பொதுபல சேனா கடந்த வாரம் தமது சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ஒரு பிரச்சார வெளியீட்டில் இப்படி இருந்தது.
“இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் முக்கிய பதவிகள்
பிரதமர் – கிறிஸ்தவர் (பெயரளவில் பௌத்தர்)
உயர்நீதிமன்ற நீதியரசர் – தமிழ்
நீதி அமைச்சர் – தமிழர்
மத்திய வங்கி கவர்னர் – தமிழர்
மீள்குடியேற்ற அமைச்சர் – தமிழர்
வேறென்ன இது தமிழருக்கும் ஹம்பயாக்களுக்கும் உரித்தாகிவிட்ட நாடல்லவா.
சிங்களவர்களுக்கு அப சரனய்”
மேற்படி குறிப்பிடப்பட்டவர்கள் ரணில், ஸ்ரீபவன், ரவி கருணாநாயக்க, அர்ஜுன மகேந்திரன், டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரை வரிசையாக குறிக்கிறது.
தேர்தலுக்குப் பின்னர் பொதுபல சேனாவின் இருப்பு ஆட்டங்காணத் தொடங்கிய பின்னர் மீண்டும் அதன் இருப்பை நிலைநாட்ட அதிக பிரயத்தனம் எடுத்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளது. நிச்சயமாக அதன் இருப்பு சிங்கள பௌத்த பேரினவாதத்தில் தான் தங்கியிருக்கிறது என்பதும் பேரினவாதத்தை கைவிட்டால் வேறு கதி இல்லை என்பதும் தெரிந்ததே.
புதிய அரசாங்கம் தமது இருப்புக்கு சாதகமானதல்ல என்பதால் அதனை தூற்றி எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அவதூறு பரப்பரப்பி வருகிறது பொதுபல சேனா. மகிந்தவின் தேர்தல் தோல்வியில் பொதுபல சேனாவுக்கும் பங்குண்டு என்பதை நாம் அறிந்ததே. ஜனாதிபதி தேர்தல் முடிவின் பின்னர் கோத்தபாய ராஜபக்ஷ மோசமான வார்த்தைகளால் ஞானசார தேரரை திட்டி விரட்டியது குறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. இறுதி நேரத்தில் பொதுபல சேனாவை எந்த தரப்பும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் தாமாகவே மகிந்தவை ஆதரிப்பதாக அறிவித்துக்கொண்டது. பின்னர் ஆதரிக்கவில்லை என்றும் அறிவித்துக்கொண்டது.
தற்போதைய அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் எவரும் பொதுபல சேனாவின் இருப்பை விரும்பவில்லை. பொதுபல சேனா போன்ற சக்திகள் சிங்கள பௌத்த தேசியவாத சித்தாந்தத்தை வெகுஜன தளத்தில் தீவிரமாகவும் ஜனரஞ்சகமாகவும் எடுத்துச் செல்ல உதவுவார்கள் என்றே ஜாதிக ஹெல உறுமய ஒரு கட்டம் வரை நம்பியிருந்தது. ஆனால் குறுகிய காலத்தில் அது வன்முறை வடிவம் பெற்றது மட்டுமன்றி ஜாதிக ஹெல உறுமயவுக்கு சவால் விடும் அளவுக்கு வளர்ந்து சிங்கள பௌத்த சக்திகளின் தலைமை பாத்திரத்துக்கு போட்டியிட்டது.
அளுத்கம விவகாரத்தில் கூட ஜாதிக ஹெல உறுமயவின் அறிக்கைகள் பொதுபல சேனாவை பாதுகாக்கும் வகையிலேயே இருந்தது. ஆனால் இன்று பொதுபல சேனா நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதன் சண்டித்தனம் கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கம் முன்னைய ஆட்சியின் பல முறைகேடுகள், சட்டவிரோத செயல்கள் மற்றும் குற்றங்களின் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் அளுத்கம உள்ளிட்ட பல இனக்குரோத செயல்களின் மீது விசாரணை எடுக்கும்படி கோரிக்கைகளும் வலுத்து வருவது பொதுபல சேனாவுக்கு கிலியை ஏற்படுத்தியிருப்பது என்னவோ உண்மை தான். எனவே சற்று அடக்கி வாசித்துவரும் பொதுபல சேனா ஒரு சிறிய சந்தர்ப்பம் கிடைத்தாலும் தமது இனவாத செயற்பாடுகளுக்கு சாதகமாக்கிக் கொள்வதற்கு தருணம் பார்த்துகொண்டிருக்கிறது.
இப்போது மைத்திரிபால அரசாங்கத்தை ஒரு “சிங்கள பௌத்த விரோத” அரசாங்கமாக சித்தரிப்பதற்கான தகவல்களை பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறது. பொதுபல சேனாவின் சமூக வலைத்தளங்கள் பலமானவை. முகநூல் பக்கங்கள், டுவிட்டர்கள், இணையத்தளங்கள் என ஆயிரக்கணக்கான சமூக வலைத்தளங்களை தமது தொண்டர்களுக்கு பயிற்றுவித்து நடத்திவருகிறது. அவற்றில் நடத்தப்படும் விவாதங்களில் இதுவரை கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு மோசமான இனவெறி பின்னூட்டங்கள் பதியப்பட்டு வருகின்றன. குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பெப்ரவரி 1ஆம் திகதி திஹாரியில் வைத்து ஆற்றிய உரையின் போது “உங்களை தாக்க எந்த சேனா வந்தாலும் நாய் கூட்டில் அடைப்போம்” என்று பகிரங்கமாக அறிவித்திருந்தது இங்கு குறிப்பிடவேண்டும்.
பொதுபல சேனா ஹலால் பிரச்சினையை இன்னமும் கைவிட்டதாகத் தெரியவில்லை. மேலும் சமீபகாலமாக அரபு நாடுகளில் தலைதூக்கியிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத நடவடிக்கைகளையும் தமது பிரசாரங்களுக்கு சாதகமாக்கி வருகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ் இன் மனிதவிரோத நடவடிக்கைகள் குறித்த செய்திகளை தினசரி அதிகளவு சிங்களவர்களுக்கு பிரசாரங்கள் செய்வதன் மூலம் முஸ்லிம்கள் அனைவரும் இப்படித்தான் என்கிற பிரசாரத்தை செய்கிறது. முஸ்லிம் விரோத வெறுப்புணர்ச்சியையும் தூண்டி வருகிறது.
“பெரும்பாலான சிங்கள பௌத்த வாக்குகளை கைப்பற்ற மைத்திரிபால தவறியிருக்கின்றார். ஆகவே சிங்கள பௌத்தர்களின் எதிர்ப்பில் வந்த அரசாங்கம் இது... சிங்கள பௌத்தர்களின் வாக்குகளில் 55 வீத வாக்குகள் மகிந்தவுக்கே கிடைத்திருக்கிறது தமிழ் முஸ்லிம் வாக்குகள் 20வீத வாக்குகளே உள்ளன அவற்றில் 80 சதவீத வாக்குகள் மைத்திரிக்கு கிடைத்துள்ளன..” என்று அவர்களின் தற்போதைய பிரசாரங்கள் அமைந்துள்ளன. “பெரும்பாலான தமிழ், முஸ்லிம்களின் ஆதரவை வெற்றிகொண்ட இந்த அரசாங்கம் அவர்களின் நலன்களை மட்டும் காக்கும் நடவடிக்கையில் சிங்கள பௌத்தர்களை கைவிட்டுவிட்டது” என்று ஜனவரி 12 வெளியிட்ட அறிக்கையில் பொதுபல சேனா அறிவித்திருந்தது.
பொதுபல சேனா பாணியிலேயே மகிந்த ராஜபக்ஷ அணியிலுள்ள விமல் வீரவங்ச, தினேஸ் குணவர்தன போன்றோரும் மைத்திரிபால அரசாங்கத்துக்கு எதிரான ஆயுதமாக “தமிழ் முஸ்லிம்களுக்கு சார்பான அரசாங்கம் இது” என்கிற பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பை புலிகளோடு முடிச்சு போட்டு வருவதுடன் வடக்கில் எடுக்கப்பட்டுவரும் சிறு சிறு முயற்சிகளைக் கூட எதிர்த்து வருவதை கண்டு வருகிறோம்.
ஜாதிக ஹெல உறுமய
நிறைவேற்று ஜனாதிபதிமுறையை முற்றாக ஒழிப்பதில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும், அதிகாரத்தில் சில திருத்தங்கள் செய்வதே தமது நிலைப்பாடு என்று ஜாதிக ஹெல உறுமயவை சேர்ந்த அத்துரலியே ரதன தேரர் மற்றும் நிஷாந்த வர்ணசிங்க போன்றோர் தெரிவித்து வருகிறார்கள். மாகாண சபையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அதிகாரத்தை ஜனாதிபதியிடம் வைத்திருப்பதன் அவசியத்தை தேர்தலுக்கு முன்னர் ஹெல உறுமய வலியுறுத்தி வந்தது இன்று குறிப்பிடத்தக்கது.
ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக பேச்சாளர் சமீபத்தில் இப்படி கூறினார்.
“...13 வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கு சகல கட்சிகளும் உடன்பட்டுள்ளன என்று ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தது தவறு. 100 நாள் வேலைத்திட்டத்தோடு மட்டும் தான் ஜாதிக ஹெல உறுமய உடன்பட்டிருக்கிறது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட 13வது திருத்தச்சட்டம் குறித்து எதுவும் பேசப்படவில்லை. அதை அமுல்படுத்துவது குறித்து எம்மோடு எந்த பேச்சுவார்த்தையும் கூட இடம்பெற்றதில்லை. எப்படியிருந்தபோதும் மைத்திரிபாலவுக்கு ஆதரவளிப்பதற்காக தமிழ்த் தேசிய முன்னணியுடன், ஜாதிக ஹெல உறுமய நடத்திய பேச்சுவார்த்தையில்; தேர்தல் நடவடிக்கையின் போது 13வது திருத்தச் சட்டம் குறித்து எதுவும் பேசுவதில்லை என்று பொது உடன்பாடு கண்டிருந்தோம்...”
மைத்திரிபால அரசாங்கத்தில் ஜாதிக ஹெல உறுமய மிகவும் முக்கியமான சிங்கள பௌத்த அழுத்தக்குழுவாக இருக்கிறது. 100நாள் போதுவேலைத்திட்டத்தின் காரணமாக இனவாதத்தை அடக்கி வாசித்தாலும் கூட தமிழர்களின் அரசியல் நலன்களுக்கு சாதகமாக ஜாதிக ஹெல உறுமய இல்லை. மேலும் முன்னெச்சரிக்கையுடன் இயங்கி வருகிறது. அதேவேளை ஒரு பாரிய திட்டத்துடன் அது இம்முறை களம் இருங்கியிருப்பது தெரிகிறது. அதன் அரசியல் அணுகுமுறைகளும் அதற்கேற்றாற்போல் சந்தேகிக்க வைக்கின்றன. நீண்டகால நோக்கில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையை கைப்பற்றும் மாற்றுத் திட்டம் இருப்பதாகத் தெரிகிறது. கடந்த வாரம் அத்துரலியே தேரர் இப்படி அறிவித்திருந்தார்.
“...பசில் ராஜபக்ஷ அறிவித்தலின்றி ஓடிவிட்டார். அதனால் ஏற்பட்டுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி வெற்றிடத்துக்கு சம்பிக்க ரணவக்கவை நியமிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் ஜாதிக ஹெல உறுமய கட்சியை கலைத்து விட்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொள்ள முடியும்... சிங்கள பௌத்த லட்சியத்தை முன்னிறுத்தி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முன்னெடுத்த பஞ்சமகா சக்தியை அடிப்படையாக வைத்து நாங்கள் செயற்படத் தயார்...” என்று மைத்திரிபால சிறிசேனவுக்கும், சுதந்திரக் கட்சியின் தலைமைக்கும் அறிவித்திருந்தார் ரதன தேரர். மேலும்
“சம்பிக்க ரணவக்கவின் கிரகப்பலனின்படி 2020இல் இலங்கையின் தலைவராக ஆவது உறுதி” என்றும் அவர் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.
பஞ்சமகா சக்தி
1956ஆம் ஆண்டு பண்டாரநாயக்க தனது ஆட்சியை அப்படித்தான் அறிமுகம் செய்துவைத்தார். இன்றுவரை பண்டாரநாயக்க ஆட்சியை பலரும் அப்படித்தான் அழைப்பார்கள். “பஞ்சமகா சக்திகள்” என்கிற கருத்தாக்கம் அநகாரிக தர்மபாலாவின் சிந்தனையிலிருந்து உதித்தது என்கிற ஒரு கருத்தும் பொதுவாக முன்வைக்கபடுவதுண்டு. “பஞ்சமகா சக்திகள்” என்கிற கருத்தாக்கத்தை அவர் 1956தேர்தலின் போது வலியுறுத்தினார். அவர் குறிப்பிட்ட அந்த (சங்க, வெத, குரு, கொவி, கம்கறு) ஐந்தும் “சங்கம் (பௌத்த பிக்குகள்), சித்த மருத்துவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள்” என்போரே. மேலோட்டமாகப் பார்த்தால் இது “சுதேசியம்” குறித்த உணர்வை வலியுறுத்துவது போல இருந்தாலும் அந்த சுதேசம் என்பது “சிங்கள பௌத்த உணர்வாக” பரிமாற்றம் செய்யப்பட்டு ஏனைய இனங்களும், மதங்களும் ஓரங்கட்டப்பட்டு, பாரபட்சத்துக்குள்ளாக்கப்பட்டன.
நிறுவனமயப்பட்ட பேரினவாதத்துக்கு எப்போது தன்னளவில் அது உயிர்ப்புடனும், துடிப்புடனும், விவேகத்துடனும், ஓர்மத்துடனும் இருப்பது தேவையாக இருக்கிறது. அதில் சிறிது சலசலப்போ, இடைவெளியோ ஏற்பட்டாலும் அந்த இடத்தை நிரப்ப பல அணிகள் காத்திருக்கின்றன. பொதுபல சேனா ஒரு சண்டித்தனமுள்ள, விவேகமற்ற ஒரு அணியாக அம்பலப்பட்டுவிட்டது. ஜாதிக ஹெல உறுமய ஒரு மிதவாத அரசியலுக்குள் விழுந்துவிட்டதாக பேரினவாத தரப்பில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்னொரு சக்தி தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது.
“சிங்கள தேசிய முன்னணி” என்கிற பெயரில் இம்மாதம் 4ஆம் திகதி சுதந்திரத் தினத்தன்று ஒரு அரசியல் இயக்கமாக தொடக்கப்பட்டுள்ளது. “சிங்களவர்களுக்காக புதிய எதிர்பார்ப்பு..., போலி ஜாதிக ஹெல உறுமய தலைமைக்கு புதிய ‘சிங்கள தேசிய முன்னணி’ ஒரு எடுத்துக்காட்டு” என்கிற முழக்கத்துடன் வெளியாகியுள்ள அந்த அமைப்பு இனவாத பிக்குகளில் ஒருவரான மடில்லே பஞ்ஞாலோக்க தேரரை தலைவராகவும் அலுகல்லே ஜினானந்த தேரரை தேசிய அமைப்பாளராகவும் அறிவித்துள்ளது.
“சரியாக 200வருடங்களுக்கு முன்னர் (1815) இழந்த சிங்கள சுயாதிபத்தியத்தை மீண்டும் வென்றெடுப்பதற்கும், சிங்கள பௌத்தர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் கட்சிபேதமின்றி முன்வருவோம், ஒன்றிணைவோம்..” என்று அதன் துண்டுப்பிரசுரங்கள் அரைகூவுகின்றன. இன்னொரு அறிக்கையில் 1957இல் தமிழ் மொழிக்கும் தேசியமொழி அந்தஸ்து கொடுக்கப்பட்டதை கடுப்புடன் விமர்சித்திருக்கிறது.
மடில்லே பஞ்ஞாலோக்க தேரர் “சிங்கள ராவய” என்கிற இனவாத அமைப்பின் பொதுச் செயலாளராக செயற்பட்டு வந்தவர். முஸ்லிம்களுக்கு எதிராக சமீபகாலமாக அதிக இனவாத பிரசாரத்தை முன்னெடுத்த அமைப்பு அது. மேலும் மாடுகளை வெட்டுவதற்கு எதிராக அதிகளவு செயல்பட்ட அமைப்பு சிங்கள ராவய அமைப்பு தான். அதுபோல அழுத்கம சம்பவத்துக்கு காரணமான “விழித்தெழு” என்கிற தலைப்பில் நடத்திய கூட்டத்தை பொதுபல சேனா மட்டும் நடத்தவில்லை. கூடவே சிங்கள ராவய அமைப்பும் இணைந்து தான் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின் நடந்தேறிய அசம்பாவிதங்களில் சிங்கள ராவயவுக்கும் பங்குண்டு.
சிங்கள பௌத்த பேரினவாத தரப்பு அவ்வப்போது தமது செயற்பாடுகளை நாட்டின் சமகால அரசியல் தட்பவெட்பத்துக்கு ஏற்றாற்போல தமது அலைவரிசையை மேலும் கீழுமாக கொண்டு நடத்திக்கொண்டு போகிறது. நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் சற்று நிதானத்தை கடைபிடித்தாலும் சரியான தருணத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அது எப்போது, எந்தெந்த வடிவங்களில் சிறுபான்மை இனங்களுக்கு எதிராகப் பாயும் என்பதை கணிப்பது அவ்வளவு இலகுவானதல்ல. அரசியல் கட்டமைப்பு பேரினவாத தரப்புக்கு மிகவும் சாதகமாகவே எப்போதும் இருப்பதால் அவ்வப்போது வந்து போகும் தற்காலிக அரசாங்கங்களால் எந்த நிரந்தர மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை. எப்போதும் முன்னெச்சரிக்கைக்கும், அரசியல் தற்காப்பு நிலைக்கும் தள்ளப்பட்டிருப்பது என்னவோ சிறுபான்மை இனங்கள் தான்.
நன்றி - தினக்குரல் 07.02.2015
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...