழகம் சென்று தொழில் ரீதியான ஆளுமைகளாக வெளிப்படும் அதேவேளை அவ்வாறில்லாது வவேறு தொழில்களைச் செய்து கொண்டு கலை, இலக்கியம் மற்றும் சமூக செயற்பாடுகளில் அறியப்பட்ட ஆளுமைகளாகவும் ஹைலன்ஸ் கல்லூரி மாணவர்கள் திகழ்கிறார்கள். அந்த வரிசையில் சாரல்நாடன், மு.சிவலிங்கம் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இர.சிவலிங்கம் திருச்செந்தூரன் போன்ற ஆசிரியர்கள் இந்தத் துறைகளில் மாணவர்களை ஊக்குவித்தார்கள். ஆனால் இன்று மலையகத்தில் அதிகளவான பல்கலைக்கழக அனுமதியைப் பெறும் பாடசாலையாக ஹைலன்ஸ் விளங்குகின்ற போதும் கலை, இலக்கிய பண்பாட்டுத் துறைகளில் மாணவர்கள் வெளிப்படுவது குறைவாக இருப்பதுபோல் தெரிகின்றது. இங்கே கலந்துகொண்டிருக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை அதனை பறைசாற்றுகின்றது. இந்தக் குறை நிவர்த்தி செய்யப்படவேண்டும் என பழைய மாணவன் என்ற முறையில் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

நினைவுப் பேருரையாளரை அறிமுகப்படுத்தி உரையாற்றிய பேராசிரியர். தை.தனராஜ் எமது குழுவினரால் ஒழுங்கு செய்யப்படும் நினைவுப்பேருரைகளையும் இதுவரை நடாத்தப்பட்ட அந்த கட்டுரைப் போட்டிகளில் பரிசுபெற்ற கட்டுரைகளையும் நூலாக்குவதிலும் நாம் அக்கறையுடன் செற்பட்டு வருகி;றுNhம். அண்மைய ஆண்டுகளில் மலையக ஆய்வுத்துறையில் இளம் சந்ததியினரை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எமது நினைவுப்பேருரைகளில் இளையவர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறோம். அந்தவகையில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத்துறைத் தலைவராகவும் சில்காலம் பணியாற்றிய முதுநிலை விரிவுரையாளரான யசோதரா கதிர்காமத்தம்பி அவர்களை இம்முறை நினைவுப்பேருரையாற்ற தெரிவுசெய்துள்ளோம். இவர், சட்டத்துறையில் முதுமாணிப்பட்டம் பெற்றுள்ளதோடு பல்வேறு ஆய்வு கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார் என குறிப்பிட்டார்.

‘மலையக மக்களின் வாழ்வியல் : மனித உரிமைகள் நோக்கு’ எனும் தலைப்பில் முதுநிலை விரிவுiராளர் யசோதரா கதிர்காமத்தம்பி நினைவுப் பேருரையாற்றினார். மனித உரிமைகள் தொடர்பிலான நோக்குகள் பெருகிவரும் இந்த காலகட்டத்தில் இந்திய வம்சாவளி தமிழ் மக்களது வாழ்வியல் குறித்து மனித உரிமை கண்ணோட்டத்தில் உரையாற்றுவது எனக்கு சிறந்த வாய்ப்பாகும். மனித உரிமைகள் எனும் கருத்தாடல் மேற்கத்தியம் சார்ந்தது என்றாலும் இன்று உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ள கருத்தியலாக மாறியுள்ளது. ஐ.நா உறுப்புரிமைபெற்றுள்ள நாடுகள் அங்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மனித உரிமைகள் தொடர்பான ஒழுங்குகளை கடைபிடிக்கவேண்டிய கடப்பாடு உள்ளது. இலங்கைக்கும் அந்த கடப்பாடு உள்ளது. எனவே இலங்கையில் வாழும் சிறுபான்மை இனமான இந்திய வம்சாவளியினர் தமது உரிமைகளை வென்றெடுக்க இந்த மனித உரிமைகள் தொடர்பான புரிதல் அவசியமாகிறது. குடியியல், அரசியல் உரிமைகள் பொருளாதார சமூக மற்றும் கலாசார உரிமைகள் தொழிலுரிமை வீட்டுரிமை உள்ளிட்ட பல உரிமைகளை இந்திய வம்சாவளி மக்கள் பூரணமாக அடைவதற்கான ஏதுநிலைகள் குறித்து சர்வதேச உள்ளுர் சட்டங்களையும் நியமங்களையும் எடுத்துக்காட்டிய காத்திரமான உரையாக அவரது உரை அமைந்தது. அவரது உரை நூலுருவில் பகிரந்தளிக்கப்பட்டது. ஆனாலும், ‘மலையக மக்களின் வாழ்வியல் : மனித உரிமைகள் நோக்கு’ தலைப்பிடப்பட்ட நிலையில் உரையாளர் மலையக மக்களை இந்திய வம்சாவளியினர் என விளிப்பதில் மிகக் கவனமாக இருந்ததை அவதானிக்க முடிந்தது. அச்சிடப்பட்ட பிரதியிலும் அதனை அவதானிக்கலாம். இர.சிவலிங்கம் போன்ற மலையகக் கருத்துருவாக்க சிந்தனையாளர்களின் நினைவுப் பேருரையில் இளம்சந்ததி ஆய்வாளரொருவர் ‘மலையகம்’ என்பதனை திட்டமிட்டு தவிர்த்து ‘இந்தியவம்சாவளி’ என வலிந்து திணிப்பு செய்திருந்தமை  உரையை செவிமடுக்கும்போது ஒரு நெருடலை ஏற்படுத்துவதாகவே அமைந்திருந்தது. ஞாபகார்த்த குழுவினரால் உரையாளர் பொன்னாடையிட்டு கௌரவிக்கப்பட்டார். குழுவின் உறுப்பினர் சி.நவரட்ண அவர்களும் இதில் இணைந்துகொண்டார்.
சாரல் நாடன் அவர்கள் பற்றிய நினைவுப்பரவல் உரையாற்றிய பத்தனை, ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியின் உப பீடாதிபதி வ.செல்வராஜா, சாரல்நாடன் என்பவரை அவரது நல்லையா எனும் இயற்பெயரில் பலரும் அறியமாட்டார்கள். மார்க்சிம் கோர்க்கி முதல்  பாரதி, மஹாகவி, சாருமதி, தமிழோவியன், குறிஞ்சித் தென்னவன் என பல ஆளுமைகள் புனைப்பெயரில் வாழ்ந்தவர்கள். பேராசிரியர் கைலாசபதியும் புனைபெயரில் எழுதினார். அது பற்றிய அவரிடம் கேட்டபோது மறைந்து வாழ்தல் இலகுவான விடயமல்ல என்று குறிப்பிட்டுள்ளார். சாரல்நாடன் சங்க இலக்கியத்தில் அதிக நாட்டம் உள்ளவர். அவரது புனைகதைகளில் வரும்; சொல்லாடல்களில் இதனை அவதானிக்கலாம். அங்கிருந்தே இந்த சாரல்நாடன் எனும் இலக்கிய பெயரையும் அவர் தேரந்தெடுத்துக்கொண்டுள்ளார். சாரல்நாடனின் பெயர் மலையக புனைவு மற்றும் ஆய்வு இலக்கிய வரலாற்றில் தவிர்க்கப்படமுடியாத ஒன்று. அவரது படைப்புகள், ஆய்வுகள் குறித்து விமர்சன ரீதியான ஆக்கபூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும் என தெரிவித்தார்.

சிறந்த சிறுகதைக்காக இவ்வாண்டுக்கான தேசிய சாகித்திய விருதினை வென்ற இர.சிவலிங்கம் அவர்களின் மாணவரான எழுத்தாளர் மு.சிவலிங்கம் தனக்கேயுரிய நகைச்சுவை கலந்து நன்றியுரை வழங்கினார். ஆசிரியர் அகிலன் நிகழ்ச்சிகளை நேர்த்தியாக தொகுத்து வழங்கினார். மலையகம் பற்றிய அக்கறைகொண்டவர்கள் மலையகம் எனும் சிந்தனையில் மூழ்கியிருந்த மூன்று மணிநேரமாக விழா இனிதே நிறைவடைந்தது.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates