Headlines News :
முகப்பு » » தொழிலாளர்களின் தொழில் ரீதியான பிரச்சினைக்கு தீர்வு தேவை - ஏ.டி. குரு

தொழிலாளர்களின் தொழில் ரீதியான பிரச்சினைக்கு தீர்வு தேவை - ஏ.டி. குரு


தொழிலாளர்களின் தொழில் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு தேவை மலையக சமூகம் எவ்வாறான நிலை மாற்றத்தை பெற்றாலும் இன்னும் பல வருடங்களுக்கு பெருந்தோட்டத் தொழிற்றுறையை நம்பி எம்மவர்கள் இருக்கத்தான் போகின்றார்கள். 

நாட்டின் பொருளாதார த் தில் முதுகெலும்பாக விளங்கிவரும் மலை யக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அண்மைக் காலமாக தொழில் ரீதியாக பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். பெருந்தோட்டத் தேயிலை உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் அந்நிய செலாவணி வருவாயின் ஒரு சதவீத வரப்பிரசாதத்தைக் கூட அனுபவித்து இன்புற முடியாதளவிற்கு இன்றைய காலகட்டத்தில் பெருந்தோட்டத்துறை வீழ்ச்சி கண்டு வருகின்றது.
தோட்டத்தொழிலாளர்களின் ஈராண்டு கால கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் குறித்த காலப் பகுதியில் மாத்திரம் தொழிற்சங்கங்கள் வீரவசனம் பேசுகின்றன. தொழி லாளர்களின் பங்காளர்களாக காட்டிக் கொள்ள முனையும் இத்தொழிற்சங்கங்கள் முக்கிய பிரச்சினைகளின் போது மூன்றாந்தரப்பினரை போல வேடிக்கை பார்ப்பது மலையகத்தில் வாடிக்கையான ஒரு விடயமாகியுள்ளது.

இலங்கையில் கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுக்கு மேலான வரலாற்று கலை கலாசார பாரம்பரிய பின்னணிகளுடன் வாழ்ந்து வரும் மலையக தொழிலாளர் சமூகத்தின் பல அடிப்படை பிரச்சினைகள் இன்னும் தேசிய மயப்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக மலையகத் தமிழர்களின் பூர்வீக நாடான இந்தியாவில் கூட மலையக சமூகத்தவர் குறித்த சரியான வியாக்கியானங்கள் இல்லை என்றே கூற வேண்டும். மலையக மக்கள் நாட்டில் வாழும் ஏனைய சமூகத்தவருடன் ஒப்பிடுகையில் இன்னும் வளர்ச்சி காண வேண்டிய நிலையில் உள்ளனர். அந்நியர் ஆதிக்கத்தின் போது பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்காக கொண்டு வர ப்பட்ட எம்மவர்கள் இன்றும் பெருந்தோட்டங்களையே வாழ்வாதாரமாக நம்பி இருக்கின்றனர்.

மலையக பெருந்தோட்டங்களை தனியார் கம்பனி நிர்வாகங்கள் பொறுப்பேற்ற கால ப்பகுதியில் இருந்து பெருந்தோட்டத்துறை யின் வீழ்ச்சி ஆரம்பமானது என்று கூறலாம். அப்போது முதல்தான் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள கூட்டு ஒப்பந்தம் என்ற விடயம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இக்கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களை தொழில் ரீதியாக அழுத்தம் கொடுக்க கூடிய பல அம்சங்களும் உள்வாங்கப்பட்டன. சாதக விடயங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் எவ்வளவு உள்ளனவோ அவ்வளவுக்கு அவ்வளவு பாதகமான விடயங்களும் உள்ளடங்கியுள்ளன.

பெருந்தோட்டங்களை குத்தகை அடிப்படையில் நிர்வாகம் செய்துவரும் தனியார் கம்பனிகளில் பல முழு இலாபத்தை கரு த்திற்கொண்டே செயற்பட்டு வருகின்றன. இவ்விலாப நோக்கங்கள் காரணமாக குறைந்த செலவில் கூடுதல் வருமானத்தை அல்லது இலாபத்தை ஈட்டிக் கொள்ளும் நடவடிக்கைகளை அவை பெருந்தோட்டங்களில் செயற்படுத்தி வருகின்றன.
கம்பனி நிர்வாகங்களின் இத்தகைய நடவடிக்கையால் தோட்டங்களில் தொழிலா ளர் குறைப்பு, பெண் தொழிலாளர்களை கடினமான வேலைகளில் ஈடுபடுத்துதல், வேலை நாட்களை குறைத்து வழங்குதல் மற்றும் ஏனைய தோட்டப் பிரிவுகளில் தொழில் புரியும் தொழிலாளர்களை ஒட்டு மொத்தமாக பணியில் இணைத்து குறித்த வேலையை குறுகிய காலத்தில் நிறைவு செய்தல், நாட்சம்பளத்திற்கு தொழிலாளர்களை பணிக்கமர்த்தல், ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் கொழுந்து பறிக்க அனுமதித்தல் போன்றவற்றை முன்னெடுக்கின்றன.

இவ்வாறான காரணங்களால் பெருந்தோட்டத்துறை வருமானத்தை மாத்திரமே நம்பி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலா ளர்களின் பொருளாதாரமும் வாழ்வாதார மும் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. தோட் டத் தொழிலாளர்களுக்கு மாதாந்த அடிப்படை சம்பளம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோஷம் காலங்காலமாக எழுப்பப்பட்டு வந்தாலும் இவ்விடயத்தை செயலுரு பெறச் செய்வதற்கான எவ்வித ஆக்கப்பூர்வமான முயற்சிகளும் தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் இல்லை.

பெருந்தோட்டங்களில் அண்மைக்காலமாக (10 வருட காலப்பகுதி) தேயிலை செய்கை நலிவடைந்து வருகின்றது. தேயிலைக்கு மாற்றீடாக தோட்டங்களில் இறப் பர், கறுவா, கமுகு போன்ற செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊவா வின் பெரும்பாலான தோட்டங்களில் இறப் பர் செய்கை மிக வேகமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக தோட்டங்களின் தேயிலை செய்கை முக்கியத்துவமிழந்து வரும் நிலைமை தோன்றியுள்ளது.

தேயிலைச் செய்கை வீழ்ச்சியுறுவதை காரணங்காட்டியும் வருவாய் செலவு போன்ற இதர விடயங்களை காரணங்காட்டியும் அதிகமான தோட்டங்களில் தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. அவற்றை மீள புதுப்பித்து இயங்கச் செய்யும் முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறான கால கட்டத்தில் தோட்டங்கள் குத்தகை அடிப்படையில் கம்பனி நிர்வாகங்களின் கீழ் கொண்டுவரப்பட்டன.

இலாபத்தை மட்டும் குறியாகக் கொண்டு செயற்பட்டு வரும் கம்பனிகள் தாம் தோட்டங்களை பொறுப்பேற்ற காலப்பகுதியிலிருந்து இன்று வரை மலையக தோட்டங்க ளில் 50 இற்கும் குறையாத தேயிலை தொழிற்சாலைகளை மூடியுள்ளன. இவ்வாறு தொழிற்சாலைகள் மூடப்படும் போது தேயிலை தொழிற்சாலைக்கேற்ற பச்சை கொழுந்து நிறையளவு இல்லை. குறைந்தளவு கொழுந்தை தூளாக மாற்றுவதற்கான உற்பத்தி செலவு அதிகம் போன்ற காரணங் கள் கூறப்படுகின்றன.

ஒரே கம்பனியின் கீழ் அடுத்தடுத்த தோட்டங்கள் நிர்வகிக்கப்படுவதால் குறித்த ஒரு தொழிற்சாலையை மாத்திரம் பயன்படுத்தி தேயிலை தூள் உற்பத்தியை மேற்கொள்ள கம்பனிகள் ஆர்வங்காட்டி அதில் அதிக இலாபத்தையும் ஈட்டி வருகின்றன. ஊவா மாகாணத்தில் ஒரு பெருந்தோட்டக் கம்பனி பதுளை மாவட்டத்தில் பல தேயிலை தொழிற்சாலைகளை மேற்கூறிய விடயங்களை காரணங்காட்டி மூடியுள்ளது. அண்மையில் ஹாலி – எல பகுதியிலுள்ள ஒரு தோட்டத் தேயிலை தொழிற்சாலையை மீள் திறக்க தொழிலாளர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்த போராட்டமும் தோல்வி கண்டுள்ளது.

தோட்டங்களில் பெருவாரியாக தேயிலை தொழிற்சாலைகள் மூடப்படுவதால் தொழிற்சாலை உத்தியோகத்தர்களும் தொழிற்சாலை யில் கடமையாற்றிய தொழிலாளர்களும் வேலையிழக்க வேண்டி வருகின்றது.

பறிக்கப்பட்ட பச்சை கொழுந்து நீண்ட தூரத்திற்கு கொண்டு செல்லப்படுவதால் அவை வாடி உற்பத்திக்கு தகுதியற்றதென திருப்பியனுப்பப்படும் சந்தர்ப்பங்களும் உருவாகின்றன. பெருந்தோட்டத்துறையில் இயங்கி வரும் தேயிலை தொழிற்சாலை களை குறுகிய கால இலாபம் கருதி கம்ப னிகள் மூடிவரும் நடவடிக்கையை தடுக்க இனியாவது தொழிற்சங்கங்கள் ஆக்கப்பூர்வ மான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மலையக சமூகம் எவ்வாறான நிலை மாற்றத்தை பெற்றாலும் இன்னும் பல வரு டங்களுக்கு பெருந்தோட்டத் தொழிற்து றையை நம்பி எம்மவர்கள் இருக்கத்தான் போகின்றார்கள். சமூகம் சார்ந்த பேரம் பேசும் சக்திகளாக தம்மை தேசிய சர்வதேச ரீதியில் காட்டிக் கொள்ள முனையும் தொழி ற்சங்கங்கள் தொழிலாளர்களின் நியாய மான தொழில்சார் உரிமைகளையும் சலுகை களையும் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். இவ்விடயத்தில் தமது சுய கௌரவம் கருதிய காட்டிக் கொடுப்பில் அவர்கள் ஈடுபட்டால், நீண்டகால நோக்கில் இவர்கள் சமூகத்தை காட்டிக் கொடுத்த குற்றவாளிகளாக பார்க்கப்படுவது நிச்சயம்.

நன்றி - வீரகேசரி

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates