Headlines News :
முகப்பு » , » “ஊற்றுக்களும் ஓட்டங்களும்": நூல் பற்றி ஒரு விமர்சனக் குறிப்பு கலாநிதி ந. இரவீந்திரன்

“ஊற்றுக்களும் ஓட்டங்களும்": நூல் பற்றி ஒரு விமர்சனக் குறிப்பு கலாநிதி ந. இரவீந்திரன்


லெனின் மதிவானத்தின் பாக்கியா பதிப்பகத்தின் வெளியீடான இந்நூல் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. அவ்வவ்போது அவர் படித்துக் கொண்டிருந்த நூல்கள் குறித்து, அல்லது அவரை பாதித்த விடயம் தொடர்பாக எழுதப்பட்டன இவை.

பல்வேறு கதம்பங்களின் தொகுப்பாக அமைந்த போதிலும் நுனித்து நோக்கும் போது அவற்றுக்குள் இழையோடும் மையச்சரடு ஒரு தொடர்  ஒழுங்கமைப்பை ஏற்படுத்தியுள்ளமை தெளிவு. வௌ;வேறு இதழ்களில் இவை எழுதப்பட்டிருப்பினும், பெரும்பாலானவை ‘முச்சந்தி’ இணைய இதழில் வெளிவந்தன் குறிப்பாக மலையக சமூக உருவாக்கச் செல்நெறியோடு தொடர்பாடலை  மேற்கொள்வதாக அமைந்தது ‘முச்சந்தி’.

அந்தவகையில், தவிர்க்கவியலாதவகையில் லெனின் மதிவானத்தின் எந்தவொரு தேடலும் மலையக மக்களின் அசைவியக்கம் - விடுதலை என்பன சார்ந்ததாயே அமைவது இயல்பு. மலையகத்தைக் கடந்து கைலாசபதி - பாரதி - தகழி சிவசங்கரபிள்ளை - மார்க்சின் கோர்க்கி எனப் பார்வை விசாலமடைந்து செல்லும்போது கூட, அந்த ஆளுமைகள்  எல்லாம் மலையக விடிவிற்கு இட்டு வரப்படும் எத்தனிப்பாக அமைவன. இது குறுந்தேசியலாதமாய் ஆகிவிடாமல் புரட்சிக்கர பாட்டாளி வர்க்க சர்வதேச உணர்வு சார்ந்ததாக அமைந்துள்ளமை கவனிப்புக்குரியது.

மலையகம் இன்று நாலாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது போலதான் ஆரம்ப முதலாக இருந்து வந்துள்ளதா? இல்லை, புரட்சிகர தேசிய உணவு முதல் நிலையில் இருந்து பின்தள்ளப்பட்ட ஒரு வரலாறு மலையகத்திற்கு உண்டு. அது போதியளவு கவனிக்கப்படுவதில்லை. அவ்வாறு வீறு கொண்ட எழுச்சிக்குரியதாக அமைந்த முப்பதுகளின் ஆளுமைகளான நடேசய்யர் - மீனாட்சியம்மாள் தம்பதியரில் முன்னையவர் பெற்ற முக்கியத்துவம் அளவுக்குப் பின்னையவர் கவனிப்பைப் பெறுவதில்லை; வெற்றிகரமான ஆணுக்குப் பின்னால் துணை நின்ற பெண்ணாகப் பார்க்கும் அவலம் காணப்படுகின்றது. சில விடயங்களில் மீனாட்சியம்மாள் தனது துணைவரையும் விஞ்சிய சாதனைகளுக்குரியவர் என்பதை இந்நூல் வெளிப்படுத்தி நிற்கின்றது.

அந்தவகையில், மலையகம் குறித்த சில புதிய பரிமாணங்களை மீனாட்சியம்மாள் முதல் மார்க்சின் கேர்ர்க்கி வரையானோர் பற்றிய பார்வை விசாலிப்புகள் வாயிலாக கண்டறிய இந்நூல் வழிகோலும். ஒவ்வொரு கட்டுரையிலும் வெளிப்படையாகவே இத்தலைப்புக்குரிய விளக்கத்தை தேடி அல்லற்படத்தேவையில்லை; அவை ஒவ்வொன்றும், முன்னர் குறிப்பிட்டவாறு அவ்வவ்போதைய உந்துதலில் எழுதப்பட்டன. முழுமையாக படித்து உட்செரித்து மனதில் மீட்ருவாக்கம் செய்யும் போது இந்த பொது நிலை மேற் கிளம்பி வரக் காண இயலும்.

முப்பதுகளில் மலையக எழுச்சி நிலையில் முதல் தரமாய் இருந்தது எனக் குறிப்பிட்டது தொடர்பில் சில வார்த்தைகளை முன்வைப்து இங்கு அவசியம். அப்போது தொழிலாளர்களின் எழுச்சியிலும் தேசிய விழிப்புணர்விலும் சிங்கள மக்கள் மலையக மக்களை விட முன்னிலையில் இல்லையா? இலங்கை தமிழ் தேசிய எழுச்சிக்குரிய வடக்கு - கிழக்கு தமிழர் நிலை மலையகத்துக்குப் பின்தங்கியதாக இருந்ததா? அவ்வாறு தான் என்பதை இது வரை கவனியாது இருந்தோம் என்பது அதிர்ச்சிக்குரியதே அல்லாமல் பட்டவர்த்தனமான இந்த உண்மையில் ஆச்சிரியம் கொள்ள வேண்டியதில்லை.

சுதந்திரத்திற்கு பிந்திய இலங்கையில் வடக்கு - கிழக்கு சார்ந்த இலங்கை தமிழ் தேசியம் ஏகாதிபத்தியத்திற்கு காட்டி கொடுக்கும் மனப்பாங்கோடு எழுச்சிக் கொள்ள தொடங்கியதிலிருந்து எண்பதுகளில் போர் குணந்துடன் முன்னிலை அடைந்து வளர்ந்தது உண்மை. துப்பாக்கி ஏந்தாத பிரபாகரன் - உமா மகேஸ்வரன் ஸ்ரீ சபரத்தினங்களான ஜிஜி - செல்வா - அமீர் ஆகியோரின் அடிச்சுவட்டில் துப்பாக்கி ஏந்திய ஜிஜி ஃ அமீர் படிமமான பிரபாகரன் இறுதியில் அவலமான துன்பியல் முடிவுக்கு தமிழ் தேசியத்தை இட்டுச் சென்றமை முதல் கோணல் முற்றும் கோணல் வகையறாவுக்குரியது; தனிநபர் தவறுகளுக்கும் அப்பால் அதன் ஏகாதிபத்திய ஐந்தாம் படைக் காட்டிக் கொடுப்புக் குணாம்சத்துடன் தொடர்புடையது அது. இன்றுவரை அந்த சுரத்தேயில்லாமல் பிற்போக்கு நிலைபட்டதாகவே இலங்கை தமிழ் தேசியம் !

அதற்கு விட்டு கொடுப்பு அற்ற எதிர்பார்பைக் காட்டி தமிழ் இடதுசாரிகள் போராடிய வேளையில் ஒடுக்கப்பட்ட மக்களின் சாதி தகர்ப்புகளுக்கான கோரிக்கைகளை உள்ளடக்கியதான பன்னையடிமை தகர்ப்பு தேசிய கடமையை நிறைவு செய்யும் வரலாற்று பணி கையேற்கப்பட்டது; அதே வேளை தேசிய இனங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகவும் போராடி இருக்க வேண்டும் தான்; அவ்வாறு போராடவில்லை என்பதாற்றான் தமிழ் தேசியம் பிற்போக்கு நிலையில் வளர்ந்தது என்பதற்கில்லை.  ஒடுக்கபட்ட மக்களின் தேசிய போராட்டத்திற்கு எதிராக தமிழ் தேசியம் வளர்ந்ததால் அதற்கு எதிரான தவிர்க்கவியலாத நிலைபாடு எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட நிலைமை காரணமாகவே சுய நிர்ணய உரிமை குறித்த அவசியமான போராட்டங்களை கைவிட்டனர் தமிழ் இடது சாரிகள்.

இவ்வாறு தமிழ் இனவாதத்திற்கு எதிரான கடுமையான போராட்டத்தை தமிழ் இடதுசாரிகள் முன்னெடுத்தபோது சிங்கள இடதுசாரிகள் தமிழ் தேசியத்தின் ஏகாதிபத்திய சார்பைத் தாமும் எதிர்பார்ப்பவர்களாய் இருந்தனரேயல்லாமல், வளர்ந்து வந்த சிங்களப் பேரினவாத்திக்கு எதிராக உருப்படியான எந்தவொரு விமர்சனத்தைக் கூட முன்வைக்கத் தவறினர்; பின்னர் சிங்கள பேரினவாத்திற்கு எதிராக சரியான வழிமுறையில் போராட எவர் இருப்பார்? இந்த தவறு கண்டுகொள்ளப்படாத அளவில் சிங்கள தொழிலாளர் வர்க்கமும் முற்போக்கு ஜனநாயக தேசிய சக்திகளும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஆரோக்கியமான பல போராட்டங்களில் முன்னேற்றங்களை எட்டிவந்தனர். அவற்றுக்கு எதிராக ஏகாதிபத்தியத்தை ஆதரித்த தமிழ் தேசியத்தை கண்டறிந்தவாறு தமிழ் இடதுசாரிகள் இலங்கை தேசிய எழுச்சிக்காக போராடுவது தவிர்க்கவியலாததாய் இருந்தது. இவ்வகையில் சிங்கள இடதுசாரிகளிடம் காணப்பட்ட இரு அம்சங்களையும் (ஏகாதிபத்திய எதிர்ப்பிலான வரலாற்று பங்களிப்பும் சிங்களப் பேரினவாத்திற்கு எதிராகப் போராட முன்வர தவறும்) கவனம் கொள்ளப்படுவது அவசியம். ஒன்றை வழியுறுத்தும் போது மற்றதை காண தவறிவிட கூடாது.

இவ்வாறு சிங்கள முற்போக்கு சக்திகள் ஏகாதிபத்திய எதிர்ப்பில் வலுபெறும்போதே சிறு தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாத சாயல் கொள்வது எனும் இரண்டக நிலை அதன் தொடக்கம் முதலாகவே இருந்து வந்த வரலாற்று நிற்பந்தமாய் இருந்து விட்டது. சிங்கள ஆதிக்க- பிரபுத்துவ சக்தி ஏகாதிபத்திய நலனோடு கூட்டுசேர்ந்திருந்போது, அதற்கு எதிராக போராட வேண்டியிருந்த சிங்கள தேசிய முதலாளி வர்க்கம் 1915 இல் முஸ்லீம் மக்களுக்கு எதிரான இனக்கலவரத்தை ஏற்படுத்தியிருந்தது; புதிதாக வரலாற்று அரங்கில் தோற்றம் பெற்ற சிங்கள வணிகர்கள்  தமக்கான போட்டியியளாளர்களாக வரலாற்றுப் பராமரியமிக்க முஸ்லீம் வணிகர்களை முகங்கொள்ள வேண்டியிருந்தது. அவ்வாறே முப்பதுகளில் சிங்களத் தொழிலாளர்கள் துறைமுகத்தொழிலாளர்களாய் நிறைந்திருந்த மலையாளிகளுக்கு எதிராக இனவாத உணர்வூட்டப்படும் நிலை இருந்தது. சுதந்திரம் சாத்தியமான கையோடு மலையகத்தொழிலாளர்களது குடியுரிமை பறிக்கபட்டபோது சிங்கள இடதுசாரிகள் உறுப்படியாக எந்த போராட்டத்தையும் பேரினவாத அரசுக்கு எதிராக மேற்கொள்ள வில்லை.

ஆக, சிங்கள இடதுசாரிகள் பேரினவாதம் மேலதிகம் பெறுவதற்கு ஏதாவதொருவகையில் துணைபோய் உள்ளனர். தமிழ் தேசியம் ஏகாதிபத்தியம் சார்பில் முடமாகியுள்ளது. தமிழ் இடதுசாரிகள் சுயநிர்ணய உரிமைக்கானப் போராட்டத்தை கவனம் கொள்ள தவறியுள்ளனர். முஸ்லீம் தேசியம் சிங்கள பேரினவாதத்துடன் கூடி குலவும் தவறுக்குட்பட்டது. இவற்றுக்கப்பால் இச்சக்திகள் தமக்கான வரலாற்று பணிகள் பலவற்றை நிறைவு செய்யும் பங்களிப்புகளை நல்கியபோதிலும், இந்த விமர்சனத்திற்குரிய பக்கங்களும் கவனிப்புக்குரியன.
இவற்றோடு ஒப்பிடுகையில், முப்பதுகளில் எழுச்சிக் கொண்ட மலையக தேசியத்திற்கான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்த மீனாட்சியம்மாள் - நடேசய்யர் பாரிய தவறேதும் சொல்லவியலா அளவிற்கு அற்புதமான வரலாற்று தொடக்கத்தை ஏற்படுத்தியிருந்தனர். தமிழகத்தில் பாரதி தொடக்கி வைத்த இந்திய தேசியம் - தமிழின தேசியம் - சாதிய தகர்ப்பு தேசியம் - பெண் விடுதலை - பூரண பொதுவுடமை என்பன சார்ந்த கருத்தியலை ஏற்று இயங்கியவர்களாக அத்தம்பதியர் திகழ்ந்தனர். இலங்கை பூராவும் அரசதிகாரங்களை கையகப்படுத்திருந்ததால் சிங்கள பேரினவாதம் பற்றிய புரிதலின்றியிருந்த முகில் நிலை, இலங்கை தமிழ் தேசியம் உருப்படியான அரசியல் அற்றதாக இருந்தது. ஏகாதிபத்திய எதிரப்;புடன் வளர்ந்து வரும் சிங்கள பேரினவாத அச்சுறுத்தலைம்; முதன்முதலில் அடையாளம் கண்டு எதிர்ப்புக் கூறலை இந்த தம்பதியர் எழுப்பியுள்ளனர். இது எவ்வகையிலும் இனவாதமாக மாறிவிடாத வகையில் முற்போக்கு குணாம்சத்துடன் கையாளப்பட்டமை விதந்துரைக்கப்பட்டதக்க அம்சம்.

இவர்களது இந்த வரலாற்று பாத்திரத்தை சிங்கள முற்போக்கு சக்திகள் அன்று ஆதரித்து அரவனைத்து இருந்தனர். பின்னாலேயே, மலையகமே மறந்துவிட்ட இவர்களை மறுகண்டுபிப்பு செய்வதற்கு காரணமாக இருந்தவர் பேராசிரியர் குமாரி ஜெயவர்தனா என்பதனை நன்றியறிதலோடு சாரல் நாடன் குறிப்பிட்டுள்ளார் (இவ்வகையில் “தேச பக்த்தன் கே. நடேசய்யரை” வரலாற்று அரங்குக்கு மீட்டெடுத்து தந்த சாரல்நாடனும், அதற்கு காரணமாக அமைந்த குமாரி ஜெயவர்தனாவும் நன்றிக்குரியவர்கள்). ஆயினும் மலையக மக்களுக்கு நியாயம் வழங்கவியலாதவகையில் சிங்கள முற்போக்கு சக்திகள் முடக்கப்படக் காரணமான வரலாற்று நெருக்கெடி நடேசய்யர் தம்பதியினரை காணாமல் ஆக்கிவிட்டது. தனியே பெருந்தோட்டதுறை தொழிலாளர் என்னும் பண்பு இருந்திருப்பின் இந்த தவறு ஏற்பட்டிருக்காது. எப்போது தமது பண்பாட்டை அழிக்கும் இந்திய விஸ்தரிப்பு வாதம் என்னும் அச்சத்தில் அல்லாடும் சிங்கள மனம் மலையக மக்களையும் ‘இந்திய’ அடையாளத்திலேயே அனுகியது. அதற்கு உரமேற்றுவதற்காக ‘இலங்கை - இந்திய காங்கிரசின்’ உதயம் அமைந்து இலங்கைத் தேசியத்தின் பகுதியாக மலையகத்தை அடையாளப்படுத்த முனைந்த இந்த தம்பதியர் முயற்சிக்கு இடையூறு இழைத்தது. நேருவின் இந்த பிரசன்னத்திற்கு எதிராக ‘நாம் இலங்கையர்’     எனும் உணர்வில் மீனாட்சியம்மாள் - நடேசய்யர் தம்பதியர் உறுதியாக இருந்தனர்.

அதனை இலங்கை - இந்திய பிற்போக்கு ஆதிக்கக் கும்பல்கள் இல்லாமல் ஆக்கி - நாடற்றவர்களாக்கி - நாடு கடத்திச் சிறுபான்மைத் தேசிய இனத்தில் கடை நிலைக்கு ஆளாக்;கி அரை நூற்றாண்டு கடந்தமையினாலேயே எழுபது ஆண்டுகளின் முந்திய முதல்நிலை ஆளுமை மறக்கடிக்கப்பட்டுள்ளது. அது குறித்த விரிவான ஆய்வுகள் வெளிவர வேண்டும். பின்னர் சிங்களப் பேரினவாதத்துக்கு எதிரான அரண் என்ற போர்வையில் மலையக மக்கள் மத்தியில் பிற்போக்கான தொழிற்சங்கத்தலைமைகள் முன்னிலைபெற இயலுமாயிற்று; அதேவேளை போர்க்குணமிக்க இடதுசாரி எழுச்சியும் ஏறத்தாழ சமநிலையில் மலையக வரலாறாக தொடர்ந்துள்ளது.

இவற்றுக்கு அப்பால் ஐம்பதாம் ஆண்டுகளிலிருந்து மூன்று தசாப்தங்களாக பண்பாட்டுத்தளத்தில் இயங்கிய இளஞ்செழியன் தலைமையிலான இ.தி.மு.க இன் பங்களிப்பும் கவனிப்புக்குரியது. சாதியத்தகர்ப்பு - தொழிலாளர் தலைமையிலான பொதுவுடமை எழுச்சி என்பவற்றோடு மலையக தமிழின தேசிய சுயநிர்ணய உரிமை வெற்றி கொள்ளல் என்னும் பன்முக பங்களிப்புகள் நிறைந்த அந்த பணி நுண்ணாய்வுக்குரியது. மீனாட்சியம்மாள், இளஞ்செழியன் ஆகியோரது பங்களிப்புகள் தொடர்பில் புதிய பரிமாணங்களை வெளிபடுத்தும் லெனின் மாதிவானம் இத்தகைய ஆய்வு களங்களையும் விரிவுபடுத்தி வெளிகொணர்வாரென நம்புவோம். மலையகத்தில் புதிதாக எழுச்சிக் கொள்ளும் மத்தியதர வர்க்கமும் கிராமச் சமூக உருவாக்க அசைவியக்கமும் அத்தியவசியமான உரு வரலாற்றுக் கட்டம்; அதேவேளை எழுபதுகளின் இறுதிவரை மலையக ஆன்மாவாக தொழிலாளி வர்க்க உணர்வு நிலை இயக்கிய ஆரோக்கியமான கண்ணோட்டம் இன்றைய புதிய மத்தியதர வர்க்க எழுத்தாளர்களால் வாலாயப்படுத்த இயலாத துயரம் ஏற்பட்டு வளர்வதும் அவதானிப்புக்குரியதாகிறது. இது குறித்த எச்சரிக்கையை இந்நூல் வலுவாக பதிவுசெய்துள்ளது.

இனவாதமும் பிராந்திய - குறுகிய நோக்கும் அற்றதாக மீனாட்சியம்மாள் - நடேசய்யர் - இளஞ்செழியன் ஆகியோர் வெளிப்படுத்திய தொழிலாளர் வர்க்க பலம் சார்ந்த விரிந்து பரந்த ஆளுமை மிக்கதான அந்த வீறுமிக்க காலகட்ட கண்ணோட்டத்தை மலையகம் மீட்டெடுக்குமா? மத்திய தர அற்பத்தனங்கள் ஒரு பக்கத்தில் ஓடித் தொலையட்டும், தொழிலாளிவர்க்க மக்கள் திரளோடு உறவாடியவாறு எமது உணர்வோட்டத்தை புடமிட்டு உருக்கு உறுதிமிக்கதாக உரமூட்டி, எமக்கான மார்க்சிய - லெனினியப் பிரயோகத்தை வளர்தெடுக்கும் போது மீண்டும் மலையகம் ஆளுமை மிக்க பங்களிப்பை நல்க இயலும்! வரலாறு ஒரு போதும் தேங்கி போவதில்லை; மலையக மக்கள் வரலாறு படைப்பதற்கான அடுத்த கட்ட ஆளுமைகளையும் வெளிக்கொணர்வர்!
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates