Headlines News :
முகப்பு » , » வாழ்வியல்போராட்டத்தில் கள்ளத்தோணி - எம்.கருணாகரன்

வாழ்வியல்போராட்டத்தில் கள்ளத்தோணி - எம்.கருணாகரன்


கோளவடிவமான இப்பூகோளத்தில் ஒரு பெரிய நிலப்பரப்பு, அதன் பெயரோ ஆசியாக் கண்டம். அங்கு இந்திய தேசத்துக்கு தெற்கே ஒரு சிறிய தீவு, அது இலங்கை அங்கு மத்திய மாகாணமெனும் பிராந்தியத்தில் நுவரெலியா மாவட்டம் அமைந்துள்ளது. அம்மாவட்டத்தில் அடர்த்தியாகவும், ஏனைய பிரதேசங்களில் ஐதாகவும் ஓர் இனக்குழுமம், அவர்கள்தான் நாங்கள்.

எங்களை இந்தியத் தமிழரென்றும், இலங்கைவாழ் இந்தியத் தமிழரென்றும், கண்டிய தமிழரென்றும்  மற்றும் மலையகத்தமிழரென்றும் இன்னும் பல்வேறுபட்ட அடையாளங்களுடன் அழைப்பர். எமது பிரதான  ஜீவனோபாயம் கூலித்தொழிலான தேயிலை பறிப்பதுதான். ஆமாம், இந்த பூமிப்பந்துக்கு மிக சுவையான தேயிலையை வழங்கும் தேசங்களில் நாங்களும் பிரதானமானவர்கள். தேயிலைக்குள் தேங்காய், மாசி எடுப்பதற்காக இந்தியாவிலிருந்து வந்தவர்களென்று ஒரு நையாண்டிக்  கதையும்  உண்டு.

பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் காலனித்துவாட்சியின் போது பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிகள். கள்ளத்தோணி என்றும்கூட அழைப்பர். அன்று பிழைப்புக்காக, பிரதேசம் பெயர்ந்து வந்த வந்தேறிகளானோம். மூலவேரை இந்தியா என்ற அடையாளத்துடனும்,  பக்கங்களை "சிலோன்' என்ற அடையாளத்துடனும், வாழ்வியலுக்கான இருப்பை நிலைக்கொண்டு; அதன்பின், அவ் இருப்புக்கான அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து இன்று எமது மூலவேரை யாரும் மறுதலைக்க முடியாத விதத்தில் தடம்பதித்துள்ளோம்.

ஆம் நான்காவது தலைமுறையாக எமது தடம் இங்கு உறுதியாய் பதிந்துள்ளது. இது எமது இருப்புக்கான  முதல் வெற்றியென்று நினைக்கின்றேன். குடிபெயர்ந்து நாடோடிகளாக இருந்து அதன் பின் ஒரு மாபெரும் பாட்டாளி வர்க்கமாக பரிணாமம் அடைகின்றோம். இன்று ஒரு தேசிய இனத்துக்கான சா ன்றாதாரங்களாக தன்னகத்தே தனி அடையாளங்களை நிலை நிறுத்தி உள்ளோம்.

அதுமட்டுமன்றி தீவுக்கான பொருளாதாரத்தில் முதன்மை இனமாக நாங்களே காணப்படுகிறோம். எமது சமூக இசைவாக்கத்தின் பயணம் வலியிலும் வலி மிக்கது. வாழ்வியலின் அளவுக்கோலாக நிழற்படங்கள், நாட்டார் பாடல்கள், ஆலயங்கள், கல்லறைகள் என்பன முதன்மை பெறுகின்றன. எங்களின் குடியிருப்புக்களை பொதுவாக “லயம்‘ என்று அழைப்பர்.

வரிசையாக ஒன்றிணைந்த இந்த லயன் அறைகள், பொதுவாக இருபக்கமும் பத்து, பத்து அறைகளை ஒன்றிணைத்ததாக காணப்படும். இந்த இல்லத்தில் முன்பக்கத்தில் சிறிய இஸ்தோப்பும், பின்பக்கத்தில் எட்டடியை கொண்ட ஒரு சதுர அறையும் ஒன்றிணைத்தது ஒரு லயன்,அறை எனப்படும்.கவிஞர் சு.முரளிதரன்  "கூடைக்குள் ஒரு தேசம்' என்ற தனது ஹைக்கூ கவிதைத்தொகுதியில் லயன்களை பற்றி இவ்வாறு கூறுகின்றார்.

"போதுமான ஆட்களேறியும்
புறப்படவில்லை புகையிரதம்
லயன்கள்...'

இது எமது வாழ்வியல் போராட்டத்தின் ஸ்தம்பிதத்தை எண்ணிய ஒரு சமூகக்கவிஞனின் கோபச்சொற்கள். மீண்டும் அந்த இஸ்தோப்பு, எட்டடி  சதுர அறைக்கே வருவோம். இதன் உள்ளே ஒரு கூட்டுக்குடும்பமே சல்லாப்பித்திருக்கும். அம்மா, அப்பா, பிள்ளைகள்; காலம்  செல்லச் செல்ல அவர்களின் துணைகள் பின்பு, அவர்களினதும் பிள்ளைகளென எல்லோருமாக சேர்ந்து ஒரு கூரைக்குள் வாழ்வார்கள். இல்லை, சிறைப்பட்டு கிடப்பார்கள்.

இது அதீதமான வலியை கொடுத்திடும் வாழ்வு  முறையொன்று. இன்றைய காலகட்டங்களில் இந்த லயன் அமைப்பு முறைகளில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுவதை அவதானிக்க முடிகிறது. சில இடங்களில் தனி குடியிருப்புகள் தோன்றி லயன் அடையாள வாழ்வியல் மறைந்து போகிறது.

வேறு சில இடங்களில் சுமார் ஏழு அடி நீளத்துக்கு லயன் அறைகள் முன்னோக்கி கட்டப்படுகிறது. பெரும்பாலான லயன்களில் குறைந்த பட்சம் ஒரு லயன் அறையேனும் சரி இவ்வாறு முன்னோக்கி கட்டப்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. எங்களின் வாழ்வு  முறைகளும், அந்த வாழ்வியலின் வலிகளும் எதிர்கால சந்ததியினருக்கு, எதிர்கால வரலாற்றுக்கு ஓர் ஆவணக்காப்பாகமாக இருப்பதற்க்கு தற்போதைய அமைப்பிலுள்ள லயன்களின் ஒரு லயனேனும் சரி அதன் தனித்துவம் இழக்காது இருக்கவேண்டுமென்பது இச்சமூக நலன் சார்ந்தவர்களின் கவனத்துக்குரிய விடயமாகும்.

தற்போதும் பல்கலைக்கழகம் செல்வோரின் எண்ணிக்கை குறைந்தபட்சமென்றாலும், உயர்தரம் கற்போரின் எண்ணிக்கை விசாலப்படுத்தப்பட்டிருக்கின்றது. சுமார் இருநூறு வருடகால வரலாற்றைக் கொண்ட ஒரு சமூகம் தற்போது தன் இனம் சார்ந்த ஆசிரிய இடைவெளியின் தன்னிறைவுக்கான முனைப்பை கொண்டிருக்கிறது. இதுவொரு மாற்றத்துக்கான முன்னகர்வாகும். அத்தோடு பண்பாட்டு அம்சங்களுக்கு உள்நுழையப்பட்டவர்களாகவும், அதை பின்பற்றுபவர்களாகவும் இருந்துகொண்டு, ஒரு சமூகத்துக்கான அந்தஸ்துக்குள் நுழைந்த எங்களின் தோட்டங்களில் வருட முற்பகுதியில் திருவிழாக்களும், காமன் கூத்துக்களும் களைகட்டிக்காணப்படும்.

ஓர் ஊரே ஒன்றிணைந்து கண்விழித்து ரதி, மதன் கதை சொல்லும். அதை காண பலகோடி கண்கள் தேவை. சா தாரண பாமரர்களின்  கலை ஆர்வமும், அதற்காக  முரண்பாடுகள் களைந்து எம்மவர்களின் ஒன்றிணைவும் ஓராயிரம் கதை சொல்லும். அதை பார்க்க என் இனம் மீது எனக்கே அழுக்காறு கொள்ளும்.

தென்னிந்தியாவில் இருந்து கூலிகளாக வர நேர்ந்தாலும், சொந்த பந்தங்களையெல்லாம் கைவிட்டு வர நேர்ந்த  பொழுதிலும் எமக்கென்று உரித்தான கலை, கலாசார பண்பாட்டு  அம்சங்களை எம்மோடு எமக்காக எடுத்து வந்து, வாய் மொழியில் வரலாற்றை வாழவைத்த வம்சங்கள் என்று பெருமைகொள்ளும். காமன்கூத்தில் "தப்பு' ஓர் உயர்ந்த அந்தஸ்தை பெறும். ஒரு சிலவேளைகளில் கருத்தியல் ரீதியாக முரண் கொண்டிருந்தாலும் கலாசார ரீதியாக எம்மவர்கள் ஒன்றிணைவர். ஒரு பண்பாடு எம்மை ஒன்றிணைக்கிறது. எமது வாழ்வியலோடு கலாசாரம், பண்பாடு ஒன்றிணைந்துள்ளது. கொஸ்லந்த மீரியபெத்தையில் ஒரு தோட்டத்தையே மண் விழுங்கி விட்டது.

அந்த ஊரே இருந்த தடம் தெரியாமல்  அழிக்கப்பட்டுவிட்டது. இருந்தபொழுதிலும் அந்த மண்ணை தோண்டிப்பார்த்தால் எம்மவரின் வாழ்வியல் பண்பாட்டு அம்சங்களையும், மண்ணில் புதையுண்டவர்களின் கலாசார பண்பாட்டு வாழ்க்கை முறைகளையும் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

மேலே ஆசிரியர்கள், தன்னிறைவு என்றெல்லாம் கூறினேன். அந்த ஆசிரியர் வர்க்கம் தமக்குள்ள அடையாளங்களை புறம்தள்ளி மத்தியத்தர வர்க்கத்துக்குள் நுழைவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. தோட்டத் தொழிலாளர்களின் "லயன்' வாழ்க்கை முறை, அது தொடர்பான சமூகத்தில்  காணப்படும் "மலிவு' புனைவுகள் என்பவற்றோடு சேர்ந்த இவர்களின் மாயை, கற்பனை சார்ந்த எண்ணங்கள் இவர்களை யதார்த்த வாழ்க்கை முறையிலிருந்து தள்ளி வைத்திருக்கின்றது என்றே கூறலாம். 

இருந்த பொழுதிலும் படித்துவிட்டு கல்லூரி சென்று, பல்கலைக்கழகம் சென்று ஆசிரியர் மற்றும் ஏனைய துறைகளில் இருக்கும் ஒரு சிலரோ, பிடிவாதமாக இந்த லயன் வாழ்க்கையை புறக்கணிக்காமல் தான் சார்ந்த மக்களோடு மக்களாக இருந்துகொண்டு இந்த சமூக இசைவாக்கத்துக்காக போராடுகின்றார்கள். இன்றைய தேவையும் இதுவாகவே இருக்கின்றது.

நன்றி - தினக்குரல்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates