மல்லியப்பூ சந்தி திலகர் மலையக மக்களின் பிரச்சினைகளை வெளியுலகுக்கு கொண்டுவருவதில் பெரும் பங்காற்றிக்கொண்டிருப்பவர்। தன்னலம், அரசியல்அடிபணிவுகள் இல்லாமல் சுயமாக இயங்கும் திலகர் புதிய மலையகத்துக்கு எழுதிய பின்னூட்டம் ஒன்றை பதிவாக இங்கு தருகிறேன்।
"..................... மலையக மக்களின் போராட்டங்கள், அவர்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகள் குறித்துப் பதிவாவதென்பது குதிரைக் கொம்பாகத்தானிருக்கின்றது। இன்று இலங்கையில் வெளிவரும் ஒரு சில பத்திரிகைகளின் வாயிலாக கிடைக்கின்ற செய்திகளைத் தவிர வேறு வழியில் மலையக தேசத்தின் பிரச்சினைகள் வெளிவருவதில்லை. இலங்கைக்கு வெளியே சொல்லவே வேண்டாம். எத்தனைபேருக்கு ஈழப் பிரச்சினை குறித்து தெரிந்திருக்குமளவுக்கு மலையகப் பிரச்சினை பற்றித் தெரிந்திருக்கிறது ? ......................"
"..................... அவர்களை கடுமையாக சுரண்டிக் கொழுக்கும் வர்த்தக சமூகத்தினர், அவர்களின் பிரச்சினைகளை வெறும் தமது பிழைப்பு அரசியலுக்கு பயன்படுத்திவரும் அரசியல் சக்திகள், சாதியக் கட்டமைப்பை நிலைநிறுத்துவதில் போட்டியிடும் ஆதிக்க சாதிக் குழுக்கள், பேரினவாத மயப்படுத்தப்பட்டுள்ள சிங்கள சிவில் சமூகத்தவரால் எதிர்கொண்டு வரும் வன்முறைகள் என எத்தனை எத்தனையோ கொடுமைகள் தினந்தோறும் நடக்கையில் அவர்களுக்காக பேசுவதையோ போராடுவதையோ அல்லது தார்மீக ஆதரவையோ தாம் தர வேண்டாம் அவர்களின் பிரச்சினைகளை வெளி உலகுக்கு கொணர்வதில் எமது பங்களிப்பு என்ன? ............"
"..................... இந்த சைபர் ஸ்பேஸ் என்று நாம் கூறுகின்ற வெட்டவெளிக்குள் சகல கொடுக்கல் வாங்கல்களையும் செய்து இன்று பெரும் மாநாட்டையே நடத்துகின்றோம். ................."
"..................... ஆனால் இன்று மின்சார வசதிகளைக் கூட அடையாமல், கல்வி ரீதியில் வளாச்சியடைய விடாமல், வெறும் 1 ரூபா சம்பள உயர்வுக்காக போராடிக் கொண்டிருக்கும் மலையக மக்கள் குறித்து எந்தவித விபரங்களையும் உலகமறியாத வண்ணம் உள்ளன. ........."
"..................... ஈழத் தமிழர்கள் கொண்டுள்ள வளங்கள், ஆற்றல்கள், வாய்ப்புக்கள் மலையக மக்களுக்கு இல்லை. சக தேசத்தை சேர்ந்தவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்கின்ற போக்கை ஈழப் போராட்ட சார்புத் தகவல் தொட்பூடகங்களில் கூட காணமுடிவதில்லை. அப்படியும் வெளிவந்து விட்டால் அவை எதிரியை அம்பலப்படுத்துவதற்கான வழிமுறையாகத் தான் இருக்கின்றதே ஒழிய, மலையக தேசத்தின் பிரச்சினையில் கொண்டுள்ள பிரக்ஞையால் அல்லவென்றே கூறலாம். ........."
"..................... தமிழகத்தை மையமாகக் கொண்டும் சிங்கப்பூர், மலேசியா மற்றும் வேறு புகலிட நாடுகளில் இருந்தும் பல இணையத்தளங்கள் கூட அதிகரித்தவண்ணம் உள்ளன. ஆனால் இதில் எத்தனை தூரம் மலையகத்தவர் பற்றிய குறைந்தபட்ட போராட்டங்கள், கோரிக்கைகள் கூட பதிவாகின்றன?..................."
"..................... நிச்சயமாக மலையகத்தவர் பற்றி எமது அக்கறையின்மையையும், அசட்டையையும் நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும். ................"
"..................... இத்தகைய பின்னணியில் இருந்து மலையக மக்களின் இன்றைய நிலைமைகள் பதிவாகாததையும் நோக்க வேண்டும். இன்று தமிழ் தேசப் பிரச்சினையை சர்வதேச அளவில் கரிசனைக்குரியதாக்கிய தகவல் தொழிநுட்பத்தின் பங்கை நோக்க வேண்டும். இன்று தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் இன அழிப்புக் குறித்த செய்திகள் வேகமாக உலகெங்கும் சென்றடைகின்றன. உலகின் பலமான நாடுகளின் உதவியுடனும் ஒரு அரசையும் கொண்டிருக்கின்ற சிங்கள பேரினவாதம், தமிழரின் தகவல் தொழிநுட்ப ஆற்றல், வளங்கள் என்பவற்றை எதிர்கொள்ளமுடியாத அளவிற்கு, தடுமாறி நிலைகுலைந்து போகும் அளவிற்கு, தமிழர்கள் தகவல் தொழிநுட்பத்தை அடைந்திருக்கின்றார்கள் ................."
"..................... தமிழ் தேச போராட்ட சக்திகளால் அல்லது அவர்களது ஆதரவாளர்களால் நடத்தப்படுகின்ற ஆயிரக்கணக்கான இணையத்தளங்களிலும் மலையக மக்கள் குறித்த எந்தவித பதிவுகளும் இடம்பெறாதது மிகவும் கவலை தரும் விடயமாகும். சக தேசம் ஒன்று தமது எதிரிகளாலேயே ஒடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கரிசனை கொள்ளாததை நாம் குறித்துக் கொள்ளுதல் அவசியம்............"
"..................... மலையக தேசத்தவரைப் பொறுத்தவரை அவர்கள் ஏலவே எதிர்கொள்ளும் அடிமை வாழ்க்கையை விட தமிழ் தேசப் போராட்டத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழர்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரச பயங்கரவாதத்திற்கும் பலியாகிவரும் தேசமாக மலையக தேசம் உள்ளாவதைக் கவனித்தாதல் வேண்டும். இந்தியாவின் மீதும் இவர்கள் நம்பிக்கை இழந்து பல வருடங்கள் ஆகி விட்டது. ........"
"..................... இலங்கையில் செயல்படும் தமிழ் தொடர்பூடகங்கள் அனைத்திலும் மலையக மக்களுக்கு எதிரான பாரபட்சங்கள் நிலவுவதை காணமுடியும். மலையக மக்களின் பிரச்சினை குறித்த பிரக்ஞை என்பதை விட மலையக சந்தையை இலக்காகக் கொண்டு தான் இருக்கும். .........."
-திலகர்
(நன்றி திலகர்)
- இரண்டாயிரமாம் (2000) ஆண்டு செப்டெம்பர் மாதம் சென்னையில் இடம்பெற்ற தமிழினி மாநாட்டில் இலங்கை பத்திரிகையாளர் 'சரிநிகர்' என். சரவணன் (தற்போது புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழ்வதாக அறிகிறேன்). அவர்களால் வாசிக்கப்பட்ட மலையகத்தவர் பற்றிய ஒரே ஒரு கட்டுரையின் மேற்கோள்களே மேலே காட்டப்பட்டன. (விரிவான கட்டுரையை தொடர்ச்சியாக வரும் பதிவுகளில் தர முயற்சிக்கிறேன்)
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...