Headlines News :
முகப்பு » , , , » புதிய பண்பாட்டுத்தள கருத்தாடலில் மல்லியப்பு சந்தி திலகர் உரை

புதிய பண்பாட்டுத்தள கருத்தாடலில் மல்லியப்பு சந்தி திலகர் உரைபுதிய பண்பாட்டுத்தளம் ஏற்பாடு செய்திருக்கக்கூடிய இந்த கருத்தாடல் களம் பலதரப்பு விடயங்களை உள்வாங்கத்தயாராக உள்ள நிலையில் மலையகத்தைச் சார்ந்தவன் என்ற வகையிலும் மலையகத்தைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்றவன் என்ற வகையிலும் மலையகம் சார்ந்ததாக எனது கருத்துக்களை பதிவு செய்யலாம் என நினைக்கிறேன்.
தலைமையுரை ஆற்றிய கலாநிதி ந.இரவீந்திரன் வடகிழக்கு தீண்டாமை ஒழிப்பு இயக்கம் முதல் பாரதி, காந்தி, மற்றும் அம்பேத்கார் காலம் முதலான சாதிய நிலைமைகளையும் அதற்கெதிரான பேராட்டங்களையும் இந்து மதம் அதற்கு எதிரான அல்லது மாற்றான மதங்கள் குறித்த தெரிவுகள் எவ்வாறு இடம்பெற்று வந்துள்ளன என்பன குறித்த தமது கருத்துக்களை முன்வைத்தார். எனினும் மலையகம் சார்ந்து முன்வைக்கப்படவிருக்கும் எனது கருத்துரையில் அங்கு நிலவக்கூடிய சாதிய நிலைமகளுக்கு அப்பால் தற்போதைய சூழ்நிலையில் ‘மலையக தேசியத்தை’ நிறுவுவதில் உள்ள சவால்கள் குறித்து அதிகம் விபரிக்கலாம் என நினைக்கிறேன்.
இலங்கைக்கு 200 வருடங்களுக்கு முன்பாக கூலிகளாக வந்த மக்கள் இன்று தங்களை ‘மலையக’ மக்கள் எனும் சொல்லாடல் கொண்டு அழைக்கும் நிலைமைகளை உருவாக்கியுள்ளனர். இந்திய வம்சாவளி தமிழர்  என்பதே பதிவாக உள்ளபோதும் கூட ‘மலையக மக்கள்’ என்போர் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களைத்தான் குறிக்கின்றது என தனியாக யாரும் விவரணப்படுத்தத் தேவையில்லை. இந்திய வம்சாவளியினர் என்று விரும்பியே தம்மை பதிவு செய்துகொள்பவர்கள்கூட பொது உரையாடல்களின்போது ‘மலையகம்’ எனும் சொல்லாடலை பிரயோகிக்கின்ற நிலைமைகளை அவதானிக்கலாம். இந்த ‘மலையகம்’ என்ற கருத்துருவாக்கத்தில் அரசியலைக்காட்டிலும் சமூக, இலக்கிய செய்பாடுகளே அதிக பங்கினை வகித்துள்ளது. ஈழத்து இலக்கியத்தின் ஒரு கூறாக ‘மலையக இலக்கியம்’ நோக்கப்படும் அளவுக்கு அது தனித்துவத்தைக் கொண்டுள்ளது. ஊடகத்துறையும் மலையகம், மலையகத்தமிழர்கள் என்ற சொல்லாடலை பயன்படுத்தி அந்த மக்களை சுட்டிக்காட்டுகின்ற நிலைமை பரவலாகவே வந்துவிட்டது. இத்தகைய செய்பாடுகளின் விளைவுகளாக ஆரம்ப காலங்களில் ‘தொழிலாளர்’ என்ற சொல்லாடலோடு இயங்கிய அரசியல், தொழிற்சங்க இயக்கங்கள் கூட மலையகம் என்ற சொல்லைப் பயன்படுத்த (உதாரணம்: மலையக மக்கள் முன்னணி) அது இன்னும் புதிய அர்த்தத்தையும்; புதிய எல்லைகளையும் அடையத்தொடங்கியது. இது இயல்பாகவே நடைபெற்று வந்திருக்கக்கூடிய ஒன்று.
தற்போது மலையகம் சார்ந்த உரையாடல்கள் இடம்பெறும் வெளிகளில் எல்லாமே அவர்கள் மலையகத்தமிழ்கள் என்று அழைப்பதா அல்லது இந்திய வம்சாவளி தமிழர்  என்று அழைப்பதா எனும் வாதப்பிரதிவாதங்கள் கிளம்பிவிடுகின்றன. அது பெரும் சர்ச்சைக்குரிய விடயமாகவும் விவாதமாகவும் பல சந்தர்ப்பங்களில் அமைந்து விடுகின்றன. இதற்கான காரணம் தம்மை மலையக மக்கள் என அழைத்துக்கொள்ளும் இந்த மக்கள் அவ்வாறு மலையக மக்களாகவே தம்மை பதிவு செய்து கொள்ளும் ஏற்பாடுகள் எதுவும் இல்லை. ஆட்பதிவின்போதோ, சனத்தொகை கணக்கெடுப்பின்போதோ மலையகத்தமிழர்கள் எனத்தம்மை பதிவு செய்தகொள்ளும் நிலைமை இல்லை. எனவே தம்மை இந்திய வம்சாவளியினர் என அழைத்துக்கொள்வதில் அல்லது பதிந்துகொள்வதில் நாட்டமில்லாத மலையக மக்கள் அவர்களை ‘இலங்கைத் தமிழர்’ என பதிவு செய்து வருகின்றனர். இலஙகைத் தமிழர்கள் என்பதற்கு உள்ள உண்மையான அர்த்தம் அவர்கள் பூர்வீக தமிழர்கள் (வடக்கு கிழக்கு வாழ்) என்பதாகும். எனவே புள்ளிவிபரங்கள் அடிப்படையில் இலங்கையில் வாழ்கின்ற மலையக மக்களின் அளவு தொடர்பான குறிகாட்டி மாற்றமடைகின்றது. இந்த நிலை இலங்கைத்தமிழர்கள் எனும் அளவிலும் மாற்றத்தை எற்படுத்துகின்றது. எனவே உத்தியோகபூர்வமாக இலங்கையில் கிடைக்கப்;பெறுகின்ற புள்ளிவிபரங்களுக்கும் உண்மையான மலையக மக்களின் எண்ணிக்கைக்கும் ஒரு பாரிய இடைவெளி காணப்படுகின்றது. 
மலையக மக்களை இந்திய வம்சாவளியினர் என்று அழைக்கவேண்டும் என வாதிட்டு நிற்போர் பாரம்பரிய விடயதானங்களை சுட்டிக்காட்டி அவர்களது அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு அதுவே சிறந்தது என்றும் கருத்துக்களை முன்வைக்கின்றனர். இந்தியாவின் (தமிழகத்தின்) கலாசாரம் பண்பாட்டோடு தாம் இரண்டரக் கலந்திருப்பதாகவும் பரம்பரை வழியாக வந்த மரபினை மாற்ற முடியாது என்பதும் அவர்களது வாதம். 
மறுபுறம் தமிழகத்தில் (இந்தியாவில்) இருந்து இலங்கைக்கு பிரித்தானியர் அந்த மக்களை அழைத்துவந்தபோது இந்தியா காட்டிய பொறுப்புடைமை அதேபோல ஸ்ரீமா - சாஷ்திரி ஒப்பந்தம் உள்ளடங்களாக பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்த மக்களை திரும்பவும் இந்தியாவுக்கு (தமிழகத்துக்கு) பெற்றுக்கொண்டபோதும் அவர்களின் மறுவாழ்வுக்காக இன்றுவரை எடுத்த முயற்சிகள் தொடர்பிலும் இந்தியா காட்டிய, காட்டிவரும் பொறுப்புடமை தொடர்பிலும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. 
ஒரு புறம் இலங்கையில் இன்றுவரை சட்டரீதியாக இந்த மக்கள் ‘இந்திய வம்சாவளி மக்கள்’ என அழைக்கப்படும் அதே வேளை இந்தியாவுக்கு திருப்பியழைக்கப்பட்ட (சட்டரீதியான ஒப்பந்தப்படி இந்தியா ஏற்றுக்கொண்ட) மக்கள் இன்றும் தமிழ்நாட்டில் ‘சிலோன்காரர்கள்’ என்று அழைக்கப்படுகின்ற அவலநிலை காணப்படுகின்றது. அவர்கள் இன்னும் இந்தியர்களாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சாதாரண இந்திய குடிமகனுக்கு உள்ள உரிமைகள் இந்த திருப்பிபெறப்பட்ட இலங்கை மலையக மக்களுக்கு இல்லை என்பதை பல ஆய்வுகள் காலத்துக்கு காலம் எடுத்துக்காட்டியுள்ளன. அண்மைக்கால எனது ஆய்வு முயற்சிகளும் இந்த ‘தமிழ்நாட்டின் சிலோன்காரர்கள்’ நிலைமை அப்படியே தொடர்வதையே உறுதிபடுத்துகிறது.
இந்த நிலையில் தங்களை ‘இந்திய வம்சாவளி மக்கள்’ என்றா அல்லது ‘மலையக மக்கள்;’ என்றா தாங்கள் அழைத்துக்கொள்வது என்கின்ற வினாவுக்கு விடையாக அந்த மக்கள் தாமாகவே மலையக மக்கள் என அழைத்துக்கொள்வதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. (எல்லோரம் தமிழர்கள்தான் இதில் வேறுபாடு தேவையில்லை என்ற ‘முற்போக்கான’ கருத்துக்கள் பதியப்படும். அது குறித்து தனியாக விவாதிக்கலாம்)
அண்மைக்காலமாக இந்த மலையக தேசியம் குறித்த கருத்தாடல்கள் பல்வேறு மட்டங்களில் நடைபெற்றுவருகின்றன. அதில் முதன்மையாக மலையக இளம் சமூகத்தினரிடையே இந்த கருத்தாடல் மலையகத்திலும் தலைநகரிலும் இடம் பெற்றுவருகின்றமையை சொல்லவேண்டும். இரண்டாவதாக தமிழ்நாட்டில் ‘சிலோன்காரர்களாக’ப்பார்க்கப்படும் தாயகம் திரும்பிய மக்களிடையேயும் உள்நாட்டு யுத்தத்தினால் தமிழகத்துக்கு அகதிகளாகச் சென்று தற்காலிக முகாம்களில் வசிக்கும் மலையக மக்களிடையேயும்  இது குறித்த தேடல்கள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது. கருத்தரங்குகள், குறுந்திரைப்படங்கள், ஆய்வு மாநாடுகள் என அவர்கள் தங்களைப்பற்றிய தேடல்களையும் ஆய்வுகளையும் விசாலப்படுத்தியுள்ளனர். மூன்றாவதாக புலம்பெயரந்துவாழும் மலையகத் தமிழ் மக்களிடையே இந்த உணர்வு தற்போது மேல் எழும்பி வருவதனை அவதானிக்கலாம். ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்த கருத்தாடல்கள் இடம்பெறத்தொடங்கியுள்ளன. அண்மையில் லன்டனிலே இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் ‘மலையக மக்கள் - ஒரு நூற்றாண்டு துயர்’, ‘மலையக மக்கள் அங்கும்-இங்கும்’ (இலங்கையிலும் இந்தியாவிலும்) எனும் தலைப்புக்களில் பேராசிரியர் மு.நித்தியானந்தன் அவர்கள் ஆற்றிய உரைகள் குறிப்பிடத்தக்கன.
இத்தகைய வெளிகளில் கலந்தரையாடப்படும் மலையக மக்கள் தங்களை மலையக தேசியமாக நிறுவிக்கொள்வதில் உள்ள சவால்கள் குறித்தே இப்போது பார்க்கப்படுகின்றது. இந்த சவால்களை பொருளியல் மற்றும் புவியியல் கண்ணோட்டத்தோடு ஒப்பு நோக்குவது பொருத்தப்பாடுடையது. பொருளியல் ரீதியாக ‘தேயிலை’ மற்றும் ‘இறப்பர்’ பயிர்ச்செய்கைகளுக்காக தமிழகத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட இந்த மக்கள் ‘கூலிகள்’ என்றே அழைக்கப்பட்டனர். (கள்ளத் தோணிகள், வடக்கத்தியான் என்றும் அழைக்கப்பட்டனர்) பின்னர், பெருந்தோட்டத்தொழிலாளர்கள், இந்தியதமிழர்கள், இந்திய வம்சாவளி தமிழர் என மாற்றம் கண்டு இன்று மலையக மக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். மலையக மக்கள் என்ற சொல்லில் வரும் ‘மலை’யை புவியில் சார்பு அடிப்படையில் பார்த்து பெரும்பாலும் மலைப்பாங்கான பகுதிகளில் வாழ்ந்த மக்களை மட்டும் சுட்டுவதாக பொருட்கொள்ளப்பட்டதோர் நிலைமையை அவதானிக்க முடிகின்றது. (தமிழகத்தில் இதனை இலங்கையில் மலைவாழ் மக்கள் என அர்த்தம் கொள்ளும் நிலைமை காணப்படுகிறது. இது முற்றிலும் தவறான ஒரு பார்வை).
 அதே நேரம் பொருளாதார ரீதியாக இலங்கையில் ‘இறப்பர்’ பயிர்ச்செய்கை ஒரு வீழ்ச்சிப்போக்கை பதிவ செய்ய அந்த தொழில் தறை சார்ந்து வாழ்ந்த மக்களும் ‘மலையக மக்கள்’ என்பதற்குள் உள்வாங்குவதில் ஒரு வீழ்ச்சிப்போக்கை அவதானிக்ககக்கூடியதாகவுள்ளது. அதனை இரண்டுவிதமாகப் பார்க்கலாம். ஒன்று, தேயிலைத்தொழில்தறைசார்ந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் தாழ்நிலப்பிரதேசங்களில் (அண்சமவெளிப் பிரதேசம்) வாழும் இந்திய வம்சாவளி மக்களை மலையக மக்களாக கணக்கிலெடுத்துக்கொண்டபோதும் ‘இறப்பர்’ தொழில் சார் நிலப்பரப்பில் இருந்து தாம் ‘மலையக மக்கள்’ என்கின்ற குரல் பலமாக ஒலிக்காமை. இரண்டாவது, ‘மலையகம்’ என விளிப்பதில் முன்னிற்கும் மலையக இலக்கிய பரப்;பில் இருந்து ‘இறப்பர்’ துiறாசர் இலக்கிய படைப்புகள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கேனும் வெளிவராமை. இது மலையக இலக்கிய செல்நெறியில் காணப்படுகின்ற ஒரு குறைபாடாகக்கூட கொள்ளமுடியும். தேயிலை மற்றும் இறப்பர் இரண்டு துறைகளிலுமே தொழிலாளர்கள் அல்லது பாட்டாளிவர்க்கத்தினரே உள்வாங்கப்பட்டுள்ளபோதும் தேயிலை தொழில் சார் தொழிலாளர்களின் பிரச்சினைகளை பேசிய அள்வுக்கு இறப்பர் தொழில் சார் பாட்டாளிமக்களின் பிரச்சினைகளை மலையக இலக்கியம் பதிவு செய்யவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இதற்கான காரணங்களை கண்டறியவும் மலையகத்தேசியத்துக்குள் அவர்கள் அகப்படாமல் செல்வதை தவிர்ப்பதற்கும் தனியான ஆய்வு முயற்சிகள் அவசியமாகின்றன. 
ஏற்கனவே கூறியபடி புவியியல் அடிப்படையில் பார்க்குமிடத்து தற்போது நுவரெலியா பதுளை  மாவட்டங்கள் மாத்திரமே ‘மலையகம்’ என்றதும் மனக்கண் முன் விரியும் ஒரு தன்மை காணப்படுகின்றது. காரணம் தற்போது ‘இறப்பர்’ தொழில் துறை அனுபவித்த அதே வீழ்ச்சிப்போக்கை தேயிலைத் தொழில் துறையும் அடையத்தொடங்கியுள்ளது. பயிர்ச்செய்கைக்கு பயன்படாத நிலங்கள் ‘பகிர்ந்தளிக்கும்’ ‘வேலைத்திட்டம்’ தற்போது ஆரம்பித்தாயிற்று. ஏற்கனவே, இறப்பர் தொழில் சார் மாவட்டங்களான களுத்துறை, கேகாலை மலையக கருத்துருவாக்கத்தில் பின்தள்ளப்பட்டு தற்போது தேயிலை மருவிவரும் மாத்தளை, கண்டி, மொனராகலை, இரத்தினபுரி என மலையகம் என்பதற்குள் அடங்ககக்கூடிய பரப்பெல்லை குறைந்து வருவதனை அவதானிக்கலாம். அரசியல் ரீதியாக மலையக மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இன்றைய நிலையில் நுவரெலியா மாவட்டத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.
ஒரு புறம் ‘இந்திய வம்சாவளி’ என்றே பதியவேண்டும் என்போர் முன்னெடுக்கும் அதற்கான நிகழ்ச்சி நிரலோடு ஒப்பிடும்போது ‘மலையகம்’ என்பதனை நிறுவிக்கொள்வதில் உள்ள சவால்கள் மிகப்பெரியதாகவே தெரிகிறது. ஏனெனில் சட்டரீதியாக தற்போதும் ‘இந்திய வம்சாவளி’ (இந்தியான தெமள) என்றே பதிவு செய்துகொள்ளும் சந்தர்ப்பமே உள்ளது. ஒருவர் ‘மலையகத்தமிழர்’ என தன்னை இலங்கையில் பதிவு செய்துகொள்ள விரும்பினால் கூட அதற்கான ஏற்பாடுகள் எதுவுமில்லை. அந்த எற்பாட்டினைச் செய்யும் பாரிய பொறுப்பு மலையக தேசிய  முன்னெடுப்பாளர்களால் கையில் உள்ளது. அதனைத்தொடர்ந்து புவியியல் பார்வையைக் கடந்து ‘மலையகம்’ என்பது ‘மலையை’ மாத்திரம் குறித்து நிற்கும் சொல்லாக அல்லாமல் அது கருத்தியல் ரீதியாக தற்போது மாற்றம் பெற்றுவரும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களை குறிக்கும் சொல்லாக உள்ளமையை பரப்புரை செய்யவேண்டியள்ளது. அரசியல், தொழிற்சங்க சமூக, கலை, இலக்கிய பண்பாட்டுத்தளங்களில் சற்றே தள்ளி நிற்கும் மலையக மக்கள் வாழ் தாழ்நில மாவட்டங்களை உள்வாங்கிக்கொள்ளும் பொறுப்பு அந்தந்த துறைசார் தரப்பினரின் தேவையாகவுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக தங்களது இன, மொழி, மத, கலாசார, பண்பாட்டு அம்சங்களில் இருந்து விலகிச்செல்லும் அல்லது விலகிச்செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள தாழ்நிலப்பிரதேச இந்திய வம்சாவளி மக்கள் தங்களை மலையக மக்களாக அழைத்துக்கொள்வதில் அவர்களாகவே அக்கறைகொள்ளுதல் அதிகம் வேண்டப்படுகின்றது.
(இது ஒரு உரையின் கட்டுரைவடிவமே. கட்டுரையாகவே எழுதப்பட்டிருக்குமிடத்து. மேலே பதியப்பட்டுள்ளவை உரையின் சாராம்சம் மட்டுமே. இந்த கட்டுரை வடிவில் அடங்காத பிற சில விடயங்களும் உரையிலே அமைந்தன. அது கருத்தாடல் சூழல் கருதிய விடயங்கள் என்பதனால் இந்த பதிவில் சேர்த்துக்கொள்ளவில்லை. அதேநேரம் உரையில் அடங்காதபோதும் இந்த பதிவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என தோன்றிய (தட்டச்சு செய்யும்போது) விடயமொன்றை இங்கு மேலதிகமாகக் குறிப்பிட விரும்பகிறேன். அதாவது, இந்திய வம்சாவளி மக்கள் என்பதற்குள் கொழும்பு நகர் வாழ் சிறு தோட்ட மக்களும் அடங்குவர். இவர்கள் மிக நீண்ட நாளைக்கு முன்னரே இந்திய வம்சாவளி என்ற நிலை மாறி இலங்கைத்தமிழர்கள் எனப் பெதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இன்னும் இந்திய பிணைப்பு அவர்களிடையே காணப்படுகின்றது. அதே நேரம் அவர்கள் மலையக மக்களாக உள்வாங்காமல் போனமைக்காகன காரணம் சுவாரஷ்யமானது. ஆரம்ப காலங்களில் இந்த மக்களையும் உள்ளடக்கியே இந்திய வம்சாவளி தமிழரின் கணக்கெடுப்பு அமைந்துள்ளது. பின்னாளில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்க கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட அவர்களை நோக்கி மட்டமே தொழிற்சங்க இயக்கங்கள் செயற்படத்தொடங்கின. சிறுதோட்டங்களில் வசிக்கும் இந்த மக்கள்  முறைமைப்படுத்தப்படாத தொழில்களில் (தறைமுகத் தொழிலாளர்கள், நகரசுத்தி தொழிலாளர்கள், மற்றும் சிப்பந்திகள்) ஈடுப்பட்டதனால் தொழிற்சங்ககங்கள் தமக்குரிய சந்தாவை இவர்களிடத்தில் இருந்து பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல்கள் காரணமாக இவர்கள் அந்த தொழிற்சங்க கட்டமைப்பில் இருந்து கழற்றிவிடப்பட்டவர்களானார்கள். பின்னாளில் தொழிற்சங்க கட்டமைப்பின் அடிப்படையில் வளர்ந்துவந்த மலையக அரசியல் செல்நெறியிலும் இவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் அமையவில்லை. அந்த நிலைமை இன்று வரை தொடர்வது துரதிஷ்டவசமானது. நான் உரையிலே குறிப்பிட்ட இறப்பர் தொழில்துறைசார்; மக்கள் எவ்வாறு விலகிச் செல்கிறார்கள் என்பதற்கு தலைநகர் சிறுதோட்ட மக்கள் எவ்வாறு விலகிச்சென்றுள்ளார்கள் என்பது சான்றாக அமைகிறது)

Share this post :

+ comments + 1 comments

சிறப்பான உரை.

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates