Headlines News :
முகப்பு » , » திலகருடனான நேர்காணல்: இந்திய வம்சாவழி தமிழர்களைப்பற்றி...

திலகருடனான நேர்காணல்: இந்திய வம்சாவழி தமிழர்களைப்பற்றி...



வலை நண்பர் சேவியர் இன் மல்லியப்பூசந்தி திலகருடனான நேர்காணலை தமிழோசை பத்திரிகை பிரசுரித்திருந்தது ஈழத்து இலக்கிய ஆர்வலர்களில் ஒருவர், சமூக ஆர்வலர், சிறந்த நண்பர் என நிறைய விடயங்களை திலகர் பற்றிக் கூறலாம்। சேவியருடானான பதிவுத் தகவல் பரிமாற்றங்கள் தான் இந்த நேர்காணலுக்கு வழிவகுத்தது எனலாம்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட,அநேக இந்தியர்களால் அறியப்படாத ஒரு சமுதாயம் பற்றிய குறிப்பாகவும் அவருடைய நேர்காணல் அமைந்துள்ளது। அந்த நேர்காணலை இங்கு தருகிறேன்। படத்தை சொடுக்கியும் பார்க்கலாம்।

உங்கள் ‘மல்லியப்பு சந்தி’ கவிதை நூலின் பாடுபொருள் என்ன?

ஒரு உழைப்பாளர் வர்க்கத்தின் வாழக்கைப்பரிமாணத்தையும் அதன் வலிகளையும், அவலங்களையும் பாடுபொருளாகக் கொண்டதே ‘மல்லியப்பு சந்தி’ ஆகும்। இதில் முக்கிய விடயம் இந்த உழைப்பாளர் வர்க்கம் யார் என அடையாளம் கண்டு கொள்வதில்தான் இருக்கிறது।இலங்கையில் மத்திய மலைநாட்டுப் பகுதிகளிலும் தென்பகுதியிலும் தேயிலை இறப்பர் தோட்டங்களில் ‘தினக்கூலிகளாக’ வேலைசெய்யும் தொழிலாளர்களும் அவர்கள் சார்ந்த சமூகமும்தான் ‘மல்லியப்பு சந்தி’ எடுத்துக்காட்டும் மக்களாகும். இவர்கள் ஏறக்குறைய 220 ஆண்டுகளுக்கு முன்பு தெனிந்தியாவிலருந்து குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து (திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர்) ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இந்திய அரசாங்கத்தின் ஒப்புதலோடு அழைத்துவரப்பட்டு கூலிகளாக அமர்த்தப்பட்டுள்ளனர். 

என் பாட்டனார் இவ்வாறு வந்தவராவார். இவர்கள் இலங்கைக்கு நடக்கவைத்தே அழைத்துவரப்பட்டனர் என்றும் அவ்வாறு வருகையில் பசியினாலும், நோயினாலும் பாதைகளிலேயே செத்து மடிந்ததைச் சொல்லும் சோக வரலாறும் உண்டு. (பதிவு- மரணத்தில் தொடங்கும் வாழ்வு- மல்லியப்பு சந்தி). இவர்கள்தான் இலங்கையில் பெருந்தோட்டங்களை உருவாக்குவதற்கு உதிரத்தைக் கொடுத்துள்ளனர். இவர்களின் வாழிடமாக 10 ஒ 12 அடிகள் பரப்பளவான அறைகளைக் கொண்டதான தொடர் ல(h)யங்கள் வழங்கப்பட்டன. இன்றும் கூட ழுழு குடும்பமுமே அந்த அவலம் நிறைந்த லைன் அறையில் வாழந்து கொண்டு ( பதிவு – வரையப்படாத லைன்கள் - மல்லியப்பு சந்தி) தினக்கூலிகளாக இருக்கிறார்கள் என்பது அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிற மிகப்பெரிய மனித அவலமாகும்.

இந்த மக்கள் எல்லோரும் தமிழர்களா? அவர்களின் இலங்கையின் குடியுரிமை நிலை என்ன?

இவர்களுள் 99வீதமானோர் தென்னிந்திய தமிழர்களே. ஏனையோர் மலையாளிகள் மற்றும் தெலுங்கர் ஆவர். இலங்கையில் அரசியலமைப்பின் பிரகாரம் அங்கு வாழும் மக்கள் தொகையினரின் அளவின்படி இனங்களுக்கு இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில் சிங்களவர் (01), இலங்கை தமிழர் (2), முஸ்லீம்கள் (3), இந்திய தமிழர் (4) ஏனையோர் (5) எனவும் பாகுபடுத்தப்பட்டுள்னர். அரச பொது படிவங்களில் ‘இனம்’ என ஒதுக்கப்ட்டிருக்கும் கூட்டில் நாம் (4) என பதிதல் வேண்டும். அந்தளவுக்கு இந்திய வம்சாவளி தமிழர்கள் தனியொரு இனமாக தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளோம். இதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பூர்வீகமாக வாழும் இலங்கை தமிழர்கள் (2) என குறிப்பிடுதல் வேண்டும். இவர்களை மையப்படுத்தியே ஈழப்போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் பொதுவான வழக்கில் “ஈழத்தமிழர்கள்” என்றும் இந்திய வம்சாவளி தமிழர்கள் “ மலையகத் தமிழர்கள்” என்றும் அழைக்கப்படுகிறார்கள். இனத்தால், மொழியால், பண்பாட்டினால், மதவழிபாடுகளால் (பெருமளவில் இந்துக்கள், அடுத்து கிறிஸ்தவர்கள்) இவர்கள் ஒட்டுமொத்தமாக தமிழர்களே. ஆனால் இவர்கள் வேறுபடுவது “இலங்கையின் குடிமக்கள்” என்ற விடயத்தில்தான்.

இலங்கையில் உள்ள ஏனைய இனங்களில் இருந்து மலையகத்தமிழர்கள் வேறுபடுவது இவர்கள் இன்றும் குறித்த ஒரு சட்டத்தின் கீழ் இலங்கையில் வதிவிட பிரஜைகளாக ( By Registration) பதியப்பட்டிருப்பதுதான். குடியுரிமை (By Decent) உள்ளவர்களாக இல்லை. இவர்களின் பதிவுக்காக இவர்களுக்கு ஒரு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அது கிழிந்தாலோ, தொலைந்தாலோ இம்மக்கள் கிழிந்த அல்லது தொலைந்த பிரஜைகள்தான். அதன் பின் தங்களை அடையாளப்படுத்த பல பிரயத்தனங்களை செய்யவேண்டியிருக்கும். அந்த பிரயத்தனங்களில் தோற்றுப்போன எத்தனையோ பாமரமக்கள் அவர்களின் பிள்ளைகள் அநாதைகளாக வாழ்கின்றனர். அண்மையில் (ஆகஸ்ட் 23 2008) நடந்த மாகாண சபை தேர்தலில் கூட ஏறக்குறைய 10000 பேர் வாக்களிக்க முடியாமல் போன துரதிஸ்டமெல்லாம் நடந்துகொண்டுதான இருக்கிறது. தவிர அபிவிருத்தித்திட்டங்கள் எனும் போர்வையிலும், கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டுத்திட்டங்கள் மூலமும் மலையக மக்களின் செறிவைக் குறைக்கும் அடக்குமுறைகளும் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். (பதிவு: கூடைபுராணம், நமது கதை, விடிவு, மரணத்தில் தொடங்கும் வாழ்வு – மல்லியப்பு சந்தி)

மலையக மக்கள் குடியுரிமை பெறுவதற்கான வழிகள் உண்டா?

நிச்சயமாக உண்டு. இந்தியாவிலிருந்து இந்த மக்கள் இந்திய அரசின் உடன்பாட்டோடுதான் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்கள். பின்னர் 1948ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த அதேவருடத்தில் மலையக மக்களுக்கான இலங்கை குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டு பறிக்கப்பட்டது. இவர்கள் நாடற்றவர்களாயினர். பின்னர் அப்போதைய இந்நதிய பிரதமர் சாஸ்திரி அவர்களுக்கும் இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களுக்கும் செய்யப்பட்ட “சிறிமா- சாஸ்திரி” ஒப்பந்தம் மூலம் ஒரு தொகுதி மக்கள் இந்தியாவுக்கு மீண்டும் திருப்பிப் பெற்றுக்கொள்ளப்பட்டனர். 

இவர்கள் இன்று தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களிலும் வாழ்கிறார்கள். அதேநேரம் மலையக மக்களின் ஒரு தொகுதியினரும் இந்தியாவில் அகதியாக முகாம்களில் வாழ்கின்றனர் என்பது ஈழத்தமிழ் அகதிகள் பற்றி தெரிந்த பலரும் அறியாத செய்தி. இந்தியா திருப்பி;பெற்றுக்கொண்டாலும் இந்த மக்களுக்கான புனர்நிர்மாண பணிகளை மேற்கொள்ளாமையினாலேயே இவர்கள் அகதியாக வாழ்கின்றனர்.
நான் இந்தியா வரும்போதெல்லாம் இவ்வாறு திரும்பி வந்த எங்கள் உறவுகளை பார்க்கத் தவறுவதில்லை. என் “மல்லியப்பு சந்தி” தொகுதிக்கான முன்னுரையைக்கூட இவ்வாறு இந்தியா வந்து சேர்ந்த என் உறவுக்காரரான என் குருவிடமே பெற்றுக்கொண்டுள்ளேன் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அத்துடன் இந்த உறவுகள் இலங்கையிலிருந்து திரும்பி வருகையில் இந்தியாவை தமது தாய்நாடாக கருதி பெற்றதாயைக் கூட அங்கே தவிக்கவிட்டு வந்த அவல நிலையும் உண்டு.(பதிவு- பொட்டு, மீண்டும் குழந்தையாகிறேன்- மல்லியப்புசந்தி).
மலையக மக்கள் குடியுரிமை பெறுவதற்கான ஒரே வழி அவர்கள் இலங்கையின் குடியுரிமையாளர்களாக பிரகடனப்படுத்தப்படவேண்டியதுதான். இதற்காக சான்றிதழ் வழங்கப்படகூடாது. இதனை இலங்கை அரசாங்கமே செய்யவேண்டும். இதற்காக இந்திய அரசு தனது அழுத்தத்தைக் கொடுக்கவேண்டும். அதனைச் செய்யவேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு உண்டு. இப்போது இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் 15 லட்சம் பேறும் இலங்கையின் வதிவிடபிரஜைகளாகவும் இந்திய பிரஜையாக அல்லாமலும் இந்து சமுத்திரத்தில் தத்தளிக்கும் “பார்க்கு நீரிணை”பிரஜைகளாகவுள்ளனர். இந்தியா எங்களைத் திருப்பிப்பெறவேண்டாம். குறைந்த பட்சம் இலங்கை குடியுரிமையாளர்களாக பிரகடப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையாவது செய்யவேண்டும் என்பதுதான் இந்த மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இலங்கை எழுத்தாளர்கள் என்றாலே “ஈழப்பிரச்சினையையும்” அதன் பாதிப்புக்களையும் தான் எழுதுவார்கள் எனும் நிலை தமிழகத்தில் உண்டு. அதன் காரணம் என்ன நினைக்கிறீர்கள்?
நான் மேலே சொன்ன விடயங்கள் பற்றிய தெளிவின்மை ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது ஈழப்பிரச்சினையின் வியாபகமாக இருக்கலாம். 

அதேநேரம் மலையக மக்களுக்கும் ஈழப்பிரச்சினைக்கும் தொடர்பில்லை என சொல்லிவிடமுடியாது. ‘தமிழர்கள்’ என்ற பொது அடையாளத்தினால் ஈழப்பிரச்சினையின் பாதிப்புக்களில் மலையக மக்களும் அடங்குகின்றனர். மலையகத் தமிழர்களில் ஒரு பகுதியினர் 1970களில் இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் குடியேறிவாழ்கின்றனர். 

அவர்கள் நேரடியாக யுத்தத்தினால் பாதிப்படைகின்றனர். தவிர நான் சொன்ன பிரஜாவுரிமை பிரச்சினை காரணமாக ஆள் அடையாள அட்டை வழங்கப்படாத அல்லது அடையாள அட்டை இருந்தாலும் தமிழர்களென்ற காரணத்தினால் சந்தேகத்தின் பேரிலும் ஏராளமான மலையக இளைஞர் யுவதிகள் ஈழப்பிரச்சினையின் பெயரில் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுகின்றனர்.

மலையக மக்களின் வாழ்க்கையைபற்றி மட்டும் பாடுவது ஈழம் என்ற முதன்மை பிரச்சினையின் தீவிரத்தை நீர்க்கச்செய்யாதா?

நிச்சயமாக இல்லை. பாரதி சாதியத்துக்கு எதிராகவும் பெண்விடுதலைக்காகவும் பாடியதனால் அதேகாலத்தில் அவனது சுதந்திரத்துக்கான பாடுகை நீர்த்துப்போனதா என்ன? முதலில் ஈழத்து தமிழ் இலக்கியம் பற்றி புரிந்துகொள்ளுதல் வேண்டும். பேராசியர் கா.சிவத்தம்பி அவர்கள் இப்படி கூறுகிறார். ‘ஈழத்து இலக்கிய நதி என்பது பல ஓடைகளின் சங்கமிப்பாகும். இதில் யாழப்பாணம் வரும், மட்டக்களப்பு வரும்,( வடக்கு, கிழக்கு) கொழும்பு வரும், இஸ்லாமிய வாழ்க்கை வரும், மலையக வரும். இந்த எல்லா ஓடைகளினதும் சங்கமிப்புதான் ஈழத்து தமிழ் இலக்கிய நதியின் பிரவாகமாகும்’.(மூலம்- ‘மல்லியப்பு சந்தி’ இறுவட்;டு அறிமுக உரை).எனவே ஈழத்து இலக்கியப்பபரப்பில் மலையக இலக்கியத்துக்கு தனியான ஒரு இடமுண்டு. மலையக இலக்கியம் என்று வரும்போது மலையக மக்களின் வாழ்க்கையையும் வலிகளையும் பாடுவதுதான பொருந்தும். அதுதானே சரியானதும் கூட. 

அதனையே மல்லியப்பு சந்தி யும் செய்கிறது. அதே நேரம் பொதுப்படையான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் நாம் பாடாமலில்லை. (பதிவு:- வேள்வி தீயொன்று வேண்டும், பிரிவு, - மல்லியப்பு சந்தி)அடிப்படையில் குடியுரிமை என்ற கோவணத்தடனாவது வாழும் இலங்கைத் தமிழர்கள்களோடு வாழும் மலையக மக்கள் அந்;த குடியுரிமை என்ற கோவணம் கூட இல்லாமல் நிர்வாணமாக நிற்கையில் அதுபற்றி தனியாக பேசுவது, பாடுவது எந்தவகையிலும் ஈழப்பிரச்சினையை நீர்க்கச்செய்யாது என நினைக்கிறேன். ஈழப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட ‘திம்பு கோட்பாட்டில்’ (பூட்டான் நாட்டில் நடைபெற்றது) இந்தியா வம்சாவளி மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படவேண்டும் எனும் கோரிக்கை தமிழர் தரப்பில் முன்வைக்கப்பட்டமையை நன்றியுடன் நினைவு கூரக்கடமைப்பட்டுள்ளேன்.

இலங்கையில் மலையக மக்களின் நாட்கூலி 170 ரூபா அரிசி 65 ரூபா என்று அறிகிறோம். இந்த நிலை தமிழர்களுக்கு மட்டும் தானா?

இல்லை. விலைவாசி உயர்வு என்பது எல்லோருக்கும் பொதுவான பிரச்சினைதான். ஆனால் மலையக மக்களுக்கான பிரச்சினை வருவாய் சம்பந்தப்பட்டதுதான். ஏனைய சமூகங்களைவிட இந்த மக்களின் வருவாய் அளவு மிகக்குறைவாகும். மலையகத்தமிழர் பதினைந்து லட்சம் பேரில் 90 வீதமானோர் தொழிலாளர் சார்ந்த குடும்பங்களாகும். ஏனையோர் அரச, தனியார் துறைகளிலும் வியாபாரத்துறையிலும் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளி ஒருவருக்கான நாளொன்றுக்கான அடிப்படை சம்பளம் 170 ரூபா. சராசரியாக ஒரு குடும்பத்தில் ஐந்துபேராகும். குடும்பத்தலைவன், தலைவி இருவரினதும் உழைப்பு ஒருநாளைக்கு 340 ரூபா (இந்திய மதிப்பில் 125ரூபா). இப்போது இந்த குடும்பத்தின் உணவு கல்வி, சுகாதாரம் ஏனைய நலன்களின் நிலையை நீங்களே புரிந்துகொள்ளலாம். (பதிவு – ஒப்பந்தம்- மல்லியப்பு சந்தி)

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகமக்கள் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?

இலங்கைப்பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் சிலரினது அரசியல் விளையாட்டுக்களை தவிர்த்து விட்டுப்பாரத்தால் தமிழக மக்களிடையே இருக்கும் ஆத்மார்த்தமான ஆதரவினையும் பற்றுதலையும் எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடமுடியாது. அதனையும் தாண்டி உங்கள் சட்டவரையறைக்குள் என்ன செய்யலாம் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் மலையக மக்கள் தொடர்பில் தமிழக மக்கள் அறிந்து கொள்ளவேண்டும் என எதிர்பாரக்கிறோம். நாங்கள் நேரடியாக தமிழகத்தில் உறவுகளைக் கொண்டுள்ளதோடு இன்றும் கூட இந்திய வம்சாவளியினர் என்றே பதியப்பட்டும் அழைக்கப்பட்டும் வருகிறோம். இந்தியாவின் ஆதரவை நாங்கள் எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லாமலில்லை. 

தமிழக வணிக சஞ்சிகை ஒன்று 10 வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பு எழுதியிருந்தது. அதில் ‘இலங்கையில் மலைசாதி மக்கள் ஒரு தொகுதியினர் வாழ்கின்றனர். அவர்களும் தமிழ்தான் பேசுகிறார்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தது கண்டு மனம் நொந்துபோனேன். இந்திய வம்சாவளி தமிழர்களாக மலையக மக்கள் என தமது தேசியத்தை வலியுறுத்தி நிற்கும் ஒரு சமூகத்தை இது கேவலப்படுத்தும் செயலாகும். நடைமுறையில் தங்கள் வீட்டுசுவரில் காந்தி முதல் எம்.ஜி.ஆர் வரை படமாக தொங்கவிட்டுக்கொண்டும் ‘வடிவேலு’வின் பேச்சு நடையை ஒப்புவித்துக்கொண்டும், மலையக தமிழரான முரளிதரன் பந்து வீசும்போது கூட அதற்கு டெண்டுல்கர் சிக்ஸர் அடிக்கவேண்டும் என ஆசைப்பட்டுக்கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி தமிழர்களை இந்தியா அடையாளம் காணாமல் இருப்பது துரதிஸ்டமே. இந்தியாவில் மலையக தமிழர்கள் இன்றும் ‘அகதியாக’ வாழ்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களெனில், இலங்கையில் எமக்கு குடியுரிமை கிடைக்கவேண்டும் என வலியுறுத்துவீர்களெனில் அதுவே நீங்கள் எமக்கு தரும் தார்மீக ஆதரவாகும். 
இந்தியா மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையின் எதிர்பார்ப்பும் இதுவேயாகும்.

ஒட்டுமொத்தமாக மலையக மக்களின் வாழ்க்கை தரம் உயர என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?

இயல்பான போக்கில் அயராத முயற்சியினால் இந்த மக்கள் தமது வாழக்ககைத் தரத்தை உயர்த்த முயற்சித்துக்கொண்டுதான இருக்கிறார்கள். இப்போது கணிசமான அளவில் படைப்பாளிகள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள்,ஒரு சில பேராசியர்கள் என விரிந்து செல்கிறார்கள். இலக்கியதுறையில் காத்திரமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளனர். ஆனால் அரசியல் ரீதியாக காத்திரமான தலைமைத்துவத்துக்கான தேவை நிலவுகிறது. அரசியல் ரீதியாக பலம் உறுதிப்படுத்தப்படுகின்றபோது வாழ்க்கைத்தரம் உயர வாயப்புகள் இருக்கின்றன. அதற்கு ‘குடியுரிமை’ என்கிற பிரகடனம் இன்றியமையாதது. இல்லாத பட்சத்தில் இந்த வளர்ச்சி இரட்டிப்பாக இன்னும் இருநு}று ஆண்டுகள் தேவைப்படலாம்.

சந்திப்பு: சேவியர்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates