19 வருடம் சிறையிருந்த மலையக பெண் அரசியல் கைதியின் பரிதாப மரணம் மலையக தலைமைகளின் கையாலாகாதனத்திற்கு உதாரணம் – மனோ கணேசன்
புலிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் 1994ம் கைது செய்யப்பட்டு, நீண்ட காலம் வழக்கை எதிர்கொண்டு, தண்டனை வழங்கப்பட்டு, ஏறக்குறைய 19 வருடம் சிறைவாசம் அனுபவித்து, சிறையில் நீண்ட காலம் கடும் சுகவீனமுற்று, முறையான சிகிச்சை இல்லாமல், நேற்று பரிதாபமாக மரணமடைந்த, பதுளை பூனாகலை அடாவத்த தோட்டத்தை சார்ந்த காத்தாய் முத்துசாமி என்ற 68 வயது மலையக வயோதிப தமிழ் பெண்ணின் பரிதாப மரணம், அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கின்ற மலையக அரசியல் தலைமைகளின் கையாலாகாதனத்திற்கும், பொறுப்பின்மைக்கும் அடையாளமாக அமைந்துவிட்டது.
இவர்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு உள்ளே இருந்துகொண்டு, அரசாங்க பதவி வரப்பிரசாதங்களை அனுபவிப்பதை வேறு தவிர என்னத்தான் செய்கிறார்கள் என, இவர்களை காணும் இடமெல்லாம் தமிழ் மக்கள் கேள்வி எழுப்பவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி-ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று வெலிக்கடை கொழும்பு பொது மருத்துவமனையில் மரணமடைந்த 68 வயது வெலிக்கடை சிறைக்கைதியான மலையக தமிழ் பெண்ணின் மரணம் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
மட்டக்களப்பிலிருந்து புலிகளின் பொருட்களை பதுளைக்கு கொண்டு வந்தார் என்றும், புலிகளுக்கு தங்குமிடம் அளித்து உதவினார் என்றும் குற்றச்சாட்டப்பட்டு பதுளை பூனாகலை அடாவத்த தோட்டத்தை சார்ந்த காத்தாய் முத்துசாமி 1994 ல் கைது செய்யப்பட்டார் என அவரது மகன் கே. வரதராஜ் எனக்கு தெரிவிக்கிறார். அதற்காக காத்தாயிக்கு நீண்ட விசாரணைகளின் பின் தண்டனை வழங்கப்பட்டது.
சிறையில் புற்றுநோய் காரணமாகவும், படுக்கை புண் காரணமாகவும் இந்த வயோதிப மாது கடும் உபாதைகளுக்கு உள்ளாகி இருந்தார். இதுபற்றி சிறை நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட்டும், அவருக்கு உரிய மருத்துவம் வழங்கப்படாததில் அவர் நேற்று மருத்துவமனையில் இறந்துவிட்டார்.
மட்டக்களப்பிலிருந்து செயல்பட்ட புலிகளின் கிழக்கு மாகாண தளபதி இன்று அரசாங்க அமைச்சராக இருக்கிறார். இன்னும் பல கிழக்கு மாகாண புலி தலைவர்கள் இன்று அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளாக இருக்கிறார்கள். அரசாங்க சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிபாரிசின் பேரில், கொழும்பு நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் புலிகளின் மகளிர் அணி தலைவி தமிழினி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, இன்று புனர்வாழ்வு நிலையத்தில் மணமகள் அலங்கார பயிற்சி பெறுகிறார். ஆனால் புலிகளுக்கு உதவினார் என்ற பெயரில் கைது செய்யப்பட்டு தன் வாழ்நாளில் ஏறக்குறைய இருபது வருடங்களை சிறையில் கழித்துவிட்ட 68 வயதான இந்த மலையக தாய் சிறையிலேயே பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
இந்த வயோதிப தாயிக்கு அவரது வயதை காரணம் காட்டி அல்லது அவரது கடும் உடல் நலக்குறைவை காரணம் காட்டி பொது மன்னிப்பை பெற்று தருவதற்கு அரசாங்கத்தில் உள்ள மலையக தமிழ் அரசியல்வாதிகளுக்கு முடியாமல் போய் விட்டது. எத்தனையோ மலையக மற்றும் வட-கிழக்கு தமிழ் ஆண்களும், பெண்களும் தமது வாழ்நாளின் பெரும்பகுதியை சிறைகம்பிகளின் பின்னே கழித்து வரும் கொடுமை தொடர்பில், ஜனாதிபதியுடன் காத்திரமாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண, அரசில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளுக்கு இதுவரை முடியாமல் போயுள்ளது.
கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி தண்டனை அனுபவித்து வந்த பல சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். அதற்கான அதிகாரம் அவரிடம் உள்ளது. அதை யாரும் விமர்சனம் செய்ய முடியாது. அனைத்து தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பை கேட்டு வாங்க முடியாவிட்டாலும்கூட, குழந்தைகளுடன் இருக்கும் பெண்கள் மற்றும் கடும் உடல் உபாதைகளுடன் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளுக்காவது பொது மன்னிப்பை பெற முயற்சி செய்ய வேண்டும். இதற்கு அரசில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றுபட்டு காத்திரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தமூலமே இந்த அரசில் இதனால்தான் அங்கம் வகின்றோம் என்று மக்களிடம் சொல்ல காரணம் கிடைக்கும். இதுவும் முடியாவிட்டால், எதற்கு இந்த அரசில் இருக்கிறீர்கள் என்ற கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியாது.
திவிநேகும மற்றும் 13ம் திருத்தம் தொடர்பில் அரசில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் கூட்டு சேர்ந்து கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு மனு அனுப்புகிறார்கள். இன்று அரசு தலைமையின் அழுத்தம் காரணமாக, தமது நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டு அரசுக்கு ஆதரவாக கைகளை உயர்த்துகிறார்கள். 13ம் திருத்தம் போன்ற அரசியல் நடவடிக்கைகளை செய்ய முடிவிட்டாலும் பரவாயில்லை, தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் போன்ற மனிதாபிமான விவகாரங்களிலாவது அரசில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் சார்பாக நான் கேட்டுகொள்கிறேன்.
நன்றி - மனோகணேசன்
+ comments + 1 comments
மனோ கணேசன் யு.என்.பி ஆட்சியில் பங்காளிக்கட்சியாக இருந்த காலத்திலும் இந்த காத்தாய் முத்துசாமி தாய் சிறையில் தான் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது... இந்த "அரசியல் கையாலாகாத்தனத்தில்" மனோவுக்கும் பங்கிருக்கிறது... இந்த மரணத்தின் மூலம் ஒன்று வெளிவந்துள்ளது.... இன்னும் பல இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் பலர் இன்னமும் சிறையில் இருக்கிறார்கள் என்பதையும் பதிவு செய்துகொள்ளுங்கள்...
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...