லயன் குடியிருப்பு |
பெருந்தோட்டத் தொழிலாளர் கள் 200 வருடங்களாக குடியிருக்கும் லயன் அறைகளையும், அவர்களின் வாழ்க்கை முறைகளில் பல விடயங்கள் மறைந் திருப்பதைக் காணலாம். லயத்து வாழ்க்கை முறையென்பது தொடர்ந்து இம் மக்கள் மத்தியில் பல சமூகப் பிரச்சினைகளை உள்ளடக்கியுள்ளது என்பதில் ஐயமில்லை.
இம்மக்களில் பெரும்பாலானோர் வறுமை, நோய், பிணி, துன்பம், செளக்கியம், சுகாதாரம், தொற்று நோய்கள், காலாசார சீர்கேடுகள், சிறுவர் துஷ்பிரயோகம், மனித உரிமை மீறல்கள், போதிய வருமான மின்மை. குறைந்த வருமானத்தில் திருப்திகாணும் நிலை, மந்த போசணை போன்ற அனைத்து பிரச்சினைகளை யும் உள்ளடக்கியதொரு வாழ்க்கை முறையாக காணப்படுகின்றன.
லயன் குடியிருப்புக்களில் வாழ்கின்ற குடும்பங்கள் தினமும் அனுபவிக்கின்ற பிரச்சினைகள் சொல்லிலடங்காதவை யாகும். லயன் அமைப்பு முறையானது ஒற்றை வரிசை லயன், இரட்டை வரிசை லயன் என ஒரு பக்கத்தில் (வரசையில்) 12 அறைகளையும், இரண்டு வரிசையில் 24 லயன் அறைகளையும் கொண்டுள்ளது. இதில் ஒரு அறையின் நீளம், அகலம் 12 x 10 (120 சதுர அடி) என்ற அளவுத் திட்டத்தில் ஆங்கிலேயர்களினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட தற்காலிக வாழ்விடங்களாகும்.
ஒரு லயன் அறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 முதல் 7 பேர் வரை வாழ்கின்றார்கள். தாய், தந்தை, சிறுவர், குழந்தை, பெரியோர், பெண்பிள்ளைகள், கர்ப்பிணிப் பெண்கள், நோயாளர்கள், கல்வி கற்கும் பிள்ளை கள், திருமண வயது இளைஞர், யுவதிகள், வயதுக்கு வரும் நிலையி லுள்ள பெண் பிள்ளைகள் என பல்வேறு வகையான உறப்பினர்கள் இந்தச் சிறிய இடப்பரப்பில் தினமும் தங்களுடைய வாழ்க்கைத் தேவை களை நிறைவேற்றி வருவது வேதனையளிக்கும் விடயமாகும்.
குடும்ப உறுப்பினர்கள் என்ற வகையில் ஒவ்வொருவரும் தங்களுடைய அன்றாடக் கடமைகளைச் செய்யும் போது ஏற்படும் கஷ்டங்கள் சொல்லில் அடங்காதது.இந்த 120 சதுர அடிப்பரப்பில் குடும்பத்திலுள்ள அனைவரும் உறங்குவதும், உடை மாற்றுவது, குடும்பம் நடத்துவது, தங்களுடைய அத்தியாவசியப் பொருட்களை வைப்பது, விறகு சேமிப்பதற்கும், செல்லப் பிராணிகள் வளர்ப்பது வீட்டில் நடைபெறும் விழாக்களுக்கு என இந்த சிறிய இடப் பரப்பையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது.
தனியொரு மனிதனுக்கு 46 சதுர அடி தேவையெனக் கூறப்படுகின்றது. இருப்பினும் இதில் வாழுகின்ற ஒவ்வொருவரும் தினமும் அனுபவிக்கும் பிரச்சினைகள் அதிகமாகும்.
ஒரு கர்ப்பிணித் தாயை எடுத்துக்கொண்டால் இக்காலத்தில் மிகவும் கவனமாகவும், சுகாதாரமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். ஆனால் இவர்களுக்கு தேவைப்படும் எந்த விதமான அடிப்படை வசதிகளும், ஆரோக்கியமான நிலைகளும் இந்த லயன் அமைப்பில் இல்லை. இவர்கள் குளிப்பதற்கு தங்களுடைய வீட்டு முற்றத்தையே பயன்படுத்துகின்றனர். குழந்தை பிறந்த பின்பு குழந்தையை யும், தாயையும் இதே இடத்திலேயே எவ்விதமான பாதுகாப்பும் இல்லாது சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
பெண்ணொருவர் கர்ப்பமாக இருக்கும் போது கருவில் இருக்கும் குழந்தைக்கு கிடைக்க வேண்டிய நல்ல ஆரோக்கியமான விடயங்கள் இவ் வீட்டுச் சூழலில் கிடைப்பதில்லை. தாயின் கர்ப்ப காலத்தில் அமைதியாக இருக்க வேண்டும். நல்ல விடயங்களை கேட்க வேண்டும். அறிவுள்ள விடயங்களை தேடிப்படிக்க வேண்டும். போஷாக்கான உணவுகளை தினமும் உண்ண வேண்டும். கூடியளவு பராமரிப்பு, உறவினர்களின் அன்பு, அரவணைப்பு ஓய்வு, மனநிம்மதி, மகிழ்ச்சி வேண்டும் எனினும் மேற்கூறியவற்றில் எத்தனை விடயங்கள் திருப்தியாக கிடைக்கின்றது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்தால் தனியான அறையில் வைக்க வேண்டும் என கூறப்படுகின்றது. இருப்பதோ ஒரு அறை இதில் தனியறைக்கு எங்கே போவது? குறிப்பாக ஆண் பிள்ளைகள் இப் பெண் பிள்ளைகளை பார்க்கக் கூடாது என்பது மரபு. எனவே மறைவான இடங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இருக்க வேண்டிய கட்டாய நிலையில் வாழ்கின்றார்கள். ஆனால் லயன் அமைப்பு முறையில் சமய சம்பிரதாயங்களுக்கு இடமில்லை. இதனால் அனைவரும் ஒன்றாக வாழவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில் வாழ்கின்றார்கள் என்பது வேதனைக்குரிய ஒரு விடயமாகும்.
மாணவர்கள் இருக்கின்ற வீடுகளில் கல்வி கற்பதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். தொடர் லயன் அறைகள், சத்தம், படிக்கின்ற சூழல் இன்மை, வீட்டுச் சூழல், போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ஒரு சில மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்கின்றார்கள்.
லயன் குடியிருப்புகளில் சத்தம் படிப்பதற்கான உபகரணங்கள், வசதியின்மை, மின்சார வசதியின்மை, வறுமை, காற்றோட்ட வசதியின்மை, போன்ற பல பிரச்சினைகள் இருப்பினும் தற்போது படிக்கின்ற மாணவர்கள் இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும. இதற்கு மாணவர்கள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும். இந்த பரம்பரை யிலாவது இவ் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என மலையகத்தில் படிக்கின்ற ஒவ்வொரு மாணவனும் உணர்ந்து இலட்சியத்தோடு படிக்க வேண்டும்.
லயன் அறைகளில் காணப்படுகின்ற கூரைகள், கதவுகள், யன்னல்கள், சுவர்கள், வாசல்கள் போன்றன பல வீடுகளில் உடைந்து காணப்படுகின் றன.
இதனை மாற்றியமைக்க வேண்டும். உழைக்கின்ற மக்கள் ஒய்வாக படுத்துறங்க வேண்டும். அப்போது தான் அவர்களால் நல்ல முறையில் உழைக்க முடியும்.
இதனை இதுவரை காலமும் பலரால் உணரப்படாமலேயே இருக்கின்றது. ஆனால் இச்சூழ்நிலை யில் கடந்த பல தசாப்தங்களாக வாழ்கின்ற மக்களின் துன்பங்கள் வேதனைகள் ஏராளம். இதற்கு காரண கர்த்தாக்கள் ஆங்கிலேயர்களா? இம்மக்களா? அல்லது தோட்ட நிருவாகங்களா? அரசாங்கமா? இவர்கள் சார்ந்து இருக்கின்ற தொழிற் சங்கங்களா?
லயன் அமைப்பு வாழ்க்கை முறையை மாற்றியமைக்க வேண்டுமானால் அங்கு வாழ்க்கின்ற மக்களின் பிள்ளைகள் முயற்சி செய்து ஆர்வத்தோடு படிக்க வேண்டும். படித்தால் மட்டுமே இம் மக்களுக்கு எதிர் காலத்தில் விமோசனம் கிடைக்கும். மேற்கூறப்பட்ட அனைத்து விடயங்களுக்கும் காரணம் நாம் கல்வியை முறையாக பின் தொடரமையேயாகும். கல்விதான் சமூகத்தின் முதலீடு என்பதை அனைவரும் உணர வேண்டும்.
லயன் குடியிருப்புக்களில் வாழ்கின்ற மக்களில் புதிதாக திருமணம் முடித்தவர்களின் நிலையானது மிகவும் மோசமாக காணப்படுகின்றது. இவர்கள் சுதந்திரமாக பழகவும் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க முடியாத ஒரு சூழ்நிலையும் இந்த குடும்ப அமைப்பில் உள்ளது. அனைவரும் ஒரே வீட்டில் வாழ்கின்றதால் சிறுவர்கள் மிக விரைவாகவே சில ஏற்றுக்கொள்ள முடியாத பழக்கவழக்கங்களுக்கு உட்பட வேண்டிய ஒரு கட்டாய நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள். சிறுவர் துஷ்பிரயோகம், நெறி பிறழ்வான நடத்தை, சிறு வயதிலேயே கூடாத பழக்கவழக்கங்கள் போன்றவற்றை பழகும் இடமாக லயன் குடியிருப்புக்கள் அமைந்துள்ளன. இதனை மாற்றியமைக்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் கடமையாகும். வயது வந்த இளைஞர், யுவதிகள் தங்களுடைய நண்பர்களை அழைத்து வந்தால் அவர்களை நல்ல முறையில் உபசரிக்க முடியாது. திருமண வைபவம். மரண வீடுகள் நிகழும் போதும் பக்கத்து வீட்டார்களின் வீடுகளை பாவிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் முழு லயனே ஒரே வீடு போல் காணப்படும்.
இலங்கையின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் இம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை தேசிய மட்ட சராசரி நிலைகளோடு ஒத்துச்செல்லக் கூடிய வகையில் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.
நன்றி - தினகரன்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...