Headlines News :
முகப்பு » , , » ”தொழிலாளர்களின் வேதனத்தை வழங்குவதற்கு எதிரானவன் அல்ல” எல்.எச்.கெல்லி

”தொழிலாளர்களின் வேதனத்தை வழங்குவதற்கு எதிரானவன் அல்ல” எல்.எச்.கெல்லி

பெருந்தோட்ட வரலாற்றில் இருந்து...16

1884  ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க வேதனச் சட்டம் மேலும்  திருத்தப்பட்டபோது தொழிலாளர்களின் கூலியை நீண்ட காலம் செலுத்தாமல் இருக்கும் தோட்டத்துரைமார்களின் பெயர்களை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதென்று தீர்மானிக்கப்பட்டது. அவ்விதம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்ட பின்பும் அவற்றை செலுத்தத் தவறினாலேயே சட்ட மா அதிபரால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அச்சட்டம் திருத்தப்பட்டது.

இத்தகைய நடவடிக்கை தம்மை அவமானப்படுத்தும் செயல் என்று தோட்டத்துரைமார்கள் கண்டனம் தெரிவித்தனர். ஏனெனில் இவ்விதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பெயர்களை பத்திரிகைகள் தமது உள்நாட்டு, வெளிநாட்டு பதிப்புக்களில் வெளியிட்டன. அவை பிரித்தானிய வாசகர்களையும் சென்று அடைந்ததால் அவர்கள் மத்தியில் தமது நற்பெயர் பாதிக்கப்படுவதாக கருதப்பட்டது.
தொழிலாளர் கூலியை நீண்ட காலமாக வழங்காமல் இருந்தார்கள் என்று மேற்படி சட்டத்தின் கீழ் வழக்கொன்று பதிவு செய்யப்பட்டு எல்.எச். கெல்லி (L.H.Kelly) தான் தொழிலாளரின் வேதனத்தை உரிய கால நேரத்தில் வழங்குவதற்கு எதிரானவன் அல்ல என்றும் ஆனால் வழக்கு தொடுக்க முன் இது விடயம் தம் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தால் இத்தகைய பிணக்கை  இலகுவில் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் இந்த நடைமுறையை தொழிலாளர்கள் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கு இடம்பெற்றதன் பின் துரைமார் சங்கத்தின் அங்கத்தவர்கள் பலரும் திடீரென தம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று அறிவித்தல் வரும் போதுதான் இத்தகைய பிரச்சினை ஒன்றும் இருக்கின்றமை தெரிய வருகின்றது என்றும் முன்கூட்டியே தெரிந்திருந்தால் தம்மால் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தனர். இத்தகைய வாதப்பிரதிவாதங்களுக்கும் அழுத்தங்களுக்கும் மத்தியில் மேற்படி கெல்லி துரைக்கெதிரான வழக்கில் கெல்லி விடுதலை செய்யப்பட்டார்.

பொதுவாக வேதனம் கிடைக்காத காலங்களில் தொழிலாளர்கள் கங்காணியிடம் இருந்தே துண்டுமுறையில்  முற்பணம் பெற்றனர். அப்படியும் பணம் கிடைக்காதபோது செட்டியார்களை அணுகினார்கள் செட்டியார்களை தவிர இந்தியாவின் போறா இனத்தைச் சேர்ந்தவர்களும், முஸ்லிம் சுல்தான்களும், பாய்மார்களும் கூட வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். எனினும் கங்காணியை விட இவர்களின் வட்டி வீதம்  மிக அதிகமானதாக இருந்தது. 1855 ஆம் ஆண்டில் தோட்டத்துரையான  என்.ஜி. மெக்லன் (N.G.Mackllan) தொழிலாளர்களைப் பொறுத்த வரையில் கங்காணிமாரும், தோட்ட நிர்வாகமும், தோட்டத்துரைமார்களும் கூட்டாகச் சேர்ந்து அவர்களை தொடர்ந்து பட்டினியிலும் பஞ்சத்திலும் வைத்திருக்கவே விரும்பினர். அப்போது தான் அவர்கள் தம் சொல்கேட்டு அடிமையாக இருப்பார்கள் என்று கருதினர். அதில் அவர்கள் வெற்றியும் கண்டனர்.

மலையகப் பெருந்தோட்ட மக்கள் எந்த அளவுக்கு அடிமை நிலையில் வைக்கப்பட்டிருந்தனர் என்பது தொடர்பில் பல சமூகவியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு இந்தியத் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்ட அதே காலப்பகுதியிலேயே அவர்கள் மொறீசியஸ்சுக்கும், மேற்கிந்தியத் தீவுகளுக்கும், மலேசியாவுக்கும், இந்தோனேசியாவுக்கும் பர்மா, மற்றும் பிஜித் தீவுகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும்  இந்த எல்லா நாடுகளிலும் இவர்களின் நிலை என்ன என்பது தொடர்பிலான ஒப்பீட்டாய்வுகள் மிகக்குறைவாகவே வெளிவந்துள்ளன.

இலங்கையின் தொழிலாளர் வர்க்க வரலாறு தொடர்பில் கலாநிதி குமாரி ஜயவர்தன மற்றும் கலாநிதி தர்மப் பிரியா வெசும்பெரும ஆகியோர் பரவலான ஆய்வுகள் மேற்கொண்ட போதும் அவர்களின் ஆய்வுகளில் கோப்பித் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை வரலாறு உள்ளடக்கப்படவில்லை. கலாநிதி குமாரி ஜயவர்தனவின் இலங்கையில் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் வளர்ச்சி (the rise of the Labour  Movement in Srilanka) மற்றுமொரு ஆய்வாளரான கலாநிதி கே.எம்.டி.சில்வாவின் கருத்து பின்வருமாறு அமைந்துள்ளது,

ஏனோ தெரியவில்லை, பிரித்தானிய ஏகாதிபத்திய காலத்தில் பாட்டாளி வர்க்க வளர்ச்சி, அதன் சமூக, பொருளாதார அம்சங்கள் தொடர்பில் ஆய்வு செய்த ஆய்வாளர்களும் பல்கலைக்கழகங்களின் கலாநிதிப்பட்டங்கள் பெறுவதற்கு ஆய்வு மேற்கொண்ட பட்டப்பின் படிப்பு மாணவ ஆய்வாளர்களும் மேற்கிந்தியத்தீவுகள், மொஹீசியஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்ற இந்திய புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வு பற்றி கவனமெடுத்துக் கொண்டனரேயன்றி இலங்கைக்கு வந்த தொழிலாளர்களின் வாழ்வியலை ஆராய்வதனை புறக்கணித்துள்ளமை புதுமையானதாக உள்ளது.
இந்தியாவில் இருந்து பிறநாடுகளுக்குச் சென்ற இந்தியத் தொழிலாளர்களின் துன்பியல் வரலாறு என்பது மனித குல வரலாற்றின் கறை படிந்த வரலாறாகவே உள்ளது என சுதந்திர இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராக இருந்த என்.வி. ராஜ்குமார் ஒரு முறை  தெரிவித்திருந்தார்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates