சந்திரசேகரன் |
எளிமை, பழகும் பண்பு, ஆளுமை, பேச்சில் தொனிக்கும் அக்கறையெல்லாம் அவரது தலைமைப் பண்புக்கு வலுவூட்டும் பல்வேறு தகைமைகள். சிறந்த பேச்சாற்றல் வேண்டுமென்றே பழகுபவர்களிடம் ஒரு இடைவெளியை உருவாக்கிக் கொள்ளும் தலைவர்களிடையே அவரை தனித்து அடையாளப்படுத்தியது அந்தப் பண்புதான்.
அவர் இப்போது எம்முடன் இல்லை. மறைந்து ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் எம் மக்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் அமரர் சந்திரசேகரன்.
மலையக மக்களுக்காக மட்டும் குரல் கொடுக்கவில்லை. உலகில் தமிழ் மக்கள் எங்கெங்கு வாழ்கிறார்களோ ஒடுக்கப்படுகிறார்களோ அவர்களுக்காக மலையக மண்ணிலிருந்து குரல் எழுப்பியவர் அமரர் சந்திரசேகரன்.
1980ம் ஆண்டு கொட்டகலை பகுதியிலுள்ள தோட்டமொன்றில் முகாமையாளராக நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்து பேசுவதற்காக அங்கு வந்திருந்த துடிப்புமிக்க அந்த இளைஞனைப் பார்த்ததும் அவரிடம் பேச வேண்டும் என தோன்றியது. என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியபோது அவரது பேச்சில் ஒரு உறுதியும் வீரமும் தெரிந்தது. இ. தொ. காவின் இளைஞர் அணித் தலைவராக அந்த மக்களுடன் மிகவும் எளிமையாகப் பழகி, அவர்களின் பிரச்சினைகளை மிகவும் உன்னிப்பாக கேட்டு அவற்றுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதில் முனைப்பாக இருந்தார். அவரைப் போன்ற இளைஞர்கள்தான் மலையகத்திற்கு தேவை என்பதை அமரர் செளமியமூர்த்தி தொண்டமானும் நன்கு உணர்ந்திருந்தார்.
அந்த இளைஞரின்பால் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன் என்றே கூறவேண்டும். இ. தொ. கா.வின் கொள்கைகள், அதன் நடவடிக்கைகளில் அதிருப்தியுற்ற அவர் அதிலிருந்து வெளியேறி மலையக மக்கள் முன்னணியை ஸ்தாபித்தார்.
மலையக இளைஞர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள் அனைவரும் அவரின் பின்னால் அணிதிரண்டனர். தலவாக்கலை நகரம் தொழிலாளர்களின் போராட்ட மையமாகவே இன்றும் கணிக்கப்படுகிறது. அங்கிருந்துதான் பலர் தொழிற்சங்க அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். நாட்டில் இனப் பிரச்சினை தலை தூக்க ஆரம்பித்து வடக்கு கிழக்கில் மட்டுமல்லாது மலையகப் பகுதிகளில் தமிழ் மக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் சந்திரசேகரன் அரசியலில் பிரவேசித்தார்.
வடக்கு கிழக்கில் ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்தபோது மலையகம் உட்பட தென் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்களும் பாதிக்கப்பட்டார்கள். 1983 ஜுலைக் கலவரத்தில் முழு நாட்டிலுமிருந்த தமிழர்கள் சொல்லொணா துயரங்களுக்கு ஆளானார்கள். இந்நிலையில் சந்திரசேகரனின் அரசியல் பிரவேசம் மலையக மக்களுக்கு உறுதுணையாக இருந்தது. இன ஒடுக்குமுறைக்கெதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.
வடக்கு கிழக்கில் ஏற்பட்ட போர்ச் சூழல்கள் அதனால் தமிழ் மக்கள் படும் துயரங்களுக்காகவும் குரல் கொடுத்ததுடன் அவரது செயற்பாடுகள் குறித்து சந்தேகம் கொண்ட அப்போதைய அரசாங்கம் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்து. மூன்று வருடகால சிறைவாசம் அனுபவித்த அவர் சிறையில் இருந்து கொண்டே 1993 ஆம் ஆண்டில் நடைபெற்ற மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
சிறையிலிருந்து வெளியேறிய அமரர் சந்திரசேகரன் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினார். அமரர் சந்திரசேகரனின் ஒரே ஒரு வாக்கை கொண்டு 1994 ஆம் ஆண்டில் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கும் அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்ப முடிந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்படி வீடமைப்பு பிரதி அமைச்சராக சந்திரசேகரன் நியமனம் பெற்றார். அவரது ஒரே ஒரு வாக்கு பலம் காரணமாக அவருக்கு அமைச்சரவை பதவி ஒன்றை கோர முடிந்த போதிலும் அவர் பதவி ஆசையை கைவிட்டு பொதுமக்களின் தேவையான குடியிருப்பு வசதிகளை பெற்றுத் தர முன்வந்தார். இதனைத் தொடர்ந்து அவர் தோட்டப்புற வீடமைப்பு பிரதி அமைச்சராக பதவி பெற்று மலையக மக்களுக்காக தனது பணியை ஆற்றினார். இக்காலகட்டத்தில் மட்டும் வீடற்ற மலையக தோட்டப்புற மக்களுக்க 40,000 க்கும் மேற்பட்ட தனியான வீடுகளை பெற முடிந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத் தேர்தல்களின் போது நுவரெலியா மாவட்டத்தின் உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு தொடர்ச்சியாக அவர் தெரிவானார்.
மலையக மக்களுக்காக பாடுபட்டு உழைத்த ஒரு மகத்தான தொண்டனாக அமரர் சந்திரசேகரன் விளங்கினார். இவருடன் நான் வைத்திருந்த தொடர்பு மூலமாக மலையக தோட்டப்புற மக்களின்பால் அன்பை செலுத்திய கருணை இதயம் கொண்ட ஒரு மனிதராக நான் அமரர் சந்திரசேகரனை காண்கிறேன்.
மலையக மக்களின் தொண்டனாக அம் மக்கள் சமூகத்திலிருந்து தெரிவாகிய அமரர் சந்திரசேகரன், மக்களின் பிரச்சினைகளை தனது அமைச்சின் அலுவலகத்தில், தொழிற் சங்க அலுவலகத்திலும் தனது வீட்டிலும் கூட சற்றும் ஓய்வில்லாமல் அவற்றையெல்லாம் கேட்டறிந்து அதற்கு தீர்வுகாண எப்போதும் முற்பட்டார். மலையக மக்களின் பிரச்சினைகளையும் ஏனைய பொது காரணங்களையும் நன்றாக இனங்கண்டு அதற்கு பரிகாரம் தேடி அம் மக்களின் மகிழ்வு, வேதனைகள், துக்கங்கள் போன்றவையுடன் கலந்துகொள்ளும் மனப்பக்குவம் அவரிடமிருந்தது. தனது வழியை ஒருபோதும் மறக்காத இவர் தேசிய அரசாங்கத்தின் ஒரு அமைச்சராக இருந்தபோதிலும் இவர் உண்மையான மக்களின் தொண்டன் என்று கூறுவது மிகவும் பொறுத்தமாகும்.
அமைச்சராக இருந்த போதிலும் ஏனைய தொழிற்சங்கத் தலைவர்களுடனும், மாற்றுக் கருத்து கொண்டோருக்கும் எதிராக பாகுபாடு காட்டியதில்லை. மலையக தோட்டப்புற மக்களுக்கு மட்டுமல்ல, அதை அண்மித்த கிராமப்புறங்களுக்கும் பாகுபாடின்றி சிறந்த சேவையை வழங்குமாறு தனது அமைச்சின் ஊழியர்களுக்கும், உத்தியோகத்தர்களுக்கும் பணிப்புரை வழங்கி இருந்தார். அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களை தொடங்கும் வைபவங்களின் போது அமைச்சருடன் நானும் இணைந்து செயல்பட்டுள்ளேன். அத்தருணங்களில் மக்கள் இவரைப் பாராட்டி வரவேற்பு அளித்ததை என்னால் ஒருபோதும் மறந்துவிட முடியாது.
இவரின் பேச்சைத் தொடர்ந்து ஏனைய தொழிற் சங்கங்களைச் சேர்ந்த பல்வேறு நபர்கள் சுயேட்சையாக அவரின் தொழிற் சங்கத்தில் பின்னர் இணைந்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சமுதாய அபிவிருத்தி மற்றும் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சராக 2006-08-26ம் திகதி பதவியேற்ற பின் தி(ளிகி8rதில் சில பட்டதாரிகளைக் கொண்டு நினைக்கும் டாங்குகள் என்ற வேலைத்திட்டத்தை அமுல்படுத்தி சமூகத்திற்கு பணியாற்ற முன்வந்தார். இதன் மூலம் மலையக தோட்டப்புற மக்களின் தேவைகளை கண்டறியவும், அது குறித்து தனக்கு ஆலோசனை வழங்கவும் திட்டம் ஆரம்பித்திருந்தார். மாதமொருமுறை கூடும் இக்கமிட்டியின் அழைப்பாளியாக நான் கடமைபுரிந்துள்ளேன்.
மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை ஸ்தாபித்தல் மலையகத்திலிருந்து தெரிவாகும் பட்டக் கல்வி பெறும் பொருளாதார வசதியற்றவர்களுக்கு வசதியளிக்க கல்வி நம்பிக்கை நிதியம் ஒன்றை ஆரம்பித்தல், தேசிய அடையாள அட்டைகள் இன்றி இருக்கும் மலையக தோட்டப்புற மக்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கும் நடமாடும் சேவை ஆரம்பித்தல், மலையக தோட்டப்புற மக்களின் வறுமையை ஒழிக்கும் கட்டமைப்பு திட்டங்களை ஆரம்பிக்கும் திட்டங்கள், பத்தனை, சிவனொளிபாத கல்லூரியில் சமூக அபிவிருத்தி தொடர்பாக டிப்ளோமா பாடநெறி ஒன்றை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கை எடுப்பது, மலையக தோட்டப்புற பகுதிகளில் பிரதேச செயலகங்களை ஆரம்பிப்பது, மலையக தோட்டப்புற பகுதிகளில் கலாசார மற்றும் சமூக நடவடிக்கைகளை விருத்திசெய்வது, தோட்டப்புற பகுதிகளில் சமூகத்தை முன்னெடுக்கும் அமைப்புகள் ஆரம்பிப்பது, தோட்டப்புற பகுதிகளில் ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களின் நடவடிக்கைகளை விருத்தி செய்வது, மலையக தோட்டப்புற மாணவர்களை அதிக அளவில் பாகுபாடின்றி பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக்கொள்வது என பல்வேறு திட்டங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்கள் மத்தியில் மலையகம், வட கிழக்கு என்று வேறுபாடுகள் இருக்க முடியாது. சகல மக்களும் சமமாக சமாதானத்துடன் வாழும் ஒரு பிரஜைகளாக இருக்க வேண்டுமென விரும்பினார்.
நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் மலையக தோட்டப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வந்தமையை எவராலும் மறுதலிக்க முடியாது.
நாடு சுதந்திரம் பெற்று 60 வருடங்களை கடந்துள்ள போதிலும் இன்றும் இம் மக்கள் அடிமைகளாக லயன் வாழ்க்கையில் நசுக்கப்பட்டிருப்பதை அகற்றி தோட்டப்புற மக்களுக்கு ஒரு சுமுகமான வாழ்க்கையை உருவாக்க பிரதான அரசியல் அலையில் சேர்ந்து உண்மையாக பாடுபட்டு போராடியவர் அமரர் சந்திரசேகரன்.
அமரர் சந்திரசேகரனைப் போன்ற ஒரு ஆளுமைமிக்க தலைவரை இனியும் காணமுடியுமா என்ற கேள்வி எம் மக்கள் மத்தியில் எழாமல் இல்லை. மலையகம் சிறந்த தலைவனை இழந்து தவிக்கிறது. அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
நன்றி - தினகரன்
நன்றி - தினகரன்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...