பெஸ்தியன் மாமா |
மடகொம்பரை மண்ணும் ஆளுமைகளும் எனும் என் ஊர் சார்ந்த தொடர் குறிப்பொன்றை சில மாதங்களுக்கு முன் முகநூலில் எழுத ஆரம்பித்தேன். சி.வி.வேலுப்பிள்ளை, மேகராஜா(நீலகிரி) ஆகிய ஆளுமைகள் பற்றி இதுவரை எழுதியிருக்கிறேன். இன்னும் பல ஆளுமைகள் பற்றி எழுத எண்ணியுள்ளேன். மடகொம்பரை எனும் எங்கள் ஊர் நிர்வாக ரீதியில் சற்றே குழப்பமான இடஅமைவைக் கொண்டது. அமைந்துள்ள மாவட்டம் நுவரெலியா. ஆனால் ஊரின் கிழக்குப் பக்கம் மிகவுயர்ந்த மலைத்தொடர். இதோ விழுந்துவிடுவேன் என எச்சரித்து நிற்பதுபோல் நிற்கும். ஆனால் ஒரு போதும் எங்கள் மீது வீழந்ததில்லை. அதேபோல் மேற்குப்;பக்கம் பெரும் தாழ் நிலம். பெரும்பாலும் சிங்கள கிராமங்களைக்கொண்டது.
என் ஆரம்பக்கல்வி (சிங்கள மொழிமூலம்) ஆசிரியையான திருமதி.அமரக்கோன் அவர்களின் வீடு, எங்கள் தாத்தாவின் நண்பரான அப்புகாமி சீயா (தாத்தா) வின் வீடு, தோட்டப்பகுதிக்கான கிராம சேவகர் நியமிக்கப்பட்ட அண்மைக்காலத்துக்கு முன்பு வரை இருந்த எங்களுர் கிராம சேவகர் திரு.கோணாரத்ன அவர்களது வீடு என்பன இந்த தாழ்நிலப்பிரதேசத்தில்தான் அமைந்துள்ளன. அந்தப் பகுதியை எங்களுர் பாஷையில் ‘நாடு’ என்று அழைப்போம். கிழக்கே உள்ள மலைப்பகுதியை ‘காடு’ என அழைப்போம். அந்த மலைப்பகுதி பீதுருதலாகலை மலைத்தொடரின் ஒரு பக்கச்சரிவு. ஆக கிழக்கே காடும், மேற்கே நாடும் அமைய இடையே உள்ளதுதான் மடகொம்பரைத் தோட்டம். இந்த தோட்டத்துக்கு கீழாகத்தான் ‘மேல்கொத்மலை நீரத்தேக்கத்திட்டத்தின் நிலக்கீழ் நீர்சுரங்கம் குடைந்தெடுக்கப்பட்டுள்ளது’ தலவாக்கலையில் மறிக்கப்படும் தண்ணீர் இந்த நிலக்கீழ் சுரங்கவழி ஓடி கீழ் கொத்மலை (கடதொரபிட்டிய) பகுதியில் மின் உற்பத்திக்கு வழிகோலும் என்பது திட்டவரைபு.
எங்களுர் மடகொம்பரை பற்றி எழுதிவைத்துள்ள ஒரு கவிதையில் இவ்வாறு சில வரிகளை அமைத்துள்ளதாக இப்போது என் நினைவுக்கு வருகிறது. ‘மேலே குந்தும் மலை வீழ்வேன் என எச்சரித்து நின்றபோதும், மேல் கொத்(து)மலை எங்களைக் குடைந்து கொண்டு சென்றபோதும் இந்த மண்ணிலேயே வாழ்வோம் இந்த மண்ணிலேயே மாள்வோம் இந்த மண்ணிலேயே மீள்வோம் (என தொடர்ந்து செல்லும் வரிகள்) இந்த மண்ணில் ஏதோ ஒரு போராட்ட குணாம்சம் இருந்து வருகின்றமையை தொடர்ச்சியாக அவதானிக்கலாம்.
இப்போது எங்கள் ஊருக்கு வடக்கே என்ன உள்ளது என்று பார்க்கலாம். வடக்கு –தெற்கே ஓடுவதுதான் 704 ம் இலக்க வீதி. இந்த வீதி தெற்கே தலவாக்கலை நகரையும் வடக்கே பூண்டுலோயா நகர் ஊடாகச் சென்று தவலந்தன்னை எனும் இடத்தையும் இணைக்கிறது. விரிவாகச் சொன்னால் கொழும்பில் இருந்து அவிசாவளை ஹட்டன் வழியாகச் நுவரெலியா செல்லும் வீதியையும், கொழும்பில் இருந்து பேராதெனிய புசல்லாவ வழியாக நுவரெலியா செல்லும் பாதையையும் குறுக்காக இணைக்கும் பாதை. தலவாக்கலை, ஹொலிரூட், வட்டகொடை, மடகொம்பரை, பூண்டுலோயா, சங்கிலிப்பாலம், கொத்மலை (புதிய நகரம்) தவலந்தனை ஆகிய ஊர்கள்தான் இந்த 704 வீதி ஊடறுத்துச்செல்லும் ஊர்கள்.
நாங்கள் நுவரெலியாவுக்கோ அல்லது கொழும்புக்கோ இந்த இரண்டு முனை வழியாகவும் அடைந்துவிடலாம். கொழும்புக்கென்ன? 1980 காலப்பகுதியில் தவலந்தன்னையில் இருந்து யாழ்ப்பாணம் நகருக்கே ஒரே பஸ்ஸில் சென்ற ஞாபகம் (பழம்பிள்ளையார் பஸ்) இன்றும் இருக்கிறது எனக்கு. நுவரெலியா – யாழ்ப்பாணம் பஸ் அந்த வழியாகத்தான் கண்டி (ஏ9) ஊடாகச் செல்லும். ஆனால் இப்போது? எங்களுக்கு கிராம சேவகர்; பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை போன்ற நிர்வாக பகுதிகள் வடக்கே உள்ள பூண்டுலோயா கொத்மலைப் பக்கம். ரயில்போக்குவரத்து, தபால் நிலையம் மற்றும் பொலிஸ் பிரிவு தெற்கே உள்ள தலவாக்கலைப்பக்கம் (நுவரெலியா பிரதேச செயலகம்). நான் பாலர் வகுப்பை ஆரம்பித்து கொத்மலைப்பக்கம் உள்ள மடகொம்பரை தோட்டத்துப்பாடசாலை. ஆரம்பித்த அடுத்த வருடமே 1980 ல் நாட்டு சூழலை கருத்தில் கொண்டு அப்பா என்னைச் சேர்த்துவிட்டது தெற்கே உள்ள வட்டகொடை சிங்கள வித்தியாலயம். 1983 ல் பாடசாலை சூழ்நிலை சரியில்லாமல் வட்டகொடை தமிழ் வித்தியாலயம். பின்னர் ஊர் சூழலே சரிவராது என நினைத்து வடமாகாண - கிளிநொச்சி (கரடிபோக்கு) சென்.திரேசா (மகளிர்) பாடசாலை. உடனே சந்தேகம் வருமே. மகளிர் பாடசாலையா என ஆம் ஆண்டு ஐந்து வரை அங்கு ஆண்பிள்ளைகளும் படிக்கலாம். சகோதரிகளுடன் என்னையும் சேர்த்து விட்டார்கள். அப்போது அப்பா யாழப்பாணத்தில் தொழில் பார்த்ததனால் இந்த எற்பாடு. பின்னர் 1986 ல் மழை வெள்ளம், யுத்தம் மீண்டும் மலையகம். இப்போது மீண்டும் வடக்கு திசை பூண்டுலோயா பாடசாலை (சாதாரண தரம்), உயர்தரம் மீண்டும் தெற்கு திசை (ஹட்டன் ஹைலன்ஸ்).. உங்களுக்கு வாசிக்கவே ச்சீ…என போயிருக்கும் இப்போது. அப்படியாயின் இந்தப்பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள் எத்தனை ச்சீ..ப்பட்டிருப்பேன் நான்...
சரி, வடக்கு-தெற்கு பயணத்துடன் தொடர்புடைய விடயத்துக்கு வருவோம். வடக்கே வட்டகொடை தலவாக்கலை நகரத்துக்கு இடையே ஹொலிரூட் எனும் ஒரு தோட்டம் உண்டு. இந்த ஹொலிரூட் தோட்டத்திற்கும் டெவன் தோட்டத்துக்கம் இடையே கொத்மலைஓயா ஆறு ஓடும். ஹோலிரூட் பக்கத்திலே உள்ள யொக்ஸ்போட் தோட்டத்தைச் சேர்ந்தவர்தான் சிவனு லட்சுமணன். டேவன் தோட்டத்தை பகிரந்தளிக்கும் திட்டத்தின்போது டெவன் தோட்டத்தில் போராட்டம் நடந்தது. டெவன் தோட்டத்தை படைகள் சூழந்திருக்க ஆற்றுக்கு அந்தப்பக்கம் இருந்து ஆற்றைக்கடந்து டெவன் தோட்டப்போராட்த்துக்கு வந்தபோதுதான் சிவனு லட்சுமணன் ஆயுத படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இன்று சிவனு லட்சுமணன் வாழ்ந்த அந்த யொக்ஸ்போட் மண்ணில்தான் இராணுவமுகாம் அமைக்க திட்டமிடப்படுகின்றது. லட்சுமணா?????
இந்த ஹொலிரூட் தோட்டத்திலே நீண்ட காலம், கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர்தான் உபாலி லீலாரத்ன. தற்போது கொழும்பு-கொடகே புத்தக நிறுவனத்தில் பதிப்புத்துறையில் கடமையாற்றும் இவர் முன்பு தலவாக்கலை ‘லயன்’ அச்சகத்தில் வேலை செய்துள்ளார். அங்கு பணி புரிந்த காலத்தில் மலையகத்தமிழ் மக்களோடு இணைந்து வாழ்ந்த அனுபவம் அவரை தமிழ் மொழிக்கு பரீட்சயமாக்கியுள்ளது. நன்றாக தமிழில் உரையாடக்கூடிய இவர் அச்சகத்தில் பணிபுரிந்ததனால் தமிழ் வாசிக்கவும் கற்றுக்கொண்டுள்ளார். உபாலி லீலாரத்ன ஒரு அமைதிப்பேர்வழி. ஒரு மொழி தெரிந்த சிலரே துள்ளிக்குதிக்கும்போது இரு மொழி தேர்ச்சி பெற்றும் எளிமையாக இருப்பவர்.
இதுவரை 35 நூல்களை எழுதியுள்ள எழுத்தாளர். அவற்றுள் ஏறக்குறைய 30 நூல்கள் மொழிபெயர்ப்பு நூல்களாம். அதாவது தமிழ் நூல்களை சிங்களத்துக்கு மொழி பெயர்த்துள்ளார். நேற்று (17 சனவரி 2013) கொழும்பு தேசிய நூலக, ஆவணமாக்கல் நிலைய கேட்போர் கூடத்தில் 5 நூல்களை ஒருசேர வெளியிட்டு அசத்தினார் உபாலி லீலாரத்ன. ஐந்து நூல்களும் கொடகே வெளியீடுகள். 5 நூல்களில் மூன்று நூல்கள் தமிழில் இருந்து சிங்களத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டவை. தமிழ்நாடு கு.சின்னப்பபாரதியின் - சர்க்கரை (சீனி என்ற பெயரிலும்), வவுனியூர் உதயணனின் -பனி நிலவு (சந்த சிசில என்ற பெயரிலும்), மன்னார் எஸ்.ஏ உதயணின் - லோமியா என்ற நாவலை அதே பெயரிலும் மொழிபெயர்த்திருக்கிறார். அது மட்டுமல்லாது ‘பெஸ்தியன் மாமா’ எனும் நையாண்டி கதை ஒன்றையும், ‘தே கஹட்ட’ (தேயிலைச்சாயம்) எனும் மலையக தேயிலைத் தொழில் துறைசார்ந்த நாவல் ஒன்றையும் சுயமாக எழுதி (சிங்கள மொழியில்) வெளியிட்டுள்ளார். வெளியீட்டு விழா எளிமையாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது.
தே கஹட்ட- எனும் நூலை வாசிக்கத் தொடங்கியுள்ளேன். வாசித்து முடித்ததும் அது பற்றிய குறிப்பை எழுதி பதிவிடுகிறேன். உபாலி லீலாரத்னவின் நூல் வெளியீடுகள் பற்றி சொல்ல வந்த நான் எங்கள் ஊர் பற்றியும் அதன் அருகாமையில் வசித்தவரான உபாலி பற்றியும் சொல்லவந்தது ஏன் என புரிந்திருக்கும். நாங்கள் அந்த ஊரில் ஒற்றுமையாகத்தான் வாழ்ந்திருக்கிறோம். என் தாத்தாவுக்கு சிங்கள நண்பர்கள் இருந்திருக்கிறார்கள், நான் சிங்கள மொழியில் கல்வி கற்றிருக்கிறேன், உபாலி சிங்களவரானபோதும் எங்கள் ஊருக்கு வேலைநிமித்தம் வந்தவர் தமிழ் மொழியைக் கற்றிருக்கிறார். கற்றது மட்டுமல்ல இன்று ஒரு சிங்கள எழுத்தாளராக மட்டுமல்லாது தமிழ் மொழி இலக்கியங்களை சிங்களத்துக்கு மொழிபெயர்த்தும் வழங்குகின்றார். புத்தக வெளியீட்டு விழாவுக்கு தலைமை வகித்து உரைாயற்றிய எழுத்தாளர் திரு.குடகல்ஹார தனதுரையின்போது குறிப்பிட்ட விடயம், இரு மொழியல்ல பன்னிரு மொழிகள் தெரிந்த பலரும் இந்த நாட்டில் பெரும் பதவி வகித்துள்ளனர்.
எத்தனைபேருக்கு திரு.உபாலி லீலாரத்ன போன்று தமிழ் நூல்களை சிங்களத்துக்கு மொழி பெயர்த்து வழங்கவேண்டும் எனும் எண்ணம் உதித்தது. அந்த வகையில் உபாலி லீலாரத்ன உண்மையான அர்ப்பணிப்புடன் சக இனங்களுக்கிடையிலான பாலமாக திகழ்கிறார் என்று குறிப்பிட்டார். உபாலி லீலாரத்னவை தனிப்பட்ட ரீதயிலும் அறிந்தவன் என்றவகையில் எனக்கும் திரு.குடகல்ஹார அவர்களின் கருத்தோடு ஒத்துப்போக முடிகிறது. என்னூர் பக்கத்தில் வாழ்ந்த ஒரு சகோதரர் இலக்கியத்தில் இத்தகையதோர் பணிக்கு தன்னை அர்ப்பணித்திருக்கிறார் என்பதில் பெருமை கொள்ளவும் முடிகிறது.
வாழ்த்துக்கள் உபாலி….. உங்கள் போன்றவர்களால்தான் சிங்கள மக்கள் புடைசூழ வாழும் மலையக மக்களினால் இன்னும் நம்பிக்கையை நிலைநிறுத்த முடிகின்றது. 704 இலக்க வீதி இரண்டு பெரும்பாதைகளை இணைத்தது போல் அந்த பாதையில் வாழந்து வந்த நீங்கள் இரண்டு சமூகங்களை இணைக்க எடுக்கும் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.(மடகொம்பரை மண்ணும், ஆளுமைகளும்- தொடரும். மண்ணையும் அருகேயுள்ள ஊர்களின் ஆளுமைகளையும் அரவணைத்துக்கொண்டே….உபாலி லீலாரத்னவும் எங்களுர் ஆளுமை ஒன்றே….)

Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...