Headlines News :
முகப்பு » , » மலையகத்தில் நடக்கும் கட்டாய கருத்தடைகள்

மலையகத்தில் நடக்கும் கட்டாய கருத்தடைகள்



புதுகை பூபாளம் கலைக்குழுவின் தோழர் பிரகதீஸ்வரன் 'இலங்கைத் தோழர் ஒருவரை கட்டாயம் சந்திக்க வேண்டும், முடிந்தால் ஒரு நேர்காணல் எடுங்கள்' என்று கூறி, அறிமுகப்படுத்தினார். அவருடனான உரையாடலில், ஏற்கனவே இங்கு கூறப்பட்டிருந்த செய்திகளுக்கு மாறாக, பல புதிய தகவல்களைக் கூறினார். அந்த உரையாடல் கீற்று வாசகர்களுக்காக இங்கு தரப்படுகிறது. பாதுகாப்பு காரணமாக தோழரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. - கீற்று நந்தன்

கேள்வி: இலங்கை மலையக மக்களின் நிலைமை போருக்கு முன் எப்படி இருந்தது? மற்றும் போருக்குப் பின் எவ்வாறு உள்ளது?

பதில்: போருக்கு முன் அல்லது பின் என மலையக மக்களின் நிலைமையை ஒப்பிடும் அளவுக்கு பாரிய அளவு வித்தியாசம் எதுவும் இல்லை. ஏனென்று சொன்னால் மலையக மக்கள் போரினால் நேரடியாக பாதிக்கப்படவில்லை. ஆனால் மறைமுகமான எல்லா பாதிப்புகளுக்கும் மலையக மக்கள் ஆளானார்கள். அதாவது முழு நாட்டில் வசிக்கிற தமிழ் மக்கள் யாராக இருந்தாலும் எந்தப் பகுதியில் வசித்தாலும் பொலிஸிடம் தங்களைப் பற்றிய பதிவு செய்யவேண்டும், அதே நேரத்தில் வடக்கு கிழக்கில் ஏதாவது தாக்குதல் சம்பவம் நடந்தால் அதன் எதிரொலியாக மலையகப் பகுதிகளிலும் பொலிஸின் கடுமையான சோதனைகள் மற்றும் தேடுதல்கள் இருக்கும். அதே நேரத்தில் முழு நாட்டிலும் இருந்த பிரச்சனை சோதனைச் சாவடிகள். இது வடக்கு கிழக்கு மட்டுமல்ல மலையகப் பகுதிகளிலும் கடுமையாக இருந்தது.

இன்றைக்கு சோதனைச் சாவடிகள் ஓரளவுக்கு தளர்த்தப்பட்டுள்ளன. வட கிழக்குப் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் முன்பை விட அதிகம் இருந்தாலும் சோதனை நடைபெறுவது குறைந்துள்ளதாக அங்கு சென்று வரும்போது அறிய முடியும். மலையகப் பகுதிகளில் பிரதான சோதனைச் சாவடிகள் தவிர வேறு ஏதும் இல்லை. ஆனால் சோதனைகள் நடைபெறுவது குறைவு. மற்றபடி போருக்கு முன்பு தமிழ் மக்களிடம் இருந்த பாதுகாப்புத் தன்மை இப்போது இல்லை; அதாவது போருக்குப் பின் பாதுகாப்பற்ற மனநிலை நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மக்களிடம் (வடக்கு, கிழக்கு, மலையக, தென் மற்றும் தலைநகரில்) உள்ளது.

கேள்வி: பாதுகாப்பற்ற மனநிலை என்றால் எப்படி?

பதில்: மலையகப் பகுதிகளில் இருந்த தமிழர்களுக்கு போருக்கு முன்பு இருந்த மனநிலை என்னவென்றால் புலிகள் பலமாக இருப்பதனால் மலையகப் பிரதேசத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்படுமாயின் அரசாங்கத்தினரோ அல்லது பெரும்பான்மை சமுகத்தினரோ (சிங்களவர்கள்) மலையக தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என்பது இதற்கு சிறந்த உதாரணம். பெரும்பாலும் 1983க்கு முன்பு நடைபெற்ற வன்முறைச்செயல்கள் மலையக தமிழர்களை வடக்கு கிழக்கு நோக்கி நகரச் செய்தது. குறிப்பாக வவுனியா, முல்லைத் தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் சென்று குடியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. 1983 ஜூலை வன்செயல்களுக்குப் பிறகு அந்த நிலை ஏற்படவில்லை. ஏனெனில் போராளி அமைப்புகள் பலம் பெற்றதன் காரணமாக பாரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தக்கூடிய தாக்குதல்கள் ஏற்படவில்லை, சோதனைச் சாவடி கெடுபிடிகளைத் தவிர. ஆனால், 2009ம் ஆண்டு போரில் புலிகள் இயக்கம் தோற்றடிக்கப்பட்ட பின் மலையகத்தின் மக்கள் ஐதாக வாழ்கின்ற இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களில் இவ்வாறான வன்செயல்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. அண்மையில் இரத்தினபுரி மாவட்ட நிவித்தகலையில் மலையக மக்கள் கொடூரமாக தாக்கப்பட்டதோடு அவர்களின் வீடு உட்பட அவர்களது உடமைகள் அழிக்கப்பட்டன. 

கேள்வி: 1983க்கு முன்னர் எப்படி மற்ற பகுதித் தமிழர்கள் வன்முறை தாக்குதலுக்கு ஆளானார்களோ அதேபோல் மலையக தமிழர்களும் ஆளானார்களா?

பதில்: ஆம், தொடர்ச்சியாக..

கேள்வி: அதுகுறித்து கூறமுடியுமா?

பதில்: 1956க்குப் பிறகு தனிச் சிங்கள சட்டங்கள் கொண்டுவரப்பட்ட பிறகு, அதன் முக்கிய பகுதியாக "ஸ்ரீ" என்ற சிங்கள எழுத்து வாகனங்களுக்கான பொது எழுத்தாக்கப்பட்டபொழுது, மலையகப் பிரதேசத்தில் பிரான்சிஸ், அய்யாவு என்ற இருவர் அதற்கான எதிர்ப்புப் போராட்டதிலே பொலிசாரின் தாக்குதலில் பலியாயினர். மேலும் இலங்கையின் சுதந்தரத்திற்கு முன்னரும் இவ்வாறான நிலை காணப்பட்டது. அதாவது அங்கிருந்த தொழிலாளர்கள், தொழிலாளர் வர்க்கம் என்ற முறையிலே ஆங்கில ஆட்சியாளர்களின் பல ஒடுக்குமுறைகளுக்கு ஆளானார்கள். அதில் முதலாவது போராளியாக கோவிந்தன் என்பவர் முல்லோயா என்ற தோட்டத்திலே 1940களின் ஆரம்பத்தில் சிங்களப் பொலிசாரால் சுடப்பட்டு மரணம் அடைந்தார்.

இந்த நிலை படிப்படியாக தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்திலே மலையகத் தமிழர்களின் செறிவுப் பிரதேசமான தலவாக்கலை பிரதேசத்தில் ஏழாயிரம் ஏக்கர் தேயிலை காணியினை சிங்களர்களுக்கு பிரித்துக்கொடுப்பதற்காக அரசாங்கம் மேற்கண்ட நடவடிக்கையின் எதிர்ப்புப் போராட்டத்திலே சிவனு இலட்சுமணன் என்ற தோட்டத்தொழிலாளி பொலிசாரின் துப்பாக்கிச்சூடுக்கு பலியானார். அதன்பின் காணி பிரித்துக் கொடுப்பதிலிருந்து அரசு பின்வாங்கியது. இவ்வாறு பல சம்பவங்கள் மலையகத்தின் தோட்டங்களிலும் நகர்ப்புறங்களிலும் நடைபெற்றிருக்கிறது. இலங்கையின் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை பல மலையகத் தமிழர்கள் தொழிற்சங்கப் போராட்டங்களிலும், இன வன்செயல்களுக்கு எதிரான போராட்டத்திலும் வீர மரணம் அடைந்துள்ளனர். ஆனால் மிகத் தீவிரமான வன்செயல் 1983 ஆம் ஆண்டு நடைபெற்றது.

கேள்வி: எந்தளவுக்கு?

பதில்: இங்கு தமிழகத்திலே இருக்கக்கூடிய பா.ராகவன் எழுதிய 'பிரபாகரனின் வாழ்வும் மரணமும்' என்ற புத்தகத்திலே கூட 1983 கலவரம் வடகிழக்குப் பகுதியில்தான் நடந்ததாக கூறியுள்ளார் அது முற்றிலும் தவறான விடயமாகும். வடக்கில் பதிமூன்று ராணுவ வீரர்கள் கொலை செய்யப்பட்டதற்கு சிங்களர்களின் பதில் நடவடிக்கை முதலில் தலைநகர் கொழும்பு பிரதேசத்தில் தான் ஏற்பட்டது. 1983 கலவரத்தில் மலையகப்பகுதி, கொழும்பு மற்றும் தலைநகரை அண்டிய பகுதிகள், தென் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களில்தான் கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். பல இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன

கேள்வி: இந்த கலவரம் சிங்கள ராணுவத்தால் நடத்தப்பட்டதா?

பதில்: இது அரசாங்கத்தால் திட்டமிட்டு மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட நிலையிலே நடத்தப்பட்டது. அப்போது வாக்காளர் பதிவு இடாப்பின் மூலம் தமிழர்களின் விலாசங்களை சரியாக அடையாளங்கண்டு தாக்குவதற்கான வாய்ப்பு எளிதாக்கப்பட்டது. இது மலையகத் தமிழர்கள் செறிவு அதிகம் உள்ள தோட்டப்புறங்களை விட மலையக மக்கள் செறிவு குறைவாக உள்ள மலையக நகர்ப்புறங்களில்தான் அதிகமாக நடந்தது. ஆனால் இந்த 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தின்போது இலங்கையின் வடகிழக்குப் பகுதிகள் ஒப்புநோக்கில் அதிகளவில் பாதிக்கப்படவில்லை. வட கிழக்கிற்கு வெளியே வாழ்ந்த தமிழர்கள்தான் முழுமையாகப் பாதிக்கப்பட்டனர்

கேள்வி: இந்த பாதிப்புகளுக்குப் பிறகு போராளி இயக்கங்களில் மலையக மக்கள் இணைந்தது நடந்ததா?

பதில்: நிச்சயமாக... அதாவது புலிகளின் மாவீரர்கள் துயிலும் இல்லங்களில் கூட அதைக் காணலாம். மலையக மக்கள் முன்னணியின் தலைவராக இருந்த பெ.சந்திரசேகரன் போர் நிறுத்த காலகட்டத்தில் புலிகளின் அழைப்பின் பேரில் வன்னி சென்று வந்திருந்தார். அவர் கூறினார் கிளிநொச்சி அக்கரையான் குளத்தில் - அங்கு 1850 மாவீரர் கல்லறைகள் இருந்தன - அதில் 975 கல்லறைகள் மலையகத்தைச் சேர்ந்தவர்களின் கல்லறைகள். அதிலும் குறிப்பாக அவர்களில் பெரும்பாலானோர் பதுளை மாவட்டத்தைச் சேர்த்தவர்கள். ஏனென்றால் அந்த மாவட்டத்தில் இருந்து இலங்கையில் கிழக்குப் பகுதிகளுக்கு செல்வது மிக இலகுவானது. பதுளை மாவட்டத்திற்கு கிழக்கின் பிரதான மாவட்டங்களான அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுடன் நிலவழித் தொடர்பு உண்டு. அதேவேளை 1983 ஜூலை கலவரத்திற்கு முன்னதாக வடபகுதிக்கு குடியேறிய மலையகத் தமிழர்கள் குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் குடியேறிய மலையக மக்கள் தொடர்ச்சியாக இந்தப் போராட்ட இயக்கங்களில் பங்கு கொண்டிருந்தனர். 

கேள்வி : இதில் அவர்களாக சேர்ந்தார்களா அல்லது புலிகளின் வற்புறுத்தலின் பேரில் சென்றார்களா?

பதில்: மலையகத்தில் இருந்து நேரடியாக சென்று இயக்கங்களில் சேர்ந்த மலையகப் போராளிகளும் இருக்கிறார்கள். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்த நிமித்தத்தின் காரணமாக இணைந்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால் புலிகள் இறுதியாக இருந்த கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்டங்களில் இறுதிவரை இருந்தவர்களில் பெரும்பாலானோர் மலையகத் தமிழர்கள். அதேபோன்று இடைத்தங்கல் முகாம்களில் மூன்று இலட்சம் மக்களில் கணிசமானவர்கள் மலையக வம்சாவழியினராகவே இருந்தனர். 

கேள்வி : புலிகள் மலையகத் தமிழர்களை சாதி வேற்றுமையுடன் நடத்தி இருக்கிறார்களா?

பதில்: வெளிப்படையாக நாம் அறிந்த வரையில் இல்லை. ஆனால் சிலர் அவ்வாறு கூறுவது உண்டு. அதாவது மலையகத் தமிழர்களை போர்க் களத்துக்கு பலிகடாவாக்குவது என்று. ஆனால் இதற்கான சாட்சியங்கள் இல்லை. ஆனால் ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டும். புலிகளின் தலைவர்கள் தங்களின் நம்பிக்கைக்குரியவர்களாக மலையகத் தமிழர்களை நினைத்தார்கள். முக்கிய தலைவர்களின் பாதுகாவலர்களாக மலையகப் போராளிகளையே நியமித்திருந்தனர். நவம் அண்ணர் என அழைக்கப்படுகின்ற மலையக வம்சாவழி போராளி இந்திய இராணுவத்திடமிருந்து பிரபாகரனை பாதுகாப்பதற்காக இறக்க வேண்டி ஏற்பட்டது. இவர் பிரபாகரனின் மெய்பாதுகாவலர்களில் முக்கியமான ஒருவர். இவருடைய பாதுகாப்பு முயற்சிகள் இல்லாதுவிட்டால் இந்திய இராணுவத்தாலேயே பிரபாகரன் கொல்லப்பட்டிருக்கலாம். இவர் இறந்த பின்னர் புலிகளின் அங்கவீனமானவர்கள் வசிக்கின்ற கல்வி கூடத்திற்கு “நவம் கல்வி கூடம்” என பெயரிடப்பட்டதை அறிய முடிகிறது. 

கேள்வி: பொதுவாக ஈழத்தில் சாதி அமைப்பு, இந்தியாவில் உள்ள சாதி அமைப்புடன் ஒப்பிடும்போது எப்படி இருக்கிறது? 1980க்கு முன், 80களுக்குப் பின் நிலைமை குறித்து கூறமுடியுமா?

பதில்: ஆயுதப் போராட்டத்திற்கு முன்பு வட கிழக்குப் பகுதிகளில் சாதிய ஒடுக்குமுறை தீவிரமாக இருந்தது. போராளி இயக்கங்கள் வளர்ந்த பிறகு அதன் தாக்கம் பெருமளவு குறைந்திருக்கின்றது. நாம் அறிந்த வரையில் புலிகளின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பகுதிகளில் அவர்களின் சட்ட திட்டங்களில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கி செயல்பட்டதாகவும் மற்றும் சீதன முறையை (வரதட்சணையை) ஒழிக்கும் சட்டங்களை அறிமுகப்படுத்தியதாகவும் அறிய கிடைத்தது. வடபகுதியில் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உயர் சாதியினர்க்கும் இடையே உற்பத்தி உறவு வடிவிலான தொடர்பு இல்லை. இதனால் பொருளாதார ஒடுக்குமுறை அங்கு கிடையாது. சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் மேல் நிலை ஆக்கம் பெறுவதற்கான வழிகள் பல அங்கு திறந்து விடப்பட்டன. வன்னியில் போராளிகள் பலர் சாதி மாறி திருமணம் செய்திருந்தனர். புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழ்ச்செல்வனும் இதில் ஒருவர். சாதி சம்பந்தமான வேறுபாடுகளை வன்னியில் காண்பது அரிது. குடா நாட்டில் திருமண உறவுகளில் மட்டும் சாதி பார்க்கப்படுவதை அவதானிக்கலாம். இன்று அங்கு உயர் சாதியாளர் பலர் வெளிநாடு சென்றதால் தாழ்த்தப்பட்ட சாதியினர் ஏறத்தாழ 50% உள்ளனர். இவர்கள் மீது ஒடுக்குமுறைகளை பிரயோகிப்பது என்பது தற்போதைய நிலையில் சாத்தியமில்லை. இதை சிங்களப் பத்திரிகைகள் சில தென் இலங்கையில் பாராட்டி எழுதிய காலங்கள் இருந்தன.

மலையகத்தை எடுத்துக்கொண்டால் பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுவதைப் போன்று தமிழ்நாட்டில் இருந்து சென்று மலையகத்தில் குடியேறிய தமிழர்கள் இங்கு இருக்கக்கூடிய சாதிய கட்டமைப்புகளை அதே முறைப்படி அங்கு கொண்டு சென்று பின்பற்றியதாகவும் இலங்கையின் மலையகப் பகுதிகளில் முப்பத்தி ஏழு சாதிகள் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். ஆனால் பிந்திய காலகட்டங்களில் அதிலும் வட கிழக்குப் பகுதிகளில் போராட்ட இயக்கங்கள் வலுப்பெற்ற காலத்தில், அதன் காரணமாக மலையக மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற ஆரம்பித்த பிறகு மலையகத்திலே சாதி என்பது பெரும் பொருட்டாக இல்லை. அதுவும் தமிழகத்தினுடன் ஒப்பிடும்போது சாதி என்பது மிக நலிவடைந்த நிலையிலேயே காணப்படுகிறது. 

கேள்வி: இங்கு இருக்கிற அளவுக்கு அங்கு சாதிய இறுக்கம் இருக்கிறதா?

பதில்: இல்லை, உதாரணத்திற்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். நான் இங்கு வந்தபோது எனது நண்பரிடம் நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்த போது, அங்கு அவருடைய நண்பர் என்னைப் பார்த்து முதலாவதாகக் கேட்ட கேள்வி நீங்கள் என்ன சாதி என்று? நானும் தவறுதலாக சொல்லிவிட்டேன். அத்துடன் அவர் எழுந்து போய்ட்டார்.

மலையகத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் (80%) தோட்டத் தொழிலாளர்கள் அல்லது தோட்டத்தொழிலை ஒட்டிய வேறு தொழில்களைச் செய்பவர்கள், அல்லது தோட்டங்களிலேயே வாழ்பவர்கள். அந்த வகையில் அவர்கள் தொழிலாளர்கள் என்ற பொதுவான வகையில் அடக்குமுறைகளை எதிர்நோக்குகின்றனர். எனவே அவர்கள் வர்க்கம் என்ற நிலையிலே அவர்கள் மத்தியிலே சாதியம் என்பது பெரிய விடயமாக பேசப்படுவதில்லை. இதைவிட மலையக மக்கள் தேசிய ஒடுக்குமுறைக்கு பிரதானமாக முகங் கொடுக்க வேண்டி இருப்பதால் சாதிப்பாகுபாடுகள் அங்கு பெரியளவிற்கு எழுச்சியடைவதில்லை. ஆனால் இன்றும்கூட சிறு சிறு சம்பவங்கள் திருமணத்தின்போது விரல்விட்டு எண்ணக்கூடிய சம்பவங்கள் நடைபெறுகிறதே ஒழிய பெருமெடுப்பில் சாதியம் என்பது ஒரு பொருட்டாக இல்லை. ஆனாலும் கூட மலையகத்தின் நகர்ப்புறங்களில் குறிப்பாக கண்டி, அட்டன், கொழும்பு பகுதிகளில் வாழக்கூடிய வர்த்தகர்கள் குறிப்பாக இலங்கையில் உழைத்து தமிழ்நாட்டில் சேமிக்கக்கூடிய வர்த்தகர்கள் தமிழ்நாட்டில் இருப்பதைப்போன்று சாதிய அமைப்புகளை நிறுவுவதில் தொடர்ச்சியாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

கேள்வி : எப்படி?

பதில்: சாதி சங்கங்கள் மற்றும் அமைப்புகளை நிறுவுகிறார்கள். உதாரணத்திற்கு ஆறுநாட்டு வேளாளர் சங்கம், பரதர் சங்கம், நாடார் சங்கம் போன்றவற்றை குறிப்பிடலாம். இதுகூட தொழிலாளர்களிடம் பெரும் தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. அதேநேரத்தில் யாழ்ப்பான சமூகத்திடம் சாதிய முறைமைகளை மற்றும் நுகர்வுக் கலாச்சாரத்தைத் திணிப்பதில் பலர் முன்னின்று செயல்படுகிறார்கள். அதாவது அங்கு பொதுவாக களியாட்ட நிகழ்ச்சிகளை நடத்துவது, அவர்களின் சிந்தனைகளை மாற்றக்கூடிய தென் இந்திய தொலைக்காட்சி அலைவரிசைகளை அங்கு முழுமையாக அனுமதிப்பது, சாதியத்தை ஊன்றக்கூடிய சம்பவங்களைத் தூண்டிவிடுவது போன்றவை. இவ்வாறு அவர்கள் சமூக சிந்தனைகளை மாற்றக்கூடிய மற்றும் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு மாற்றக்கூடிய அனைத்தையும் அரச மட்டத்திலும் மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊடாகவும் செயல்படுத்தி வருகிறார்கள். 

கேள்வி: புலிகளின் அச்சுறுத்தலுக்குப் பயந்துதான் மக்கள் சாதியை மறந்தார்கள். ஆனால் உண்மையில் மக்களிடம் சாதி மறையவே இல்லை. மறைந்துதான் இருக்கிறது என்று சிலர் சொல்வது உண்மையா?

பதில்: உண்மைதான். புலிகளின் சட்டதிட்டங்கள் காரணமாக சாதியை மக்கள் மறைத்த நிலையில் வைத்திருந்திருக்கலாம். புலிகளின் கட்டுப்பாடு பிரதேசத்தில் சாதியின் பெயரை குறிப்பிட்டாலே 10000 ரூபா தண்டப் பணம் கட்ட வேண்டும். சடங்குகளில் சாதியால் ஒடுக்கப்பட்டவர்கள் பங்குபற்றினால் அதற்கும் தண்டப்பணம் கட்ட வேண்டும். ஆயுத அமைப்பு அப்படித்தான் செயல்பட்டிருக்க முடியும். ஆனால் நீண்ட காலப்போக்கில் அது தொடர்ச்சியாக இருந்திருக்குமாயின் சாதி மறந்த விடயமாக இருந்திருக்கும். ஏனென்றால் நீண்ட காலம் மறைந்த ஒரு விடயம் மறந்து அல்லது அழிந்து போவது மனித இயல்புதானே. சாதி ஒடுக்குமுறையை அதிகளவில் தக்க வைப்பது பொருளாதார ரீதியான ஒடுக்குமுறையும், தீண்டாமையும் தான். ஆனால் அவை தற்பொழுது நடைமுறையில் இல்லை. முன்னர் கூறியது போல திருமண விடயங்களில் மட்டும் சாதி பார்க்கப்படுகின்ற நிலை காணப்படுகின்றது. அதுவும் யாழ் குடாநாட்டில் தான் அதிகமாக இருக்கின்றதே தவிர வேறு பிரதேசங்களில் குறைவு. குடாநாட்டைச் சேர்ந்தவர்கள் பலர் காதல் திருமணங்களை சாதி பாராது செய்துள்ளனர். 

கேள்வி : மலையகத் தமிழர்களுக்கும் மற்ற தமிழர்களுக்கும் இடையில் திருமணங்கள் நடக்கிறதா?

பதில்: மலையகத்தைப் பொருத்தவரையில் கலப்புத்திருமணங்கள் பாரிய அளவில் நடைபெறுகிறது. அதாவது அங்கு திருமணத்தைப் பொருத்தவரையில் மாப்பிள்ளை என்ன தொழில் செய்கிறார் என்பததுதான் முக்கியம். அப்படி தொழில் செய்பவராக இருந்தால் பெண்வீட்டார் பெண் கொடுப்பார்கள். சாதி, சீதனமெல்லாம் பெரிய விசயமல்ல.

போர்ச்சூழல் காலத்தில் மலையகத்தவர்கள் வடக்கிலே சென்று குடியேறினார்கள். ஈழத்தமிழர் மலையகம் வந்து குடியேறினார்கள். குறிப்பாக 2001 ஆம் ஆண்டு குடிசன கணக்கெடுப்பின்படி (மக்கள் தொகைக் கணக்கு) மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தில் (மலையகத்தின் பிரதான மாவட்டம்) 75,000க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்கள் எண்ணிக்கை அடிப்படையில் அதிகமாக உள்ள மாவட்டம் யாழ்ப்பாண‌ம், அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது நுவரெலியா மாவட்டம். நுவரெலியா என்பது மத்திய மலைநாட்டில் உள்ளது. இந்த மாவட்டத்தில் 55% தமிழர்கள், இதில்கூட 75,000க்கும் மேற்பட்டவர்கள் வட கிழக்கை சார்ந்தவர்களாகப் பதியப்பட்டுள்ளது. இவர்கள் மலையத்தில் வந்து நிரந்தர குடிகளாக மாறிவிட்டார்கள். அதேபோல் மலையகத்தில் இருந்து சென்று வடக்கே குடியேறியவர்களும் திரும்பி வர சாத்தியமில்லை. இவ‌ர்க‌ளுக்கு இடையே க‌ல‌ப்புத் திரும‌ண‌ங்க‌ள் சாதார‌ண‌மாக‌ நடைபெறுகின்ற‌ன‌.

வ‌ன்னிப் பகுதிக‌ளில் ஆண்க‌ள் எண்ணிக்கை குறைவாக‌ இருப்ப‌தால், அங்கிருக்கும் இள‌ம்பெண்க‌ள், க‌ண‌வனை இழ‌ந்த பெண்களை ம‌லைய‌க‌த்தில் வாழும் ஆண்களுக்குத் திரும‌ண‌ம் செய்துவைப்ப‌து சாதார‌ணமாக‌ ந‌டைபெறுகிற‌து. யாரும் சாதி பார்ப்ப‌தில்லை. நீங்க‌ள் தமிழ்நாட்டில் இருக்கும் சாதி அமைப்புட‌ன் ஒப்பிட்டால், ஈழ‌த்தில் அப்ப‌டி ஒன்றும் பெரிதாக இல்லையென்றே கூற‌முடியும்.

கேள்வி: ஈழத்தில் சாதி அப்படி ஒன்றும் இல்லை என்று சொல்கிறீர்கள். ஆனால் புலம்பெயர் தமிழர்கள் சிலர், ஈழத்தில் சாதி குறித்து வேறுவிதமாகக் கூறுகிறார்களே?

பதில்: புலம்பெயர் தமிழர்களில் குறிப்பிடத்தக்க வீதமானவர்கள் அங்கு புலிகள் அல்லது ஏனைய போராட்ட அமைப்புகள் வலுவாக இருந்தபோது, அங்கு சாதியத்தைப் பேசமுடியாத நிலையில் அந்தப் பிரதேசங்களை விட்டு வெளியேறி தலைநகருக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ சென்றவர்கள். அவர்கள் அப்படிச் செல்லும்போது தங்களுடன் சாதியையும் கொண்டுசென்றிக்கிறார்கள். அவர்கள் ஈழத்தில் மீண்டும் சாதிய விடயங்களை முனைப்பு பெறச் செய்ய நினைக்கிறார்கள். அது கள நிலவரங்களுக்கு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. காலம்தான் தீர்மானிக்கும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் சாதி அமைப்பான “சிறுபான்மை தமிழர் மகா சபை” சாதி அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டது. ஆனால் ஆயிரம் வாக்குகளை கூட அவர்களால் பெற முடியவில்லை. 

கேள்வி: போராளிக்குழுக்கள் சாதிய மனநிலையுடன் செயல்பட்டதாக கூறுவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில் : தொடர்புகளின் வாயிலாக நாம் அறிந்தவரையில் இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.

போராட்ட காலத்தில் அங்கு சாதிய வேறுபாட்டை வளர்க்க இந்திய உளவுத்துறை தீவிரமாக செயல்பட்டதாக பத்திரிக்கைகளின் வாயிலாக அறியமுடிகிறது. ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்த இறுக்கம் காரணமாக அங்கு அதை அவர்களால் செயல்படுத்த முடியாமல் போனது. போராளிகள் சாதி பார்ப்பதாயின் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த தமிழ்ச்செல்வனால் எவ்வாறு அரசியல் பிரிவுத் தலைவர் என்ற உயர் பதவியை எட்ட முடிந்தது? 

கேள்வி: இப்போது ஈழப்போர் முடிவுக்கு வந்த நிலையில் மக்களிடம் இந்துத்துவ மனநிலை வளர்க்கப்படுகிறது என்று பேச்சு இருக்கிறது அதைப் பற்றி சொல்லமுடியுமா?

பதில்: ஆமாம். பொதுவாக இந்து, சைவ வேளாளர் போன்ற சித்தாந்தங்கள் எல்லா மட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது. அதுவும் இந்தியாவிலிருந்து வரும் வழிபட்டு முறைகள் அதைப் பெரிதும் வளர்க்கிறது. உதாரணமாக சபரி மலை, ஆஞ்சநேயர், அம்மா பகவான் போன்ற பலவற்றை வைத்து இந்து அமைப்புகள் செயல்படுகிறார்கள். இவர்கள் போராட்ட காலத்தில் மலையக மற்றும் தலைநகரை மையமாக வைத்து செயல்பட்டார்கள்.

கேள்வி : புலிகள் பிரதேசத்தில் இல்லையா?

பதில்: இல்லை, அப்போதில்லை. ஆனால் இப்போது முழுநாட்டிலும் அவர்கள் செயல்படுவதாக அறியக்கிடைக்கிறது.

கேள்வி: மலையகத் தமிழர்கள், முஸ்லீம்கள், ஈழத்தமிழர்கள் என்ற வேறுபாட்டை சிங்கள அரசு தூண்டிவிட்டதா அல்லது இந்தப் பிரிவினை இயல்பாகவே ஏற்பட்டதா?

பதில் : ஆரம்பகாலம் முதல் இயல்பாகவே இப்பிரிவினை இருந்தது. ஆனால் அதை உரம் போட்டு வளர்த்ததில் ஆட்சியாளர்களின் பங்கு அதிகம்.

கேள்வி: எப்படி செய்தார்கள் என்று சொல்லமுடியுமா?

பதில் : இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு கொண்டு வரப்பட்ட பிரஜா உரிமைச் சட்டத்தின்படி மலையகத் தமிழர்கள் என்று இன்று அழைக்கப்படும் இந்திய வம்சாவழித் தமிழர்களின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டபோது ஈழத்தில் உள்ள ஒரு சில தலைவர்களும் பாராளுமன்றத்திலே இணைந்து வாக்களித்திருக்கிறார்கள். இது மலையக மக்களுக்கும் இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களுக்குமான இடைவெளியை அதிகரித்தது. இருந்தபோதிலும் ஈழத் தலைவர்களில் ஒருவரான செல்வநாயகம் அவர்கள் இச்சட்டத்தை எதிர்த்து, அங்கிருந்து விலகி புதிய கட்சி ஒன்றைத் துவங்கியதும் நடந்தது. போராட்ட காலங்களில் சிங்கள அரசு மலையகப் பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களை தங்களது அமைச்சரவையில் சேர்த்து அவர்களை முழுமையாக ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்திக்கொண்டது.

கேள்வி: இங்கு முஸ்லீம்களின் பிரச்சினை குறித்து..?

பதில்: முஸ்லீம்கள் இலங்கை முழுவதும் சிதறி வாழ்கின்றனர். அதேவேளை வர்த்தக சமூகத்தினராகவும் உள்ளனர். இதனால் தென்னிலங்கையுடன் நெருங்கிய உறவை பேணுவதனூடாகவே தங்களுடைய நலன்களை பாதுகாக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர். மூன்றாவது இனமாக இருப்பதால் முதலாவது இனத்துடன் உறவைப் பேணுவது தங்களை பாதுகாக்கும் என்றும் அவர்கள் கருதுகின்றனர். நீண்டகாலமாக கொழும்பு முஸ்லீம் தலைமைகளே வட- கிழக்கு முஸ்லீம்களுக்கும் தலைமை வகித்தன. தமிழரசு கட்சி காலத்திலும் இந்த போக்கே நிலவியது. தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் கூட குறுகிய காலத்தில் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டனர். முஸ்லீம் சமூகம் அரசாங்கத்துடன் இணைந்திருக்க விரும்பியதே இதற்கான காரணம். 

போராட்ட இயக்கங்கள் வளர்ச்சியடைந்த போது முஸ்லீம்கள் தனிநபர்களாக இயக்கங்களில் சேர்ந்து கொண்டார்களே தவிர சமூகமாக சேரவில்லை. 

இலங்கை ஆட்சியாளர்களிடம் முஸ்லீம் தலைவர்கள் தொடர்ந்து அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்டு அந்த அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்தார்கள். எனவே மறைமுகமாக இலங்கையில் தொடர்ச்சியாக இருந்த பயங்கரவாத தடுப்புச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் ஆகியவற்றை மாதாந்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அவர்களின் பங்களிப்பும் இருந்தது. மேலும் மலையகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டு, அரசாங்கத்துடன் இணைந்து இருந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி போன்றவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பும் இருந்தது. இன்று போர் முடிவடைந்த பிறகு கூட இந்த நிலை தொடர்கிறது. அதேபோல் வடகிழக்கில் இருந்து தேர்வு செய்யப்பட்ட குறிப்பாக புலிகளுக்கு எதிரான டக்ள‌ஸ் தேவானந்தா போன்றவர்கள் பாராளுமன்றத்தில் அடக்குமுறைச் சட்டங்களை நிறைவேற்ற உதவினர். இந்த அடக்குமுறைச் சட்டங்கள்தான் அரச படையினருக்கு அளவுக்கு அதிகமாக அதிகாரங்களை வழங்கக்கூடியது. இதில் அவர்கள் அனைவரும் இணைந்தே செயல்பட்டார்கள்.

இன்று ஒரே மொழியை பேசுபவர்களாக இருப்பினும் தங்களைத் தனியான இனமாக அடையாளங் காட்டுவதிலே முஸ்லிம்கள் ஆர்வமாக உள்ளனர். முஸ்லீம்கள் தங்களை தனியான தேசிய இனமாக அடையாளப்படுத்த தொடங்கிய பின்னர் தமிழ் முஸ்லீம் முரண்பாட்டை இரண்டு தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடாக கருதியே கையாள வேண்டும்.

இன்று புலிகள் இயக்கம் இல்லாததால் புலிகளை சாட்டி சலுகைகளை பெறக் கூடிய வாய்ப்பு முஸ்லீம்களுக்கு இன்று குறைந்து விட்டது. மறுபுறத்தில் பேரினவாத ஒடுக்குமுறைக்கு சில பிரதேசங்களில் குறிப்பாக அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் - தமிழர் முகங்கொடுக்கும் ஒடுக்குமுறையிலும் பார்க்க - அதிகளவில் முகங்கொடுக்கின்றனர். அப்பிரதேசங்களில் முஸ்லீம்களின் இருப்பே இன்று கேள்விக்குறியாகிவுள்ளது. இந்த நிலை எதிர்காலத்தில் முஸ்லீம்களும் தமிழ் மக்களும் இணைந்த செயற்படக் கூடிய நிர்ப்பந்தங்களை உருவாக்கலாம். 

கேள்வி : இப்போது அந்த ஊரடங்கு அவசரகாலச் சட்டங்கள் இருக்கிற‌தா?

பதில்: ஊரட‌ங்குச் சட்டம் இல்லை. ஆனால் அவசரகாலச் சட்டம் தொடர்ச்சியாக இருக்கிற‌து.

கேள்வி : இப்போது தமிழ் மக்களுக்கு அங்கு பாதுகாப்பு இருக்கிறதா?

பதில்: தமிழ் மக்களிடம் அச்ச உணர்வுதான் இருக்கிறது.

கேள்வி: போருக்குப் பிறகு முஸ்லீம் மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறர்களா? மேலும் சிங்களக் குடியேற்றங்களைப் பற்றி சொல்ல முடியுமா?

பதில்: முஸ்லீம்கள் தரப்பில் இருந்தும் இப்போது பலர் பத்திரிக்கை வாயிலாக குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லீம் மக்கள் செறிவாக இருக்கக் கூடிய அம்பாறை மாவட்டத்தில் அரசாங்கம் பல்வேறு காரணங்களைக் கூறி நிலங்களை கையகப்படுத்துவதாகவும் மற்றும் குடியேற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் இதற்குக் கூட முஸ்லீம் அரசியல்வாதிகளிடமிருந்து காத்திரமான பங்களிப்பு எதுவும் இல்லை. அவர்கள் அனைவரும் அரசாங்கத்துடன் இணைந்து இருப்பதால் அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கதைப்பதில்லை.

கேள்வி: போரின் முடிவையொட்டி சிங்கள மக்கள் அதை அதிகமாகக் கொண்டாடினார்கள். இப்போதும் சிங்கள மக்கள் அந்தப் பெருமிதத்தில்தான் இருக்கிறார்களா அல்லது ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?

பதில்: பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்வதற்கில்லை. இன்றைக்கும் அவர்கள் வட கிழக்குப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணம் போவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

கேள்வி: அவர்கள் இந்தப் போரோட வெற்றியை தங்களோட வெற்றியாக‌ நினைக்கிறார்களா?

பதில்: பெரும்பாலான மக்கள் தங்களோட வெற்றியாக‌ நினைக்கிறார்கள். அங்கிருக்கும் ஊடகங்கள் மற்றும் ஆளும் வர்க்கம் அதைக் கொண்டாட வேண்டும் என்கிற மனோநிலையை ஏற்படுத்தியிருக்கின்றன. கடந்த மூன்று தேர்தல்களிலும் அரசாங்க கட்சி பாரியளவில் வெற்றி பெற்றதற்கு போர் வெற்றியே பிரதான காரணமாகும். 

கேள்வி: சிங்களத் தரப்பில் தமிழர்களுக்கு ஆதரவான குரல்கள் இருக்கிறதா?

பதில்: தொடர்ச்சியாக இருந்தது. ஆனால் தமிழர் தரப்பு அதை சரியாகப் பயன்படுத்தவில்லை. அரசியல்வாதிகள் ஆனாலும் பத்திரிக்கை ஆனாலும் சரியாக பயன்படுத்தவில்லை. தமிழர் தரப்பிலிருந்து எந்த அளவுக்கு ஆங்கில ஊடகங்களை உருவாக்கி சர்வதேச அளவில் செயல்பட்டார்களோ அந்த அளவுக்கு தமிழர் தரப்பு நியாயங்களை சிங்களர்களுக்கு உணர்த்துவதற்காக ஒரு சிங்கள ஊடகம் ஆரம்பித்திருக்க வேண்டும். அது நடைபெறவில்லை புலிகள் “தேதுன்ன” என்ற பெயரில் சிங்கள பத்திரிகை ஒன்றினை வெளியிட்டிருந்தாலும் அது பெரியளவிற்கு தாக்கத்தை கொடுக்கவில்லை. இதை விட தங்களது வானொலியில் குறிக்கப்பட்ட நேரம் சிங்கள மொழி சேவை ஒன்றையும் நடத்தியிருந்தனர். 

கேள்வி: நாடு கடந்த தமீழீழ அரசு, ராஜபக்ஷவுக்கு எதிரான போராட்டங்கள் என்று செயல்படும் புலம் பெயர்ந்த தமிழர்களைப் பற்றிய அச்சம் சிங்களர்களிடம் இருக்கிறதா?

பதில்: இருக்கிறது. அண்மைக்காலமாக மேற்குலகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற சம்பவங்கள் அவர்களிடம் மனோரீதியான ஓர் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் சாதாரண மக்களிடம் இச்செய்தி சென்றதற்கான சான்றுகள் இல்லை. சிங்கள பத்திரிகைகளும் இது விடயத்தில் சுய தணிக்கையை மேற்கொள்கின்றன. 

கேள்வி: தமிழகத் தமிழர்களைப் பற்றி?

பதில்: தமிழகத் தமிழர்கள் ஏதாவது செய்வார்கள் என்று போர்க்காலத்தில் எதிர்பார்த்தார்கள். ஆனால் இங்கு வந்தால்தான் தெரியும் தமிழகத் தமிழர்களால் ஒன்றும் செய்ய இயலாது என்று. புலம்பெயர் தமிழர்கள் செய்வதைக்கூட தமிழகத் தமிழர்களால் செய்ய முடியாது. இவ‌ர்க‌ள் பலவாறு பிரிந்துள்ள‌ன‌ர். அத்துடன் தமிழக தமிழர்கள் தாங்களே ஓர் ஒடுக்குமுறைக்குள் இருப்பதை உணராதவர்களாகவே உள்ளனர். இவர்களை சினிமாவும், கிரிக்கட்டுமே வழி நடத்துகின்றன.

கேள்வி: மலையகத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை குறித்து?

பதில்: மலையகத்தில் இருக்கும் குறிப்பான பிரச்சினை என்பது நிலம் தொடர்பான பிரச்சினை. அவர்கள் இருக்கக்கூடிய நிலத்திற்கான உரிமை அவர்கள் கையில் இல்லை. மற்றும் அவர்கள் செறிவாக உள்ள நிலப் பிரதேசங்களை இலங்கை அரசு சுருக்குவது. திட்டமிட்ட குடியேற்றங்கள் அல்லது சட்ட விரோதக் குடியேற்றங்கள் மலையகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறுகிறது. அபிவிருத்தி என்ற பெயரில் ஏற்படுத்தக்கூடிய திட்டங்கள் மலையகத் தமிழர்களை பாதிக்கின்றன. இதற்கு சிறந்த உதாரணம் அபிவிருத்தி என்ற பெயரில் இலங்கையில் பாரிய அளவில் மேல் கொத்மலை நீர் மின்வலு திட்டம் ஜப்பானிய உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இது மலையகத் தமிழர்கள் செறிவாக வாழக்கூடிய தலவாக்கலை பிரதேசத்தை இரண்டு கூறுகளாக்குவதற்கான ஒரு திட்டம் ஆகும்.

கேள்வி : சிங்களமயமாக்குவது மாதிரியா?

பதில் : சிங்களமயமாக்குவது என்பதுடன் மலையகத் தமிழர்களின் மைய பிரதேசத்தை இரு பிரதேசமாக பிரிப்பதற்கான திட்டம். இதனால் எதிர்காலத்தில் புதிய குடியேற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் மலையக மக்களின் புவியியல் ஒருமைப்பாட்டை இது இல்லாமல் செய்கின்றது.

கேள்வி: மலையகத் தமிழர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களா?

பதில்: நீதிமன்ற வழக்குகள் மற்றும் மலையகத் தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து நடத்திய போராட்டங்கள், மேல்கொத்மலை திட்டத்திற்கு எதிரான மக்கள் அமைப்பு என்ற பெயரில் நடத்திய போராட்டங்கள் மூலம் இவை 20 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. மலையகத்தின் பிரதான தேர்தல் கட்சிகளான மலையக மக்கள் முன்னனி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவை அரசாங்கத்துடன் இணைந்து இணக்கம் தெரிவித்த காரணத்தால் இந்த திட்டம் இப்போது செயல்படுத்தப்படுகிறது. பெரும்தோட்ட பொருளாதாரத்தை மலையக மக்களின் கைகளில் இருந்து சிதைப்பதற்கான முயற்சியாக தற்போது இது நடைபெறுகிறது. இதைவிட 1992க்குப் பிறகு இந்தப் பெருந்தோட்டங்கள் தனியார் மையப்படுத்தப்பட்ட பிறகு அதாவது 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டபிறகு பெரும்பாலான தோட்டங்களில் போதிய பராமரிப்பு வசதிகள் செய்யப்படுவதில்லை.. இதன் காரணமாக தோட்டங்கள் தானாகவே அழிந்துவிடுவதற்கான ஆரம்ப புள்ளி தெரிகிறது.

அதைபோல இலங்கையில் சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் என்போர் ஊக்குவிக்கப்படுகிறார்கள். அதாவது இந்த சிறு தேயிலை உற்பத்தி என்பது மலையகத் தமிழர்கள் செறிவாக வாழக்கூடிய பகுதிகளுக்கு அப்பால் அபிவிருத்தி செய்யக்கூடிய புதிய தேயிலை தோட்டங்கள். இந்த சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களில் 95% பேர் சிங்களவர்கள். பெரும்தேயிலைத் தோட்டங்களை வெளிநாடுகளுக்குக் காண்பித்து அதன் மூலம் பெறப்படும் உதவிகள் முழுமையாக இந்த சிறு தேயிலைத் தோட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இன்று இலங்கையில் 58% விதமான ஏற்றுமதி என்பது இந்த சிறு தேயிலை உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படுகிறது. இது முழுமையாக‌ மலையகத் தமிழர்களிடம் இருந்து தேயிலைத் தொழிலை பறிக்கும் முயற்சியாகும்.

கேள்வி: மலையக மக்களிடம் இந்த சிங்கள அரசுடைய திட்டங்களுக்கு எதிரான போராட்டம் அல்லது போதிய அளவிலான விழிப்புணர்ச்சி இருக்கிற‌தா? மேலும் வலிமையான ‌போராட்டங்களை முன்னெடுக்கும் அளவுக்கு நல்ல தலைமை இருக்கிற‌தா?

பதில்: மலையக மக்களிடம் போதிய அளவு விழிப்புணர்வு இல்லை. விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டால்கூட மலையகத்தில் இருக்கக்கூடிய அரசியல் சக்திகள் அதற்கு வழி விடுவதில்லை. ஏனென்றால் அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர் பதவிகளை அலங்கரிப்பவர்கள். அதேபோன்று மலையகத்தின் கல்விநிலை, அதாவது இலங்கையின் கல்வி நிலை என்பது 94% பேர் எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள் உள்ள நாடு. ஆனால் மலையகத் தமிழர்களைப் பொருத்த மட்டில் 60% முதல் 70% பேர் தான் எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள். மாணவர்கள் இடை விலகல் என்பது இலங்கையில் மலையகத்தில்தான் அதிகம் காணப்படுகிறது.

அதேபோல் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இல்லாமல் இருப்பவர்கள் கூடுதலாக இருப்பதும் மலையகத்தில்தான். இலங்கையில் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை என்பது கட்டாயம். பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இல்லாமல் அடையாள அட்டை பெற முடியாது. அதனால் மலையகத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்களிடம் இந்த அடையாள அட்டை இல்லை. அதன் காரணமாக போர் நிலவிய காலகட்டங்களில் பல்வேறு சோதனைகளுக்கு ஆட்படுத்தப்பட்டு சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்தார்கள். மேலும் இந்த அடையாள அட்டை அங்கு இப்போது வாக்களிக்கவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மலையகத்தவர்கள் வாக்காளர்களாகப் பதிந்தாலும் கூட இந்த அட்டை இல்லாமல் வாக்களிக்க முடியாது. இருந்தாலும் அவர்களுக்காக தேர்தல் நேரங்களில் தற்காலிக அட்டை வழங்கப்படுகிறது. அதைப் பெறுவதில் கூட அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. மேலும் அந்த விழிப்புணர்வை அவர்களிடம் எந்த அரசியல் கட்சிகளும் கொண்டுசெல்வதில்லை.

இலங்கையில் வாழும் சமூகங்களில் மலையகத் தமிழர்களுக்கு என்று தனியாக பல்கலைக்கழ‌கம் இல்லை. ஆனால் மற்ற எல்லா சமூகங்களுக்கும் இருக்கிறன.

மலையகத் தமிழர்களின் மற்றுமொரு முக்கிய பிரச்னை தமிழ்மொழி உத்தியோகப்பூர்வமான மொழியாக இருந்தாலும் மலையகத்தில் தமிழ்மொழி அமுலாக்கம் என்பது பெருமளவில் இல்லை.

இலங்கையில் பல்கலைக்கழகங்களில் கலாநிதி பட்டம் வரையில் தமிழிலேயே படிக்கலாம். ஆனால் மக்களின் அன்றாட நடைமுறையில் அரச செயல்பாடுகளில் தமிழ் பயன்பாடு மிகக் குறைந்து காணப்படுகிறது. மலையக மக்கள் செறிந்து வாழக்கூடிய நுவரெலியா மாவட்டத்தில் கூட இதே நிலைதான் காணப்படுகிறது. மற்றொரு முக்கிய விடயம் கட்டாய குடும்பக்கட்டுப்பாடு. இது மலையகத்திலே தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கிற ஒரு நிகழ்வு.

கேள்வி: ஒரு குழந்தையுடன் கட்டாயம் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளவேண்டுமா, இல்லை வேறு எப்ப‌டி?

பதில்: இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதாயின் அவர்களுக்கு தோட்டங்களிலே தொழில்வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாக‌ அவர்கள் கட்டாயம் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ள வேண்டும். இன்னும் சிலருக்கு அவர்களுக்குத் தெரியாமலேயே குடும்பக்கட்டுபாடு செய்யப்படுகிறது. சிலரை பண ஆசை காட்டியும், சிலரை பயமுறுத்தியும் இணங்க வைக்கிறார்கள். மற்ற பகுதிகளில் விருப்பப்பட்டவர்கள் மட்டுமே செய்து கொள்கிறார்கள். மலையகத்தில் மட்டும் இது கட்டாயப்படுத்தப்படுகிறது. இரண்டாவது கரு உண்டானால் வேலை கிடைக்காது என்ற நிலை, பல மலையகத் தமிழர்களை உடன்படச் செய்கிறது.

கேள்வி: காரணம்?

பதில்: இதுவும் ஒருவித‌ இன சுத்திகரிப்புதான். இதற்கு சிறந்த உதாரணம் இன்று மலையகப் பகுதிகளில் பெரும்பாலான பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு புதிதாக மாணவர்களை சேர்ப்பதற்கு மாணவர்கள் இல்லை. இப்படி இன்று தரம் ஒன்றுக்கான பாடசாலை இல்லை என்றால் அடுத்தவருடம் தரம் இரண்டுக்கான பாடசாலை இல்லை. இப்படி தரம் ஐந்து வரையிலான பல பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

கேள்வி: மலையகத் தமிழகளுக்கு போதுமான ஆதரவு குரல்கள் இருக்கிறதா? குறிப்பாக‌ தமிழகத்திலும் மற்றும் புலம்பெயர் தமிழர்களிடத்திலும்?

பதில்: இலங்கையில் உள்ள சிங்களவர்கள் எந்த அளவுக்கு மலையகத் தமிழர் பிரச்சனையை விளங்கிக்கொண்டிருக்கிறார்களோ அந்த அளவுக்குக்கூட விளக்கம் தமிழகத்தில் இல்லை. புலம்பெயர்ந்த தமிழர்கள் கூட ஓரளவுக்கு விளங்கி அது அவர்களுடைய எழுத்துகளில் பல பதிவுகள் காணக்கூடியதாக இருக்கிற‌து. நோர்வேயில் இருந்து வெளி வரக்கூடிய சக்தி என்ற பெண்களுக்கான ஒரு சஞ்சிகை, மலையகத் தமிழர்களிடம் நடத்தப்படும் கருத்தடையை மையமாக வைத்து ஒரு முழு இதழை வெளியிட்டது.

கேள்வி : கருத்தடை யாருக்கு செய்யப்படுகிறது? பெண்களுக்கா அல்லது ஆண்களுக்கா?

பதில்: இரு பாலருக்கும் செய்யப்படுகிற‌து.

கேள்வி: மலையகத் தமிழர்கள், ஈழத் தமிழர்கள், முஸ்லீம்கள் இவர்களுக்கிடையே இணக்கத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சி இருக்கிற‌தா? தமிழர்கள் மறுபடியும் தங்களுடைய உரிமைகளைப் பெறுவதற்கான சிறுசிறு எத்தனிப்புகளாவது இருக்கிற‌தா?

பதில்: ஆங்காங்கே அதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆனால் முஸ்லீம் அரசியல் தலைவர்களும், மலையக அரசியல் தலைவர்களும் தங்களது சுய நலன்களுக்காக அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டு இருப்பதால் வலுவான ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாதுள்ளது. எனினும் புதிய தலைமுறை இது பற்றி ஆழமாக சிந்திக்கத் தொடங்கியுள்ளது. 

கேள்வி: இந்தமாதிரியான ஒற்றுமை ஏற்படுவது தெரிந்தால் அரசாங்கம் அதை எப்படி எதிர்கொள்ளும்?

பதில்: அரசாங்கம் மாத்திரமல்ல அரசாங்கத்தை ஆதரிக்கிற வெளிநாட்டு சக்திகள் கூட விரும்பாது. இதில் இலங்கை அரசாங்கத்தை விட இலங்கைக்கு வெளியிலே பல சக்திகளுக்கு தேவை இருக்கிறது,

கேள்வி: எப்படிபட்டவர்கள் என்று சொல்கிறீர்கள்?

பதில்: அதாவது தங்களை வல்லரசுகளாக ஆக்கிக்கொள்ள நினைப்பவர்களுக்கு அந்தத் தேவை இருக்கிற‌து. ஐக்கியம் இல்லாது இருந்தால்தான் தங்களுடைய நலன்களை அவர்களால் பேண முடியும். 

கேள்வி: என்றைக்காவது தமிழர்களுக்கான சம உரிமைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிற‌தா?

பதில்: இன்றைய சூழலில் அதைப்பற்றி உடனடியாக‌ கருத்து சொல்ல இயலாத நிலைதான் இருக்கிறது. காலமும் களமும்தான் அதைத் தீர்மானிக்கும்.

நேர்காணல்: கீற்று நந்தன்
தட்டச்சு: கனியூர் தமிழ்ச்செல்வன்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates