Headlines News :
முகப்பு » , , » மலையக நாட்டார் இலக்கியம் மரபும் மாற்றமும்- லெனின் மதிவானம்-

மலையக நாட்டார் இலக்கியம் மரபும் மாற்றமும்- லெனின் மதிவானம்-


மலையக நாட்டார் பாடல்

ஒவ்வொரு மொழியிலும் எழுத்து தோன்றுவதற்கு முன்னர் வாய்மொழி பாடல்களும் கதைகளும் தோன்ற தொடங்கி விட்டன. அவ்விலக்கிய தொகுதியானது வாழ்க்கை அனுபவங்களை நேரடியாக எடுத்துக் கூறுகின்றவையாகவும் சில வேளைகளில் வாழ்;க்கை அனுபவங்களை பின்னணியாகக் கொண்ட புராண இதிகாச கதைகளாகவும் கூத்துக்களாகவும் பல வடிவங்களில் காணப்படுகின்றன. எழுத்திலக்கியமானது நாட்டார் இலக்கித்திலின்று தோன்றியதொன்று என்ற போதினும் அது தோன்றி வளர்ச்சி அடைந்த பின்னர் இதனின்றும் பிரிந்து விட்டது. எழுத்திலக்கியம் தேக்கம் பெற்ற காலங்களியெல்லாம் நாட்டார் இலக்கியத்தின் துணையுடனேயே ஜீவ சக்தி பெற்று வளர்ச்சி அடைந்தது.

மேலும், மனித குலத்தின் தலை சிறந்த படைப்புகள் யாவும் சாதாரண மக்கள் சாரிகளால் உருவாக்கப்பட்டவையாகும். நாட்டார் இலக்கியம் பற்றி பலர் பல கோணங்களில் வரையரை செய்துள்ளனர். அவற்றினை தொகுத்து நோக்குகின்ற போது பின்வரும் விடயங்களை நாட்டார் இலக்கியத்தின் பொது பண்புகளாக எடுத்துக் கூறலாம்.

கூட்டுப்படைப்பாக அமைந்தது,

பரம்பரைபரம்பரையாக கையளிக்கப்படுவது,

ஆசிரியர் பெயரில்லாதது,

இலக்கண வரையறைக்குட்படாதது,

பேச்சு வழக்கிலானது,

வாய்மொழியாக பரவப்படுவது,

எழுதப்படாதது,

அச்சிடப்படாதது,

பல்வேறு வடிவங்களாக திரிபடைவது,

குறித்த மக்கள் குழுவினரால்;; பகிர்ந்துக் கொள்ளப்படுவது,

மிக அன்மைக் காலம் வரை நாட்டார் இலக்கியம் “எழுதப் படாதது”, “அச்சிடப்படாதது” என தமிழக, இலங்கை நாட்டாரியல் ஆய்வாளர்கள் கருதினர். இத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகள் புரிந்த நா. வானமாமலை இது விடயத்தில் தெளிவானதோர் நிலைபபாட்டினையே கொண்டிருந்தார். அவரது பின்வரும் கூற்று கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்:

“ஒரு நாட்டுப்பாடல் எப்படி உருவாகிறது? தொழில் களங்களில் ஒரு பாட்டை பலர் உருவாக்கலாம். ஏற்றம், நடுகை முதலிய தொழில் பாடல்கள் தொழிலாளரது பொதுவான உணர்ச்சியால் இசையாகி வெளிப்படுவன. அதுவல்லாமல் ஒரு சமூக நிகழ்ச்சியை வருணிக்கவும், சிக்கலான கதையமைப்பையுடைய கதையை பாடலாக பாடவும் இந்த முறை உதவாது. சிவகாசிக் கலகத்தை எடுத்துக் கொள்வோம். இத்தொகுப்பிலே நாலைந்து பாடல்கள் உள்ளன. அவற்றில் இரண்டில் எழுதியவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எழுதப்பட்டால், எழுதியவர் பெயர் தெரிவதால் மட்டும் அது நாட்டுப்பாடல் தன்மையை இழந்து விடாது.”

இரத்தின சுருக்கமான இவ் வரிகளை நோக்குகின்ற போது ஓர் உண்மை வெளிப்படுகின்றது. அதாவது நாட்டார் இலக்கியம் என்பதே ஒரு நிகழ்வின் மீது பொது மக்கள் கொண்டிருக்கின்ற உணர்வினைப் பிரதிப்பலிப்பதாகவே அமைந்துள்ளன. எழுதப்பட்ட இலக்கியம் மக்களின் உணர்வுடன் சம்பந்தப்பட்டு நாட்டார் பண்பாட்டு மதிப்புகளுக்கேற்ப அது பரவுமாயின் அது நாட்டார் இலக்கியமாகும். மலையக கூத்துகளில் பாடப்படுகின்ற பெரும்பாலான பாடல்கள் அச்சிடப்பட்டு நூல்களாக(உதாரணமாக காமன் கூத்தில் பாடப்படுகின்ற பாடல்களில் பெரும்பாலானவை நவரத்தின ஒப்பாரி என்ற தொகுப்பில் அடங்கியவையாகும்) வெளிவந்தவையாகும். எனவே நாட்டார் இலக்கியத்தின் பொது தன்மை என்பது அதன் படைப்பில் இல்லை. அதன் பரவுத் தன்னையிலே தங்கியிருக்கின்றது என்பதை மேனாட்டு விமசகர்கள் கூறுவர். இன்னொரு உதாரணத்தை இவ்விடத்தில் நோக்குவோம்; :

தண்டுக்கலா தோட்டத்திலே

திண்டு முண்டு கணக்கப்பிள்ளை

துண்டு துண்டா வெட்டிடாங்க

யாரோ தாங்க

கண்ட துண்டமாக போச்சிங்க

கழுத்து முண்டம்

கைலாசம் சேர்ந்திருச்சிங்க

இப்பாடல் ஹட்டன் பகுதியில் உள்ள தண்டுகலா என்ற தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவத்தை ஆதாரமாக கொண்டு ஜில் சுல்த்தான் என்பரால் எழுதப்பட்ட பாடலாகும். இப்பகுதி மக்களிடையே இப்பாடல் செல்வாக்கு பெற்று பரவியிருக்கின்றது. சாதாரண தோட்டத் தொழிலாளர்கள் யாரைக் கேட்டாலும் பாடிக் காட்டுவார்கள். ஆனால் பாடியவர் பெயர் தெரியாது. பாடலின் வடிவம் மெட்டு என்பன நாட்டார் பாடல் வடிவத்திலே அமைந்திருப்பதைக் அறியலாம். எனவே இப்பாடல் மலையக நாட்டார் பாடல் என்ற தகுதியைப் பெறுகின்றது.

இன்னொருபுறத்தில், நாட்டார் இலக்கியம் என்பது சமுதாயத்தின் ஓர் அம்சம். கலையாக்க மரபுகள், விழுமியங்கள் என்பனவற்றின் களஞ்சியமாகவும் உள்ளன. ஆகவே மனிதன் படைக்கும் ஏனையப் பொருட்களைப் போலவே நாட்டார் இலக்கியமும் கால தேச வர்த்தமானங்களுக்கு கட்டுப்பட்டது. சமுதாய மாறுதல்களுக்கு ஏற்ப நாட்டார் இலக்கியமும் மாற்றமடைகின்றது. இம் மாறுதலை பிரதிப்பலிக்கும் வகையில் புதிய சிந்தனைகளும் உணர்ச்சிப் போக்குகளும் தோன்றுகின்றன. எழுத்தறிவற்ற பாமர மக்களிடையே வாய்மொழியாக பரவிய இலக்கிய தொகுதியே நாட்டார் இலக்கியம் எனத் தவறாக கருதினர். அத்தகைய பார்வை கொண்ட நாட்டாரியல் ஆய்வாளர்கள் சிலர் எழுத்தறிவு குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி பெற்ற புதிய சூழலில் தோன்றிய புதியபாடல்களையும் கதைகளையும் நாட்டார் இலக்கியமாக ஏற்கத் தவறினர். மலையகத்தை பொறுத்த மட்டில் நாட்டார் இலக்கியம் குறித்த ஆய்வுகளில் இத்தகைய தவறான பார்வை நிலவி வருகின்றது.

மலையகத்தில் காலத்திற்கு நாட்டார் இலக்கியத்தில் மாற்றங்கள் ஏற்பட்டே வந்துள்ளன. சில சமயங்களில் சில நாட்டார் இலக்கியம் என்பது வழக்கொழிந்து செல்கின்றது. உதாரணமாக இன்று மலையகத்தில் ஒப்பாரி பாடல்களும் நலுங்கு பாடல்களும் மறைந்து வருகின்றன. பல இடங்களில் ஒப்பாரி வைப்பதற்காக “கூலிக்கு மாரடித்தல்” என்ற நிலையில்; காணப்படுகின்றது. இந்நிலையில் சில நாட்டார் பாடல்களும் கதைப்பாடல்களும், கூத்துகளும் மறைகின்றன என்ற வகையில் அவை முழுமையாக மறைகின்றன என குந்தி நாம் ஒப்பாரி வைக்க வேண்டியதில்லை. இன்று இப்பார்வையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை மு. சிவலிங்கத்தின் “மலையகத் தமிழர் நாட்டுப்புற பாடல்கள்” என்ற தொகுப்பு எடுத்துக் காட்டுகின்றது. இத் தொகுப்பில் எழுதப்பட்டு பின் மலையக நாட்டார் பாடல் தகுதியை பெற்ற சில பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் தொண்ணூறுக்கு பின் லெனின் மதிவானம் தனது எழுத்துக்களில் இதனை வலியுறுத்தியுள்ளமையும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

இவ்விடத்தில் பிறிதொர் விடயம் குறித்த தெளிவும் அவசியமானதொன்றாகின்றது. நாட்டார் பாடல்கள் வாய்மொழி தொடர்பு பட்டவையெனவும் அவற்றை எழுத்து வடிவிற்கு கொண்டு வருகின்றபோது அதன் பண்பை இழந்து விடுகின்றது என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. மலையக மக்களின் கல்வி தகுதியை எடுத்து நோக்குகின்றபோது எழுத்தறிவு மட்டம் மிகவும் தாழ்ந்த நிலையிலேயே காணப்படுகின்றது. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த எழுத்தறிவு மட்டத்தில் இந்த நிலையை நினைத்துப்பார்த்திருக்க கூட முடியாது. இந்நிலையில் மலையக மக்களின் நாட்டார் பாடல்களை சேகரித்து வைத்திருக்க கூடிய வசதியோ வாய்ப்போ கிடைத்திருக்காது. மேலும் மலையக நாட்டார் பாடல்களை ஏட்டிற்கு கொண்டு வருகின்ற முயற்சிகள் மிகவும் அரிதாகவே காணப்பட்டது. சி. வி. வேலுப்பிள்ளை மலையகமக்களிடையே வாய்மொழியாக காணப்பட்ட நாட்டார் பாடல்கள் சிலவற்றினை தொகுத்து வெளியிட்டமை இத்துறையில் மிக முக்கியமான சாதனையாக அமைந்துள்ளது. சி.விக்கு பின்னர் இத்துறையில் குறிப்பிடத்கக சாதனைகள் இடம்பெறவில்லை என்ற போதினும் மு.சிவலிங்கத்தின் மலையக நாட்டார் பாடல் தொகுப்பு பயனள்ள முயற்சியாக காணப்படுகின்றது. இவைத் தவிர மலையக நாட்டுப்புறவியல் குறித்த பாடல்கள் கதைகள், மற்றும் அது தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டு வருவதில் பேராசிரியர்கள் ந.வேல்முருகு, க. அருணாசலம், கலாநிதிகள் துரை.மனோகரன், காரை எஸ். சுந்தரம்பிள்ளை திருவாளர்கள் ஏ.பி.எம். கோமஸ், சாரல் நாடன், அந்தனி ஜீவா, வ.செல்வராஜா, சு.முரளிதரன் லெனின் மதிவானம்,ஸ்டாலின் சிவஞான ஜோதி திருமதிகள். அம்பிகை வேல்முருகு ஆர். ஜோதிமலர், சோபனாதேவி முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மலையக மக்கள் தென்னிந்திய தமிழ் கிராம பின்னணியை தமக்கு தாயமாக கொண்டவர்கள் என்ற போதினும் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட பெருந்தோட்ட பயிர் செய்கை முறையின் புதிய சூழல், உற்பத்தி முறை, உற்பத்தி உறவு என்பனவற்றுக்கேற்றவகையில் ஒரு பரந்துப்பட்ட தொழிலாள வர்க்கமாக மாற்றப்பட்டனர். தென்னிந்தியாவில் பாடப்பட்ட நாட்டார் பாடல்கள் எவ்வாறு இலங்கையின் பெருந்தோட்ட சூழலுக்கு ஏற்றவகையில் எவ்வாறு மாறறமடைந்தது என்பதை பின்வரும் பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன.

தென்னிந்தியாவில்….!

ஏத்தமடி தேவிகுளம்

ஏறக்கமடி மூணாறு

தூரமடி நைனாக்காடு

தொயந்துவாடி நடந்துபோவோம்

என பாடப்பட்ட பாடல் இலங்கையில்….!

ஏத்தமடி பெத்துராசு

இறக்கமடி ராசாத்தோட்டம்

தூரமடி தொப்பித் தோட்டம்

தோடந்துவாடி நடந்துப் போவோம்.

என மாற்றமடைந்துள்ளது.

தென்னிந்தியாவில்….!

ஓட்டவரத பாருங்கடி

ஓட்ட ஒசந்து வரத பாருங்கடி

ஓட்ட மேலே நம்மையா முதலாளி

ஓசந்த சம்பளம் கேளுங்கடி

என பாடப்பட்ட பாடல் இலங்கையில்….!

குதிரவரத பாருங்கடி

குதிர குணிஞ்சி வரத பாருங்கடி

குதிர மேலே நம்மையா கங்காணி

கும்பிட்டு சம்பளம் கேளுங்கடி

என மாற்றமடைந்துள்ளது.

மேற்குறித்த பாடல்கள் தென்னிந்திய வாழ்கையை பிரதிப்பலிப்பதாக மாத்திரமன்று புதிய சூழ்நிலைக்கேற்ப அவர்களது வாழ்முறைகளும் மாற்றமடைந்து உள்ளதை காட்டுகின்றது. இவ்வாழ்நிலை மாற்றம் என்பது மேல்வாரியானதொன்றாக அல்லாமல் அடிப்படையான மாற்றமாகவும் அமைந்துக் காணப்படுகின்றது. தென்னிந்தியாவில் நிலவுடமை சமூகவமைப்பில் விசாயிகளாக கட்டுண்டு கிடந்த மக்கள் நிலம் பற்றிய சிந்தனையுடன் இருந்தனர். எடுத்துக்காட்டாக பின்வரும் பாடலை நோக்கலாம்.

ஊரான ஊரிழந்தேன்

ஓத்தப்பனை தோப்பிழந்தேன்

பேரான கண்டியிலே

பெத்த தாய நாமறந்தென்.

பாதையிலே வீடிருக்க

பழனிச் சம்பா சோறிருக்க

எருமே தயிருக்க

ஏன்டி வந்தே கண்டிச் சீமை

என்ற வரிகள் தாயக நினைவுகளை மீட்பதாக மட்டுமன்றி தமது உடமைக் குறித்த சிந்தனையையும் நிலம் குறித்த சிந்தனையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துக் காணப்படுகின்றது. இவ்விடத்தில் பிறிதொரு விடம் பற்றியும் நோக்க வேண்டியுள்ளது. மலையகத்தில் ஆரம்பத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கோப்பிப் பயிர்செய்கையை பருவக்கால பயிர்ச்செய்கையாக அமைந்தமையினால் மலையகதோட்டத் தொழிலாளர்கள் தமக்கு வேலையில்லாத காலங்களில் இந்தியாவிற்கு சென்ற வந்தனர். தேயிலை உற்பத்தி தொடங்கிய பின்னர் இந்நிலைமை மாற்றமடைந்தாலும் 1957 இல் திருச்சிராபள்ளியில் இருந்த இலங்கையின் குடியகல்வு அலுவலகம் முடப்படுமட் வரையில் மலையக தோட்டத் தொழிலாளர்கள் இந்தியாவிற்கு போய் வந்துக் கொண்டிருந்தனர் என்பதை பி.ஏ. காதர் தமது ஆய்வுகளில் வெளிக் கொணர்ந்துள்ளார். இந்நிலையில் மலையக மக்களிடையே தமது இருப்பு மற்றும் தேசியம் குறித்த சிந்தனை ஆரம்ப நிலையிலிருப்பதைக் காணலாம்.

பிறந்த மண்ணைத் துறந்து புகுந்த மண்ணில் தம் வாழ்வை அமைத்த போது அவர்களின் உணர்வுகள் இவ்வாறு பிரவாகம் கொண்டன.

“கூனி அடிச்ச மலை

கோப்பிக் கன்னு போட்ட மலை

அண்ணனைத் தோத்தமலை

அந்தா தெரியுதடி



எண்ணிக் குழி வெட்டி

இடுப்பொடிஞ்சி நிக்கயிலே

வெட்டு வெட்டு என்கிறானே

வேலை யத்த கங்காணி

அந்தமுனா தோட்டமினு

ஆசையாத் தானிருந்தேன்

ஓர மூட்டத் தூக்கச் சொல்லி

ஓதைக்கிறாரே கண்டாக்கையா



காலையிலே நெர புடிச்சு

காட்டுத் தொங்க போய் முடிச்சு

கூட நெறயலேயே- இந்தக்

கூனபய தோட்டத்திலே



கல்லாறு தோட்டத்திலே

கண்டாக்கையா பொல்லாதவன்

மொட்ட புடுங்குதின்னு

மூணாள விரட்டி புட்டான்



கோனக்கோன மலையேறி

கோப்பிப் பழம் பறிக்கையிலே

ஒரு பழம் தப்பிச்சினு

ஒதைச்சானய்யா சின்ன தொரை

போன்ற பாடல்கள் ஒரு முதலாளித்துவ சமூகமைப்பில் மலையக மக்கள் தம் உழைப்பை விற்க கூடிய தொழிhளர் வர்க்கமாக எவ்வாறு மாற்றப்பட்டார்கள் என்பதனையும் அம் மக்களின் மீதான உழைப்புச் சுரண்டல், இழப்புகள் என்பனவற்றை வேதனையோடு எடுத்துக் காட்டுகின்றன. இப்பாடல்களில் அவர்களோடு நேரடி தொடர்புக் கொண்டிருந்த பெரியாங் கங்காணி, கங்காணி, கணக்கப்பிள்ளை, கண்டக்டர், துரை(தோட்ட நிர்வாகி) ஆகியோர் பற்றியும் அவர்களிடையே ஏற்படுகின்ற முரண்பாடுகள் பற்றிய அம்சங்களே முனைப்புற்றுக் காணப்படுகின்றன. இந்த அடிப்படையில் பார்க்கின்ற போது மலையக நாட்டார் பாடல்கள் மலையக மண்ணின் தனித்துவங்களை உள்வாங்கி தனித் துறையாகவே விளங்குகின்றது. இவ்வாறு தமது துன்னபத் துயரங்களைப் பாடிய அம்மக்கள் தமது ஒடுக்கு முறைகளுக்கு எதிராக தமது போர்க் குணத்தையும் வெளிக்காட்டத் தவறவில்லை. பின்வரும் பாடல்கள் அவர்களின் போர்க்குணத்தை எடுத்துக்காட்டத்தவறவில்லை.

கங்காணி கங்காணி

கருத்தச்சட்டை கங்காணி

நாலு ஆளு வரலேன்னா

நக்கிப் போவான் கங்காணி



கங்காணின்னா கங்காணி

கறுப்புச் சட்டை கங்காணி

சஞ்சியிலே கூட்டி வந்து

சீரழிக்கும் கங்கானி



ஆனை வாரத பாருங்கடி

ஆனை அசைந்து வரதபாருங்கடி

ஆனை மேலே வர சின்னத்தொரய

அதட்டி சம்பளம் கேளுங்கடி

போன்ற பாடல்கள் தம்மை ஈவிரக்கமற்ற வகையில் கொடுமைப்படுத்திய நிர்வாக அதிகாரிகள் பற்றி பாடல்களாக அமைந்துள்ளன. இப்பாடல் வரிகளை நுணிந்து நோக்குகின்ற போது இம்மக்கள் எங்கிருந்தோ வந்து தயாராக இருந்த பொருளாதாரத்தை கபளீகரம் செய்துக் கொண்டவகல்லர். முறாக தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் இம்மண்ணுக்கு தாரைவார்த்தே இப் ப+மிமை பசுமைநிறைச் சோலைகளாக்கினர். ஒரு புறமான சுரண்டலும் மறுப்புறமான ஒடுக்குமுறைகளும் இம்மக்கள் இம்மண்ணுக்குரியவர்கள் என்ற உணர்வை ஏற்படுத்தியது. இந்த பின்னணியில் எழுந்த தேசிய உணர்வுகளையும் நாம் மேற்குறித்த நாட்டார் பாடல்களில் காணக் கூடியதாக உள்ளது.

நாட்டார் இலக்கியம் என்பது உழைக்கும் மக்கள் திரளினரின் படைப்பு என்பதற்காக அவற்றில் இழையோடியுள்ள அனைத்து அம்சங்களும் போர்க்குணம் மிக்கவையாகவோ அல்லது முற்போக்கானவையாகவோ கொள்ளவது அபத்தமாகும். கிராமபுறத்தை அல்லது தோட்டப்புறத்தை இன்பலோகமாக காணுவதும், அங்கு முரண்பாடுகள் இல்லையென பார்ப்பதும் ஒருவித உள்ளாச பிரயாணிகள் மனோப்பாவமாகும். அவ்வாழ்க்கையை உள்நின்று பார்ப்பவர்களுக்கு அங்கும் சூது. களவு, பொறாமை, சமரசம் முதலிய மனோபாவங்கள் நிறைந்திருப்பதை அவதானிக்கலாம். இவ்வாழ்க்கையின் அடியாக தோன்றுகின்ற நாட்டார் இலக்கியத்திலும் இவ்வம்சம் விரவிக் கிடக்கும். கதைப்பாடல்களில் இதன் தாக்கத்தை முழுமையாக காணலாம்.

“கட்டபொம்மு, கான்சாகிபு, முத்துப்பட்டான், காத்தவராயன், குலசேகர பாண்டியன் போன்றோர் மேலாதிக்கத்தை எதிர்த்து முரண்பட்டு மடிந்து நாட்டார் மனத்தில் இடம் பெற்றுவிட்ட வீரத்தியாகிகள் ஆவர். கட்டமொம்முவும் கான்சாகியும் வெள்ளை மேலாதிக்கத்தையும், பட்டனும் காத்தவராயனும் நிலப்பிரபுத்துவத்தையும், குலசேகரன் கன்னடிய ஆமலாதிக்கத்தையும் எதிர்த்து மடிந்தார்கள். இவர்களது வீரத்தையும் தியாகத்தையும் வெகுவாக புகழ்கின்ற கதைப்பாடல்கள், இவர்கள் எதிர்த்து நின்ற மேலாதிக்கங்களைக் கடுமையாக சாடாதது குறிப்பிடத்தக்கது. சொல்லப் போனால் சில சமயங்களில் இவ்வீரர்களுக்கு சமமாக இம் மேலாதிக்கங்களும் புகழப்பட்டிருக்கின்றன என்பதே உண்மை. குண்டவர் நெஞ்சு திடுக்கிடும் தோக்கலவார் குலப் பாத்திபனாகிய கட்டபொம்முவின் வீரத்தை போற்றும் கதைப்பாடல்தான் சென்னையிலுள்ள மேலான துரைமார்களையும் பணிவுடன் புகழ்கின்றது. கட்டபொம்முவின் கதையை சொல்லுகிற கதைப்பாடல்கள் எதுவுமே வெள்ளையர்களின் கொடுமையான சுரண்டலை எங்குமே சுட்டிக்காட்டவில்லை.”(மார்க்ஸ்.அ, 1991, மார்க்சியமும் இலக்கியத்தில் நவீனத்துவமும், பொன்னி புத்தக மையம், சென்னை.பக். 116,117.)

மலையகத்தில் கதைப்பாடலாக உள்ள மதுரைவீரன் கதை இதற்கு தக்க எடுத்துக்காட்டாகும். தாழ்த்தப்ட்ட சக்கிலியர் சாதியினரான மதுரைவீரன் நாயக்க மன்னனின் மகள் பொம்மியை காதலித்து சிறைப்பிடிக்கின்றான்;. பொம்மியின் தந்தையும் அவர்களது உறவினர்களும் மதுரை வீரனை எதிர்த்துப் போரிட்டு மடிகின்றனர். மதுரைவீரன் திருமலைநாயக்கனிடம் பணியாற்றும் போது நாயக்க மன்னனின் வேளத்திலிருந்த வெள்ளையம்மாளை அவன் சிறையெடுக்க முனைந்த போது மன்னால் பிடிக்கப்பட்டு மாறுகை மாறுகால் வாங்கப்பெற்று தண்டனைப்பெறறான் எனக் கதை அமைந்துள்ளது. அதே கதை உயர்வக்கச் சார்பில் மறுவாசிப்பும் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ளது.

மதுரைவீரன் காசி அரசனின் மகன் என்றும் விதிவசமாக சக்கிலியர்களால் வளக்கப்பட்டான் எனவும் பிற்காலத்தில் கதை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஓர் உயர்சாதிப் பெண்ணை- உயர் வர்க்கத்தை சார்ந்த பெண்ணை உயர்சாதி- உயர்வர்க்க ஆடவன் ஒருவன் தான் காதலிக்கவோ மணக்கவோ முடியும் எனும் சாதி வர்க்க தர்மத்தை பாதுக்காப்பதற்காக இக்கதை இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது. இறுதியாக அவனை தெய்வமாக உயர்த்தவதும் இத்தகைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்குகாகத்தான் என்பதனையும் அறிய முடிகின்றது. மறுப்புறத்தில் தாழ்த்தப்பட்டவர் ஒருவர் மக்கள் மத்தியில் உயர் செல்வாக்கு பெறுகின்ற போது அதனை பொறுத்துக் கnhளள முடியாது தமது வர்க்கத்தினருக்குரியவராக மாற்றியமைக்கின்ற நிலையினையும் நாம் இங்கு காணக் கூடிதாக உள்ளது. இவ்வாறே மலையகத்தில் நிகழ்த்தப்படுகின்ற கூத்துகலையான காமன் கூத்தில் சிவனுக்கு எதிரான(மாயவரை தம்மோடு இணைந்த கடவுளாக கொண்டிருப்பினும்) பாடல்களும் உணர்வுகளும்(சில சமயங்களில் சிவன் கஞ்சா குடித்து மயக்க நிலையில் இருப்பதாகவும் சித்திரிக்கப்படுகின்றது) முக்கியத்துவம் பெற்றிருந்தாலும் இறுதியாக சிவனை யாராலும் வெல்ல முடியாது என்ற சைவ மேலாதிக்கம் வெற்றிப் பெறுவதனை அவதானிக்கலாம். நாட்டுப்புறப்பாடல்களுடன் கதைப்பாடல்களை ஒப்பு நோக்குகின்ற போது ஓர் உண்மை வெளிப்படுவதனை அவதானிக்கலாம். கதைப்பாடல்களிலே அதிகமாக இந்த சமரசப் போக்குகள் முனைப்புற்றிருக்கின்றன. கதைப்பாடல்களின் உருவாக்கத்தில் அதனை படைப்பவர் யார், அதன் நுகர்வோர் யார், பாடலாசிரியருக்கும் நுகர்வோருக்கும் இடையிலான தொடர்பு என்பன இங்கு தாக்கம் செலுத்தக் கூடியதாக அமைந்திருப்பதை காணலாம். நாட்டார் பாடல்கள் உழைக்கும் சூழலில் பாடப்படுவதால் அவற்றில் சூழலின் நேரடியான தாக்கம் இருப்பதனால்; சமரசப் போக்குகள் குறைவாக காணப்படுகின்றன. இருப்பினும் அவற்றிலும் சமரசப் போக்குகள் இல்லை என்றுக் கூறுவதற்கில்லை. எடுத்துக் காட்டாக கங்காணி, கணக்கபிள்ளை சின்னத்துரை முதலானோர் பற்றி பாடல்களில் இப்பண்பினை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

சில பாடல்களை நோக்குவோம்…!

திண்ணயத் திண்ணையை கூட்டுங்கடி- அந்த

தெருவு திண்ணைய கூட்டுங்கடி

நம்மையா கங்காணி சாஞ்சிருக்கிற

சருகை திண்ணைய கூட்டுங்கடி



பாகை படந்ததை பாருங்கடி- அது

பத்திப் படந்ததைப் பாருங்கடி

பாகை விதைபோல நம்மையா கங்காணி

பல்லு வரிசையைப் பாருங்கடி



ஆறடிதான் வங்களாவாம்

அறுவதடி ப+ந்தோட்டம்

ப+ஞ்செடிக்கு தண்ணிபோடும்

புண்ணியரே என் பொறப்பு



சாமித் தொரை பங்களாவில்

தாராவும் கோழியும் மேயுதாம்

தோட்டத்தை சுத்தி ப+ஞ்செடியாம்

சுத்தி வளைஞ்சு பாருங்கடி



பொட்டுப் பொட்டா கையெழுத்தாம்

பொண் பதிச்ச பேணாவாம்

ஆதரிச்சு பேரு போடும்

நம்மையா கணக்கபிள்ளை

இப்பாடல்களை அவதானிக்கின்ற போது தம்மை இழிவாக நோக்கி அவர்களின் உழைப்பை சுரண்டுகின்ற இதர வர்க்கங்களுடன் சமரசம் செய்துக் கொள்கின்ற பண்பினை நாட்டார் பாடல்களில் காண்க் கூடியதாக உள்ளது.

எழுத்திலக்கியமோ கல்வெட்டு ஆதாரமோ கிடைக்கப் பெறாத நிலையில் அவற்றினை தேடி ஆராய்வதற்கும்- தமது இருப்பினை நிலைநிறுத்துவதற்கும் நாட்டார் இலக்கியம் குறித்த தேடல் ஆய்வு என்பன அவசியமாக காணப்பட்டன. நவீனக் காலத்தில் நாட்டார் இலக்கியத்தின் ஊடாக சமூக வரலாற்றை தேடுவதற்கு பதிலாக உழைக்கும் மக்களின் சமூகமாற்றப் போராட்டத்தின் ஒர் அங்கமாக நாட்டர் இலக்கிய சேகரிப்பு ஆய்வு முயற்சிகள் நடைப்பெறுகின்றன. அம் முயற்சி இரு தளங்களில் இடம்பெற்று வருவதனைக் காணலாம்.

நாஜி ஜேர்மனியில் இட்லர் மக்களிடையே இனத்துய்மையை வளக்கவும் அதனூடாக மக்களை ஆரிய இனவெறியர்களாக மாற்றுவதற்கும் ஏற்ற சாதனமாக நாட்டாரியலை துணையாக்கிக் கொண்டான். இவ்வாறே ஆதிக் அரசியல், நாட்டார் வழக்காறுகளில் செவ்வியல் கூறுகளை இணைத்து அதன் ஆன்மாவை சிதைக்கின்றது. தமிழ் நாட்டை பொறுத்தளவில் நாட்டார் வழிபாட்டு முறைகளில் மத அடிப்படைவாத அரசியலின் ஊடுருவல் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. நாட்டார் தெய்வங்கள் பிறப்பு மாற்றம் செய்யப்பட்டு அவர்கள் வடமொழியாக்கம் பெறுகின்றன. பன்முகத்தன்மை வாய்ந்த நாட்டார் வழிபாட்டு முறைகள் ஒழிக்கப்பட்டு ஒரேவகையான நிறுவன சமய வழிப்பாட்டு முறை திட்டமிட்;டு அறிமுகப்படத்தப்படுகின்றது. (சிவசுப்பிரமணியம்.ஆ.-2005, நாட்டார் வழக்காற்றியல் அரசியல், கங்கு வெளியீடு, சென்னை, ப. 58.)

சோவியத் ரசியாவில் நாட்டார் இலக்கியத்தின் சமூக பயன்பாடு என்பது வேறுவிதமாக அமைந்திருந்தது. வர்க்கமற்ற சமூதாயத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தில் நாட்டார் இலக்கியத்தை துணையாகக் கொண்டனர். நாட்டார் இலக்கியத்தில் காணப்பட்ட தொழிலாளர் விவசாயிகளின் எழுச்சிகளையும் போராட்டங்களையும் கவனத்திலெடுத்தனர். உழைக்கும் மக்களின் நல்வாழ்வுக்கான போராட்டங்களை முன்னெடுக்கின்ற போது அம் மக்களின் விருப்பு வெறுப்பு அவர் தம் உறுதிப்பாடு போராட்டங்கள், எழுச்சிகள் முதலியன பற்றிய தேடல்கள் அவசியமாகும் இதனை நாட்டாரியலில் இருந்தே தேடினர். மக்களின் எதிர்க்குரலை வெளிப்படுத்தும் நாட்டார் இலக்;கியங்களை சமூகமாற்றப் போராட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை முன்வைக்கப்பட்டது.

நவீன காலத்திலும் நாட்டார் இலக்கியம் என்பது தமது சமூக வர்க்க தேவைகளுக்கு ஏற்றவகையில் மறுவாசிப்பு செய்யப்பட்டுள்ளன. பின்நவீனத்துவவாதிகள் உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எதிரான வகையில் நாட்டார் இல்கியத்தை மறுவாசிப்பு செய்துள்ளனர். இவர்களின் ஆய்வுகளில் தலித்தியம், பெண்ணியம், தேசியம்(குறுந் தேசிய வாதம்) முதலியன முனைப்புற்றிருக்கும். மறுப்புறத்தில் பொது மக்கள் சார்பான கண்ணோட்டத்தில் நாட்டார் இலக்கிய தொகுதி மறுவாசிப்பு செய்யப்பட்டுள்ளதையும் அவதானிக்கலாம். பாரதியின் பாஞ்சாலி சபதம், பிரளயனின் உபகதை நாடகம் முதலியவற்றை இங்கு உதாரணங்களாக குறிப்பிடலாம்.

எனவே நாட்டார் இலக்கிய தொகுதியை அரசியல் தளத்தில் பயன்படுத்துகின்ற போக்கு 19 ஆம் நூற்றாண்டிலிருந்தே இடம்பெற்று வந்துள்ளதை அவதானிக்கலாம். அப் போக்கு முனைப்படைந்துள்ளது இன்று உலகளவில் முக்கியத்துவம் பெற்று வருவதைக் காணலாம். நாட்டர் விளையாட்டுகள் எவ்வாறு அரசியலுக்கு(பிலிப்பைன்ஸ் நாட்டின் சர்வதிகாரியாக திகழ்ந்த மார்கோ என்பருக்கு எதிராக அவனால் கொல்லப்பட்ட தளபதி அக்வினோவின் மனைவி கோரி அக்வினோ அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது)பயன்படுகின்றது என்பதற்கு 1980 களில் பிலிப்பைன்ஸ் நாட்டில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அம்மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்த சேவல் சண்டையை எவ்வாறு பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதை உதாரணமாக காட்டலாம்.

“இரண்டு நிஜமான கோழிகளை மோத விடுவதற்கு பதிலாக அக்வினோ மாதிரி முகமூடி அணிந்த சேவல், மார்க்கோ முகமூடி அணிந்த இன்னொரு சேவல் என்ற இரண்டு மனித உருவங்களை மோத விட்டார்கள். இந்தச் சண்டைக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குபவராக அப்போhது அமெரிக்க ஜனாதிபதியாவிருந்த ரெனால்ட் ரீகனின் முகமூடி அணிந்த இன்னொருவர்.
நாடகமாக மாற்றப்பட்ட இவ்விளையாட்டை மக்கள் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஓவ்வொரு சுற்றிலும் அக்வினோ வென்றாலும் தீர்ப்பு மார்க்கோவிற்கு சாதகமாக வழங்கப்படுகிறது. மக்கள் வெளியில் இருந்து கூச்சலிடுகிறார்கள். ஆனால் ரீகன் திருந்துவதாயில்லை. திரும்பவும் அடுத்த சுற்றில் அக்வினோ தான் வெல்கிறார். ஆனால் தீர்ப்பு மார்க்கோவிற்கு சாதமாக வழங்கப்படுகின்றது. திரும்பவும் மக்கள் கூச்சலிடுகிறார்கள். ரீகன் திருந்துவதாய் இல்லை. அடுத்தும் இது போல் பாதகமான தீர்ப்பு வழங்கப்படுகிற சமயத்தில் ஆடுகளத்தில் புகுந்து ரீகனை தூக்கிப் பொட்டு விட்டு மக்கள் தீர்ப்பு வழங்குகின்ற பொறுப்பினை கையில் எடுக்கிறார்கள். நாடகமும் நாட்டார் விளையாட்டும் இங்கு மக்கள் பங்கேற்பினை உருவாக்கியது. நாட்டில் அந்தந்த ஊரில் ஒரே நாளில் பலவிதமான குழுக்கள் இதனைச் செய்ததால் மக்களை வாக்களிக்கும் முன் சிந்திக்கிற நிலைக்கு கொண்டு போய் விட்டது. இதற்கு பின்புலத்தில் இருந்த இயக்கத்திக் பெயர் ‘PETA’ (Phillipines Educational Theatre association).  . (மு.கு நூ.பக்.41,42.)

மலையக நாட்டர் பாடல்களை ஊன்றிக் கவனிக்கின்றபோது ஓர் உண்மை தெளிவாக தெரிய வரும். நாட்டாரியல் ஆராய்ச்சிக்கே உரிய சில சிறப்பு நெறிமுறைகள் இருப்பினும் ஏனைய துறைகளில் பயின்றுவரும் ஆய்வுநெறிகளும் அணுகுமுறைகளும் தவிர்க்கவியலாதவாறு அதற்குப் பொருத்தமானவையாக அமைந்துக் காணப்படுகின்றன.உதாரணமாக மலையக மக்களின் வரலாறு தொடர்பான நம்பகமான சான்றுகள் இல்லாத போது அல்லது தெரியாத காலக்கட்டத்தில்- சென்ற ஆண்டின் நடுப்பகுதியில் பொதுவாக மலையக நாட்டார் பாடல்கள் தொகுப்பு முயற்சிகளும் அவற்றிக்கு விளக்கமளிப்பதுமே தேவையாக இருந்தது. அவ்வாறாக நாட்;டார் பாடல்களுக்கு விவரன விளக்கம் அளிப்பது கூட மொத்தப் பெரும் சாதனையாக அமைந்தக் காணப்பட்டதில் வியப்பொன்றுமில்லை. அதற்கு பிற்பட்டக் காலங்களில் மலையக மக்களின் வரலாற்றை அறிவதில் -அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதிலும் மலையக நாட்டார் இயல் ஆய்வாளர்கள் முக்கிய கவனமெடுத்து வந்துள்ளனர். அவ்வகையில் மலையக மக்களின் வாழ்வையும் வரலாற்றையும் தேடி பெறுவதில் இவ்விலக்கிய தொகுதி முக்கியமான ஆவனமாக திகழ்ந்துள்ளது.

தற்காலத்தில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வானது பண்பாட்டு கலசமாக பாதுக்காக்கின்ற அல்லது இரசனை வழி மதிப்பீடுகளாகவோ, வரலாற்றை தேடும் ஆய்வு முயற்சிகளாகவோ அல்லாமல், சமூமாற்றத்தித்திற்கான போராட்டத்தில் அதன் பயன்பாடு குறித்த ஆய்வகளாகவே அவை வளர்ந்துள்ளன. “நாட்டர் இயல் ஆய்வு சேகரிப்பு என்பது வெறும் ஏட்டுச் சுரக்காயாக அல்லாமல் ஏகாதிப்பத்தியத்திற்கு எதிரான போராட்டமா அது திகழ வேண்டும்” என்பார் க.கைலாசபதி. அத்தகைய இயங்காற்றலை சாத்தியப்படுத்துவதற்கு உழைக்கும் மக்களின் விருப்பு வெறுப்பு, நம்பிக்கைகள், உளவியல் பிரச்சனைகள் பற்றிய தேடல் அவசியமானதொன்றாகின்றது. உழைக்கும் மக்களின் பண்பாட்டுக் கருவ+லமாக இருக்கும் நாட்டார் வழக்காற்றியலே குறிப்பிட்ட சமுதாயத்தின் உற்பத்தி முறை, உற்பத்தி உறவு அதனடியாக எழுகின்ற வர்க்க முரண்பாடுகளையும் கருத்தோட்டங்களையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. வர்க்க உணர்வுடன் தான் வரலாறு எழுதப்படுகின்றது மார்க்சியத்தின் அடிபபடை. அவ்வகையில் ஒவ்வொரு காலக்கட்டத்தின் வரலாறும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறாகவே முகிழ்ந்து வந்துள்ளதை வரலாறு எமக்கு எடத்துக் காட்டியுள்ளது. இத்தகைய சூழலில் வெளிப்படுகின்ற நாட்டார் பாடல்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிட்ட வர்க்கத்தின் போர்க்குணத்தையோ சமரசத்தையோ வெளிப்படுத்தி நிற்கும். சமூகமாற்றத்திற்கான இயக்கங்கள், புத்தி ஜீவிகள் நாட்டார் இலக்கியத்தில் காணப்படும் பலத்தை மட்டும் கருத்திற் கொண்டு செயற்படுவது பின்னடைவிற்கும் பலவீனத்தை மாத்திரம் கவனத்திலெடுத்து செயற்படுவது விரக்த்திக்கும் விழிவகுக்கும் என்பதை கடந்தகால அனுபவங்கள் எமக்கு எடுத்து காட்டியுள்ளன. இவற்றினை நாட்டார் இலக்கியத் தொகுதி யதார்த்தமாகவே பிரதிப்பலித்து நிற்கும். அந்தவகையில் நாட்டார் இலக்கியம் கடந்தகாலத்தை பிரதிப்பலிக்கின்ற கண்ணாடியாக மாத்திரமன்று நிகழ் காலத்தின் உரத்த குரலாகவும் அமைந்தக் காணப்படுகின்றது. இன்னொரு புறத்தில் வர்க்க மோதலின் பிரதிப்பலிப்பாகவும் ஆயுதமாகவும் திகழ்கின்றது. இந்த பின்புலத்தில் மலையக நாட்டார் பாடல்கள் சேகரிப்பும் ஆய்வுகளும் இடம்பெறவேண்டும்.

இன்னொரு புறத்தில், மலையக நாட்டார் இலக்கியம் குறித்து நோக்குகின்றபோது அவ்விலக்கிய தொகுதி மலையக மக்களின் வாழ்க்கையையும் கலாசார பண்பாட்டுக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டதொரு துறையாக காணப்படுகின்றது.

மலையகத்தை பொறுத்த மட்டில் நாட்டார் இலக்கியத்தில் இத்தகைய முயற்சிகள் குறைவாகவே காணப்படுகின்றன. இருப்பினும் நாட்டார் பாடல்களை மாற்றம் செய்தும் , மாற்றம் செய்யாமலும் புதிய பாடல்களை நாட்டார் இசைவகையில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. சி. சிவசேகரம் மலையக நாட்டர் இலக்கிய வடிவ மெட்டினை பயன்படுத்தி பின்வரும் கவிதையை எழுதியுள்ளார்.

கும்மியடி தோழி கும்மியடி- மலை

நாடு விழித்தெழக் கும்மியடி

நம்மை உறுஞ்சி கொழுத்திட்ட அட்டைகள்

காலில் நசிபடக் கும்மியடி



தேயிலை கிள்ளிய கைகளிற் செங்கொடி

கொள்ளை ஒளிவிடக் கும்மியடி

ஞாயங்கள் யாவர்க்கும் ஒன்று பொதுவொரு

நீதி எழுந்திடக் கும்மியடி



பள்ளிப்படிப்புக்கும் பட்டம் பதவிக்கும்

பிள்ளைகட்குத் தரம் இல்லையென்றார்

கள்ளங் கபடங்கள் கண்டு கொண்டாயெங்கள்

கல்வியுரிமைக்குக் கும்மியடி

….

கூடுகள் போல் லயன் காம்பராச் சீவியம்

கூலியடிமைக்குப் போதுமென்றார்

வீடு வளவுகள் வீதிகள் தோட்டங்களிற்

வேண்டும் எமக்கென்று கும்மியடி

இப்பாடல் வரிகளில் மலையக நாட்டார் இலக்கியத்தின் தாக்கம் காணப்படுவதனைக் காணலாம். இத்தகுதியை மாத்திரம் கொண்டு இவற்றை நாட்டார் பாடல்களாக கொள்ள முடியாது. இப்பாடல் மலையக மக்களிடையே பரவி நாட்டார் இலக்கியத் தன்மையை பெறுமாயின் அவற்றை நாட்டார் பாடலாக கொள்ள முடியும்.

மலையக நாட்டார் வழக்காற்றியல் நீரோட்டமானது அரசியல் சமூக பொருளாதார நோக்கில் ஆய்வு செய்யப்படல வேண்டும். ஆய்வு தேடல் மூலமாக கிடைக்கின்ற முடிவுகள் பொதுமைப்படுத்தப்படல் வேண்டும். நாட்டார் இலக்கியத்தில் உழைக்கும் மக்களின் எதிர்ப்புக் குரல் சற்று தூக்கலாக வெளிப்படும். இதனை ஆதாரமாகக் கொண்டு அவ்விலக்கிய தொகுதியில் சமரசப் போக்குகள் இல்லை என்ற முடிவுக்கு வரவேண்டியதில்லை. நாட்டார் இலக்கியத்திலும்; சமரசங்கள், மௌனங்கள், குறிப்பிட்ட காலக் கட்ட கருத்துநிலைகளில் உருவாகும் ஆதிக்க கருத்துக்கள் என்பன இடம்பெறும். இவற்றினையும் கவனத்திலெடுத்துக் கொள்ளல் அவசியம்.

மனித சமூகத்தின் வளர்ச்சியை தூண்டும் சக்தியாக அதிகாரத்திற்கு எதிராக போராடும் வர்க்கங்கள், வர்க்கப் போராட்டத்தின் மூலமாகவே சமூகத்தை மாற்றியமைக்க முடியும். தமது அடிமை முறையிலிருந்து விடுப்பட்டு பொருளாதார ரீதியாகவும் ஆத்மார்த்த ரீதியாகவும் சுதந்திர பிரஜையாக வாழ முடியும். இந்த விடுதலையை அடைவதற்கு தொழிலாளர்கள்-விவசாயிகள் தங்கள் நலன்சார்ந்த கட்சியை அமைத்துக் கொள்ள வேண்டும். புரட்சிகர சிந்தாந்தம் இன்றி புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது. அவ்வகையில் மிகவும் முன்னேறிய சித்தாந்தத்தையும் அது பெற்றிருக்க வேண்டும்.

இத்தகையதோர் மானுட அணியில் கால் பதித்து புதியதோர் சமுதாயத்தை நோக்கி நகர்வதே மலையக நாட்டடார் இலக்கியத்தின் இன்றைய தேவையாகும். இவவாறானதோர் சூழலில், இன்னொரு விடியலுக்காய் மனித சமூகத்தின் சிகரத்தை எட்டிப் பிடிக்க கடின உழைப்பை மேற்கொள்வது மலையக நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்களின் முக்கிய கடமையாகும்.
நன்றி - முச்சந்தி
Share this post :

+ comments + 2 comments

8:06 AM

Dear Admin,
You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

நன்றிகள் பல...
நம் குரல்

அருமையான தகவல்களை தொகுத்து தந்நுள்ளீர்கள் வாசிக்கும் போது மலையக மண்ணின் மணம் வீசுகிறது.. வாழ்க உங்கள் தமிழ் பணி

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates