ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று ஒரு மாதமாகின்ற நிலையில் அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் மிகவும் விறுவிறுப்பாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, நல்லாட்சியின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக வெளிப்படைத்தன்மை அதாவது ஊழலற்ற அரசாங்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள் பக்கச்சார்பின்றி நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
கடந்த சில வாரங்களாகவே ஊழல் மோசடிகள் பற்றிய செய்திகளே பத்திரிகைகள் உட்பட ஏனைய ஊடகங்களில் முக்கிய செய்திகளாக நிரம்பி வழிந்தன என்றால் அது மிகையாகாது. அதிலும் குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடி செய்திகளே அதிகமாகும். இந்தப் பின்னணியில் இலங்கையில் உள்ள பல அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகள், வியாபார நிலையங்கள், இரகசிய இடங்கள் என பலவும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பல கோடி, பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் முன்னாள் ஜனாதிபதியின் வீடும் இவ்வாறான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பதாகும்.
நிலைமை இவ்வாறிருக்க, அந்த ஆட்சியில் தொடர்ந்தும் அமைச்சுப் பதவிகளை வகித்து வந்த மலையக பிரபல கட்சியொன்றின் தலைமைகளின் இருப்பிடங்களிலும் இவ்வாறான சோதனைகள் நடத்தப்பட்டன. இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். தேர்தல் முடிந்த ஓரிரு தினங்களில் அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்த ஒரு சில இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது பல கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக ஊடகங்களிலும் படங்களுடன் செய்திகள் வெளிவந்தன.
இன்றுள்ள தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி மக்கள் அன்றாடம் நாட்டில் நடைபெறும் விடயங்களை உடனுக்குடன் அறிந்து கொள்கின்றனர். இதனால் மக்களே இன்று அரசாங்கத்திற்கு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல்களையும் வழங்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப்பின்னணியில் இவர்கள் குறைகள் அல்லது தவறுகளை செய்யாத விடத்து நாட்டில் ஒரு தேசிய விடயமாக நடைபெறும் இவ்வாறான சோதனை நடவடிக்கைகளை எந்தவித தயக்கமுமின்றி அனுமதிக்க வேண்டுமே தவிர அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது சரியானதல்ல. அப்படி இல்லையெனில், அவ்வாறான செயற்பாடுகள் தொடர்பாக முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதையெல்லாம் விட்டு விட்டு தமது கட்சித் தலைமைகளின் வீடுகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை எதிர்த்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும்படி அப்பாவி தொழிலாளர்களைத் தூண்டிவிடுவது சரியல்ல. மக்களை களத்தில் இறக்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடச் செய்வதன் மூலம் தாங்கள் செய்கின்ற தவறுகளை மக்களை வைத்து மறைக்க முற்படுகின்றனரா என்ற கேள்வி எழுகின்றது. அதுமட்டுமின்றி, மலையக மக்கள் இவர்களால் தவறாக வழிநடத்தப்படுகின்றார்களோ என்ற சந்தேகமும் தோன்றுகின்றது. மேலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பலருக்கு தாம் எதற்காக ஆர்ப்பாட்டம் செய்தோம் என்பதே தெரியாது என்றால் இது எந்தளவு தவறான செயல் என்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தற்போதைய ஜனாதிபதி இலங்கையில் 15 மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார். இதில் கொழும்பு, கண்டி, பொலன்னறுவை, கம்பஹா மற்றும் பதுளை மாவட்டங்களும் உள்ளடங்கியுள்ளன என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுமார் 18 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வெற்றி பெற்றார். அந்த சந்தர்ப்பத்தில் மலையக மக்கள் உட்பட வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் அவருக்கு எதிராகவே வாக்குகள் பதிவாகியிருந்தன என்பதை இவர்கள் மறந்து விட்டார்கள். இதற்கு அப்பால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வாக்குகளையும் விட குறைந்த வாக்குகளையே ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் அவர் பெற்றிருந்தார். மேலும் ஒப்பீட்டு ரீதியில் தமிழ் பேசும் மக்கள் வாழும் மாவட்டங்களில் மஹிந்த ராஜபக் ஷவுக்கான வாக்குகள் இம்முறை சற்று அதிகரித்திருக்கின்ற போக்கு காணப்படுகின்றது. இதனை கீழுள்ள அட்டவணையை பார்க்கும் போது தெளிவாகும்.
இந்த அட்டவணையின் மூலம் தெரிய வருவது என்னவெனில் மலையக மாவட்டங்களில் மாத்திரமின்றி ஏனைய மாவட்டங்களிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன என்பதாகும். அதிலும் கடந்த முறையிலும் பார்க்க மேலும் ஐந்து மாவட்டங்களில் மஹிந்த ராஜபக் ஷ தோல்வி கண்டுள்ளார். இந்த 5 மாவட்டங்களும் பெரும்பான்மை இனங்களை அதிகமாகக் கொண்ட மாவட்டங்கள் என்பதும் தெளிவு. இதன் மூலம் மலையக மக்கள் அல்லது வடக்கு கிழக்கு மாவட்ட தமிழ் பேசும் மக்கள் மாத்திரம் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யவில்லை என்பதையும் நாட்டின் ஒட்டு மொத்த சனத்தொகையில் 51.28 வீதமான மக்களின் வாக்குகளிலேயே தெரிவாகியுள்ளார் என்பதையும் இந்த தலைமைகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே பிரதான தொழிற்சங்கத்தின் தலைமைகள் பிழையான தகவல்களை வழங்கி மக்களை பிழையான வழியில் வழிநடத்தவே எதிர்பார்க்கின்றது. குறிப்பாக இவர்கள் எடுக்கும் முடிவுகள் மட்டுமே சரியானது என்ற பிழையான தோற்றத்தை ஏற்படுத்தி மலையக மக்களின் சிந்திக்கும் ஆற்றலை குறைக்கவும், மக்களை அறிவற்றவர்கள் எனவும் சித்தரிக்க பார்க்கின்றார்கள். இது அபத்தமானது.
இதற்கு அப்பால் தேர்தலில் தாங்கள் தோல்வியுற்றால் இனிவரும் காலத்தில் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும் தாங்கள் தொழிற்சங்க செயற்பாடுகளை மாத்திரமே முன்னெடுக்கப் போகின்றோம் என்று அறைகூவல் விட்டவர்கள் மிகவும் சூட்சுமமான முறையில் பின்கதவு வழியாகச் சென்று ஆளுங்கட்சியில் இணைந்து கொள்வதற்கான பல முயற்சிகளை தற்போது எடுக்கின்றனர். இவர்கள் கூடிய விரைவில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்கள் என்பது மக்கள் அறிந்த விடயமாகும்.
ஆனால், மக்கள் எடுத்த தீர்மானத்தை பிழை என அந்த மக்களிடமே கூறி வருகின்றார்கள். இவர்கள் இந்த மக்களைப் பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்றே புரியவில்லை. இவர்கள் பின்கதவின் வழியாக சென்று அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிப்பது சரியாக அமையுமாயின் நேர்மையாக ஆட்சி மாற்றத்திற்காக தெளிவாக வாக்களித்த மக்கள் எவ்வாறு தவறிழைத்திருக்க முடியும்? மேலும் மக்கள் பிழையான முடிவெடுத்து தேர்ந்தெடுத்த அரசாங்கத்திற்கு செல்வதற்கு இவர்கள் ஏன் இவ்வளவு முயற்சிகளையும் சந்திப்புக்களையும் மேற்கொள்ள வேண்டும் என்பதை மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.
எனவே, மற்றொரு விடயத்தை குறிப்பிட வேண்டும். இன்று தோட்டத்தில் தொழில் செய்யும் தொழிலாளர் படையிலும் பார்க்க தோட்டத்திற்கு வெளியில் அதாவது நகரப்பகுதிகளில் தொழில் செய்பவர்களின் எண்ணிக்கையே மிக அதிகமாகும். இவர்கள் வெறுமனே ''இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சொல்கிறது, தொழிலாளர் தேசிய சங்கம் சொல்கிறது, மலையக மக்கள் முன்னணி சொல்கிறது'' என்ற காரணத்திற்காக வாக்களிப்பவர்கள் இல்லை என்பதை இந்தத் தேர்தல் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது.
இதற்கு காரணம் மலையகத் தலைமைகள் தீர்மானம் எடுப்பதற்கு முன்னரே மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு வாக்களிக்க தயாராகவே இருந்தார்கள். இதன்படி மலையக தொழிற்சங்கங்கள் மக்கள் மனங்களில் இருந்து சற்று தூர விலகியுள்ளது. அதிலும் குறிப்பாக இளைஞர் யுவதிகளின் மத்தி யில் அதன் செல்வாக்கு நன்கு குறைந்து உள்ளது என்பதையும் இவர்கள் புரிந்து செயற்பட வேண்டும். எனவே, மக்களை பிழையாக வழிநடத்தும் ஒரு சில தொழிற்சங்கங்கள் தமது போக்கினை மாற்றிக்கொள்ள வேண்டும். அத்துடன் மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்ற அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும் என்பதும் எம் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
நன்றி - வீரகேசரி - 08.02.2015
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...