கலை, இலக்கியம், அரசியல், சமூகம், சமயம், ஆத்மீகம் அனைத்திலும் புதிய சிந்தனைகளை, மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்ளும் மனோபக்குவம் வறிதாகிக்கொண்டிருக்கிறது. கருத்தாடல்கள் ஸ்தாபனப்படுத்தப்பட்டு அவற்றுக்கு அனுசரணையான கருத்துக்கள்மட்டுமே ஆராதிக்கப்படுகின்றன. அபிப்பிராயபேதம் என்பதோ கருத்து முரண்பாடு என்பதோ ஆலகால விஷத்தைப்போல அஞ்சப்படுகிறது. விழாக்கள் என்றால் பொன்னாடை போர்த்துவதும், விமர்சனங்கள் என்றால் உச்சியில் வைத்துப் போற்றுவதும் என்று மாமூலாகிப் போயுள்ளது.
மாறுபட்ட கருத்துகள் எப்போதுமே சந்தேகத்தோடு பார்க்கப்படுகிறது. தங்களின் அதிகாரத்தை, ஆதிக்கத்தை, கட்டி எழுப்பப்பட்டுள்ள சொப்பனக் கனவுகளை, புகழ்க்கோபுரங்களை, பெருமிதப் பதாகைகளை அவை துவம்சம் செய்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறுநிலப் பிரதேசத்தைத் தமக்கெனக் கூறுகட்டி வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அதற்குள் அவர்களின் காட்டுத்தர்பார் அரங்கேறும். அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டத்தக்க பிரீதியான கருத்துக்கள் மட்டுமே அங்கு ஆரவாரத்தோடு வரவேற்கப்படும். தங்களின் அதிகாரத்தினைத் தக்கவைத்துக்கொள்ள கருத்துகள் வலிய இரும்புக் கரங்களால் உருவகிக்கப்பட்டு திணிக்கப்படுகின்றன. தாங்கள் வீசப்பட்டு விடுவோமோ என்று அனுதினமும் அஞ்சிக்கொண்டிருக்கும் இவர்கள் சதா கழுகுக் கண்களோடு மாற்றுக் கருத்துகளைக் கண்காணித்து வருகிறார்கள். அச்சமும் பீதியும் இவர்களைப் போட்டு வதைக்கிறது. புகழாரங்களின் வண்ணஒளியில் மட்டுமே இவர்களின் கண்களுக்குப் பார்வை கிடைக்கிறது. வேறுபட்ட கருத்துகளும் மாறுபட்ட கண்ணோட்டங்களும் எழும்போது இவர்கள் கபோதிகளாகிப் போகிறார்கள். அதிகாரவெறியும் புகழ்போதையும் உச்சத்தில் ஏறிய கிறக்கத்தில் இவர்கள் உலா வருகிறார்கள்.
தங்கள் குறுநிலப் பிரதேசங்களுக்கும் அப்பாலும் இவர்கள் பார்வை விழுவதுண்டு. அயல் பிரதேசங்களின் எல்லைகளுக்குள்ளும் இவர்கள் ஊடுருவுவதுண்டு சமயங்களில் அவற்றோடு சமரசம் செய்துகொள்வதுமுண்டு. தேவதைகளும் கால் பதிக்கத் தயங்கும் இடங்களிலும் இந்த நச்சுச் சாத்தான்கள் ராஜரீகம் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். அதிகார லகான்களைக் கையில் வைத்திருப்பவர்கள் உதிர்ப்பதெல்லாம் பொன்மொழிகளாகிவிடுகிறது.
தடம்புரண்டு விழும்போது இவர்கள் யாரோடும் எந்த சமரசத்துக்கும் தயாராகிவிடுவார்கள். எல்லாருமே தங்களின் விசுவாசிகள் என்ற சுயமோஹிகளாகி விடுகிறார்கள். தாங்கள் விரோதங் கொண்டிருப்பவருக்கு எதிராக ஊரெங்கும் எத்தனை விரோதிகள் உள்ளனர் என்று விரல் மடக்கிக் கணக்குப் போட்டுப்பார்த்து குள்ள சந்தோஷத்தில் திளைத்துவிடுகிறார்கள்.
சிலைகளிலும் போஸ்டர்களிலும் கட்-அவுட்டுகளிலும் பத்திரிகைகளிலும் வண்ணங்களில் தங்களின் பிரதிமைகளைப் பார்த்து இவர்கள் மாய்ந்துபோய் விடுகிறார்கள். சின்னஞ்சிறு விமர்சனங்களும் இவர்களின் அடிவயிற்றைக் கலக்கிவிடும். ஒற்றைவரி விமர்சனங்கூட இவர்களை உபாதைக்குள்ளாக்கிவிடும். மாற்றுக் கருத்துக்களை உட்கொள்ளும் ஜீவன் இல்லாத ரத்தசோகைபிடித்தவர்களின் கூட்டம் இது. தியாகிகள் என்றோ துரோகிகள் என்றோ இலகுவில் கோடுபோட்டு ஆளைத் தீர்த்துவிடுவது மிக எளிதாகப் போய்விடுகிறது. இது ஒன்றும் புதிய கதையும் அல்ல. அரசியல் சரித்திரத்தின் எல்லாப் பக்கங்களிலும் காணக்கிடைக்கிற உண்மைகள்தான்.
அறிவார்ந்த கருத்துகளை ஆழ நோக்கும் பொறுமையோ அவகாசமோ இல்லை. மேலோட்டமான சுலோகங்கள் மட்டுமே கிரஹிப்பிற்கு போதுமானவையாகி விடுகின்றன. மந்திரம்போல மேற்கோள்களை அழைத்துக்கொண்டுவர அவர்கள் சலிப்புறுவதில்லை. தங்களின் முட்டாள்தனமான முடிவுகளுக்கு மார்க்ஸிய மூலவர்களையும் துணைக்கழைத்துவிட்டு, பின்னால் தங்களின் முடிவுகள் லாயக்கில்லாதவையாக வெளிறிப்போனதும் தாங்கள் தமது முடிவை மாற்றிக்கொண்டிருப்பதாகவும் இவர்கள் ஒற்றைவரிப் பிரகடனம் செய்துவிடுவார்கள். மேற்கோள்களை அனாதையாக்கி விடுவார்கள். தங்களின் கொஞ்சநஞ்ச அறிவிலோ, அனுபவத்தின் பலத்திலோ அறிந்துகொண்டுவிட்டோமென்ற அகங்காரத்தின் முத்திரையை இவர்களின் வார்த்தைகளிலே பார்க்கமுடிகிறது. தங்களுடைய கருத்துக்களின் எதிரொலிகளை மட்டுமே எங்குமே கேட்க இவர்கள் அவாவுறுகின்றனர்.
தாங்கள் கொண்டிருக்கும் கருத்துக்கள் அனைத்துமே மாற்றுக்குறையாத கருத்துகள் என்று நம்பும்போக்கு எங்கும் விரவியுள்ளது. முற்கற்பிதங்களும் தனிமனித விருப்பு வெறுப்புகளும் சமரசப்பாங்கும் லாபநஷ்டக்கணக்கும் அதிகாரமும் பெருமிதமும் புகழ் அவாவுதலும் அச்சமும் கருத்துகளின் வீரியத்தைக் கபளிகரம் செய்துவிடுகின்றன.
மனிதன் சிந்தனைக்கு அஞ்சுகிறான். மரணத்தைவிட சிந்தனை அவனை அச்சுறுத்துகிறது. சிந்தனை கிளர்ச்சிகரமானது சண்டமாருதம் போன்றது. அது அங்கீகாரங்களை உலுக்குகிறது. இதமான சௌகரியங்களைப் புரட்டிப் போடுகிறது. தவறுகளை அவை தயவுதாட்சண்யமின்றிச் சாடுகிறது. சிந்தனைப் பிரவாகம் என்பது காட்டுவெள்ளம் போன்றது. கரைபோட்ட பாதைகள் அதற்கில்லை. அது விதிகளை மதிப்பதில்லை. அதிகாரங்களை அது கேள்விக்கு இலக்காக்குகிறது. காலங்காலமாகப் பேணப்பட்டு வந்த கருத்துகளை அது துச்சமென மதிக்கிறது. ஸ்தாபனங்களுக்கு எதிரான குரல்களை அது ஓங்கி ஒலிக்கிறது. ~அமைதி|க்கு அது ஊறு தேடுகிறது. குருட்டு நம்பிக்கைகளுக்கு அது தார்க்கோல் சூடு போடுகிறது.
கலிலியோவும் கோபர்னிக்கஸ{ம் நியூட்டனும் டார்வினும் மார்க்ஸ{ம் பிராய்டும் ஐன்ஸ்டைனும் இந்தச் சிந்தனைப் பிரவாகத்திற்கு தம் ஊனையும் உயிரையும் சிந்தியுள்ளனர்.
நமது சொந்தச்சூழலில் கருத்துவன்முறையின் மிகப்பெரிய களப்பலியாக ராஜினி தெரிகிறார். தமிழர்தம் விமர்சன சரித்திரத்தில் எழுத்திற்காக உயிரைப் பறிகொடுத்த முதல் அரசியல் விமர்சகியாக ராஜினி முக்கியத்துவம் பெறுகிறார். மனித நேயமிகுந்த சபாலிங்கத்தின் உயிர் குடிக்கப்பட்ட நிகழ்வு இந்த இருண்ட வன்முறையின் மற்றுமொரு நாசப்பதிவு.
இந்த அக்கிரமங்களுக்கும் கொடிய வன்முறைகளுக்கும் முகங்கொடுத்து மனிதசிந்தனை மனுக்குலத்தின் சரித்திரத்தில் ஆழமான மாறுதல்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதுதான் அபூர்வமான படிப்பினையாகும்.
நன்றி - தோற்றுத்தான் போவாமா
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...