Headlines News :
முகப்பு » , » "மலையகத்தின் மூத்த எழுத்தாளர் கே. கணேஷ்" - தெளிவத்தை ஜோசப்

"மலையகத்தின் மூத்த எழுத்தாளர் கே. கணேஷ்" - தெளிவத்தை ஜோசப்

கே.கணேஷ்

தமிழ் இலக்கியத்துடன் ஒரு எழுபது வருடத் தொடர்பும், அனுபவமும், ஆற்றலும் மிக்கவரான திரு. கே. கணேஷ் அவர்களைப் பற்றி எழுதுவதில் இந்த வார இலக்கியக்களம் பெருமையும் பூரிப்பும் கொள்கிறது.

எழுபது வருட இலக்கியத் தொடர்பு என்பது எத்தனை பெரிய விஷயம்! இலக்கிய உலகுடனான அவருடைய அனுபவங்களை தெரிந்து கொள்வதே இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு இலக்கிய அனுபவமாகும். அவர் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்து, அவருடன் பேசவும் பழகவும் வாய்ப்புக் கொள்வதே ஒரு இலக்கியக் கொடை. மேதைகளுக்கேயுரிய அவரது தோற்றமும், எளிமையாகப் பழகும் இனிய பண்பும் அவருடன் பழகும் எவரையும் ஈர்த்துக் கொள்வது ஒன்றும் வியப்புக்குரியது அல்ல.

ஆயிரத்து தொளாயிரத்து இருபதில் கண்டி அம்பிட்டியாவில் பிறந்தவர். கண்டி புனித அந்தோனியார் கல்லுாரியிலும் பிறகு தமிழ் நாட்டிலும் கல்வி பயின்றவர். இவரை ஒரு தமிழ் பண்டிதராக்கும் நோக்கத்துடன் இளம் வயதிலேயே மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் படிக்க அனுப்பிவிட்டனர் பெற்றோர். திரு. வி.க. விடம் தமிழ் படிக்கச் சென்ற இவருக்கு பண்டிதராவதை விடவும், தமிழ் இலக்கியத்தில் கருத்துப் புரட்சியைக் காண விரும்பிய ப. ஜீவானந்தம், மாயாண்டி பாரதி போன்ற இடதுசாரி எழுத்தாளர்களுடன் தோழமை கொள்வதே மிகவும் பிடித்திருந்தது.

சக்திதாசன் சுப்பிரமணியம், கே ராமநாதன், மாயாண்டி பாரதி ஆகியோர் சேர்ந்து சென்னையில் இருந்து வெளியிட்ட 'லோகசக்தி ' என்னும் முற்போக்கு இதழின் வெளியீட்டில் இவரும் பங்கு பற்றினார். முதல் இதழிலேயே இவருடைய முதல் படைப்பும் வெளிவந்தது. அப்போது இவருக்கு வயது பன்னிரண்டு.

முல்க்ராஜ் ஆனந்த், பிரேம் சந்த், கே.ஏ. அப்பாஸ், வெங்கடாசாரி, தமிழ் ஒளி, குயிலன், புதுமைப்பித்தன், தி.க.சி. என்று நாம் பெயரளவில் அறிந்து வைத்துள்ள இலக்கியக்காரர்களுடன் அவர் நண்பராயிருந்து பழகிய அனுபவங்களை அவர் வாயிலாகக் கேட்கையில் பிரமித்துப் போகிறோம். அவர்கள் எழுதிய சில கடிதங்களைக் காட்டுகிறார். நாம் பூரித்துப் போகிறோம்.

பன்னிரண்டு வயதில் எழுதத் தொடங்கி, பதினாறு வயதில் இளைஞுர் காங்கிரஸ் என்னும் அமைப்பை உருவாக்கி, பத்திரிகை வெளியிட்டு, எழுத்தாளர்களுடன் பழகி இலக்கியத்தைத் தன் இரத்தத்தில் ஏற்றிக் கொண்டவர் இந்த முதுபெரும் இலக்கியவாதி. அந்த இரத்த உறவும் இலக்கிய உணர்வுமே இந்த எழுபத்தேழு வயதிலும் இவரை இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது. 1936ல் இவர் தனது எழுத்துலக நண்பர்களுடன் இணைந்து வெளியிட்ட லோகசக்தியே முற்போக்குக் கருத்துக்களை வெளிக்கொண்டு வந்த முதல் பத்திரிகையாகும். இவ்வாறான அனுபவங்களே முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஸ்தாபித்து முற்போக்கு எழுத்தாளர்களை ஒன்றிணைக்கும் ஒரு எண்ணத்தை இவருக்கு தந்துள்ளது. கே.ஏ. அப்பாஸ், வெங்கடாசாரி, குயிலன், தமிழ் ஒளி, தி.க. சிவசங்கரன் ஆகிய முற்போக்கு சிந்தனையாளர்களை ஒன்றிணைத்து முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தமிழகத்தில் ஸ்தாபித்தார்.

இலங்கை திரும்பியதும் இவரால் சும்மா இருக்க முடிந்திருக்குமா ? படிக்கச் சென்ற ஊரிலேயே அத்தனை செயலாற்றியவர் சொந்த ஊரில் சும்மாவா இருப்பார்! அகில இலங்கை எழுத்தாளர் சங்கம் என்று ஒரு அமைப்பை அவர் முன்னிலையில் உருவாக்கினார். இலங்கையின் சகல எழுத்தாளர்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்னும் அவரது ஆவல் போற்றுதற்குரியது. இந்த அகில இலங்கை எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக சுவாமி விபுலாந்தரும், உபதலைவராக மார்ட்டின் விக்கிரமசிங்காவும் இருந்தார்கள். கணேஷும், கலாநிதி சரத்சந்திரவும் இணைச் செயலாளர்களாக இருந்து பணியாற்றினார்கள். ஈழத்தின் சகல எழுத்தாளர்கள் மட்டுமன்றி இந்தியா மற்றும் உலக எழுத்தாளர்கள் சகலருடன் தொடர்புள்ளவர் இவர். ஆகவே ஆங்கில, தமிழ் இதழ்கள் அவரைத் தேடி தலாத்துஓயாவுக்கு வந்த வண்ணமாயிருக்குமாம்.

தமிழ் இலக்கியத்தில் வரலாறு படைத்த மணிக்கொடி, கிராம ஊழியன், ரகுநாதனின் சாந்தி, விஜயபாஸ்கரனின் சரஸ்வதி, வரதரின் மறுமலர்ச்சி என்று நாம் கண்டேயிராத இதழ்கள் சிலவற்றை ஒவ்வொன்றாகக் காட்டுகிறார். சில்லிட்டுப் போகிறோம்.

1946ல் இவரும் கே. ராமநாதனும் சேர்ந்து நடத்திய 'பாரதி ' நினைவுக்கு வருகிறது. பாஸிஸ எதிர்ப்பு பிரசாரத்தை முன் வைத்து வந்து கொண்டிருந்த 'பெங்குவின் ' வெளியீடான 'நியூரயிட்டிங்ஸ் ' என்னும் ஆங்கில இதழைக் காட்டுகின்றார். இத்தாலிய எழுத்தாளர் இக்னேஷியஸ் சிலோனி, பஞ்சாபி முல்க் ராஜ் ஆனந்த் ஆகியோரின் படைப்புகள் நியூரைட்டிங்ஸ் சில் வந்திருந்தன.

இப்படி ஒரு இதழை ஏன் நாமும் வெளியிடக்கூடாது என்ற எண்ணமே 'பாரதி ' யின் தோற்றத்திற்கு வித்தாயிற்று. 1946 ஜனவரியில் பாரதி முதல் இதழ் வெளிவந்தது. ஈழத்தின் முற்போக்கு இலக்கிய இயக்கத்துக்கு வித்திட்ட ஏடாகத் திகழ்ந்தது இந்த பாரதி. 1948 ஜனவரியில் மார்க்ஸிம் கோர்க்கியின் அட்டைப் படத்துடன் வந்த ஏழாவது இதழுடன் பாரதியின் இலக்கியப் பயணம் முடிவு பெற்றுள்ளது. நியூரைட்டிங்ஸும் ஏழு இதழ்களே வந்ததாக தெரிவிக்கிறார்.

கணேஷ் ஒரு கவிஞர். தன் சொந்தப் பெயரிலும் கலாநேசன் என்னும் பெயரிலும் நிறையக் கவிதைகள் எழுதியுள்ளார். உலகக் கவிதைப் போட்டியில் பங்குபற்றி ஜப்பான் சக்கரவர்த்தி ஹிரோ ஹிட்டோவிடம் விருது பெற்ற கவிஞுர் இவர். பரிசு பெற இவர் ஜப்பான் சென்ற செய்தியைப் படத்துடன் முதல் பக்கத்தில் வெளியிட்ட டெய்லி நியூஸ் உள்ளே ஒரு பக்கக் கட்டுரையும் எழுதியிருந்தது அன்று.

இவர் ஒரு சிறுகதையாசிரியரும் கூட. மணிக்கொடியில் கூட ஒரு சிறுகதை எழுதியுள்ளார். ஆசாநாசம் என்னும் பெயரில், சத்திய போதிமரம், பால்காரப் பழனி, சட்டமும் சந்தர்ப்பமும் ஆகிய சிறுகதைகளை வீரகேசரியிலும் ஆகஸ்ட் தியாகி ஆறுமுகம் என்னும் கதையை தேசாபிமானியிலும் எழுதியுள்ளார்.

இந்தியாவில் உருவாக்கிய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போல இலங்கையிலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை 1946ல் தோற்றுவித்த பெருமை இவருக்குண்டு.

வீரகேசரியில் 40களிலும் சுதந்திரனில் 50களிலும் பணியாற்றி இருக்கின்றார் .

இவருடைய இலக்கியப் பணிகளிலெல்லாம் முக்கிய பணியாக நிற்பது இவருடைய மொழி பெயர்ப்புப் பணிகள்.

முலக்ராஜ் ஆனந்தின் 'அன்டச்சபிள்ஸ் ' நாவலை 'தீண்டாதான் ' என்று 1947ல் தமிழில் மொழி பெயர்த்தார். 1956ல் கே. ஏ. அப்பாஸின் சிறுகதைகளை எகுங்குமப்பூஎ என்னும் பெயரில் மொழிபெயர்த்து வெளியிட்டார். மறுபடியும் அப்பாஸின் 'அஜந்தா ' என்னும் நுாலை மொழி பெயர்த்தார். குயிலன் பதிப்பகம் 1964ல் இதை வெளியிட்டது. ஹோசிமின் சிறைக் குறிப்புகள் அஸர்பைஜானிய எழுத்தாளர் அல்தாய் முஹம்மத்தோவின் த ஸோங் (அந்த கானம்) சீன இலக்கிய மேதை 'லுாசுன் ' சிறுகதைகள், பல்கேரிய ஹங்கேரிய, வியட்நாமிய, உக்ரேனிய, ரஷ்ய கவிதைகள, சீனக் குறுநாவல்கள் என்று இருபதுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நுால்களை அளித்திருக்கின்றார்.

என்.சி.பி.எச்., சென்னை புக்ஸ், தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் ஆகிய வெளியீட்டு நிறுவனங்கள் கே கணேஷின் பெரும்பன்மையான மொழி பெயர்ப்பு நுால்களை வெளியிட்டு இலக்கியப் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு அறுபதாண்டு கால இலக்கிய அனுபவங்களை தன்னுள் ஆழ்த்திக் கொண்டிருக்கும் இவரின் எழுத்துலக அனுபவங்கள் வெளிக் கொண்டுவரப்படல் வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. ஆரவாரங்களுள் அகப்படாமல் அமைதியாக இருக்கும் அவரே அதைச் செய்ய வேண்டும். இல்லையெனில் நாம் யாராவது அதைச் செய்ய வேண்டும். எண்பது வயதை அண்மித்துக் கொண்டிருக்கும் திரு. கே. கணேஷின் எழுபதாண்டு இலக்கிய அனுபவங்கள் முழுமையாக எழுதப்படாவிட்டால் அது நமக்கெல்லாம் ஒரு இலக்கிய இழப்பேயாகும்.

விளம்பரம் விரும்பாத இவருக்கு கிடைத்துள்ள விருதுகள் பற்றிக் கேட்டால் சிரிப்பார். பதில் சொல்லமாட்டார். எனவேதான் நானே கூறிவைக்கிறேன். 1991 ல் இலக்கிய செம்மல் விருது. (கலாசார அலுவல்கள் ராஜாங்க அமைச்சு) 1992 வியட்நாமிய சிறுகதைகள்-சிறந்த மொழிபெயர்ப்பு நுாலுக்கான சுதந்திர இலக்கிய விழா (விபவி) விருது. 1993ல் இதே விருது உக்ரேனிய கவிதைகள் மொழிபெயர்ப்பிற்காக. 1995ல் கலாசார அமைச்சு-கலாபூஷண விருது.

எழுபத்தேழு வயதிலும் ஒரு இளைஞுராகப் பணிபுரியும் திரு கே. கணேஷ் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!

Works Published

Translation in Tamil of:-

1. Untouchable (தீண்டாதான்) - Mulkraj Anand 1947, 1970 (Puthumai Pathipaham. Karaikudi, Madras- India)

2. Saffron Blossoms (குங்குமப்பூ) - K.A. Abbas 1956, 1963 (Inba Nilayam, Madras-India)

3. Ajantha (அஜந்தா) - K.A. Abbas 1964 (Kuyilan Pathipakam, Madras-India)

4. Prison Dairy (சிறைக்குறிப்புகள்) - Ho Chi Min - 1973, 1985 (New Century Book House, Madras-India)

5. The Song (அந்த கானம்)- Azerbaijanian Writer Altai Mahamedov 1974 (Self- Sri Lanka)

6. Call to Arms (போர்க்குரல்) - Lu Xun 1981 (Pothumai Publishers. Madras-India)

7. Bulgarian Poems - Hristo Botev. Ivan Vazov, Geo Milev, Vapstarov, Penyo etc., (New Century Book House, Madras-India)

8. Happy Children - Jushi 1986 (Foreign Language Publishing House, Beijing. China)

9. Wanderings - Lu Xun 1986 (New Century Book House, Madras-India)

10. Hungarian Poems (சந்தோர் பெட்டோவ்பி- எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே) - Sander Petofi 's Poems 1988 (Chennai Book House, Madras - India)

11. Poems of Parpara (பார்பரா - கவிதைகள்)- Russian Poet 1989 (Writers Cooperative Publishers, Colombo. Sri Lanka)

12. Soviet Poems (குப்பிரியானோவ் - சோவியத் புதுக்கவிதைகள்) - Kubrianov 's Poems 1989 (Writers Cooperative Publishers, Colombo. Sri Lanka)

13. Erhai 's Wedding (இளைஞன் ஏர் கையில் திருமணம்) - Jou Shu Li 1990 (Chennai Book House, Madras - India)

14. Crescent Moon (Fiw gpiw) - Lao She 1990 (Chennai Book House, Madras - India)

15. My Duties Today - Yang Ya Liang Ti 1990 (Foreign Language Publishing House, Beijing. China)

16. Pleasure in One 's Work - Yang Yi 1990 (Foreign Language Publishing House, Beijing. China)

17. Shihan and the Snail - Chinese Folk Story 1991 (Dolphin Books. Beijing, China)

18. Bamboo Valley - Vietnamese Short Stories 1992 (South Asian Books, Madras, India)

19. Body and Soul & Bitter Springs (உடலும் உணர்வும்) - Zhang Xiang Liang 1992 (South Asian Books, Madras, India)

20. Ukranian Poems (உக்ரேனியக் கவிதைகள்) - Poems of National Poet Taras Shevchenko 1993 (New Century Book House, Madras-India)

21. Poems of Ivan Franko 1994 (Elavizhagan Publishers. Madras, India)

22. Complete Short Stories of Luxun 1995 (South Asian Books, Madras, India and National Art and Literary Association, Sri Lanka)

In Preparation:

1 Ashokamala & Other Poems (Kurinji Pathipakam, Colombo, Sri Lanka

****

muttu@earthlink.net

நன்றி - திண்ணை
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates