Headlines News :
முகப்பு » , , » JHU: தமிழர்களுக்கு எதிரான 2ஆம் கட்டப் போர் பிரகடனம் - என்.சரவணன்

JHU: தமிழர்களுக்கு எதிரான 2ஆம் கட்டப் போர் பிரகடனம் - என்.சரவணன்


ஜாதிக ஹெல உறுமய கட்சி (JHU) எத்தனை ஆபத்தான ஒன்று என்பது குறித்து சென்ற வார கட்டுரையில் சுருக்கமாக பார்த்தோம். அதே ஞாயிறன்று மஹரகமவில் JHUவின் 11வது வருடாந்த மாநாடு மிகப்பெரிய அளவில் நடந்தது. கடந்த மாதம் நடத்தப்பட்ட பொதுபல சேனாவின் மாநாட்டை விட அளவில் சற்று சிறியதாக இருந்தாலும் அதன் அரசியல் காத்திரம் இலங்கையின் சமகால அரசியலை தீர்மானிக்கக் கூடிய அளவு முக்கியத்துவம் பெற்றது. இலங்கையில் தமிழ், முஸ்லிம், மலையக அரசியல் திசைவழியானது இந்த போக்கை கவனித்ததாகத் தெரியவில்லை. கடந்தகாலங்களில் இதனை கவனிக்கத்தவறியதன் விளைவே இன்றைய அவல நிலை.

கவனிப்புக்கு உள்ளாதிருக்கும், ஆனால் கவனிக்கப்படவேண்டிய முக்கிய புள்ளியை சிறுபான்மை அரசியல் சக்திகளின் கவனத்திற்கு கொண்டுவருவதே இந்த கட்டுரைத் தொடரின் நோக்கம்.

அந்த பின்னணியில் JHU வின் பாத்திரத்தை அலட்சியமாக விட்டுவிடாமல் அதன் திசைவழியை கண்காணிப்பது தவிர்க்க முடியாத தேவையாகவே கொள்ள வேண்டியிருக்கிறது. 

இலங்கையில் கடந்த 11 வருடங்களாக தவறாமல் ஆண்டு தோறும் கட்சி மாநாடு நடத்திவரும் ஒரே கட்சியாக JHU வைக் குறிப்பிடலாம்.

சென்ற வார கட்டுரையில் எழுதப்பட்ட சகல விடயங்களையும் உறுதிசெய்யும் வகையில் JHUவின் மாநாட்டு உரைகளும், அதன் பின்னரான பத்திரிகை அறிக்கைகள், பேட்டிகள், செய்திகள் இந்த வாரம் அமைத்திருந்தன. JHU வின் செயாலாளரும் அமைச்சருமான சம்பிக்க ஆற்றிய பேருரை எந்த தமிழ் ஊடகங்களும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. ஆகவே தான் அந்த உரையின் சுருக்கிய வடிவத்தை மொழிபெயர்த்து இங்கு எச்சரிக்கவேண்டியிருக்கிறது. சம்பிகவின் பேச்சு வசீகரமானது. இனவெறியை இலகுவாக தலையில் ஏற்றக்கூடிய சூட்சுமமானது. ஏராளமான புனைவை நம்பவைக்கும் ஆற்றல் உள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் இருப்பை அச்சுறுத்தும் மிக முக்கியமான உரை அது. JHU இதுவரை தமிழர்களுக்கு எதிராக செய்த சாதனைகளையும் பட்டியலிடுவதுடன், இனி அடுத்த நகர்வையும் தெட்டத்தெளிவாக பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த மாநாடு 100 வீதம் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக நடத்தப்பட்டது என்றால் அது மிகையில்லை.

சிங்கள வாக்கு எப்படி தீர்மானிக்கப்படுகிறது என்கிற கணக்கு சூத்திரத்தை விளக்கும் பகுதி விரிவஞ்சி இங்கு தவிர்க்கப்பட்டாலும். அது தமிழில் வெளிவரவேண்டிய ஒன்று. தம்மை“தேசிய சக்தி“ என்று அடிக்கடி சம்பிக்க குறிப்பிடுவது அனைத்து சிங்கள பௌத்த இனவாத சக்திகளைத்தான். இந்த கூட்டத்தில் அத்துரலியே ரதன தேரர் உள்ளிட்ட பலரின் உரைகள் கவனிக்கப்படவேண்டியவை.

சென்ற கட்டுரையில் கூறியது போல தற்போதைய ஆட்சியே அவர்களின் “தமிழர் அரசியல் நீக்க வேலைத்திட்டத்துக்கு” உகந்த ஆட்சி. ரணிலை அவர்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாத அதேவேளை மகிந்தவுக்கு அரசியல் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளார்கள். உரையின் இறுதியில் ஒரு சர்வாதிகார இராணுவ ஆட்சிகவிழ்ப்புக்கும் தயார் என்கிற தொனியில் எச்சரித்திருக்கிறார்கள். சாராம்சமாக கூறினால் தமிழர்களை முற்றிலும் அரசியல் அனாதைகளாக்கா விட்டால் அரசை கவிழ்ப்போம் அல்லது இனிமேல் ஆட்சியிலமர விடமாட்டோம் என்கிற மிரட்டலே இது. அதற்காக மட்டுமே அவர்கள் இயங்குகிறார்கள் என்பது கண்கூடு.

21 புதனன்று அலறி மாளிகையில் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் போது “அரசாங்கத்துக்கு முதன் முதலில் சவால் விடுத்தவர் ரத்ன ஹிமியே”யென்று கடும் சினத்தோடு மகிந்த கூறிவிட்டு நேரமில்லை என எழுந்து சென்றுள்ளார். அந்த சந்திப்பு தோல்வியில் முடிந்திருக்கிறது.

சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக 20 வருடங்களுக்கும் மேலாக போரை வெல்வதற்கான புலி எதிர்ப்பு, தமிழர் உரிமை மறுப்பு பிரச்சாரத்தை செய்து சிங்கள பௌத்த உணர்வை / தமிழர் விரோத உணர்வை தக்கவைப்பதில் வெற்றி பெற்று வந்துள்ளது JHU. யுத்த வெற்றிக்கு மிகப்பெரிய பக்க பலமாக அதுவே இருந்தது. வடக்கு கிழக்கை பிரிப்பதற்கு தேவையான சித்தாந்த பின்புலத்தை பலப்படுத்தியது. யுத்தத்திற்குப் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அடிப்படை அத்தியாவசிய உரிமைகளை மறுப்பதன் பின்னணியில் பாரிய பாத்திரத்தை ஆற்றி வந்திருக்கிறது JHU.

மாகாணசபையையும் இல்லாதொழிப்பது, சிங்கள குடியேற்றங்களை மும்முரமாக செய்வது, பௌத்த மத விஸ்தரிப்பை விரிவாக்குவது, இராணுவ முகாம்களை அதிகரிப்பது / மேலும் பலப்படுத்துவது, தமிழர் உரிமை குறித்த சொல்லாடல்களை அரசியல் தளத்திலிருந்து நீக்குவதற்கூடாக அந்த எண்ணத்தையே இல்லாது செய்தல், புகலிட அரசியல் அழுத்த முயற்சியை முறியடித்தல் போன்ற அடுத்தகட்ட போரை அவர்கள் தொடங்கியிருக்கிறார்கள். அதனை வெளிப்படையாகவே அறிவித்துமிருக்கிறார்கள்.

இவர்கள் அரசியல்வாதிகளல்ல. லட்சியவாதிகள். அதனை அடைவதற்காக பதவியையும் பெறுவார்கள், பதவியையும் துறப்பார்கள்.

JHU வுக்கு எதிராக BBS ஐ அரசாங்கம் பயன்படுத்த முயற்சிசெய்தாலும் அது பலனளிக்கப்போவதில்லை காரணம், குறிப்பிட்ட அளவுக்கு மேல் அந்த முயற்சி BBS இன் தற்கொலைக்கே அது இட்டுச்செல்லும்

தமிழ் மக்களின் அரசியல் நியாயங்களையும் கோரிக்கைகளையும், கீழிறக்கி ஆரம்பநிலைக்கு தள்ளுவதில் கணிசமான வெற்றிகண்டிருக்கின்றன பேரினவாத சக்திகள். அதுமட்டுமன்றி அரசியல் அதிகாரத்துக்கான போராட்டத்தையும் திசைதிருப்பி சிறிய விடயங்களின் மீது காலத்தையும், சக்தியையும், உழைப்பையும் செலுத்தும் நிலைக்கு தள்ளியிருப்பதும் இந்த சக்திகளின் வெற்றியென்றே கூறவேண்டும். இந்த இடைவெளிக்குள் அவர்கள் இருப்பதையும் பறிக்கும் பின்னணி முயற்சியில் வெற்றிகண்டபடி நகர்கிறார்கள் என்றே கூற வேண்டும்.

(JHU தலைவர்களின் விஷக் கருத்துக்கள் முழுமையாக காணொளி வடிவில்)

இனி சம்பிகவின் உரையை கூர்ந்து கவனியுங்கள்.

சம்பிகவின் பேச்சு

“...நாங்கள் பல ஐதீகங்களை உடைத்தோம். விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியவே முடியாது என்றார்கள். ஆளுங்கட்சிகள், எதிர்கட்சிகள், இடதுசாரிகள் என எல்லோரும் அப்படித்தான் நம்பியிருந்தனர். பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளைக் கண்டு பொறுமையாகவே இருந்தனர். சரியாக திட்டமிட்டால் அவர்களை தோற்கடிக்கலாம். தோற்கடித்தே ஆக வேண்டும் என்று அதற்கான வழிகளை செய்துகொடுத்தது JHU என்பதை நினைவுறுத்துகிறோம்.

அதுபோல இலங்கைக்கு ஒற்றையாட்சி முறைதான் பிரச்சினை, தமிழர்களை அரசியல் நீக்கம் செய்துவிட்டார்கள்  என்கிற கருத்தை விதைத்து இருந்தார்கள். எனவே இந்த நாட்டை சமஷ்டி நாடாக ஆக்கவேண்டும் என்கிற அரசியல் அலைக்குள் நாட்டை திருப்பினார்கள். 1995 ஆம் ஆண்டு பிரதான கட்சிகளான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து நாட்டை சமஷ்டி நாடாக ஆக்குவதாக “லியம்பொக்ஸ் உடன்படிக்கையை” செய்துகொண்டார்கள். தமிழ் இனவாதிகளுக்கு வடக்கையும் கிழக்கையும் பிரித்து கொடுப்பதற்கான சதி செய்தார்கள். சமஸ்டியின்றி விமோசனமில்லை என்றார்கள். சந்திரிகா அன்று 95, 98, 2000 வருடங்களில் பாராளுமன்றத்தில் இதற்கான யோசனைகளையும் முன்வைத்தார். எதற்கும் இணங்காத எதிர்க்கட்சி கூட இது விடயத்தில் கைகோர்த்த போது பாராளுமன்றத்தில் இதனை எதிர்த்து ஒரு சிங்கள குரல் கூட இருக்கவில்லை. சந்திரிகா-ரணில் சதியை நாங்கள் வீதியில் அலையாக இறங்கி முறியடித்தோம்.

ஒற்றையாட்சியை நிலைநாட்டுவது உள்ளிட்ட 5 அம்ச திட்டத்துடன் நாங்கள் 2005 செப்டம்பர் ரணிலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர் தெளிவாகவும் நேர்மையாகவும் ‘என்னால் இந்த ஒற்றையாட்சியை பாதுகாக்க முடியாது,  நான் வந்தால் நாட்டை சமஷ்டி ஆக்குவேன்’ என்றார். உங்களுக்கு ஒரு போதும் அதனை செய்ய விட மாட்டோம் என்று கூறிச் சென்றோம்.

மகிந்தவிடம் சென்றோம். எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். எங்கள் திட்டங்களை “மகிந்த சிந்தனை”யோடு சேர்த்துக்கொண்டார். ஒற்றையாட்சியை நாங்கள் வெற்றிகொண்டது அப்படித்தான். இதோ இன்று பாருங்கள் ஐ.தே.க.வும் கூட ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனை சாதித்தது JHU தான்.

அதுபோல சிறுபான்மை வாக்குகளே பாராளுமன்றத்தையும், ஜனாதிபதியையும் தீர்மானிக்கிறது என்கிற ஒரு ஒரு மயக்கம் நாட்டில் நிலவியது. இலங்கையின் ஆட்சியாளர்கள் யார் என்பதை தீர்மானிக்கும் பலம் பிரபாகரனிடமே உள்ளது என்று கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் வரை ஒரு கருத்தாகவே பரவலாக நம்பப்பட்டது.அந்த மயக்கத்தை ஏற்படுத்தியவர்களை வெளியேற்றிவிட்டு இந்த நாட்டின் மகா சங்கத்தினர் தலைமையில் நாங்கள் இந்த நாட்டின் தலைமையை தீர்மானிப்போம் என்று கூறி அதனையும் நடைமுறையில் செய்து காட்டினோம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் அதை சாதித்து காட்டுவோம்.


வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து முழுமையாக சிங்களவர்களை பயங்கரவாதிகள் விரட்டியிருந்தார்கள். சிங்களவர்களைக் கொன்று மிரட்டி 1987இல் இறுதி சிங்களவனையும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றினார்கள். சிங்களவர் நிலங்களை மாவீரர் குடும்பங்களுக்கு கொடுத்தார்கள் புலிகள். 26ஆயிரம் சிங்களவர்களை பலிகொடுத்தும் இந்த நாடு இன்னமும் விடுவிக்கப்படவில்லை சிங்களவர்களுக்கு. விக்கினேஸ்வரனுக்கு பயந்துகொண்டு சிங்களவர்களை குடியேற்றாது போனால் நமது வீரர்களின் இழப்புக்கு அர்த்தமில்லை. எங்களுக்கு வெட்கம். எங்களுக்கு ஆத்திரம். எனவே தான் கூறுகிறோம், நமது சிங்களவர்களை குடியேற்றி தேசிய உரிமையை வென்றெடுக்கும் வரை, இந்த நாட்டை முழுமையாக மீட்கும் வரை எங்கள் போராட்டத்தை நிறுத்தமாட்டோம். நாங்கள் ஓய மாட்டோம். பம்பலபிட்டியில் உள்ள விக்கினேஸ்வரனுக்கும், கிருலபனையில் உள்ள சுமந்திரனுக்கும் நாங்கள் இரத்தமும், சதையுமாக போராடிபெற்ற உரிமையை காட்டிக்கொடுக்கமாட்டோம் என்று உறுதியளிக்கின்றோம்.

2005இல் பிரதமர் மகிந்தவுக்கு கட்சிக்குள்ளேயே ஆதரவற்றிருந்தபோது, முழு நாடும் சதிவலையில் சிக்கியிருந்தபோது, ஒரு கடிதத்தை கூட தயாரிக்க முடியாத நிலை இருந்தபோது முழுமூச்சாக நாங்கள் போராடினோம். அப்போது இந்த ஆட்சியை உயிர்கொடுத்து ஆட்சிலேற்றியது நாங்கள் தான் என்பதை சகலரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் ஒருபோதும் ஊழல் செய்ததில்லை. இந்த நாட்டுக்கு பல கோடி பணத்தை லாபமீட்டி கொடுத்திருக்கிறோம்.

ஆளும்கட்சியில் இருந்தவர்கள் பலர் அப்போது ரணிலோடு சேர்ந்து தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான சதி செய்தபோது அது நடக்கவிடாதபடி முறியடித்தோம்.

தனிநபர்களுக்காக நாங்கள் இல்லை. நாங்கள் கொள்கைக்காக மட்டுமே உள்ளோம், நாங்கள் இனத்துக்காகவே உள்ளோம் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

ஈழக்கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று ஜனாதிபதிமுறையை கைவிடுவதாக ஜனாதிபதி சொன்ன கையோடு; சரி கைவிட்டோம் ஜனாதிபதிமுறையை கைவிடுங்கள் என்று சுமந்திரன் கூறியிருக்கிறார். இது அப்படிப்பட்ட சின்ன விடயமல்ல. ஜனதிபதிமுறை காலத்தில் தான் ஈழபோராட்டம் முனைப்புபெற்றது. ஈழபோராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது ஜனாதிபதிமுறையால் அல்ல மாறாக தேசியவாத சக்தியால் தான் என்பதை நினைவில் வையுங்கள்.

இந்த நிபந்தனையை ஜனாதிபதி சென்ற வருடம் வடக்கு மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் வைத்திருந்திருக்க வேண்டும். தேர்தல் நடத்த முன் சில சட்டங்களை கொண்டு வாருங்கள் என்று ஜனாதிபதியிடம் எவ்வளவோ கேட்டுகொண்டோம் எங்கள் பேச்சை மீறி அந்த தேர்தல் நடத்தப்பட்டது. மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தோம். அவர்களிடம் இனி ஒரு போதும் ஈழம் கோரமாட்டோம் என்று முழு நாட்டவர் மத்தியிலும் உறுதிவாங்குங்கள் என்றோம். ஏனென்றால் பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் கூட அப்படி உறுதிமொழியளித்துவிட்டு வந்து பின்னர் வெளியில் சென்று அதை மீறி வருகிறார்கள்.

இந்தியாவில் நேரு அப்படித்தான் செய்தார். அன்று ஈ.வெ.ராமசாமி நாயக்கர் திராவிடநாடு கோரினார். அவர் 1938இல் ஜின்னாவுடனும் கதைத்து நீங்கள் பாகிஸ்தான் கேளுங்கள் நாங்கள் திராவிடஸ்தான் கேட்கின்றோம் என்றார். ராமசாமி நாயக்கரும் அண்ணாதுறையும் சேர்ந்து DMK வை ஆரம்பித்தார்கள். அவர்கள்1947 இல் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. தனிநாடு கோரினார்கள். அதற்காக தமிழர் விடுதலைப் படை என்ற ஆயுத இயக்கத்தையும் தோற்றுவித்தார்கள். இவர்கள் அலையலையாக முன்னேறி வருகிறார்கள் என்பது நேருவுக்கு தெரிந்தது. 1962 தேர்தலில் DMK வெல்லவிருக்கின்ற சந்தர்ப்பத்தில். ‘மெட்ராசில் உங்களுக்கு ஆட்சியமைக்க முடியாது, இனிமேல் தனி நாடு கோரமாட்டோம் என்று உறுதிமொழியளியுங்கள்” என்றார். 16வது திருத்தத்தை அரசியலமைப்புக்கு கொண்டு வந்தார். அப்படி தனிநாடு கேட்டால் சிறையிடுவேன் என்றார். அந்த உறுதிமொழியுடன் தான் DMK வை ஆட்சியமைக்க விட்டது. ஆனால் நாங்கள் இதுவரை அப்படி செய்தோமா. மாறாக பிரபாகரனின் ஆவிகளுக்கு நாங்கள் ஆட்சியமர இடம்கொடுத்தோம்.

நாங்கள் ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை ஏற்காவிட்டால் குறைந்தது 5 சட்டங்களை திருத்துங்கள் 19வது திருத்த சட்டத்தின் மூலம் என்றோம். கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் பின்னர் அமைச்சரவையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தெரிவுக்குழுவுக்கும் சமர்ப்பிக்கப்பட்டது. தெரிவிக்குழுவின் பேரால் இழுத்தடிக்கப்பட்டது. ஆனால் ஷிராணி பண்டாரநாயக்க விடயத்தை ஒரே வாரத்தில் தெரிவுக்குழு முடிவுக்கு கொண்டுவந்தது எப்படி. எனவே அது முடியாததல்ல. இது நடக்காது என்பது எமக்கு தெரிந்ததும் நாங்கள் எழுந்து வந்துவிட்டோம். ஆனால் விளைவு என்ன ஆகப்போகிறது என்று பாருங்கள். 

இப்போது சிங்கள பிரதேசங்களுக்கு இவர்கள் நிதி ஒதுக்குகிறார்கள் இல்லை. இனவாதிகள். கிளிநொச்சியில் மாநாடு கூடி ஜனவரி 15 க்குப் பின் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற போராட்டம் நடத்தபோவதாக பிரகடனப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் ஏன் இன்னமும் எடுக்கவில்லை. இதன் அடுத்த படியாக வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைக்க முற்படுவார்கள். அன்று தேசாபிமான கோஷம் எழுப்பும் தார்மீக உரிமை எவருக்கும் இல்லை JHU வைத் தவிர. வடக்கை தமிழர்களுக்கும் கிழக்கை முஸ்லிம்களுக்கும் தாரை வார்க்க நாங்கள் ஒருபோதும் விடப்போவதில்லை. அதனால் தான் அவர்களின் அதிகாரத்தை பறியுங்கள் என்றோம்.

மூன்றாவது கோரிக்கை, முதலில் 1971இல் இருந்த வீதாசாரத்துக்கு ஏற்ப யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பில் எங்கள் மக்களை குடியேற்ற வேண்டும். நாடு இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னராவது விடுவிக்கக் கூடிய தலைவரையே நாங்கள் தெரிவு செய்யவேண்டும்.

அடுத்தது வெளியுறவுத் துறை பற்றியது. இப்போது ஐரோப்பிய ஒன்றியம் புலித் தடையை நீக்கியுள்ளது.அது அடுத்ததாக அமெரிக்காவுக்கு பரவும், இந்தியாவுக்கு பரவும்,  பின்னர் ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகளுக்கு பரவும். இதுவரை நாட்டை பாதுகாக்கக் கூடிய சரியான நபர்களை தூதுவர்களாக அந்த போர்முனைக்கு அனுப்பபடவில்லை. குடிகாரகளையும், கும்மாளமடிக்கும் கயவர்களையுமே அனுப்பியுள்ளோம். இதற்கு சரியான தந்திரோபாயங்களையும் வேலைத்திட்டங்களையும் வகுக்கவேண்டும். தமிழர்களை புகலிடத்தவர்கள் (diaspora) என்று அழைக்கக்கூடாது. அவர்கள் பொருளாதார சலுகைகளுக்காக புலம்பெயர்ந்தவர்கள். புகலிடத்தவர்கள் அல்ல. இவர்களின் நாடு கடந்த தமிழீழ கோரிக்கையை முறியடிப்பது எப்படி என்று திட்டமிடவேண்டும்.

ரணிலும் இவர்களின் வாக்குகளைப் பெற்று எப்படி ஆட்சியிலமர்வது என்று திட்டமிடுகிறார். 2005 இல் தமிழர்களின் வாக்கு கிடைத்திருந்தால் ஆட்சியிலமர்ந்திருக்கலாம் என்று அவர் இன்றும் நம்புகிறார். அப்படி அன்று ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் நாட்டில் பெரும் புரட்சி ஏற்பட்டிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஜனாதிபதியை தீர்மானிப்பதற்கான பேச்சுவார்த்தை உலகில் எந்த மூலையில் நடந்தாலும்  இந்த நாட்டின் ‘தேசிய சக்தி’ ஒரு போதும் இடமளிக்காது. 

நாங்கள் வைத்திருக்கின்ற கோரிக்கைகள் முக்கியமானது. நமது அடுத்தடுத்த சந்ததியினரின் எதிர்காலம் பற்றியது. எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிந்தித்து செயல்படுங்கள். எனவே இனத்தினதும், சாசனத்தினதும் உரிமைக்கான சக்தியை கட்டியெழுப்புவோம்.

எங்கள் பொறுமையை கோமாளித்தனம் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். நாங்கள் யாரென்று உங்களுக்கு தெரியும். மரத்தின் அழுகிய கிளைகளை வெட்டியெறியுங்கள். இல்லேயேல் மரத்தையே சாய்த்துவிட்டு நாங்கள் மரத்தை நாட்டுவோம் என்று ஜனாதிபதிக்கு கூறுகிறோம்.

இவை சரிவராவிட்டால் பத்து லட்சத்தை கொண்ட படையை உருவாக்கி நாட்டை கொண்டு நடத்துவோம் என்பதை உங்களுக்கு உறுதியளிக்கிறோம்...”

(அடுத்த வார கட்டுரை JHU வின் வரலாற்று நீட்சி குறித்தது.)

நன்றி - தினக்குரல்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates