பலரும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்த பொதுபல சேனாவின் (BBS) மாநாடு கணிசமான எதிர்ப்புகளின் மத்தியில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மாநாடு முடிவதற்கு முன்னரும் சரி முடிந்ததன் பின்னரும் சரி சலசலப்பு இன்னமும் ஓயவில்லை. ஆனால் அதன் எதிரொலியும் அதன் தாக்கமும் சிறுபான்மை இனங்களின் உரிமைக்கும், அமைதிக்கும் நிச்சயம் தொடர்ந்தும் அச்சுறுத்தலாகவே இருக்கும்.
மாநாடு தமக்கு பெரும் வெற்றி என்று BBS கூறிக்கொண்டாலும். அவர்கள் எதிர்பார்த்த வெற்றியை அது தரவில்லை என்று அடித்துக்கூறலாம்.
7000 பிக்குமார் மாநாட்டில் கலந்துகொள்வதாக ஊடகங்களிடம் பெருமிதமாக அறிவித்திருந்தார் ஞானசார ஆனால் மாநாடு முடிந்ததும். 5000 பேர் கலந்துகொண்டதாக அறிவித்தார். ஊடக செய்திகளின் படி ஏறத்தாழ 3500 பேர் அளவில் கலந்து கொண்டதாக வெளியாகியிருந்தது. சுகததாச உள்ளரங்கில் 5000 பேருக்கு மட்டுமே ஆசனங்கள் உள்ளன. ஆனால் மாநாட்டின் போது ஏராளமான இடங்கள் காலியாகவே இருந்தன. வந்திருந்தவர்களில் சாதாரண பங்குபற்றுனர்களை விட்டுவிட்டு கணித்தால் கூட பௌத்த பிக்குகளின் எண்ணிக்கை அதிகபட்சம் 2500ஐயும் தாண்டாது என்றே கூறலாம்.
அரசாங்கத்தை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அது வெற்றியளிக்கவில்லை. குறைந்தபட்சம் “ஜாதிக ஹெல உறுமய”வை சேர்ந்த பிக்குமார் கூட கலந்துகொள்ளவில்லை.
அதனை இன்னொருபக்கம் சாதகமாக அமைத்துக்கொண்டது BBS. அதாவது ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தை சாடுவதற்கு ஒரு மேடையாக பயன்படுத்தினர். அதற்கூடாக தாம் சுயாதீனமான கொள்கைப்பிடிப்புள்ள உறுதியான அணி என காட்டிக்கொள்ளவே எத்தனித்தனர்.
2010ஆம் ஆண்டு சரத் பொன்சேகாவின் கைதை எதிர்த்து மகாசங்கத்தினர் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக கோரிக்கைவிடுத்து பலனின்றி மகா சங்க மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்ய முயற்சித்தனர். ஆனால் மகாநாயக்கர்களின் ஒரு தரப்பினரை பயன்படுத்தி அதனை நடத்த விடாதபடி செய்தது அரசு. ஆனால் இன்று BBS இனவாத செயல்திட்டத்தை பிரகடனப்படுத்துவதற்காக நடத்தும் மாநாட்டை நடத்திமுடிக்க ஆதரவளித்தது அரசு.
விறாத்துவின் பாத்திரம்
கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கையில் முனைப்பு பெற்றிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாத நடவடிக்கைகளுக்கு தத்துவார்த்த பலத்தை கொடுத்ததும் விறாத்து தான். BBS க்கு முன்னுதாரண தலைவராக விளங்குவதும் விறாத்து தான்.
மியான்மாரை சேர்ந்த 969 என்கிற அமைப்பின் ஸ்தாபகரும் அதன் தலைவருமான அஸின் விறாத்து என்கிற பௌத்த துறவி இன்று உலகம் முழுவதும் பிரபலமான பௌத்த பயங்கரவாதி. சென்ற வருடம் TIME சஞ்சிகை தனது பிரதான அட்டைப்படக் கட்டுரையாக “பௌத்த பயங்கரவாதத்தின் முகம்” «The Face of Buddhist Terror» என்கிற கட்டுரையை வெளியிட்டது. அந்தக் கட்டுரையில் விறாத்து ஒரு பௌத்த பின்லாடன் என்று வர்ணித்திருந்தது. அந்த சஞ்சிகையின் 400 பிரதிகளை இலங்கை சுங்கத்திணைக்களம் தடை செய்தது. 30 ஜூன் ஆங்கில ஊடகங்கள் பல வெயிட்ட செய்தியின்படி பொதுபல சேனாவின் வேண்டுகோளுக்கமைய அது தடைசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
டைம்ஸ் கட்டுரையைத் தொடர்ந்து பர்மிய ஜனாதிபதி தைய்ன் சைன் (Thein Sein) விறாத்துவுக்கு பூரண பாதுகாப்பு வழங்குவதாக அறிவித்திருந்தார். 969 இயக்கத்தை பாதுகாப்பதற்கூடாக பௌத்த மத நலன்களை தாம் பாதுகாப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை கொன்றொழிப்பதற்கு காரணமான இந்த 969 இயக்கத்துக்கும் பொதுபல சேனாவுக்கும் உள்ள ஒற்றுமைகள் வெறும் தற்செயலல்ல. அவற்றின் இலக்கு, அரசியல் முழக்கம், அமைப்பு வடிவம், கொள்கைபரப்பு முறைகள், வன்முறை வடிவங்கள் என அனைத்தும் சிறிதும் மாற்றமில்லாத ஒற்றுமை உண்டு.
மியான்மாரில் பௌத்தர்களின் நிலம் பறிபோகிறது, முஸ்லிம்களுடன் கலப்புமணம் புரிந்து பௌத்தர்களின் தூய்மை கெடுகிறது. முஸ்லிம்கள் பல்கிப் பெறுகிறார்கள். இஸ்லாமிய கடைகளில் பொருட்கள் வாங்குவதை புறக்கணியுங்கள். தேசத்தின் உடனடி பிரச்சினை மதத்தையும், இனத்தையும் காப்பதே என பிரச்சாரம் செய்தார்கள். துண்டுபிரசுரம் கொடுத்தார்கள்.
முஸ்லிம் அமைப்புகள் உட்படசில ஜனநாயக அமைப்புகள் விறாத்துவின் விசாவை ரத்து செய்யும்படி கோரியும் கூட விறாத்து நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டார்.
மாநாட்டில் விறாத்துவின் உரையில் முஸ்லிம் முஸ்லிம் அடிப்படைவாதத்தை தோற்கடிப்பது குறித்து உரையாற்றினார்.
விறாத்துவுக்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரே பாதுகாப்பளித்து வருகின்ற செய்தியும் படங்களும் சிங்கள ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
BBS – 969 ஓப்பந்தம்
செப்டம்பர் 30 அன்று 969 - BBS கூட்டு ஒப்பந்தங்கள் இரண்டை இன்று BBS தலைமையகத்தில் வைத்து செய்துகொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஞானசாரர் கடந்த மார்ச் மாதம் 4 ஆம் திகதியன்று மியான்மார் சென்று செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி 969 இயக்கத்தின் வலைப்பின்னலில் இணைந்துகொண்டதாக அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அப்போது செய்தி வெளியிடப்பட்டது.
இந்த புது ஒப்பந்தங்களின் படி உலக பௌத்த மறுமலர்ச்சிக்கானதும் அடிப்படைவாத முயற்சிகளை தோற்கடிப்பதற்கான பணியில் ஒன்றிணைந்து செயல்படுவதென்றும் சொல்லப்பட்டாலும் இருவரதும் கடந்த கால, எதிர்கால செயற்திட்டங்களும் தெளிவானவை. அது ஏனைய மதங்களுக்கு எதிரானது மட்டுமல்ல. குறிப்பாக முஸ்லிம்களின் மீதான அழித்தொழிப்பை உள்ளடக்கமாக கொண்டது.
ஞானசாரவின் பிறந்த தினமான மார்ச் 4 (04.03.1975 பிறப்பு) அன்று மியன்மாரில் ஒப்பந்தத்தை பரிசாக வழங்கினார் விறாத்து. கடந்த செப்டெம்பர் 28 மாநாட்டின் விறாத்துவுக்கு பிறந்தநாள் என்று மேடையில் அறிவித்து அவருக்கு பரிசும் வழங்கப்பட்டது. அதனை விறாத்து பெற்றுக்கொண்டு போனார். ஆனால் விறாத்து 10.07.1968 பிறந்ததாக பல பதிவுகளில் தெரிகிறது. இதில் எது உண்மை.
இவர்கள் பிறந்தநாட்களில் தான் ஊருக்கு உலைவைக்க திட்டமிடுவார்களோ. "எமகண்டத்தில்" பிறந்திருப்பார்களோ...
எப்படியோ இந்த ஒப்பந்தம் நன்மைக்கல்ல... பௌத்தத்தின் பேரால் மற்றவர் குடி கெடுக்கும் ஒப்பந்தம் என்பது நிச்சயம்.
JHU vs BBS
கடந்த ஒன்றரை தசாப்தகாலமாக தென்னிலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்துக்கு நேரடியாக ஜாதிக ஹெல உறுமய கட்சி (JHU) தலைமை தாங்கி வந்தது. ஆரம்பத்தில் சிங்கள பௌத்த பேரினவாத கருத்தாக்கத்தை ஆழ விதைப்பதிலும், பரப்புவதிலும் அதிக கவனம் செலுத்தினார்கள். பாராளுமன்ற தேர்தலில் கணிசமான ஆசனங்களைப் பெற்று ஆளும்கட்சியின் அங்கமாக ஆனதன் பின்னர் அடக்கி வாசிக்கத் தொடங்கினர். அமைச்சு பதவிகளுடன் கனவான்களைப்போல அவர்கள் நடந்துகொள்ள முற்பட்டாலும் அவர்களின் சிங்கள பௌத்த வாக்கு வங்கிக்குப் போட்டியாக ஜே.வி.பியும் ஆளும் கட்சியுமே இருந்தது.
ஜே.வி.பி. சமீபகாலமாக தமது இனவாதபோக்கில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்திய வேளை ஏனைய சிறிய இனவாத அமைப்புகளை விஞ்சிக்கொண்டு BBS முன்னணிக்கு வந்தது. ஆரம்பத்தில் JHU மற்றும் BBS ஆகியனவற்றின் அடிப்படை நிகழ்ச்சிநிரலில் மாற்றம் இருக்கவில்லை. எனவே தமது பொது இலக்கான ஏனைய இனங்களின் உரிமைகளை நசுக்குவது என்பதில் ஓரணியில் இருந்தனர்.
BBS இன் இனவாதத்தை தமிழ், முஸ்லிம் தரப்பு எதிர்த்து நின்ற தருணங்களில் BBS, சிங்கள ராவய, ராவணா பலய என்பவற்றுக்கு ஆதரவாக JHU பகிரங்கமாக குரல் கொடுத்தது. குறிப்பாக JHU வின் செயலாளார் சம்பிக்க ரணவக்க பல சந்தர்ப்பங்களில் BBS இனவாத கட்சியல்ல என்று ஊடகங்களிடம் வக்காலத்து வாங்கினார். ஆனாலும் எதிரிக்கு எதிரான விடயத்தில் மாத்திரம் ஒன்றிணைந்த அவர்களால் பொது வேலைத்திட்டத்துக்குள் ஒன்றிணைய முடியவில்லை. அதற்கு அடிப்படை காரணம் இரு சக்திகளும் இப்போது பொது அரசியலில் போட்டி தரப்பாக ஆகிக்கொண்டிருப்பது தான்.
மாடுகளைக் கொல்வதை எதிர்த்து கடந்த வருடம் மே 24 வெசாக் பௌர்ணமி அன்று கண்டியில் தற்கொலை செய்துகொண்ட இந்திரரத்ன தேரர் JHU இலிருந்து நீக்கப்பட்டவர். அவர் கட்சியின் உள்விடயங்களை BBS க்கு காட்டிக்கொடுத்தார் என்கிற குற்றச்சாட்டே அவரது நீக்கத்துக்கு காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பின்னணியில் தான் BBS நடத்திய மாநாட்டுக்கு ஆதரவு வழங்குவதையும், அதில் கலந்துகொள்வதையும் தவிர்த்துகொண்டது JHU. எதிர்வரும் தேர்தல்களில் பொதுபல சேனா களத்தில் இறங்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நேர்ந்தால் சிங்கள பௌத்த வாக்கு வங்கியை கைப்பற்றும் போட்டி BBS-JHU ஆகியவற்றுக்கிடையில் தான் இருக்கும் என்று கணிக்கலாம்.
BBS ஊடக பலம்
ஞானசார தேரரின் மாநாட்டு உரை கவனிக்கத்தக்கது.
“ஊடகங்கள் சில நேரங்களில் எங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. பல சந்தர்ப்பங்களில் எதிராக இயங்குகின்றன. ஆனால் இன்று எங்களுக்கு “சமூக ஊடகம்” கிடைத்திருக்கிறது. இணைய வெளியில் எமக்கு பெரிய இடம் கிடைத்திருக்கிறது. இணையத்தை பயன்படுத்தும் இளம் ஆண்களும், பெண்களும் எங்கள் அமைப்பை உருவாக்கவும் பலப்படுத்தவும் உதவியிருக்கிறார்கள். உங்கள் காதல் சல்லாபங்களை ஓரமாக வைத்துவிட்டு தேசியவாத ரீதியில் சிந்தித்து பணியாற்றிதால் இன்று எம்முடன் பல்லாயிரக்கணக்கானோர் இணைந்திருக்கிறார்கள். நாங்கள் இப்போது தொடக்கியிருப்பது “சிங்கள தேசிய விடுதலை போராட்டம்”. அந்த போராட்டம் ஒரு சித்தாந்த போராட்டம். அந்த கருத்து போராட்டத்தில் நாம் முதலில் வெற்றியடைய வேண்டும்.”
BBS இன் அமைப்பு வடிவம் அதிக அளவில் பிரசாரத்தில் தங்கியிருக்கிறது என்பது ஆரம்பத்திலேயே அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. BBS இன் முக்கிய பலமாக இருப்பவர் ஸ்தாபக உறுப்பினரும் அதன் தலைமை அதிகாரியுமான டிலந்த விதானகே. தகவல் தொழில்நுட்பத்தின் பலம் என்ன என்பது டிலந்தவுக்கு நன்றாகவே தெரியும். டிலந்த மிகவும் பிரபலமான தகவல் தொழிநுட்ப வல்லுனராக கணிக்கப்படுபவர். கல்வி அமைச்சின் கணினி சார்ந்த ஆலோசகராக சந்திரிகா அரசாங்கத்தின் போது பணியாற்றியவர். இலங்கையில் கல்விப்பொதுத் தராதர பாடத்திட்டத்தில் ICTயை (Information & communication Technology) ஒரு பாடமாக இணைக்கப்பட்டதில் டிலந்தவின் பங்கு முக்கியமானது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். BBS ஐ நிலை நிறுத்துவதில், பலப்படுத்துவதில் கணினி அறிவை உச்ச அளவில் பயன்படுத்தி இன்று பல நூற்றுக்கணக்கான ஆதரவு இணையத்தளங்களையும், முகநூல் பக்கங்களையும் நடத்திக்கொண்டிருக்கிறார்.
அளுத்கம சம்பவம் நடந்து ஒரு மாத்தத்தில் ஜூன் மாதம் www.bodubalasena.org, www.bodubalasena.net ஆகிய உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டது மட்டுமன்றி உத்தியோகபூர்வ முகநூல் பக்கமும், மற்றும் ஞானசாரவினதும் டிலந்த விதானகேவின் முகநூல் பக்கங்களும் முகநூல் நிறுவனத்தால் நீக்கப்பட்டது. இவை இனவாத வன்முறைக்கான பிரசாரத்துக்காக பயன்படுத்தப்பட்டது என்கிற முறைப்பாடு பாரிய அளவு செய்யப்பட்டதன் காரணமாகவே தடைசெய்யப்பட்டிருந்தது. இதனால் நிம்மதியிழந்த டிலந்த மற்றும் ஞானசார ஆகியோர் ஊடகங்களில் புலம்பினர். தமக்கும் அவற்றுக்கும் சம்பந்தமில்லை; அது பொய் குற்றச்சாட்டு என்றனர். இவற்றை மீட்பதற்காக அதிக சிரத்தை எடுத்து இறுதியில் மீட்டனர்.
இன்று சகல ஊடகங்களின் பார்வையையும் தம்பக்கம் ஈர்த்துள்ளார்கள். போட்டிபோட்டு BBSஐ கண்காணிப்பது ஊடகங்களின் நாளாந்த பணியாகியாகியுள்ளது. 24 மணிநேர இணைய வானொலி BBSக்கு இருக்கிறது. அவர்களின் சகல காணொளிகளும் யூடியூப் சேனலில் தொகுத்து வைத்திருக்கிறார்கள். ஊடக செல்வாக்கை நிருவனமயப்படுத்திவிட்டதால் இன்று BBS ஊடகங்களை அணுக முதல் ஊடகங்களே அவர்களின் செய்திகளை அறிந்துவிடுகின்றனர். மாநாடு குறித்த செய்திகளுக்கு ஊடகங்கள் போதிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று ஊடகங்கள் மீது கண்டனங்களைத் தெரிவித்தார்கள்.
அதே வேலை தமது போட்டி கட்சியான JHU போன்ற கட்சிக்கு இன்று ஒரு இணையத்தளம் கூட இல்லை. முகநூல் பக்கங்களும் செயலிழந்து இருக்கின்றன. அடிப்படையில் பொதுபல சேனாவை விட சித்தாந்த பலம் பொருந்திய கட்சியான JHU வின் மக்கள் செல்வாக்கு திசை திரும்ப இது ஒரு முக்கிய காரணம். BBS க்கு எதிரான எந்த சக்தியும் அவர்களுக்கு நிகரான ஊடக பலமின்றி எதிர்கொள்ள முடியாது என்பது மட்டும் நிச்சயம்.
மாநாட்டின் பிரகடனங்கள்
மாநாட்டில் பேச்சாளர்கள் அனைவருமே சிறுபான்மை மதத்தவர்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியையே பிரகடனப்படுத்தினர். அதற்காகவே நடத்தப்பட்ட மாநாடு என்பது உறுதியாக தெரிந்தது.
நாட்டின் பெயர் – சிங்கள தேசம், தேசிய மதம் – பௌத்தம், தேசிய மொழி – சிங்களம், தேசிய இனம் -சிங்களம், தேசிய கொடி – (சிறுபான்மை இனங்களை குறிக்கும் நிறங்கள் அகற்றப்பட்ட சிங்கக் கொடி), தேசிய கீதம். “இது சிங்கள எம் நாடு – நாம் பிறந்து இறக்கும் நாடு” என்று என்று பேச்சுக்களும் கோஷங்களும் அமைந்தன. ஞானசாரவின் உரையில்...
“...குர்ஆனில் இருந்து பல இடங்களாய் சுட்டிக்காட்டிய ஞானசார; இந்த அடிப்படைவாத பயங்கரம் நிறைந்த இந்த குர்ஆன் வாசகங்கள் உண்மையா பொய்யா. அது உண்மையென்றால் இலங்கை முஸ்லிகள் ஏற்றுக்கொள்கிறார்களா என்று நாம் தெரிந்துகொள்ளவேண்டும்...” என்றார்.
“...பௌத்த உபதேச நூல்களை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிடுங்கள் இப்போதே தொடங்குவோம். ‘பன’ சொன்னது போதும். விகாரைகளை, கட்டடங்களை உருவாக்குவதை விட்டுவிட்டு தற்போதைய காலத்துக்கு தேவையான நவீன சிங்களவர்களை உருவாக்குவோம்... பிக்குமார்களே நீங்கள் தயாராகவேண்டும்.
உலக வஹாப்வாதத்துக்கு எதிராக நாம் உலக ரீதியில் அனைவரையும் அணிதிரட்ட வேண்டும்...
மஹிந்த, ரணில், அனுர சகலரும் கேளுங்கள். கதிரையும் கட்சியையும் பாதுகாப்பதற்காக சிங்கள இனத்தை துண்டாடி வந்துள்ளீர்கள். இந்த மாநாட்டில் மூலம் முதல் தோட்டாவை வெடிக்க வைக்கிறோம். நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்த தயார். நீங்களும் மாறுங்கள். இல்லையேல் அதற்கும் நாங்கள் தயார். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் எங்கள் இந்த சீருடையால் கதிரையில் அமர்த்தவும் முடியும் கதிரையை கவிழ்க்கவும் முடியும். நாங்கள் அதற்காக உயிரைக்கொடுக்கவும் தயார்...
நாட்டில் 25000 கிராமங்கள் இருக்கின்றன. பதிவுசெய்யப்பட்ட விகாரைகள் 12000 இருகின்றன. ஒவ்வொரு விகாரையிலிருந்தும் 1000 சிங்கள பௌத்தர்களை குறைந்தது 5000 விகாரைகளிலிருந்து உருவாக்க முடியாதா. மொத்தம் 50 லட்சங்கள். தேர்தலில் நாமே தீர்மானகரமாக இருப்போம் அல்லவா. இந்த பலத்தோடு தான் நாங்கள் ஜனாதிபதித் தேர்தலை முகம் கொடுப்போம். அப்போது பார்க்கலாம் யார் வெல்வார்கள் என்பதை. பௌத்த துறவிகளே நாளையே இந்த வேலைத்திட்டத்தை தொடக்குங்கள். சிங்கள பௌத்த ராஜ்யத்தை உருவாக்குவோம்....” என்று தொடர்ந்தது அவரது உரை
டிலந்த விதானகே உரையாற்றுகையில்..."பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சிங்கள தேசமென்றே அனைவராலும் அறியப்பட்ட எமது நாட்டை, “சிங்கள லேண்ட்”, “சிலேன்”, “சிலோன்” என்றெல்லாம் மாற்றி ஈற்றில் இந்த வர்த்தக ஆக்கிரமிப்பாளர்களால் பெயர் மாற்றப்பட்டுவிட்டது. நமது முன்னைய பெயரை வென்றெடுக்க வேண்டும் என்றார்."
இனிவரும் தேர்தல் இவர்களின் எதிர்காலத்தை கணிக்க கணிசமான அளவு உதவும். ஆனால் இவர்கள் விதைத்துள்ள இனவாத விஷத்தின் தாக்கம் பல தளங்களிலும் நிச்சயமாக செல்வாக்கு செலுத்தும். ஏனைய அனைத்து சிங்கள பௌத்த சக்திகளின் சிங்கள பௌத்த உணர்வை சீண்டி சவால் விடும் ஒரே சக்தியாக BBS இன்று விருட்சமாக வளர்ந்துள்ளது.
மாநாட்டின் சித்தாந்த உள்ளடக்கம் என்ன, அவை இனி வரும் காலங்களில் ஏற்படுத்தப்போகும் ஆபத்து என்ன என்பது குறித்து தனியொரு கட்டுரையில் பார்க்கப்படவேண்டும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...