Headlines News :
முகப்பு » , , , » விஜயசுந்தரம் என்ற விடிவெள்ளி -

விஜயசுந்தரம் என்ற விடிவெள்ளி -

மழவரையன் கருப்பையா விஜயசுந்தரம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் உபதலைவரும், மறைந்துவிட்ட மலையகப் பெருந்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு உறுதுணையாகத் திகழ்ந்தவருமான மழவரையன் கருப்பையா விஜயசுந்தரம் அவர்களின் 100வது பிறந்தநாள் இவ்வருடம் ஒக்டோபர் மாதம் 27ம் திகதியன்றாகும். நாற்பதாண்டு காலத்துக்கு மேலாக மலையக மக்களுக்குச் சேவை புரிந்து அனைவரின் அன்பையும் பெருமதிப்பையும் பெற்றவர் விஜயசுந்தரம். அமைதிக் குணத்துக்காகவும் அறிவாற்றலுக்காகவும் அனைவராலும் “சாமி” என்று அன்பாக அழைக்கப்பட்டவர். இவ்வாண்டு நவம்பர் 4ம் திகதி மத்திய மாகாண கல்வி அமைச்சினால் இராகலை மகா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சாகித்திய விழா அரங்குக்கு “ம. க. விஜயசுந்தரம் அரங்கம்” என்று பெயரிடப்பட்டிருப்பது சாலப் பொருத்தமாகும்.

இவர் 1912ம் ஆண்டு ஒக்டோபர் 27ம் திகதி, தமிழ்நாடு அன்றைய தஞ்சாவூர் மாவட்டத்தில், அறந்தாங்கிக்கும் பேராவூரணிக்கும் இடையிலுள்ள பரம்பரைக் கிராமமாகிய பனங்குளத்தில் பிறந்தவர். ஏழு பெண்களும் மூன்று ஆண்களும் கொண்ட குடும்பத்தில் இவர்தான் மூத்த ஆண்பிள்ளை. இவருடைய தகப்பனார், 1927ம் ஆண்டு கல்வி கற்பதற்காக யாழ்ப்பாணம் பரமேஸ்வரா கல்லூரிக்கு அனுப்பி வைத்தார். அவ்வருடம் இலங்கை வந்திருந்த மகாத்மா காந்தி, பரமேஸ்வரா கல்லூரிக்கு நவம்பர் 27ம் திகதி வருகை தந்திருந்தார். காந்தியடிகளின் பேச்சினால் கவரப்பட்ட விஜயசுந்தரமும் சில நண்பர்களும், பாடசாலையை விடுத்த பின்னர் காந்திவழி தொடர்வதென்றும், கதராடை மட்டுமே உடுத்துவதென்றும் திடசங்கற்பம் பூண்டனர். விஜயசுந்தரம் கடைசிவரை காந்தியவாதியாகத் திகழ்ந்ததுடன், வாழ்நாள் முழுவதும் கதராடை மட்டுமே அணிந்தார். கொழும்பு பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் பொழுது, ஆயிரக்கணக்கான மாணவர்களில் இவர் மட்டுமே கதராடை அணிந்து சென்றது குறிப்பிடத் தக்கது.

விஜயசுந்தரம் 1928ம் ஆண்டு யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். பின்னாள் அமைச்சர் மைத்தரிபால சேனநாயக்க, பின்னாள் சென். ஜோன்ஸ் கல்லூரி அதிபர் இராஜசேகரம் ஆகியோர் அக்காலகட்டத்தில் அங்கு கல்வி பயின்றார்கள். சென். ஜோன்ஸ் கல்லூரியில் திறமையாகக் கல்வி பயின்று தமிழ், பேச்சுப் போட்டி ஆகியவற்றுக்குப் பரிசு பெற்றதுடன் பௌதீகவியலுக்கான தங்கப் பதக்கத்தையும் வென்றார். 1934ல் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பௌதீகவியல் கல்வியைத் தொடர அனுமதிக்கப்பட்டார். ஆனால் 1935ல் அவருடைய தகப்பனார் மரணித்தபோது, இந்தியாவுக்கு மீண்டும் சென்று குடும்பப் பொறுப்புகளை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டதனால், அவரால் மேற்கல்வியைத் தொடர முடியாது போனது. விஜயசுந்தரம் 1936ல் இலங்கைக்குத் திரும்பி இராகலையில் வசித்து வந்தார். 1942ல் பார்வதி என்ற உறவுப் பெண்ணைத் திருமணம் புரிந்தார். இருவரும் ஆறு பிள்ளைகளுக்குப் பெற்றோரானார்கள்.

மலையக மக்களின் துயர நிலை கண்டு, அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இளமையிலே இருந்து வந்தது. இலங்கை இந்திய காங்கிரஸ் 1939ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பொழுது, சௌமியமூர்த்தி தொண்டமான் உட்பட, மலையகத் தலைவர்களுக்கு அவர் அறிமுகமானார். 1947ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தொண்டமானுடனான நட்பு பலப்பட்டது. விஜயசுந்தரத்துக்கு 2 செப்டம்பர் 1948 திகதியிட்டு எழுதிய கடிதத்தில், நுவரெலியா தொகுதி மக்களுடனான அரசியல் உறவைத் திண்மைப் படுத்துவதற்கான உதவியைத் தொண்டமான் நாடுகின்றார். விஜயசுந்தரம் 1955ம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் (இதொகா) சேர்ந்து, இறக்கும் வரை அதிற் கடமையாற்றினார். அவர் சேர்ந்த பிறகு இராகலை மாவட்டத்தில் இதொகாவின் அங்கத்தவர் தொகை பெருக ஆரம்பித்து, பின்னர் ஆகக் கூடிய அங்கத்தவர் தொகையுள்ள மாவட்டமாகத் திகழ்ந்தது. இதொகாவின் பதினேழாவது மகாநாடு 1958ல் நுவரெலியாவில் நடந்த பொழுது, மகாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டு அங்கு உரையாற்றினார். அடுக்குத் தமிழிலே எழுதி உரையாற்றும் ஆற்றல் அவருக்கு இருந்ததென்பதை அவருடைய பேச்சின் தொடக்கம் காட்டுகிறது:

“தேமணம் கமழும் மாமலைகளையே அரணாகக் கொண்டு பச்சைப் பட்டாடையும் பசும்புல் தரைகளும், துள்ளுமீன் விளையாடும் தௌ;ளிய நீரோடைகளும், வானளாவிய நீன் மரச் சோலைகளும், வாசமுறு நன்மலர் பூங்காவும், உடலுக்கும் உளத்துக்கும் தெம்பூட்டும் குளிர்பூந் தென்றலும் எங்கும் பரவி, இடைஇடையே எழிலுறு நன்மாட கூடங்களும் காட்சி தரும் உலகப்புகழ் பெற்ற, இவ்வழகிய நுவரெலியா மாநகரில் அமைந்துள்ள சர்வோதய சதுக்கத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 17வது மகாநாட்டிற்கு உங்கள் எல்லோரையும் மனமுவந்து வரவேற்கிறோம்.”

இம்மகாநாட்டு அரங்கம் “சர்வோதய சதுக்கம்” என்று பெயரிடப்பட்டிருந்தது. அவர் இறந்த பின்னர் நடந்த நுவரெலியா மகாநாட்டு அரங்கம் “விஜயசுந்தரம் அரங்கம்” என்று பெயரிடப்பட்டது.

பின்னர் விஜயசுந்தரம் இராகலை மாவட்டத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பகுதியில் பல தொழிற்சங்கப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். பல்லாண்டு சேவையின் பின் இதொகாவின் நிதிச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடைசியாக உதவித் தலைவராகவும் கடமையாற்றினார்.

“காங்கிரஸ்” பத்திரிக்கையின் ஆசிரியர் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. தொழிற்சங்கச் செய்திகள் மட்டுமன்றி, மற்றைய விடயங்களையும் இப்பத்திரிக்கை வெளியிட்டது. தொழிற்சங்கப் பத்திரிக்கையாக இருந்தாலும் கூட இலக்கிய அம்சங்களோடு மிளிரச் செய்து பல்வகையானோர் பார்க்கும் சஞ்சிகையாக மாற்றிய பெருமை இவரையே சாரும். மலையக இலக்கியத்துக்கு இவரின் பங்கை எழுத்தாளர்கள் அங்கீகரித்தார்கள். 2004ம் ஆண்டு மே மாதம் கொட்டகலை நகரில் நடந்த மலையக எழுத்தாளர் சாரல் நாடானின் “பேரேட்டில் சில பக்கங்கள்” வெளியீட்டு விழாவின் பொழுது, விஜயசுந்தரத்தின் துணைவியாராகிய பார்வதி அம்மாள் அவ்விழாவுக்கு வருகை தந்துள்ளார் என்பதை அறிந்த விழா ஏற்பாட்டாளர்கள், அவரை மேடைக்கு அழைத்து, பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்கள்.

“ஒப்பிலாமணி” என்ற புனைப் பெயரில், “அண்ணே வாங்க” என்ற உரைநடைச் சித்திரத்தை அவர் தொடர்ந்து எழுதினார். தொழிற்சங்க விவகாரங்கள், புராண இதிகாசங்கள், அரசியல் நடப்புகள், விஞ்ஞான முன்னேற்றங்கள், இலக்கியச் சிறப்புகள், மத அறிவுரைகள் அனைத்தையும் எளிய மலையகத் தமிழ் நடையில்; உள்ளடக்கி பொருள் செறிந்த முறையில் நகைச்சுவையாக எழுதப்பட்ட இச் சித்திரம் அனைவரையும் கவர்ந்து மலையகத்தில் பெரும் வரவேற்புப் பெற்றது. அதிலே இரு பகுதிகளைக் கீழே தந்துள்ளேன்:

01.06.1971
“வள்ளி: அக்கா கோழி முட்டையை ஊத்திக்கிட்டிருக்காங்க. வெங்காயந்தான் இல்லே.

ராமையா: இந்த வெங்காயத்துக்கு அந்த வெங்காயம் இல்லாட்டி ஒண்ணும் குடி முழுகிப் போகாது. இந்த வெங்காயம் சுக்காகிறத்துக்கு முந்தி சீரகத்தை நாடிக்கிட்டிருக்கிறேன் அம்மா நான்!

சுப்பையா: அண்ணே நீங்க என்னண்ணே சொல்றீங்க? எனக்கொண்ணும் வெளங்க மாட்டேங்குதே!

ராமையா: இது சித்தர்கள் பாஷை தம்பி! வெருங்காயமாகிய இந்த உடம்பு பொய். இது கடைசியிலே சுக்காகிப் போகும். ஆகையினாலே சீர் அகமான ஆண்டவன் திருவடிகளை நெனைச்சுப் பாக்கிறேன். அப்பிடின்னுதான் தம்பி சொன்னேன்.

சுப்பையா: அடே அப்பா! பெரிய விஷயத்தை கொத்தமல்லி பேச்சிலே சுருக்கிப்புட்டியலே!”

26.03.1972
“சுப்பையா: ஒத்துமையாக் கௌம்புனா எதைத்தான் சாதிக்க முடியாது?

ராமையா: ஆமா தம்பி, சிலபேரு தாங்க மட்டும் பொளச்சுப் போவோம்னுட்டு ஒத்துமையைக் குலைப்பாங்க. பொறந்தவன் ஒரு நாளைக்குச் சாகத்தான் வேணும். அப்பறம் ஏன் தம்பி பேடித்தனமா வாழணும்?

சுப்பையா: அது சரி அண்ணே! வாழ்ந்தா மானத்தோடே வாழணும்! இல்லேண்ணா வீரத்தோடே சாகணும்! நம்ம புள்ளெ குட்டிகளாச்சும் நல்லா இருக்கட்டுமே!

ராமையா: தம்பி தருமரைப் பாத்து ஒரு பூதம் கேட்டுச்சாம். உலகத்திலே ரொம்ப அதிசயமான சங்கதி என்னண்ணு கேட்டுச்சாம்? தம்பி சுப்பையா, நீதான் சொல்லேன். உலகத்திலே ரொம்ப அதிசயமான சங்கதி என்ன?

சுப்பையா: சூரியனா?

ராமையா: அதுவும் அதிசயமானதுதான். ஆனா எல்லாத்தையும் விட அதிசயமான ஒண்ணு இருக்கு.

சுப்பையா: தருமரு பூதத்துக்கு என்னண்ணே பதில் சொன்னாரு?

ராமையா: ஒலகத்திலே பொறக்கிறவுங்கள்ளாம் சாகிறதைத் தினம் தினம் பாத்துக்கிட்டு இருந்தும் மனுசன் தான் மட்டும் சிரஞ்சீவியாக இருக்கப் போறதாக நெனைச்சுக்கிட்டுக் காரியம் செய்யிறானே அதான் அதிசயம்னு சொன்னாராம்.”

இது தவிர “மழவரையன்” என்ற தன் குடும்பப் பெயரிலும், “சாமி” என்ற பட்டப் பெயரிலும், “கருவி”, “பழுவேட்டரையன்”, ஆகிய புனைப் பெயர்களிலும் “வேம்பன்”; என்ற குடும்பத் தெய்வத்தின் பெயரிலும் கட்டுரைகள், கவிதைகள், உலகச் செய்திச் சுருக்கங்கள் ஆகியவற்றைப் படைத்தார். பழுவேட்டரையன் என்ற புனைப் பெயரில் அவர் இயற்றிய இதொகாவின் கொடி வணக்கப் பாடலில், கொடி வண்ணங்களினதும் சின்னத்தினதும் கருச்சிறப்புகளைக் குறிப்பிடுகின்றார்:

“செம்பொன் நிறமெங்கள் தியாக உழைப்பு
     சீரிய வெண்ணிறம் சமரச அழைப்பு
பம்பும் பசுமைபாட் டாளியின் தேட்டம்
     பகலவன் உதயமோ உரிமைப் போராட்டம்.”

அவர் எழுதிய கொடி வணக்கப் பாடல், இதொகா ஏற்பாட்டின் பேரில் பிற்காலத்தில் எம். எஸ். விஸ்வநாதனால் இசையமைக்கப்பட்டு சீர்காழி கோவிந்தராஜனால் பாடப்பட்டது.

விஜயசுந்தரம் ஒரு சிறந்த கவிஞர். தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதை இயற்றுவதில் வல்லவராயிருந்தார். அவருடைய ஆக்கங்கள் பல இப்பொழுது கிடைக்காமற் போய்விட்டன. மலையகப் பெருந்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் பற்றி சிறப்பாகக் கூறுகின்றார்:

“பாரதத்தின் வழிவந்தோர் இலங்கை மண்ணில்
     பல்லாண்டு பட்டதுயர் மாய்க்க வெண்ணி
நேரடியாய் மாதவனே நிமிர்த்த கோலம்
     நின்னுருவில் தோன்று தையா சௌமியமூர்த்தி
கார்முகிலை நிகர்த்தவனே கருணாகரனே
     கதிகாட்டும் ஒளிவிளக்கே தொண்டமானே
சீரிலங்கைத் தொழிலாளர் தலைவா போற்றி
     சிறப்புயர நீடூழி வாழ்க நீயே!”

1941ம் ஆண்டு இராகலை சென். லியநாட்ஸ் (நடுக்கணக்கு) தெருவில் சஞ்சீவினி என்ற கடை திறக்கப்பட்ட பொழுது பின்வரும் வாழ்த்துக் கவிதையை இயற்றினார்:

“வெற்றிக் கொடியோங்கி வன்மைப் பொருடழைக்க
வொற்றைக்கொம் பாய்னீ யுதவுவா – யெற்றைக்கும்
மஞ்சள் முதலாக மாந்தர்க் குணவளிக்கச்
சஞ்சீ வினியென்ற சாலை.”

சென். லியநாட்ஸ் தோட்டத் துரை ரிச்சட் பீடன் ஓய்வு பெற்று 1963ம் ஆண்டு பிரித்தானியா திரும்பும் சமயம், பாடசாலை மாணவர் பாடும் பொருட்டு வாழ்த்து பாடல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினாh.; அவற்றின் பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன:

“மெச்சுபுகழ் மேவுசெல்வம் மேன்மைகீர்த்தி சேர்கவே
மேதினியில் தேவியொடு நீடுவாழ்க அஞ்சலி
ரிச்சட்பீடன் நாமமென்றும் நிச்சயமாய் நெஞ்சிலே
நின்றொலிக்க நாளுமுன்னை நினைவோமையா அஞ்சலி.”

“ஆயல வாந னுiஎiநெ ழக வைள டீழரவெல
டீடநளள வால ளிழரளந யனெ வாநந றiவா pடநவெல
டுமைந ய சாலவாஅ ளறநநவ in நயசள
வுhல யெஅந றடைட உhiஅந கழச அயலெ லநயசள.”

ஆங்கிலப் பாடலை ரிச்சட் பீடன் பெரிதும் ரசித்தார். பிரித்தானியாவில் வாழும் ரிச்சட் பீடனின் புதல்வியார் சென். லியநாட்ஸ் பாடசாலைக்கு வருகை தருவதுடன், இப்பாடசாலைக்குப் பல உதவிகளை இன்றும் அளித்து வருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாக இருந்து வருகிறது.

“புலவர் விருந்து” என்ற தலைப்பில் பழந்தமிழ் இலக்கியம் பற்றியும் புலவர்கள் பற்றியும் தொடர் கட்டுரைகளை விஜயசுந்தரம் எழுதினார். அன்று இதொகாவில் ஆசிரியர் குழுவில் கடமையாற்றிய எஸ். பி. தங்கவேல், புலவர் விருந்தைப்பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டார்: “புலவர் விருந்து என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதைகளுடனான கட்டுரைகள் மாணவ மாணவிகளுக்கு இன்றும் ஓர் ஒப்பற்ற கைநூல் போல் அமைந்துள்ளது.”

இதொகா நல்லெண்ணத் தூதுக்குழு அங்கத்தவராக, அன்றைய பொதுச்செயலாளர் எம். எஸ். செல்லச்சாமி, தொழிலாளர் நலக்கல்வி இயக்குநர் செனட்டர் ஆர். ஜேசுதாசன் ஆகியோருடன் 1977ம் ஆண்டு சோவியத் ரஷ்யா சென்று திரும்பிய விஜயசுந்தரம், தனது பயண அனுபவங்களைத் தொடர் கட்டுரைகள் மூலம் பகிர்ந்து கொண்டார். “ஒப்பில்லாத சமுதாயம் உலகுக்கொரு புதுமை” என்ற தலைப்பில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள், அவர் சென்ற இடங்களில் ரஷ்யப் பண்பாடு, மக்களின் நிலை, விஞ்ஞான முன்னேற்றங்கள் ஆகியற்றை அறிந்து கொள்ளப் பெரிதும் உதவின. சுவை ததும்ப எழுதப்பட்ட இத் தொடரின் இரு பகுதிகளைக் கீழே தந்துள்ளேன்:

“மற்றவர்களை மகிழ்விக்க எண்ணி கிடைத்ததையெல்லாம் வயிற்றுக்குள் திணித்ததின் பலன் சிறிது சிறிதாகத் தெரிய ஆரம்பித்தது. நித்திரை வரவில்லை. வயிற்றுக்குள் பாரதப் போரே நடப்பது போன்ற ஒரு உணர்ச்சி. இந்தப் பாழும் வயிறுதான் மனிதனை என்ன பாடுபடுத்துகிறது? அதற்கு ருசியான உணவு வேண்டும். ஆனால் அத்தகைய உணவு கிடைக்கும் பொழுது வேண்டிய மட்டும் எடுத்துச் சேமித்துக் கொள்ளத் தெரியவில்லையே இந்த வயிற்றுக்கு! எனக்கு ஏற்பட்ட இதே பிரச்சனை ஒரு காலத்தில் ராஜோபசார விருந்துக்குப் பிறகு நமது தமிழ் மூதாட்டி அவ்வைப் பிராட்டிக்கும் ஏற்பட்டிருக்க வேண்டும். அவர் பாட்டை இதோ கேளுங்கள்:

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்,
இருநாளைக் கேலென்றால் ஏலாய் - ஒருநாளும்
எந்நோ அறியாய் இடும்பைகூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.”

“முருகனும், கண்ணனும், புத்தரும், காந்தியும் நமது வாழ்வை மலர வைக்க வந்தவர்கள்தான். அவர்கள் உடல்களை நம்மால் பாதுகாக்க முடியவில்லை. பொய்யுடம்பைப் புறக்கணித்து விட்டுச் சிலை வைத்துக் கோவில் கட்டிக் கும்பிடுகிறோம். ரஷ்யர்கள் விஞ்ஞானத் துணைகொண்டு அவர்களின் தெய்வமாம் லெனினின் பொய்யுடம்பையே புகழுடம்பாக்கிக் கும்பிடுகிறார்கள். ஆக மனிதர்களுக்கு ‘புல்லுள்ள இடங்களிலே மேயவிட்டு நீருள்ள இடங்களிலே குடிக்கவிட்டு ஓட்டிப் பட்டியில் அடைத்துப் பாதுகாக்கும் ஒரு மேய்ப்பன்’ அவசியம் என்பது தெளிவாகிறது. அவனே தெய்வம்.”

கதைகளை சுவைபடச் சொல்வதிலும், உரையாடலிலும் விஜயசுந்தரம் மிக வல்லவராகத் திகழ்ந்தார். உரையாடலில் நகைச்சுவையைக் கலப்பதிலும், பிழைகளை நாசுக்காகச் சுட்டிக் காட்டுவதிலும், சரித்திர இலக்கிய மேற்கோள்களைக் கையாளுவதிலும் அவருக்கு நிகர் அவரே. இலக்கியம், அரசியல், சரித்திரம், மதக்கோட்பாடு ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்த அவருடன் உரையாடி அவரின் அறிவிலும் அனுபவத்திலும் திளைப்பதற்காக பத்திரிக்கையாளர்கள், கலாசாலை மாணவர்கள், கல்விமான்கள் ஆகியோர் அவரிடம் வருவதுண்டு. முன்னாள் வீரகேசரி ஆசிரியர் எஸ். எம். கார்மேகம், அன்று கலாசாலை மாணவராயிருந்த எம். நித்தியானந்தன் போன்றோர் அவருடன் மணிக்கணக்கில் உரையாடிக் கொண்டிருப்பது நினைவுக்கு வருக்கிறது. அலுவலப் பணி முடிந்தபின் கதை கேட்பதற்காக இதொகா தலைமைச் செயலகப் பணியாளர்கள் மாலையில் அவரைச் சுற்றிக் கூடுவது வழக்கமாகவிருந்தது. இவ்வேளைகளில் சிரிப்புச் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். இதொகாவில் பணியாற்றிய அனைவரும் அவரிடம் பெருமதிப்பு வைத்திருந்தார்கள். ஒருமுறை தலைமைச் செயலகப் பணியாளர்கள், ‘அனைவருக்கும் பேனா வழங்கப்பட வேண்டும்’ என்று அன்றைய நிர்வாகச் செயலாளருக்கு எதிராகப் போராட்டம் ஒன்றைத் தொடங்கினார்கள். தமது  நிலையை விளக்குவதற்காக விஜயசுந்தரத்திடம் சென்றார்கள். பணியாளர்களின் நீண்ட விளக்கங்களைக் கேட்ட அவர் ‘நாவிதன் தொழிலுக்குச் செல்லும் பொழுது கத்தியைக் கொண்டு செல்வதுதான் வழக்கம்’ என்று மட்டும் அமைதியாகக் கூறினார். போராட்டம் உடனே கைவிடப்பட்டது.

அவர் இராகலையில் வீட்டில் இருக்கும்போதும் கூட அவருக்கு நிம்மதி கிடையாது. அவரின் உதவி பெறுவதற்கும், அறிவுரை கேட்பதற்கும் சாரை சாரையாகப் பலர் வந்து கொண்டே இருப்பார்கள். ‘வருபவர்களுக்குத் தேநீர் ஊற்றியே களைத்துப் போய்விட்டேன்’ என்று அவருடைய துணைவியார் பார்வதி அம்மாள் பெருமையாகக் கூறிக் கொள்வார். விருந்தோம்பலில் மனநிறைவு காண்பவராக இருந்தபடியினால், உறவினர் சிலர் அவருக்கு “விருந்து விஜயசுந்தரம்” என்று பட்டம் கொடுத்தார்கள்.

இராகலையில் அவரும் அவரின் தம்பிகளாகிய இராமநாதன், சிவசண்முகமும் ஆகியோரும் பொதுச்சேவையில் ஈடுபடுவதிலும் கல்வியை வளர்ப்பதிலும் பெரிதும் ஆர்வம் காட்டினார்கள். அப்பொழுது இராகலையிலிருந்த நானும் இவர்களின் தலைமையின் கீழ் பல்வேறு விடயங்களில் ஈடுபட்டிருந்தேன். விஜயசுந்தரம் இராகலை தமிழ் வித்தியாலயத்தின் போசகராகவிருந்த பொழுது, இவ்வித்தியாலயத்துக்காக அரசாங்கத்தினால் 1960களில் எழுப்பப்பட்ட கட்டிடங்கள், சிங்கள வித்தியாலயத்துக்கு அளிக்கப்பட்டு விட்டன. அப்பகுதி மக்களினாலேயே தமிழ் வித்தியாலயத்துக்கான கட்டிடம் உருவாக்கப்பட வேண்டும் என்று இவர்கள் திடசங்கற்பம் பூண்டு அதற்காக விடாது உழைத்தார்கள். கட்டிடத்துக்கான பெரும் பகுதிப் பணம், இராகலையிலிருந்த விஜயசுந்தரத்தின் கடையிலிருந்து வழங்கப்பட்டது. அன்று அமைக்கப்பட்ட கட்டிடம் இன்றும் பாடசாலையின் முக்கிய பகுதியாக விளங்குகின்றது. இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு கீரமங்களம் நகருக்கு அருகில், முதற் பாடசாலை கட்டுவதற்கு தன்னுடைய நிலத்தின் ஒரு பகுதியை அளித்து, அப்பகுதியின் கல்வி வளர்ச்சிக்கு விஜயசுந்தரம் பேருதவி புரிந்தார்.

விஜயசுந்தரம் இராகலை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலின் அறங்காவலராக நெடுங்காலம் இருந்து வந்தார். இவர் காலத்தில் கோவிலைச் சுற்றி பல வரிசைக் கடைகள் பலரின் எதிர்ப்பின் மத்தியில் கட்டப்பட்டன. இவருடைய தம்பி சிவசண்முகம் விடா முயற்சி செய்து கடைகளைக் கட்டி முடிப்பதில் பெரும் பங்கு வகித்தார். இதற்கும் விஜயசுந்தரத்தின் கடையிலிருந்து பணம் வழங்கப்பட்டது. முதலில் அதிக செலவுகள் ஏற்பட்டாலும், பின்னர் வாடகை மூலம் வருமானம் அதிகரித்தது. கோவிலுக்குப் பெரும் வருமானத்தை அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து ஈட்டிக் கொடுப்பது இக்கடைகள்தாம் என்பது குறிப்பிடத்தக்கது.

1970களில் மலையக கல்விப் பொதுத் தராதர (உயர்தர) மாணவர்களுக்கும், கலாசாலை மாணவர்களுக்கும் இதொகா பண உதவியளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் அவர் முக்கிய பங்கு வகித்தார். கல்வி மேல் இவருக்கிருந்த அக்கறை காரணமாக இதனை நிர்வகிக்கும் பொறுப்பு இவருக்கு அளிக்கப்பட்டது. வசதிகளற்ற பல மலையக மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதகமாக அமைந்திருந்தது. பண, அரசியல் காரணங்களுக்காக இத்திட்டம் கைவிடப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டபோது அவர் பெருங்கவலையடைந்தார். நெருங்கிய நண்பர்களிடம் தனது கவலையைத் தெரிவித்து உளம் வெதும்பினார்.

விஜயசுந்தரம் மேலும் பல்வேறு திறமைகளைக் கொண்டிருந்தார். 1950-60களில் சென். லியநாட்ஸ் பாடசாலைத் தலைமை ஆசிரியராகவிருந்த நல்லையா மாஸ்டருடன் இணைந்து, பாடசாலை மாணவர்களுக்கு நடனம், நாடகம், பாடல் ஆகியவற்றில் பயிற்றலுக்கு ஏற்பாடு செய்வதில் ஆர்வம் காட்டியதுடன் அவரும் பயிற்றலில் ஈடுபட்டார். நடுக்கணக்கு கதிர்வேலாயுத சுவாமி கோவில் திருவிழாவன்று இவை மேடையேற்றப்பட்டன. இப்பயிற்றலுக்காக யாழ்ப்பாணத்திலிருந்து நடன ஆசிரியர்களைத் தருவிப்பது வழக்கமாகவிருந்தது. பல சந்தர்ப்பங்களில் சென். லியநாட்ஸ் பாடசாலை நடன நாடகப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசும் பெற்றது. விஜயசுந்தரம் சோதிடவியல் பயின்று அதிலும் திறமை பெற்றிருந்தார். இதொகாவின் முக்கிய நிகழ்வுகள், கூட்டங்கள், மகாநாடுகள் இவற்றுக்கு நாட்குறிப்பதற்கு இவரை நாடுவது வழமையாகவிருந்தது.

சௌமியமூர்த்தி தொண்டமானுக்கும், இதொகாவுக்கும் தலைசிறந்த ஆலோசகராகத் திகழ்ந்தவர் விஜயசுந்தரம். செனட் சபை நியமனம், நியமன பாராளுமன்ற உறுப்பினர் பதவி இவைகளை நிராகரித்தவர். சந்திப்பவர்கள் மனதில் மாறாத முத்திரை பதிக்கும் அறிவும், பண்பும், ஆற்றலும் கொண்டிருந்தவர். அவரைப்பற்றி அநேகருக்குத் தெரியாத காரணங்கள், அமைதிக் குணம், விளம்பரத்தை விரும்பாத தன்மை, இலைமறை காயாகவிருந்து செயலாற்றும் சேவை மனப்பான்மை ஆகிவையேயாகும். “இதயம் பேசுகிறது” இதழ் ஆசிரியர் மணியன், தனது இலங்கைப் பயணக் கதைத் தொடரில், விஜயசுந்தரத்தின் அறிவு ஞானத்தைப்பற்றிக் குறிப்பிடுகிறார். ‘அவருடைய சேவை இன, மத, மொழிக்கு அப்பாற்பட்டது என்றும், ‘எல்லோரும் ஓரின மக்கள் என்ற உயர்வான எண்ணம் கொண்டவர்’ என்றும், ‘அமைதியாக எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி எழுதிக் கொண்டும், அதே நேரத்தில், ஆழ்ந்த சிந்தனையோடு காரியங்களைக் கவனித்துக் கொண்டும் இருந்தவர்’ என்றும், விஜயசுந்தரம் பற்றிய தனது கட்டுரையில் எஸ். பி. தங்கவேல் கூறுகின்றார்;. இன்று தமிழ்நாட்டில் புகழோடு விளங்கும் கலைமாமணி வி.கே.டி. பாலன் “விஜயசுந்தரம் ஒரு மகாமேதை” என்று உரைத்திருக்கின்றார். மனிதப் பண்புக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்திருந்த விஜயசுந்தரம் என்ற விடிவெள்ளியை அவர் பிறந்து நூற்றாண்டு பூர்த்தியின் போது நினைவுகூர்வது எமக்குப் பெருமை தருகிறது.

விஜயசுந்தரம் 1985 பெப்ரவரி 19ம் திகதி, சுகவீனத்தின் பின் இறைவனடி சேர்ந்தார். அவர் இறந்த போது, “விழி மூடிய விஜயசுந்தரம்” என்ற தலைப்பில் மலையகக் கவிஞர் சி. அழகுப்பிள்ளை உளம் வெம்பினார்:

“தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆகித்
தொண்டனாய் வலக்கரமாய்த் துலங்கியோங்கும்
பொழில் நடுவில் இராகலையில் மலையும் கொண்டு
புகழுற்ற பரம்பரையின் வழியின் வந்தார்
எழில்மிக்க காங்கிரசின் ஏடு தந்தார்
எழுத்துலகில் ஒப்பிலா மணியுமானார்
விழிமூட விஜயசுந்தரனார் இந்த
வெங்கொடுமை எமன் செய்யத் துணிந்ததேனோ?”
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates