பெரியசாமி சந்திரசேகரன் |
தனது மறைவோடு மலையக அரசியல் தொழிற்சங்க களத்தில் நிரந்தரமான வெற்றிடத்தினை ஏற்படுத்திச் சென்றுவிட்ட மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணியின் ஸ்தாபக தலைவரும் அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரன் அவர்களின் 3 ஆவது சிரார்த்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
அவரது இழப்பின் வெற்றிடத்தினை அவரது அரசியல் தொழிற்சங்க எதிரணியினர் கூட இன்று உணர்ந்து வருந்துமளவிற்கு மலையகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டு சென்றுள்ளார் இம் மாமனிதன்.
எதுவிதமான அரசியல் தொழிற்சங்க பின்புலமோ அல்லது பொருளாதார சக்தியோ அல்லது வேறெந்த விதமான உதவிகளோ இல்லாத நிலையில் மக்கள் சக்தியையும் தனது நேர்மையான அரசியல் கொள்கைகளையும் மூலதனமாக இட்டு அவர் ஆற்றிய சேவைக்கு நிகராக இனியொரு தலைவன் உருவாகுவானா என்பது சந்தேகம். தனது பாடசாலை காலத்திலேயே தான் சார்ந்த சமூகத்தின் விடிவுக்காக உழைக்க வேண்டுமென்ற உறுதியோடு அரசியல் ஆர்வம் கொண்டு செயலாற்ற ஆரம்பித்த பின் முழுநேர அரசியலில் ஈடுபட்டபோது அவருக்கு வயது வெறுமனே 19 மாத்திரமே.
ஆனால், சிங்கமென கர்ச்சித்த அவரது சீற்றத்தினாலும் இடியென முழங்கிய அவரது அரசியல் நடவடிக்கைகளினாலும் காட்டறுத்த வெள்ளமென பிரவகித்து சமூக அழுக்குகளை அள்ளிச் சென்று அழித்துவிட்டார்.
பணத்துக்காகவோ, பதவிக்காகவோ எந்த இடத்திலும் தன் சமூகத்தை இவர் பணயம் வைத்தது கிடையாது. தனது நலனை முதன்மைப்படுத்தி சமூக நலனை மறந்த வரலாறு கிடையாது. தனது சேவை ஒரு குறிப்பிட்டவர்களுக்கோ அல்லது தனிக்கட்சியை சார்ந்தவர்களுக்கோ மாத்திரம் சென்றடைந்து விடக்கூடாது என்பதில் மிகவும் விழிப்பாகச் செயற்பட்டார்.
இதன் காரணமாகவே அவர் ஒரு கட்சி சார்ந்த தலைவனாக அல்லது சமூகம் சார்ந்த தலைவனாக சகலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். தான் ஒரு தொழிற்சங்கத் தலைவனாக மக்களால் அடையாளம் காணப்படுவதை விடவும் தான் சார்ந்த சமூகத்தின் விடுதலைக்கான கருத்துகளை விதைக்கும் தலைவனாக இருந்து முழு மக்களும் அங்கீகரிக்கப்படும் ஒரு தலைவனாக அங்கீகாரம் பெறவேண்டும் என்பதிலேயே ஆர்வம் கொண்டிருந்தார்.
இதற்கேற்பவே இவரது சகல செயற்பாடுகளையும் வடிவமைத்துச் செயற்பட்டார்.
தனது அரசியல் பணிகளை ஆரம்பிக்கும் போதும் சரி எமது சமூக நலன்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்தபோதும் சரி அவருக்குப் பின்னால் உணர்வு கொண்ட மக்கள் கூட்டம்தான் இருந்தது. சகல மட்டங்களிலிருந்தும் அவருக்கு எதிர்ப்புகளும் சதிகளுமே காத்திருந்தன. ஆரம்ப நாட்களில் அவருக்குக் கிடைத்த மாலை, மரியாதைகளை விட அவரை வீழ்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதிகளே அதிகம்.
சந்திரசேகரன் முன்வைத்த கருத்துகளை எதிரணியினர் இயலாமையினால் விமர்சித்தார்களே தவிர இவர்கள் எவருமே அவருக்கு நிகராக செயற்பட முடியாமலும் போய்விட்டது. அவர் முன்வைத்த வேலைத்திட்டங்களுக்கு மேலதிகமாக எதனையும் செய்ய முடியாமலும் போய்விட்டது.
உதாரணமாக, மலையக வரலாற்றில் முதன்முறையாக 1994 ஆம் ஆண்டுகளில் அவர் ஆரம்பித்த தனி வீடமைப்புத் திட்டத்திற்கு நிகராக இதுவரையும் எந்த ஒரு திட்டமுமே அறிமுகப்படுத்தப்படவில்லை.
அவர் ஆரம்பித்து வைத்த சமுர்த்தி திட்டத்திற்கு நிகராக அல்லது தமிழ் பேசும் கிராம உத்தியோகத்தர்களைப் போன்ற நியமனங்களுக்கு மேலதிகமாக எதுவுமே அவருக்குப் பின்னர் இதுவரை பூரணமான நடைமுறையாகவே இல்லை.
மலையக அரசியலை சந்திரசேகரனுக்கு முன் சந்திரசேகரனுக்கு பின் என்று எழுதி வைத்து விட்டு இவர் எம்மை விட்டு பிரிந்து சென்று விட்டாலும் கூட இவர் விதைத்த சமூக உணர்வுகள் என்றும் எம்மோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கும்.
தொழிலாளர்களிடமிருந்து பெறப்படும் சந்தா பணத்தில் நியாயமான பகுதி அவர்களின் வளர்ச்சிக்காகவே செலவிடப்பட வேண்டும் என்பதில் கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்தே இவர் அவா கொண்டிருந்தார்.
இன்று அவரது அடிச்சுவற்றில் சென்று கொண்டிருக்கும் மலையக மக்கள் முன்னணி, தனது அங்கத்தவர்களுக்காக மாத்தரமன்றி தனது சமூகத்துக்காக முன்மாதிரியான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் நிவாரண உதவி திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றது.
சந்திரசேகரனின் அரசியலை விளங்கிக் கொண்ட அனைவரும் கொள்கைக்கு மரணமில்லை என்ற அவரது கூற்றையும் மறுக்க மாட்டார்கள். இதே போல் அவரது சேவைக்கும் மரணமில்லை என்பது போல அவர் விட்டுச் சென்ற சேவைகளை நிச்சயமாக கட்சி முன்னெடுத்துச் செல்லும். தெளிவான கொள்கையும் நிதானமான செயற்பாட்டில் உறுதியாக வழிக்காட்டிய இந்த யுக புருஷனின் நினைவுகள் என்றும் வாழும்.
எ.பிரபாகரன்
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...