Headlines News :
முகப்பு » , , » ஒடுக்குமுறைச் சட்டங்களும் மலையக மக்களின் அவலநிலையும்

ஒடுக்குமுறைச் சட்டங்களும் மலையக மக்களின் அவலநிலையும்பல வருடங்களாக மாறி மாறிவரும் சிங்கள ஆட்சியாளர்களினால் அதிகாரம் செலுத்துவதற்கானஊன்றுகோலாக இச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது.வெள்ள அனர்த்தத்தினால் கிழக்கு மாகாண மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டாலும் அவர்களின் இயல்பு வாழ்வு திரும்பாத நிலையில் தேடுதல் வேட்டை என்கிற போர்வையில் அவல வாழ்க்கையே அங்கும் தொடர்கின்றது.

ஒரு தேசத்தின் இறைமை, அதன் உரித்துடைமை, Popular Sovereignty அங்கு வாழும் மக்களிடமே உள்ளது என்கிற கோட்பாட்டின் அடிப்படையை மறுக்கும் வகையில் அவசரகாலச் சட்டம் ஊடாக ஆட்சியதிகாரத்தை தக்க வைக்கிறது அரசு.
இதனைக் கருத்தில் கொள்ளாத உலக நாடுகள், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 8 வீதத்தை தாண்டும் அடுத்த வருடம் 10 வீதத்தை அடையும் என்கிற வகையில் பொருளாதாரப் புள்ளி விபரங்களை வெளியிட்டு அனைத்துலக நாணயச் சபை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியூடாக அவசரகாலச் சட்ட ஆட்சிக்கு முண்டு கொடுக்கின்றன.

பண வீக்கத்தை குறைத்து வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (Foriegn Direct Investment) வரவழைத்தால் நாட்டின் தலைக்குரிய வருமானம் (Income per Capital) அதிகரித்து நாட்டில் வளம் கொழிக்குமென அறிவுரை வழங்குகிறது ஆசிய அபிவிருத்தி வங்கி.

Stand by Arrangement (SBA என்கிற திட்டத்தின் கீழ் இலங்கையில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுவதால் 2188.3 மில்லியன் டொலர் மேலதிக கடனுதவியை வழங்கவிருப்பதாக அனைத்துலக நாணய நிதியம் கடந்த 4 ஆம் திகதி அறிவித்துள்ளது.
ஆகவே உடன்பாடு காணப்பட்ட 2.6 பில்லியன் கடனளிப்பில் ஏறத்தாழ 1.75 பில்லியன் டொலர்களை அந் நிதி நிறுவனம் வழங்கியுள்ளதெனலாம்.

இந்நிலையில் 2010 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் பொருளாதார செயற்பாடுகள் குறித்து பல தரவுகளை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.அண்ணளவாக இலங்கையின் உள்ளூர் மொத்த உற்பத்தி (Gross Domestic Product) $49.55 பில்லியன் டொலராக இருக்கும் அதேவேளை, வருடாந்த பொருண்மிய வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கலாமெனக் கூறுகின்றது.

இதில் விவசாயத் துறையானது உள்ளூர் மொத்த உற்பத்தியில் 11 சதவீதமாகவும் (அரிசி, தேயிலை, இறப்பர், தெங்குப் பொருள் என்பன முக்கியமானவை) சேவைத் துறை 59 சதவீதமாகவும் (உல்லாசப் பயணத்துறை, போக்குவரத்து, தொலைத்தொடர்புத்துறை, நிதி நிர்வாகச் சேவை உட்பட) கைத்தொழில் துறை 29 சதவீதமாகவும் (முக்கியமாக ஆடை உற்பத்தி, பதனிடப்பட்ட தோல் பொருட்கள் இறப்பர்) இருப்பதாக அந்தப் புள்ளி விபரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.8.3 பில்லியன் டொலராக இருக்கும் வர்த்தக ஏற்றுமதியில் தேயிலை, ஆடை, இறப்பர், இரத்தினக் கற்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியப் பொருட்கள் உள்ளடங்குகின்றன.

இதில் இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தில் முக்கிய சந்தைகளாக அமெரிக்கா (1.77 பில்லியன் டொலர்) பிரித்தானியா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் விளங்குவதோடு 13.5 பில்லியன் பெறுமதியான இறக்குமதியில் இந்தியா, சிங்கப்பூர், ஹொங்கொங், சீனா, ஈரான், மலேசியா, ஜப்பான், பிரித்தானியா, தென் கொரியா மற்றும் அமெரிக்கா (178 மில்லியன் டொலர்) போன்றவை முக்கிய நாடுகளாக குறிப்பிடப்படுகின்றன.ஆகவே வர்த்தகப் பற்றாக்குறை, ஐரோப்பிய நாடுகள் போன்று இலங்கையையும் வாட்டுவதை இப்புள்ளி விபரங்கள் புலப்படுத்துகின்றன.

உள்ளூர் மொத்த உற்பத்தியில் 29 விழுக்காட்டினுள் அடங்கும். ஆடை உற்பத்தியானது, ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி. வரிச் சலுகைத் தடையால் பாதிப்புறும் அதேவேளை, பெருந்தோட்ட பயிர் செய்கையினால் பெறப்படும் தேயிலை, இறப்பர் போன்றவற்றிற்கான சந்தைப் போட்டியினால் 11 விழுக்காட்டினைக் கொண்டிருக்கும் இத் துறையும் பாதிப்படைகிறது.

உல்லாசப் பயணத்துறையில் மற்றும் பெருந்தோட்ட உற்பத்தித் துறையில் தற்போது பெருமளவில் தங்கியுள்ள இலங்கைப் பொருளாதாரம், வெளிநாட்டு முதலீடுகளைத் தேடி அலைகிறது.மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சிகள், எண்ணெய் வளத்தை பங்கு போட அணு ஆயுத வல்லரசுகளின் ஊடாக பன்னாட்டுக் கம்பனிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் எரிவாயுச் சிலிண்டர்களின் விலையை மட்டுமல்லாது, இறக்குமதியாகும். உணவு பண்டங்களின் விலையையும் உயர்த்திவிடும்.

ஆகவே பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறும் ஆட்சியாளர்கள், மேற்கு நாடுகளின் நேரடி முதலீடுகளையே அதிகம் எதிர்பார்க்கின்றார்கள்.

இந்நிலையில் தோட்டத் தொழிலாளர் தரப்பிலிருந்து சம்பள உயர்வு கோரி, இலங்கை அரசிற்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதை கவனிக்க வேண்டும்.

2009 மார்ச் 31 ஆம் திகதியன்று முதலாளிமாருக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையே தினச் சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவாக 405 ரூபாய் வழங்கப்படுமென்ற கூட்டு ஒப்பந்தம் (ஊழடடநஉவiஎந யுபசநநஅநவெ) உருவாக்கப்பட்டது.

அதேவேளை, தற்போது நடைபெறும் சம்பள உயர்விற்கான பேச்சுவார்த்தைகள் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்து செப்டம்பர் வரை இழுத்தடிக்கப்பட்டு தீபாவளிக்கு “போனஸ்’ வழங்கும் நிகழ்வோடு இனிதே முற்றுப் பெறும் என்கிற கடந்த கால கசப்பான அனுபவங்களை ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விளக்கமாக எடுத்துக் கூறுகின்றார். 6 மாதங்களாக நடைபெறும் சம்பள உயர்வுப் போராட்டங்களும் தீபாவளிக் கொடுப்பனவோடு மறைந்து விடுமென்பதே உண்மை.

தோட்ட முதலாளிமார் தொழிற்சங்கங்களுக்கிடையே நிகழ்ந்த இந்த வார சந்திப்பு, வருகிற 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை ஆர்.யோகராஜன், பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் செயலாளர் லலித் ஒபயசேகரா ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதேவேளை நிபந்தனையற்ற அடிப்படைச் சம்பளம் ரூ 500 ஆகவும் ஊக்குவிப்பு கொடுப்பனவு ரூ. 250 ஆக மொத்த நாட் சம்பளம் ரூ. 750 வை ஏன் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க முடியாதென மனோ கணேசன் முன்வைக்கும் கருத்தில் நியாயம் இருப்பதாகவே தென்படுகிறது.

சம்பள உயர்வினைக் கேட்டால், கம்பனிகள் நட்டத்தில் இயங்குவதாக வியாக்கியானம் செய்யும் தோட்ட முதலாளிமார், தொழிலாளர் மத்தியில் வறுமை அகன்று வாழ்வில் வளம் ஏற்பட்டுள்ளதாக பொய் உரைக்க ஆரம்பித்து விடுவார்கள்.
உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மிகக் குறைந்த இலாபத்தில் ஏற்றுமதி நிறுவனத்திற்கு தேயிலையை விற்பனை செய்து, தொழிற்சங்கங்களுக்கு நட்டக் கணக்கைக் காட்டுவது முதலாளித்துவ உற்பத்தி உறவு முறையில் வழமையான விடயமே.
அந்த உற்பத்திப் பண்டம், தரகு முதலாளிகள் ஊடாக பன்னாட்டு ஏற்றுமதி நிறுவனத்திற்கு விற்கப்பட்டு இதே தேயிலை பெரும் இலாபத்தில் ஏற்றுமதி நிறுவனத்தினால் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த முதலாளிமார் பேச்சுவார்த்தைகளின் போது எத்தனை மில்லியன் டொலர் வருமானம், இத் தேயிலை ஏற்றுமதியால் அரசிற்கு அந்நியச் செலவாணியாகக் கிடைக்கிறது என்பதனை தோட்டத் தொழிற்சங்கங்களுக்கு எடுத்துக் கூற மறந்து விடுவார்கள்.
அதேவேளை, தொழிலாளர் சங்கங்களும் முதலாளிமாரோடு சமரசப் போக்கில் நகர்ந்து கடும் குளிரிலும் வெய்யிலிலும் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளை தட்டி விட்டு கடுமையான உழைக்கும் அந்த அற்புதமான மனிதர்களுக்கு உண்மை நிலைவரத்தைச் சொல்வதில்லை என்பதுதான் வேதனையான விடயம்.

உழைக்கும் வர்க்கம், அவர்களுக்கான நியாயமான ஊதியத்தை பெறும் உரிமையுடையவர்கள் என்கிற அடிப்படை ஜனநாயகத்தைப் புரிய வைக்க வேண்டிய அவசியம் மக்கள் அமைப்புகளுக்கும் ஊடகங்களுக்கும் உண்டு.
வட, கிழக்கில் மட்டுமல்லாது, மலையகத்திலும் தமிழ் பேசும் இனமானது பல்வேறு பரிமாணங்களில் அரச ஒடுக்கு முறைக்கு உள்ளாகி வருவதைத் தமிழர் தலைமைகள் புரிந்து கொள்வது நன்று.

உழைப்புச் சுரண்டலாலும் திட்டமிட்ட குடியேற்றங்களாலும் அதிகாரமற்ற பொம்மைச் சபைகளாலும் பாதுகாப்பற்ற சூழலாலும் தமிழ் பேசும் மக்கள் அடக்கப்படுவதை இனியாவது உலகிற்கு எடுத்துக் கூற ஜனநாயக விரும்பிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் முன்வர வேண்டும்.

-இதயச்சந்திரன்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates