Headlines News :
முகப்பு » , , » இரா.சடகோபனின் "கசந்த கோப்பி'

இரா.சடகோபனின் "கசந்த கோப்பி'

சாஹித்திய விருது பெற்ற
மலையக மண் வாசனை கூறும்
இரா.சடகோபனின்
"கசந்த கோப்பி'
மொழிபெயர்ப்பு நாவல் மீதான ஒரு சிறப்புப்பார்வை

திறனாய்வு
பேராசிரியர் செ.யோகராசா

இரா.சடகோபன் ஆங்கிலத்தில் இருந்து தமிழழுக்கு மொழி பெயர்த்துத் தந்திருக்கும் Bitter Berry கிறிஸ்டின் வில்சனின் இந்த நாவல் பலவிதங்களில் முக்கியத்துவம் மிக்கதாகத் திகழ்கின்றது.

"கசந்த கோப்பி' என்கின்ற இந்த நாவலின் பெயரில் கூட பல அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன. இதன் முதலாவது சிறப்பு என்னவென்றால் இதுவரை காலம் ஈழத்து நாவலாசிரியர் ஒருவர் ஈழத்து வாழ்வியலை மையமாக வைத்து எழுதிய நாவலொன்றைத்தான் நாம் பார்த்திருக்கின்றோம்.

ஆனால் இங்கு இந்த மொழிபெயர்ப்பு நாவல் ஆங்கில நாவலாசிரியை ஒருவரால் எழுதப்பட்ட இலங்கை தொடர்பான ஒரு வரலாற்று நாவல் என்ற அடிப்படையில் தனிச்சிறப்பு பெறுகின்றது.

வரலாறு கூறும் நாவல்

மலையக மக்களின் தொடக்க வரலாற்றைக் கூறும் முதல் நாவல் என்று இதனைக் கூறலாம். இது மலையக மக்களின் வரலாற்றை மட்டுமன்றி கோப்பி பயிர்ச் செய்கை வரலாற்றையும் அதன் மூலம் இலங்கையில் பொருளாதார வரலாற்றையும் கூட கூறுகின்றது. கதை டொம் நெவில் ஹியூ நெவில் ஆகிய இரண்டு மைத்துனர்கள் லண்டன் நகரில் சந்தித்துக் கொள்வதில் இருந்து ஆரம்பமாகின்றது.

எவ்வாறு மலையகத் தமிழர்கள் தமிழ் நாட்டில் இருந்து ஏமாற்றப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனரோ அதேவிதத்தில் தான் தோட்ட துரைமார்களும் உரிமையாளர்களும் கூட இங்கிருக்கும் நிலைவரங்களை அறியாமல் பொன் விளையும் பூமி என நினைத்துக் கொண்டு இங்கே வந்தனர். அவ்விதம் லண்டனில் இருப்பவர்களுக்கும் இங்கிலாந்து ஸ்கொட்லாந்து, அயர்லாந்தில் இருந்தவர்களுக்கும் இலங்கையை ஒரு சொர்க்க பூமியாக வர்ணித்துக் காட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதனை இந்நாவல் படம் பிடித்துக் காட்டுகின்றது.

எங்கே எத்தகைய நிலைமை உள்ளது எத்தகைய கஷ்ட நஷ்டங்களை எதிர்கொள்ளப் போகின்றோம்? கோப்பி பயிரிடுவது என்றால் என்ன? இங்கு என்னவிதமான கால நிலை நிலவுகின்றது போன்றவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் தான் இக்கதையில் நாயகன் தன் மைத்துனன் ஹியூநெவிலிடம் இருந்து லந்தானா என்ற கோப்பித் தோட்டத்தை எதிர்காலக் கனவுகளுடன் சேர்த்து வாங்குகிறான். ஆனால் இங்கு வந்தவுடன் தான் தெரிகிறது கோப்பித்தோட்டம் செய்வது எவ்வளவு கஷ்டமான காரியம் என்பது.

போக்குவரத்தினால் தாமதமேற்பட்டு நட்டமடைய நேரிடுகின்றது. கோப்பி கெட்டுப் போகிறது இத்தகைய நுணுக்கமான விடயங்கள் பற்றியெல்லாம் இந்நாவல் ஆராய்கின்றது. இத்தகைய பிரச்சினைகளெல்லாம் பட்டியல் அட்டவணை புள்ளி விபரங்கள் எதுவுமின்றி மிகக் கலாபூர்வமாக கவித்துவ நடையில் இக்கவிதை விபரிப்பது தான் மூல நாவலாசிரியரதும் அதன் மொழி பெயர்ப்பாளரான இரா.சடகோபனினதும் வெற்றியென்று கருதத் தோன்றுகின்றது என்பன கதையில் விவரிக்கப்படுகின்றன.

இக்கதையில் வருகின்ற கதாநாயகனைத் தவிர மற்ற அனைத்துத் துரைமார்களும் திருமணமாகாதவர்கள். இவையெல்லாம் கோப்பித் தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போது எதிர்கொண்ட உண்மையான கஷ்டங்கள்.

இவ்விதம் இத்தகைய துன்பியல்களை துரைமாரின் கோணத்தில் இருந்து வேறெந்த நாவலிலும் காட்டியது கிடையாது. அந்த வகையில் தான் இக்கதை கோப்பியின் வரலாற்றுக் கவிதையõக மாறி விடுகின்றது.

பொருளாதார வரலாற்று நாவல்

இது கோப்பியின் வரலாறு கூறும் ஒரு கதை என்று கூறினாலும் மறுபுறம் இதனை இலங்கையின் முதலாவது ஏற்றுமதிப் பொருளாதார வரலாற்றைக் கூறும் கதையென்றும் கூறலாம். பொருளாதார நாவல் என்று தமிழில் முதலில் இன்கண்ட நாவல் செ.கணேசலிங்கன் எழுதிய "உலக சந்தையில் ஒரு பொன்' என்ற நாவலைக் கூறலாம். அது தமிழில் வெளிவந்த நாவல். இந்த கசந்த கோப்பியை இலங்கையின் பொருளாதாரம் சார்ந்த மற்றுமொரு நாவல் என்றும் கருதலாம்.

பாத்திரப்படைப்பு

கோப்பி என்ற வணிகப் பொருளும் கூட ஒரு பாத்திரப்படைப்பாகவே இந்நாவலில் வருகின்றது. இரா.சடகோபன் தனது முன்னுரையில் இதில் வரும் உண்மைக்கதை மாந்தர்கள் என்று ஒரு பட்டியலைத் தந்திருக்கிறார். அதில் "கொலரா' என்ற உயிர்க்கொல்லி நோயையும் ஒரு பாத்திரப்பங்களிப்பாகக் காட்டியுள்ளார். எட்வின்படே என்ற துரைக்கு கொலரா தொற்றி அவர் அதில் இருந்துமீள்வது ஒரு உணர்ச்சி பொங்கும் தனிக்கதையாக உள்ளது.

குறிப்பாக கோப்பி என்ற கதாபாத்திரம் கதையை மிக ஆழமாக ஆக்கிரமித்துள்ளது. கோப்பிக்கு நோய் வந்த போதும் அது கோப்பியை முற்றாய் அழிப்பதும் அதனால் துரைமார் அடையும் துன்பங்களும் இக்கவிதையில் மிக உயிர்த்துடிப்புடன் சொல்லப்பட்டுள்ளன. இறுதியாக அந்நோய் கதாநாயகன் டொம்மின் தோட்டத்திலும் பரவுகிறது.


நோய் பரவிய இலையொன்று சிறகு போல் கதாநாயகி கராவின் காலடியில் வந்து விழுகின்றது. அதனை எடுத்து அவள் டொம்மிடம் காட்டுகிறாள்.

அவனது உணர்வுகளை கதாசிரியரும் மொழி பெயர்ப்பாளரும் கூறும் விதம் மிகக் கவித்துவ அனுபவத்தினை வாசகனுக்குப் பெற்றுக் கொடுக்கிறது. அவனது மனத்துயரம் படும்பாடு மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டப்படுகின்றது. அத்துடன் அந் நோய் சகல கோப்பிப் பயிரையும் சப்பிச் சாப்பிட்டு விட கோப்பி முற்றாக அழிந்து போய் விடுகின்றது. கோப்பி சகாப்தம் முடிவுக்கு வருகின்றது.

இது ஒரு வகையில் கோப்பியின் கதையாக இருக்கின்றது. இத்தகைய கதைகள் தமிழில் வெளிவந்தமை மிகக்குறைவு. வேறு மொழியில் நிறைய நாவல்கள் உள்ளன. வங்காள மொழியில் முற்றிலும் காட்டை மையமாக வைத்து ஒரு நாவல் எழுதப்பட்டுள்ளது. அதன் பெயர் காடு என்பதாகும். ஆரணியம் என்ற நாவல் தமிழில் வந்தது. இதனை எழுதியவர் விபூதிபூசன் பந்தோபாத்தியா என்பவராவார். இந்த நாவலில் கோப்பி வகிக்கும் பங்கு மிக அதிகமானதாகும். ஆனால் தேயிலையை ஒரு பிரதான பாத்திரமாகக் கொண்டு எந்த நாவலும் வெளிவரவில்லை என்று கருதுகின்றேன்.

ஏனைய கதை மாந்தர்களைப் பொறுத்தவரையில் டொம் நெவிலின் மைத்துனன் ஹியூ நெவிலின் பாத்திரப்படைப்பு சிறந்ததொரு பாத்திர வார்ப்பு என்று கூறலாம். இக்கவிதையின் நாயகன் டொம் நெவிலை நேர்மையும் மனிதாபிமானமும் தொழிலாளர் மீது அக்கறை கொண்ட துரையாகக் காட்ட முயற்சித்திருப்பது எந்த அளவுக்கு யதார்த்தமானது என்பது கேள்வியாகும். இவன் ஒரு இலட்சிய மாந்தனாகத் தோன்றுகின்றான்.

தெளிவத்தை ஜோசப் எழுதிய ஒரு நாவலில் கூட மனிதாபிமானம் மிக்க துரை ஒருவரை பாத்திரமாக சித்தரித்திருந்தார். அதனால் அப்படிப்பட்ட துரை ஒருவர் இருக்கிறாரா என்று அவரை பலர் கேள்வி கேட்டார்கள்.

சதை, இரத்தம் எலும்புகளுடனான பாத்திரப்படைப்பு.

ஆனால் இத்தகைய பாத்திரங்கள் இல்லாமல் இல்லை. தொழில் மீது, மண் மீது, மனிதாபிமானத்தின் மீது பற்றுள்ளவனாக அவன் நிமிர்ந்து நிற்கிறான். பாத்திரமானது தான் கொண்ட இலட்சியக் கொள்கையுடன் சேர்த்து சதை, இரத்தம், எலும்பு, உணர்வுகளுடன் சேர்ந்து உயிரோட்டமுடன் படைக்கப்பட்டுள்ளது. இக்கவிதையின் பிரதான பாத்திரம் சாரா என்ற துணிச்சலான பெண்மணி துன்பங்களுக்கு சவால் விடுபவள். ஒரு மனைவி குடும்பப்பெண். கணவனுக்கு உதவும் துணைவி, அவன் சோர்ந்து போகும் போது தோள் கொடுப்பவள். தனது உடன் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத போது சராசரி பெண்ணாகி குழம்பிப் போகின்றாள். ஆனால் அவள் துவண்டு விடவில்லை. அவள் இல்லாமல் டொம் நெவில் என்ற பாத்திரம் உயிர் வாழ முடியாது.

இத்தகைய பிரதான பாத்திரங்களைத்தவிர கருப்பன், கங்காணி, பண்டா, சோமாவதி, மெக்னியோட் அம்மையார், மெக்பாவின் என்ற பாதிரியார், மைக் ஓ பாரல் என்ற துரை, கிராமத்தலைவர் முதலான பாத்திர வார்ப்புக்களும் நேர்த்தியாக இருப்பதுடன் கதைக்கு மிகவும் சுவை சேர்க்கின்றன.

வரலாற்று மாந்தர்கள்

இவ்விதம் சில நாவல்களிலேயே உண்மையான நபர்களை கதாபாத்திரங்களாக தரிசிக்க முடிகிறது. இந்த கசந்த கோப்பி என்ற நாவலில் ஏழெட்டுக் கதாபாத்திரங்கள் உண்மையாக வரலாற்றில் வாழ்ந்தவர்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் கலாநிதி துவாய்ட்ஸ் இவர் உண்மையாகவே பேராதெனிய தாவரவியல் பூங்காவின் பணிப்பாளராக இருந்து கோப்பியின் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க பெரும் பாடுபட்டவர். கொழும்பைச் சேர்ந்த பிரபல மருத்துவர் கேரி. எட்வின் பரடே (புனைபெயர்) டேவிட் என்ற ஜேம்ஸ் டெய்லர் என்பவர்களுடன் அப்போது ஆளுநராக பதவி வகித்த ஹெர்குலிஸ் ரொபின்சனும் வந்து போகிறார். கொழும்பில் நிகழும் விருந்தொன்றில் சாராவுடன் ஆளுநர் ரொபின்சன் நடனமாடுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த நாவலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கசந்த கோப்பி என்ற பெயர் கதையுடன் மிக இரண்டறக் கலந்துள்ளது எனலாம். ஒரு சந்தர்ப்பத்தில் வாழ்வில் தொடராக வந்த இன்னல்களால் நொந்து போய் விட்ட டொம் நெவில் விரக்தியடைந்து இந்த கசந்த கோப்பிக்காகவா இவ்வளவு தூரம் வந்து அல்லல்பட்டோம் என சாராவிடம் கூறி ஆதங்கப்படுகின்றான். கவித்துவம் மிக்க மொழி நடை இந்த நாவலின் ஏனைய சிறப்புக்களில் ஒன்றாக மொழி பெயர்ப்பாளர் இரா.சடகோபன் பயன்படுத்தியுள்ள கவித்துவம் நிறைந்த மொழி நடையைக் கூறலாம். பல சந்தர்ப்பங்களில் அவரது கவித்துவம் மொழி நடைவாயிலாக பொங்கிப் பிரவகிக்கின்றதெனலாம். டொம்மும் சாராவும் காதல் வயப்பட்டிருந்தால் அவர்கள் வாழ்வில் துன்பம் வந்துற்ற போதும் அவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்கள் இயற்கை பற்றிய வர்ணனைகள் என்பன மிகச் சிறப்பாக அமைந்துள்ளன.

மூல நூலாசிரியர் ஒரு வனவியலாளர். புகழ்பெற்ற மருத்துவரும் எழுத்தாளருமான ஆர்.எல்.ஸ்பிட்டல் அவர்களின் மகள் இவருக்கு மருத்துவத்திலும் பரிச்சயம் உண்டு. அவரது வர்ணனைகளுக்கு இரா. சடகோபனின் கவித்துவ மிக்க மொழி வளம் மேலும் அழகு சேர்த்துள்ளது. சடகோபனின் பிறந்த மண்ணும் கதை நிகழும் பகைப்புலமும் ஒன்றாக இருப்பது சடகோபனின் இந்த முயற்சிக்கு சிருஷ்டி பரிமாணத்தைச் சேர்த்துள்ளது என்று நம்புகின்றேன்.
குறைபாடுகள்

Bitter Berry Book Release Slideshow: SHADAGOPAN’s trip to Colombo was created with TripAdvisor TripWow!
நாவலின் குறைபாடுகள் என்ற வகையில் இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்டலாம். ஒன்று டொம் நெவிலின் பாத்திரம் யதார்த்த தன்மை குறைந்து இலட்சியப் பாத்திரமாகத் தோற்றமளிப்பது, அதனைக் கூட வாசகன் என்ற பார்வையில் இருந்து பார்த்தால் ஏமாற்றம் தருவதாக உள்ளது. மற்றது இந்நாவல் அதிகமாக முதலாளி வர்க்கத்தின் நாவலாக இருப்பது, இது மூல நூலாசிரியரின் பார்வையில் தவிர்க்க முடியாததாக இருந்திருக்கலாம். அதனால் தொழிலாளர்கள் பற்றிய பதிவுகள் குறைவாகவுள்ளன. எனினும் இவற்றை பெரிய குறைபாடுகள் என்று நான் கருதவில்லை.

தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் தமிழ் நாட்டைப் போலல்லாது இலங்கையில் நாவல்களை மொழி பெயர்ப்பது மிகக்குறைவாகவே இருந்து வந்துள்ளது. ஆரம்பம் தொட்டுப்பார்க்கும் போது இலங்கையர் கோன், பேராசிரியர் கணபதிப்பிள்ளை, சி.வைத்தியலிங்கம், கே.கணேஷ், எஸ். பொன்னுத்துரை, மகாலிங்கம், நல்லைக்குமரன், செ.கதிர்காமநாதன் போன்ற சிலர் தான் அவ்வப்போது பிற மொழி நாவல்களை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்கள்.

அண்மைக்காலத்தில் கலாநிதி உவைஸ் தொடக்கம் திக்குவல்லை கமால் வரை பல சிங்கள, நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த மொழி பெயர்ப்பு நாவல்கள் ஒரு நாட்டின் இலக்கிய வளர்ச்சியில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தன என்பது தொடர்பில் அதிகமாக பேசப்படுவதில்லை. எழுத்தாளர்கள் கூட அதன் முக்கியத்துவத்தை உணரவில்லை என்று தான் கூற வேண்டும். ஈழத்து மொழி பெயர்ப்புத்துறையில் கே.கணேஷ் முக்கியம் பெறுகிறார். க.சுப்பிரமணியம் ஒரு முறை ஒரு இலக்கிய விழாவில் உரை நிகழ்த்தும் போது எந்த அளவுக்கு ஒரு நாட்டில் மொழி பெயர்ப்பு இலக்கியங்கள் வருகின்றனவோ அந்தளவுக்கு அந்நாட்டில் இலக்கிய வளர்ச்சியும் ஏற்படுகின்றது என்று குறிப்பிட்டார்.

இந்த தளத்தில் இருந்து கொண்டு தான் இன்று இரா.சடகோபன் படைத்துத் தந்திருக்கும் கசந்த கோப்பி என்ற இந்த 19 ஆம் நூற்றாண்டின் கோப்பிக்கால வரலாற்றைக்கூறும் மொழி பெயர்ப்பு நாவலை நோக்க வேண்டும். இதன் முக்கியத்துவத்தினை வேறு விதத்திலும் கூறலாம். பேராசிரியர் கைலாசபதியின் கூற்றுப்படி மரபிலக்கியங்களில் பல வடிவங்கள் காணப்படுகின்றன. கோவை, உலா அந்தாதி என இப்படி வகைப்படுத்தலாம். இவையெல்லாம் தமிழ் இலக்கியத்துக்கு மட்டுந்தான் பொதுவானவை. ஆனால் நவீன இலக்கியங்கள் உலகப் பொதுவானவை. இவற்றில் நாவல், சிறுகதை, நவீன கவிதை என்பன அடங்கும். அத்தகைய உலகப் பொது இலக்கிய வடிவங்கள் குறுகிய காலத்திலேயே வடிவ மாற்றம் பெறுகின்றன. ஒரு காலத்தில் ஆங்கில நாவல்களே உலகக் கவனத்தை ஈர்த்தன. பின் ஆபிரிக்க நாவல்கள் இப்போது லத்தீன் அமெரிக்க நாவல்கள் பலரதும் கவனத்தைக் கவர்ந்துள்ளது. அவ்விதம் பார்க்கும் போது ஒவ்வொரு கால கட்டத்திலும் உலக இலக்கிய நகர்வு வித்தியாசமான திசைகள் நோக்கிப் பயணிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. அத்தகைய மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கட்டாயமாக ஈழத்து எழுத்தாளர்கள் அறிந்திருக்க வேண்டும். அவ்விதம் அறிந்து கொள்வதற்கான ஒரு மார்க்கம் தான் இத்தøகய மொழி பெயர்ப்பு நாவல்கள்.

மலையக மக்களின் வரலாற்றுப்பதிவு செய்யும் கிறிஸ்டியன் வில்சனின் இந்த நாவலைப் போலவே வேறு சில ஆங்கிலேயர்களும் ஆங்கில மொழியில் பல நாவல்களை எழுதியுள்ளனர். லெனாட் வுல்ப் (Leanard Wolf) என்ற நாவலாசிரியர் திஸ்ஸ மகாராம பகுதி மக்களின் வரலாற்றைப் பதிவு செய்யும் பெத்தேகம என்ற நாவலை எழுதினார். அதேபோல் 19 ஆம் நூற்றாண்டில் சிலாபத்தில் முத்துக்குளிப்போர் பற்றி ஓர் ஆங்கிலேயர் எழுதிய நாவலை கமால்தீன் மொழி பெயர்த்து அது தினகரனில் தொடராக வெளி வந்தது. கசந்த கோப்பியை மொழி பெயர்த்திருக்கும் இரா.சடகோபன் கூட 2008 ஆம் ஆண்டு சாஹித்திய விருது பெற்ற அவரது முன்னைய மொழிபெயர்ப்பு நாவலான பந்துபாலகுருகேயின் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்ற நாவல் கூட 1960, 1970 கால தசாப்தத்தின் மலையக மக்களின் வரலாற்றைப் பதிவு செய்யும் நாவலாகவே இது அமைந்திருந்தது. 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த ஒரு நாவலாசிரியர் 19 ஆம் நூற்றாண்டின் கதையை எழுத வேண்டுமாயின் அதற்கு மிகக் கடின உழைப்புத் தேவை. பல ஆவணங்களை ஆராய வேண்டும். அண்மைக்காலத்தில் தமிழ் நாட்டில் இவ்விதம் கடினமாக உழைத்து நாவல்கள் எழுதும் வழக்கம் தோன்றியுள்ளது.

ஈழத்து எழுத்தாளர்கள் இத்தகைய உழைப்பை பõடமாக எடுத்துக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் காத்திரமான படைப்புக்களை கொண்டு வரலாம்.

அதேபோல் இந்நாவலில் மொழிபெயர்க்கும் பணியில் இரா. சடகோபனும் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதும் புரிந்து கொள்ளக்கூடியதே. அவர் இதேபோல் இறப்பர் தொழிலாளர்களின் வரலாற்றுக்கதை கூறும் நாவலொன்றை மொழி பெயர்த்துத் தருவாராயின் மகிழ்ச்சியடையலாம் அவருக்கு பாராட்டுக்கள்.

நன்றி - UPDRF
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates