யாரும் எதிர்பார்க்கவே இல்லை! ஆனால், எதிர்பாராத நேரத்தில் எந்தவிதமான ஆரவாரமுமின்றி தமிழ்க் கல்வி அமைச்சு தமிழ் பிரதிநிதி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு நாட்களாக தமிழ்க் கல்வியமைச்சையும் தனது பிடிக்குள் வைத்திருந்த மத்திய மாகாண முதலமைச்சர் திடீரென அதனை தமிழ்ப் பிரதிநிதி ஒருவரிடம் கையளித்ததன் காரணம் என்ன ?
ஊவா மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஹரீன் பெர்னாண்டோ தலைமையிலான ஐ.தே. க. ஆட்சிப்பொறுப்பினை ஏற்றது. கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஊவா தமிழ் மக்கள் ஹரீன் பெர்னாண்டோவுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கியிருந்தனர். இதனை முதலமைச்சரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கு நன்றிக்கடனாகவே ஊவா தமிழ் மக்களின் நலன் கருதி மீண்டும் தமிழ்க்கல்வி அமைச்சை ஏற்படுத்தி அதனை மாகாண அமைச்சர் வடிவேல் சுரேஷிடம் கையளித்தார்.
இந்த செயற்பாடு ஒட்டு மொத்த மலையக இந்திய வம்சாவளி மக்களினதும் நன்மதிப்பையும் அபிமானத்தையும் பெற்றது. மலையக அரசியலுக்கு ஒரு முன் மாதிரியான இன, மத பேதங்களுக்கு அப்பால் ஒரு நேர்மையான மனிதராக முதலமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பார்க்கப்படுகிறார்.
10 வருடங்களுக்கு முன்னர் பறிக்கப்பட்ட ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு மீண்டும் ஏற்படுத்தப்பட்டு தமிழ் பிரதிநிதியிடமே வழங்கப்பட்டுள்ளது.
ஐ.ம.சு.கூ. ஆட்சி நிலவிய காலத்திலேயே ஊவாவில் தமிழ்க்கல்வி அமைச்சும் இந்து கலாசார அமைச்சும் பறிக்கப்பட்டது. இது ஊவாவில் மட்டும் பறிக்கப்படவில்லை. இந்திய வம்சாவளி பெருந்தோட்ட மக்கள் அதிகளவில் வாழும் மத்திய மாகாணத்திலும் இல்லாமல் செய்யப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவினால் தோட்ட மக்களின் நலனுக்காக ஏற்படுத்திக்கொடுக்கப்பட்ட தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சும் கூட ஐ.ம.சு. கூ. ஆட்சியில் இல்லாமல் செய்யப்பட்டமை வேறு விடயம்.
மத்திய மாகாணத்தில் கடந்த ஆட்சிக்காலம் வரை மாகாண தமிழ்க்கல்வி அமைச்சு நீடித்தது. மாகாண தமிழ்க்கல்வி அமைச்சராக அனுஷியா சிவராஜா கடமையாற்றினார்.
ஆனால் 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் மீண்டும் ஐ.ம.சு. கூட்டமைப்பு வெற்றி பெற்றது. பல பிரபல மலையகத் தமிழ் கட்சிகள் அனைத்தும் அரசுடன் இணைந்து போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் சகல கட்சிகளிலிருந்தும் 14 தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
மீண்டும் மாகாண சபையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஐ.ம.சு. கூட்டமைப்பு இ.தொ.கா. உறுப்பினரான எம். ராமுக்கு விவசாயம் உள்ளிட்ட அமைச்சை மட்டுமே கொடுத்தது.
அவரிடம் மாகாண தமிழ்க்கல்வி அமைச்சு வழங்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர். அரசாங்கத்துக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசாங்கமும் மாகாண சபையும் அதன் முதலமைச்சரும் இதனைக் கண்டு கொள்ளவே இல்லை.
தொடர்ச்சியாகக் கேட்டு கிடைக்காத நிலையில் தமிழ்ப் பிரதிநிதிகளும் மக்களும் அலுத்துப்போயிருந்தனர். மத்திய மாகாணத்தில் தமிழ் கல்வியமைச்சு இல்லாததால் கல்வித்துறையில் பாரிய பிரச்சினை நிலவியது. ஆனால் இதுபற்றி எவரும் கவனத்தில் கொண்டிருக்கவில்லை.
இந்த நிலையில் ஊவாவில் தமிழ்க்கல்வி அமைச்சு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தமை மத்திய மாகாண சபையின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் தமிழ்க்கல்வி மீதான அக்கறையீனத்தையும் வெளிப்படுத்தியது. பலர் பகிரங்கமாகவே மாகாண சபையையும் மத்திய ஐ.ம.சு.கூ. ஆட்சியையும் விமர்சித்தனர்.
மட்டுமன்றி, ஊவாவைப்போன்று மத்திய மாகாணத்திலும் ஒரு மாற்றம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவானது. மாகாண முதலமைச்சராகவுள்ள சரத் ஏக்கநாயக்கவை அந்தப் பதவியிலிருந்து அகற்றி விட்டு அதே கட்சியைச் சேர்ந்தவரான திலின பண்டார தென்னக்கோன் என்பவர் முதலமைச்சராகும் முயற்சியில் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார். அவருக்கு ஐ.ம.சு.கூட்டமைப்பு உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர் ஆதரவு வழங்க முன்வந்திருந்தனர்.
குறிப்பாக பல தமிழ் உறுப்பினர்கள் ஐ.தே.க. ஆதரவு நிலையைக் கொண்டிருந்தவர்கள் திலின பண்டார தென்னக்கோனுக்கு ஆதரவு வழங்க முன்வந்திருந்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்குமானால் புதிய அமைச்சரவையில் தமிழர் ஒருவர் அமைச்சராக்கப்பட்டு அவரிடம் தமிழ்க்கல்வி அமைச்சும் வழங்கப்படும் நிலைமையே காணப்பட்டது.
இந்த நிலையில் இ.தொ.கா. வின் எட்டு உறுப்பினர்களினதும் ஆதரவைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நிலைமை மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவுக்கு மிகவும் அத்தியாவசியமாகவுள்ளது. எனவே இ.தொ.கா. வைத் திருப்திப்படுத்தி தமக்கான ஆதரவை தக்க வைத்துக்கொள்வதற்காக தமிழ்க்கல்வி அமைச்சை விவசாய அமைச்சர் ராமிடம் ஒப்படைத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த இரகசியமாகும்.
எவ்வாறெனினும் தமக்குக் கிடைத்த தமிழ்க் கல்வியமைச்சை மாகாண அமைச்சர் ராம் சிறப்பாக முன்னெடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. எந்தவொரு பிரச்சினையையும் தீர்மானத்தையும் சிந்தித்து முடிவெடுப்பதில் அவர் எப்போதும் தவறியதில்லை. கல்வித்துறையைச் சார்ந்தவர்களுடன் நல்ல உறவினைக் கொண்டுள்ள அவர், அத்துறையில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார் என்பது பொதுவான அபிப்பிராயமாகும்.
இதேவேளை, ஊவாவில் தமிழ்க் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் வடிவேல் சுரேஷ் அனுபவமுடையவர். பாராளுமன்ற உறுப்பினராகவும் பிரதி சுகாதார அமைச்சராகவும் பணியாற்றிய அவர் ஊவா மாகாண கல்வி அபிவிருத்திக்கு நிறையவே செய்ய வேண்டியுள்ளது. மாகாணத்தில் உயர்தர விஞ்ஞான, கணிதக் கல்வியை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை மிக மிக அவசியமாகும். பசறை மற்றும் பதுளையிலுள்ள மத்திய கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதுடன் லுணுகலை, பண்டாரவளை பகுதிகளிலும் தமிழ்க் கல்வி அபிவிருத்தி முக்கியமானதாகும்.
மத்திய அரசின் கல்வி இராஜாங்க அமைச்சராக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் பிரிவுத் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் செயற்பட்டு வருகிறார். மலையகத்துக்கு மட்டுமன்றி முழு நாட்டுக்கும் தேசிய அளவில் கடமையாற்றும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
மைத்திரியின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மலையகத்தில் விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலக் கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது. அதனை முன்னெடுப்பதற்கு இராஜாங்க அமைச்சர் உறுதியளித்துள்ளார். ஏற்கனவே மத்திய மாகாண சபை கல்வியமைச்சராக இருந்த அவருக்கு கல்வித்துறையில் உள்ள பிரச்சினைகள், குறைபாடுகள் பற்றி நன்கு தெரியும்.
மத்திய மாகாணத்தில் விஞ்ஞான, கணித பாடப்பிரிவுகளை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார். எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் ஊடாக மத்திய மற்றும் ஊவா மாகாண தமிழ்க்கல்வி அமைச்சர்கள் தேவையான வளங்களையும் ஆசிரியர்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
கட்சி ரீதியான முரண்பாடுகள், பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் அவற்றுக்கப்பால் சமூக நோக்கத்துடன் சிந்தித்து செயற்பட வேண்டிய ஒரு நிலைமையும் காணப்படுகின்றது.
உதாரணமாக நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் தேசிய பாடசாலைகள் எதுவும் இல்லையென்று நீண்ட நாட்களாக சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளது.
புஸல்லாவை சரஸ்வதி தேசிய பாடசாலையில் விஞ்ஞான ஆய்வு கூட வசதிகள் இருந்தும் அங்கு ஆசிரியர்கள் வளங்கள் இல்லாமையால் அப்பிரிவு மூடப்பட்டுள்ளது. அங்குள்ள மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இது போலவே பதுளை பசறையிலும் நிலைமை காணப்படுகிறது.
இதேவேளை மத்திய மாகாண சபையின் கீழ் இயங்கும் பாடசாலைகள் சிறப்பாக இயங்குவதனையும் சிரேஷ்ட கல்வியதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் 80 வீதமான மாணவர்கள் சித்தியடைந்ததாகவும் கூறுகிறார். மட்டுமன்றி ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் போன்றவற்றின் வளர்ச்சியையும் கல்வி செயற்பாட்டையும் அவர் உதாரணமாகக் காட்டினார்.
மத்திய மாகா ணத்தில்.....
நுவரெலியா மாவட்டத்தில் தற்போது இயங்கும் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றுவதை விடுத்து புதிதாக சகல வளங்களையும் கொண்ட தேசிய பாடசாலைகளை உருவாக்குவதே சிறந்ததாக அமையும் என்கிறார். முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி மாகாண சபையின் கீழ் இயங்கும் பாடசாலைகளில் மத்திய கல்வி அமைச்சு தலையீடு செய்ய முடியாது எனவும் இணக்கப்பாட்டுடன் திட்டங்களை மேற்கொள்ள முடியுமென்றும் அவர் கூறினார்.
மத்திய இராஜாங்க கல்வியமைச்சும் மாகாண தமிழ் கல்வியமைச்சும் சில விடயங்களில் விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டிய நிலைமையில் இருக்கின்றன.
இங்கே ஈகோ பிரச்சினை கட்சி அரசியல் பிரச்சினைகளை ஒதுக்கி வைத்து விட்டு சமூகத்தின் கல்வி அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பாரிய கடப்பாடு அனைத்துத் தரப்பினருக்கும் உள்ளதென்பதை மறந்து விடக்கூடாது.
தற்போது கல்வித்துறைக்கும் மக்களுக்கும் செய்யும் சேவையினூடாகவே மக்களின் அபிமானத்தையும் ஆதரவையும் பெற்றுக் கொள்ள முடியும். அதை விடுத்து ஒருவரையொருவர் குறைகளை கூறிக்கொண்டிருப்பதால் நடக்கப்போவது எதுவும் இல்லை.
நன்றி - வீரகேசரி 15.02.2015
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...