மலையகத்தில் தேர்தல் வரை அமைதியாக இருந்த சிங்கள காடையர் குழு மீண்டும் தமிழ் மக்கள் மீதான தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். கேகாலை மாவட்டம் தெரணியகலை தொகுதியைச் சேர்ந்த தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் பெருவாரியாக வாழும் மாலிபொட தோட்டத்தில் பெரும்பாண்மை இனத்தவர்கள் அத்துமீறி பிரவேசித்து தோட்ட நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டதாக தொழிலாளர்கள் தெரணியகலை ஜனநாயக மக்கள் காங்கிரஸ் பணிமனையில் தொழிற்சங்க பொருப்பாளர் ஆர். மேகநாதனிடம் முறையிட்டதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் நிர்வாக செயலாளர் என்.ரவிகுமார் தெரிவித்தார்.
இது குறித்து ஜனநாயக மக்கள் காங்கிரஸ் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
ஏற்கனவே பல பெரும்பாண்மை இனத்தைச் சார்ந்தவர்கள் இத்தோட்டத்திற்குள் பிரவேசித்து நிலங்களை ஆக்கிரமிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இருப்பினும் இம்முறை பெருவாரியான பெரும்பான்மை இனத்தவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்கு அருகாமையிலுள்ள நிலங்களை ஆக்கிரமித்ததை தொடர்ந்து தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலே பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக தோட்ட நிர்வாகத்தின் மூலம் பொலிஸாரிடம் முறையிட்டும் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு காரணம் அப்பகுதியிலுள்ள ஆளும் அரசாங்க தரப்பு அரசியல் வாதிகளே என அறியமுடிகிறது.
இது இவ்விததம் இருக்க கடந்த திங்கட்கிழமை முதல் நடவடிக்கை எடுக்ககோரி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இது சம்பந்தமாக எமது ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசனின் கவனத்திற் கொண்டுவரப்பட்டு உடனடியாக கேகாலை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் உபாலி குமாரசிறியிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதி பொலிஸ் மா அதிபர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இது சம்பந்தமாக எமது தொழிற்சங்க பொறுப்பாளர் ஆர்.மேகநாதன் பெருந்தோட்ட தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிற்கு அனுப்பிய கடிதத்திற்கும் உடனடி நடிவடிக்கை எடுப்பதாக பதில் அனுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு கொச்சிக்கடை ஜம்பட்டா வீதியிலுள்ள 151,155ம் இலக்க தோட்டத்திலுள்ள அரச குறைந்த வாடகை வீட்டு உரிமையாளர்களுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வீடுகளை தங்களது பெயரில் மாற்றுவதற்கு பல கெடுபிடிகளை விடுத்துள்ளதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைமை காரியாலயத்தில் வைத்து பிரபா கணேசன் எம்.பியிடம் முறைபாடு செய்துள்ளது.
இவ்வீட்டு குடியிருப்பாளர்கள் பல வருட காலமாக இவ்வீடுகளில் வசித்து வருகின்றனர். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நபரிடமிருந்து இவ்வீடுகளை நேரடியாக வாங்கியவர்களும் அதே நேரம் பல உரிமையாளர்களுக்கு கைமாற்றப்பட்டு வீடுகளை வாங்கியவர்களும் உள்ளடங்குகிறார்கள்.
இன்று குடியிருப்பவர்களுக்கு இவ்வீடுகளை அவர்களது பெயரில் மாற்றிக் கொடுப்பதற்கு ரூபாய் 25,000.00 கட்டணப் பணமாக செலுத்த வேண்டும் என்றும் அது மட்டுமின்றி அரசாங்கத்தால் முதலில் வழங்கப்பட்ட நபரிடமிருந்து ஒப்புதல் கடிதத்தை பெற்று வருமாறும் கேட்கப்பட்டுள்ளனர். 25,000 ரூபாயை உடனடியாக இம்மாத இறுதிக்குள் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாக இக்குடியிருப்பாளர்கள் எமது அலுவலகத்திற்கு வந்து முறையிட்டுள்ளனர்.
இது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் செயற்பாட்டு பணிப்பாளர் பத்ம உதய சாந்த குணசேகரவுடன் தொடர்பு கொண்டு இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துரைத்துள்ளார்.
மாதாந்தம் சிறு வருமானத்தை ஈட்டும் இவர்களால் 25,000 ரூபாயை உடனடியாக செலுத்த முடியாமையை எடுத்துக் கூறப்பட்டது. இது சம்பந்தமாக புதன்கிழமை 13ம் திகதி மாளிகாவத்தை வீடமைப்பு அதிகாரசபை கட்டிடத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சார்பாக இப்பிரச்சினையை முன்வைக்குமாறு செயற்பாட்டு பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இப்பகுதியில் வாழும் ஏழை எளிய குடியிருப்பாளர்களுக்கு சாதகமான முறையில் தீர்வினை பெற்றுக் கொடுப்போம் என என் ரவிகுமார் தெரிவித்தார்.
நன்றி - ஈழநாதம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...