Headlines News :
முகப்பு » » மலையக இலக்கியத்தின் செல்நெறியும் தற்காலத்தில் அதன் முக்கியத்துவமும் - லெனின் மதிவானம்

மலையக இலக்கியத்தின் செல்நெறியும் தற்காலத்தில் அதன் முக்கியத்துவமும் - லெனின் மதிவானம்“மலையக இலக்கியம்” எனும் இலக்கியத் தொகுதியானது ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்கின் மிக முக்கியமான கூறாக போற்றப்பட்டு வருகின்றது. இலக்கியத்தில் ஜனநாயக பண்பு வளர வளர இதன் முக்கியத்துவம் சிறப்பாகவே உணரப்பட்டு வெளிக்கொணரப்படுகின்றது. மலையகத்தின் தனித்துவத்தினையும் ஈழத்து தமிழ் இலக்கியத்தின் பொதுமையையும் இணைந்து நிற்கும் தமிழ் இலக்கிய மரபு தோன்றி வளர்ந்துள்ளமையே இதற்கான அடிப்படையாகும். 

மலையக சமூகத்தினை அடிநிலையாகக் கொண்டு தோன்றிய இலக்கியங்களை ஈழத்;து இலக்கியத்துடன், அல்லது முழுத் தமிழ் இலக்கியத்துடன் ஒப்புநோக்கி, அவற்றின் இலக்கியத் தரத்தை மட்டிடுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மலையகத்தில் இத்தகைய இலக்கியங்கள் தோன்றுவதற்குக் காலாக இருந்த சமூக, பண்பாட்டு, வரலாற்று சக்திகளை குறித்துக் காட்டுவதுடன் ஈழத்து தமிழ் இலக்கிய பரிணமிப்பில் இதன் முக்கியத்துவத்தைச் சுட்டி காட்ட முனைவதாகவே இவ்வாய்வு முயற்சி அமையும். 

மேற்குறித்த கருதுகோளின் அடிப்படையில் மலையக இக்கியம் குறித்து எழுத முற்படுகின்ற இவ்வாய்வு அதன் முனைப்புற்ற போக்குகளை மட்டுமே சுட்டி காட்ட முனைவதாக அமைகின்றது. இதனை நிரூபிப்பதற்காக நீண்ட பட்டியல் நீட்ட நான் விரும்பவில்லை. அட்டவணை போட்டு இலக்கியக் கணக்கெடுக்கும் இரசிக விமர்சகர்களுக்கு அப்பணியினை விட்டுவிட்டு ஈழத்து தேசிய இலக்கிய வளர்ச்சி போக்கில் மலையக இலக்கியம் எத்தகைய வளர்ச்சியினைப் பெற்று வந்துள்ளது என்பதனையும் அதற்கு அனுசரணையாக இருந்த இலக்கியங்களையும் எழுத்தாளர்களையும் சுட்டிக் காட்டிச் செல்வது இதன் சாராம்சமாகும். தனிப்பட்ட எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது குறிப்பிட்ட போக்கினைப் பிரதிநிதித்துவப்படுத்திய எழுத்தாளர்களின் பெயர்களே இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது. 

இலங்கை தமிழ் இலக்கியத்தில் மலையக இலக்கியம் 

இலங்கையை “ஈழம்” எனக் கூறுதல் பழந்தமிழ் இலக்கிய மரபு, தமிழுடனுள்ள பொதுத் தொடர்பையும் அதே வேளையில் தனித்துவத்தையும் நன்கு எடுத்துக் காட்டுவதற்கு இப்பதப் பிரயோகம் பொருத்தமானதாக அமைந்துள்ளது. இதனால் தமிழ் இலக்கிய வளர்ச்சியைக் குறிப்பிடும் போது “இலங்கை” எனும் சொல்லிலும் பார்க்க, “ஈழம்” எனும் சொல்லே பெரும் வழக்காக கையாளப்படுகின்றது. இப்பதப் பிரயோகத்தினை மீட்டெடுத்து சனரஞ்சகப்படுத்தியோர், 1954 முதல் இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் தேசிய பரிணாமத்துக்காக போராடிய முற்போக்கு இலக்கிய இயக்கத்தினரே.”1 

ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றினைக் கூர்ந்து நோக்குகின்ற போது, இலங்கையில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களின் வாழ்வியலையும் சமூக அடிப்படைகளையும் வெளிப்படுத்துகின்றவையாக அவை அமைந்து காணப்படுகின்றது. இலங்கையில் தமிழை தாய்மொழியாக கொண்டுள்ள மக்கள் குழுமத்தினர் தமது தனித்துவமான சமூக பொருளாதார பண்பாட்டு அம்சங்கள் காரணமாக பலவிதமான தனித்துவப் பண்புகளைக் கொண்டவர்களாக விளங்குகின்றனர். இத்தனித்துவப் பண்புகளை அச்சமூகத்தின் அடியாக தோன்றும் இலக்கியங்கள் பிரதிபலிக்கும் என்பது சமூக யதார்தமாகும். 

பேராசிரியர் கா. சிவதம்பி இத்தகைய தனித்துவமான பண்புகளை ஆதாரமாகக் கொண்டு, ஈழத்தமிழரை பின்வரும் மூன்று பிரிவாக வகைப்படுத்தி காட்டுகின்றார்: 

1.இலங்கையில் பாரம்பரியமாக வரலாற்று காலம் முதல் வாழ்ந்துவரும் தமிழ் மக்கள். இவர்கள் இலங்கையில் வடகிழக்கு பிரதேசங்களிலே பெருந்தொகையினராகக் காணப்படுகின்னர். 

2.இலங்கையில் வாழ்ந்துவரும் பாரம்பரிய இஸ்லாமிய மதத்தினர். இவர்கள் வடகிழக்கு, தெற்குப் பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். 

3.19ம் நூற்றாண்டின் நடுகூற்றுக் காலப்பிரிவில் பிரித்தானிய ஆட்சியினரால் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, இலங்கையின் தேயிலை, இறப்பர் பெருந்தோட்டங்களில் வாழ்ந்துவரும் தென்னிந்திய தமிழ் மக்கள். இவர்கள் தம் பாரம்பரிய தென்னிந்திய வாழ்க்கை முறைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்தவர்கள் என்றவகையில் இலங்கையரல்லாதவர் எனக் கொள்ளப்பட்டனர். இதனால் அவர்களுள் பெரும்பாலானோரை மீண்டும் தென்னிந்தியாவிற்கு அனுப்பும் முயற்சி மேற் கொள்ளப்பட்டது. 

பல்வேறு சமூக அடிப்படைகள் காரணமாக முதலாவது பிரிவினருக்கும், மூன்றாவது பிரிவினருக்குமிடையில் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. குறிப்பாக தமிழர் என்ற அடிப்படையில்; சிங்களப் பெருந்தேசியவாதத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட இன வன்முறைகள் இவ்விரு பகுதியினரையும் பாதித்தது எனலாம். இப்பாதிப்பு முதலாவது பிரிவினரையே அதிகமாக பாதித்தது என்பதும் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளத்தக்கதொன்றாகும். பொருளாதாரம் எனும் அடித்தளமே சமூக அமைப்பினை தீர்மானிப்பதாக உள்ளதால், இவ்விரு பிரிவினரிடையே காணப்பட்ட பொருளாதார அமைப்பு முறையும், அதனடியாக எழுந்த கலாசார, பண்பாட்டு, பாராம்பரியமுமே சமூக வேறுபாடுகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன. 

எனவே மலையக இலக்கியம் என்பது தமிழ் இலக்கியத்தின் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ள அதே சமயம், ஈழத்து தமிழ் இலக்கியத்தின் பிரிக்க முடியாத மிக முக்கிய கூறாகவும் அமைந்து காணப்படுகின்றது. மலையக இலக்கியத்தினை புறக்கணித்தோ அல்லது ஒதுக்கி விட்டோ ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றை எழுத முனைவது பூரணத்துவமுடைய வரலாறு எழுதும் முயற்சியாக அமையாது. 

மலையக இலக்கியத்திற்கான பின்புலம்: : 

19ம் நூற்றாண்டின் இறுதியிலும், 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மேற்கு ஐரோப்பிய காலனித்துவ வாதிகள் மூன்றாம் உலக நாடுகளை தமது காலனித்துவ ஆட்சிக்கு உட்படுத்தியதுடன், அந்நாடுகளி;ல் பெருந்தோட்ட பயிர்ச்செய்கையை அறிமுகப்படுத்தினர். அவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட பெருந்தோட்டப் பயிரச்;செய்கையை மேற் கொள்வதற்கு தேவையான தொழிலாளர்களை தமது காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடுகளிலிருந்தே கொண்டு வந்தனர். இவ்வடிப்படையில் ஒப்பந்த பிணைப்பு செய்து கொண்டு இங்கு கொண்டுவரப்பட்ட தொழிலளர்களும், அவர்களோடு இணைந்து வந்த வர்க்கமுமே ‘மலையக மக்கள்| என்ற பதம் கொண்டு அழைக்கப்படுகின்றனர். 

தென்னிந்திய தமிழ் கிராமிய பின்னணியில் வாழ்ந்த இம் மக்கள் குழுமத்தினர், ஒரு நிலவுடைமை சமூக அமைப்பின் கீழ் விவசாயிகளாக கட்டுண்டு கிடந்தனர்.அவர்கள் புலம்பெயர்ந்து இலங்கைக்கு வந்த பின்னர் ஒரு முதலாளித்துவ சமூக அமைப்பிலான பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை முறையில் பரந்துபட்ட தொழிலாளி வர்க்கமாக மாற்றப்பட்டனர். இச்சமுதாய அமைப்பு மாற்றம் மிக முக்கியமானதொன்றாகும். இது குறித்து கவிஞர் முத்துவேல் தமது ஆய்வில், 

~~ மலையக சமூக அமைப்பு கலப்பே இல்லாத முதலாளித்துவ சமூக அமைப்பாகவே தோற்றம் பெற்று ஸ்தாபிதமானது. மலையகத்தின் அடிப்படை மக்கள்; (அடிநிலை மக்கள்) இழப்பதற்கென சொத்துடைமை ஏதும் இல்லாத கூலித் தொழிலாளர்களே யாவர். முதலாளித்துவம் தோற்றுவித்த சொற்ப கூலிக்காக உடல் உழைப்பை விற்கும் ‘தொழிலாளர் வர்க்கமாகவே| இப்பிரதேசத்தில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு மூலதனக்காரருக்கும உழைப்பை விற்பவர்களான பாட்டாளி வர்க்கத்தினருக்கும் இடையில் நிலவுகின்ற உற்பத்தி உறவே, மலையக சமூகத்து மனித ஊடகத்தின் அடிப்படையாகும். இஃது ஒரு முரண்பாடுடைய உறவு. அதுவும் நேசமுரண்பாடாக அன்றி பகை முரண்பாடாகும். வரலாற்றை பரிணாமம் அடையச் செய்யும் மூலாதார அம்சமான வர்க்கப் போராட்டமானது இப் பகை முரண்பாட்டின் அடிப்படையில் பிறப்பதேயாம்;. இவ்வாறாக மலையக சமூகத்தின் அடிநிலை மக்கள் குறித்து நோக்குகின்ற போது ~~ எங்கிருந்தோ வந்து தயாராக இருந்த பொருளாதார வாய்ப்புகளை அபகரித்துக் கொண்ட மக்கள் அல்ல மலையக மக்கள். இவர்கள் எந்தவொரு நாகரிக சமூகத்தினதும் மூலத்தை போலவே காடுகளை அழித்து வளமாக்கி புதியதோர் பொருளாதார துறையை ஏற்படுத்தியவர்கள். இவர்கள் அமைத்த இந்த மக்களின் வரலாறும் உருவாக்கமும் யாரையும் போலவே இவர்களும் இம்மண்ணின் மக்களே, என்பதை ஆதாரப்படுத்துகின்றன. நமது வரலாறு குறித்த கண்ணோட்டம் நம்மிடையே நம்பிக்கையையும் உறுதியையும் வளர்க்க உதவும்”; 

ஒருபுறமான காலனித்துவ ஆதிக்கமும், மறுபுறமான சமூக உருவாக்கமும் இணைந்து தாம் தனித்துவமான தேசிய சிறுபான்மை இனமென்ற உணர்வை உருவாக்கியுள்ளது எனலாம். இன்றுவரை இவர்கள் பல்வேறு விதமான சுரண்டல்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உட்பட்டு வருகின்றனர். ஒரு தேசிய சிறுபான்மை இனத்தின் எழுச்சி பற்றிய கருத்தினை முன் வைக்கும் ஒரு பிற்போக்குவாதியின் பார்வையும், ஓர் மார்க்சியவாதியின் பார்வையும் அடிப்படையில் முரண்பாடுடைய ஒன்றாகும். மலையக தேசிய எழுச்சினை உழைக்கும் மக்கள் சார்பான கண்ணோட்டத்துடன் நோக்குவது (மார்க்ஸிய கண்ணோட்டம்) அதன் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு கால்கோளாக அமையும். 

இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்தும் கவனம் செலுத்துதல் அவசியமானதாகும். இதுவரை காலமும் மலையக மக்கள் என்ற பதம் பெரும்பாலும் மலையகத் தோட்டத்துறை சார்ந்தவர்களையும் அவர்களோடு இணைந்த மக்கள் குழுமத்தினரையும் குறிப்பதாக அமைந்து காணப்படுகின்றது. அண்மைக் காலத்தில் ஏற்பட்ட முற்போக்கு மார்க்ஸிய சிந்தனை வளர்ச்சியின் விளைவாக ‘மலையகத் தமிழர்’ எனும் கருத்து நிலை பரவலாக்கம் அடைந்துள்ளதை காணலாம். அவ்வகையில் பின்வரும் பகுதியினர் மலையகத் தமிழர் என்ற தேசியத்துடன் இணைக்கப்பட வேண்டியவர்கள். 

1. மலையகத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டவர்கள் - தோட்டப்புற உற்பத்தியுடன் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள், உத்தியோகஸ்தர்கள், நகரப்புறவியாபாரிகள் நகர்சார் தொழிலாளர்கள், ரெய்ல்வே தொழிலாளர்கள் போன்றோர். 

2.மலையகத்தை வசிப்பிடமாகக் கொண்ட அதே சமயம் மலையகத்திற்கு வெளியில் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள். 

3.மலையகம் எனும் இனத்துவ அடையாளத்தை கொண்டிருக்கின்ற அதே சமயம் மலையகத்திற்கு திரும்ப முடியாத அல்லது திரும்ப விருப்பம் இல்லாதவர்கள். 

4.மலையகத்திலிருந்து வெளியேறி வடகிழக்கின் எல்லைப் புறங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். 

5.தென்பகுதியில் வாழும் மலையக தமிழர்கள். இவர்கள் தங்களை மலையகத் தமிழராக அடையாளம் காட்ட விரும்பாத அதேசமயம், மலையக தலைமைகளும் இவர்களை மலையகத் தமிழராக ஏற்றுக் கொள்வதில்லை. உழைக்கும் மக்கள் தலைமையிலான அமைப்பு இவர்கள் மத்தியில் அரசியல் பண்பாட்டு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்லுமாயின் (அவ்வமைப்பு இனவாத சூழலுக்கு அப்பாற் பட்டதாக இருக்கும் பட்சத்தில்) அம்மக்கள் கவனத்திலெடுக்கப்படுவதுடன், அம்மக்களும் கவனத்தில் கொள்ளப்படுவர். 

6. மலையகத்திற்கு வராத அதே சமயம் மலையக மக்களின் பண்பாட்டு பாராபரியத்தடன் பெரிதும் ஒற்றுமை உடையவர்களாக காணப்படும் மக்கள். 

இம்மக்கள் வடகிழக்கு தமிழரின் பண்பாட்டினை விட மலையக தமிழரின் பண்பாட்டு பாரம்பரியங்களையே தழுவுகின்றவர்களாகவும்;, அவற்றுடன் அதிக ஒற்றுமை கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்களின் எண்ணிக்கை ஏனைய மக்களோடு ஒப்பிடுகின்றபோது மிகக்குறைவாக காணப்படுகின்றது. இம்மக்களின் சுயநிர்ணய உரிமை, சுரண்டல், ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை தனித்தனியாக எடுக்க முடியாது. அதே சமயம் அவற்றைப் புறக்கணித்து விடவும் முடியாது. எனவே அவர்களை ”மலையக தமிழர்” என்ற தேசியத்துடன் இணைத்து முன்னெடுப்பதே முற்போக்கானதாகும். 

மலையகம் என்பதை பரந்த அடிப்படையில் நோக்குகின்றபோது மேற்குறிப்பிட்ட மக்கள் பகுதியினரை அடிப்படையாக கொண்டு அமைய வேண்டும் என்ற கருத்து வெளிப்படுகின்றது. மலையக இலக்கியம் பற்றிய ஆய்வும் இத்தகைய பரந்த கண்ணோட்டத்திலேயே முன்னெடுக்கப்பட வேண்டும். இருப்பினும் மலையகம் குறித்த ஆய்வு மிக அண்மைக் காலம்வரை பின்வருவோரையே ஆதாரமாகக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 

1.பெருந்தோட்ட உற்பத்தியுடன் தொடர்பு கொண்ட தொழிலாளர்களைப் பற்றியது. இதில் கங்காணிமார்களும் அடங்குவர். அதிலும் தேயிலைத் தோட்ட தொழிளானர்களுக்கு கொடுத்த முக்கியத்துவம் இரப்பர் தோட்டத் துறையோடு சம்பந்தப்பட்ட சமூகத்தினருக்கு வழங்கப்படவில்லை. 

2.தோட்டதுறையோடு சம்பந்தப்பட்ட நிர்வாக உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் என்போரைப் பற்றியது@ 

3.பெருந்தோட்ட துறையை சார்ந்த நகரங்களில் வாழும் வணிகர்களைப் பற்றியது. 

மலையக ஆக்க இலக்கியங்களும் ஆய்வுகளும் மேற்குறித்த மக்கள் பகுதியினரைப் பற்றியதாகவே இருந்துள்ளது. மலையக தேசியவாதம் குறித்து மலையக மக்கள் என்ற பதத்தினை சற்று பரந்த கண்ணோட்டத்தில் நோக்கின், இந்நிலை நின்று மலையக இலக்கியத்தினை ஆய்வு செய்வது அறிஞர்களின் கடன். இதன் மூலம் மலையக இலக்கியம் பற்றிய பார்வையை ஆழ அகலப்படுத்திக் கொள்ளலாம். 

மலையக இலக்கியம் பற்றிய ஆய்வின் போது காணப்படுகின்ற சிக்கல்கள் 

1.மலையக பிரதேச இலக்கியவாதிகள் பற்றி முழுமையாக விபரப் பட்டியலோ, சுருக்கமான வாழ்க்கை குறிப்புகளோ பூரணத்துவமாக இல்லை. 

2. மலையக எழுத்தாளர்களின் படைப்புகளில் அனேகமானவை நூலுரு பெறவில்லை. மூத்த எழுத்தாளர் பலரின் ஆக்கங்கள் கூட இதுவரை நூலுருப் பெறவில்லை. 

3. மலையக இலக்கியம் தொடர்பாக சேகரித்து வைத்திருந்த பல ஆக்கங்கள,; ஆய்வுகள் என்பன மலையகத்தில் இடம் பெற்ற இனவன்முறைகளின் போது அழிந்து விட்டன. 

4. மலையக கலை இலக்கியம் தொடர்பாக சேகரித்து வைத்துள்ள பத்திரிகை துணுக்குகளைத் தேடிப் பெறுவதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள். 

5. மலையக படைப்புகள், எழுத்தாளர்களின் விபரங்கள் உள்ளிட்ட ஆவண காப்பகம் ஒன்றில்லாமை. 

6. மலையகத்திலுள்ள பெரும்பாலான வாசிகசாலைகள் ரமணிச்சந்திரன், பாலகுமாரன் போன்றோர்களின் படைப்புகளினாலேயே நிரப்பப்பட்டுள்ளன. பொதுவாகவே சமூகவியல் நூல்களோ மலையகம் சார்ந்த படைப்புகளோ இங்கு பெற முடியாது உள்ளன. 

7. மலையக இலக்கிய வரலாறு பற்றிய பூரணத்துவமான ஆய்வு நூல் ஒன்று இதுவரை காலமும் எழுதப் படவில்லை. 

இவ்வாறான பிரச்சினைகள் காரணமாக ஈழத்தின் இலக்கியப் பரப்பில் மலையக இலக்கியத்தை தர நிர்ணயம் செய்வதில் இடரப்;பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மலையக இலக்கியம் குறித்த கனதியான ஆய்வுகள் அவ்வப்போது எழுதப்பட்டுள்ளன என்பதும் இவ்விடத்தில் நினைவு கூரத்தக்கதாகும். முற்போக்கு, மார்க்சிய சிந்தனை நிலைநின்ற இலக்கிய கர்த்தாக்களே இப்பணியினை சீரிய முறையில் செய்து வந்துள்ளனர். அவ்வகையில் இவர்களின் பங்களிப்பு விதந்தோதத்தக்கது. 

மலையக இலக்கியமும் அதன் பொதுப் பண்புகளும் 

மலையக சமூக அமைப்பில் நிலவும் ஒரு கூட்டு வாழ்க்கை முறையானது, உழைப்புடன் அல்லது உற்பத்தியுடன் தம்மை சம்பந்தப்படுத்திக் கொள்ளும்போது அதன் வெளிப்பாடாக பீறிட்டு எழுகின்ற கலை இலக்கிய உணர்வுகளும் இவ்வம்சத்தினை பிரதிபலிப்பதாகவே அமையும். கூட்டு வாழ்க்கை முறையானது சோகத்தை இசைத்தாலும், அவை கூட சமூக அசைவியக்கத்தை முன்னெடுப்பதாகவே அமையும். 

இவ்வகையில் மலையக இலக்கியத்தினை பின்வரும் அடிப்படை கொண்டு; நோக்குதல் பயன்மிக்கதொன்றாகும். சமூக மாற்ற செயற்பாடுகளில் இலக்கியத்தின் பங்கு முக்கியமான ஒன்றாக இருப்பதோடு சமூகத்தின் அசைவியக்கத்திற்கும், இலக்கியம் வழிகாட்ட வேண்டும். அதனை சாதிப்பதற்கான அணுகுமுறையை, வாழக்கைப் பிரச்சினைகளை தெளிவுப்படுத்துவதாக மட்டுமன்றி அதனை உருவாக்குகின்ற பணியையும் ஆற்றுகின்ற இவ்வம்சம் மலையக இலக்கியத்திற்கும் பொருந்தும். 

மலையக இலக்கிய வரலாற்றை எடுத்து நோக்குகின்றப் போது அவ்விலக்கிய தொகுதி இருவகைப் பட்டோரால் எழுதப்பட்டு வந்துள்ளது. அவை வருமாறு. 

1. மலையகத்தை வாழ்விடமாகக் கொண்டவர்கள். அந்த பண்பாட்டிற்குள்ளிருந்து தோற்றம் பெற்று இலக்கியம் படைத்தவர்கள் (மலையக மண்ணை சார்ந்தவர்கள்). 

2. மலையகத்தோடு தொடர்பு கொண்ட அதே சமயம் மiலையகத்தை பிறப்பிடமாக கொள்ளாத இலக்கிய கர்த்தாக்கள். 

இதன் முதலாவது பிரிவில், சி. வி. வேலுப்பிள்ளை, கோ. மீனாட்சியம்மாள்,கோகிலம் சுப்பையா, என்.எஸ்.எம். இராமையா, சாரல்நாடன், அந்தனி ஜீவா, மல்லிகை சி. குமார், மரியதாஸ், எம். முத்துவேல், சாந்திகுமார், மாத்தளை வடிவேலன், மலரபன், மாத்தளை சோமு, புசலாவ இஸ்மாலிகா கேகாலை கைலைநாதன், லெனின் மதிவானம், இராகலை பன்னீர், nஐ. சற்குருநாதன் முதலானோரைக் குறிப்பிடலாம். 

இம்மன்ணை சாராத இம்மண்ணுடன் நேசப+ர்வமான உறவினை கொண்டிருந்தவர்களாக யோ. பெனடிக்ற்பாலன், செ. கணேசலிங்கம், நந்தி, புலோலிய+ர் க. சதாசிவம், வ.ஐ.ச. ஜெயபாலன், கே. ஆர். டேவிட், இதயராசன் முதலானோரைக் குறிப்பிடலாம். 

இவ்விரு வகைப்பட்ட எழுத்தாளர்களினாலும் மலையக இலக்கியம் செழுமைப்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதில் இருநிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை. அதே சமயம், ~~ இந்த இரண்டு எழுத்தாளர்களிடையேயும் சிற்சில வேறுபாடுகள் கண்டு கொள்ளப்பட தக்கனவாய் உள்ளன என எடுத்துக் கூறப்பட்டுள்ளது. மலையகத்தின் வரலாற்றினையும் அதன் அபிவிருத்தி குன்றிய நிலையையும் நோக்கும் போது இத்தகைய நிலை ஒரு வகையில் தவிர்க்க முடியாதது என்று கூட சொல்லலாம்||5 மலையக மக்களின் வாழ்வியலைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் அதனை இலக்கியப் படைப்பாக்கி தருவதிலேயே இவ்வேறுபாடு காணப்படுகின்றது. 

மலையக பெருந்தோட்ட பண்பாட்டிற்குள் நின்று அம்மக்கள் பற்றிய இலக்கியம் படைத்தவர்கள் மலையக வாழ்வியலை உள்நின்று சித்திரிக்க முனைவதனைக் காணலாம் (இவ்விடத்தில் மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட அனைத்து எழுத்தாளர்களையும் குறிப்பிட முடியாது). யதார்ந்த நோக்கு, சமூக அசைவியக்கம், வர்க்க முரண்பாடு எனப்வற்றை சித்திரிப்பதில் இவர்களிடையே நுண்ணிய தத்துவார்த்த வேறுபாடுகள் உண்டு என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டியுள்ளது. இது குறித்து பிறிதொரு இடத்தில் நோக்குவோம். 

இந்நிலையில் மலையகத்தை பிறப்பிடமாக கொள்ளாத அதே சமயம், அதனோடு தொடர்பு கொண்ட இலக்கியப் படைப்பாளிகளின் எழுத்துக்களைஆதாரமாக கொண்டு நோக்கும் போது, இம்மக்களின் மீது நேயப+ர்வமாக சிந்தனை கொண்டுள்ள அதே சமயம் மலையக மக்களின் வாழ்வியலைப் புரிந்து கொள்வதில் இடர்ப்படுகின்றனர். உதாரணமாக வடகிழக்கு பகுதிகளை சார்ந்த எழுத்தாளர்களின் படைப்புக்களில் இம்மக்கள் குறித்த கரிசனை இடம் பெறுகின்ற அதே சமயம் நிலவுடமை சார்ந்த ஓர் விவசாய வர்க்கத்திற்குரிய சிந்தனை முறையையே அவர்கள் முன் வைக்க முனைந்துள்ளனர். யோ. பெனடிக்ற்பாலனின் ‘சொந்தக்காரன்| (மார்க்ஸிய நிலை நின்று எழுதிய நாவல் என்ற போதிலும்) திரு. ஞானசேகரனின் ~குருதிமலை| முதலிய நாவல்களில் இப்பண்பு முனைப்பு பெற்றிருப்பதனைக் காணலாம். ஓர் காலகட்ட ஆர்ப்பரிப்பில் உழைக்கும் மக்கள் நலன்சார்ந்த பதாகையை உயர்த்தி பிடித்த கவிஞர்களில் ஒருவரான சுபத்திரன் 1977 ஆம் ஆண்டு டெவன் தோட்டத்தில் நிலப் பறிப்புக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையான சிவனு லட்சுமணன் குறித்து இவ்வாறு கவிதை வடித்துள்ளார். 

”சிவனு
எதனைக் கேட்டான்? 
அவன் உழைத்த ப+மியிலே
அதற்கு முன்னர்
அவன் பூட்டன் சமாதியிலே

தனக்கும் ஒரு துண்டு 
தா என்று கேட்டான்
...... 

துண்டு நிலம் தான் கேட்டான்
துவக்கால் அடித்து அவனை
தேயிலைக்கு உரமாக்கி
திருப்தி அடைந்தீரே!”7

டெவன் தோட்டத்தில் இடம்பெற்ற போராட்டமானது நிலத்துக்கான போராட்டம் அல்ல. தொழிற்சாலையொன்று மூடப்படுவதால் அத்தொழிற்சாலையில் வேலை செய்கின்ற தொழிலாளர்கள் தாம் பாதிப்படைவதற்கு எதிராக எவ்வாறு கிளர்தெழந்து போராடுவார்களோ அவ்வாறே தான் தமக்கு வாழ்வாதாரமாக திகழ்ந்த உற்பத்தி நிலம் பறிபோவதையிட்டு மலையக மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவ்வகையில் இப்பிரிவினர்,விவசாய வாழ்முறை சார்ந்து நிலத்தை சொந்தமாக்குவதில் அல்லது நிலத்துக்காக போராடுவதில் காட்டிய அக்கறையை ஒத்ததாக டெவன் போராட்டத்தை காணமுற்படுகின்றனர்:மலையக மக்களின் வாழ்வியலுடனும் உணர்வுடனும் இணைந்திருந்த தனியுடமைக்கு எதிரான போராட்டம் அடிப்படை குணாம்சத்தில் வேறுப்பட்டது என்பதில் அக்கறை செலுத்த தவறி விடுகின்றனர். இதன் காரணமாக இவர்களது பெரும்பாலான படைப்புகளில் யதார்த்த சிதைவு காணபடுகின்றன. 

மலையக சமூகத்து யதார்த்தத்தையும் மனித ஊடபட்டத்தையும் புரிந்து கொண்டு ஆய்வு முயற்சிகளை மேற் கொண்டதிலும் அத்தகைய ஆக்க இலக்கியங்கள் வெளிவர துணைநின்றவர்களில் பேராசிரியர்கள் க. கைலாசபதி, கா. சிவதம்பி மற்றும் ந. இரவீந்தின் முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள். மலையக சமூகம் குறித்த இவர்களது குறிப்புகளில் இச்சமூக அமைப்பில் நிலவக் கூடிய வர்க்க முரண்பாட்டினை தெளிவாக உணர்ந்திருந்தனர் எனபதை அறிய முடிகின்றது. 

மலையக மண்ணை சார்ந்து எழுதிய எழுத்தாளர்களின் படைப்புகளையும், அவர்களின் சிந்தனைத் தெளிவு, பார்வை என்பனவற்றை அடிப்படையாக கொண்டு பின்வரும் இரு பிரிவுகளாக பிரிக்கலாம். 

1.முற்போக்குவாத சிந்தனையின் நிலை நின்று இலக்கியம் படைத்தவர்கள்@
2.மார்க்சிய சித்தாந்த நிலைநின்று இலக்கியம் படைத்தவர்கள். 

இவ்விடத்தில் ”முற்போக்குவாதம்” ”மார்க்சியவாதம்” ஆகிய சிந்தனை தொழிற்பாடுகள் குறித்த தெளிவு அவசியமான தொன்றாகின்றது. 

”முற்போக்கு வாதம் பற்றிய ஆய்வு, அது சிந்தனைத் தெளிவு நிலை (மாத்திரமே) என்பதனை நிலைநிறுத்துகின்றது. மார்ஸியத்தை விபரிக்கும் அறிஞர்கள் அதனை அரசியல் நடவடிக்கைக்கான வழிக்காட்டி அல்லது அரசியல் நடவடிக்கைக்கான ஆற்றுப்படை என்பர். மார்க்ஸியத்தை திரிகரண சுத்தியாக ஏற்றுக் கொள்ளும் போது, அவ்வாதத்தினை அடிப்படையாகக் கொண்டு உலகை மாற்றி மனித சமுதாயத்தின் முற்போக்கு பாதையினை உறுதிப்படுத்தும் அரசியல் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளுதல் இயல்பாகின்றது. ஆனால் முற்போக்குவாதம் பற்றிய எண்ணத்தொய்வு நிலை அத்தகைய நேரடி நடவடிக்கை நிலையினைச் சுட்டி நிற்பதில்லை. மார்க்ஸியவாதிகள் முற்போக்குவாதிகளே, ஆனால் முற்போக்குவாதிகளோ மார்க்ஸியவாதம் வற்யுறுத்தும் உலகமாற்றத்துக்கான அரசியல் மாற்றத்தினை நேரடி இயக்க முறைகள் மூலம் நிலை நிறுத்தும் இயக்கவாதியாக தொழிற்படுவதில்லை. முற்போக்குவாதம் பற்றிய எண்ணத்துய்ப்பும் செயற்பாடும் ஒருவரை அதனைப் ப+ரணமாக நடைமுறைப்படுத்தும் அரசியல் நடவடிக்கையாளராக மாற்றலாம். ஆனால் முற்போக்குவாத நிலை அந்த நிலையினை குறிக்காது.”8 

முதலாவது பிரிவினர் மலையக இலக்கியத்தினை முற்போக்கு உணர்வுடன் நோக்கியதோடு, மண்வாசனை மிக்க படைப்புகளை வெளிக்கொணர்வதில் முக்கியத்துவம் உடையவர்களாக காணப்படுகின்றனர். இப்பிரிவில்சி.வி. வேலுப்பிள்ளை, என்.எஸ்.எம். இராமையா, கோ. மீனாட்சி அம்மாள், சாரல்நாடன், தெளிவத்தை ஜோசப், அத்தனிஜீவா, மல்லிகை சி. குமார், மாத்தளை வடிவேலன், கோகிலம் சுப்பையா, திலகா பழனிவேல் முதலானோரைக் குறிப்பிடலாம். குறிப்பாக மலையக படைப்பிலக்கிய துறையில் சி.வி. வேலுப்பிள்ளை, என் எஸ். எம் இராமையா முதலானோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். மலையக மக்களது வாழ்வியலும் மக்களி;ன் உணர்வுகளும் ஒன்றாக இணைத்து நேசிக்கப்படுவதை இவ் எழுத்தாளர்களின் படைப்புகளில் காணலாம். 

மலையக சமூகம் குறித்த தீட்சண்யம் மிக்கதும், யதார்த்த ப+ர்வமானதுமான தத்துவார்த்த பார்வையினை கொண்டிராமை காரணமாக அரசியல் கலாசாரம் குறித்த விஞ்ஞான ப+ர்வமான தெளிவற்றோராய் காணப்பட்டமை இவ்வணியினரின் பலவீனமாகும். 

இவ்விடத்தில் தான் இரண்டாவது பிரிவினர் முக்கியத்துவம் உடையவர்களாக காணப்படுகின்றனர். மார்க்ஸியத்தின் உள்ளடக்க கூறுகள் பற்றி லெனின் கூறியதை இவர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள் என்பதில் ஐயமில்லை: 

” வரலாற்று பொருள் முதல் வாதம் என்ற தத்துவம் காட்டுவதென்ன? உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் விளைவாக ஒரு சமுதாய அமைப்பு முறையிலிருந்து இதைவிட உயர்தரமான சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கின்றதென்பதை அது காட்டுகின்றது. இயற்கை என்பது வளர்ச்சி பெற்று கொண்டே இருக்கும். பருப்பொருள் என்பது மனிதனுக்கு அப்பால் சுயமாக இருந்து பிரதிபலிக்கின்றது. அதே போலதான் மனிதனின் சமுதாய அறிவு எனப்படுவதும் (அதாவது தத்துவவியல், மதம், அரசியல் முதலானவை சம்பந்தமாக மனிதன் கொண்டிருக்கும் பல்வேறு கருத்துக்களும், போதனைகளும்) சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையை பிரதிபலிக்கின்றது. அரசியல் ஏற்பாடுகள் என்பவையெல்லாம் பொருளாதார அஸ்திவாரத்தின்மீது நிறுவப்பட்ட மேல் கட்டுமானமேயாகும.”9 

இவ்வாறானதொரு நிலைப்பாட்டினை ஏற்றுக்கொண்டு அவற்றினை மாறிவருகின்ற மலையக சூழலுக்கு ஏற்ற வகையில் பிரயோகிப்பவர்களாக இப்பிரிவினர் காணப்படுகின்றனர். இப்பிரிவில் பி. மரியதாஸ், எம்.முத்துவேல், எல். சாந்திகுமார் (இன்று இந்நிலைப்பாட்டுக்கு எதிரானவராக சிதைந்துவிட்டார்), கேகாலை கையிலைநாதன் போன்றோருடன் இதன் அடுத்தகட்ட பரிணாமத்தை 90களின் ஆரம்பத்தில் எழுத தொடங்கிய இளம் தளிர்களான லெனின் மதிவானம், ஜே சற்குருநாதன், இரா. ஜே. ட்ரொஸ்கி, இராகலை பன்னீர் முதலானோரை குறிப்பிடலாம். இவர்களிடையே சிற்சில நுண்ணிய தத்துவார்த்த வேறுபாடுகள் காணப்படினும் பொதுவுடமை கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டு அதன் வழி இலக்கியம் படைப்பதில் முனைப்பு கொண்டவர்களாக காணப்படுகி;ன்றனர். 

மலையக இலக்கியம் என்பது ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பெரும்பான்மையாக கொண்ட சமூகத்திலிருந்து முகிழ்ந்த இலக்கியமாகக் காணப்படுகின்றமையினால், பட்டாளி வர்க்கம் சார்ந்த தத்துவச்சிந்தனைகள் வேகமாகவும், ஆழமாகவும் மலையக புத்தி ஜீவிகளின் சிந்தனையில் செல்வாக்கு செலுத்தியுள்ளது எனலாம். இதன் காரணமாகத்தான் உழைக்கும் மக்களின் நலனுக்கு எதிராக தோற்றம் பெற்ற தூய அழகியல் கோட்பாடு, அமைப்பியல் வாதம், பின் நவீனத்துவம், இருத்தலியம் முதலிய கோட்பாட்டுச் சாம்பார் குவியல்கள் மலையகத்தில் வேரூன்ற முடியாமல் போயின. இது தற்செயல் நிகழ்வல்ல. 

மலையக மக்களின் கலாசார பண்பாடுகளில் ஒன்றாக சாதியமுறை விளங்குகின்றது. தென்னிந்திய நிலப் பிரபுத்துவ சமூக அமைப்பில் இச் சாதியமுறை தோற்றம் பெற்று பாதுகாக்கப்பட்டு வந்திருப்பினும், இலங்கை பெருந்தோட்டங்களில் ஒரு முதலாளித்துவ உற்பத்தி முறையிலும் அது தொடரக்கூடியதாக இருந்தது (நிப்பிரபுத்துவத்தின் உடைவிலிருந்துதான் முதலாளித்துவம் தோற்றம் பெற்று இருப்பினும் அது இறந்துக் கொண்டிருக்கின்ற நிலப் பிரபுத்துவத்திலிருந்து தனக்கு சாதகமான அம்சங்களை உள்வாங்கிக் கொள்ளும்). 

சாதியமுறை பொருளாதாரத்தி;ல் தாக்கம் செலுத்தாத ஒன்றாக இருப்பினும் அது மக்களின் சமயச் சடங்குகளில் பெரும் தாக்கத்திற்குரிய ஒன்றாக இருந்து வந்துள்ளது. லயன்கள் சாதியத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்தததையும் (இன்னும் சில தோட்டங்களில் இந்நிலைமை தொடர்ந்திருக்கிறது), குடும்பமட்ட வழிபாடு சாதியத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்ததையும் காணலாம். இதை மேலும் வலுப்படுத்த பிரிட்டிஷார் போட்டி தெய்வ வழிபாடுகளை ஊக்குவித்தனர். 

மறுபுறமாக மலையக ~~ சாதியமைப்பு முறையிலான இறுக்கமான முரண்பாடுகள் தளர்ச்சி கண்டு, மனிதநேய உறவுகள் நிலைபேறடைவதற்கு மூலமாயமைந்தது காலனித்தும் தொடக்கி வைத்த முதலாளித்துவ வர்க்க அடிப்படையிலான உறவேயன்றி வேறல்ல. லயத்தில் வாழ்ந்த யாவரும் (பெரிய கங்காணிமாரைத் தவிர) கூலித் தொழிலாளர்களானதால், முகாமைத்துவ வர்க்கத்தினரதும்(ஆயயெபநசயைட ஊடயளள) பார்வையில் தரங்குறைந்தவர்களாகவே பட்டனர். தொழிலாளர் யாவருக்கும் உழைப்பை விற்பதற்கான கூலியின் அளவு ஒன்றே. இவ்வாறு காலனித்துவ அமைப்பினடிடயில் சேவை செய்தோரான அதிகாரித்துவ, முகாமைத்துவ, சிறு முதலாளித்துவ வர்க்க்த்தினர் தொழிலாளரை ஒரு சேர நோக்கிய பொது நோக்கும், அணுகலும், நடத்துகையுமான யாவும், சாதி வேறுபாட்டுணர்வையும், அதன் செயன் முறைகளையும் மாறுபடுத்தின. தொழிலாளர்கள் முகங்கொடுக்க வேண்டிய பிரச்சினைகளனைத்தும் ஒரே மையத்தையே அடி நிலையாகக் கொண்டிருந்தன.||9 

இவ்வாறாக மலையக சமூக அமைப்பு குறித்து நோக்குகி;ன்ற போது, இங்கு வர்க்க முரண்பாடே பிரதான முரண்பாடாக அமைந்து காணப்படுவதை உணரலாம். இப்பின்னணியில் நோக்குகின்றபோது மலையத்தில் ~~ தலித் இலக்கியம் எனும் ஓர் இலக்கிய வகை தோன்றாமல் இருப்பது தர்க்க ரீதியான ஒன்றே. இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பானது மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியுள்ளதுடன் அவை இயற்கையானது எனக் கற்பிதம் செய்து மனிதர்கள் இடையே போட்டியை வளர்த்து, ஒருவரை ஒருவர் முந்தி செல்வதற்கு எதையும் செய்துக் கொள்ளலாம் என்ற நிலையினை தோற்றுவித்துள்ளது. இப்பின்னணியில் மனித குலத்தின் சுபீட்சத்திற்கான வர்க்க போராட்டத்தை சிதைப்பதற்காக பால், சாதி, இன, மத ரீதியான ஒடுக்கல்களை தீவிரப்படுத்தியுள்ளது. 

மலையகத்தில் எழுச்சி பெற்று வரும் புதிய மத்திய தர வர்க்கம் சாதியை கருவியாகக் கொண்டு தமது நலனை காக்கத் தொடங்கியுள்ளது. மலையகத்தினுள் சாதிய முரண்பாட்டினை பிரதான முரண்பாடாக காட்டி அம்மக்களின் வர்;க்க போராட்டத்தை சிதைக்கும் முயற்சிகளை சமூக சேவை நிறுவனங்களும், சில அரசியல் கட்சிகளும் மேற் கொண்டு வருகின்றன. இது சார்ந்த கலை இலக்கியப் படைப்புகளும் நாடகங்களும் எழுதப்பட்டு மக்கள் மத்தியிலே பரப்பப்பட்டு வருவதை காணலாம். 

மலையக பெண்களின் நிலைகுறித்து சிந்திக்க தலைப்படுகின்ற பொழுது இனம், மதம், மொழி, வர்க்க அடிப்படையிலான ஒடுக்கு முறைகளுக்கு உட்பட்டு வந்துள்ளமையையும் ஃ வருகின்றமையையும் உணரலாம். குறிப்பாக மத்தியதர வர்க்கப் பெண்கள் வர்க்க அடிப்படையிலான (தொழிலாளி என்ற அடிப்படையில்) ஒடுக்குதலுக்கு உட்படவி;ல்லையெனினும், ஏனைய ஒடுக்குமுறைகள் அவர்களைப் பாதித்துள்ளன. குறிப்பாக பெருந்தோட்ட துறை சார்ந்த உற்பத்தியுடன் கூடிய உழைக்கும் பெண்கள் இதுவரைக் காலமும் உழைப்பு சுரண்டல், நிர்வாக அடக்குமுறைகள், பாலியல் பலாத்காரம், குடும்ப ரீதியிலான அடக்குமுறைகள் என்பவற்றுக்குட்பட்டே வந்துள்ளனர். புதுமைப்பித்தனின் துன்பக் கேணியிலிருந்து நமது யுகத்து கவிஞர்களில் ஒருவரான சந்திரலேகா கிங்ஸிலி வரையில் இப்பெண்களை இவ் எழுத்தாளர்கள் தத்தம் நிலைப்பாடுகளுக்கேற்ப வௌ;வேறு தளங்கலிருந்து நோக்கியுள்ளனர். ஏனைய பிரதேசம் சார்ந்த இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்குகின்ற போது மலையகத்தின் பெண் விடுதலை என்பது சமூக விடுதலையுடன் இணைந்த ஒன்றாகக் காணப்படுவது மலையக இலக்கிய செல் நெறியின் முக்கியமானதோர் பண்பாகும். 

நவீன இலக்கிய செற்பாடுகள், அபிவிருத்தி என்ற பெயரில் மக்கள் மத்தியில் வேர்கொண்டு கிளைப்பரப்புகின்ற என். ஜி. ஓக்கள் எனும் பண்டு நிறுவனங்கள் தொண்டு நிறுவங்களாக மக்கள் மத்தியில் வலம் வருகின்றன. இலங்கையை பொறுத்தவரையில் வேறு எந்தப் பகுதியிலும் காணமுடியாதளவு என்.ஜி. ஓக்களை மலையகத்தில் காணலாம். பலம் பொருந்திய தொழிலாள வர்க்கம் மலையகத்தில் இருப்பதாலும், அதனை சிதைக்க வேண்டிய தேவை எசமான வர்க்கத்திற்கு இருப்பதாலுமே இத்தகைய ஏகாதிபத்திய பண்பாட்டு நிறுவனங்கள் இப்பணியினை மேற்கொண்டு வருகின்றன. கலை இலக்கியம் தொடர்பில் பல செயலமர்வுகளையும் வெளியீடுகளையும் செய்து வருகின்ற இவர்கள் மக்கள் போராட்டதிற்கு தயாராகாத நிலையில் மக்களை போராட்டத்திற்கு நிர்ப்பந்தித்து படுதோல்வி காணச் செய்வதும், மக்கள் பலமாக இருக்கும் போது அவர்களை பின் வாங்கச் செய்வதும், மக்கள் போராட்டத்தில் ஐக்கியப் பட வேண்டிய சக்திகளையெல்லாம் பகையாக்கி மக்கள் போராட்டத்தை தனிமைப்படுத்துவதும் இந்நிறுவனங்களின் தந்திரோபாயங்களில் இடம்பெறுவன. சிதைந்து சின்னாபின்மான சிவப்புச் சட்டைக்காரர்களும்( மார்கசி;ஸ்ட் அல்ல, கட்சியில் புலமை பரிசில் பெறுவதற்காக கோசங்களை உச்சரித்தவர்கள்) இந்நிறுவனங்களில் அடைக்களம் தேடி மலையகத்தில் வளர்ச்சி பெற்று வருகின்ற நேச சக்திகளை மனநோயாளர்கள் எனக் கவிதை என்ற பெயரில் வசைகளை பாடிவருவது தற்செயல் நிகழ்ச்சி அல்ல. இவர்களே இன்று இந்நிறுவனங்களுக்கு சிவப்பு சாயத்தைப் பூசி வருகின்றனர். இந்த போக்கை தமது இலக்கிய செயற்பாடுகள் படைப்புகளினூடாக செய்துவருகின்றனர். இது தொடர்பில் நாம் தெளிவு பெற வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தும் சி. சிவசேகரத்தின் பின்வரும் கூற்று முக்கியமாதாகும்: 

“நவீன ஆய்வுப் பார்வைகள் என்ற பசாங்குகள் ஒரு புறம் இருக்க என். ஜி.ஓ எனப்படும் தன்னார்வக் குழுக்களின் மூலமாக மக்களைத் திசைதிருப்பியும் ஆய்வறிவாளர்களை விலைக்கு வாங்கியும் சுயமுயற்சி மீதான நம்பிக்கையைச் சிதறடித்தும் பல காரியங்கள் நடக்கின்றன. மக்கள் கலை இலக்கிய வடிவங்களின் புரவலர்களாக இந்த என். ஜி. ஓ நிறுவனங்கள் பல உலா வருகின்றன. இவர்களது நிதி உதவி இல்லாமல் மக்கள் சார்பாக எதையுமே செய்ய இயலாத ஒரு நிலையை அவர்கள் வேண்டுகிறார்கள். இது பன்னாட்டு நிறுவனங்கள் மேற்கொள்கிற உலகமயமாக்கலின் தந்திரோபாயங்களில் ஒரு பகுதியாகும். 

ஸ. 

“எசமானர்கள் தமது வர்க்க சுபாவத்திற்கேற்ப செயற்படுகிறது பற்றி அவர்களிடம் நாம் முறைப்பட இடமில்லை. அவர்களது நடத்தையை மாற்றும் படி நாம் கேட்பது ஒரு வர்க்கம் என்ற முறையில் தற்கொலை செய்யுமாறு அவர்களைக் கேட்பது போன்றது. நம்முன்னுள்ள தேவை ஏதெனில் அவர்கள் எதிர்ப்பின் குரல்களை மறிக்கவும், மங்கவைக்கவும், திரிக்கவும், களவாடித் தமதாக்கவும் செய்கிற முயற்சிகளுக்கு எதிராக நாம் என்ன செய்யலாம் என்பதை அறிவதும் அதனை நடைமுறைப்படுத்துவதுமாகும்.” மலையக கலை இலக்கியம் தெடர்பில் நிதானித்த பார்வையுடன் செயற்பட வேண்டியுள்ளது.”9a 

மலையக இலக்கியத்தின் ஊற்றுகள் 

பிரித்தானிய குடியேற்றவாத நடவடிக்கையாக பல இலட்ச கணக்கான தென்னிந்திய தொழிலாளார்கள் கடல் கடந்து பல நாடுகளுக்குகூலி அடிமைகளாக கொண்;டு செல்லப்பட்டனர். இந்த துயரகரமான நிலையினை எண்ணி குமுறிய கவிஞர்களில் பாரதி முதன்மையானவர். ~~தமிழ் சாதி|| என்ற தலைப்பிலே அம்மனிதர்களின் நிலை குறித்து அவர் விசாரிக்கத் தவறவில்லை. 

“ஆபிரிக ;கத்துக் காப்பிரி நாட்டிலும்
தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்
ப+மிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள
பற்பல தீவினும் பரவியிவ் வெளிய
தமிழ்ச் சாதி தடியடி யுண்டும்
காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்
வருந்திடுஞ் செய்தியும் மாய்த்திடுஞ் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது 
செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்
பிணிகளாற் சாதலும் பெருந்தொகை யுள்ளதம்
நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்......”

இவ்வாறு கடல்கடந்து சென்ற இந்திய தொழிலாளர் பற்றி ஆர்ப்பரித்த பாரதி பிஜித்தீவுகளிலே கரும்பு தோட்டங்களில் தென்னிந்திய தொழிலாள பெண்கள் படும் அவஸ்தையும் துன்பங்களும் குறி;த்த கவிஞர்களின் எண்ண ஓட்டம் பின்வருமாறு பிரவாகம் கொள்கின்றது. 

“ .......................... அவர்
விம்மி யழுவுந் திறங்கெட்டுப் போயினர்
நெஞ்சம் குமுறுகிறார்- கற்பு 
நீங்கிடச் செய்யும் கொடுமையிலே அந்தப் 
பஞ்சை மகளிரெல்லாம் - துன்பப்
பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு 
தஞ்சமு மில்லாதே - அவர் 
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில் 
மிஞ்சி விடலாமோ? ஹேஸ!
வீரகாளீ சாமுண்டி காளீ “

பாரதியை தொடர்ந்து இம்மக்ள் பற்றி எழுதியவர்களில் புதுமைப்பித்தன் குறிப்பிடத்தக்கவர். இவரது ~~ துன்பக்கேணி|| என்ற கதை மலையக மக்களைப் பற்றியது. தென்னிந்திய தமிழ்க்கிராம பின்னணியி;ல் அவர்கள் அனுபவித்த வறுமை, சுரண்டல் ஒடுக்குமுறைகள் என்பன பற்றியும் இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிகளில் அவர்கள் அனுபவித்த துயரங்களையும் எமக்கு படம் பிடித்து காட்டுவதாயுள்ளது. 

கதையினை சற்று ஆழமாக நோக்குகின்ற போது மலையக வாழ்வியலில் இருந்து அந்நியப் பட்டத்தன்மையினையும், பல இடங்களிலான யதார்த்த சிதைவினையும் கொண்டதாகக் காணமுடிகிறது. இதில் மாருதி முதல் வெள்ளச்சிவரை தொழிலாளர் வர்க்கத்தை சேர்ந்த பாத்திரங்கள் படைக்கப்பட்டதெனினும், அவை ஒரு மத்தியதர வர்க்கத்துக்குரிய பார்வையிலேயே சித்திரிக்கப்பட்டுள்ளன. தொழிலாளரை நோக்கிய நையாண்டி பான்மையையும் காணமுடிகின்றது. மாருதியின் மகளான மரகதத்தை ஸ்டோர் மனேஜர் மரத்தில் கட்டிவைத்து கற்பழிக்க முனைதல், ஆசிரியர் தாமோதரம் திடீரெனத் தோன்றி காப்பாற்றுதல் என்பன யதார்த்த சிதைவிற்கு தக்க எடுத்துக் காட்டுகளாகும். பெரும்பாலும் இக்கதையில் இம்மக்களின் அடக்கு முறைகளுக்கு எதிரான போராட்டமானது வர்க்கங்களைக் கடந்த மனிதாபிமானமாக சித்திரிக்க முனைந்துள்ளமை வெளிப்படையாகவே தெரிகின்றது. 

இவ்வாறாக இப்படைப்புகளை, நோக்குகின்ற போது மலையக மக்களின் சமூக உருவாக்கத்தையும், சமூக அசைவியக்கத்தையும் அடியாக கொண்டு பிறந்தவைகள் அல்ல. அம்மக்களைப் பற்றி இலக்கியங்களாகவே அவை அமைந்து காணப்படுகின்றன என்பது தெளிவாகும். 

இம்மக்கள் பிறந்த மண்ணை துறந்து புகுந்த மண்ணிலே புது வாழ்வு தேடிவந்தபோது தமது கலாசார, பண்பாட்டு பாரம்பரியங்களையும் சுமந்து வருகின்றவர்களாகவே காணப்பட்டனர். அவ்வகையில் அவர்களது ஆரம்பகால கலை இலக்கிய வெளிப்பாடுகளாக கதைப்பாடல்கள், நாட்டார் கதைகள், நாட்டார் பாடல்கள் என்பவையே அமைந்து காணப்படுகின்றன. இம்மக்களிடையே காணப்பட்ட இலக்கியங்களான இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்ளும் ஆயிரம் தலைவாங்கிய அப+ர்வ சிந்தாமணி, இராஜாதேசிங்கு, அல்லி அரசாணி மாலை, நளமகாராஜன் , அரிச்சந்திரன் வனவாசம், மதுரைவீரன், கட்டபொம்மன், நல்லதங்காள், விக்கிரமாதித்தன் முதலிய கதைகளும,; மதுரைவீரன், அரிச்சுனன் தவசு, பொன்னர் சங்கர், காமன் கூத்து முதலிய கூத்துகளும் அவை சார்ந்த பாடல்களும், இவை தவிர்ந்த தாலாட்டு, ஒப்பாரி, மாரியம்மன் தாலாட்டு போன்றவையும் அமைந்து காணப்படுகின்றன. 

ஆரம்ப காலங்களில் மலையகத்தில் வசதி படைத்தவர்களின் வீடுகளுக்கு (பெரிய கங்காணி, செல்வந்தர்கள்) தமிழகத்திலிருந்து சில யாத்திரிகர்கள், கவிஞர்கள், புலவர்கள் வந்துபாடி பரிசு பெற்றும் சென்றுள்ளனர். இவை குறித்து காலஞ்சென்ற கவிமணி சி. வி. வேலுப்பிள்ளை பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ~~ இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தனிப்பட்ட துறையில் பாண்டித்தியம் பெற்றவர்கள். பாரதம், இராமாயணம் பாடும் புலவர், திருப்புகழ் கவிராயர், காவடிச் சிந்துப்பாடகர், தியாகராஜர் கீர்த்தனங்களை இசைக்கும் சங்கீத வித்துவான்கள் ஆகியோர் தமது யாத்திரைக் காலங்களில் பெரிய வீடுகளுக்குச் சென்று பாடி சன்மானம் பெற்றுப் போவதுண்டு. இவர்கள் வருகை இலக்கிய உணர்வை வளர்த்தது. அந்த காலத்தில் சினிமா இல்லை. மலைநாட்டில் சில முக்கிய பட்டினங்களில் நாடகங்கள் நடந்தன. லங்கா தகனம், இராமாயணம், சத்தியவான் சாவித்திரி ஆகிய நாடகங்கள் பிரசித்தி பெற்றவை.”12 

இவ்வாறான சூழலில் மக்கள் குழுமியிருந்து அப்பாடல்களை இரசிப்பது இயல்பான ஒன்றாகும். இதன் காரணமாக தென்னிந்தியத் தமிழ் கிராம பின்னணியை சார்ந்த நாட்டார் கதைப்பாடல்களின் தாக்கம் தொடர்ந்தும் இடம் பெற்றது. இவை தவிர இம்மக்களின் மத வழிபாட்டு நிகழ்வுகளின் போதும் ஏனைய சமுதாயம் சார்ந்த சடங்குகளின் போதும் இப்பாடல்கள் பாடப்பெற்று அவற்றில் இன்பம் காண்டனர். 

இப்பாடல்கள், கதைகளில் மலையக மக்களின் வாழ்வு பிரதிபலிக்கப்படவில்லை என்ற போதிலும், அவற்றில் இழையோடியுள்ள சில மீறல்களும், அடக்கு முறைகளுக்கு எதிரான போர்க் குணமும் இம்மக்களின் வாழ்க்கை முறையுடன் இணைந்து காணப்பட்டமையினால், இம்மக்களை வெகுவாக கவர்ந்து செல்வாக்குப் பெறத் தொடங்கின. ஆடப்பெற்ற கூத்துகள் கூட பக்தி உணர்வுடன் ஆடப்பட்டிருப்பினும் அவற்றில் இடம்பெற்ற மீறலுக்குரிய பாத்திரங்கள் இம்மக்களைக் கவர்ந்து காணப்படுகின்றன. காமன்கூத்தில் மன்மதன் பாத்திரம் இம்மக்களை பெருமளவு கவர்வதற்கு மேற்குறித்த அடிப்படையே காரணமாகும். 

பண்டைய இலக்கியங்களில் காணப்படுகின்ற மீறல் உணர்வுகளும,; போர்க் குணமிக்க பாத்திரங்களுமே இம் மக்களை கவர்கின்றதென்பதை தமிழக ஆய்வாளர் முனைவர் கோ. கேசவன் பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றார். ~~ அங்கீகரிக்கப்பட்ட செவ்வியல் கலை இலக்கியங்கள் ஆளும் வர்க்க கண்ணோட்டத்தில் படைக்கப்பட்டுள்ளன என்பது உண்மை. ஆனால் இவற்றிலும் கூட உள்ளார்ந்த முறையில் ஒரு வித மீறல் உணர்வுகளை மங்கலான கோடுகளாக நாம் சந்திக்க இயலும். இவற்றில் மனித முன்னேற்றத்திற்கான பொது ஒழுக்க மதிப்புகளை சற்று தூக்கலாகவே காண இயலும். சிலப்பதிகாரம் பெண்ணடிமையை வழியுறுத்தும் ஒரு காப்பியம் எனினும், ஆணின் செயற்பாடுகளை எதிர்த்த ஒரு பரத்தையர் குல பெண்ணின் குரல் அதில் ஒலிக்கப்படுகின்றது. இவையெல்லாம் வெறும் இலக்கியப் பதிவுகள்; அல்ல. அந்த காலத்தில் அடக்கி வாசிக்கப்பட்ட எதிர்ப்பு குரல்கள். இப்படி ஒரு எதிர் மரபு நீரோடையை அங்கீகரிக்கப்பட்ட இலக்கியப் பாரம்பரியத்திலிருந்தும் எடுத்து தொகுத்து கொள்ளலாம்.||13 

தமிழக பாமர மக்களிடையே கலை இலக்கியங்கள் தொடர்பிலான கேசவனின் கூற்று மலையக மக்களிடையே பரவி இருக்கின்ற கலை இலக்கிய பாரம்பரியத்துக்கும் பொருந்தும். இருப்பினும் அவை மலையக வாழ்நிலையின் உற்பத்தி உறவுகளுக்கு ஏற்ப மாற்றமடைந்து அவ்வாழ்கை பின்னணியிலிருந்து இவ்விலக்கியங்களைப் பார்க்கின்ற பண்பு இவர்களிடையே காணப்படுகின்றது. உதாரணமாக தமிழகத்தில் இக்கதை மரபுகள், காப்பியங்கள் பெரும்பாலும் சாதிய ஆதிக்கத்திற்கு எதிரான உணர்வினைக் கொண்டு நோக்கப்படுகின்ற அதே சந்தர்ப்பத்தில், மலையகத்தில் இவ்விலக்கியங்கள் ஒரு வர்க்க முரண்பாட்டின் அடிப்படையிலேயே பார்க்கப்படுகிறது. இங்கு சாதிய முரண்பாடு என்பது ஒரு காலாசார முரண்பாடாகவே இருக்கின்றதென்பதை கவனத்திற் கொள்ளல் அவசியமாகும். 

பொதுவாக இப்பாரம்பரிய இலக்கியங்களில், தம் வாழ்க்கையோடு கூடிய உணர்வுகளை அவற்றில் கண்டமையினாலேயே அவை இம்மக்களிடையே வேர் கொண்டு கிளைபரப்பியது எனலாம். சமூகவியல் அடிப்படையில் இம்க்களிடையே செல்வாக்கு பெற்றுள்ள இவ்விலக்கியங்களை நோக்குகின்ற போது சமூகத்தின் மேலாதிக்க சக்திகளுக்கும், அவற்றின் எதிர் சக்திகளுக்கும் இடையிலான மோதலாகவே அமைந்து காணப்படுகின்றன. இது உற்பத்தி உறவில் ஏற்பட்ட முரண்பாடாகும். உற்பத்தி உறவுகள் மாறாதிருக்கும் வரை இம்முரண்பாடுகள் காரணமாக இவ்விலக்கியங்களும் அவற்றில் இம்மக்கள் நேசிக்கின்ற பாத்திரங்களும் இருந்தே தீரும். மலையக சமூக உணர்வுகளை (நமது காலத்துப் பிரச்சினைகள்) நமது பண்பாட்டு சூழலில் காணப்படும் படிமங்கள், புராணக் கதைகள் என்பவற்றின் துணைகொண்டு, இலக்கியமாக்கும் முயற்சிகளில் மலையக எழுத்தாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். மல்லிகை சி. குமாரின் “மாடும் வீடும்” (1995) என்ற கவிதை தொகுப்பு இதற்கு தக்க எடுத்துக்காட்டாகும்.

மலையக நாட்டார் பாடல்கள் 

“கிராமிய பாடல்களை இயற்றியோர் மிகக் கடினமான வாழ்க்கை நடாத்தினர். அவர்கள் வருந்திச் செய்த வெறுப்பூட்டுகின்ற, மட்டு மீறிய உழைப்புக்குக் கூட அர்த்தம் எதுவும் இல்லாத வகையில் மேலிருந்தோர் ஈவிரக்கமற்ற முறையில் காணப்பட்டனர். தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர்கள் எத்தகைய உரிமையோ பாதுகாப்போ அற்றவராய் அல்லலுற்றனர். அவ்வாறாயிருந்தும் அம்மக்கள் உருவாக்கிய கிராமியப் பாடல்களில் சோர்வு வாதமோ, துன்ப இயற்கைக் கோட்பாடுகளோ எள்ளளவும் தலை காட்டுவதில்லை. அது மட்டுமன்றி ஒட்டு மொத்தமாக நோக்கும் பொழுது அம்மக்களிடையே தமது நித்தியத்துவத்தைப் பற்றிய உணர்வும் இறுதியில் தமது எதிர்ச்சக்திகள் வெல்லப்படும் என்ற மனஉறுதியும் ஆழமாகப் பதிந்திருக்கக் காணலாம்”.14 

மலையக மண்ணிலே செல்வாக்கு செலுத்திய நாட்டார் கதைப்பாடல்கள் கூத்துப்பாடல்கள் என்பன எத்தகைப் பின்னணியில் இம்மக்களிடையே செல்வாக்கு செலுத்தின என்பதனை முன்னர் நோக்கினோம். மலையக நாட்டார் பாடல்கள் என்று கூறும் போது அது இம்மக்களின் சமூக உருவாக்கத்துடனும், வாழ்வியலுடனும் நேரடியான தொடர்பு கொண்ட உணர்வுகளை அப்படியே சித்திரித்துக் காட்டும் பாடல்களாக அமைத்துக் காணப்படுகின்றன. 

மலையக நாட்டார் பாடல்களின் தாயகமாக தென்னிந்தியா இருந்த போதினும் அவை மலையக சூழ்நிலைக்கேற்றவகையில் புதிய வடிவம் பெற்று விளங்குவதைக் காணலாம். எடுத்துக்காட்டாக பின்வரும் பாடல்களை ஒப்பு நோக்கலாம். 

ஏத்தமடி தேவிகுளம்
எறக்கமடி மூணாறு
தூரமடி நைனக்காடு
தொயந்துவாடி நடந்து போவோம்..14அ

இப்பாடலில் இடம்பெறுகின்ற தேவிகுளம், மூணாறு, நைனக்காடு ஆகியன தென்னிந்தியாவில் காணப்பட்ட ஊர் பெயர்களாகும். இப்பாடல் மகையக சூழலில் இவ்வாறு பரிமாணம் அடைந்துக் காணப்படுகின்றது. 

ஏத்தமடி பெத்துராசி
ஏறக்கமடி ராசாத்தோட்டம்
தூரமடி தொப்பித் தோட்டம்
தொடந்து வாடி நடந்து போவோம்ஸ 14ஆ

இப்பாடலில் இடம்பெறுகின்ற பெத்துராசி, ராசாத் தோட்டம், தெப்பித் தோட்டம் முதலிய சொற்கள் ஊர் பெயர்களாகும். ஆவ்வகையில் நோக்குகின்ற போது மலையக நாட்டார் பாடல்களில் தென்னிந்தியாவின் செல்வாக்கு காணப்படுகின்ற அதேசமயம், அவை மலையக சூழலுக்குக்கேற்ப புதிய வடிவம் பெற்றிருப்பதனையும் காண முடிகின்றது. 

வறுமை, வரட்சி, சுரண்டல், சாதி அடிப்டையிலான அடக்கு முறைகள்; காரணமாக தென்னிந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து இங்கு வரும் போது அவர்களின் உணர்வுகள் இவ்வாறாக வெளிப்படுகின்றது. 

“வாடை யடிக்குதடி
வடகாத்து வீசுதடி
செந்நெல் மணக்குதடி
சேர்ந்துவந்த கப்பலிலே”.15

புகுந்த மண்ணில் ஏற்பட்ட ஏமாற்றம், சுரண்டல், அடக்கு முறைகள் என்பவற்றின் காரணமாக அவர்களின் வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கை ஏற்படத்திய அனுபவம் காரணமாக தமது தாயகம் பற்றிய ஏக்க உணர்வுகள் இவ்வாறு பிரவாகம் கொள்கின்றது: 

ஊரான ஊரிழந்தேன்
ஒத்தப்பனைத் தோப்பிழந்தேன்
போரான கண்டியே 
பெத்த தாயே நா மறந்தேன்

பாதையில வீடிருக்க
பழனி சம்பா சோறிருக்க
எருமை தயிரிருக்க
ஏண்டி வந்தோம் கண்டி சீமை 16

இம்மக்கள் எங்கிருந்தோ வந்து இங்கு தயாராக இருந்த பொருளாதாரத்தை சூறையாடிக்கொண்டவர்களல்லர். தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தாரைவாத்தே மலையக மண்ணை வளம்படுத்தினர். இது குறித்து மலையக பெண்ணொருத்தியின் வரிகள் இவவாறு வெளிப்படுகின்றது. 

கூனியடிச்சமலை
கோப்பி கண்டு போட்ட மலை
அண்ணனை தோத்த மலை
அந்தா தெரியுதடி. 17

இப்பாடல் வரிகளை விபரிக்கும் போது மலையக பெரும் கவி சி.வி.வேலுப்பிள்ளை ~~காடுகளை அழித்துப் புதிய மலைகளை உருவாக்கும் போது, சாவு என்பது சர்வ சகஜமானது. மலையகத்தின் ஒவ்வொரு மலைகளும் நிச்சயம் சிரம் தாழ்த்தி மரியாதை செலுத்தத்தக்க யாரோ ஒரு தங்கையின் அண்ணனைத் தோத்த மலைகளாகதானிருக்கும்.மலையகத்தின் மலைகளின் மீது உங்களுக்கு ஏறிடச் சந்தர்ப்பம் வாய்த்தால், உங்கள் காலடிகளைக் கவனமாய் எடுத்து வையுங்கள் ஏனெனில் அவை அண்ணனைத் தோத்த மலைகள்||. எனக் கூறுவது மலையக மக்களின் வாழ்நிலைகளை சிறப்பாகவே உணர்த்தி நிற்கின்றது. அத்துடன் பெருந்தோட்ட உற்பத்தித் துறையில் இவர்கள் அனுபவித்த வேதனைகள் அடக்கு முறைகள் என்பவற்றை பின்வரும் பாடல் வரிகள் மூலம் வெளிப்படுத்துகின்றனர் 

“அந்தனா தோட்டமினு
ஆசையா தானிருந்தேன்
ஓர மூட்ட தூக்கச்சொல்லி
ஒதைக்கிறானே கண்டாக்கையா”

“எண்ணிக் குழிவெட்டி
இடுப் பொடிஞ்சி நிக்கையிலே
வெட்டு வெட்டு என்கிறானே
வேலையத்த கங்காணி”18

உழைக்கும் மக்கள் திரளினரின் நல்வாழ்வுக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அம்மக்களின் விருப்பு, வெறுப்புக்கள், நம்பிக்கைகள் துன்பம், போராட்டம், அவர்தம் உறுதிப்பாடு என்பவற்றை பிரதிபலிக்கும் நாட்டார் பாடல் தொடர்பான ஆய்வு அவசியமான தொன்றாகின்றது. இவ்வகையில் மலையக நாட்டார் பாடல் பற்றிய சேகரிப்பு ஆய்வு என்பன இன்றியமையாத ஒன்றாகும். மலையக மக்களிடையே காணப்பட்ட நாட்டார் பாடல்கள் சிலவற்றை சி.வி வேலுப்பிள்ளை அவர்கள் தொகுத்து வெளியிட்டமை இத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்து காணப்படுகின்றது. 

உழைக்கும் மக்கள் திரளினரின் இலக்கியங்கள் யாவும் இந்நாட்டார் இலக்கிய பின்னணியிலிருந்து தோற்றம் பெற்றவையாகும். பாரதி, கோர்க்கி முதலானோரின் படைப்புக்கள் இவ்வடிப்படையில் தோற்றம் பெற்றவையாகும். மலையகம் சம்பந்தப்பட்ட மக்கள் இலக்கியம் இவ்விலக்கியத்தின் அடியாக தோன்ற வேண்டியவையே. சி.வி.வேலுப்பிள்ளை, என்.எஸ்.எம். இராமையா முதலானோரின் படைப்புகள் நாட்டார் இலக்கியத்தின் மறு பதிவுகளாக காணப்படுகின்றன எனக் கூறலாம். மலையக நாட்டார் பாடல்களை நுண்ணியத்துடன் நோக்குகின்ற போது மலையக வாழ்வியலையும் அடியாகக் கொண்டு தோற்றம் பெற்ற முதல் இலக்கிய படைப்புகளாக இவை அமைந்து காணப்படுகின்றன என்பது ஆய்வு நிலைப்பட்ட உண்மையாகும். 

மலையக இலக்கிய வளர்ச்சி 

“இலங்கையில் வாழ்ந்து வருகின்ற இந்திய தமிழர்களை பொருத்த வரையில் இவர்களது முக்கிய இலக்கிய முயற்சிகள் 1930 இற்கு பின்னரே முகிலத் தொடங்குகிறது. 1954இற்கு பின்னரே இவர்களது இலக்கிய ஆக்கங்;கள் ஈழத்து பொது இலக்கிய வளர்ச்சியுடன் இணைய தொடங்குகின்றது” என்பது மலையக இலக்கியம் பற்றிய சமூக வரலாற்று ஆய்வாளர்களின் துணிவாகும். 

மலையக படைப்பு இலக்கியத்தின் ஆரம்பகால கவிதைகள், மத அடிப்டையில் அமைந்து காணப்படுகின்றன. அவற்றில் இடையிடையே மலையகம் பற்றிய செய்திகள் இடம் பெற்ற போதிலும், மலையக மக்களின் வாழ்க்கை இடம் பெறவில்லை. இதற்கு அருள்வாக்கி அப்துல் காதிறு புலவர் அவர்களின் பாடல்களை குறிப்பிடலாம். தொடர்ந்து மலையக இலக்கிய முன்னோடியாகவும் தொழிற்சங்க முன்னோடியாகவும் திகழ்ந்தவர் கோ. நடேசய்யர்,; மலையக மக்களிடையே தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு இலக்கியத்தை ஒரு சாதனமாக பயன்படுத்தினார். அவரது கவி வரிகள் பின்வருமாறு உணர்வுக் கொள்கின்றது: 

“இந்து மக்கள்
சிந்தும் வேர்வை
ரெத்தக்காசு தானே - அடா
இரவு பகல்
உறக்கமின்றி
ஏய்த்துப் பறிக்கலாமா?

இவ்வரிகள் கோ. நடேசய்யரின் நுண் உணர்வு மிக்க பரந்த இதயத்தை எமக்கு எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது. கோ. நடேசய்யரிடம் இந்து சமயம் சார்ந்த எதுகைமோனை சார்ந்த சொற்பிரயோகமாகவே இதனைக் கொள்ள வேண்டியுள்ளது.இந்துக்கள் பெரும்பாண்மையினர் என்றவகையில் கையாளப்பட்டாலும் இந்து என்ற சொற்பிரயோகம் இந்தியாவைச் சேர்ந்த மக்கள் என்போருக்குக் குரியது. பாரதிக் கூட இந்துக் கிறிஸ்தவர், இந்து முஸ்லிம் என்ற பிரயோகத்தை இப்பொருளில் பாவித்துள்ளார். மலையக மக்களின் நலன் குறித்த ஆழ்ந்த அக்கறையே இக்கவிதையில் முனைப்பு பெற்றிருக்கின்றது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. 

நடேசய்யரின் தொழிற்சங்க பணிகளிலும், செயற்பாடுகளிலும் அவருக்கு பக்க பலமாக இருந்தவர் அவரது துணைவியார் மீனாட்சியம்மையார்;. மலையக இலக்கியத்திற்கு இவரது பங்களிப்பு ஓர் புதிய குருதியைப் பாய்ச்சுகின்றது எனலாம். பாரதியிலும் அவரது கவிதைகளிலும் அதிகமாக ஈடுபாடு கொண்ட மீனாட்சியம்மை, பாரதி போற்றிய புதுமைப் பெண்ணாகத் திகழ்ந்ததுடன், அவனது பாடல்களை மலையக சூழலுக்கு ஏற்ப மாற்றி தோட்டத் தொழிலாளர்களிடையே பாடி வந்தார். கலை இலக்கியத்தின் பணி என்பது மானுடவிடுதலையை அடிப்படையாக கொண்டதாக அமைய வேண்டும் என்ற அடிப்படை நிலைநின்று இம்மக்கள் சார்ந்த இலக்கியப் படைப்புக்களை இம்மக்களிடையே கொண்டு சென்ற திருமதி மீனாட்சியம்மையார் மலையக மக்களின் நல்வாழ்வுக்கான போராட்டத்துக்கு காத்திரமான பங்களிப்பினை நல்கியவரமுவார். பாரதியின் விடுதலை வேட்கையை மலையக மக்கள் தரிசிக்கவும் அதன் வழி சமூதாய உணர்வு பெறவும் தூண்டு கோலாக அமைந்தவர்கள் கோ. நடேசய்யரும், மீனாட்சியம்மையாரும் ஆவர். 

இவைத் தவிர ~~மலையகத் தொழிலாளர் பற்றிய பாடல்களை எளிய முறையில் சாதாரண நடையில் எழுதி துண்டு பிரசுரங்களாகவும், சிறு நூல் வடிவங்களாகவும், நாவலப்பிட்டியில் பிறந்த கவிஞர் எஸ்.ஆர்.என். பெரியாம்பிள்ளை, வி.என். கோவிந்தசாமி தேவர், பி.ஆர். பெரியசாமி, கா.சி. ரெங்கநாதன், சீனிவாசகம், தொண்டன் ஆசிரியர் என்.எஸ். நாதன், ஜில் சிட்டுக்குருவியார், பதுளை வ. ஞானபண்டிதன் போன்றோர்கள் வெளியிட்டும் தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் பாடியும் பரப்பி வந்தார்கள். இந்த நிலமை இன்றுவரை தொடர்வதைக் காணலாம.; கண்டி மாநகருக்கு அருகில் தெல்தோட்ட, அதன் கூப்பிடுதூரத்தில் பட்டியகாமம் என்ற சிறு தேயிலைத் தோட்டம,; அங்கு வாழும் பாவலர் வேல்சாமிதாசன் தாம் இயற்றிய பாடல்களை துண்டு பிரசுரமாக அச்சிட்டு தோட்டம் தோட்டமாக சென்று பாடி விற்று ஜீவித்திருக்கிறார்||21 

இக்கவிஞர்களில் வி.என். கோவிந்தசாமி தேவர், பெரியாம்பிள்ளை, என்.எஸ்.நாதன் முதலானோர் குறிப்பிடத்தக்கவரகள்;. இவர்களது படைப்புகளில் தொழிலாளர் வர்க்க ஆவேசமும், குமுறலும் சற்று தூக்கலாகவே வெளிப்பட்டன. மலையகம் குறித்தும் புத்திஜீகள் (பொதுவில் மனிதன்) குறித்தும் என்.எஸ்.நாதனின் உணர்வு இவ்வாறு கவிதையாகின்றது. 

சாதியால் சங்கத்தால், உன்னை ஏய்க்கும்
சண்டாளர் கூட்டம் கால் நூற்றாண்டாக
மோதியே, உள்வீட்டில், மூட்டும் சண்டை
மூவிரண்டு தவணையால் பொலீஸ் கோர்ட்;டில் 
பாதியாய்ப் போனவுடன் ஆஸ்தியெல்லாம்
பறித்திடுவார் தெண்டம் எனக் கொடுத்துத் தாலி
மீதியாய் வந்த காதைபோதும், போதுமிந்த
மேதைகளை வெளியேற்று 22

எங்கெல்லாம் உழைக்கும் மக்கள் போராட்டம் முகிழ்ந்து எழுகின்றதோ, அங்கெல்லாம் பூர்சுவா புத்திஜீவிகள் அப்போராட்டங்களை நசுக்குவதிலும், சமரசம் செய்தலிலும் முன்னின்றே வந்துள்ளனர் என்பதனை மலையக வரலாறும் எமக்கு உணர்த்தி நிற்கின்றது. இக்கவிஞன்; அத்தகைய மேதைகள் மீதான விமர்சனத்தை தனக்கே உரித்தான நாகரிகத்துடன் முன் வைக்கின்றார். 

மலையக இலக்கியத் துறையில் குறிப்பிடத்தக்க சுவடுகளை பதித்த இலக்கிய கர்த்தாக்களாக எம்முன் நிற்பவர்களில் இருவர், சி.வி வேலுப்பிள்ளையும், என்.எஸ்.எம். இராமையாவும் ஆவர். மலையக மக்களின் வாழ்வியலை உணர்ந்து அதன் உள்நின்று இலக்கியம் படைத்தவர்களில் இவ்விரு படைப்பாளிகளும் குறிப்பிடத்தக்கவர்கள். இவ்வகையில் சி.வி. வேலுப்பிள்ளையின் In Ceylon Tea Garden என்ற கவிதைத் தொகுப்பும் Born to Labour என்ற விவரண தொகுப்பும் முக்கியமானவர்களாகும். சி.வி. வேலுப்பிள்ளை கடைசிவரை தமிழில் கவிதை எழுதவில்லை. அவரது ஆங்கில கவி வரிகள்

“To the tom - toms throp
The dawn lies startled;
Trembling upon the tea;
The last dew bead is fresh
Before the moring treads
On this mating hour
Where suffering and pain
Decay and death are one
In the life throp
In the breathing of men”23

இக்கவிதை தொகுப்பினை சக்தி .பாலையா “இலங்கைத் தேயிலைத் தோட்டத்திலே” என மொழிபெயர்ப்பு செய்திருந்தார். இம்மொழிப்பெயர்ப்பில் சி.வி.யின் கவிதைகளில் காணப்பட்ட இயல்பான மண்வாசனை பண்பும் அவற்றோடு இணைந்த சொற்களும் காணப்படவில்லை. எடுத்துக்காட்டாக சி.வி. To the tom - toms throp என்பதை பிரட்டுத் தப்பு என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தியிருக்க வேண்டும். சுக்தி பாலையாவின் மொழிப்பெயர்ப்பில் “பேரிகை” என்ற சொல்லையே பயன்படுத்தியிருக்கின்றார். இப் பதமானது தப்பு என்ற இசைக்கருவிக்கு மாறான பொருளைத் தருவதாக மட்டுமன்று மலையக வாழ்வியலிருந்தே அந்நியப்பட்ட சொல்லாகவும் காணப்படுகின்றது. மேலும் சி.வி. 27 பக்கங்களில் எழுதிய கவிதை நூலை 77 பக்கங்களில் ஆக்கியிருக்கின்றார். இவ்விரு தொகுப்புகளையும் ஒப்பு நோக்குகின்ற போது பாரிய வேறுப்பாடு இருப்பதனை அவதானிக்க முடிகின்றது. மல்லியப்பு சந்தி திலகர் தொகுத்து வெளியிட்ட சி.வி யின் கவிதைத் தொகுப்பு(மூலக் கவிதைகளையும் மொழிப்பெயர்ப்பையும் சேர்த்து) வெளியிட்டுள்ளமை இவ்வகையான ஆய்வுகளுக்கு துணையாக அமைந்துள்ளது. இவ்வாறாக நோக்குகின்ற போது சத்தி.பாலையாவின் கவிதை தொகுப்பினை மொழிபெயரப்;பு தொகுப்பு எனக் கூறுவதை விட தழுவல் எனக் கூறுவதே பொருந்தும். நந்தலாலா சஞ்சிகை குழுவினரும் சி. வியின் கவிதை மொழிபெயர்ப்பு முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். அம் மொழிப்பெயர்ப்பு வரிகள் பின்வருமாறு அமைந்து காணப்படுகின்றன: 

“பிரட்டின் அதிர்வில்
விடியலே அதிர்ந்துபோய்
தேயிலை மீது
சரிந்து கிடந்தது
விடியல் பொழுதின்
ஆக்கிரமிப்பின் முன்னர்
இறுதியாய் சொட்டும் - இப்
பனித்துளி புதிது.
பொருந்தும் இந்த
பொழுதின் கணத்தில் தான்
துயரும் நோவும்
நசிவும் இழப்பும்
இம் மக்களின் மூச்சில்
இவ் வாழ்க்கையின் முகிழ்பின்
இவ்வாழ்கையின் முகிழ்ப்பின்
அம்சம் ஒன்றென
ஆகிப் போயின”24

இம்மொழிபெயரப்;பு உள்ளடகத்திலும் உருவத்திலும் சிதைவடையாது காணப்படுகின்றது.

மலையக மக்களின் வாழ்க்கையை சிறுகதை வடிவில் தந்தவர் என்.எஸ்.எம்.இராமையா. மலையக மக்களின் பிரச்சினைளை உள்நின்று நோக்குவதுடன், மலையக வாழ்க்கை முறையின் நடப்பியலை புரிந்து கொண்டு நியாயத்தின் பக்கம் நின்று சிறுகதை எழுத முனைந்தவர் அவர். பெரும்பாலும் இவரது சிறுகதைகள் நாட்டார் இலக்கியத்தின் இன்னொரு வடிவமாக அமைந்துக் காணப்படுகின்றது. 

சி.வி, என்.எஸ்.எம்.இராமையா முதலானோரின் படைப்புகளுக்கு களம் அமைத்து கொடுத்ததுடன் (குறிப்பாக தினகரன் பத்திரிகையில்) ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர் பேராசிரியர் கைலாசபதி. ~~அரசியல் அநாதைகளாய் புழுங்கிக் கொண்டிருந்த எங்களை உள்ளங்கனிந்து அன்புடன் நேசித்தவர் கைலாஸ். எங்கள் பெருமகன் அவர்||25 என சி.வி வேலுப்பிள்ளை கைலாசபதியின் அஞ்சலி உரையில் கூறியுள்ளமை இவ்விடத்தில் நினைவு கூரத்தக்கதொன்றாகும். 

மலையக இலக்கியத்திற்கு மாத்திரமன்றி இலங்கையின் தேசிய இலக்கிய நீரோட்டத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை நல்கியவர் கே. கணேஷ். இவர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராக இருந்ததுடன் ~~பாரதி|| என்ற சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் இருந்தவர். மலையக தொடர்பில் இவரது இலக்கியப் படைப்புக்கள் அளவில் சிறியதென்ற போதிலும் மேற்குலக முற்போக்கு மார்க்ஸிய அறிஞர்களின் இலக்கியப் படைப்புக்களை அதன் உள்ளடக்கம் உருவம் சிதையாத வகையில் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தமை இவரது மிகமுக்கியமான பங்களிப்பாகும்.; லூசுன் சிறுகதைகள், ஹோசிமின் சிறைக்குறிப்புக்கள், குவாஜா அகமது அப்பாஸின் குங்குமப்பூ, அஜந்தா ஆகியவற்றையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். 

இக்காலப்பகுதியில் இவ்வெழுத்தாளர்களின் சிந்தனைகள் பற்றி அறிய அக்காலச் சூழலில் முனைப்புற்றிருந்த தேசிய சர்வதேச சமூக அரசியல் கலாசாரம் குறித்து தெளிவு இன்றியமையாததாகும். 1960களில் இலங்கையில் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியிலே இடதுசாரி இயக்கங்கள் வளர்ச்சியடைந்திருந்ததுடன் அவை பரந்துபட்ட உழைக்கும் மக்களை நோக்கி படர்ந்தன. இந்த பிரக்ஞையின் வெளிப்பாடாகவே தேசிய இலக்கிய இயக்கம் தோற்றம் பெற்று தத்துவார்த்த போராட்டங்கள் முன்னேடுக்கப்பட்டன. ~~தேசியம்|| என்ற பதத்தினை மேலோட்டமாக அர்த்தப்படுத்தி பார்க்கும் போது அது குறுகிய பிரதேச வாதமாகப்படலாம். ஆனால் சற்று ஆழமாக நோக்கினால் பிரதேசங்களினதும், தேசிய சிறுபான்மையினரதும் அடக்கி ஒடுக்கப்படும் வர்க்கங்களினதும் எழுச்சியை அது பிரதிப்பலித்து நிற்க்கின்றது என்பதை அறியலாம். தேசிய இலக்கியம் பற்றி பேராசிரியர் கைலாசபதி; ~~குறிப்பிட்ட காலத்தில் காணப்படும் சமூக அமைப்பை அப்படியே பாதுகாக்கவோ, மாற்றியமைக்கவோ, சீர்திருத்தவோ இடமுண்டு. ஏனெனில் வெறுமனே ஒரு நாட்டை பிரதிபலிப்பது தேசிய இலக்கியமாகாது. தேசிய இலக்கியம் என நாம் கூறும் போது இலக்கியம் படைப்பவர்கள் இலட்சியம் நோக்கம் முதலியவற்றையும் சேர்த்தே எடை போடுகின்றது. சுருக்கக்கூறின் தேசிய இலக்கியம் என்பது ஒருவித போராட்ட இலக்கியமாகும்||26 என அடையாளப்படுத்தியிருக்கின்றார். 

இக்காலச்சூழலில் எழுந்த தேசிய இலக்கியப் பண்பை நாம் சி.வி, என்.எஸ்.எம். இராமையா முதலானோரின் படைப்புகளில் காணக்கூடியதாய் உள்ளன. இக்காலப் பின்னணியில் மலையகத்தில் இடம்பெற்ற எழுச்சிகள் பற்றியும் நோக்க வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது. 

இக்காலப் பகுதியில் மலையகத்தில் காணப்பட்ட அரசியல் சமூக கலை இலக்கிய போக்குகள் குறித்த தெளிவு அவசியமானதாகும். 

மலையகத்தில் திரு. இளஞ்செழியன் தலைமையிலான இலங்கை திராவிட முன்னேற்ற கழகமும் தோன்றி வளர்ந்திருந்தது. இதன் காரணமாக மலையக மக்களிடையே தி.மு.க கருத்துக்கள் பரவி ஜனரஞ்கம் அடைந்திருந்தன. இதில் அங்கம் வகித்த பலர் பின்னாட்களில் இடதுசாரி இயக்கங்களில் இணைந்தனர். இது இதன் முற்போக்கான அம்சமாக காணப்பட்டது. மலையகத்தை அடித்தளமாக கொண்டு இவ்வியக்கம் முனைந்ததால் இந்திய திராவிட முன்னேற்ற கழக போக்கிலிருந்து அந்நியப் பட்டதாகவும் அதே சமயம் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டதாகவும் அமைந்திருந்தது. இதன் பின்னணியில் தான் இப்போக்கு சார்ந்த பண்பாட்டு இயக்கங்களும் இலக்கியங்களும் தோன்றின. 

இ.தி.மு.க அரசியல் சமூக பொருளாதார செயற்பாடுகளை முன்னெடுத்தபோது அதற்கான கருவியாக கலை இலக்கிய துறையினையும் பயன்படுத்திக் கொண்டது. இது குறித்து திர. ஏ. இளஞ்செழியன் பின்வருமாற குறிப்பிடுகின்றார். ~~ சமூக சீர்த்திருத்த, பகுத்தறிவுக் கொள்கைகளை பிரதான கருத்துக்களாகக் கொண்டு, பெரியார் வெளியிட்ட திராவிட நாடு, நாத்தீகம், குடியரசு, அண்ணா வெளியிட்ட திராவிட நாடு, ஹோம் லேண்ட, காஞ்சி, கலைஞர் கருணாநிதி வெளியிட்ட, முத்தாரம், முரசொலி என்பவற்றோடு மாலைமணி, தீப்பொறி, தென்றல் போர்வாள் போன்ற ஏடுகளை தோழர்களிடையே விநியோகத்து கலை, இலக்கியத்துறையில் அவர்களையும் ஈடுபடுத்தி, எழுதத் தூண்டியதில் பெரும்பங்களிப்பு இ.தி.மு.க விளதே பத்திரிகைத் துறை, எழுத்துத் துறை, பேச்சுத்துறை என்பவற்றில் இ.தி.மு.க புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியது. 

இவ்வாறாக தமிழகத்திலிருந்து வெளிவந்த பத்திரிகைகள் துண்டுப்பிரசுரங்கள், நூல்கள் என்பன இவர்களில் தாக்கம் செலுத்தின என்ற போதிலும் அவை மலையக சூழலுக்குயேற்றவகையில் புதிய வடிவத்தினை பெற்றிருந்தன. மொழியுரிமை, பெண்விடுதலை, சாதிய எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, மலையக தமிழர்கள் ஓர் தேசிய இனம் என்ற அடையாளத்திற்கான போராட்டம் என்பவற்றினை முன்னிறுத்தியே இவர்களது செயற்பாடுகள் அமைந்திருந்தன. 

அக்காலச் சூழலில் போராட்டங்களில் மேடையேற்றப்பட்ட பல நாடகங்கள் இ.தி.மு. கத்தின் தாக்கத்திற்கு உட்பட்டவையாக அமைந்திருந்தன மலையக மக்கள் இம் மண்ணுக்குரியவர்கள், அவர்கள் மலையக தமிழர் என்ற அடையாளத்துடன் வாழ்கின்றவர்கள் என்ற சிந்தனையை முன்னிருத்தி வெளிவந்த ~~யார் நாடற்றவன|| என்ற நாடகம் குறிப்பிடத்தக்கதென்றாகும். இந்நாடகம் நோட்டன் லக்ஸபான தோட்டத் தொழிலாளர்களாக தயாரிக்கப்பட்டு மேடையேற்றப்பட்டது. இவைத்தவிர எலியாஸ், மு.வெ. பொ.சாமி, க.ப.சிவம், இல. நாகலிங்கம், இரா. அ. இராமன், க. தமிழ்மாறன், நவஜோதி, மலைத்தம்பி, குறிஞ்சி தென்னவன், டி.எம்.பீர்முகமது, அந்தனி நிலா, முத்தழகு, மு. நேசமணி முதலானோர்களின் எழுத்துக்களில் இவ்வியக்கத்தின் பாதிப்பினை அறியக் கூடியதாக உள்ளன. 

இவ்வகையில் இ.தி.மு. கத்தின் செல்வாக்கினை இதன் தனித்துவமான போக்கினை மலையக இலக்கியத்தில் காணக் கூடியதாக உள்ளது. இவ்வியக்கம் குறித்தோ அல்லது அதன் பின்னணியில் தோற்றம் பெற்ற இலக்கியங்கள் குறித்தோ காய்தல், உவத்தல் அற்ற ஆய்வு இதுவரை தோன்றவில்லை. இவ்வியக்கத்தின் போர்குணமிக்க சமுதாயக் கூறுகளை மக்கள் போராட்டத்திற்கு சாதகமானவகையில் உள்வாங்கிக் கொள்வதுடன் அதன் பலவீனங்கள் காணப்பட வேண்டும். 

இன்று தமிழகத்தில் முனைப்படையும் தலித்தியம் பெரும்போக்காக பார்ப்பனியத்தை மட்டுமே பிரதான எதிரியாக கருதிய பெரியாரியம் இழைத்த அதே தவறேயே மேலுருவாக்கம் செய்கிறது. மேலாதிக்க வாதி, ஏகாபத்தியம், நவக்காலனித்துவம் ஆகியவற்றுக்கெதிராக முரண்பட்டை பிரதானமாதாய் கொண்டு அதனோடு இணைந்து அடக்குமுறையாட்சி புரியும் பார்ப்பனியத்துக்கு எதிரான முரண்பாட்டையும் முதன்மையானதாய்ப் பார்ப்பதே அவசியம். 

இந்த அபாயம் மலையகத்தில் இ.தி.மு.க அமைப்பின் ஏற்பட சந்தர்ப்பம் உள்ளது. மார்க்சிய இயக்கங்களையும் அதன் சமுதாயம் சார்ந்த நடைமுறைகளையும் தகார்த்துவதற்காக அதன் பலவீனமான பக்ககங்களை மட்டுமே தூக்கிப்பிடிப்பது அழிவிற்கே இட்டு செல்லம் எனவே அழமான நுட்பமான மார்க்ஸிய ஆய்வுகளின் மூலமாகவே இதனை சாதிக்க முடியும். திரு. பெ.முத்துலிங்கம் எழுதிய ‘எழுதப்படாத வரலாறு என்ற நூல் இவ்விடம் குறித்து பல தகவல்களைக் வெளிக் கொணர்ந்த போதும் அது முழுமையான வரலாற்றை கொண்டு வருவதாக அமையவில்லை என்பது விமர்சன நிலைப்பட்ட உண்மையாகும். 

இரண்டாவது போக்காக இ.தி.மு.க. கருத்துக்களால் பாதிப்புற்றிருந்த அதேசமயம் அதன் முழுமையான கருத்தியலை ஏற்றுக் கொள்ளாமலும் மறுப்புறத்தில் மார்க்சிய தளத்தில் தம்மை இணைத்துக் கொள்ளாமலும் பல சீர்த்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். மலையக மக்கள் தொடர்பான முற்Nhக்கான கருத்தினை முன்னேடுத்து வந்த சமூக அரசியல் பண்பாட்டு இயக்கங்கள் வளர்ச்சி பெற்றிருந்தன. இதற்கு திரு.இர. சிவலிங்கம் தலைமை தாங்கினார். ~~மலையகம்|| என்ற கருத்தியலை உருவாக்குவதிலும் சீர்pதிருத்தவாத சிந்தனைகளை முன்னெடுப்பதிலும் செயற்பட்டவர் அவர். மலையகத்தின் பாரம்பரிய தொழிற்சங்க வாதிகள் அக்கால கட்டத்தில் பெற்றுதர முடியாதவற்றை பெற்று தந்தவர் திரு இர. சிவலிங்கம் எனக் கூறுவது தவறாகாது. 

இக்காலத்தில் பண்பாட்டு ரீதியாக கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் முன் எடுக்கப்பட்டன. மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்துக்குக் கூடாக மலையக இலக்கியம் வளர்க்கப்பட்டது. அவ்வமைப்பின் தலைமை, பாட்டாளி வர்க்க இலக்கியம் என்பதை அதன் கருத்தியலாக ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அதனால் தொழிலாளர்களின் பிரச்சினைகளை இலக்கியப் பரப்பில் நிராகரிக்க முடியவில்லை. எனவே, மனிதாபிமான அடிப்படையிலான இலக்கிய நடவடிக்கைகளே இவர்களில் முதன்மை பெற்றுக் காணப்பட்டன.29 

மூன்றாவது போக்காக, திரு.சண்முதாசன் தலைமையிலான இடது சாரி இயக்கமானது புதியதோர் பரிணாமத்தை எட்டியிருந்தது. இவ்வியக்கம் மலையக மக்களிடையே வேர் கொண்டு கிளை பரப்பிய போது தொழிலாளர்கள், புத்திஜீவிகள், மாணவர்களெனப் பல்வேறுபட்ட ஆளுமைகளை தன் நோக்கி ஆகர்ச்சித்திருந்தது. உழைக்கும் மக்களின் நல்வாழ்வுக்கான போராட்ட முனைப்பை இவ்வியக்கம் உணர்த்தி இருந்தது. இக்காலகட்டத்தில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு மடக்கும்பர, மேபீல்ட், பதுளை கீனாகலை ஆகிய இடங்களில் இடம்பெற்ற போராட்டங்களை உதாரணமாகக் கூறலாம். 

இவ்வாறான சூழலில் இலக்கியம் படைத்த சி.வி, என்.எஸ்.எம். இராமையா முதலானோரின் படைப்புக்கள் தம் காலகட்டத்து எழுச்சிகளையும் போராட்டங்களையும் இயக்கங்களையும் பொருளாகக் கொள்ளவில்லை என்பது ஆய்வு நிலைப்பட்ட உண்மையாகும். சி.வியின் ~~வீடற்றவன்|| என்ற நாவல் அக்காலகட்டத்தில் மலையகத்தில் இயங்கிவந்த மக்கள் நலன் சார்ந்த இயக்கங்களைக் குறிக்கவில்லை. பாரம்பரிய தொழிற்சங்க அமைப்பினையே சித்திரித்துக் காட்டுகின்றது. அவ்வகையில் அக்காலப் பின்னணியில் ஒரு போக்கினை எடுத்துக் காட்டுகின்ற இந்நாவல் அதன் மறுபக்கத்தை காட்டத் தவறிவிடுகின்றது. பாரம்பரிய அமைப்புகளுக்கும், இடதுசாரி இயக்கங்களுக்கும் இடையிலான முரண்பாட்டை யோ. பேனடிகற்; பாலனின் ~~சொந்தகாரன்|| என்ற நாவல் சித்திரித்து காட்டுகின்றது . இருப்பினும் இந்நாவல் யதார்த்த சிதைவினை கொண்டு காணப்படுவதால் அம்முயற்சி முழுமையடையவில்லை எனலாம். 

இர.சிவலிங்கம், திருச்செந்தூரன் முதலானோரது சிந்தனைச் செல்வாக்குக்குட்பட்ட எழுத்தாளர்களாக எம். வாமதேவன், பி. மரியதாஸ், சாரல் நாடன், மு.சிவலிங்கம் முதலானோரைக் குறிப்பிடலாம். பொதுவாக இவர்களது ஆரம்ப காலப் படைப்புகள் பிரஜா உரிமை பறிப்பு, சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தால் நாடு கடத்தப்பட்ட மலையக மக்களின் நிலை, சிங்கள பெருந் தேசிய வாதத்தால் இம்மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட அடக்குமுறைகள், என்பவற்றை பற்றியதாக அமைகின்றன. திருச்செந்தூரனின் “உரிமை எங்கே” என்ற சிறுகதை பிரஜா உரிமைப் பறிப்பு தொடர்பாக கூறுகின்றது. இவ்வாறானதோர் கருத்தோட்டத்தினை, நிலைமையை அ.செ. முருகானந்தனின் “காளிமுத்துவின் பிரஜா உரிமை எங்கே” என்ற கதையும் எடுத்துக் கூறுகின்றது. 

இத்தகைய சிந்தனைப் போக்கில் கால்பதித்து இலக்கியம் படைத்தவர்களில் தெளிவத்தை ஜோசப், சி. பன்னீரச்;செல்வம், பரிபூரணன், மலரன்பன், மல்லிகை சி. குமார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்;. 

இந்த மரபில் வந்த சிலர் காலப் போக்கில் மார்க்ஸிய சித்தாந்தங்களினால் கவரப்பட்டு இலக்கியம் படைப்பவர்களாக மாற்றமடைந்தனர். மரியதாஸின் வரவு இதற்கு தகுந்த எடுத்துக் காட்டாகும். இவரது “பயணம்” என்ற சிறுகதை குறிப்பிடத்தக்கதொன்றாகும். மனித உறவுகளிலும், சிந்தனைப் போக்குகளிலும் பணத்தின் ஆதிக்கம் எவ்வளவு தூரம் புரையோடிப் போயுள்ளது என்பதனை அழகுற சித்திரித்து காட்டுவதாக இக்கதை அமைந்துள்ளது. முதலாளித்துவச் சூழ்நிலை, ஏழைகளின் வாழ்வில் குடும்ப உறவில் எத்தகைய பாதிப்பினை ஏற்படுத்துகின்றது என்பதனை அழகுற எடுத்துக் காட்டுகின்றது இச்சிறுகதை. 

இதன் மறுபோக்கிற்கு உதாரணமாக சாரல்நாடன், மு. சிவலிங்கம் முதலானோரின் சிறுகதைகளைக் குறிப்பிடலாம். இவர்களது பெரும்பாலான கதைகளில் உழைக்கும் மக்கள் பாத்திரமாக படைக்கப்பட்டிருப்பினும் அவை மத்திய தரவர்க்க கண்கோட்டத்திலேயே படைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அறுபதுகளில் இடது சாரி இயக்க வளர்ச்சியின் முதற்கட்ட வெளிப்பாடாக தோட்ட தொழிலாளர்களை ஒடுக்கி அடக்கிய நிர்வாக உத்தியோகஸ்தர்களுக்கு எதிராகவே வெளிப்பட்டது. உதாரணமாக தோட்டங்களில் வேலைபார்த்த கணக்குப்பிள்ளைமார்கள் தொழிலாளர் பெண்களை இலகுவாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தக் கூடியவர்களாக காணப்பட்டனர். அவ்வாறான கணக்குப்பிள்ளைமார்கள் பலரின் கைகள் வெட்டப்பட்டதும், கொல்லப்பட்டதும் இப்பின்னணியில் தான். இப்பண்பு உழைக்கும் மக்கள் சார்ந்த எழுச்சியை வெளிப்படுத்தி நின்றது. இத் தொடர்பில் கவிஞன் ஒருவனின் வரிகள் இவ்வாறு வெளிப்பட்டுள்ளன: 

“தண்டுகலா தோட்டத்திலே
திண்டு முண்டு கணக்கப்பிள்ளை
துண்டு துண்டா வெட்டிப்பாருங்க
யாரோ தாங்க
கண்ட துண்டமாக போச்சிங்க
கழுத்து முண்டம்
கைலாசம் சேர்ந்திருச்சிங்க”30

இவ்வாறானதோர் சூழலில் தோட்டப்புற உத்தியோகஸ்தர்களின் ஒடுக்குமுறைகளை மறைத்து அவர்களிற்கும், தொழிலாளர்களுக்கும் இடையிலான ஒரு சமரசத்தை ஏற்படுத்துகின்ற முயற்சியாகவே சாரல் நாடனின் பல சிறுகதைகள் அமைந்து காணப்படுகின்றன. அவர் எழுதிய “எவளோ ஒருத்தி” என்ற கதை இப்பின்னணியை எடுத்துக் காட்டுகின்றது என்ற போதினும், அப் பொராட்டத்தின் மீதான நம்பிக்கை வரட்சியை ஏற்படுத்துவனவாக அமைந்திருக்கின்றது. 

இக்காலத்திலும் இதனைத் தொடர்ந்தும் பல நாவல் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. கோகிலம் சுப்பையாவின் “தூரத்துப் பச்சை”, டாக்டர் நந்தியின் “மலைக்கொழுந்து”, யோ. பெனடிக்ற் பாலனின் “சொந்தக்காரன்”, தோ. சிக்கன் ராஜீவின் “தாயகம்”, தெளிவத்தை ஜோசப்பின் “காலங்கள் சாவதில்லை”, கே.ஆர். டேவிட்டின் “வரலாறு அவளை தோற்றுவிட்டது”,எஸ்.அகஸ்தியரின் திருமணத்துக்காக ஒரு பெண் காத்திருக்கிறாள் என்ற நாவலும் கோபுரங்கள் சரிகின்றன என்ற குறுநாவலிலும் வேறு சில பத்திரிகைத் தொடர்கதைகளிலும் மலையக வாழ்வு நோக்கப்பட்டிருக்கின்றது. மலையக வாழ்வையே களமாக கொண்டு நூலுருப் பெற்ற நாவல்களில் வியந்து குறிப்பிடத்தக்கவை. தூரத்துப் பச்சை, சொந்தகாரன் ஆகிய நாவல்களாகும். மலையக தொழிலாளரின் துயர வரலாற்றினை அவல சுவையுடன் சித்திரிக்கின்றது தூரத்துப் பச்சை.31

தாயகம், வரலாறு அவளை தோற்றுவிட்டது ஆகியவை உருவத்தாலோ உள்ளடக்கத்தாலோ சிறக்கவில்லை. துன்பம் நிறைந்த மலையக தொழிலாளர்பால் வெறும் பரிதாப காடாட்சம் செலுத்தும் நோக்கமோ அல்லது அவர்களை இரவோடு இரவாக புரட்சியில் இறக்கும் அவசரமோ இன்றி அவர்களது வாழ்வை விண்டுக் காட்டும் சிறந்த தமிழ் நாவல் இனிமேல் தான் தோன்ற வேண்டும். 

அறுபதுகளில் தோற்றம் பெற்ற இவ்விலக்கிய மரபானது எழுபதுகளின் நடுப்பகுதிவரை தாக்கம் செலுத்தக்கூடியதாக இருந்தது. அதன் பின்னரான இடதுசாரி இயக்கங்களின் தளர்ச்சி, மிதவாத இயக்கங்களின் எழுச்சி, வடகிழக்கு பகுதிகளில் தோற்றம் பெற்று வந்த ஆயுத கிளர்ச்சி என்பன காரணமாக மலையகத்தின் வீச்சுடன் திகழ்ந்த எழுத்தாளர் சிலர் தமக்கு பாதுகாப்பு தேடியும், மற்றும் கம்பீரத்திற்கும் வயிற்று பிழைப்பிற்கும் வழிதேடியும் மிதவாத இயக்கங்களில் புகலிடம் தேடினர். 

இதை தொடர்ந்து வந்த காலங்களில் மல்லிகை சி. குமார், மாத்தளை சோமு, மலரன்பன், மாத்தளை வடிவேலன், குறிஞ்சி தென்னவன், மலைத்தம்பி, சி.எஸ்.காந்தி, கார்மேகம் அரு. சிவாநந்தம், சி. பன்னீர்செல்வம் முதலானோர் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை மலையக இலக்கியத்திற்கு வழங்கியுள்ளனர். சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் விளைவாக தமிழகம் சென்று விட்ட கவிஞர் அரு. சிவானந்தனின் குரல் இப்படி ஒலிக்கின்றது. 

நான் பிறந்த நாட்டினிலே
நான் இருக்க விதியில்லை
என் ஜென்மப் பூமியிலே
எனக்கு உரிமையில்லை

இப்பரம்பரையினர் எண்பதுகளிலும் எழுதக் கூடியவர்களாக தொடர்ந்து மலையக இலக்கியத்தில் சுவடுப் பதித்தனர். எண்பதுகளில் ஆரம்பத்தில் சு. முரளிதரனின் வரவு புதிய பதிவுகளை எமக்கு ஏற்படுத்துகின்றது. 

சங்கங்களுக்காகச் செத்தது போதும் - இனி
எங்களுக்காய் சாவோமென எழுதப்பட்ட
முதல் அத்தியாயம் சிவனு லெட்சுமணன்!
நாம் வதியும்
ஏழாயிரம் ஏக்கரா
பாதையாக வேண்டுமென பதறினான்

மலையக மக்களின் மனவெளிகள் தோறும்
நிறைந்தது - அந்த
டெவன் நீர் வீழ்ச்சியில்
வீரச்சாவின் வெடியோசை
இன்றும் எதிரொலிக்க
இறந்து போன லெட்சுமணன்
எழுபத்தேழின் விடிவெள்ளி.31

என்ற வரிகள் தனிக் கவனமத்துக்குரியன. 

இக்காலக்கட்டத்தில் சி.வி, என்.எஸ்.எம் இராமையா முதலியோர் தொடங்கி வைத்த இலக்கிய பாரம்பரியத்தின் இன்னோரு பரிமாணத்தை நாம் இக்காலத்தில் தோற்றம் பெற்ற “தீர்த்தக்கரை” சஞ்சிகையில் காணக்கூடியதாக இருக்கின்றது. எண்பதுகளில் இடம்பெற்ற காட்டுமிராண்டிதனமான வன்முறைகளை ஆனந்தராகவனின் கதைகளிலும், வன்முறையின் பின்னர் துளிர்க்க கூடிய வசந்தகால நம்பிக்கைகளை கேகாலை கைலைநாதனின் கதைகளிலும் காணக்கூடியதாக உள்ளது. மலையக சிறாரின் குறிப்பிட்ட நிலையினைத் தொட்டுக் காட்டுவதில் ஏ.எஸ்.சந்திரபோஸ் கதை முக்கியத்துவமிக்கதாக காணப்படுகின்றது. அவ்வாறே வடகிழக்கில் தோற்றம் பெற்ற தேசிய இயக்கத்தின் சுவாலைகளை மக்கள் கோட்பாட்டின் நிலைநின்று எழுதுவதாக பிரான்சிஸ் சேவியரின் சிறுகதைகள் காணப்படுகின்றது. மலையக வாழ்வியல் பின்னணியிலிருந்து இலக்கியம் படைக்க முற்பட்டமை இதற்கான அடிப்படையாக அமைந்திருக்கும் எனக்கூறலாம். எண்பதுகளில் மலையக மக்களிடையே தோற்றம் பெற்ற புத்திஜீவிகள் அம்மக்களை விட்டுச்செல்கின்ற குணாதிசயம் கொண்டவர்களாக (ஒப்பீட்டளவில் எண்ணிக்கையில் அதிகமானோர்) காணப்பட்டமையை நூரளை சண்முகநாதனின் ~~பெரியசாமி பீ.ஏ. ஆகிவிட்டான்| என்ற கதை சித்தரிக்கின்றது. 

தொடர்ந்து தொண்ணூற்றுகளில் மலையக இலக்கியம் புதிய செல்நெறியுடன் முன்னெடுத்துச் செல்லப்படுவதைக் காணலாம். அறுபதுகளில் காணப்பட்ட இலக்கியப் போக்கின் இன்னொருகட்ட வளர்ச்சியை இக்காலப்பகுதியில் காணக்கூடியதாக உள்ளது. 

இக்காலத்தில் மலையக இலக்கியத்தில் இருவிதமான போக்குகளை இனங்காணக்கூடியதாக உள்ளது. ஒன்று முற்போக்கு உணர்வுடன் சமூதாய கண்ணோட்டத்துடனும் இலக்கியம் படைத்த சிலர் இக்காலக்கட்டத்தில் சிதைவடைந்து அல்லது அதற்கு எதிரான நிலைபாடு கொண்டவராக மாற்றமடைவதை காணலாம.; இதற்கு தக்க எடுத்துக் காட்டுகளாக தி.ஞானசேகரன் ~~குருமதிமலை|| நாவலில் வெளிப்பட்ட சமூதாய உணர்வு ~லயத்துசிறைகள்| என்ற நாவலில் சிதைவடைந்து செய்வதையும் அவ்வாறே சு. முரளிதரனின் சமுதாயப்பார்வை ~தேசத்தின் கரங்கள் சொல்லும் செய்தி| என்ற கவிதையில் சிதைவடைவதையும், தீர்த்தக்ரையில் ஆசிரியர் திரு.எல்.சாந்திகுமார் சிந்தனை ரீதியாக சிதைவடைந்தது மட்டுமன்றி எழுத்துலகிலிருந்தே ஒரு அஞ்ஞாதவாசம் சென்று விட்ட துயரினையும் உதாரணமாகக் கூறலாம். இவை தவிர சமூதாய நோக்கம் கொண்ட கவிதைகளையே எழுதி குவித்தால் மானூட காதலையும், அன்பையும் யார் பாடுவார் என்ற பிரகடனத்துடன் வெளிப்பட்;ட செல்வி யோகேஸ்வரி துரைபாண்டியின் கவிதைகளும், இப்பண்பிலேயே கால்பதித்து சற்று பாலியல் விசாரத்திலே வேறுபட்டு நிற்கும் பெ. லோகேஸ்வரனின் கவிதைகளிலும் அதீத நம்பிக்கை வரட்சி, அந்நியமப்பாடு, மனோவிகாரம், போலி மேதாவித்தனம், வரலாற்று உணர்வின்மை என்பன இவர்களது கவிதைகளில் மலித்துக் காணப்படுகின்ற பண்புகளாகும். 

இதற்கு மறுபுறமாக சமூதாய சிந்தனையுடனும், வரலாற்றுணர்வுடனும் இலக்கியம் படைக்கக்கூடிய நம்பிக்கை நட்சத்திரங்களும் மலையக இலக்கியத்தில் தென்படத் தொடங்கினர். இப்பண்பு கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டது போன்று இரு தளங்களில் இடம்பெற்று வருகின்றது எனலாம் (முற்போக்கு சிந்தனை, மார்க்கிய சிந்தனை) முதலாவது போக்கிற்கு எடுத்துக்காட்டாக மல்லிகை சி. குமார், மாத்தளை வடிவேலன்,; மாரிமுத்து சிவகுமார் முதலானோரைக் குறிப்பிடலாம். மார்ஸிய சிந்தனை நிலை நின்று இலக்கியம் படைப்பவர்களாக கேகாலை கையிலைநாதன், எம்.முத்துவேல், லெனின் மதிவானம், சற்குருநாதன், ராகலை பன்னீர், இரா.ஜே.ட்ரொஸ்கி, வே. தினகரன், காவத்தையூர் மகேந்திரன் முதலானோரைக் குறிப்பிடலாம். இவர்களிடையே, நுண்ணிய தத்துவார்த்த வேறுபாடுகள் காணப்படினும் பொதுவுடமை கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டு இலக்கியம் படைப்பதில் ஒற்றுமை உடையவர்களாக காணப்படுகின்றனர். மலையக மக்களிடையே காணப்படுகின்ற புராண இதிகாச கதைகளை கொண்டு அதன்வழி சமகால பிரச்சினைகளை கவிதையினூடாக எடுத்து கூறுவதில் மல்லிகை சி.குமார் தனித்துவமிக்கவராக விளக்குகின்றார். 

இவ்விடத்தில் ஒரு முக்கிய செய்தி கூறவேண்டியுள்ளது. தொண்ணூறுகளுக்கு முற்பட்ட கால மலையக இலக்கியம் ஒரு விமர்சன செல்நெறிக்கு அப்பாற்பட்டதாகவே இருந்து வளர்ச்சி பெற்ற வந்துள்ளது. 

இக்காலப்பகுதியில் மலையக இலக்கியத்தில் ஆய்வுதுறை வளர்ச்சி பெறத் தொடங்கின. சாரல் நாடன், அந்தனிஜீவா (தரமானபத்தி எழுத்தாளர் என்பது பொருந்தும்) தெளிவத்தை ஜோசப் முதலானோர் மலையக இலக்கியம் பற்றி ஆய்வுகளை முன்வைத்துள்ளனர். மலையக சமூகம் குறித்து தீட்சண்ணியம் மிக்கதும் யதார்த்பூர்வமான தத்துவார்த்த பார்வையினை கொண்டிராமைக் காரணமாக இச்சமூக அமைப்பில் நிலவிய உற்பத்தி முறைகள், உற்பத்தி உறவுகள் பற்றியும் சமூக அரசியல், கலாசாரம் குறித்தும் விஞ்ஞான பூர்வமான தெளிவற்றறோராய், காணப்பட்டமை இவ்வணியினரின் பலவீனமான அம்சமாகும். 

மார்ஸிய நிலைநின்று மலையக இலக்கியத்தை ஆய்வு செய்தவர்கள் அச்சித்தாந்தத்தை மாறிவருகின்ற சமூக சூழ்நிலைக்கேற்டப பிரயோகித்து ஆய்வுகளை வெளிக் கொணர்ந்தவர்களாக பி.மரியதாஸ், எம்.முத்துவேல், வ. செல்வராஜா, லெனின் மதிவாணம், ஜெ. சற்குருநாதன், ஆர்.ஜே. ட்ரொஸ்கி போன்றோர் குறிப்பித்தக்கவர்கள். 

கட்சி இலக்கியம் 

மலையகத்தில் கட்சி அமைப்புகள் தோன்றி பலமாக செயற்பட்டன என்ற போதிலும் கட்சி இலக்கியம் தோன்றாதிருப்பது துரதிஷ்டமானதொன்றாகும். 1970களில் செங்கொடி சங்க கூட்டங்களில் கட்சி சார்ந்த பாடல்கள் சில இயற்றப்பட்டு திரையிசை பாடல்களின் மெட்டுகளில் பாடப்பட்டன அவை போராட்;டத் தீ - 1, போராட்ட தீ - 2 என இரு சிறிய நூல்களாக வெளிவந்தன. அப்பாடல்கள் உள்ளடக்க நிதியாகவோ உருவக ரீதியாகவோ மலையக சமதாயத்தின் யதார்த்தை பிரதிப்பலிப்பதாக அடைந்திருக்கவில்லை. அந்தவகையில் மலையகத்தில் கட்சி இலக்கியம் என்பது இனித்தான் தோன்ற வேண்டியுள்ளது. 

அறுபதுகளில் இடம்பெற்ற இடதுசாரி இயக்கத்தினை இலக்கியமாக்கும் முயற்சிகள் இக்காலப் பகுதியில் இடம் பெறுகின்றது. கேகாலை கையிலை நாதனின் ~அறுபதுகளில் மலையக வாழ்வியலின் கீற்று| என்ற விவரணமும், எம். முத்துவேலின் ~அறுபதுகளிலான மலையக தமிழிலக்கிய ஸ்தாபிதப் பிரயத்தனங்கள்| என்ற கட்ரையும், இதற்கு எடுத்துக் காட்டாக அமைகின்றன. இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்த தெளிவும் அவசியமானதொன்றாகின்றது. 

இலங்கை அரசியல் வரலாற்றில் உழைக்கும் மக்கள் நலன் சார்ந்த புரட்சிகரமான அரசியலை முன்னெடுத்ததில் தோழர் சண்முகதாசனுக்கு முக்கிய இடமுண்டு. அவர் வலதுசாரி சந்தர்ப்பவாதத்திற்கும், நவீன திரிபு வாதத்திற்கு எதிராகவும் தீவிரமாக போராடி அதில் வெற்றியும் கண்டார். ரசியா, சீன அரசியலிருந்து தான் பெற்றிருந்த அறிவை மாறிவருகின்ற இலங்கைச் சூழலுக்கேற்றவகையில் பொருத்தி பார்க்கத் தவறி விட்டமை அவரது முக்கிய பலவீனங்களில் ஒன்றாகும். அதிகமாக தத்துவத்தில் புதையுண்டு போன தன்மையே அவரிடம் அதிகமாக காணப்பட்டது. இதன் பின்னணியில் கட்சியில் கூட்டு முடிவுக்கு பதிலாக தனிநபர் தீர்மாணங்கே மேற்கொள்ளப்பட்டன. விமர்சனம், சுயவிமர்சனம் என்ற விடயம் முற்றாகவே புறக்கணிக்கப்பட்டன. தமது கருத்துகளுக்கு எதிரான கருத்துக்களை கூறிய யாவரையும் எதியாக பார்த்ததுடன் அவர்களை கட்சியிலிருந்து விலக்குவதற்கான முயறசி;கள் மேற்கொள்ளப்படலாயின. இந்தப் பின்னணியில் கட்சி பல பிவுகளாக பிரிந்தன. இவ்வாறு பிரிந்து நேர்மையுடன் செயற்பட்டவர்கள் இன்று சிதைந்து சின்னாப் பின்னமாகி சண்முகதாசன் விட்ட அதே தவறினை செய்து வருகின்றனர். எனவே புதியதோர் சூழலில் மக்கள் நலன் சார்ந்த அமைப்பொன்றினைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. இதற்கான பணியினையும் இலக்கியத்தின் மூலமாக செய்ய வேண்டியுள்ளது. 

இவை தவிர மலையக இலக்கியம் குறித்து முற்போக்குடன் கூடிய ஆய்வுகளை வெளிக்கொணர்வதில் பேராசிரியர்கள் க. அருணாசலம், அம்பலவாணர் சிவராசா, தில்லைநாதன், கலாநிதி துனைமனோகரன் முதலானோரின் முயற்சிகளும் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கன. 

இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்தும் நோகக் வேண்டியுள்ளது. தலைகுனிய வேண்டிய தனிமனித சண்டைகளாலும் எழுத்தாளனைத் தனிமைப்படுத்தி தாக்கும் குழமனப்பாங்காலும் வழவிழந்துக் கிடக்கும் மலையக இலக்கியம் அதனை இம்மண்ணுக்கே உரித்தான மக்கள் தத்துவத்தால் கட்டமைக்கின்ற போது எமது தேசத்திற்க மாத்திரமன்று உலகிற்கே நன்மையளிக்க கூடியதாக மிளிரக் கூடிய வாய்ப்பு உண்டு. அரசியலில் எவவாறு ஒரு புரட்சிகர கை;கிய முன்னணி அவசியமோ அவ்வாறே கலை இலக்கியத்திலும் அத்தைய புரட்சிகர கை;கிய முன்னணியின் அவசியம் உள்ளது. சினேக முரண்பாடுகளை பகை முரண்பாடுகளாக காட்ட முனையும் தனிமனித முரண்பாடுகளை தெளிவாக உணர்ந்து கொள்ளல் அவசியமாகும். உலகமயமாதல் சூழல் எவ்வாறு பொது மக்களை பாதித்திருக்கின்றதோ அவ்வாறே தேசிய ஜணநாயக முற்போக்கு சக்கிகளையும் பாதித்திருக்கின்றது என்பதை அண்மைகால கலை இலக்கிய செயற்பாடுகள் எமக்கு எடுத்துக் காட்டப்படுகின்றன. சமூதாயம் சார்ந்த கோட்பாடுகளை ஆழமாக கற்பதன் மூலமாவும் அது தொடர்பான நடைமுறையில் ஈடுப்படுவதனாலும் இப்பிரச்சனைக்கான தீர்வுக் காண முடியும் என்பதை நாம் புரிந்துக் கொள்ள முடியும். 

ஈழத்து தமிழ் இலக்கிய செல்நெறியில் மலையக இலக்கியம் அதன் பிரிக்க முடியாத பிரதேச இலக்கியமாக அமைந்துள்ளதுடன், தனித்துவப் பண்புகள் கொண்டதாகவும் காணப்படுகின்றது. அதே சமயம் ஈழத்து தமிழ் இலக்கியப் பரப்பினை செலுமைப்படுத்துவதில் முக்கியத்துவமிக்கதாகவும் காணப்படுகின்றது ~~மலையகத்து ஆக்க இலக்கிய பாராம்பரியம் ஈழத்து இலக்கியவாதத்தினை ஆழ அகலப்படுத்தியுள்ளது|| என்ற பேராசிரியர் கா. சிவத்தம்பியின் கூற்று இதனையே நிரூபணம் செய்கின்றது எனக்கூறின் அது தவறாகாது. 

அடிக்குறிப்புக்கள்:

1.சிவத்தம்பி. கா, ஈழத்தில் தமிழ் இலக்கியம், நியு} செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவெட் லிமிடெட் சென்ளை. 1978 பக்.03

2.மே.கு.நூ.ப - பக் 30. 04

3.முத்துவேல் எம் ( கட்டுரையாசிரியர்) அறுபதுகளிலான மலையக தமிழ் இலக்கிய ஸ்தாபிதப் பிரயத்தனங்கள், புதுவசந்தம் (வெள்ளி விழா சிறப்பிதழ்) தேசிய கலை இலக்கியம் பேரவை வவுனியா 1999, ப.27 

4.சாந்திகுமார் எல். ( கட்டுரையாசிரியர்), தீர்த்தக்கரை, ஹட்டன் ஜனவரி மார்ச் 1981 ப.27 

5.தம்பையா இ. மலையக மக்கள் என்போர் யார்? புதிய பூமி வெளியீட்டகம், கொழும்பு 1995. பக்.59,60 

6.சிவத்தம்பி கா மலையக இலக்கியம் மறக்கப்படகூடாத மறுபக்கம், மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா, சிறப்பு மலர் 1995 ப. 01 

7.சுபத்திரன், சுபத்திரன் கவிதைகள் ~பூவரசுகள் மட்டகளப்பு 1997 ப. 143 

8.சிவத்தம்பி கா எழுத்தாளனும் சித்தாந்த நிலைப்பாடும், புதுமை இலக்கியம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொழும்பு ஜன மார்ச் 1995. 

9.லெனின் வீ.இ சோசலிச சித்தாந்தமும் கலாச்சாரமும் குறித்து, முன்னேற்றப் பதிப்பகம் மாஸ்கோ 1974, ப.8

9.a சிவசேகரம். சி, (2000), எசமானர்களும் எதிப்பு இலக்கியமும், தேசிய கலை இலக்கிய பேரவை, கொழும்பு. 

10.முத்துவேல் எம் மலையக தமிழிலக்கியம் பற்றிய எண்ணக்கருக்கள், கல்விமாணிப்பட்டக் கற்கைநெறிக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்ஐர 1994 1997 தேசிய கல்வி நிறுவகம் மஹரகம, ப. 16 

11.அருணாசலம் க. (.மேற்கொள்), 1994, சுப்ரமணிய பாரதியார் , மலையக தமிழ் இலக்கியம், தமிழ் மன்றம், இராஜகிரிய, ப. 91 

12..மே. கு நூ. ப. 92

இக்கருத்தினை கலாநிதி க. அருணாசலம் மலையக தமிழிலக்கியம் என்ற அவரது நூலில் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

13.வேலுப்பிள்ளை சி.வி புதுமை இலக்கியத், மக்கள் மறுவாழ்வு சென்னை 1987 ப.23

14.கேசவன் கோ. தலித் இலக்கியம் சில கட்டுரைகள், புதுமை பதிப்பகம், மதுரை 1998, பக்.30,31

15.கைலாசபதி க மலைநாட்டு மக்கள் பாடல்கள் முன்னுரை, கலைநகர் பதிப்பம், சென்னை 1983.

16.வேலுப்பிள்ளை சி.வி. மே.கு.நூ.பக் 16

17.மே. கு நூ. ப. 17

18.மே. கு நூ. ப. 95

19.மே. கு நூ. ப. 96

20.சிவத்தம்பி கா.மே.நூ.ப. 30

21.அந்தனிஜீவா, மலையகமும் இலக்கியமும், மலையக வெளீட்டகம் கொழும்பு (மேற்கோள்) 1995.ப.13

22.மே.கு.நூ.ப. 14

23. சாரல்நாடன் (மேற்கோள்) மலையகம் வளர்த்த தமிழ், துரைவி பதிப்பகம், கொழும்பு, 1997 ப.125.

24.Velupillai C.V In Ceylon Tea Garden, Harrision Peiris.p.125. 

25. சிவப்பிரகாசம் எஸ்..நந்தலாலா சஞ்சிகை ப.29

26.வேலுப்பிள்ளை சி.வி கலாநிதி கைலாசபதி காலத்திற்கு சொந்தமானவர் குன்றின் குரல் தோட்ட பிரதேசங்களுக்கான கூட்டு செயலகம், கண்டி டிசம்பர் 1992 ப.22

27.கைலாசபதி க. மேற்கொள் லெனின் மதிவானம் மலையகம் என்ற பின் புலத்தின் கைலாசபதி என்ற மனிதர்|| மல்லிகை 35வது மலர் ஆண்டு கொழும்பு ஜனவரி 2000 ப.85

28.முத்துவேல் எம் மேற்குறிப்பிடப்பட்டள்ள கட்ரை, புதுவசந்தம் வெள்ளி விழா மலர் ப.31

30.தில்லைநாதன் சி. மலையகமும் தமிழிலக்கியமும், தமிழருவி 1978.

31.முரளிதரன் சு. குன்றின் குரல், ஜனவரி 92 முகப்பு அட்டடையில் வெளிவந்த கவிதை.

32.சிவத்தம்பி கா. முன்னுரை, எல்லை தாண்டாத அகதிகள், தமிழ்குரல் பதிப்பகம் சென்னை 1994

நன்றி: லும்பினி
Share this post :

+ comments + 1 comments

2:56 PM

உங்கள் எழுத்துக்கள் சக்திமிக்கது தான், ஆயினும் எமது மலையக சமூகம் தொடர்ந்தும் அடிமையாக இருப்பதற்கு காரணமே சுயநலம் மிக்க புத்திஜீவிகள் தான். எழுதுவது விமர்சிப்பது அவர்களுக்குள் சண்டைபிடித்துக் கொள்வது ... ஆனால் மக்களை சரியான பாதையில் பயணிக்க மக்களோடு நின்று செய்ய வேண்டிய மிக முக்கிய பல செயற்பாடுகளை செய்வதில்லை. இன்னும் பலர் தமது அறிவை மக்களை ஏமாற்றும் வஞ்சகர்களது வெற்றிக்கே பயன்படுத்துகின்றனர்.

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates