Headlines News :
முகப்பு » , » கொழும்பில் புதிய பண்பாட்டுத்தளம்

கொழும்பில் புதிய பண்பாட்டுத்தளம்



புதிய பண்பாட்டுத்தளம் தனது கொழும்புக்கான முதற்கூட்டத்தை அண்மையில் (06.01.2013) கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபத்தில் நடாத்தியிருந்தது. அதன் அமைப்புக்குழுவில் ஒருவரான ந.இரவீந்திரன் தலைமையில் இந்தப் பகிரங்கக் கருத்தாடல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. மண்டபம் நிறைந்த உற்சாகம் மிக்க பல்வேறு தரத்தினரான பங்கேற்பாளர்கள் முன்னிலையில் மல்லியப்பூ சந்தி திலகர், சிறீதரன், பாபு ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து சபையோர் கருத்துரை இடம்பெற்றிருந்தது. முன்னதாக தலைமையுரையில் இரவீந்திரன், "பண்பாட்டில் புதிய-பழைய பண்பாடுகள் உண்டா எனக் கேட்கப்படுகிறது, அவ்வாறு உள்ளது என்பதே உண்மை. ஏற்கனவே கடவுளால் அருளப்பட்டது பண்பாடு என்கிறவர்கள் கூட பண்பாட்டின் பேரால் காலந்தோறும் ஏற்படுகிற ஒடுக்குமுறைகளும், அதனை மாற்றுவதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்களும் குறித்து விவாதித்து வருகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவின் கன்னட மாநிலத்தில் இளம் ஆண்களும் பெண்களும் கலந்துகொண்ட நிகழ்வொன்றினுள் அத்துமீறி நுழைந்த இந்துத்துவவாதிகள் மணமுடிக்காத ஆணும் பெண்ணும் ஒன்றுகூடி இருப்பது இந்துப்பண்பாட்டுக்கு விரோதமானது எனக்கூறிப் பலமாகத் தாக்கி, பொலீசிலும் அந்த இளைஞர் இளைஞிகளை ஒப்படைத்திருந்தனர்.
இன்று பெண்கள் வெளியே பணியாற்ற வேண்டியுள்ள நிலையில் இவ்வாறுபேச இயலாது எனக் கூறிய இந்துக்கள் பலரும் இந்துப் பண்பாட்டில் இடையிட்டு வந்த இதுபோன்ற மரபுப்பாரம்பரிய வழக்காறுகள் காலமாற்றத்தோடு மாறவேண்டும் என்றனர். இதுபோன்றே இஸ்லாமியப் பெண்கள் படிப்புக்கென்று கிளம்புவது தவறு எனக்கூறி முஸ்லிம் தீவிரவாதக் குழுவினால் இஸ்லாமியச் சிறுமி சுடப்பட்ட போது முஸ்லிம் நண்பர்கள், இஸ்லாம் பெண்களின் கல்வியைத் தடுக்கவில்லை என்று கருத்துரைத்து அந்தச் சிறுமியையும் கல்வியையும் புதிய பண்பாட்டு எழுச்சியையும் ஆதரித்து நின்றனர். எண்பதுகளில் இருந்து பெரியாரை முன்னிறுத்திய எதிர்ப் பண்பாடு பற்றிய அக்கறை எம்மத்தியில் மேற்கிளம்பியிருந்தது. மரபு மற்றும் எதிர் பண்பாடுகளில் ஏற்புக்குரியனவும் நிராகரிக்க வேண்டியனவும் உள்ளன. அவற்றை உழைக்கும் மக்களின் பார்வையில் மக்கள் விடுதலைத் திசைமார்க்கத்தில் முன்னேறும் மக்கள்சக்தி கையேற்றுப் புடமிட்டு தனக்கானதாக உருவாக்குவதே புதிய பண்பாடு" எனக்கூறினார்.
"இன்றைய சமூக-பண்பாட்டு நெருக்கடிகளும் செல்நெறி குறித்த தேடல்களும்" எனும் தலைப்பிலான இந்தக் கருத்தாடல் அரங்கில் மல்லியப்பூசந்தி திலகர் முதலில் தனது கருத்துரையை வழங்கினார். "மலையகப் பண்பாட்டில் கோயில்களின் பங்கு நிராகரிக்க இயலாவகையில் வளர்ந்து வருகிறது. தோட்டத் தொழிலாளர்கள் நகரக் கோவில்களில் இருந்து தூரப்பட்டு இருந்து தத்தமது தோட்டங்களின் கோயில்களை நிர்மாணிப்பதில் முழுமூச்சாக இறங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு கோவிலையும் கட்டிமுடிக்க ஒன்பது பத்து வருடங்களும் எண்பது லட்சத்துக்குக் குறையாத பணமும் செலவாகிறது. மாதச் சம்பளப் பணத்திலிருந்து கழித்து எடுத்து ரொக்கமாக்கித்தர நிர்வாகத்தைத் தொழிலாளர்கள் கேட்டிருப்பதால், இதன்வாயிலாகவும் தனக்கு கணிசமான காலத்துக்குப் புழங்கும் மூலதனம் ஒன்றைப் பெறும் நிர்வாகம் கோயில் கலாசாரத்தைத் தூண்டி வருகிறது. இன்னொரு வகையில் மலையக நிதர்சனம் வெளிப்படுவதில் குறைபாடு காணப்படுகிறது. ரப்பர் தோட்டத்தொழிலாளர்கள் பற்றிப் பேசப்படுவதில்லை. அந்தத் தொழில்துறை ஏற்கனவே நலிந்து போன நிலையில் அந்தமக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் அனந்தம். இன்று தேயிலைத்தொழிலும் நலிவடைகிற நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் புறக்கணிப்புக்கு ஆளாகிறார்கள். ஏனைய பகுதிகளில் அரசியல் கட்சிகளுக்கு தொழிற்சங்கம் இருக்கும், மலையகத்தில் தொழிற்சங்கம் ஒவ்வொன்றும் கட்சிகளைக் கட்டமைத்து வேறுபட்ட அரசியல்களுக்கு போகிறார்கள் என்கிறவகையிலும் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
மலையக மக்கள் எனும்போது தோட்டத் தொழில்சார்ந்து இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தனிச் சமூகம்; ஏறக்குறைய இருநூறு ஆண்டு வரலாற்றால் தனித் தேசிய இனப் பிரிவினராகக் கணிக்கப்படுகின்றனர். இன்று புவியியல் வேறுபாடுகளுடன் கொழும்பு, வடக்கு-கிழக்கு எனப் பல்பிரதேசங்களுக்கும் சிதறியுள்ள போதிலும் மலையக மக்களாகத் தம்மை இனங்காண்கின்றனர். ஆயினும் பதிவுகளில் இந்திய வம்சாவழியினர் எனப் பதிய நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். அதனை விரும்பாமல் பலர் இலங்கைத் தமிழர் எனப் பதிகின்றனர். தமது சுய லாபத்துக்காக இந்திய வம்சாவழியினர் என்ற அடையாளத்தைக் கோருகிறவர்களும் உள்ளனர். பலதசாப்தங்களாக போராடிப்பெற்ற மலையக மக்கள் என்று அவர்கள் அனைத்து இடங்களிலும் பதிவு செய்யப்படும் உரிமைக்காக் இன்று குரல் எழுப்பவேண்டியுள்ளது" எனத் திலகர் கூறினார்.

தொடந்து உரையாற்றிய சிறீதரன்(சுகு தோழர்) " இலங்கையில் சமூகப் பிரச்சனைகள் எதிர்கொள்ளப்படுகிற விதம் விரக்தியளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இதனின்றும் மீண்டு மக்கள் போராட்டங்கள் மேற்கிளம்பி வர நாம் புதிய பண்பாட்டு அணியைக் கட்டியெழுப்ப வேண்டும். இந்தியாவில் எந்தவொரு கொடுமைக்கும் எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுவதைக் காண்கிறோம். அணு உலைப் பிரச்சனையாக இருக்கலாம், சாதி ஒடுக்குமுறைத் தாக்குதலாக இருக்கலாம், சமூக அக்கறையாளர்கள் மக்களை அணிதிரட்டிப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க முடிகிறது. அண்மையில் தலைநகர் டில்லியில் ஓடும் பஸ்ஸில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி, பாதிக்கப்பட்ட பெண் இருவாரங்களின் பின்னர் இறந்துவிடக் காரணமாக இருந்த கொலைபாதகச் செயலுக்கு எதிராக இந்தியா முழுமையிலும், குறிப்பாக டில்லியில் தொடர்ந்து மக்கள் போராட்டங்கள் கிளர்ந்து எழுந்துள்ளதைக் காண்கிறோம்.
பெண்மீதான இத்தகைய மிருகத்தனமான தாக்குதல்களுக்கு அவர்கள் அணியும் ஆடையைக் குறை கூறுகிறவர்கள் இருக்கிறார்கள். இந்துப் பண்பாட்டின்படி உடை அணிய வேண்டுமாம். பண்பாடு உடையில் இல்லை. மன்னர்கள் மகாராணிகள் உடைகளைப் பழைய சிற்பங்களில் பார்க்கிறோம். அப்போதெல்லாம் பெண்கள் மேலாடை அணிந்ததில்லை. ஆயினும் அப்போதெல்லாம் இவ்வளவு மிருகத்தனங்கள் இடம்பெற்றதில்லை. இப்போது எல்லாமே பணம் என்றாகி மனித உறவுகள் கொச்சைப்படுத்தப்படுகிறது. வைத்தியம், சுகாதாரம், போக்குவரத்து போன்ற சேவைத் துறைகள் முழுதாக வணிகமயப் பட்டுள்ளன. பணத்துக்காக அலையும் அவலத்தில் பண்பாடு அல்லோலகல்லோலப்பட்டுள்ளது. மாறுவது பண்பாட்டின் ஒரு தவிர்க்க இயலாத பண்பு. மனிதகுல வளர்ச்சியோடு பண்பாடும் விருத்தியடைந்து வரும். சுதந்திரமான உரையாடலைச் சாத்தியமாக்கும் புதிய பண்பாட்டுத் தளம் கட்டியெழுப்பப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதனை இந்தப் புதிய பண்பாட்டுத் தளம் நிறைவு செய்யும் என நம்புகிறேன்" என்றார் .

சிறுகதைப் படைப்பாளி கொ.பாபு "சாதி இழிவுகளைச் சுமக்கும் நோய்க்கூறுடைய சமூகமாக எமது அமைப்புமுறை நீடிக்கும் வகையில் எமது பண்பாட்டுச் சூழல் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. தொழில் மகத்துவத்தை மதிக்காமல் உடல் உழைப்பை இழிவாக நோக்கும் பழைய பண்பாடு நீடிக்கும்வரை நாம் ஒன்றுபட்ட ஒரு இனம் என்று கூறத் தகுதியற்றவர்களாகவே இருப்போம். சவரத் தொழில்புரியும் ஒரு பெரியவர் எனக்கு ஒரு விடயத்தைக் கூறினார். அந்தக்காலத்தின் மருத்துவர் என்பது உள்ளிட்ட ஐந்து பட்டங்கள் உடைய தங்களை அச்சொல்லின் இழிவு தோன்றும்வகையில் அழைப்பது கொடுமையானது என்றார். நாம் புதிய பண்பாட்டைப் படைக்கவேண்டும். புதிய பண்பாட்டுத் தளம் முன்னிறுத்துகின்ற புதிய பண்பாடு என்பது எத்தகையது என்பது கோட்பாட்டு ரீதியிலும் நடைமுறை ரீதியிலும் தெளிவுபடுத்தப்பட வேண்டும். முன் முடிவுகளைத் திணிப்பாதாக அல்லாமல் சுதந்திரமான உரையாடல் அனுமதிக்கப்பட வேண்டும்; பூரணமான ஜனநாயகம் பேணப்பட வேண்டும்; விமரிசனம்-சுயவிமரிசனம் அர்த்தமுள்ளவகையில் உயிர்ப்போடு முன்னெடுக்கப்படுவது அவசியம்; மக்களையும் உழைப்பையும் போற்றும் மனப்பாங்குடனான புதிய பார்வையும் விளக்கமும் வெளிப்பட ஏற்றதான சூழலை வளர்ப்போம். இவற்றைப் புதிய பண்பாட்டுத் தளம் சாத்தியமாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
கருத்துரைகளைத் தொடர்ந்து சபையோரின் கருத்துரைக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. முன்னதாக கணேஸ், மலையகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கூறினார்; தமிழ் இனம் என்பதற்குள் அவர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்றார். பொத்துவில் சம்சூன், இந்தக்கருத்தரங்கில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகப் பொத்துவிலில் இருந்து வந்துள்ளேன்; இந்த அமைப்புப் பற்றிப் பேட்டி ஒன்றைப் பார்த்து நானாகத் தொடர்புகொண்டேன்; முன்னர் தமிழர்-முஸ்லிம் என்ற பேதமில்லாமல் பல நண்பர்கள் எனக்கு இருந்தார்கள்; அதுபோன்ற ஒரு இணக்கமான வாழ்வைக் கட்டியெழுப்பப் புதிய பண்பாட்டுத் தளம் களம் அமைக்கும் என்பதால் சேர்ந்து உழைக்க முன்வந்திருக்கிறேன் என்றார். தினகரன் விசு கருணாநிதி இன்னமும் எங்கடை ஆட்கள் உங்கடை ஆட்கள் என்று பிரித்துப் பேசுவதை விடுத்து தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் ஓரினம் என்று ஒன்றிணைக்க இதுபோன்ற அமைப்பு பாடுபட வேண்டும் என்றார். ஞானசக்தி, இதுபோன்ற புதிய பண்பாட்டு நிகழ்வில் பெண்கள் உரையாற்ற ஏற்பாடு செய்யாமை கண்டிக்கப்பட வேண்டியதாயுள்ளது; முன்னர் ஒரு பேரனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி குறித்து போராட்டத்தை முன்னெடுத்தபோது - இது குடும்ப விடயம், பெரிதுபடுத்தாமல் விடுங்கோ என்றார்கள்; இதுவே ஆமி என்றால், தமிழுக்கு கொடுமை நேர்ந்தது என்கிறோம்; பெண் எவரால் கொடுமைக்கு உள்ளாவதையும் தகர்ப்பதற்காகப் போராடும் மனமாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நடைமுறைகளை இந்த அமைப்பு முன்னெடுக்க வேண்டும் என்றார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன், வெளிநாட்டிலிருந்து நண்பர்கள் வலியுறுத்திய நிலையில் இங்கு கலந்துகொண்டது பயனுள்ளதாக அமைந்தது; தமிழ்பேசும் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றிப் பேசப்பட்டது, அவை கவனிப்புக்குரியன; அதேவேளை, இன்னொன்றைக் கவனம் கொள்ளவேண்டும்; அதிக வறுமைக்கான பிரதேச சபை, மிகப்பின்னடைவான கல்வி வலயம் என்பனவாக சிங்களப் பிரதேசங்களே உள்ளன - பாலியல் தொழில், பாதாள உலக பாதிப்புகள் போன்றன விகிதாசாரத்துக்கும் மேலாக சிங்களவர்களையே அதிகம் பாதித்துள்ளன என்ற உண்மைகளையும் கவனம்கொள்ள வேண்டும் என்றார்.
முடிவுரையாக இரவீந்திரன் தொகுப்புரையை வழங்கினார். "ஏற்றத்தாழ்வுமுறை தோன்றியபோதே பெண் ஒடுக்குமுறை தொடங்கிவிட்டுள்ளது. ஐரோப்பாவில் போலன்றி இங்கு முன்னேறிய இனமரபுக்குழுவால் ஏனையவை ஒடுக்கப்படுவதாக அமைந்த சாதிமுறை இருப்பதால் பிரத்தியேகமான வரலாற்றுப்போக்கு எமக்கு உண்டு. சாதி ஒடுக்கு முறைக்கு எதிரான அறுபதுகள் வரையான போராட்டம் வாயிலாக இலங்கை அனுபவம் முழுச் சாதிமுறை குறித்த கற்றலுக்கு மகத்தான பங்களிப்பை வளங்கியிருந்தது. பின்னர் இன ஒடுக்குமுறையைச் சந்தித்தோம். இன்று முழு இலங்கையும் இந்திய மேலாதிக்கத்துக்கு ஆட்பட்டுள்ளது. இதற்கும் மேலாக உலக மேலாதிக்கம்.
ஆக, பல்வேறு தளங்களிலான போராட்டங்களை எவ்வகையில் முன்னெடுப்பது என்பது குறித்து அரசியல்-சமூக-பண்பாட்டு பேதங்கள் கடந்து சுதந்திரமாக விவாதித்து விரிந்த தளத்தில் முடிவை வந்தடைய வேண்டியவர்களாக இருக்கிறோம். நாம் மட்டுமே சரி என்று முடங்காமல், மற்றவர் கருத்தை மதித்து பொது முடுவுக்கு வருவோம். எந்த ஒரு அமைப்பினரும் தமக்கான வெகுஜன அமைப்பக இதனை மாற்ற எத்தனிக்காமல் இங்கு முழு அளவில் இணைந்து இயங்க இயலும்" என இரவீந்திரன் குறிப்பிட்டார். அமைப்புக்குழு சார்பில் நிகழ்வின் அழைப்பாளராகவும் உள்ள லெனின் மதிவானம் நன்றியுரை வளங்கினார்.டாக்டர் முருகானந்தம்,தர்மலிங்கம் சித்தார்த்தன்,வீரகத்தி தனபாலசிங்கம் ,ரகுநாதன் ,சுப்பையா மதுசூதனன் போன்றோரும் கலந்துகொண்டனர்.
நன்றி - முச்சந்தி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates